இராபக்ச குடும்ப சாம்ராச்சியம் தப்புமா?
நக்கீரன்
ஹம்ப்டி டம்ப்ரி சுவரில் அமர்ந்தான்
ஹம்ப்டி டம்ப்ரி கீழே விழுந்தான்
அரசனின் ஆட்கள் அரசனின் குதிரைகள்
தூக்கவே முடியலை ஹம்ப்டி டம்ப்ரியை மீண்டும்!
இந்த வரிகள் ஆங்கிலத்தில் மழலையர்களுக்கு எழுதப்பட்ட எதுகை மோனைப் பாடல். இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப் படும் இலங்கைத் தீவில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை இந்தப் பாடல் படம் பிடித்துக் காட்டுகிறது.
சென்ற வாரம் (மார்ச் 31, 2022) வியாழன் மாலை வரை இராபக்ச குடும்பம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒன்றாக இருந்தது. மக்கள் அந்தக் குடும்பத்துக்கு அரச குடும்பத்துக்குக் கொடுக்கும் மரியாதையைக் கொடுத்தார்கள். நொவெம்பர் 16, 2019 ஆம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் (52.25 %) மக்கள் கோட்டாபய இராசபக்சவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். வெற்றிவாகை சூடிய கோட்டாபய “பெரும்பான்மை சிங்கள – பவுத்த மக்களது வாக்குகளினால்தான் நான் தேர்தலில் வெற்றி பெற்றேன். அவர்களது விருப்பப்படியே ஆட்சி நடத்துவேன்” என அறிவித்தார்.
அடுத்து ஓகஸ்ட் 05, 2020 அன்று நடந்த இலங்கையின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சியான சிறிலங்கா மக்கள் பெரமுனை 145 இடங்களில் வெற்றி பெற்று மகிந்த இராசபக்சவின் தலைமையில் ஆட்சி அமைத்தது.
அமைச்சரவையில் அண்ணன், தம்பி, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இடம் பிடித்தார்கள். மொத்த வரவு – செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் 70% நிதிப் பங்கீடு அவர்களது கையில் இருந்தது. இராசபக்ச குடும்பத்தினது எடுபிடிகள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்தார்கள். செல்லுமிடம் எல்லாம் அரச மரியாதையோடு வரவேற்கப்பட்டார்கள்.
ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் வியாழக்கிழமை மாலை சனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது கோட்டை ஆட்டம் கண்டது. அவர் குடியிருக்கும் வீட்டுக்குச் செல்லும் பென்கிறிவத்த தெருவில் (Pengiriwatte Road) கூடிய மக்கள் நாட்டில் நிலவும் எரிபொருள், சமயல் எரிவாய்வு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. “கோட்டாபய வீட்டுக்குப் போ” “கோட்டபாய பதவி விலக வேண்டும்” “கோட்டாபய கள்ளன்” “கோட்டாபய “பயித்தியக்காரன்” என முழக்கம் இட்டார்கள். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இலங்கையின் வரலாற்றில் பல பிரதமர்கள், சனாதிபதிகள் வந்து போனார்கள். ஆனால் யாருக்கும் எதிராக மக்கள் “ஆண்டது போதும் வீட்டுக்குப் போ” என்று முழக்கம் எழுப்பியதில்லை.
இராசபக்ச குடும்பம் நாட்டின் சொத்துக்களை கண்மண் தெரியாமல் கொள்ளையடித்து விட்டார்கள், வெளிநாட்டவர்களுக்கு விற்று விட்டார்கள் என்ற குற்றச் சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இராசபக்சாவின் சொந்த வீட்டுக்கு அருகாமையில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை எப்படியோ முன்கூட்டி முகந்து கொண்ட அரசாங்கம் நூற்றுக் கணக்கான சிறப்பு அதிரடிப் படையினரையும் இராணுவத்தினரையும் அங்கு குவித்திருந்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. சிறப்பு அதிரடிப் படையினரை ஏற்றிவந்த வாகனம் எரியூட்டப்பட்டது. இராணுவ ஜீப்வண்டி ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. தண்ணீர் பீய்ச்சப்பட்டது. ஆனால் மக்கள் அசையவில்லை. நள்ளிரவு தாண்டிய பின்னரே மக்கள் கலைந்து சென்றார்கள். அடுத்த நாள் ஏப்ரில் முட்டாள் நாளில் சனாதிபதியின் ஊடகப் பிரிவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை “பயங்கரவாதிகள்” என வருணித்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் மூவினங்களையும் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர். எந்த அரசியல் கட்சியையும் சேராதவர்கள். இவர்களில் பெரும்பாலோர் சனாதிபதி கோட்டாபயவுக்கும் மொட்டுக் கட்சிக்கும் வாக்களித்தவர்கள். நல்வாழ்வுத்துறை அமைச்சின் மருத்துவர்கள், செவிலியர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். வடக்கு, தெற்கு, மலையகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எந்தப் போராட்டம் என்றாலும் அதற்குத் தலைமை தாங்கும் பவுத்த தேரர்கள் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ள முயற்சி செய்த சில பவுத்த தேரர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து மரியாதையாக வெளியேறச் செய்தார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சிங்களம் – தமிழ் இரண்டு மொழியிலும் முழக்கம் எழுப்பினர். பிடித்திருந்த பதாதைகள் பெரும்பாலும் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தன. இருந்தாலும் தமிழில் எழுதப்பட்ட பதாதைகளும் காணப்பட்டன. ஒரு பெரிய பதாதையில் “74 ஆண்டுகால சாபக்கேட்டில் இருந்து நாட்டை மீட்போம்” என எழுதப்பட்டிருந்தது. உண்மையும் அதுதான்.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் ஆட்சிக்கு வந்த அனைவரும் இனவாதத்தைக் கக்கியே ஆட்சியைப் பிடித்தார்கள். இருபத்து நான்கு மணித்தியாலயத்தில் “சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்” என உறுதிமொழி வழங்கியே எஸ்.டபுள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆட்சிக் கட்டில் ஏறினார்.
