அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்


அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் 



2.3 சிலப்பதிகாரம் – கருத்துக் களஞ்சியம்சமயம், சமூகம், அரசியல் சார்ந்த பல கருத்துகளைக் கொண்டுள்ள ஒரு சிறந்த படைப்பு சிலம்பு. சிலப்பதிகாரத்தின் அடிப்படையாக மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன.

1) அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும்
2) புகழ்பெற்ற பத்தினியை மேலோர் போற்றுவர்
3) ஊழ்வினை தவறாது தன் பயனை ஊட்டும்என்பன அவை.


இவற்றோடு தமிழர்தம் நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகவும் திகழ்கிறது சிலப்பதிகாரம். இதில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் உண்டு. சமண, பௌத்த, வைதீக நெறிகளும் உண்டு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆய்ச்சியர், குறவர், பரத்தையர் எனப் பல இனத்தவர்களும் இங்குப் பேசப்படுகின்றனர். இவற்றை எல்லாம் தொகுத்துக் காண்பது ஓர் அரிய செயலே. மாணவர் தம் பயன்கருதி ஒரு சில இங்குச் சுட்டப்பெறுகின்றன.

2.3.1 அரசியல்அரசியல் பிழைத்தோர்க்கு அறமே எமனாக மாறும்; செங்கோல் வளைந்தபின் உயிர் வாழ்தல் நன்று அன்று; அரசன் நல்லாட்சி செய்தால்தான் அந்நாட்டில் வாழும் மகளிர்க்கும் கற்பு வாழ்க்கை சிறக்கும் என்பன போன்ற பல அரசியல் உண்மைகளைப் பேசுகிறது சிலம்பு.முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக (சிலப்பதிகாரம் – பதிகம் : 61-62) என்ற சாத்தனார் கூற்றிற்கு இணங்க இளங்கோ தம் காப்பியப் படைப்பை மூவேந்தர்க்கும் உரியதாகவே படைத்துள்ளார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவது போலச் சிலம்பின் தொடக்கமும் அரசியல், முடிவும் அரசியல் என்ற நிலையில் அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது சிலப்பதிகாரம். புகார், மதுரை, வஞ்சி எனக் காண்டப் பெயர்களை அமைத்து, மூவேந்தர்களையும், மூன்று நாடுகளையும், அவற்றின் தலைநகரங்களையும் ஒருங்கு இணைக்கிறார் இளங்கோ. மேலும் பத்தினி வழிபாட்டில் தமிழ் மன்னர்களை மட்டுமன்றிப் பிறநாட்டு மன்னர்களையும் இணைத்து ஒற்றுமைப்படுத்துகிறார்.அறியாது பிழை செய்த பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான்.வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது                              (சிலப்பதிகாரம்: 25: 98-99)


அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் 

(சிலப்பதிகாரம்-பதிகம்: 55) என்ற காப்பிய அறம் மதுரைக் காண்டத்தில் எடுத்துரைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் நேர்மை, நீதி தவறாத ஆட்சிமுறை இங்கு விளக்கப்படுகிறது. ‘நற்றிறம் படராக் கொற்கை வேந்தே’ என்றும், ‘தேரா மன்னா’ என்றும் கண்ணகி பாண்டிய மன்னனைப் பழித்தும் கூட, அவன் அமைதியாகக் ‘கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று’ என்று கூறுவது அவனது நேர்மைக்கு – செங்கோன்மைக்கு எடுத்துக்காட்டு. நடுவுநிலையோடு வழக்கைக் கேட்டுத் தன் தவறு உணர்ந்து உயிரையே விடுகிறான் பாண்டியன்.அறியாது பசுவின் கன்றினைக் கொன்ற இளவரசனைப் பலிகொடுத்துப் பசுவின் துயர் களைந்த மனுநீதிச் சோழனைப் பற்றிய குறிப்பைச் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம். தமிழர் திறம் பழித்த வட ஆரிய மன்னரை வெற்றி கொள்கிறான் சேரன் செங்குட்டுவன். வடநாட்டுப் போர் தொடங்கத் திட்டமிட்ட சேரன் தூது அனுப்ப எண்ணுகிறான்.

ஆனால் வஞ்சி நகரில் முரசு அறைந்து அறிவித்தாலே போதும்; செய்தி வடநாடு எட்டிவிடும் என்கிறான் அமைச்சன். இது நாட்டில் பிறநாட்டு ஒற்றர்கள் நிறைந்திருந்ததைக் காட்டுகிறது.

அரண்மனையைச் சுற்றி அகழி இருந்ததையும் கோட்டை மதிலில் பல்வேறு வகையான போர்க் கருவிகள் பொருத்தப் பட்டிருந்ததையும் மதுரைக் காண்டத்தில் காண்கிறோம். அரசனுடன் புலவர் பெருமக்களும், பட்டத்து அரசியும் உடன் இருந்து அரசியல் முடிவுகளை எடுத்தமை சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க முடிவு செய்ததன் மூலம் அறியலாம்.பேரரசின் கீழ் ஆட்சி செய்து வரும் சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் பிறநாட்டு மன்னர்களும் திறை செலுத்திய செய்தியைச் சிலம்பு தெரிவிக்கிறது. அதோடு மன்னனைக் காண வரும் மக்களும் குறுநில மன்னர்களும் காணிக்கைப் பொருளுடன் வந்து அரசனைக் கண்டு வாழ்த்துவதும் அரசியல் வழக்கமாக இருந்திருக்கிறது.

போரில் புறமுதுகு காட்டி ஓடியவர்களையும், தவக்கோலம் பூண்டு உயிர் பிழைத்துச் சென்றவரையும் தாக்குவது போர் அறம் அன்று என்பதையும் சிலம்பு சித்திரிக்கிறது. இப்படி எத்தனையோ பல அரசியல் செய்திகளைச் சிலம்பின் வழி அறியலாம். இப்படிப் பல சிறப்புக்களைச் சொன்னாலும், தமிழகத்தில் மூவேந்தர்களும் ஒற்றுமையாக இல்லை என்ற உண்மையைப் பதிவு செய்யவும் இளங்கோ தவறவில்லை; அதற்காகவே ஒற்றுமை உணர்வை வளர்க்கவே அவர் சிலம்பைப் படைத்தார் எனலாம்.

2.3.2 சமயம்சிலப்பதிகாரத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயச் சிந்தனைகள் நிறைந்து காணப்படுகின்றன. கவந்தியடிகளையும் சாரணர்களையும் படைத்து, அவர்கள் வாயிலாகச் சமண சமயக் கருத்துகளை வெளியிடுகிறார். 

ஆய்ச்சியர் குரவை என்னும் காதை திருமால் வழிபாட்டை எடுத்துரைக்கிறது. குன்றக்குரவை முருக வழிபாட்டைப் பேசுகிறது. வேட்டுவவரி கொற்றவை வழிபாட்டைச் சிறப்பிக்கிறது. மாதவி, மணிமேகலை துறவு மூலம் பௌத்தக் கோட்பாடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இவை தவிர இந்திரவிகாரம், மணிவண்ணன் கோட்டம், இலகொளிச் சிலாதலம், நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம், ஊர்க்கோட்டம் எனப் பல கோவில்கள் இருந்ததைச் சிலம்பு சுட்டுகிறது. இவை பல்வேறு சமயக் கடவுளருக்குரிய கோயில்கள் ஆகும். இப்படிப் பல சமயங்களை, சமயக் கருத்துகளை விருப்பு வெறுப்பு இன்றி எடுத்துரைக்கும் இளங்கோவடிகள், பத்தினி வழிபாடு என்ற ஒன்றில் அனைத்துச் சமயங்களையும், சமயக் குரவர்களையும் ஒருங்கிணைக்கிறார். இது இளங்கோவின் தனிச் சிறப்பாகும்.

2.3.3 சமூக வாழ்வுஇந்திய சமூகம் ஒரு சாதியச் சமூகம் என்பது அனைவரும் அறிந்ததே. இச்சாதியச் சமூகம் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற முறையிலும் இனக்குழுக்களான குறவர், ஆயர், வேட்டுவர் என்ற நிலையிலும் சிலம்பில் பேசப்படுகிறது. கோவல-கண்ணகியர் பெருவணிக குல மக்கள்; இவர்தம் வாழ்வியல் வளத்தோடு கணிகையர் குலம் இணைகிறது. பெருவணிகர் பற்றிப் பேசும் சிலம்பு சிறுவணிகர்களான அப்பம் விற்போர், பிட்டு விற்போர், பூவிலையாளர், இறைச்சி விற்போர் பற்றியும் பேசுகிறது. பொன்கடை வீதி, இரத்தினக்கடை வீதி, தானியம் விற்கும் கூலவீதி, துணி விற்கும் அறுவை வீதி, நாளங்காடி (பகல் நேரச் சந்தை), அல்லங்காடி (இரவு நேரச் சந்தை) எனப் பெருநகர் ஒரு பெரும் வணிகக் கூடமாகத் திகழ்ந்ததைச் சிலம்பு விரிவாகப் பேசுகிறது. இந்நகர்ப்புற நாகரிக வளர்ச்சியின் ஒரு கூறாகப் பரத்தையர் வீதிதனியாக இருந்ததையும் சிலம்பு எடுத்துரைக்கிறது. நகர அமைப்பே பொருளாதார நிலை, உயர் பதவி ஆகிய அடிப்படையில் அமைந்துள்ளதை இந்திர விழவூரெடுத்த காதை வாயிலாகப் பேசுகிறார் இளங்கோவடிகள்.

இவ்வகையில் குறிப்பிடத்தக்கது பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்ற புகார் நகர அமைப்பு ஆகும். வணிகரில் பெருவணிகர் இருக்கிற இடம் பட்டினப்பாக்கம்; சிறு வணிகர் வாழிடம் மருவூர்ப்பாக்கம்; உயர் படைத்தளபதிகள் வாழிடம் பட்டினப்பாக்கம்; சாதாரணப் படைவீரர்கள் இருப்பிடம் மருவூர்ப்பாக்கம்; கணிகையரில் தலைக்கோல் பட்டம் பெறும் கணிகையர் வாழிடம் பட்டினப்பாக்கம்; சாதாரண கணிகை வாழிடம் மருவூர்ப்பாக்கம்.கோவலன்-கண்ணகி திருமணம் கூட நகர்ப்புற நாகரிகத்தின் அடிப்படையில் சடங்குகள் கொண்டதாக அமைகின்றது.

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம்  (சிலப்பதிகாரம்: 1: 52-53) வந்து திருமணம் நடக்கிறது. மணிமேகலைக்குப் பெயர் சூட்டும் விழாவில் ஆயிரம் கணிகையர் வாழ்த்துகின்றனர்; மிகப் பெரிய அளவில் தானம் செய்கிறான் கோவலன். இறந்தோர்க்காகக் கங்கை நீராடி நீர்க்கடன் செய்கிறான் அரசன். இந்திரவிழா புகார் நகரில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அப்போது பல்வேறு கடவுளர்களுக்கு வழிபாடு நடக்கிறது. தலைக்கோல் பட்டம் பெற்ற மாதவி விழாவில் ஆடுகிறாள். இவை அனைத்துமே நகர்ப்புற நாகரிக வாழ்வின் வெளிப்பாடாக அமைகின்றன.இவையன்றி நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் முறையும் சிலம்பில் சிறப்பிடம் பெறுகின்றது.

வேட்டுவர்களின் கொற்றவை வழிபாடு, ஆய்ச்சியர்களின் கண்ணன் வழிபாடு, குன்றக் குறவர்களின் வேலன்-வள்ளி வழிபாடு, அம்மக்களின் ஆடல் பாடல்கள் முதலானவை நாட்டார் வாழ்வியலைச் சித்திரிப்பன. கோவலர் வாழ்க்கை குறையற்றது எனக் கவுந்தியடிகளால் சிறப்பிக்கப்படுகின்றது. வேட்டுவ மகள் சாலினி, தெய்வம் ஏறப்பெற்று, அம்மக்களால் தெய்வமாகவே வழிபடப்படுகின்றாள். வேட்டுவ மக்கள் கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுப்பதும் தம்மையே பலிதருவதும் வழக்கமாக இருந்திருக்கின்றன.

கோவல-கண்ணகியரைத் தனிமனைப் படுத்தும் நிகழ்ச்சி அக்காலத்தே தனிக்குடும்ப வாழ்க்கை முறை வழக்கில் இருந்துள்ளதைத் தெளிவுபடுத்துகிறது. அரசனும் அரசமாதேவியரும் ஆடம்பரமாக வாழ்ந்தனர். பாண்டிமாதேவி தான் கண்ட கனவினை அரசனுக்குத் தெரியப்படுத்தப் புறப்பட்டுவரும் காட்சி அவர்தம் ஆடம்பர வாழ்வுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இங்குப் பல்வேறு மகளிரும் பணியாட்களும் எண்ணற்ற அணிகலன்களையும், மணப்பொருட்களையும், ஒளி விளக்குகளையும் ஏந்திச் செல்கின்றனர். 

ஆடி (கண்ணாடி) ஏந்தினர்; கலன் ஏந்தினர்; அவிர்ந்து விளங்கு அணியிழையினர்; கோடி எந்தினர்; பட்டு ஏந்தினர்; கொழுந்திரையலின் செப்பு ஏந்தினர் (சிலப்பதிகாரம்: 20: 13) என்று இவ்வாறு இளங்கோ காட்டும் காட்சி அரசியரின் பெருவாழ்வின் விளக்கமாக அமைகின்றது.அரண்மனைப் பொற்கொல்லனை அறிமுகம் செய்கிறபோதும் கூட, அவன் நூறு பொற்கொல்லர்கள் பின்வர ஆடம்பரமாக வருவதாக இளங்கோ காட்டுகிறார். அதே நேரத்தில் துறவியர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததும் இங்குக் குறிப்பிடப்படுகிறது. இவர்களுக்குச் சாபமிடும் ஆற்றலும், வருவதுணரும் ஆற்றலும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்ஙனம் அரசன் முதல் ஆண்டிவரை பல்வேறு தளத்திலுள்ள மக்களின் வாழ்வியல் களஞ்சியமாகச் சிலம்பு திகழ்கிறது.

2.3.4 கலைநாகரிகத்தின் வெளிப்பாடே கலை; இயல், இசை, நாடகம், கூத்து, கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல்வேறு கலைகள், கலைஞர்கள் கலைவாழ்வு சிறந்து விளங்கியமையைச் சிலப்பதிகாரம் வழி அறிகிறோம். கோயில்கள் கோட்டம், நியமம், விகாரம், சிலாதலம் எனப் பல பெயர்களில் வழங்கப்பட்டன. கண்ணகிக்குச் சிலை வடித்தமை, கருங்கல்லில் சிலை செய்த செய்தியைப் புலப்படுத்துகிறது. சிலம்பின் அரங்கேற்று காதை தமிழர்தம் இசைக்கலை, நாட்டியக் கலைக்குச் சிறந்த சான்றாகும்.

நாட்டியக் கலையில் வேத்தியல், பொதுவியல் என இருவகை இருந்தமை தெரிகிறது. இங்குப் பாடல் ஆசான் இயல்பு, யாழாசிரியன் இயல்பு, குழல் வாசிப்பவன் இயல்பு, தண்ணுமை முழங்குவோன் இயல்பு என இசைக் கலைஞர்களின் இயல்பு தெளிவாக விளக்கப்படுகிறது. மாதவியின் நாட்டியத் திறன், அவளது ஒற்றைக்கை மற்றும் இரட்டைக்கை அவிநயம் பற்றிய விவரிப்பு, அதனால் அவள் தலைக்கோல் அரிவை என்ற பட்டம் பெற்றது, நாட்டிய அரங்கம் (மேடை, விளக்குகள், திரைகள்) பற்றிய விளக்கம் ஆகிய அனைத்தும் சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் இக் கலைகள் பெற்றிருந்த செல்வாக்கினை அறியத் துணைபுரிகின்றன.

இவையன்றி மாதவி கடவுளர் வடிவுகொண்டு ஆடிய பாண்டரங்கம், குடை, துடி முதலான 11 வகைக் கூத்துகளும், கோவலன் முன்னின்றாடிய காட்சிவரி, தேர்ச்சிவரி, புன்புறவரி முதலான எண்வகை வரிக்கூத்துகளும் தமிழர்தம் கூத்துக் கலைக்குச் சிறந்த சான்றாகும். அதோடு இன்றைய சாமியாட்டம் போன்று சாலினி தெய்வமுற்று ஆடிய கூத்தும், ஆய்ச்சியர் எண்மர் வட்டமாக நின்று ஆடிய குரவைக் கூத்தும் நாட்டுப்புற மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கூத்து வகைகளைப் புலப்படுத்துவன. கண்ணகி-பாண்டிமாதேவி சிலம்பு மற்றும் மாதவி அணிந்த அணிகலன்கள் பற்றிய விவரிப்பும் அக்கால நுண்கலைகளின் திறத்திற்குச் சான்றாகின்றன. இவ்வாறு, சிலம்பு ஒரு கலையின் களஞ்சியமாகத் திகழ்வதை அறிகிறோமன்றோ!

2.3.5 நம்பிக்கைகள்கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன (சிலப்பதிகாரம்: 5: 237,239) என்பதில் பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையும், வலக்கண் துடித்தால் தீமையும் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது புலப்படுகிறது. கோவலன் கொல்லப்பட்ட அன்று குடத்துப்பால் உறையாது இருத்தல் முதலானவற்றை ஆய்ச்சியர்கள் தீய சகுனங்களாகக் கொள்கின்றனர். கோவல-கண்ணகியர் தாயரின் மறுபிறப்புப் பற்றிய செய்தி, பிறவிகள் தொடரும் என்ற நம்பிக்கையை எடுத்துரைக்கிறது. இறைவனுக்கு விழா எடுக்கவில்லையானால் தீமை நிகழும் என்ற நம்பிக்கை வேட்டுவ வரி மூலம் சுட்டப்பெறுகிறது.

வேட்டுவ வரி வேடர்களின் பலி கொடுக்கும் வழக்கத்தை எடுத்துரைப்பதோடு, தன்மூலம் கொற்றவை வெற்றி தருவாள் என்ற நம்பிக்கை இருந்ததையும் காட்டுகிறது. பத்தினிக் கடவுளுக்காகப் பாண்டியன் வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலியிட்டுச் சாந்தி செய்தான் என்ற செய்தியும் இத்தகைய நம்பிக்கையைத் தெரிவிக்கிறது. கனவு பலிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததைக் கோவலன், கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோர் கண்ட கனவுகள் புலப்படுத்துகின்றன.
https://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011123.htm
———————————————————————————

சிலப்பதிகாரச் செய்தி என்ன?

18-Apr-2015


இளங்கோவடிகளின் படைப்பாகிய சிலப்பதிகாரம் அவருடைய கற்பனைப் படைப்பு அல்ல. நடந்த ஒரு சோகச் சம்பவத்தை இளங்கோவின் சமகாலப் படைப்பாளியான சாத்தனார், முடிகெழு மூவேந்தருக்கு உரியது இது. அதனால் “அடிகள் நீரே அருளுக” எனச் சொல்லியதால் இளங்கோவடிகளால் எழுதப்பட்டதுதான் சிலப்பதிகாரம்.

“அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாவதும்”
“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்”
“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”

என முப்பெரும் உண்மைகளைச் சிலப்பதிகாரம் பேசுவதாகப் பண்டிதர்கள் பலர் கூறுவர்.

இம்முப்பெரும் உண்மைகளை மறுவாசிப்பு என்ற அமிலச் சோதனைக்கு உட்படுத்திப் பார்ப்பது சிலப்பதிகாரத்தை எவ்வகையிலும் சிறுமைப்படுத்துவது ஆகாது. சத்தியத்தை தேடுவது என்பது “ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தை” அறிந்து கொள்வதற்கான நல்ல முயற்சிதான்.

வடமொழியில் சத்தியம் என்பதைத்தான், வள்ளுவர் மெய்ப்பொருள் என்கிறார். பொதுவாகச் சத்தியம் என்பது என்றும் மாறாதது என்பார்கள். அதையும்விட ஆழமாகச் சொல்வதென்றால் எது மாறாததோ அதுதான் சத்தியம் எனலாம்.

ஒரு தத்துவ மேதை சொன்னார்: “மாறிக் கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் எது நிரந்தரமானது என்றால், அந்த மாறுதல்தான் நிரந்தமானது (
Change is Permanent).” என்றார். மாறுதல் என்பது தொடர் நிகழ்வு; முடிவற்றது.

நமது மொத்த வாழ்க்கையும் சிலப்பதிகாரம் பேசும் மூன்று பேருண்மைகளுக்குள்ளேயே அடங்கிவிடுமா? வாழ்க்கையில் வேறு அம்சங்களே இல்லையா? எனக் கேட்பதும் நியாயமானதுதான்.

வாழ்க்கை என்பது உழைப்புச் சார்ந்தது. தொண்டுக்கு உரியது. தியாகத்திற்கும் இடம் தருவது. சிலப்பதிகாரம் பேசும் மூன்று உண்மைகளுக்குள் இப்படிப்பட்ட பல உன்னதங்கள் இடம்பெறவில்லை.

இந்தப் புரிதலோடு இளங்கோவடிகள் கண்ட, – காட்டிய, – நாட்டிய அம்மூன்று பேருண்மைகளையும் அலசுவது அவசியப்படுகிறது.

ஏனெனில், சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிற பாண்டியன் நெடுஞ்செழியன் மனச்சாட்சியுள்ள ஒரு தனி மன்னனாக இருந்ததால் “யானோ அரசன்? யானே கள்வன்” என்று அதிர்ச்சியடைகிறான். அநேகமாக இக்கால வார்த்தையில் அதனை “மாரடைப்பு மரணம்” என்றால் தவறில்லை.

காரணம், அவன் செய்த பிழை, நிரபராதியைக் குற்றவாளியாகக் கருதி அவன் “கையில் சிலம்பு இருக்குமானால், அவனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க” என்று அவசரமாக வாய்மொழி உத்தரவிட்டதுதான்.

இதுதான் “அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாவது” என்பதாகக் காட்டப்படுகிறது.

நடைமுறை வாழ்க்கையில் அரசனைப் போல அதிகாரமுள்ள இன்றைய அரசியல்வாதிகளுக்கு இதனைப் பொருத்திப் பார்த்தால்தானே! இதனை எக்காலத்துக்கும் உரிய சத்தியம் என்று கூற முடியும்.

அந்தப் பொருத்தப்பாட்டைச் செய்து பார்த்தால், இந்திய அரசியலில் மனச்சாட்சியுள்ளவராக நமக்குக் காந்தியடிகள் ஒருவர் மட்டும்தான் மிஞ்சுகிறார்.

அநேகமாக அனைத்து அரசியல்வாதிகளும் பல்வேறு அரசியல் பிழைகளை அனுதினமும் செய்பவர்களாகவே உள்ளனர். அவர்களிடத்தில் காணப்படும் மாபெரும் குறைபாடே, அவர்களுக்கு மனச்சாட்சி இல்லை என்பதுதான்.

“அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்” என்பதில் உள்ள இந்த “அறம்” எதைச் சுட்டுகிறது?

சிலப்பதிகாரம் சம்பந்தப்பட்ட அளவில், அது பாண்டிய மன்னனுடைய மனச்சாட்சியைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

தனக்குத் தெரியாமல் தவறு செய்துவிட்ட மன்னன் அவன். தவறு செய்ததைத் தெரிந்து கொண்ட பிறகு, தனக்குத்தானே தண்டனையும் கொடுத்துக் கொள்கிறான்.

மனச்சாட்சி என்பது அரசியலில் செத்துப் போய்விட்டதென்றால், அதனால் ஏற்படும் இழப்பு இளங்கோவடிகளுக்கு அல்ல. இங்குள்ள சக மனிதர்களான நமக்குத்தான்.

காவல்துறை கண்காணிப்பதனால்தான் இவன் ஒழுங்காக இருக்கிறானே தவிர, சந்தர்ப்பம் கிடைத்தால் இவனும் சறுக்கி விழுந்து விடுவான் என்பது மனச்சாட்சியின் மகத்துவத்துக்குச் செய்யப்படும் மாபெரும் அவமானமாகும்.

ஆகவே, பயன்பாட்டுப் பார்வையில் பரிசீலித்தால், சிலப்பதிகாரம் பேசுகிற முதல் பேருண்மை, செப்பனிட முடியாத அளவிற்குச் சேதத்திற்கு உள்ளாகிறது.

“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்ற இரண்டாவது பேருண்மையும் இதுபோலவே நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

சிலப்பதிகாரத்தில் நாம் சந்திக்கிற பாத்திரங்களில் கண்ணகி ஒருத்தி மட்டும்தான் கற்புள்ளவளா? பிரபலமில்லாத பாத்திரங்களாகிய தேவந்தி என்ன கற்பு நெறி இல்லாதவளா? வயந்தமாலைக்குக் கற்பு இல்லையா?.

இடைச்சேரியிலே கண்ணகி தங்கியிருந்த மாதரி குடும்பத்து மகளிர்களுக்குக் கற்பு இல்லையா? அவ்வளவு ஏன்? கோவலனின் கொலைக்குக் காரணமான பொற்கொல்லனின் மனைவி கூட இந்தக் கற்புநெறிப் பட்டியலில் இடம்பெறத் தக்கவள்தானே!.

சிலப்பதிகாரத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மகளிரையும் கற்புள்ளவர்களாகக் கருதுவதுதானே நயத்தக்க நாகரிகம்.

இங்கிலாந்து இளவரசி டயானாவின் கணவர் சார்லஸ் திருமணத்திற்கு முன்பே கமிலா பார்க்கர் என்ற தன்னைவிட மூத்த பெண்ணோடு வாழ்ந்த வாழ்க்கையை ஒரு புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தைப் படித்த டயானா அதிர்ச்சிக்கு உள்ளானார். நம்பிக்கை சிதறிய நிலையில் சுய சித்ரவதை செய்து கொண்டார்.

டயானாவை லண்டன் பி.பி.சி. பேட்டி கண்டது. அதில் அவர் பேசியபோது, “மனைவிக்கும் கணவனுக்கும் மத்தியில் மூன்றாம் நபர் பிரவேசிப்பாரானால், மிகப்பெரிய நெரிசல் ஏற்பட்டுவிடும்” என்றார். (“if a third person comes between husband and wife, it would be too crowded”).

இந்தக் கருத்தில் தொனிப்பது எது? தான்மட்டுமல்ல், தனது கணவனும் கற்புடையவனாக இருக்க வேண்டும் என்பதுதானே டயானாவின் எதிர்பார்ப்பு. ஐரோப்பிய நாகரிகத்தில்கூட கற்புக்குக் கவனிக்கத்தக்க இடமிருக்கிறது.

இளமையாக இருந்த கண்ணகியுடைய கற்புக்குத் தேக ரீதியாக எவ்வித ஆபத்தும் பூம்புகாரில் ஏற்படவே இல்லை. கணவன் இருந்தும் அவனை இழந்தவளாகிவிட்ட, இளம் பெண் கண்ணகி பட்ட துயரம் கவலைக்குரியதே தவிர, கண்ணகியின் கற்புக்கும் அத்துயரத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல் என்ற வரியைப் படித்து விட்டு, பண்டிதர்களைப் போல் அல்லாமல் பாரதி வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறார்.

அந்தச் சிந்தனை இளங்கோவடிகளின் மீது செய்யப்பட்ட விமர்சனமாகக்கூட இருக்கலாம்.

கற்புடைய பெண்டிரை உயர்ந்தவர்கள் பாராட்டுவார்கள் என்று இளங்கோவடிகள் சொல்லி வரும்போதே, பாரதி ஏதோ குறுக்கீடு செய்தது போல்,

“கற்பு நிலை என்று பேசவந்தார் – இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்” என்கிறார்.

இளங்கோவடிகளே சிந்திக்காத “ஆண் கற்பு” பற்றிய பாரதி சிந்தனை இளங்கோ கால்த்தில் இல்லை. ஆடவன் ஒருவன் கற்புள்ளவனாக இருந்தால்தான் பெண்ணும் கற்புள்ளவனாக வாழ முடியும். ஆடவன் சபலமானவனாக இருந்தால், அவனால் அல்லது அதனால் யாரோ ஒருத்தி கற்பிழந்து விடுகிறாளென்றுதானே பொருள்?

ஆண்கள் கற்பு இல்லாதவர்களாக நீடிக்கும் வரை, பெண்கள் கற்புள்ளவர்களாக இருப்பது சாத்தியமாகாது என்பது தர்க்க ரீதியானது.

கம்பன் காட்டிய ராமன், ஏகபத்தினி விரதனாக இருந்தான். கற்புள்ள ஆடவனாக அவன் இருந்த காரணத்தால்தான் சீதையின் சொற்களுக்கே சுடுகிற அந்த ஆற்றல் வாய்த்தது என்கிறார் கம்பர்.

இளங்கோவடிகள் காட்டும் கற்புநெறி கண்ணகிக்கு மட்டுமே என இதைக் குறுக்கி விடுவதா? அல்லது சமுதாயம் முழுவதற்குமே உரியது என விரிவாக்குவதா? எனக் கேட்க வேண்டியிருக்கிறது.

ஜான்சிராணி லட்சுமிபாய் பிரிட்டிசு படையை எதிர்த்துக் குதிரையில் அமர்ந்து போர் புரிந்த வீராங்கனை. அந்த வீராங்கனை எதிர்த்துப் போரிட்டது ஒரு வீரனைத்தான்.
ஜான்சிராணி லட்சுமிபாயின் வாழ்க்கையைப் பிரபலப் படுத்தியது, அவள் வீராங்கனையாக இருந்த அச்சமற்ற அச்செயல்தானே.

இதேபோல, இன்றைக்கும் மணிப்பூர் மாநிலத்தில் ஐரோம் சர்மிளா என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்திலுள்ள நமது மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தை எதிர்த்து உண்ணா நோன்பு மேற்கொண்டு வருகிறார்.

வாயால் அவர் உண்ணுவதில்லை. அதனால், மணிப்பூர் மாநில அரசு அவருக்கு மூக்கில் குழாய் சொருகி, வலுக்கட்டாயமாக உணவு செலுத்திக் காப்பாற்றி வருகிறது. கைதாவதும், பிறகு விடுதலையாவதுமாக அப்பெண்ணின் வாழ்க்கை 40 வயதைக் கடந்து கொண்டிருக்கிறது. வரலாறு அப்பெண்ணை வீராங்கனையாத்தான் வருணிக்கிறது.

இவர்களை வீராங்கனைகளாகப்  பாராட்டாமல் கற்புக்கடம் பூண்ட மங்கையர் திலகமென்று பாராட்டுவது அவசியமில்லாத தாகும்.

இதே போலத்தான் கண்ணகி மதுரையில் உறவுகளோ, நண்பர்களோ இல்லாத ஊரில், இருந்த கணவனும் கொலை செய்யப்பட்ட பிறகு ஆவேசத்தோடு தலைவிரிக்கோலமாக அச்சமில்லாமல் வீதியில் வருகிறாள். அரசனையே பார்த்துக் கேள்வி கேட்கிறாள். அவள் மனம் எரிவது போல மதுரை எரிகிறது என்கிறது சிலப்பதிகாரம்.

இங்கே கண்ணகியின் கற்பைப் பிரபலப்படுத்துவதா, அவள் வீரத்தைப் பிரபலப்படுத்துவதா? கற்புடைய பல பெண்டிர் கண்ணகியைப் போல வீராங்கனைகளாக இல்லை.

ஆகவே, சிலப்பதிகாரத்தில் கண்ணகியை மெச்சி உச்சப்படுத்துகிற அம்சம் அவளது வீரம்தானே தவிர, கற்பு அல்ல.

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்பது மூன்றாவது பேருண்மை. முந்தைய ஜென்மத்தில் பாவங்கள் செய்திருப்பானேயானால், அந்தப் பாவங்கள் அந்த வினைக்கு உரியவனைச் சென்று பழி வாங்கியே தீரும் என்பதே வினைக்கோட்பாடு.

இந்தப் பேருண்மையை நமது நடைமுறை வாழ்க்கையில் எப்படி உணர்வது?

உணர்ந்தால்தானே, அது ஊட்டுகிற அச்சத்தால் மனிதர்கள் தவறு செய்யாமல் தடுக்கப் படுவார்கள்.

கிடைக்கிற புள்ளி விபரத் தகவல்களின்படி பார்த்தால், கொடூரக் குற்றங்களுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதனாலேயே சமூகத்தில் குற்றங்கள் குறையவில்லை என்கிறார்கள்.

அதனால், தூக்குத் தண்டனையை 69 நாடுகள் ரத்து செய்துவிட்டன். சில நாடுகளில்தான் தூக்குத் தண்டனை இன்னும் நீடிக்கிறது.

இளங்கோவடிகளின் மூன்றாவது பேருண்மையில் வெளிச்சம் படாமல் இருக்கும் முக்கியமான அம்சம், ஊழ் என்பது.

அந்த ஊழ் ஏதோ தானியங்கி ஏவுகணை போலப் புறப்பட்டுப் போய்த் தவறு செய்பவனைத் தண்டித்து விடும் என்று மக்கள் அதற்கு அஞ்சுகிறார்களா?

ஊழ் பற்றி விமர்சித்தால் சிக்கல் மேலும் அதிகமாகிறது. ஏனெனில் 700 கோடி உலக மக்களில் 100 கோடி கிறித்தவர்களுக்கு ஊழ் மீது நம்பிக்கை இல்லை. 120 கோடி இஸ்லாமியர்களுக்கும் ஊழ் பற்றித் தெரியாது. மறுபிறவியை மறுப்பவர்கள் அவர்கள். மேலும் 120 கோடி பௌத்தர்களுக்கும் இதைப் பற்றிய சிந்தனையில்லை.

இதேபோல்தான் சீக்கியர்களும், பார்சிகளும், இஸ்ரேலியர்களும் இருக்கிறார்கள்.

ஊழ் என்பது சமண சமயக் கோட்பாடாக மட்டுமே இருந்து, சைவத்திலும், வைணவத்திலும் அது ஊடுருவி உள்ளது.

ஊழ் பற்றித் தெரிந்தோ, தெரியாமலேயோ இருக்கிற பல இந்துக்களுக்கு இது பற்றிய புரிதலும் போதுமானதாக இல்லை. அதனால், இளங்கோவடிகளின் மூன்றாவது பேருண்மையான ஊழ் என்பதை உலக மக்கள் அனைவரும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

ஊழ் என்பதை மனித குலம் முழுவதுமே உண்மையென நம்பி, விநாடிப் பொழுதுகூட அதற்கு விடுமுறை கொடுக்காமல் கடைப்பிடிக்குமானால், நமக்குக் காவல்துறை தேவையில்லை. நீதிமன்றம் அவசியமில்லை. கைரேகை நிபுண்ர்களோ, சி.ஐ.டி.களோ எதற்காக?

ஊழ் என்பதை இல்லையென்று சாதிப்பதால் ஏற்படும் இழப்பு இளங்கோவடிகளுக்கு அல்ல, நமக்குத்தான்.

இம்மூன்று பேருண்மைகளையும் சிந்தனைத் தராசில் வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால், மூன்றுமே எடையிழந்து போகின்றன.

ஆனாலும் சிலப்பதிகாரக் கதை அமைப்பு, வருணனை, பாத்திரப் படைப்பு, இயற்கைச் சித்தரிப்பு அனைத்திலும் தமிழ் அமுதம் தளும்பி வழிகிறது.

“திங்களைப் போற்றுதும்” என்ற சிலப்பதிகார முதல் வரியே “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்ற சேக்கிழாரின் செந்தமிழ் வரியை விஞ்சுகிறது.

சிலப்பதிகாரத்தில் காணப்படும்  நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்”, “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்”, “கரும்பே தேனே”, “மாலை வாராராயினும் காலை காண்குவம்”, ‘‘நடந்தாய் வாழி காவேரி” முதலிய சிரஞ்சீவித்துவமான கவிதை வரிகள், வாசகர் மனதை அடிமை கொண்டு விடுகின்றன.

முப்பெரும் உண்மைகளைப் பற்றிப் பேசாத பாரதி, “நெஞ்சை அள்ளிய சிலப்பதிகாரம்” என்று எதை எண்ணிக் கூறினான் என்பதை யோசிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

இந்த மானுடச் சமூகம் இயங்க வேண்டுமானால், அதற்கான சாசுவதமான நெறிகள் மிகமிக அவசியம். விலங்குகளுக்கு அந்நெறிகள் தேவையில்லை. அவை பசித்தால் உணவைத் தேடும். பருவம் வந்தால் இனவிருத்தியில் ஈடுபடும். மனிதன் விலங்கு அல்ல.

அவனுக்கு ரசனை உணர்வு உண்டு. அவன் ஆக்கப்பிறந்தவன். அவனுக்கு இரக்கம் சுரக்கிறது. அவன் கற்பனையும், சிந்தனையும் உள்ளவன். மனிதனுக்கான மகத்தான இந்நெறிகளைச் சிலப்பதிகாரம் பட்டியலிட்டுள்ளது.

“பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகன்மின்; பொருள் மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;

அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்”

என இந்த 21 நெறிகளும் ஒரு வேளை பாரதியின் “நெஞ்சை அள்ளி” இருக்கலாம் அல்லவா? எது எப்படியாயினும் இந்த நெறிகள் சிலப்பதிகாரப் பாயிரத்தில் பதிவாகியுள்ள முப்பெரும் உண்மைகள் அல்ல என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

பெ.சிதம்பரநாதன், கோவை



Total Adblock Logo0 Ads BlockedBlock Unlimited Ads

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply