மனோன்மணியம் சுந்தரனார்

மனோன்மணியம் சுந்தரனார்

தமிழறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் நினைவு நாள்‌ 26.4.1897 ‌நம் செந்தமிழ் மொழிக்கு முத்தமிழ் எனப்பெயருண்டு. இயல் , இசை, கூத்து அல்லது நாடகம் ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரித்து  தமிழ் தொன்று தொட்டு அழைக்கப்பட்டு வருகிறது. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இயல், இசையை விட நாடகத்தமிழ் நலிவுற்றுக் காணப்பட்டது. இதை எண்ணி தத்துவப் பேராசிரியர் ஒருவர் மனம் வருந்தினார். ‌தொல்காப்பியம் குறிப்பிடும் “நாடக வழக்கினும்  உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம்” கருத்தையும், பட்டினப்பாலை குறிப்பிடும் “பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் ” பாடலை அறிந்த போதும், குறுந்தொகையில் வரும் “நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்து விசிவீங்கு இன்னியங் கடுப்ப” பாடலை வாசித்த போதும் அந்த தத்துவப் பேராசிரியருக்கு புது உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியது.

நாடகத் தமிழுக்கு உயிரூட்டுவதே தமது முதற்கடமையாக எண்ணி, தானே “மனோன்மணீயம்” எனும் பெயரில் நாடக நூல் ஒன்றை இயற்றி வெளியிட்டார்.‌நாடக மறுமலர்ச்சிக்கு திருப்புமுனையாக அந்நூல் வித்திடும் என்று அவரே எண்ணியிராத வேளையில், நாடகத் தமிழுலகம் அந்நூலை உயர் தமிழ்ச் சொத்தாக அறிவித்ததோடு,  அந்த தத்துவப் பேராசிரியரை உச்சி மோந்து கொண்டாடியது. பிறகு அந்த தத்துவப் பேராசிரியர் வரலாற்றுத் துறைக்கும், தமிழ்த்துறைக்கும் வழிகாட்டியாக உயர்வு அடைந்தார். அவர் வேறு யாருமல்ல; நாமெல்லாம் பாடும்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தந்த “மனோன் மணீயம்” சுந்தரனார் தான்.‌‌இவர் அன்றைய திருவிதாங்கூர் சமசுதானத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் 4.4.1855இல் பெருமாள் பிள்ளை – மாடத்தி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தையார் மதுரை சோமசுந்தரக் கடவுளின் நினைவாக சுந்தரர் எனப் பெயரிட்டார்.

நாஞ்சில் நாட்டை பூர்விகமாக கொண்ட  இவரின்  தந்தையார் தொழில் நிமித்தம் காரணமாக ஆலப்புழைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்.‌சுந்தரர் ஐந்து வயதுக்குள்ளேயே தமது தந்தையாரிடமிருந்து திருவாசகம், தேவாரம் ஆகிய பாடல் பாசுரங்களையும், திருக்குறள், நாலடியார், ஆத்திச் சூடி , கொன்றை வேந்தன் முதலிய அறநெறி நூல்களையும் கற்றுத் தெளிந்தார். பின்னர் ஆலப்புழையில் இருந்த ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்து படித்தார். உயர்நிலைப்பள்ளிப்படிப்பை முடித்த பிறகு திருவனந்தபுரம் அரசர் பாலராமவர்மன் அரசர் கல்லூரியில் (தற்போது திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகம்)  சுந்ரனார் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

அரசுத் தேர்வில் முதன் மாணாக்கராக தேர்வு பெற்று கல்லூரி நிர்வாகத் தினரின் பாராட்டைப் பெற்றார். 1876இல் தமது 21-ஆம் வயதில் பி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்று பட்டம் பெற்றார். ‌அக்கல்லூரியில் மேல்படிப்பை தொடர சுந்ரனார் விரும்பிய போது அக்கல்லூரி முதல்வர் இராஸ் என்பவர் சுந்தரனாரின் கற்கும் தனித்த ஆற்றலைக் கண்டு வியந்து நேரில் அழைத்தார். மேற்படிப்பை படித்துக் கொண்டே தத்துவப் பேராசிரியராக பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார்.‌

திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ் பள்ளிக்குத் தலைமையாசிரியாகப் பணியாற்றும் வாய்ப்பு சுந்தரனாருக்கு கிடைத்தது. அப்பள்ளியின் வளர்ச்சியில் பெரிதும் ஆர்வங் கொண்ட  அவர் அப்பள்ளியை  திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியாக மாற்றி அதன் முதல்வராக 1877 முதல் 1879 வரை பணியாற்றினார். ‌அவர் பணியாற்றிய திருநெல்வேலி சைவத்திற்கும், தமிழுக்கும் பெயர் பெற்றது. அங்கு நடக்கும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு , தாமும் மேடை நிகழ்வுகளில் உரை நிகழ்த்தினார். தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளூர் இதழ்களில் தொடர்ந்து எழுதி தமிழறிஞர்களின் பேராதரவைப் பெற்றார். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள  கோடக நல்லூரில் உள்ள சுந்தர சுவாமிகள் என்பவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டார். சமய நெறி, வேதாந்தம், சித்தாந்தம், தத்துவம் ஆகியவற்றில் தமக்கு ஏற்படும் ஐயங்களை தீர்த்துக் கொண்டார். ‌‌

சுந்தர சுவாமிகளை தன் ஞான குருவாகவே ஏற்றுக் கொண்ட சுந்தரனார் தனது நாடக நூலான மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பை வழங்கி அவருக்கு சிறப்பு செய்தார். ‌1877இல் சிவகாமி அம்மையாரை திருமணம் செய்து கொண்டு இல்லறம் கண்டார். 1879இல் திருவனந்தபுரம் அரசர் கல்லூரி தத்துவப் பேராசிரியர் இராபர்ட் ஹார்வி என்பவர்  ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகி தாயகம் செல்ல  முடிவெடுத்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் சுந்தரனார் மீண்டும் தத்துவப் பேராசிரியரானார். ‌

அப்போது தத்துவத்துறைப் பேராசியருக்கு நாடகத்தமிழ் மீது காதல் பிறந்தது. அவர் காலத்தில் நடைபெற்ற நாடகங்கள் அனைத்தும் சமசுகிருதம், தெலுங்கு, ஆங்கிலக் கலப்போடு அரங்கேற்றம் செய்யப்பட்டு வந்தன. மேலைப் பண்பாட்டை பிரதிபலிப்பவையாக அந்த நாடகங்கள் அமைந்திருந்தன. ‌தமிழ் மரபுக்கேற்ப நாடகக்கலையை உருவாக்க விரும்பிய சுந்தரனார் தமது கல்லூரி நிறுவனரான அரசரிடம் கூறி , லிட்டன் பிரபு எழுதிய நாடக நூல்களை வரவழைத்துப் படித்தார். லிட்டன் பிரபு எழுதிய “இரகசிய வழி” (The secret way) நாடகம் பிடித்துப் போனது. அக்கதையை மூலக் கருவாக அமைத்து “மனோன் மணீயம்” நாடக நூலைப் படைத்தார். 1891இல் வெளியிடப் பட்ட இந்நூல் தமிழ் நாடக வரலாற்றில் தன்னிகரில்லா இடத்தைப் பிடித்தது.

இதன் இரண்டாம் பதிப்பை வையாபுரி பிள்ளை வெளியிட்டார். மூன்றாம் பதிப்பை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் (1933) வெளியிட்டது. 25 பதிப்புகளுக்கு மேல் வெளிவந்து இன்றளவும் படிப்பவர் மனதைப் பறித்து வருகிறது.‌மனோன்மணீயம் நூலின் மற்றொரு உயிரான பகுதி தமிழ்மொழியை கடவுளாக உருவகப்படுத்தி சித்தரிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகும். அதில் திராவிடநல் திரு நாடு என்று தமிழ்நாடு சுட்டப் பெற்றிருக்கும்.  ‌

1856 இல் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் தனது “தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” நூலில் திராவிடம் என்ற சொல்லாடலைப் புகுத்தியிருப்பார். அன்றைக்கு அச்சொல் தவறாகப் பரப்பப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வந்தது. அன்றைக்கு சுந்தரனாரையும் அச்சொல் ஆட்கொண்டு விட்டது. திராவிடம் என்ற சொல்லை சுந்தரனார் பயன்படுத்தியிருந்தாலும் தமிழ் மொழியில்  இருந்துதான் ஏனைய தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிகள் தோன்றியதாக குறிப்பிடுவார். ஆரியமொழியையும் அப்பாடலில் சாடியிருப்பார். ‌