1972 இல் சிறிமாவோ பண்டாரநாயக்க மேலும் ஒருபடி மேலே சென்று சோல்பரி அரசியல் யாப்பை முற்றாகத் தூக்கிக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு “இலங்கைக் குடியரசு ஒரு ஒற்றையாட்சி அரசாகும். இலங்கைக் குடியரசு பவுத்த மதத்திற்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும். ஏனைய மதங்களின் உருமைகளுக்கு உத்தரவாதமளிக்கின்ற அதே வேளை பவுத்த சாதனத்தை பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்” எனக் கூறும் புதிய அரசியல் யாப்பை உருவாக்கினார். 1978 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன அதனை மேலும் கூர்மையாக்கினார். இலங்கைக் குடியரசு பவுத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்குவதுடன், 10 மற்றும் 14(1)(இ) உறுப்புரைகள் மூலம் அனைத்து மதங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதிப்படுத்தும் அதே வேளையில் புத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமையாகும்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நாட்டை சிங்கள மயப்படுத்துதலிலும் பவுத்த மயப்படுத்துவதிலும் ஆட்சியாளர்கள் போட்டி போட்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கினார்கள். தமிழினத்துக்கு எதிராக அ.டொலர் 200 பில்லியன் செலவழித்து 30 ஆண்டுகளாக கொடிய போரை நடத்தினார்கள். அதனால் நாடு இன்று கடனில் மூழ்கி ஒட்டாண்டியாகிவிட்டது. மக்கள் பட்டினியிருக்க வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.
மார்ச் 31 வியாழக் கிழமை அன்று நள்ளிரவுக்குள் முன்னரே சனதிபதி கோட்டாபய அவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றி தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டன. அடுத்த நாள் போராட்டங்கள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து சனாதிபதி அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். ஆனால் மக்கள் அதனை மீறிக் கடந்த ஒரு வாரமாக கோட்டபாய இராசபக்ச மற்றும் அவரது குடும்ப ஆட்சிக்கு எதிராக முழு நாடுமே போராடிக் கொண்டிருக்கிறது.
பிரதமர் வசிக்கும் அலரிமாளிகை, அமைச்சர்களது வீடுகள் மக்களால் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கின்றன.
ஆளும் மக்கள் பெரமுன கட்சியில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 உறுப்பினர்களும் விமல் வீரவன்ச தலைமையில் 14 உறுப்பினர்களும் மற்றும் அனுர பிரியதர்ஷன தலைமையில் 11 உறுப்பினர்களும் வெளியேறிவிட்டார்கள். இதனால் ஆளும்கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விட்டது. இருந்தும் ஆளும் கட்சித் தலைவர்கள் தங்கள் பக்கம் 117 உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்த ஏப்ரில் 05, 06 நாட்களில் கூடிய நாடாளுமன்றம் அமளிதுமளியில் முடிந்திருக்கிறது.
அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் பதவிகளை துறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் பழைய அமைச்சர்களில் நாலு பேரை மீண்டும் அமைச்சர்களாக நியமித்துள்ளார்கள். அதிலும் குழப்பம். நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சர் 24 மணித்தியாலயத்தில் தனது பதவியைத் துறந்துவிட்டார்.
திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிக்கல பதவி விலகிவிட்டார். மத்திய வங்கி ஆளுநர் நிவாட் அஜித் கப்ரால் பதவி துறந்து விட்டார். இவை மூழ்கும் கப்பலில் யாரும் ஏறித் தற்கொலை செய்ய மறுப்பதைக் காட்டுகின்றன.
இதனால் நாட்டில் ஒரு நிதியமைச்சர் இல்லை. நிதியமைச்சில் செயலாளர் இல்லை. மத்திய வங்கிக்கு ஆளுநர் இல்லை. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூபா 319.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது விரைவில் ரூபா 450 ஆக உயரும் என எதிர்கூறப்படுகிறது. அதேபோல், ஒரு கனடிய டொலரின் பெறுமதி ரூபா 250 ஆக உள்ளது.
மே 18, 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டை எதிர்கொண்டிருந்த இனச் சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வை இராசபக்ச அரசு கண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு தீர்வை முன்வைக்கப் போவதாக பிரதமர் மகிந்த இராசபக்ச ஐநா சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூனுக்கு உறுதி மொழி அளித்திருந்தார் ஆனால் அதை அவர் செய்யவில்லை. தமிழர்களுக்கு இனச் சிக்கல் இல்லை, இருப்பது பொருளாதார சிக்கல்தான் எனக் கூறினார். தான் 13ஏ + என்பது மேற்சபையைக் குறித்தது என்று சடைந்தார்.
போர் முடிவுக்க வந்த கையோடு படையினரின் எண்ணிக்கையை பாதியாகக் குறைந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் படைச் செலவு குறைந்திருக்கும். 2022 ஆம் ஆண்டில் அ.டொலர் 2.50 பில்லியன் இராணுவத்துக்கு செலவழிக்கப்பட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (அ.டொலர் 87.36 பில்லியன்) 2.86% ஆகும்.
சரி நோய் தெரிகிறது. அதற்கான பரிகாரம் என்ன? எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?
(1) உடனடியாகச் சட்ட திருத்தம் 20 ஒழிக்கப்பட்டு 19 ஆவது சட்டத்தை மீள் நடைமுறைப்படுத்தல்.
(2) ஒரு புத்தம் புதிய வெஸ்ட் மின்ஸ்ரர் பாணி அரசியல் யாப்பு. அந்த யாப்பு மதசார்பற்றதாக இருக்க வேண்டும். அதில் மத்திய அரசின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு உச்சகட்ட பகிர்வு.
(3) மத பூசாரிகள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுத்தல்.
(4) சிங்களம், தமிழ் இரண்டும் உத்தியோக மொழிகள். வட கிழக்கில் தமிழ் நிர்வாக மொழி. ஆங்கிலம் தொடர்பு மொழி.
(5) தேசியக் கொடி மூன்று இனங்களையும் குறிக்கும் மூவர்ணக் கொடி.
(6) நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அரச ஊழியர்களது எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தல்.
(7) வெளிநாட்டு தூதுரவாலயங்களை பாதியாகக் குறைத்தல்.
(8) சுயாதீனமான நீதித்துறை. நீதிபதிகளை நியமிக்கும் சுயாதீனமான ஆணைக் குழு.
(9) சட்டத்துக்கு முன் சகலுரும் சமம் உட்பட அடிப்படை மனித உரிமைகளை உறுதிசெய்தல்.
(10) ஒழிக்கப்பட்ட சிவில் சேவை மற்றும் வெளிநாட்டு சிவில் சேவை மறு சீரமைப்பு.
தமிழ்மக்கள் அல்லல்பட்டு அழுத கண்ணீர் இராசபக்ச குடும்ப ஆட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது. குறிப்பாக சனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களை ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுகிறது.
போர் முடிந்த பின்னர் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த வி.புலி உறுப்பினர்கள் உட்பட நூற்றுக் கணக்கில் சரணடைந்த வி. புலிகள் கொல்லப்பட்டதற்கு கோட்டாபயதான் பொறுப்புக் கூற வேண்டும்.
“எனது தந்தையை கொன்ற கொலைகாரன் இலங்கையை அழித்துக் கொண்டிருக்கின்றான்” என அமெரிக்காவில் இருந்து குரல் எழுப்புகிறார் சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அவர்களின் மகள் அஹிம்சா.
ஆனால் சனாதிபதி கோட்டாபய எக்காரணம் கொண்டும் பதவி துறக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார். தனக்கு மக்கள் 5 ஆண்டு கால ஆணை தந்திருக்கிறார்கள் என்கிறார். மகிந்த இராசபக்ச பிரதமர் பதவியை விட மாட்டேன் என்கிறார். நாடாளுமன்றத்தில் 121 நா.உறுப்பினர்களது ஆதரவு அரசுக்கு இருப்பதாகக் கூறுகிறார். புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்க இருக்கிறதாம். நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழிக்கலாமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா யோசிக்கிறாராம்.
அழகான இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்திருக்கிறது. இராபக்ச குடும்ப சாம்ராச்சியம் தப்புமா? (கனடா உதயன் ஏப்ரில் 08, 2022)
Leave a Reply
You must be logged in to post a comment.