HTML clipboard
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடப்பது உலகத் தமிழர்களுக்குப் பெருமை!
நக்கீரன்
உலகில் பலவிதமான ஆட்சிமுறைகள் இருக்கின்றன. அதில் மக்களாட்சி, பொதுவுடமை, சமவுடமை, பிரபுத்துவம், முடியாட்சி, பாசீசம், சர்வாதிகாரம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை ஆகும். இந்த ஆட்சி முறைகளில் நல்ல அம்சங்களும் இருக்கும் கெட்ட அம்சங்களும் இருக்கும். பொதுவுடமை ஆட்சி என்பது ஒரு கட்சி ஆட்சி. வேறு கட்சிகள் கிடையாது. முடியாட்சியில் மன்னன் வைத்ததுதான் சட்டம். மேன்முறையீடு கிடையாது. பாசீச ஆட்சியில் ஒரு கட்சி ஆட்சிமட்டுமல்ல, தனிமனித ஆட்சியும் காணப்படும். சர்வாதிகார ஆட்சியும் அப்படித்தான்.
இதில் மக்களாட்சியில் மட்டுமே குடிமக்கள் தேர்தலில் வாக்களித்து கட்சிப் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை உண்டோ அந்தக் கட்சியின் தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவார். இந்த முறைமையில் இன்னொரு சிறப்பும் உண்டு. ஓரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் அந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும். அந்தக் கட்சி மறுபடியும் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மக்களாட்சி முறைமையில் பல குறைபாடுகள் உண்டு. அரச இயந்திரம் மெதுவாக நகரும். ஆட்சி மாறும்போது அரசின் போக்கும் மாறும். மூன்றாவது உலக நாடுகளில் அரசியல்வாதிகள் பொதுவாக வாக்குகளைப் பணத்துக்கு வாங்கிவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களாட்சி முறைமை ஒறுப்பானது. இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால் அங்கு எல்லாக் காலத்திலும் தேர்தல் நடந்து கொண்டே இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் 5 ஆண்டுக்கு ஒருமுறை. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகள் இரண்டிலும் 5 ஆண்டுக்கு ஒரு முறை. இது போதாதென்று மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூட்சிகள் என தேர்தல் நடைபெறும். இவற்றுக்கெல்லாம் ஏராளமான பணம், நேரம், உழைப்பு செலவழிக்க வேண்டிவரும். இருந்தும் மக்களாட்சி முறைமைக்கு மக்கள் கொடுக்கும் விலை இது.
சீனா ஒரு பொதுவுடமை நாடு. அங்கு தேர்தல்கள் ஒற்றைக் கட்சி எதேச்சாதிகார அரசியல் அமைப்பின் கீழ் நடைபெறுகின்றன. இதனால் பணம், நேரம், உழைப்பு மிச்சம்.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ) ஆகியவற்றுக்கு கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதில் ஆளும் திமுக கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இது முற்றிலும் எதிர்பார்த்ததே. பொதுவாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கூட பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரம் இந்தத் தேர்தல் அதிமுக கட்சிக்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதிமுக கட்சியின் கோட்டை எனக் கருதப்பட்ட மேற்கு மண்டலத்தில் அந்தக் கட்சி முற்றாகக் கோட்டைவிட்டுள்ளது. மே 2016 இல் கோவை மாவட்டத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்றது. ஆனால் இம்முறை அதிமுக இணைப்பாளர்களான ஓ. பழனிச்சாமி, ஓ பன்னீர்ச் செல்வம் இருவரது சொந்த மாவட்டங்களில் கூட அதிமுக தோல்வி கண்டுள்ளது.
கோவை மாவட்டம் அதிமுகவின் இருப்புக் கோட்டை என்பார்கள். அந்தத் தொகுதியில் செல்வாக்கோடு வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி. ஆனால் அவரால்கூட அதிமுக தோல்வியை தடுக்க முடியவில்லை.
இடங்கள் – மாநகராட்சி 21,
நகராட்சி – 138,
பேரூராட்சி – 489
வட்டாரங்கள் – 12, 820,
வேட்பாளர்கள் 57,746
ஆண் வாக்காளர்கள் – 1,37,06,793, பெண்வாக்காளர்கள் 1,42,45,637, மூன்றாம் பாலினம் 4,324
மொத்த வாக்காளர்கள் 2,79,56,754
வாக்குச்சாவடிகள் – 31,029,
அலுவலகர்கள் – 1,33,000 இலட்சம்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி 96 இடங்களில் வென்றுள்ளது. இதில் திமுக 73, காங்கிரஸ் 9, சிபிஐ 4, சிபிஐ(எம்) 4, மதிமுக 3, கொமதேக 2, மமக 1 இடங்களில் வென்றுள்ளன.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதில் திமுக மட்டும் 73 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக வெறும் 3 வட்டாரங்களில் மட்டுமே பெற்று எதிர்கட்சி தமைமையைக் கூட பெறவில்லை. ஒன்பது இடங்களில் வென்ற காங்கிரஸ் எதிர்கட்சியாக அமர உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. நகராட்சிகளின் கீழ் உள்ள 198 வட்டங்களில் திமுக 159 வட்டாரங்களையும் அதிமுக 22 வாட்டாரங்களையும் வென்றுள்ளது. கீழ்க்கண்ட அட்டவணை , கட்சிகள் வெற்றிபெற்ற இடங்களை ஒரே பார்வையில் தருகிறது.
அட்டவணை
கட்சியின் பெயர் | |||
---|---|---|---|
மாநகராட்சி வார்டு உறுப்பினர் | நகராட்சி வார்டு உறுப்பினர் | பேரூராட்சி வார்டு உறுப்பினர் | |
மொத்த பதவியிடங்கள் | 1373/1374 | 3842/3843 | 7604/7621 |
போட்டி இன்றி தேர்வு | 4 | 18 | 196 |
போட்டி தேர்வு | 1369 | 3824 | 7408 |
வேட்பு மனு தாக்கல் இன்மை | 0 | 0 | 1 |
தேர்தல் தள்ளி வைப்பு | 1 | 1 | 4 |
தேர்தல் ரத்து | 0 | 0 | 12 |
அ.இ.அ.தி.மு.க | 164 | 638 | 1206 |
அ.இ.தி.கா | 0 | 0 | 0 |
பி.எஸ்.பி | 0 | 3 | 1 |
பி.ஜே.பி | 22 | 56 | 230 |
சி.பி.ஐ | 13 | 19 | 26 |
சி.பி.ஐ(எம்) | 24 | 41 | 101 |
தே.மு.தி.க | 0 | 12 | 23 |
தி.மு.க | 952 | 2360 | 4389 |
இ.தே.கா | 73 | 151 | 368 |
என்.சி.பி | 0 | 0 | 1 |
தே.ம.க | 0 | 0 | 0 |
மற்றவை | 125 | 562 | 1259 |
மொத்தம் | 1374 | 3843 | 7621 |
மாவட்ட ரீதியான முடிவுகளை https://tnsec.tn.nic.in/result/election_urban2022/index.php என்ற தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை சொடுக்கவும்.
சென்னை போன்ற மற்ற மாநகராட்சிகளில் திமுக வெற்றி பெறும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். உள்ளாட்சித் தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்தாலும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட திமுக அதிக இடங்களில் வென்றிருந்தது. கோவையில் மட்டும் 100 தொகுதிகளில் திமுக தனித்து 76 இடங்களைப் பிடித்துள்து. கோவையில் திமுக தலைமை கோவையை ஒரு மானப் சிக்கலாகவே பார்த்தது. கோவை மாவட்டத்துக்கு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆவார். இருபத்தொரு மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
“திமுக கூட்டணிக்கு முழுவெற்றியைத் தந்த மக்களுக்குத் தொண்டாற்றக் காத்திருக்கிறோம். ஒன்பது மாத திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த மாபெரும் நற்சான்றுதான் இந்த வெற்றி” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் முதலமைச்சராக இருந்தவர்களை விட ஸ்டாலின் சுறு சுறுப்பாக அரச இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கோவிட், மழைவெள்ளம் என பேரிடர்கள் வந்த போது களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இருந்து அவர் பணியாற்றினார். மக்கள் குறைகளைக் கேட்டு அவற்றை தீர்த்து வைக்கிறார். ஸ்டாலின் அவர்களது உழைப்பைப் பார்த்து உயர் அதிகாரிகளும் காலநேரம் பாராது கடுமையாக உழைக்கிறார்கள்.
தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம் மற்றும் யோர்ஜ் போன்ற தமிழ் உணவாளர்கள், இனப்பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஓர் அரசன் எப்படி நாட்டை ஆளவேண்டும் என்பதை திருவள்ளுவர் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். (குறள் 388)
இதன் பொருள் நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், இறைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான். இந்தக் குறளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
அதிமுக இந்தத் தேர்தலை தனித்துச் சந்தித்தது. பாமக ஏற்கனவே வெளியேறிவிட்டது. இம்முறை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுகவுக்குப் பலமேயொழிய பலவீனம் அல்ல என்று அதிமுக சொல்லியது. காரணம் சிறுபான்மை தலித் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் அதிமுக க்கு விழும் என்ற எதிர்பார்ப்பு ஆகம். ஆனால் அது நடக்கவில்லை. அதிமுகவின் தோல்விக்கு அதன் ஆளுமையற்ற தலைவர்களே முழுக்க முழுக்க காரணமாகும். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க, கவர்ச்சிகரமான தலைவர்களோடு பழனிச்சாமியையும் பன்னீர்ச்செல்வத்தையும் ஒப்பிட முடியாது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை உள்ளது. இன்னொரு காரணம் அதிமுக இரண்டு மூன்றாகப் பிரிந்து கிடப்பது. சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பழனிச்சாமி அவருக்குத் துரோகம் செய்து விட்டார் என அதிமுக இன் அடிமட்டத் தொண்டர்கள் நினைக்கிறார்கள். டி.டி. தினகரனின் அமமுக பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் தனியே போட்டியிட்ட பாஜக மொத்தம் 22 மாநகராட்சி, 56 நகராட்சி, 230 பேரூராட்சி இடங்களை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது. ஆனால் இந்தத் தேர்தலில் மொத்த வாக்குகள் 2.852 கோடி. செலுத்ததப்பட்ட வாக்குகள் 1.69 கோடி. இதில் பாஜக க்கு கிடைந்த வாக்குகள் 9 இலட்சம் (5.33 %) ஆகும்.
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமன்றக் கட்சி படு தோல்வியை தழுவியுள்ளன. இந்த ஆண்டு மே மாதத்தில் நடந்த சட்ட சபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.72 % வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளைப் போற்றும் வினைத்திறன்மிக்க நல்லாட்சி நடப்பது உலகத்தமிழர்களுக்கு பெருமை ஆகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.