1970ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு (தி.மு.க.ஆட்சி ) அப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக  அறிவித்தது.  அதில் பல வரிகள் நீக்கப்பட்டன.  சுந்தரனார் உயிரோடு இருந்திருந்தால் இச்செயலுக்கு வன்மையான தனது கண்டனத்தை பதிவு செய்திருப்பார். முழுமையான தமிழ்த் தாய் வாழ்த்துப் (UnEdited Version of Tamil Thai vazhthu) பாடல் பின்வருமாறு:‌

”நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்‌சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்‌தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்‌ தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!‌அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற‌எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!‌பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்‌ எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல்‌கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்‌உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்‌ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன‌சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!” ‌‌

சுந்தரனார் ஆரியம்போல் அழியாமல் இருப்பது தமிழ் என்று கூறுவது ஆரியம் பேச்சு வழக்கொழிந்த மொழி, எந்தத் தேசத்திற்கும் தாய்மொழியாக இல்லாதது என்று பொருள் கொண்டதாகும். ‌‌ 19.12.1896 இல்  ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளைக்கு அவர் எழுதிய பின்வரும் கடிதம் தெரிவிக்கிறது. “பொதுவாக ஆரியத்தத்துவம், ஆரிய நாகரிகம் என்றெல்லாம் சொல்லப்படுவனவற்றில் பெரும்பகுதி உண்மையில், அடித்தளத்தில் திராவிட அல்லது தமிழ்த்தத்துவமே ஆகும் (“Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidian or Tamilian at the bottom.” (19-12-1896)‌திருவிதாங்கூர் அரசு 1896 ஆம் ஆண்டு கல்வெட்டுத் துறையை உருவாக்கியது.  சுந்தரனார், அரசுக் கல்வெட்டுத் துறையின் ‘மதிப்புறு தொல்லியல் ஆய்வாளராக’ நியமிக்கப்பட்டார். அவர் திருவிதாங்கூரின் பல பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டுக்களைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.‌

12 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வேணாட்டு திருவடி அரசர்கள் வரலாற்றையும் அதில் வரலாற்றில் அறியப்படாத 9 வேணாட்டு அரசர்கள் குறித்தும் கல்வெட்டுச் சான்றுகளோடு எழுதினார். சுந்தரனாருக்கு முன்பு சுகுணி மேனன்  எழுதிய திருவிதாங்கூர் வரலாறு எனும்  நூலானது நம்பத்தகுதியற்ற ஆதாரமற்றது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சுந்தரனார் எழுதிய கல்வெட்டு குறித்த ஆய்வுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.‌நூற்றொகை விளக்கம்,  ‘சிவகாமி சரிதம்’, ‘ஒரு நற்றாயின் புலம்பல்’, ‘பொதுப் பள்ளியெழுச்சி’, ‘அன்பின் அகநிலை’ ஆகிய கவிதை நூல்களும், ‘ஜீவராசிகளின் இலக்கணம்’,  ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய உரைநடை நூல்களும்,  ‘உரை நடை மடல்,’ ‘கவிதை மடல்’ ஆகிய மடல் நூல்களும் சுந்தரனார் எழுதிய பிற நூல்களாகும்.‌

வாழ்வின் இறுதிக் காலத்தில்,  தான் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்கு ஹார்வி புரம் எனப் பெயர் சூட்டினார்.  தனக்கு உதவிய தத்துவப் பேராசிரியர் இராபர்ட் ஹார்விக்கு நன்றி செலுத்தவே இப்பெயரை தேர்ந்தெடுத்ததாக கூறினார்.‌ தத்துவத்துறையிலும், தமிழ்நாடகத் துறையிலும், கல்வெட்டுத் துறையிலும் பெரும் புகழ் பெற்ற  சுந்தரனார் 26.04.1897 ஆம் நாள்  நாற்பத்தி ரெண்டாவது வயதில் காலமானார்.

https://arivazhagan.mooligaimannan.com/2020/04/blog-post_27.html

About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply