உருசியா மீது கை நீட்டுவதற்கு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்குத் தார்மீக உரிமை கிடையாது!
நக்கீரன்
தமிழுக்குக் கதி கம்பராமாயணமும் திருக்குறளும் எனக் கூறியவர் செல்வக் கேசவராய முதலியார். இதில் திருக்குறளே நாடு, மொழி, இனம், சமயம், காலம் கடந்த நூல். திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். அதில் மதுரைத் தமிழ்நாகனார் என்ற புலவர் எல்லாப் பொருளும் இதன்பால்உள, இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை எனப் புகழ்ந்துள்ளார்.
திருவள்ளுவர் இயல் அரசியல், அதிகாரம் அறிவுடமையில் பின்வருமாறு கூறுவார்.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (குறள் 428)
இதன் பொருள் அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள். இது உக்கிரேன் நாட்டின் ஆட்சித்தலைவர் வொலடிமிர் செலன்ஸ்கி அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. உருசியா மீது மேற்குலக நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார, நிதிக் கட்டுபாட்டுக்களால் உக்கிரேனுக்கு எந்த நன்மையும் இல்லை.
உருசியா – உக்கிரேன் நாடுகளுக்கு இடையிலான போர் எட்டாவது நாளைக் கடக்கிறது. இந்தப் போர் உலகில் உள்ள நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது. உக்கிரேனின் இராணுவ தளங்கள், எண்ணெய் கிணறுகள், தொலைக்காட்சி கோபுரங்கள், கட்டிடங்கள் உருசியப் படைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. உக்கிரேனின் ஆயுத பலத்தை குறைப்பதுதான் தனது குறிக்கோள் என உருசியா அறிவித்துள்ளது.போரின் அழிவுகளை மீள்கட்டி எழுப்ப பல பில்லியன் டொலர்களும் பல ஆண்டுகளும் தேவைப்படும்.
இந்தப் போருக்கான காரணம் தெரிந்ததே. உக்கிரேன் நேட்டோ இராணுவ அமைப்பில் சேர எடுத்த முடிவை உருசியா எதிர்த்தது. உக்கிரேன் நேட்டோ நாடுகளது இராணுவ அணியில் சேர்ந்தால் தனது தேசியப் பாதுகாப்புக்கு ஊறு ஏற்படும் என உருசியா அஞ்சுகிறது. அது மட்டுமல்ல, அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் வாழும் உருசிய இன மக்களை உக்கிரேன் இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறது அவர்களது மொழியுரிமையை மறுக்கிறது என உருசியா குற்றம் சாட்டுகிறது.
இந்தப் போர் ஒரு உலக வல்லரசுகளின் ஒன்றான உருசியாவுக்கும் ஒப்பீட்டளவில் சிறிய நாடான உக்கிரேன் இடையிலான போர். அதன் காரணமாக ஆட் பலம், ஆயுத பலம், பொருள்வளம் கொண்ட உருசிய நாட்டோடு உக்கிரேன் அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியாது. உக்கிரேன் தலைநகரான கீவ் நகரை உருசிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அது எந்த நேரத்திலும் அது உருசியப் படைகளிடம் விழலாம்.
வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி போன்றவற்றை உக்கிரேன் கணக்கில் எடுக்கவில்லை என்பது தெரிகிறது. தான் தனித்து விடப்பட்டதாக உக்கிரேன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி புலம்புகிறார். அமெரிக்கா உட்பட நேட்டோ படைகள் உருசியாவுக்கு எதிராக போரில் நேரடியாக இறங்கும் என அவர் எதிர்பார்த்து ஏமாந்து போனார். இப்போது அவர் நாட்டை விட்டு ஓடிவிடும் நிலை அல்லது சிறை பிடிக்கப்படும் நிலை ஏற்படும் என உளவு நிறுவனங்கள் எதிர்கூறல் கூறுகின்றன.
உக்ரேன் உருசியா படை மற்றும் ஆயுத பலம்
உக்கிரேன் | உருசியா | |
பிரதேசம் | கிழக்கு ஐரோப்பா | ஐரோப்பா, ஆசியா |
தலைநகர் | கீவ் | மொஸ்கவ் |
மொழி | உக்கிரேன் | உருசியா |
மக்கள் தொகை | 44.46 மி | 145,054, 637 மி |
மொத்த உற்பத்தி | 155,300 மி | 1,478,570 மி |
தனிமனித வருமானம் | $ 3,741 | $10,115 |
பரப்பளவு | 603,500 ச.கிமீ | 17,125,191 ச.கீமீ |
படை | 200,000 | 850,000 |
துணைப் படை | 50,000 | 250,000 |
தாங்கிகள் | 2,596 | 1,420 |
கவசவாகனங்கள் | 1,103 | 30,122 |
போர் விமானங்கள் | 69 | 772 |
உலங்குவானார்தி | 34 | 544 |
மொத்த விமானங்கள் | 318 | 4,173 |
உக்கிரேன் நாட்டில் உக்கிரேனியர்கள் 77.8 விழுக்காடும், உருசியர்கள் 17.3 விழுக்காடும் உள்ளனர். இருந்தும் சிறுபான்மை உருசியர்கள் மொழி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் புறக்கணிக்கப்படுகின்றனர். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது உருசிய குடிமக்களது உடைமைகளை கையகப்படுத்துமாறு உக்ரேன் நாட்டு ஆட்சித்தலைவர் ஜெலன்ஸ்கி கட்டளை பிறப்பித்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
உண்மையில் சிறிலங்காவுக்கும் உக்கிரேனுக்கும் பல ஒற்றுமை காணப்படுகிறது என்று சொல்லலாம்.
(1) இரண்டும் பல்லின மக்கள் வாழும் நாடு
(2) அரசியல் அமைப்பு ஒற்றையாட்சி
(3) உக்கிரேனின் உத்தியோக மொழி உக்கிரேன். சிறிலங்காவின் உத்தியோக மொழி சிங்களம். தமிழும் பெயரளவில் உத்தியோக மொழி
(4) உக்கிரேனில் சிறுபான்மை உருசியர்கள் கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்கள் வடக்கு – கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
(5) இனவெறி மற்றும் மொழிவெறி ஆகியவை உக்ரைனில் வேரூன்றிய சிக்கல்களாக உள்ளன.
(6) உக்கிரேன் நாட்டு ஆயுதக் குழுக்களால் கிழக்கில் வாழும் உருசிய மக்கள் சித்திரவதை அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறார்கள். சிறிலங்காவில் வட – கிழக்குத் தமிழர்கள், முஸ்லிம்கள் இராணுவம் மற்றும் காவல்துறை போன்றவற்றால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
வி.புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் நடந்த போரில் உக்கிரேன் சிறிலங்காவுக்கு ஆயுதங்கள், போர் விமானங்கள் கொடுத்து உதவின. போர் விமானங்களை உக்கிரேனிய நாட்டு விமானிகளே ஓட்டினார்கள். இன்று அதே நாடு உருசிய நாட்டுப் படைகளால் துவம்சம் செய்யப்படுகிறது.
உருசியா உக்கிரேன் நாட்டின் மீது படையெடுத்தது தவறு. இன்றைய பூகோள அரசியலில் போர் மூலம் சிக்கல்களை தீர்க்க முடியாது. காரணம் போரில் வென்ற நாட்டுக்கும் தோற்ற நாட்டுக்கும் இழப்புத்தான் மிச்சம்.
இப்போது நடைபெறும் போர் உக்கிரேன் நாட்டுக்கும் உருசியாவுக்கும் இடையிலான போர் என்பதை விட அமெரிக்கா தலைமை வகிக்கும் நேட்டோ நாடுகளுக்கும் உருசியாவுக்கும் இடையிலான போர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அமெரிக்கா, உக்கிரேன் நாட்டின் ஆட்சித்தலைவரை ஒரு பகடக் காயாகப் பயன்படுத்துகிறது. அதற்கு ஜெலென்ஸ்கி பலியாகியுள்ளார். அமெரிக்க அரசின் கைப்பாவையாக மாறியிருக்கிறார். சட்டத்துக்கு மாறான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவை உருசியாவின் கோபத்தைக் கிளறியுள்ளது.
ஜெலென்ஸ்கி உருசிய சார்பு விக்டர் மெட்வெட்சுக்கின் கட்சியை அடக்கிவிட்டார். எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பதாகக் கருதப்படும் சில ஊடகங்களை அவர் மூடிவிட்டார், ஆனால் அமெரிக்காவோ அல்லது அதன் கூட்டாளிளோ எவரும் இத்தகைய சனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டிக்கவில்லை. ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஆட்சித்தலைவர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் யோன்சனை திருப்திப்படுத்த முயற்சிக்காமல் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருக்க வேண்டும்.
உருசியாவைக் கண்டிக்கிற தார்மீக உரிமை அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு இல்லை. காரணம் இந்த நாடுகளே கடந்த காலத்தில் சிறிய சிறிய நாடுகள் மீது போர் தொடுத்து அவற்றை அழித்துள்ளன.
வியட்நாம் போரை (1979) விட்டுவிடுவோம். அண்மைக் காலத்தில் (2003) இராக் (அமெரிக்க, ஐக்கிய இராச்சியம்) ஆப்கனிஸ்தான் 2001 (அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம்) கெயிட்டி 1994 (அமெரிக்கா) இராக் 1991 (அமெரிக்கா,ஐக்கிய இராச்சியம், சவுதி, எகிப்து) பனாமா 1989 (அமெரிக்கா) 1988 Spratly Islands, 1983 கிரனேடா (அமெரிக்கா) ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா, ஐக்கியராச்சியம் போன்ற நாடுகள் படையெடுத்திருந்தன. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர் 20 ஆண்டுகள் நீடித்தன. இவற்றை விட லிபியாவில் ஆட்சிமாற்றத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.
எனவே உருசியா மீது கை நீட்டுவதற்கு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகளுக்கு தார்மீக உரிமை அறவே கிடையாது.
02 டிசெம்பர் 1823 இல் அமெரிக்கா மொன்றோ கோட்பாடு ஒன்றைப் பிரகடனப்படுத்தியது. இதன் அடிப்படையில் ஒரு ஐரோப்பிய நாடு மேற்கு அரைக்கோளத்தில் ஒரு தேசத்தை கட்டுப்படுத்த அல்லது தலையிட முயன்றால், அமெரிக்கா அதை தனது நாட்டுக்கு எதிரான செயலாகப் பார்க்கும்.
1964 இல் அன்றைய சோவியத் ஒன்றியம் அமெரிக்க மண்ணிலிருந்து 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவில் ஒரு அணுவாயுத தளம் அமைக்க சோவியத் ஒன்றியம் முற்பட்ட போது அதனை அமெரிக்க ஆட்சித்தலைவர் யோன் கெனடி தடுத்து நிறுத்தினார். இந்த நிலைப்பாடு சரியென்றால் உருசியா தனது எல்லை நாடான உக்கிரேன் நேட்டோ நாடுகளது இராணுவ கூட்டணியில் சேரக் கூடாது எனக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது? அமெரிக்காவிற்கு ஒரு நியாயம் உருசியாவுக்கு இன்னொரு நியாயமா?
உருசியாவைச் சுற்றி உள்ள அனைத்து நாடுகளிலும் நேட்டோ தனது படையை நிறுத்தி வைத்திருக்கிறது. 1989 இல் நேட்டோவை கிழக்கு திசையில் ஒரு அங்குலம் கூட விரிவாக்கம் செய்ய மாட்டோம் என்று முன்னால் உருசிய ஆட்சித்தலைவர் கோர்பச்சேவிடம் நேட்டோ ஒப்பந்தம் மூலம் உறுதி அளித்திருந்தது. அதை மீறி, இது வரை 14 முறை நேட்டோ கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்திருக்கிறது.
2014ல் உக்கிரேனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து தனக்குச் சாதகமான பொம்மை அரசை அமெரிக்கா நியமித்தது. 2014ல் இருந்து உக்கிரேனின் கிழக்கு பகுதியில் Luhansk, Donetsk ஆகிய இரண்டு பகுதியும் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இப்போது இந்த இரண்டு பகுதிகளையும் தனித்தனி நாடாக உருசியா அங்கீகரித்து உள்ளது.
1969 ஆம் ஆண்டில், மறைந்த பிரதமர் பியர் ட்ரூடோ சனாதிபதி ரிச்சர்ட் நிக்சனைச் சந்திக்க வோஷிங்டனுக்குச் சென்றிருந்தார். கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை வரையறுக்க அவர் ஒரு சொற்றொடரை உருவாக்கினார்.
“அமெரிக்கா அருகில் வாழ்வது ஒரு யானையுடன் உறங்குவது போன்றது போன்றது என்றார். ஒவ்வொரு இழுப்பு மற்றும் முணுமுணுப்புகளால் கனடா பாதிக்கப்படும்” என்று மறைந்த பியர் ட்ரூடோ கூறினார்.
உருசியா என்ற யானையோடு உக்கிரேன் நாட்டின் ஆட்சித்தலைவர் உறங்குவது ஆபத்தானது!
——————————————————————————————————————–
1 நா · ரஷ்யா யுத்தத்தை நிறுத்தியோ அல்லது தோல்வியடைந்து பின்வாங்கியோ சென்றுவிடக்கூடும்.ஆனால் எதிர்காலத்தில் உக்கிரேன் அமைதியாக இருக்கப்போவதில்லை. எண்ணிலடங்காத ஆயுதங்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், கண்ணி வெடிகள் என உக்கிரேனில் குவிந்திருக்கும்ஆயுதங்கள் எதிர்காலத்தில் யார் கையில் இருக்குமென தெரியாது. இந்த ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்கு இலகுவாக சென்றுவிடும. ரஷ்யாவை எதிர்ப்பதற்க்காக ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்காக அமெரிக்கா கொடுத்த ஆயுதங்கள் அவர்களுக்கே எதிராக திரும்பியது. உக்கிரேனிய ஜனாதிபதி எல்லோருக்கும் ஆயுதங்களை வினியோகித்ததால் இன்று நிறைய ஆயுத குழுக்கள உலாவுகின்றன. அவர்கள் தங்கள் நாட்டிலேயே சொந்தப்பகைக்காக ஆயுதங்களை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கற்பழிப்புகள், கொலை, கொள்ளைகள் அதிகரித்திருக்கின்றன.உக்கிரேனிய எதிர்க்கட்சித் தலைவர் Viktor Medvedchuk கடந்த வருடத்திலிருந்து வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். இன்று அவர் வீட்டுக்காவலிலிருந்து தப்பி விட்டதாக தகவல்கள் வருகின்றன. உண்மை நிலை தெரியாது.அரசாங்கத்தை விமர்சித்ததற்க்காக மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. முன்னால் உக்கிரேனிய பிரதமர் Yulia Tymoshenko கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
முன்னால் உக்கிரேனிய ஜனாதிபதி Petro O. Poroshenkoவை கைது செய்ய தற்போதைய ஜனாதிபதி Volodymyr Zelenskyy கோரிக்கை வைத்தபோது நீதிமன்றம் அதை மறுத்திருந்தது.தனது அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை Volodymyr Zelenskyy நசுக்கத் தவறியதில்லை. உக்கிரேனின் இன்றைய நிலைக்கு காரணம் இந்த காமெடி நடிகர்தான்.The U.S. imported an average of 487,000 barrels per day in 2021, according to the EIA, up from 465,000 barrels a day in 2020. இது இனி தடைப்படலாம். இந்த எரிபொருள் தேவையை இனி வேறு நாடுகளில் அமெரிக்கா தேடவேண்டிவரலாம்.
உற்பத்தியை அதிகரிக்கும்படி OPEC நாடுகளுக்கு அழுத்தம் தரலாம். இது எரிபொருளின் விலையை அமெரிக்காவில் அதிகரிக்க செய்யும். சீனா ரஷ்யாவின் எண்ணையை வாங்க தயாராக இருக்கிறத. சில வேளைகளில் இந்த எண்ணை விற்பனை அமெரிக்க டாலரில் நடக்காமல் ரஷ்ய ரூபிள்- சீன யுவான் மூலம் நடக்க வாய்ப்பிருக்கிறது. இது அமெரிக்காவின் Petro dollarக்கு பலத்த அடியை கொடுக்கும்.நேற்று ஐநா சபையில் நடந்த வாக்கெடுப்பில் உலக நாடுகளின் ஜனத்தொகையில் பாதி இந்த யுத்தத்திற்க்கு எதிராக இருக்கின்றன.
ஆபிரிக்க நாடுகளின் உள்நாட்டு போருக்கு உக்கிரேன் பிரதான ஆயுதவியாபாரி.ஏற்கெனவே விபச்சாரத்திற்க்காக பெண்கள், சிறுவர் சிறுமிகள், குறைந்த கூலி வேலை செய்வதற்க்காக ஆண்கள் ஆகியோரை கடத்தும் தொழிலில்உக்கிரேன் முக்கிய இடம் வகிக்கிறது. ஐரோப்பாவில் பாலியல் தொழிலுக்காக பெண்களை அனுப்புவதில்/கடத்துவதில் முதலிடம். இதை பற்றி ஐநா சபை அறிக்கையும், அமெரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றன.
நாளைக்கே ஒரு அணுவாயுத யுத்தம் வெடித்தால் அமெரிக்க/நேட்டோ படைகளின் தாக்குதல் ரஷ்யா எனும் ஒரு நாட்டைத்தான் பாதிக்கும். ஆனால் ரஷ்யாவின் தாக்குதல் ஐரோப்பாவின் பல நாடுகளை அழித்துவிடும். இதில் அமெரிக்காவிற்க்கு சேதம் குறைவாகத்தான் இருக்கும். அதனால் அமெரிக்கா யுத்தநிறுத்தத்திற்க்கு சம்மதிக்காது.
ஆனால் ஐரோப்பா???இரண்டாம் உலகயுத்தத்தில் ஜப்பானியர்கள் அமெரிக்காவின் ரானுவதளங்களை தாக்கியதற்க்காக, ஜப்பானிய பொதுமக்கள் மீது அமெரிக்கா இரண்டு அணுவாயுத தாக்குதலை நடத்தியது.அதை எந்த பயங்கரவாதத்தில் சேர்ப்பது. லிபியாவை அழித்ததில் அமெரிக்காவிற்க்கும் பிரான்சுக்கும் பெரும்பங்குண்டு. இந்த யுத்த குற்றங்களுக்காக யார் தண்டிக்கப்பட்டார்கள்?
1991ல் சோவியத்யூனியன் சிதறுண்ட பிறகு ரஷ்யா மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. மக்கள் மிகவும் சிரமமடைந்தார்கள். உணவுப் பற்றாக்குறை தலைவிரித்தாடியது.அமெரிக்கவில் இருந்து கப்பலில் உணவு அனுப்பும் நிலைக்கு ஆளானது. இது மேற்குல நாடுகளால் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டது. ரஷ்யாவை மீண்டும் இந்த அளவுக்கு கட்டியெழுப்பியதில் புதினுக்கு மிகப் பெரிய பங்குண்டு. இன்று அவையெல்லாம் இந்த யுத்தத்தால் சிதைவடையலாம். ஆனால் ரஷ்யர்களை மேற்குலகால் விலைக்கு வாங்க முடியாது.
உக்கிரேனிய ஜனாதிபதி தனது நாட்டுக்கு இருக்கு அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள் என கடன் கொடுத்த அனைத்து நாடுகளையும் கேட்டிருக்கிறார். ஆனால் இன்னும் ஈராக்கிற்கும், லிபியாவிற்க்கும், நிக்கராகுவாவிற்க்கும், பனாமாவிற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் கடன் இருக்கிறது. அதை யார் தள்ளுபடி செய்வது? நாம் ரஷ்யாவிற்கோ அல்லது உக்கிரேனுக்கோ ஆதரவாக இருக்ககூடாது.நாடுகள் அணிசேரா கொள்கையுடன் இருப்பதுதான் சிறந்தது. ஆனால் முதலாளித்துவ கொள்கையில்/உலக வர்த்தக மயமாக்கலில் இது கடினமான செயல்.
அமெரிக்க/மேற்குலக நாடுகள் அணிசேரா கொள்கையை விரும்புவதில்லை. 120 நாடுகளை கொண்ட அணிசேரா நாடுகளை கொண்ட NON ALIGNED MOVEMENT இன்று பலமிழந்து இருக்கிறது. அது சரி ஐநா சபையே பலமிழந்து குறிப்பிட்ட சில நாடுகளின் தலையாட்டி பொம்மையாகத்தான் இருக்கிறது.
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் ஒருமுறை கிண்டலாக “ஐநா சபை கொசு மருந்து அடிக்கத்தான் லாயக்கு” என்று குறிப்பிட்டார். உண்மையும் அதுதான்.
இந்த யுத்தத்தை நிறுத்துவதுதான் அனைவருக்கும் நல்லது. ஆனால் சில நாடுகளின் விருப்பம் வேறாக இருக்கிறதே.சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.
—————————————————————————————————–
Leave a Reply
You must be logged in to post a comment.