இனப்பிரச்சனை முழுவதும் ஆட்சியதிகாரம் பற்றியதே செல்வநாயகம் நினைவுரை

இனப்பிரச்சனை முழுவதும் ஆட்சியதிகாரம் பற்றியதே  செல்வநாயகம் நினைவுரை

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தினா 2014-04-26

1. எஸ். ஜே. வி. செல்வநாயகம் மறைந்து 37 ஆண்டுகள் நிறையும் இவ்வேளையில் அவரை நினைவுகூர்ந்து உரையாற்ற என்னை வரவழைத்த குழுவினர்க்கு  நன்றி! செல்வநாயகம், இலங்கைத் தமிழ் மக்களால் பூசிக்கப்படும் தலைவர். கடந்த மாதம் தோழர் பேர்ணாட் சொய்சாவின் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். அவருக்குப் பிறகு செல்வநாயகத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற வரவழைக்கப்பட்ட இரண்டாவது சிங்களவர் நானே என்று அறிகிறேன். இவ்விரு சமூகங்களுக்கும் இடையே காணப்படும் வெளியை இது உணர்த்துகிறது. எனினும் தோழர் பேர்ணாட்டை பின்பற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேவேளை, இந்த இடைவெளியை எண்ணி வருந்துகிறேன். இந்த இடைவெளியை நிரப்ப நாம் பாடுபட வேண்டும்.

(2) ஆட்சியதிகாரமே இனத்துவ-அரசியல் முரண்பாடுகளின் மையம்

இன, மொழி, சமய வரையறை கொண்ட சமூகங்கள் பலவும் வாழும் அரசில் அச்சமூகங்களின் உரிமைகள், ஆட்சிமன்றங்களில் அவற்றின் பிரதிநிதித்துவம், ஆட்சியதிகாரத்தில் அவற்றின் பங்கு பற்றிய வினாக்கள் எழுந்த வண்ணம் இருக்கும்.சிறிய சமூகங்கள் அங்கும் இங்குமாக வாழும் அரசுகளில் சமத்துவக் கோரிக்கை எழும். சட்டமன்றத்திலும், நிருவாகத்திலும் தமது வலுவுக்கு நிகராக அவை பிரதிநிதித்துவம் கோரும். பாரபட்சமற்ற சமத்துவம் நாடி அரசியல்யாப்பின் ஊடாக அவை உத்தரவாதமும் கோரும். வேலைவாய்ப்பில் உரிய பங்கு கோரும். பொருளாதார வாய்ப்புகள், கல்வி வசதிகள் இல்லாமை, பல்கலைக்கழக அனுமதி குறித்தும் சச்சரவுகள் தோன்றும். தமது பண்பாட்டைக் கட்டிக்காக்கவும், மேம்படுத்தவும், தமது மொழியைப் பயன்படுத்தி அரசுடன் தொடர்புகொள்ளவும் அவை உரிமை கோரும்.தாம் “சிறுபான்மையோர்” எனப்படுவது குறித்து சிறிய சமூகங்கள் சில விசனமைடைகின்றன. தாங்கள் “மக்கள்” அல்லது “இனம்” என்பதை அவை வலியுறுத்துகின்றன. சில மொழிகளில் “சிறுபான்மையோர்” என்னும் சொல் தாழ்த்தப்பட்டோர் என்று பொருள்படுவதுண்டு.  

(3) புலம்

அத்தகைய சமூகம் செறிந்து வாழும் புலத்தில் முற்றிலும் வேறு விதமான பிரச்சனை எழும். ஒரு புலத்தில் செறிந்து வாழும் சமூகங்கள் சமத்துவத்துக்கான உத்தரவாதங்களுடன் மாத்திரம் நிறைவு கொள்வதில்லை. தத்தம் புலத்தினுள் தமது சொந்த அலுவல்களை மேற்கொள்ளும் உரிமையையும் அவை நாடுகின்றன. கூடிவாழும் சமூகம் அதன் பண்பாட்டு அடையாளத்தையும் அரசியலுருவில் முன்வைக்க விரும்புகிறது. ஆகவே தன்னாட்சியுருவில் ஆட்சியதிகாரத்தில் அது பங்கு கோருகிறது. “கூடிவாழ்தலே” கோரிக்கையின் தன்மையை மாற்றுகிறது. எங்கெல்லாம் ஒரு சமூகம் செறிந்து வாழ்கிறதோ, அங்கெல்லாம் பிரதேச தன்னாட்சிக் கோரிக்கை எழுகிறது. மனக்குறைகளால் மாத்திரமே தன்னாட்சிக் கோரிக்கை எழும் என்பதற்கில்லை. மனக்குறைகள் உண்டோ, இல்லையோ என்பதற்கும் தன்னாட்சிக் கோரிக்கைக்கும் தொடர்பில்லை. வெறுமனே பண்பாட்டு அடையாளத்திலிருந்து எழுவதே தன்னாட்சிக் கோரிக்கை. அதேவேளை, மனக்குறைகள் உள்ளவிடத்து தன்னாட்சிக் கோரிக்கை மேலும் வலுப்படல் இயல்பே.

(4) குழுமம்

பெரும்பான்மைவாதிகள் அநேகர் புரிந்துகொள்ளத் தவறும் “குழும விளைவு” என்பதை தோபர்வெயின் (Nicole Töpperwien) என்ற நிபுணர் நன்கு விளக்கி யுரைத்துள்ளார்: “தங்களை சிறுபான்மையோராகக் கருதுவதை விடுத்து, மக்கள்திரளில் சரிநிகராக அங்கம் வகிக்கும் தரப்பினராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறிய குழுமங்கள் விரும்புவது வழமை. அதாவது, ஆட்சமத்துவத்தை அல்ல, குழுமச் சமத்துவத்தையே அவை நாடுகின்றன.”பல்வேறு குழுமங்களின் நலன்களுக்கும், கோரிக்கைகளுக்கும் இடங்கொடுப்பது எங்ஙனம்? பல்பண்பாட்டுச் சமூகங்கள் எதிர்நோக்கும் சவால் அது. சிறிய சமூகங்கள் சிதறியோ, செறிந்தோ வாழ்ந்தாலும் கூட, இனத்துவ-அரசியல் முரண்பாடுகள் என்பது அடிப்படையில் ஆட்சி யதிகாரம் பற்றியதே என்பதை இங்கு நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. இதை பெரும்பாலான பெரும்பான்மைவாதிகள் புரிந்துகொள்வதில்லை அல்லது ஏற்க மறுக்கிறார்கள். ஆட்சியதிகாரத்தைப் பகிர்வதன் ஊடாக மாத்திரமே அத்தகைய முரண்பாடுகளைத் தீர்க்க முடியும். ஒரு கருத்தரங்கில், “தமிழருக்கு என்ன பிரச்சனை? அவர்கள் எங்களுடன் ஒரே பேருந்தில் பயணிக்கிறார்களே! நாங்கள் ஒரே தேனீர் கொதிகலத்தையே பகிர்ந்துகொள்கிறோமே!” என்று பரந்த பட்டறிவு மிகுந்த துறைபோன சிங்களவர் ஒருவர் வினவினார். “அதுதான் பிரச்சனை. தேனீர் கொதிகலத்தையே நீங்கள் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறீர்கள்,  ஆட்சியதிகாரத்தை அல்ல.” என்று நான் பதிலடி கொடுத்தேன். எனது பதிலடிக்குப் பதில் கிடைக்கவில்லை! 

ஏறத்தாழ எல்லா வேளைகளிலும் பெரிய சமூகம் எதுவும் ஆட்சியதிகாரப் பகிர்வுக்கு தொடக்கத்திலாவது மறுப்புத் தெரிவிக்கும். அத்தகைய பெரும்பான்மைவாதம் ஏறத்தாழ உலகளாவிய ஒன்று. எவ்வாறு சர்வாதிகாரிகள் நன்னலம் புரிய முன்வருவதில்லையோ, அவ்வாறே பெரிய சமூகங்கள் நன்னலம் புரிய முன்வருவதில்லை. எனினும் எவ்வளவு தூரம் ஆட்சியதிகாரப் பகிர்வு மறுக்கப்படுகிறதோ, அவ்வளவு தூரம் தன்னாட்சி உரிமையும் கோரப்படும். சில நாடுகளில் தன்னாட்சிக் கோரிக்கை,  பிரிவினைக் கோரிக்கையாக ஓங்குவதுண்டு. அதற்கு இலங்கை ஓர் எடுத்துக்காட்டு.அரசியலில் ஒத்துமேவி, ஆட்சியதிகாரத்தைப் பகிர்வதன் ஊடாக மட்டுமே அரசின் உருக்குலைவைத் தடுக்க முடியும் என்பதை பெரும்பான்மைச் சமூகங்கள் பலவும் வேளைக்கோ, காலம் தாழ்த்தியோ உணர்ந்து கொண்டுள்ளன. ஒற்றையாட்சி கொண்ட ஸ்பெயினும்,  பெல்ஜியமும், ஐக்கிய இராச்சியமும் மறுசீரமைப்புக்கு உள்ளாகி யிருக்கின்றன. ஐக்கிய இராச்சியத்தில் ஒற்றையாட்சி அரசினுள் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. எனினும் நடைமுறையில் அதை ஒற்றையாட்சி முறைமை என்று கொள்ள முடியாது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏல் பெருமாட்டி (Baroness Hale) கூறினார்: “அதிகாரப் பரவலாக்கத்துக்கு உட்பட்ட நாடாளுமன்றங்கள் தமக்கெனத் திட்டவட்டமாக ஒதுக்கப்பட்ட அதிகார வரம்பினுள் செயற்படும் வரை அவற்றை மக்களாட்சிநெறிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களாக மதிக்க வேண்டும்; அவற்றை சாதாரண அரசாங்க அதிகார அமைப்புகளாக நடத்தக் கூடாது. அது முக்கியமான விடயம். உண்மையில் ஐக்கிய இராச்சியம் என்பது இணைப்பாட்சி மையத்துக்கும் அதில் அங்கம் வகிக்கும் கூறுகளுக்கும் இடைப்பட்ட உறவுகளை ஒழுங்குபடுத்தும் அரசியல்யாப்புடன் கூடிய ஒரு இணைப்பாட்சி அரசாகவே மாறியுள்ளது.”ஸ்பெயின், பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் என்பன தத்தம் இனத்துவ-அரசியல் சச்சரவுகளை முற்றிலுமாகத் தீர்த்துக்கொண்டு விட்டன என்பதல்ல இதன் பொருள். புதிய சச்சரவுகள் எழுந்த வண்ணம் உள்ளன; அவற்றையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கற்றலோனியா (ஸ்பெயின்), பிலாந்தேஸ் (பெல்ஜியம்), ஸ்கொட்லாந்து (ஐக்கிய இராச்சியம்) ஆகிய புலங்களில் பிரிவினைக் கோரிக்கைகள் நீடிக்கின்றன. நாடற்ற இனப்புலங்களுக்கு இவை எடுத்துக்காட்டுகள். இவை நன்கு வரையறுத்த ஆள்புலங்கள் கொண்டவை. தனித்துவமான வரலாற்று, பண்பாட்டு, பொருளாதார, அரசியல் அடையாளங்கள் படைத்தவை. நெடுங்காலமாகப் பெரிய அரசுகளுள் ஒருங்கிணைக்கப் பட்டிருந்தும் கூட,  தமது தனித்துவ அடையாளங்களை அவை கட்டிக்காத்து வந்துள்ளன. இப்புலம் எதிலும் பிரிவினை வென்றால், அது அதிகாரப் பகிர்வை அல்லது இணைப்பாட்சி முறையை மீறி ஏற்பட்ட பிரிவினை ஆகுமே யொழிய,  அதிகாரப் பகிர்வின் அல்லது இணைப்பாட்சி முறையின் விளைவாக ஏற்பட்ட பிரிவினையாகாது. அதிகாரப் பகிர்வுக்கான ஒழுங்குகளை மீண்டும் பேசித்தீர்க்க வேண்டிய தேவையை ஸ்பெயினில் இடம்பெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பெல்ஜியத்தில் அனுகூலம் துய்க்கும் இடச்சுமொழிச் சமூகத்திலிருந்தே பிரிவினைக் கோரிக்கைகள் எழுகின்றன.

லவேளைகளில் வரலாற்றுக் காரணங்களும் இதில் சம்பந்தப்படுவதுண்டு. எரித்திரியாவுக்கு பிரிந்துசெல்லும் உரிமை உண்டு என்பதை ஏற்க எதியோப்பியா முன்வந்தும் கூட, எரித்திரியாவை எதியோப்பியாவினுள் ஈர்த்து வைத்திருக்க முடியவில்லை.விட்டுக்கொடுக்க மறுத்தமைக்கு சேர்பிய பெரும்பான்மைவாதம் ஓர் எடுத்துக் காட்டு; பின்பற்றக் கூடாத எடுத்துக்காட்டு அது. “பல்லின, பல்மத யூகோசிலாவியாவில் ஆதிக்கம் செலுத்த முயன்ற சேர்பியர்கள் (தமது புனித வெளிகளுடன் கூடிய கொசவோ உட்பட) தமது நாட்டில் ஏனைய இனத்தவர்கள் வாழும் புலங்களை இழந்தார்கள். தாம் தலைமுறை தலைமுறையாக, பெரும்பான்மைப் பலத்துடன், வாழ்ந்த புலத்தினுள் ஒடுங்கினார்கள்” என்கிறார் தயான் ஜயத்திலகா. சாலவும் மதிகூர்ந்த இலங்கையருள் ஒருவராகிய எக்டர் அபயவர்த்தனா, “சிங்களவரே தென்னாசியாவின் சேர்பியர்கள்” என்று அடிக்கடி விடுக்கும் கடும் எச்சரிக்கையையும் தயான் ஜயத்திலகா நினைவுபடுத்துகிறார்.

(5) இலங்கையில் ஆட்சியதிகாரம் பற்றிய பாடங்கள்

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்மக்கள் தேசிய மட்டத்தில் அதிகாரப் பகிர்வு கோரினார்கள். அப்பொழுது பிரித்தானியர் இலங்கையைக் கட்டியாண்டார்கள். ஆதலால் முன்கூட்டியே நிர்ணயித்த விகிதாசாரத்தின்படி சட்டமன்றத்தில் தமது பிரதிநிதித்துவத்துக்கு உத்தரவாதமளிக்கும் முறைமை ஒன்றை அவர்கள் கோரினார்கள். 1910ல் யாழ்ப்பாணச் சங்கம் 2க்கு 1 விகிதம் கோரியது – நியமன உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் சிங்களவருக்கும் தமிழருக்கும் முறையே 2க்கு 1 விகித அங்கத்துவம் கோரியது. 1921ல் புதுக்கத் தோன்றிய தமிழ் மகாசன சபை 3க்கு 2 விகிதம் கோரியது. 1930களின் பிற்பாதியில் எழுந்த சரிநிகர் பிரதிநிதித்துவக் கோரிக்கை (பெரும்பான்மைச் சிங்களவருக்கு அரைவாசி, ஏனைய சமூகங்களுக்கு அரைவாசி) 50க்கு 50 கோரிக்கை எனப்பட்டது. அது “தலைக்கொரு வாக்கு” நெறிக்கு மாறான கோரிக்கை என்பது உண்மையே.  

இலங்கைக்கு ஓர் இணைப்பாட்சி அரசியல்யாப்பை முதன்முதல் முன்மொழிந்தவர் பண்டாரநாயக்காவே ஒழிய, தமிழர் எவரும் அல்லர். 1926ல் இணைப்பாட்சி முறைமை குறித்து Ceylon Morning Leader இதழில் அவர் ஆறு கட்டுரைகளை வரைந்தார். பிறகு யாழ்ப்பாணத்தில் அது குறித்து உரையாற்றினார். தொனமூர் ஆணையம் (Donoughmore Commission) இலங்கை வந்தபொழுது கண்டிச் சிங்களவர் தங்களை ஒரு தனி இனம் என வலியுறுத்தி ஓர் இணைப்பாட்சி ஏற்பாட்டை முன்வைத்தனர். பின்னர் பண்டாரநாயக்கா சிங்களசார்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை (SLFP)  அமைத்து, பிரதமராகப் பதவியேற்றார்.தொனமூர் அரசியல்யாப்பின்படி சமூகவாரிப் பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டது. 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. மூன்று உத்தியோகத்தர்களையும், நிறைவேற்றுக் குழுக்களின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அமைச்சர்கள் எழுவரையும் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது. 1931ல் நடைபெற்ற தேர்தலை அடுத்து அமைக்கப்பட்ட அரச மன்ற (State Council) அமைச்சரவையில் ஒரு முஸ்லீமும், ஓர் இந்தியத் தமிழரும் இடம்பெற்றார்கள். வடபுலத் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தபடியால், அமைச்சரவையில் இடம்பெறவில்லை.  1936ல் நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள் போட்டியிட்டார்கள். நிறைவேற்றுக் குழுவின் 7 தலைமைப் பதவிகளும் சிங்களவருக்கே கிடைக்கும்படி அரச மன்றத்தைச் சேர்ந்த சிங்களப் பெரும்பான்மையோர் காய்நகர்த்தினார்கள் (இடதுசாரி சமசமாசக் கட்சியை – LSSPஐ – சேர்ந்த என். எம். பெரேரா, பிலிப் குணவர்த்தனா உட்பட ஒருசிலர் அவர்களுடன் சேரவில்லை). நாடு சுதந்திரம் பெற்றதும் யார் ஆட்சியதிகாரம் செலுத்துவர் என்பது பற்றி தமிழர்கள் கற்ற முதலாவது பாடம் இதுவாகலாம். இப்பட்டறிவினால் தமது பிரதி நிதித் துவத்துக்கு அவர்கள் உத்தரவாதம் கோரினார்கள்.தமிழர் சுயநிர்ணய உரிமையும், சுதந்திர அரசு அமைக்கும் உரிமையும் கொண்ட தனித்துவம் வாய்ந்த இனத்தவர் என்னும் நிலைப்பாட்டை இந்த நாட்டில் முதன்முதல் முன்வைத்த அரசியல் கட்சி இலங்கை பொதுவுடைமைக் கட்சியே (Communist Party of Ceylon) அன்றி, தமிழ்க் கட்சி எதுவும் அல்ல.

1944 ஐப்பசி மாதம் அக்கட்சியின் சார்பில் இலங்கை தேசிய பேரவையில் (Ceylon National Congress) முன்வைக்கப்பட்ட பத்திரத்தின் தலைப்பில் “இணைப்பாட்சி அரசியல்யாப்பு” என்னும் பதம் கையாளப்பட்டது. எனினும் உத்தேச இணைப்பாட்சிக் கட்டமைப்பின் விபரங்கள் அதில் வகுத்துரைக்கப் படவில்லை. அரசியல்யாப்பை சீர்திருத்தும் நோக்குடன் பிரித்தானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணையம்  (Soulbury Commission) 1944ல் இலங்கை வந்தபொழுது, இந்த நாட்டுக்கு ஆகக்குறைந்தது ஓர் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பாவது வேண்டும் என்று எந்த அமைப்பும் கருத்தூன்றி முன்மொழியவில்லை. எவரும் இணைப்பாட்சிக் கட்டமைப்பை முன்மொழியாதது மட்டும் ஒரு கேடா? ஆதலால் எத்தகைய தன்னாட்சி யையும் அல்லது சரிநிகர் பிரதிநிதித்துவம் எதையும் சோல்பரி ஆணையம் விதந்துரைக்கவில்லை.பிரித்தானிய அரசாங்கம் ஈந்த சோல்பரி அரசியல்யாப்புக்கு அமைய 1947ல் (இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர்) நடைபெற்ற தேர்தலை அடுத்து தமிழரின் ஒரேயொரு கட்சியாகிய தமிழ் காங்கிரஸ், பழமைபேண்வாதம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியில் (UNP) இணையவே, கூட்டரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.

எனினும் பிரித்தானியக் குடிமக்களாக விளங்கிய அதேவேளை, 1947ல் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த இலட்சக் கணக்கான இந்தியத் தமிழரின் வாக்குரிமை நீக்கப்பட்டது. இந்தியத் தமிழரின் வாக்குரிமை நீக்கப்படுவதை அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ்த் தலைவர்களால் தடுத்துநிறுத்த முடியவில்லை. அந்தக் கட்டத்தில்தான் செல்வநாயகம் பிரிந்துசென்று தமிழரசுக் கட்சியை (Federal Party) அமைத்தார். அவருக்காவது பாடம் புரிந்தது: பெரும்பான்மைச் சிங்களவரே ஆட்சியதிகாரம் செலுத்தினர்.  தாங்கள் கொழும்பில் அதிகாரத்தைப் பகிர்வதாக எண்ணிய தமிழர்கள் வாய் திறக்கவே வாய்ப்பில்லை. பிரிந்து சென்றோர்க்கு, பிரதேச தன்னாட்சியே ஒரேயொரு விமோசனமாகத் தெரிந்தது.

1949 திசம்பர் 18ம் திகதி தமிழரசுக் கட்சியின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய செல்வநாயகம் பின்வருமாறு குறிப்பிட்டார்: “நாங்கள் கேட்கும் தீர்வு இதுவே: தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தன்னாட்சி மாகாணம்; சிங்களம் பேசும் மக்களுக்கு ஒரு தன்னாட்சி மாகாணம்; இரு தரப்புகளுக்கும் பொதுவான ஒரு மத்திய அரசாங்கம். தமிழ் பேசும் மக்கள் வாழும் சிறிய மாகாணம் மங்கிமறைவதை அல்லது பெரிய இனத்தினால் உட்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு வேண்டிய ஆகக்குறைந்த ஏற்பாடு அதுவே. இத்தகைய இணைப்பாட்சி அரசமைப்பு எய்தற்கரிய குறிக்கோளாகும். அது எவருக்கும் அநீதி இழைக்காது; குறிப்பாக சிங்கள மக்களுக்கு அது அநீதி இழைக்காது என்பது திண்ணம். ஒருவரின் ஆளுமை முற்றிலும் விருத்தி அடைய வேண்டுமாயின், தான் வாழும் நாடு தனது நாடு என்னும் உணர்வும், தான் வாழும் நாட்டின் அரசாங்கம் தனது அரசாங்கம் என்னும் உணர்வும் அவருக்கு ஏற்பட வேண்டும். இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடம் இன்று இந்த உணர்வு இல்லை. தமது சொந்தப் புலத்தை ஆளும் உரிமையும், இந்த நாட்டின் அரசாங்கத்தை தமது சொந்த அரசாங்கம் என்று ஏற்கும் உரிமையும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தாம் வாழும் பகுதிகள் தமிழ் பேசும் மாகாணங்களுடனா, சிங்களம் பேசும் மாகாணங்களுடனா இணைக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழுச்சுதந்திரமும் முஸ்லீங்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.”தொடர்ந்து 1952ல் நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியால் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. செல்வநாயகம் கூட காங்கேசந்துறையில் தோற்றுப்போனார்; தமிழ் காங்கிரஸ் வேட்பாளரிடம் அல்ல, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரிடம்!

1940களில் தாம் பட்டறிந்தவற்றையும் மீறியே வட, கீழ் மாகாணத் தமிழர்கள் இணைப்பாட்சி முறைமையை தீர்க்கமுற நிராகரித்தார்கள்; கொழும்பு திரும்பி ஐக்கிய தேசியக் கட்சியுடன் அதிகாரத்தைப் பகிரும்படி தமிழ் காங்கிரசுக்கு அவர்கள் ஆணையிட்டார்கள். 1955ல் நிலைமை அடியோடு மாறியது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான தென்னிலங்கைக் கட்சிகள் இரண்டும் ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களமும், தமிழும் ஆட்சிமொழிகளாக வேண்டும் என்று கோரின. இன்னொரு பொதுத்தேர்தல் நெருங்கவே அவை இரண்டும் “தனிச்சிங்கள” நிலைப்பாட்டுக்கு மாறின. 1956ல் நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு பெருக அது வழிவகுத்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த கூட்டணி தென்னிலங்கையையும், வட-கீழ் மாகாணங்களை தமிழரசுக் கட்சியும் வாரிச்சென்றன. அப்பொழுது இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டும் வென்ற தமிழ் காங்கிரசே அவமானப்பட்டது. அத்தோல்வியிலிருந்து அது மீளவே இல்லை.1956ல் தனிச்சிங்களம் ஆட்சிமொழி ஆக்கப்பட்டது. தமிழரும் இடதுசாரிகளும் அதை எதிர்த்தார்கள். அப்பொழுது சமசமாசக் கட்சியைச் சேர்ந்த கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா தீர்க்கதரிசனத்துடன் இட்ட முழக்கம்: “இரு மொழிகள் = ஒரு நாடு; ஒரு மொழி = இரு நாடுகள்.” அந்த எச்சரிக்கையை அவர்கள் காதில் வாங்கவில்லை. யார்வசம் ஆட்சியதிகாரம் உண்டு என்பதை பெரும்பான்மையோர் மீண்டும் வெளிப்படுத்தினார்கள். முரண்பாடு வலுத்தது.

(6) பண்டாரநாயக்கா:

ஒத்துமேவலே ஒரே வழி என்பதை விரைவில் உணர்ந்துகொண்ட பிரதமர் பண்டாரநாயக்கா, 1957 ஆடி மாதம் செல்வநாயகத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். வட-கீழ் மாகாணங்களில் பிரதேச மன்றங்களை அமைக்கும் ஒப்பந்தம் அது. அவை தற்போதைய அரசியல்யாப்புக்கு உட்பட்ட மாகாண மன்றங்களின் அதிகாரங்களை விடவும் குறைந்த அதிகாரங்கள் கொண்ட பிரதேச மன்றங்களே. வட மாகாணம் ஒரு பிரதேசமாகவும், கீழ் மாகாணம் ஒரு பிரதேசமாகவும் அல்லது பல பிரதேசங்களாகவும் பிரிக்கப்படவிருந்தன. மாகாண எல்லைகளைக்கு அப்பால் சென்றும் இரு அல்லது பல பிரதேசங்களை ஒருங்கிணைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படவிருந்தன. நாடாளுமன்றம் சில திட்டவட்டமான துறைகளில் பிரதேச மன்றங்களுக்கு அதிகாரங்களைக் கையளிக்கவிருந்தது. அவற்றுள் காவல்துறை அதிகாரங்கள் உள்ளடங்கவில்லை.பெயர்போன அந்த பண்டா-செல்வா ஒப்பந்தத்தை  தீவிரவாத பெளத்த பிக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள். பிரதமர் ஒப்பந்தத்தை உதறித்தள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்.

1958ல் நிலைவரம் மோசமடைந்து, இனக்கலவரம் மூண்டது. இரு இனங்களும் மேற்கொண்டு பிளவுண்டன.1965ல் நடைபெற்ற தேர்தலை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி திரும்பவும் தமிழ்க் கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிரும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியது. பிரதமர் டட்லி சேனநாயக்கா,  செல்வநாயகத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்தார். அது டட்லி–செல்வா ஒப்பந்தம் எனப்பட்டது. தமிழ்மொழியைப் பயன்படுத்துவது, மாவட்ட மன்றங்களுக்கு மட்டுப்பட்டளவு அதிகாரங்களைப் பரவலாக்குவது தொடர்பாக சேனநாயக்கா சலுகைகள் அளிக்க உடன்பட்டார்.

எதிர்காலத்தில் வட, கீழ் மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்களில், அவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த காணியற்றோருக்கு முதன்மை அளிக்க உடன்பட்டார். அதனை அடுத்து அவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த தமிழருக்கும், அதன் பிறகு மற்ற மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களுக்குள் தமிழருக்கும் முன்னுரிமை அளிக்க உடன்பட்டார். எனினும் 1968ல் மாவட்ட மன்ற வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபொழுது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதனை எதிர்த்தது. அக்கட்சியின் இடதுசாரிக் கட்சிக் கூட்டுகளும் அதில் இணைந்துகொண்டன. எதிர்ப்பின் மத்தியில் வெள்ளை அறிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது. தமிழரசுக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறியது.இவை எல்லாம் நிகழ்ந்த பிறகும் கூட, பண்டா–செல்வா ஒப்பந்தம், டட்லி–செல்வா ஒப்பந்தம் இரண்டும் தோல்வியடைந்த பிறகும் கூட, தனியரசுக் கோரிக்கை பற்றி எவரும் கருத்தூன்றிக் கதைக்கவில்லை. 1970ல் தமிழரசுக் கட்சி முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூட, நாட்டைப் பிளக்க எண்ணும் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களிக்கும்படியே தமிழ் பேசும் மக்களிடம் அது கேட்டுக்கொண்டது. சி. சுந்தரலிங்கம் தலைமையில் எழுந்த “ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி”யைக் கருத்தில் கொண்டே அவ்வாறு கேட்டுக்கொளப்பட்டதாகத் தெரிகிறது. இலங்கையில் தனித்தமிழரசு கோரிய முதலாவது கட்சி அதுவே.

(7) பெரும்பான்மைவாத அரசியல்யாப்பீடு

 1972ல் ஒரு பொன்னான வாய்ப்பு தவறவிடப்பட்டது. நாங்களே அப்பொழுது அரசியல்யாப்பு மன்றம் அமைத்து எமது சொந்த அரசியல்யாப்பை வரைந்து வந்தோம். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதில் பங்குபற்றினார்கள். ஏற்கெனவே நடைமுறையிலிருந்த அரசியல்யாப்பிலிருந்து விலகிச்செல்ல வேண்டிய தேவையைக் குறித்து வினா எழுப்பிய (தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த) வி. தருமலிங்கம் பின்வருமாறு கூறினார்: “ஒரு புதிய அரசியல்யாப்பை வரைவதில் உங்களுடன் நாங்களும் இணைந்துகொள்கிறோம். வெற்றிகொள்ளப்பட்ட மக்களாக அல்ல, 1956 முதல் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்கள் ஊடாக, நடைமுறையிலிருக்கும் அரசியல்யாப்பை, தமிழ் மக்கள் அனுபவிக்கும் தீமை முழுவதற்கும் ஊற்றிடமாக விளங்கும் அரசியல்யாப்பை மாற்றுவதற்கு எங்களுக்கு ஆணையிட்ட மக்களின் பிரதிநிதிகளாக ஒரு புதிய அரசியல்யாப்பை வரைவதில் உங்களுடன் நாங்களும் இணைந்துகொள்கிறோம்.”சர்ச்சைக்குரிய விடயங்களில்  ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரும்படி அரசியல்யாப்பு மன்றத்தை வற்புறுத்திய செல்வநாயகம், அதை வலியுறுத்த பிரதமர் நேருவை மேற்கோள் காட்டினார்: “சர்ச்சைக்குரிய விடயங்கள் அனைத்திலும் உடன்பாடு காண்பதற்கான பொது அடிப்படை ஒன்றைக் கண்டறியத் திடசித்தம் கொண்டவர்களாகவே அரசியல்யாப்பு மன்றத்துக்கு நாங்கள் செல்லவேண்டும்.” அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட 2ம் இலக்க அடிப்படைத் தீர்மானத்தில் இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசாக (unitary state) அமைய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “ஒற்றையாட்சி” என்பதற்கு “இணைப்பாட்சி” அரசு (federal state) என்ற திருத்தத்தை தமிழரசுக் கட்சி முன்வைத்தது. அரசியல்யாப்பு மன்றத்தின் வரன்முறைக் குழுவிடம் தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த விஞ்ஞாபனத்திலும், மாதிரி அரசியல்யாப்பிலும், இலங்கையை ஐந்து மாநில அரசுகளைக் கொண்ட இணைப்பாட்சி நாடாக அமைக்க அது யோசனை தெரிவித்தது. அவற்றில் உள்ளடக்கப்பட்டவை:

(1) வட மாகாணமும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களும் ஒரு மாநிலம்;

(2) மத்திய அரசுக்கு ஒதுக்கப்படும் துறைகள், தொழிற்பாடுகள் அடங்கிய நிரல்;

(3) மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் ஏனைய அனைத்தும் அடங்கிய நிரல்;

(4) சட்டம், ஒழுங்கு, காவல்துறை என்பன மத்திய அரசாங்கத்துக்கு ஒதுக்கப்படும் துறைகள் என்பது கவனிக்கத்தக்கது. 

(8) வி. தருமலிங்கம்: மன்ற நடபடிக்கை அறிக்கையின்படி தமிழர்கள் ஒத்துமேவத் தயாராக இருந்தது தெளிவு. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட 2ம் இலக்க அடிப்படைத் தீர்மானத்தின் மீது தமிழரசுக் கட்சியின் சார்பில் முக்கிய உரையாற்றிய தருமலிங்கம் பின்வருமாறு குறிப்பிட்டார்:

 “இப்போதைய அரசியல்யாப்பு, ஒரு பல்லின நாட்டுக்கென வகுக்கப்பட்டதல்ல. ஆதலால் அது தோல்வியடைந்துள்ளது. ஒற்றையாட்சி அரசியல்யாப்புகள் நடைமுறையில் இருந்த பல்லின நாடுகளில் சிறுபான்மை இனங்களின் கோரிக்கைகளையும், வேட்கைகளையும் நிறைவேற்றும் வண்ணம் இணைப்பாட்சி நெறிகளுக்கு இடங்கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பாட்சி நெறிகளுக்கு இடங்கொடுக்க மறுத்த நாடுகளில் பிரிவினை இயக்கங்கள் எழுந்துள்ளன. சி. சுந்தரலிங்கம், வ. நவரத்தினம் போன்ற பிரிவினைவாதிகளிடமிருந்து தமிழரசுக் கட்சி விலகி நிலைகொண்டுள்ளது. நாட்டை அல்ல, அதிகாரத்தையே நாம் பங்கிடக் கோருகிறோம். “கலந்துரையாடுவதற்கு ஓர் அடிப்படையாக மட்டுமே தமிழரசுக் கட்சி அதன் யோசனையை வரைந்து முன்வைத்தது என்பதை தருமலிங்கம் தெளிவுபடுத்தினார். இணைப்பாட்சி நெறியை ஏற்கும்படி மட்டுமே தமிழரசுக் கட்சி கேட்கிறது என்று தெரிவித்த தருமலிங்கம், ஓர் இடைக்கால நடவடிக்கையாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், லங்கா சமசமாசக் கட்சியும், பொதுவுடைமைக் கட்சியும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியை, அதாவது கச்சேரிகளை ஒழித்து தேர்தல்மூலம் நிருவாக மன்றங்களை அமைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் யோசனை தெரிவித்தார்; 

“ஒரு இணைப்பாட்சி அரசியல்யாப்பை வகுக்கும் ஆணை அரசாங்கத்துக்கு அளிக்கப்படவில்லை என்று அது கருதினால், அதன் தலைவராகிய பண்டாரநாயக்காவின் கொள்கைகளையாவது அது நடைமுறைப் படுத்தலாம்; கச்சேரிகளை அகற்றிவிட்டு, பிரதேசங்களை நிருவகிப் பதற்கு, இப்பொழுது செய்வதுபோல் அல்லாமல், தேர்தல்மூலம் நிருவாக மன்றங்களை அமைத்து உளமாரப் பன்முகப்படுத்தலாம்” என்றார் தருமலிங்கம்.

 (9) சரத் முத்தெட்டுவகமை

 இந்த நாட்டில் முதன்முதல் இணைப்பாட்சி முறைமையை விதந்துரைத்த பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த சரத் முத்தெட்டுவகமை,  தருமலிங்கத்தை அடுத்து உரையாற்றியபொழுது, “இணைப்பாட்சி” என்பது ஒரு கெட்ட சொல்லாக மாறியதற்கு, தமிழரசுக் கட்சி அதற்காக வாதாடியதே காரணம் என்றும், அதற்கு இணைப்பாட்சி முறைமை காரணம் அல்ல என்றும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழரசுக் கட்சியும் கூட்டுச்சேர்ந்து தேசியமயமாக்கங்கள், தனியார் பாடசாலைகள் பொறுப்பேற்பு, நெற்காணிச் சட்டமூலம் என்பவற்றுக்கு எதிராக வாக்களித்து, பழமைபேணும் கொள்கைகளைக் கடைப்பிடித்ததைக் கருத்தில் கொண்டே அவர் அவ்வாறு கருத்துரைத்தார் என்பது தெளிவு. தருமலிங்கம் ஒத்துமேவ முன்வந்ததை அவர் கண்டுகொள்ளவில்லைப் போலும். “பிரதேச தன்னாட்சி” என்ற தொடரை தமிழரசுக் கட்சி ஏன் பயன்படுத்தவில்லை என்று அவர் வினவினார். அதையும் விட மிகவும் குறைந்த தீர்வை எட்டுவதற்கு தமிழரசுக் கட்சி முன்வந்ததைக் கருத்தில் கொள்ளும் எண்ணம் தமக்கு இல்லை என்பதை சரத் முத்தெட்டுவகமவை அடுத்து உரையாற்றிய ஆளும் ஐக்கிய முன்னணி உறுபினர்கள் தெளிவுபடுத்தினார்கள். அப்புறம் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட 2ம் இலக்க அடிப்படைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழரசுக் கட்சியின் திருத்தம் தோற்கடிக்கப்பட்டது.

(10) கலாநிதி நிகால் ஜயவிக்கிரம

ஆளும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் நீதி அமைச்சின் செயலாளராக விளங்கியவரும், அரசியல்யாப்பு சீர்திருத்த படிமுறையில் முக்கிய பங்கு வகித்தவருமாகிய கலாநிதி நிகால் ஜயவிக்கிரமா கூறியதாவது: 

அரசியல்யாப்பு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வாவின் நெறிப்படுத்தலில் தயாரிக்கப்பட்ட முதலாவது வரைவில் “ஒற்றையாட்சி அரசு” பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. எனினும், இந்த நாட்டின் அரசை “ஒற்றயாட்சி அரசு” என்று பிரகடனப்படுத்தும் யோசனையை அமைச்சக உபகுழுவில் வைத்து அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவே முன்மொழிந்தார். அது அவசியம் என்று அரசியல்யாப்பு அலுவல்கள் அமைச்சர் கருதவில்லை. உத்தேச அரசியல்யாப்பு ஒற்றையாட்சிக் கட்டமைப்பினைக் கொண்டிருக்கும் அதேவேளை, ஒற்றையாட்சி அரசியல்யாப்புகள் அவற்றின் உருவத்தால் பெரிதும் வேறுபடலாம் என்று அவர் வாதிட்டார். எனினும் “ஒற்றையாட்சி அரசு” என்னும் தொடர் இறுதி வரைவில் இடம்பெறவே செய்தது. தடல்புடலாக, நிதானிக்காமல், தேவையின்றிப் புகுத்தப்பட்ட இந்த அணிமொழி, இத்தீவில் தனிச்சிங்கள அரசை எய்த முற்படும் ஆட்களினதும், குழுமங்களினதும் அறைகூவலாக ஓங்கியது.”

கையோடு அரசியல்யாப்பு மன்றத்திலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறிவிட்டதாக மக்கள் நம்புகிறார்கள். அப்படியல்ல. தமிழரசுக் கட்சியின் திருத்த முன்மொழிவு தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட அரசியல்யாப்பு மன்றத்தில் அது தொடர்ந்தும் பங்குபற்றியது. நெறிமுறைக் குழு, துறைவாரிக் குழுக்  கூட்டங்களில் செல்வநாயகம் ஒழுங்காகக் கலந்துகொண்டமை  பதிவேடுகளிலிருந்து புலனாகிறது.மொழி தொடர்பான அடிப்படைத் தீர்மானங்களை அரசாங்கத்தைக் கொண்டு செம்மைப்படுத்த தமிழரசுக் கட்சி எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. தாங்கள் பிரதம மந்திரியையும், அரசியல்யாப்பு அலுவல்கள் அமைச்சரையும் சந்தித்ததாகவும்,  அவை உளமார்ந்த சந்திப்புகளாக அமைந்த தாகவும், எனினும் அடிப்படைத் தீர்மானங்களில் எத்தகைய மாற்றத்தையும் புகுத்துவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டதாகவும் செல்வநாயகம் அரசியல்யாப்பு மன்றத்திடம் தெரிவித்தார். ஆதலால் அதன் கூட்டங்களில் தமிழரசுக் கட்சி மேற்கொண்டு பங்குபற்றாது என்றும் அவர் தெரிவித்தார். “உத்தேச அரசியல்யாப்பில் எங்கள் மொழியுரிமைகள் திருப்திகரமாக வழங்கப்படவில்லை. ஆகவே இந்த மன்றத்தின் விவாதங்களில் தொடர்ந்து பங்குபற்றுவதால் எங்களுக்கு எத்தகைய பயனும் கிடைக்கப் போவதில்லை என்று மனவருத்தத்துடன் நாங்கள் முடிவெடுத்துள்ளோம். எவரையும் புண்படுத்தும் நோக்குடன் நாங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. எங்கள் மக்களின் கண்ணியத்தைக் கட்டிக்காப்பதே எமது நோக்கம்” என்றார் செல்வநாயகம். திடீர் வெளிநடப்புக் கூட இடம்பெறவில்லை. “நாங்கள் ஆர்ப்பாட்டமாக வெளிநடப்புச் செய்ய விரும்பவில்லை” என்றார் செல்வநாயகம். 

(11) கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வாவுக்கு பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா எழுதிய மடலில், மொழிப்பயன்பாடு பற்றிய விவாதத்தை திரும்பவும் நடத்துவது புத்தி இல்லை என்றும், மொழிப்பயன்பாடு பற்றிய சாதாரண சட்டங்களை அப்படியே தொடரவிடுவதே சிறந்த வழி என்றும் தெரிவித்ததாக கலாநிதி ஜயவிக்கிரமா கூறுகிறார். கேள்வி என்னவென்றால், செல்வநாயகம் அந்த சர்ச்சையைக் கிளப்பிய பின்னர், பிரதமர் ஏன் அதே நிலைப்பாட்டை எடுக்கவில்லை?எனினும் பிரதமர் ஸ்ரீமாவோவின் மடலிலும், கலாநிதி சில்வாவின் முதலாவது வரைவிலும் “ஒற்றையாட்சி அரசு” என்னும் தொடர் இடம்பெறவில்லை என்ற விவரம் அவர்கள் இருவரும் உயிர்வாழ்ந்த காலத்திலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். வெளிப்படுத்தப்பட்டிருந்தால், அந்த சர்ச்சையை கலாநிதி சில்வா மேலும் தெளிவுபடுத்தியிருத்தல் திண்ணம்.  50கள் முதல் 60கள் வரை பெரும்பாலான சர்ச்சைகளில் தமிழ்க் கட்சிகள் மிகவும் பழமைபேண் நிலைப்பாட்டை எடுத்தது உண்மையே. ஐக்கிய தேசியக் கட்சியின் மைத்துனர்கள் போல அவை நடந்துகொண்டன. எனினும் தமிழரசுக் கட்சி முன்வைத்த ஒத்துமேவல்-முன்மொழிவை நிராகரிக்க, அதன் பழமைபேண்வாதத்தை காரணம் காட்டுவது தகாது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், அதிகாரப் பகிர்வு என்பது சமூகங்களுக்கு இடைப்பட்ட ஒன்றேயொழிய, அரசியல் கட்சிகளுக்கு இடைப்பட்ட ஒன்றல்லவே!   பின்னர் நிகழ்ந்ததை அறிந்துகொண்ட அனுகூலத்தைக் கொண்டு ஒரு விடயத்தை இங்கு நாம் குறிப்பிடலாம்: அதிகாரப் பங்கீடு தொடர்பாக தமிழரசுக் கட்சி முன்வைத்த ஒத்துமேவல்-முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், அது (தேசிய இனங்களிடையே) ஆழ்ந்த நம்பிக்கையைக் கட்டிவளர்க்கும் நடவடிக்கையாக மாறியிருக்கும். பிறகு மேற்கொண்டும் அதைக் கட்டிவளர்க்க முடிந்திருக்கலாம். அத்துடன் அத்தகைய முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், அது தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் அரசியல்யாப்பு மன்றத்தில் பங்குபற்ற ஏதுவாக அமைந்திருக்கும். ஈற்றில் ஐக்கிய தேசியக் கட்சி செய்தது போல் தமிழரசுக் கட்சியும் புதிய அரசியல்யாப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் கூட, அரசியல்யாப்பு வரையும் படிமுறை முழுவதிலும் தமிழரசுக் கட்சி பங்குபற்றியிருக்கும்.

ஆதலால் 1972ம் ஆண்டில் புகுத்தப்பட்ட புதிய அரசியல்யாப்பை தமிழ் மக்கள் பெரிதும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.1972ம் ஆண்டின் அரசியல்யாப்பின் ஊடாக பிரித்தானிய முடியாட்சியிலிருந்து முற்றிலும் விடுபட்டமை,  நாடாளுமன்ற ஆட்சிமுறையைப் பேணிக்கொண்டமை, அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தை புகுத்தியமை, அரச கொள்கை நெறிகளைப் பிரகடனப்படுத்தியமை எல்லாம் போற்றத்தக்க நடவடிக்கைகள் என்பதில் ஐயமில்லை. எனினும் அதே அரசியல்யாப்பே பெரும்பான்மைவாதத்துக்கு வழிவகுத்தது. சட்ட ஆட்சி சார்ந்த கருத்தீடுகளுக்கும்,  அரசியல் யாப்பின் மீயாண்மைக்கும் அதுவே ஆப்பு வைத்தது.   இலங்கை மக்களின் பல்வகைமைக்கும் பன்மைத்துவத்துக்கும் ஆட்சியதிகாரத்தில் இடங்கொடுத்து மொழிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு 1972ல் கிடைத்தது. மாறாக, அத்தகைய வாய்ப்பு தவறவிடப்பட்ட துன்பியலே நடந்தேறியது. தமிழரசுக் கட்சியுடன் ஆளும் ஐக்கிய முன்னணி ஒத்துமேவியிருந்தால், இந்த நாட்டின் வரலாறு பெரிதும் வேறுபட்டிருக்கும். அரசியல்யாப்பு மன்றத்தில் தொடர்ந்து பங்குபற்றுவதை தமிழரசுக் கட்சி நிறுத்திக்கொண்ட பின்னரும் கூட, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியல்யாப்புக்கமைய சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்கள். கையோடு தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) என்னும் பதாகையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்தன. அதுவே பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (TULF) மாறியது.

1976ல் நடைபெற்ற புகழ்போன வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பிரிவினையைத் தழுவி, வட-கீழ் மாகாணங்களில் “தமிழ் ஈழம்” என்னும் தனியரசு கோரித் தீர்மானம் நிறைவேற்றியது.1977 ஏப்பிரில் 26ம் திகதி செல்வநாயகம் இயற்கை எய்தினார். அவர் இயற்கை எய்தி மூன்று மாதங்கள் கழித்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்டது.

“சுதந்திர, இறைமைகொண்ட, மதச்சார்பற்ற, சமதரும தமிழ் ஈழ அரசு” ஒன்றை அமைக்க வாக்குறுதியளித்து, தமிழ்ப் பகுதிகளில் அது வெற்றிவாகை சூடியது.1977ம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்தவற்றை இங்கு குழுமியிருக்கும் உங்களுள் அநேகர் அறிவீர்கள். அவற்றை எல்லாம் உங்களிடம் நான் மீட்டுரைக்க முற்படவில்லை. எனினும் ஒருசில விபரங்களை இங்கு தெரிவிக்க வேண்டியுள்ளது.

(12) 1977ல் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி

 தமிழருக்கு மனக்குறைகள் உண்டு; அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாதபடியால், பிரிவினைவாதம் நோக்கி அவர்கள் தள்ளப்பட்டார்கள் என்பதை எல்லாம் 1977ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது ஒப்புக் கொண்டிருந்தது. தமிழரின் பிரச்சனைகளைத் தீர்க்க வட்டமேசை மாநாடு ஒன்றைக் கூட்ட அது வாக்குறுதி அளித்தது. எனவே வட-கீழ் மாகாணங் களுக்கு வெளியே வாழ்ந்த தமிழர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரு வாரியாக வாக்களித்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் 50.9% வாக்குகள் அளித்தார்கள் – முன்னொருபோதும் இல்லாவாறு அக்கட்சிக்கு 5/6 பங்கு பெரும்பான்மை கிடைத்தது. எனினும் வட்டமேசை மாநாடு கூட்டப்படவில்லை!

1978ம் ஆண்டில் புதிய அரசியல்யாப்பு வரையுந் தறுவாயில் தமிழர் பிரச்சனையின் தீர்வுக்கு மீண்டும் வாய்ப்பு நெருங்கியது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பதில்வினையாற்றத் தவறியது. தமிழர்கள் அரசியல்யாப்பு வரைவில் பங்குபற்ற மறுத்தார்கள். இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக தமிழ்ப் பிரதிநிதிகளின் பங்களிப்பின்றியே அரசியல்யாப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கையில் செல்லுபடியாகும் ஆட்சியதிகாரம் சிங்களவரிடமே உண்டு என்பது திரும்பவும் தெளிவாக உணர்த்தப்பட்டது.  1978ம் ஆண்டில் புகுத்தப்பட்ட அரசியல்யாப்பின் ஊடாக இலங்கை அரசின் ஒற்றையாட்சித் தன்மையும், பெளத்த சமயத்தின் இடமும் நிலை நிறுத்தப்பட்டன. வலுமிகுந்த ஜனாதிபதியின் நிருவாகத்துக்கும் வகை செய்யப்பட்டது.   

1983ல் தமிழர்கள் தாக்கப்பட்டு, ஆயிரக் கணக்கான தமிழர்கள் நாட்டைவிட்டு தப்பியோடவே தேசியப் பிரச்சனை சர்வதேசியப் பிரச்சனையாக மாறியது. பிரிவினைச் சொற்சிலம்பம் புரிந்தும் கூட ஏதேனும் ஓர் ஒத்துமேவலை நாடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி  நாடாளு மன்றத்திலிருந்து வெளியேறியது. ஏற்கெனவே தழைத்த எண்ணிறந்த தமிழ் வன்போக்கு குழுமங்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை ஒதுக்கித்தள்ளி விட்டு, முன்னணிக்கு வந்ததில் வியப்புக்கிடமில்லை. அப்புறம் முழுமையான பிரிவினைப் போர் மூண்டது.

(13) தீர்வு முற்சிகள்

மெய்நிலைவரங்களால் உந்தப்பட்ட ஜனாதிபதி ஜெயவர்த்தனா 1987ல் இந்தியாவுடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அரசியல்யாப்பில் 13வது திருத்தம் செய்யப்பட்டு, மட்டுப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய மாகாண மன்றங்கள் அமைக்கப்பட்டன. அதிகாரத்தைப் பரவலாக்க ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி உறுதிபூண்டபடியால் அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியா நிர்ப்பந்தித்தபடியால் தான் அது மேற்கொள்ளப்பட்டது. எனினும் 13வது திருத்தம் உளமார்ந்த அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிராகவே புகுத்தப்பட்டுள்ளது. பற்பல துறைகள், பணிகள் குறித்து சட்டமியற்றும் அதிகாரம் மாகாண மன்றங்களுக்கு வழங்கப்பட்டாலும் கூட, மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டு மாகாண மன்றங்களை மீறிச் செயற்படும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. தேசியக் கொள்கையை வகுக்கும் சாக்கில் மாகாண மன்ற நிரலில் அடங்கிய துறைகள், பணிகள் குறித்தும் கூட நாடாளுமன்றம் சட்டமியற்றலாம். மாகாணங்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கியல் நிரலை (Concurrent List) மத்திய அரசு பயன்படுத்தி வந்துள்ளது. அடுத்தடுத்து ஆட்சிபுரிந்த அரசுகள் அதிகாரப் பரவலாக்கத்தைக் குலைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும்,  திட்டவட்டமாகச் சொல்வதாயின் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி அனைத்தையும் பயன்படுத்தியமை வருந்தத்தக்கது.

(14) ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா

 1994ல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றி, பரந்துபட்ட அதிகாரப் பரவலாக்கத்தை முன்மொழிந்தார். தமிழ்க் கட்சிகளும், முன்னாள் போராட்ட இயக்கங்களும் அம்முன்மொழிவுகளை வரவேற்றன. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அவற்றை நிராகரித்து, தமது வன்முறைப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டனர். மறுபுறம், சிங்கள தீவிரவாதிகள் அம்முன்மொழிவுகளை மும்முரமாக எதிர்த்தார்கள். அதிகாரப் பரவலாக்கம் ஈற்றில் பிரிவினைக்கு இட்டுச்செல்லும் என்று அவர்கள் வாதிட்டார்கள்.2000ம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்கா முன்மொழிந்த அரசியல்யாப்பில் தோற்றமளவிலான இணைப்பாட்சி முறைமைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இலங்கை ஓர் “ஒற்றையாட்சி அரசு” என்னும் வாசகம் நீக்கப்படவிருந்தது. அதற்குப் பதிலாக, “அரசியல்யாப்பில் வகுக்கப்பட்டவாறு அதிகாரத்தைக் கையாளும் மத்திய அமைப்புகளையும், பிரதேச அமைப்புகளையும் கொண்ட அரசு” என்று விபரிக்கப்படவிருந்தது. (“ஒற்றையாட்சி” என்றோ, “இணைப்பாட்சி” என்றோ) முத்திரை குத்தாமல் மேற்கண்டவாறு விபரிப்பது புத்திசாலித்தனமாகப் பட்டது. இலங்கை அரசியலில் “இணைப்பாட்சி”யை பலரும் “பிரிவினை”க்கு நிகராகக் கொண்டதால், அது ஒரு கெட்ட சொல்லாக மாறியிருந்தது. எனினும் தமிழரோ “ஒற்றையாட்சி” முறைமைக்கு அப்பாற் பட்ட அதிகாரப் பரவலாக்கத்தையே நாடினர். மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையே திட்டவட்டமான அதிகாரப் பகுப்பு முன்மொழியப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் அம்முன் மொழிவை ஏற்றுக்கொண்டது. எனினும் விரைவில் மனம்மாறிய ஐக்கிய தேசியக் கட்சி, அரசியல்யாப்புச் சட்டமூலம்  நிறைவேற்றப்படாவாறு அதற்கு ஆப்பு வைத்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவின்றி,  அரசியல் யாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு வேண்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஈட்டிக்கொள்ள முடியவில்லை. 

(15) தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் விட்டுக்கொடாமை

 2001ல் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா தொடர்ந்து பதவி வகிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரம்சிங்கா பிரதமரானார். அப்புறம் புலிகளுடன் போர்நிறுத்த உடன்பாடு காணப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப் பட்டன. 2002ல் (நோர்வே தலைநகர்) ஒஸ்லோவில் கூடிய இலங்கை அரசின் பிரதிநிதிகளும், புலிகளின் பிரதிநிதிகளும் “இணைப்பாட்சி” தீர்வொன்றை ஆராய உடன்பட்டனர்.வட-கீழ் மாகாணங்களில் புலிகளின் ஆதிக்கத்துடன் கூடிய இடைக்கால நிருவாக யோசனையை அரசாங்கம் முன்வைத்தது. ஆனால் புலிகளோ 2003 ஐப்பசி மாதம் எதிர்க் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்கள். “வட-கீழ் மாகாணங்களை ஆள்வதற்கு நிறையதிகாரம் கொண்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை (ISGA)” ஒன்றை அவர்கள் நாடினார்கள். அத்தகைய அதிகாரசபையின் அதிகாரங்கள் சில அன்றைய ஒற்றையாட்சி அரசியல்யாப்புக்கமைய கைகூடவல்லவையே. எனினும் ஏனைய அதிகாரங்கள் கைகூடா என்பது திண்ணம். கூட்டிணைப்பாட்சி அமைப்புக்கமைய (confederal set-up) மாத்திரமே நிறையதிகாரங்களை வழங்க முடிந்திருக்கும். வன்முறையை முடிவுறுத்த வழிவகுக்கும் முற்றுமுழுதான சமாதான உடன்படிக்கையில் ஓர் அங்கமாக இணைப்பாட்சி அமைப்பொன்றை மக்கள் ஈற்றில் ஆதரித்திருக்கக் கூடும். ஆனால் மேற்படி தன்னாட்சி அதிகாரசபையை ஓர் இடைக்கால ஏற்பாடாக ஏற்கும்படி மக்களிடம் கேட்பது கடினமாய் இருந்திருக்கும். போர் நிறுத்தத் துக்கும், அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கும் புலிகள் உளப்பூர்வமாக உடன்பட்டார்களா? அது ஒரு சூழ்ச்சியே என்றும், புலிகளின் உண்மையான இலக்கு தனியரசே என்றும் அவதானிகள் பலரும் கருதுகிறார்கள். அரசியல்தீர்வு விடயத்தில் தென்னிலங்கைச் சமூகம் கருத்தொருமை காணக்கூடியதல்ல என்பதை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அறிந்திருந்தார்கள். எனவே அரசியல்யாப்பு மூலமான தீர்வுகளின்றி,  என்றென்றும் தொடரும் இடைக்கால நிருவாகம் ஒன்றை தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவர அவர்கள் உறுதிபூண்டிருந்ததாகவே தெரிகிறது. இணைப்பாட்சிக் கட்டுக்கோப்பினுள் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வொன்றை ஆராயும் புலிகளின் விருப்பத்தை அவர்களின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரே பின்னர் மறுதலித்தார். தமது கட்டுப்பாடில் உள்ள பகுதிகளை புலிகள் என்றுமே அடக்கியாண்டு வந்தார்கள். எத்தகைய மாற்றுக்கருத்தும் சகிக்கப்படவில்லை. பிற தமிழ் அரசியல் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டார்கள். இலங்கையின் மையமயப்பட்ட ஒற்றையாட்சி அரசில் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று குறைப்பட்டே புலிகள் தனியரசு கோரினார்கள். எனினும் வட-கீழ் மாகாணங்களில் அமையவிருந்த தமிழ் ஈழத் தனியரசோ, அங்கு ஒருங்குதிரண்டு வாழும் சிங்களவரையும் முஸ்லீங்களையும் பொருட்படுத்தாமல் மிகவும் மையமயப்பட்ட அரசாக, தனிக்கட்சி அரசாக, ஒற்றையாட்சி அரசாக அமையவிருந்தமை கவனிக்கத்தக்கது.புலிகளின் பிடிவாதம் தமிழ் மிதவாதிகளை விரக்தியடைய வைத்தது. ஒற்றைப்பாறை போல் தோன்றிய புலிகளின் இயக்கத்தைப் பிளந்ததும் அப்பிடிவாதமே. போர்நிறுத்த காலப்பகுதியில் பிரிந்துசென்ற கிழக்கு மாகாண புலித் தலைவர்கள், புலிகளைத் தோற்கடிப்பதில் இலங்கை அரச படைகளுக்கு துணைநின்றார்கள்.   புலிகளின் கடும்போக்கு நிலைப்பாடு, பெரும்பானமைச் சிங்களக் கடும்போக்காளருக்கு உதவியது.

2005ல் சிங்களக் கடும்போக்காளரின் ஆதரவுடன் மகிந்த ராஜபக்சா ஜனாதிபதியானார். ஒரு மிதவாதியை விட கடும்போக்காளர் ஜனாதிபதி யாவதை விரும்பிய புலிகள், பெருமளவு அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்ள முன்வந்த ரணில் விக்கிரமசிங்காவுக்கு இன்றியமையாத சில ஆயிரம் வாக்குகள் கிடையா வண்ணம்,  தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தேர்தல்-புறக்கணிப்பை நடைமுறைப்படுத்தினார்கள். புலிகள் என்றுமே அரசியலிணக்கத்தை நாடவில்லை என்பதை இது உறுதிப் படுத்துகிறது. ஒரு போர்ப்படை என்ற வகையில் புலிகள் தம்மை உயர்த்தி மதிப்பிட்டமை தெளிவாகத் தெரிகிறது. எனினும் நான்கு ஆண்டுகளுக்குள் ராஜபக்சாவின் படை புலிகளை அறவே அழித்தொழித்தது. 9/11க்குப் பிற்பட்ட சர்வதேய நிலைவரத்தை புலிகள் தவறாகப் புரிந்துகொண்டார்கள். போரின் இறுதிக் கட்டங்களில் நிகழ்ந்ததை பெரும்பாலான சர்வதேய தரப்பினர் விரும்பவில்லை. எனினும் புலிகளைத் தோற்கடிப்பதில் அவர்கள் நேரடியாகவோ மறைமுகமகவோ ராஜபக்சாவுக்கு துணை நின்றார்கள். சந்திரிகாவின் முன்மொழிவுகளை புலிகள் அடியோடு நிராகரித்தது போல் பிற தமிழ்க் கட்சிகள் நிராகரிக்கவில்லை. நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் அவை ஆக்கபூர்வமான பங்கு வகித்தன. புலிகளும் ஆக்கபூர்வமான பங்கு வகித்திருந்தால், தென்னிலங்கையில் அம்முன்மொழிவுகளுக்கு இன்னும் அதிக ஆதரவு திரண்டிருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியும் 2000ல் செய்தது போல் இப்படிமுறைக்கு ஆப்பு வைத்திருக்க முடியாது. அதேபோல, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்மொழிவுகளுக்கு புலிகள் சாதகமான முறையில் பதில்வினையாற்றியிருந்தால், அதன் பெறுபேறாக எழும் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் கூட்டணியும் (People’s Alliance) ஓர் ஒத்துமேவலுக்கு வர நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும்.

இவ்வாறு, தீர்வு காணும் வாய்ப்புகளை சிங்களவர் இழந்தது போல், தமிழரும் இழந்தார்கள். அல்லது இரு தரப்புகளையும் சேர்ந்த தீவிரவாதிகளால் தீர்வு காணும் வாய்ப்புகளை இந்த நாடு  இழந்தது என்றும் கூறலாம். புலிகள் வேறு விதமாகச் செயற்பட்டிருந்தால், தமிழர்கள் இன்று ஆட்சியதிகாரப் பகிர்வும், மனநிறைவும் கொண்ட சமூகமாக விளங்கியிருப்பார்கள். ஆயிரக்கணகான இலங்கையர்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

(16) அமைதியை வென்றெடுத்தல்

புலிகளுக்கு எதிரான போர் தொடர்கையில் ஜனாதிபதி ராஜபக்சா அனைத்துக் கட்சி மாநாடு (APC) ஒன்றைக் கூட்டினார். அரசியல்யாப்பு மூலம் இணக்கம் காண்பதற்குரிய திட்டவட்டமான முன்மொழிவுகளை இடுவதற்கென அனைத்துக் கட்சி பிரதிநிதித்துவ குழு  (APRC) ஒன்றை அந்த அனைத்துக் கட்சி மாநாடு நியமித்தது. அனைத்துக் கட்சி பிரதிநிதித்துவ குழுவுக்கு உதவிபுரியவென 17 அங்கத்தவர்கள் கொண்ட நிபுணர்-குழாம் ஒன்றையும் ஜனாதிபதி நியமித்தார். அந்த நிபுணர்-குழாம் பிளவுண்டிருந்தது. சிங்களவர், தமிழர், ஒரு முஸ்லீம் உள்ளடங்கிய பதினொரு நிபுணர்கள் வலுவான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை முன்மொழிந்தார்கள். நான்கு சிங்கள நிபுணர்கள் ஆகக்குறைந்த அதிகாரப் பரவலாக்கத்தை முன்மொழிந்தார்கள். வேறிரு நிபுணர்கள் தமது சொந்த அறிக்கைகளை முன்வைத்தார்கள். “பெரும்பான்மை அறிக்கை” எனப்பட்ட அறிக்கையில் இருமுனை அணுகு முறை விதந்துரைக்கப்பட்டது:

(1) உள்ளூர்ச் சமூகங்கள் தத்தம் பகுதிகளில் தமது அதிகாரத்தைக் கையாண்டு தத்தம் பகுதிகளை விருத்திசெய்வதற்கு ஏதுவாக விரிவான அதிகாரப் பரவலாக்கம்.

(2) பல்வேறு சமூகங்களையும் அரச கட்டுக்கோப்பில் ஒருங்கிணைத்து,  தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசில் அதிகாரப் பகிர்வு.இலங்கை “மக்கள்” என்பது உத்தேச அரசியல்யாப்பில் “இலங்கையில் அங்கம் வகிக்கும் மக்கள் தரப்புகள்” என்று விபரிக்கப்பட வேண்டும்; அங்கம் வகிக்கும் மக்கள் தரப்பு ஒவ்வொன்றுக்கும், ஏனைய பங்குகளுடன், ஆட்சியதிகாரத்தில் அதற்குரிய பங்கினைப் பெறும் உரிமையும் அளிக்கப்பட வேண்டும். இலங்கையர் என்னும் பொதுவான அடையாளத்தை இது எந்த வகையிலும் பலவீனப் படுத்தலாகாது. இது ஒரு முக்கிய முன்மொழிவாகும்.  சிங்களப் பெரும்பான்மையோரைச் சேர்ந்த மிதவாதிகளும், பெரும்பாலான தமிழர்களும், முஸ்லீங்களும், இந்தியத் தமிழர்களும் மேற்படி “பெரும்பான்மை அறிக்கை”யை வரவேற்றார்கள். புலிகள் அதன் உள்ளடக்கம் குறித்து கருத்துரைப்பதை தவிர்த்துக் கொண்டதில் வியப்புக்கிடமில்லை. மாறாக, மேற்படி தமிழ் நிபுணர்களுக்கு தமிழரின் பிரதிநிதிகளாக விளங்குவதற்கான உரிமை குறித்து புலிகள் வினா எழுப்பினார்கள்.

(17) திஸ்ஸ விதாரணை

 அனைத்துக் கட்சி பிரதிநிதித்துவ குழுவின் அமர்வுகள் மூன்று ஆண்டுகள் நீடித்தன. வெவ்வேறு கட்டங்களில் சிங்கள தேசியவாதக் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பிரதான கட்சியாகிய சுதந்திரக் கட்சி நின்று பிடித்தது. எதுவித அறிக்கையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் அனைத்துக் கட்சி பிரதிநிதித்துவ குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரணை, குழுவின் பேரில் முன்மொழிவுகளின் சுருக்கத்தை 2009ம் ஆண்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார். “பெரும்பான்மை அறிக்கை” விதந்துரைத்தவற்றை விடக் குறைவான முன்மொழிவுகள் அவை. எனினும் ஒற்றையாட்சி அரசுக்கு உட்பட்டு மத்தியில் அதிகாரப் பகிர்வுடன் கூடிய விரிவான அதிகாரப் பரவலாக்கம் முன்மொழியப்பட்டது. அம்முன்மொழிவுகள் பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக அமைய வல்லவை. முன்மொழிவுகளின் பிரதி கிடைக்கப்பெற்றதை ஜனாதிபதியின் செயலகம் மறுத்துரைத்தமை கவனிக்கத்தக்கது. அதன் சுருக்கத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த்தாக திஸ்ஸ விதாரணை திரும்பத் திரும்பக் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதி ஆர். யோகராஜன், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதி நிசாம் காரியப்பர் இருவரும் அனைத்துக் கட்சி பிரதிநிதித்துவ குழுவின் அமர்வுக்குறிப்புகளின் அடிப்படையில் அங்கு எடுக்கப்பட்ட முடிபுகளின் சுருக்கத்தை வெளியிட்டார்கள். அது செம்மையான சுருக்கமே என்பதை திஸ்ஸ விதாரணை ஏற்றுக்கொண்டுள்ளார்.

(18) கலாநிதி காலின் ஏவின்  (Dr. Colin Irwin)

இவர் லிவர்பூல் பல்கலைக்கழக பேராசிரியர். வட அயர்லாந்து,  காஷ்மீர்,  முன்னைய யுகோசிலாவியா, சூடான் உட்பட மோதல் வலயங்களில் கருத்து வாக்கெடுப்புகள் நடத்திய பழுத்த அனுபவசாலி. இலங்கையில் போர் முடிவதற்கு மூன்றே மூன்று மாதங்களுக்கு முன்னர், அதாவது 2009 பங்குனி மாதம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதித்துவ குழுவின் தொடக்க முன்மொழிவு களை அவர் பொதுசன அபிப்பிராயம் கொண்டு உரைத்துப் பார்த்தார். ஓராண்டு கழித்து, போர் முடிந்து ஒன்பது மாதங்கள் கழித்து, அதாவது 2010 பங்குனி மாதம் அதே முன்மொழிவுகள் திரும்பவும் உரைத்துப் பார்க்கப்பட்டன. வட மாகாண மக்களையும் உட்படுத்தி மேலும் விரிவாக அவை உரைத்துப் பார்க்கப்பட்டன.2009 மாசி மாதம் காணப்பட்டவாறான அனைத்துக் கட்சிப் பிரதிநிதித்துவ குழு முன்மொழிவுகளின் சுருக்கம் 14 “காட்சி அட்டைகளாக” நிரலிடப்பட்டன. குறித்த அட்டை ஒவ்வொன்றிலும் பொறிக்கப்பட்ட விடயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பங்குபற்றிய ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட்டது.

“இது இன்றியமையாததா? விரும்பத்தக்கதா? ஏற்கத்தக்கதா? சகிக்கத்தக்கதா?” என்றெல்லாம் வினவப்பட்டது. அப்புறம் முழு முன்மொழிவுப் பொதியையும் பற்றிய அவர்கள் கருத்து என்ன? அத்தகைய பொதியை அவர்கள் ஆதரிப்பார்களா? எத்தகைய சூழ்நிலையில் ஆதரிப்பார்கள்? என்றெல்லாம் வினவப்பட்டது.தமிழரும், முஸ்லீங்களும், இந்தியத் தமிழரும் முழுப்பொதியையும் “இன்றியமையாதது, “விரும்பத்தக்கது” அல்லது “ஏற்கத்தக்கது”  என்றெல்லாம் தெரிவித்த விபரம் வருமாறு: தமிழர்                         2009 – 82%, 2010 – 83%
முஸ்லீங்கள்               2009 – 85%, 2010 – 88%
இந்தியத் தமிழர்       2009 – 90%, 2010 – 90%

மேற்படி வீதாசாரங்கள் இம்மியும் வியக்கத்தக்கவையல்ல. ஆனால் சிங்கள மக்களின் மறுமொழியே பலரையும் வியப்பில் ஆழ்த்தியது:

2009 – 59% (இன்றியமையாதது – 13%, விரும்பத்தக்கது – 21%, ஏற்கத்தக்கது – 25%) 2010 – 80% (இன்றியமையாதது – 20%, விரும்பத்தக்கது – 38%, ஏற்கத்தக்கது – 22%)

சிங்களவர் அதிகாரப் பரவலாக்கத்தை விரும்பவில்லை என்று அதிகாரப் பரவலாக்கத்தை எதிர்ப்பவர்கள் பரப்பும் கட்டுக்கதைக்கு மாறாக, போர் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் புலிகள் தோல்வியை எதிர்நோக்கிய வேளையில், 59% சிங்களவர் அனைத்துக் கட்சிப் பிரதிநிதித்துவ குழுவின் முன்மொழிவுகளை “ஏற்கத்தக்கவை” என்றாவது கருதினார்கள்! ஓராண்டு கழித்து, போர் முடிந்து ஒன்பது மாதங்கள் கழித்து, அது 80% வரை உயர்ந்தது!எனினும் ராஜபக்சாவின் அரசாங்கம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதித்துவ குழுவின் முன்மொழிவுகள் பற்றி இன்னும் கருத்துரைக்கவில்லை. படைபல வெற்றிப் புகழில் இன்னமும் அது திளைத்து வருகிறது. ஆயுத மோதலுக்கு இட்டுச்சென்ற தலையாய சர்ச்சை,  ஆட்சி யதிகாரத்தைப் பகிரும் சர்ச்சை, இன்னமும் தீர்க்கப்படாதுள்ளதை அது புரிந்துகொள்ளத் தவறுவதாகத் தெரிகிறது. ராஜபக்சாவின் ஆட்சியில் கடும்போக்காளர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அரசியல் தீர்வு குறித்து அவ்வப்பொழுது பேசப்படுவதுண்டு. எனினும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.வட மாகாண மன்ற தேர்தல் ஊடாக தமிழ் மக்கள் தெரிவித்த சேதி தெளிவானது. அவர்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். 13வது திருத்தத்தில் எத்தகைய குறைபாடுகள் காணப்பட்டாலும், அதிகாரப் பரவலாக்க உணர்வுடன் வட மாகாண மன்றத்துக்கு எல்லா வழிகளிலும் உதவி புரியப்பட வேண்டும்.

தமிழ்க் கட்சிகளுக்கும் வட மாகாண மன்றம் ஒரு சவாலாக விளங்குகிறது. எத்தகைய வழித்தடைகள் இடப்பட்டாலும், தமிழ்க் கட்சிகள் ஆளும் வல்லமை படைத்தவை என்பதை அவை உலகிற்கு மெய்ப்பித்துக்காட்ட வேண்டும். தீர்மானங்கள் நிறைவேற்றுவதை விட ஆளுகை மிகவும் முக்கியம் என்பதை இங்கு நான் வலியுறுத்த வேண்டியதில்லை.இலங்கையின் கதை என்பது தமிழரும், சிங்களவரும் தவறவிட்ட வாய்ப்புகளின் கதையே. இலங்கையில் போர் முடிந்துவிட்டது. ஆனால் முரண்பாடு தீரவில்லை. ஆட்சியதிகாரத்தில் எல்லாச் சமூகங்களுக்கும் உரிய பங்கு வழங்கும் உடன்படிக்கை ஒன்றின் ஊடாகவே முரண்பாட்டை முடிவுறுத்த முடியும் – பெரும்பாலான அவதானிகளுக்கு இது வெள்ளிடை மலை. எனினும் எல்லா இலங்கையருக்கும் அப்படித் தெரியாதது வருத்தமளிக்கிறது.

(19) குடியாட்சி ஓங்கும் வாய்ப்பு

இப்பொழுது எனது தலைப்பிலிருந்து விலகி, அதனுடன் தொடர்புடைய வேறு விடயம் ஒன்றை நான் கிளப்ப எண்ணுகிறேன். ஒரு வெற்றிடத்தில் அல்ல, கடும் அரசியலரங்கில் வைத்தே அரசியல்யாப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எங்கள் அனைவருக்கும் குறிக்கோள்கள் உண்டு. அதேவேளை உடனடி அரசியற் சூழ்நிலையில் ஒப்பேறக்கூடிய அணுகு முறையையே நாங்கள் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.இனத்துவ-அரசியல் சர்ச்சைக்கு தீர்வுகாண்பதற்கான அத்திவாரத்தை இடுவதற்கு கூட எங்களால் முடியவில்லை. அதேவேளை நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரமோ உச்சத்தை எட்டும் வண்ணம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. 1978ம் ஆண்டின் அரசியல்யாப்புக்கு அமைவான ஆட்சிமுறைமையை “நாடாளுமன்றக்  குடியாட்சி என்னும் உடையணிந்த அரசியல்யாப்பின் ஊடான ஜனாதிபதியின் சர்வாதிகாரம்” என்று கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா வர்ணித்தமை இன்று மெய்யாகியுள்ளது. இன்று ஜனாதிபதியின் ஆட்சிக்கு காலவரம்பில்லை; அதற்கு 17வது திருத்தம் வழிவகுத்துள்ளது.

இலங்கையில் காணப்படும் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை என்பது குடியாட்சியுலகில் மிகவும் வலுவான, இழிவான ஜனாதிபதி ஆட்சிமுறை அல்ல என்றாலும் கூட, மிகவும் வலுவான, இழிவான ஜனாதிபதி ஆட்சிமுறைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. மக்களாட்சி ஓங்குவதற்கு வேண்டிய வாய்ப்பு, நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையினுள் ஒடுங்கி முடங்கியுள்ளது.  தாங்கள் பிறப்பித்த நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையின் முழுவலுவையும் உணரும்வரை அதை ஆதரித்த ஐக்கிய தேசியக் கட்சியினர் இப்பொழுது அதை ஒழிப்பது குறித்து தீர்மானம் எடுத்துள்ளார்கள்.

சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாக விளங்கியபொழுது ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது பற்றிய சர்ச்சை எழுந்தது கண்டு தமிழ், முஸ்லீம் கட்சிகள் மகிழ்ச்சி அடையவில்லை. 2000ம் ஆண்டில் ஆளும் மக்கள் கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை இடம்பெற்றபொழுது,  நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கமுனையும் புதிய அரசியல்யாப்புச் சட்டமூலத்தை தனது கட்சி ஆதரிப்பதற்கான ஒரே காரணம், அதில் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதே என்று காலம்சென்ற எம். எச். எம். அஷ்ரவ் (M.H.M. Ashraff) சுட்டிக்காட்டியது எனக்கு நினைவிருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் நான் செயலாளராகப் பணியாற்றினேன். தனது விரலால் என்னைச் சுட்டி, தான் கூறியதைப் பதியும்படி அவர் சொன்னது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. தமது சமூகங்களுக்கு நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஏதோ பாதுகாப்பளிக்கும் என்னும் மாயை இன்று தமிழ், முஸ்லீம் கட்சிகளை விட்டு அகன்றுவிட்டது. சுதந்திரக் கட்சியின் இன்றைய தலைவர்களும், சிங்கள கடும்போக்காளர்களும் மட்டுமே நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்ந்து நீடிப்பதை உறுதிபட ஆதரிப்பது ஒரு முரண் அணி ஆகும்.நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கும் எண்ணம் ஜனாதிபதி ராஜபக்சாவுக்கு இல்லை. எனினும் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு அவ்வாறு செய்யும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.

“ஒற்றைச் சர்ச்சை”யை முன்வைத்துப் போட்டியிடும் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் பற்றி ஏற்கெனவே பேச்சு அடிபட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, சுதந்திரக் கட்சிக்குள் மாற்றுக்கருத்துக்கு வீறூட்டவல்ல, நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான கிளர்ச்சிக்கு வீறூட்டவல்ல, ஒற்றைச் சர்ச்சை அது. தனது பதவிக்கு கடுமையான சவால் ஏற்பட்டால், ராஜபக்சாவே நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து எதிர்க்கட்சிகளின் திட்டத்துக்கு ஆப்பு வைக்கலாம். எனினும் தனது தற்போதைய நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து பேணிக் கொண்டால், எதிர்க்கட்சிகளும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கருத்து முரண்பாட்டாளர்களும் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கும் நிலைப்பாட்டை முன்வைத்து அணிதிரளும் சாத்தியம் முற்றிலும் காணப்படுகிறது.  முன்மொழிவுகளை இடுவதை விட அரசியல்யாப்பு ஆக்குவது மிகவும் சிரமமானது. புத்தம்புதிய அரசியல்யாப்பு ஆக்குவதே சிறந்தது. 1994 முதல் 2000 வரை எத்தனித்தவாறு முற்றுமுழுதான அரசியல்யாப்புச் சீர்திருத்தம் கைகூடுவது தற்போதைய சூழ்நிலையில் சிரமமாகலாம்.

(20) இன அமைதி காண்பதில் சீர்திருத்தம் தேவை. அத்துடன் அரசியல்யாப்பின் மீயாண்மை, நவீன உரிமைச் சாசனம், தேர்தல் சீர்திருத்தம், நீதித்துறையின் சுதந்திரம், சட்ட ஆட்சியை மீளநிலைநாட்டல், உயர்பதவி நியமனங்கள் தொடர்பான தேசிய கருத்தொருமை, சுதந்திர நிறுவனங்கள் போன்றவற்றையும் பேசித்தீர்க்க வேண்டியுள்ளது. மக்களாட்சி ஓங்கும் அரசியற் சூழ்நிலையிலேயே முற்றுமுழுதான சீர்திருத்தம் ஒப்பேறும் வாய்ப்பு அதிகம். அகவே அத்தகைய சீர்திருத்தம் புரிவதற்கு முதற்படியாக, நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து, மக்களாட்சி ஓங்குவதற்கு உகந்த வெளியை தோற்றுவிக்க வேண்டும். அத்துடன் 17வது திருத்தத்தை தகுந்தமுறையில் நெகிழ்த்தி மீண்டும் புகுத்த வேண்டும். அத்தகைய வெளி, முற்றுமுழுதான சீர்திருத்தம் பற்றிக் கருத்தூன்றிக் கலந்துரையாட வழிவகுக்கும். புதிய அரசியல் இயங்கும் விதத்தைப் பொறுத்து, மேலதிக சீர்திருத்தத்தை முற்றுமுழுதாகவோ படிப்படியாகவோ மேற்கொள்ளலாம்.
_____________________________________________________________________________________Dr. Jayampathy Wickramaratne, Chelva Memorial Speech, Colombo Telegraph, 2014-04-26தமிழ்: மணி வேலுப்பிள்ளைEmail ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer post older post home subscribe to: Post Comments (Atom)

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply