1987இல் மாகாணசபை சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நேற்று தான் தேர்தல் நடைபெற்றது

1987இல் மாகாணசபை சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நேற்று தான் தேர்தல் நடைபெற்றது

30 ஆண்டுகால பயங்கரவாத அழிவுக்குப் பின்னர் வடபகுதியில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் மக்களின் ஜனநாயக சுதந்திரம் மலர்ந்துள்ளது. தேசத்தலைவரான மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இன்றி அமைதியான சூழல் நிலவுகின்றது. வீதிகளில் அன்றிருந்த வீதித்தடைகள் அனைத்துமே முற்றாக அகற்றப்பட்டுள்ளன. இன்று மக்கள் தெற்கில் தெவிநுவரவில் இருந்து வடக்கில் பருத்தித்துறை வரை எவ்வித தடையோ, அச்சுறுத்தலோ இன்றி சென்று திரும்பக்கூடிய அளவுக்கு அமைதி நாட்டில் திரும்பியுள்ளது.

தென்னிலங்கையையும், வட இலங்கையையும் இணைக்கும் நட்புறவுப் பாலமாக இருந்த யாழ்தேவி மீண்டும் செயற்பட ஆரம்பித்துவிட்டாள். 1987ம் ஆண்டில் இந்திய பிரதமமந்திரி ராஜீவ்காந்தி திடீரென ஒருநாள் முடிவு செய்து கொழும்பு மாநகரத்திற்கு விமானம் மூலம் தனது பரிவாரங்களுடன் அதிகாலையில் வந்து சேர்ந்தார். அதையடுத்து அவர் ஜனாதிபதி மாளிகையில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மீது அழுத்தங்களைக் கொண்டு வந்தோ, அல்லது அச்சுறுத்தல்களை மேற்கொண்டோ எதிர்ப்புகளுக்கு இடமளிக்காமல் இலங்கை இந்திய நட்புறவு ஒப்பந்தத்தை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கையில் அதிகார பரவலாக்கலுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக மாகாணசபைகள் என்ற புதியதொரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

முன்னாள் இந்தியப் பிரதமமந்திரி இந்திராகாந்தியினால் பாலூட்டி அன்புடன் வளர்க்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி பயங்கரவாதிகளாக மாறுவதற்கு 1987ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தமே அடித்தளமாக அமைந்தது. இந்திய அரசாங்கத்தினால் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்ட நம்நாட்டு தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவே ஆயுதம் தூக்குவார்கள் என்று இந்திராகாந்தியும், அவரது மறைவிற்கு பின்னர் பிரதம மந்திரி பதவியேற்ற ராஜீவ்காந்தியும் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போன்று எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத இயக்கம் இங்கு நிலைகொண்டிருந்த பலம்வாய்ந்த இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக 1987லிலேயே யுத்தத்தை ஆரம்பித்தது. எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் அத்துடன் நின்றுவிடாமல் ராஜீவ்காந்தியை படுகொலை செய்ய வேண்டுமென்று தங்களது தற்கொலை குண்டுதாரிகள் மூலம் தென்னிந்தியாவில் 1990ம் ஆண்டில் இரகசியமாக மேற்கொண்ட தாக்குதல் இறுதியில் அம்பலமாகியது.

ராஜீவ்காந்தி தற்கொலை குண்டுதாரியினால் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவலை அறிந்த இந்திய புலனாய்வுப் பிரிவினர், இது இந்தியாவின் நக்சலைட் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று முதலில் நம்பினார்கள். ஆயினும் ராஜீவ்காந்தி கலந்து கொண்ட இந்த அரசியல் பொதுக்கூட்டத்திற்கு படமெடுக்க வந்திருந்த பாபு என்ற புகைப்படைக் கலைஞர் இந்த குண்டு வெடிப்பின் போது கொல்லப்பட்ட போதிலும் அந்த மனிதனின் கமரா தெய்வாதீனமாக தூக்கியெறியப்பட்டு, பழுதடையாத நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது. அதில் பதிவாகிய காட்சிகளை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் பகுப்பாய்வு செய்த பின்னரே இது எல்.ரி.ரி.ஈ தற்கொலை குண்டுதாரியின் தாக்குதல் என்பதை ஊர்ஜிதம் செய்து அந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை பிடித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்விதம் புற்றுநோயைப் போன்று எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து, அவ்வியக்கம் பலம்வாய்ந்த இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப் படைகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக விஸ்வரூபம் எடுத்தது.

இலங்கையில் ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ஐக்கியத் தேசியக்கட்சியைச் சேர்ந்த ஆர்.பிரேமதாஸ, எல்.ரி.ரி.ஈ.யுடன் தனது இராஜதந்திர அறிவைப் பயன்படுத்த எத்தணித்த சாதுர்யமான முயற்சி இறுதியில் அவர் விட்ட பிழையினால் தற்கொலை குண்டுதாரிக்கு பலியான வேதனைக்குரிய நிகழ்வும் இடம்பெற்றது. 1989ம் ஆண்டு டிசம்பர் 2ம் திகதியன்று வி.பி.சிங் இந்திய காங்கிரஸிற்கு எதிரான ஒரு கூட்டணியின் சார்பில் இந்தியாவின் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் ஒரு பலவீனமான பிரதம மந்திரியாக இருந்தார். இவர் பதவிக்கு வந்த காலகட்டத்தில் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கும் இடையில் பலத்த யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இந்தியப் பிரதமமந்திரி ராஜீவ்காந்தியை பழிவாங்க வேண்டுமென்ற சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த இலங்கை ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ, எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுடன் நல்லுறவை வலுப்படுத்தும் இன்னுமொரு விஷப்பரீட்சையில் இறங்கினார். இதையடுத்து ஜனாதிபதி பிரேமதாஸ விமானப்படை ஹெலிகொப்டர்களை வன்னிப் பிரதேசத்திற்கு அனுப்பி, எல்.ரி.ரி.ஈ.யுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அவ்வியக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், திருமதி எடலின் பாலசிங்கம், மாத்தயா, யோகி ஆகியோரை கொழும்புக்கு அழைத்து வந்து அவர்களை கலதாரி ஹோட்டலில் அரசாங்கத் தலைவர்களுக்குரிய மரியாதையை கொடுத்து தங்க வைத்தார்.

அதையடுத்து மூன்று நான்கு தடவை பாலசிங்கம் குழுவினரும் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவுடன் அவரது தனிப்பட்ட சுச்சரித்த இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அப்போது ஜனாதிபதி பிரேமதாஸ எல்.ரி.ரி.ஈ.க்கு தேவையான நவீன ஆயுதங்களையும், பணத்தையும் அவர்களுக்கு கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்து அந்த வாக்குறுதியையும் விரைவில் நிறைவேற்றினார்.

இலங்கை அரசாங்கத்தை அவமதிக்கக்கூடிய வகையில் 1987ல் பிரதமமந்திரி ராஜீவ்காந்தி இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி வடபகுதியில் பருப்பு, அரிசி மற்றும் சீனி மூடைகளை தாளப் பறந்த இந்திய விமானங்களில் இருந்து வீசியெறிந்த சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த பிரேமதாஸ, இந்த செயல் அடுத்த வீட்டு நாய் எங்கள் வீட்டு வளவுக்கு வந்து சிறுநீர் கழித்ததைப் போன்ற ஒரு மன்னிக்க முடியாத குற்றம் என்று ராஜீவ்காந்தியை தரக்குறைவாக பகிரங்கமாக திட்டித்தீர்த்தார். இந்த சம்பவம் நடக்கும் போது பிரேமதாஸ ஜனாதிபதியாக இருக்கவில்லை. அவர் பிரதமமந்திரி பதவியில் தான் இருந்தார்.

இந்த சம்பவம் பிரேமதாஸவின் மனதில் வலுவூன்றியிருந்ததனால் இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையில் இருந்து வெளியேற்றுவதன் மூலமே ராஜீவ்காந்தி மீதான வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள முடியுமென்று நினைத்தார். அதனடிப்படையில் எமது இராணுவத்தினரும் இந்திய அமைதிகாக்கும் படையுடன் ஒத்துழையாமை செயற்பாட்டை கடைப்பிடித்தமையால் வேறு வழியின்றி இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸ இந்திய அமைதிகாக்கும் படை நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று விதித்த காலக்கெடுவை ஏற்றுக் கொண்ட அன்றைய இந்தியப் பிரதமமந்திரி வீ.பி.சிங் 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அமைதிகாக்கும் படையினரை முற்றாக இந்தியாவுக்கு திருப்பி அழைப்பதற்கு இணக்கம் தெரிவித்தார். அதற்கு பின்னர் தனிக்காட்டு ராஜாக்கள் என்ற எண்ணத்தில் தான்தோன்றித் தனமாக பொதுமக்கள் மீது அராஜகம் புரியும் அதே வேளையில் அன்று தங்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் அடிக்கடி மீறி எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் இராணுவ முகாம்கள் மீதும் சிங்கள எல்லைத்தாண்டிய கிராமங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி பல அப்பாவி உயிர்களை பலிவாங்கினர்.

தென்னிலங்கையின் ஜே.வி.பி. மொட்டைக் கடிதங்களை அனுப்பி அச்சுறுத்தி, கடைகளை மூடியும் அரசாங்க ஊழியர்கள் வேலைக்கு போவதை தடுத்தும் பாடசாலை பிள்ளைகளை வீதியில் இறக்கி பாதுகாப்பு படையினருடன் நேரடி மோதல்களில் ஈடுபடவும் தூண்டுதல் செய்து கொண்டிருந்தது.

அன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி பிரேமதாஸ, நாம் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுடனும் மோதினால் இதுதான் சந்தர்ப்பம் என்று பார்த்து ஜே.வி.பி. தென்னிலங்கையில் கலவரங்களை ஏற்படுத்தும் என்று அஞ்சினார்.

அதனால் தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்களை கைது செய்து, படுகொலை செய்யும் பணிகளில் தனது கவனத்தை திருப்பினாரே ஒழிய, எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிராக மனதுக்குள் ஆத்திரம் இருந்தாலும் ஒன்றுமே செய்யவில்லை.

அப்போது ஜனாதிபதி பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளும் சிறிதளவு எதிர்ப்பு தோன்றியது. அன்று பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்ன கட்சியின் தவிசாளராகவும் இருந்தார். கட்சிக்குள் ரஞ்சன் விஜேரத்னவின் பலம் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனால், பிரேமதாஸ தனது ஜனாதிபதி பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அஞ்சினார். ஆனால், அவர் அதை வெளிப்படையாக காண்பிக்கவில்லை. ரஞ்சன் விஜேரத்னவுடன் அவர் சந்தேகத்துடனேயே இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் தலைமறைவாகி மலையகத்தில் அத்தநாயக்க என்ற போலிப்பெயரில் ஒரு தோட்ட துறை போல் பாதுகாப்பாக உயிர்வாழ்ந்து கொண்டிருந்த ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவீர இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

அரசியலில் குள்ளத்தனமான முடிவுகளை எடுப்பதில் வல்லவரான ஜனாதிபதி பிரேமதாஸ, ரஞ்சன் விஜேரத்னவுக்கு விஜயவீரவை பாதுகாப்பாக என்னிடம் அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார். அவ்விதம் விஜேவீர தன்னிடம் சரணடைந்தால், பொதுவாக பயந்த குணமுடைய விஜேவீர தன்னை அடித்து துன்புறுத்துவார்கள் என்று பயந்து உண்மையை கக்கிவிடுவார். அப்போது அவரது வாக்குமூலத்தை நாம்

தொலைக்காட்சி மூலம் பதிவு செய்து அதன் மூலம் ஜே.வி.பியின் அரசியல் அதிகாரத்தை பலவீனப்படுத்த முடியு மென்று பிரேமதாஸ நம்பியிருந்தார்.

ஆனால், பிரேமதாஸவின் எண்ணம் போல் எதுவும் நடக்கவில்லை. விஜேவீரவை அழைத்து அவரை அச்சுறுத்தி இராணுவத்தினர் அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்த போதிலும் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவின் உத்தரவுக்கு அடிபணிந்து விஜேவீரவை சுட்டுக் கொன்று அவரது சடலத்தை கனத்தை மயானத்தில் எரித்து சாம்பலாக்கினர்.

தன்னுடைய இந்த எண்ணம் கைகூடக்கூடாத வகையில் இராணுவம் செயற்படுவதற்கு ரஞ்சன் விஜேரத்னதான் பின்னணியில் இருந்தார் என்பதை தெரிந்து கொண்ட ஜனாதிபதி பிரேமதாஸ, அவருடன் ஆத்திரமடைந்தார். இந்த சம்பவம் நடைபெற்று சில காலத்திற்கு பின்னர் கொழும்பு தும்முள்ள சந்திக்கு அருகில் உள்ள பெற்றோல் நிலையத்திற்கு அருகில் ஒரு நாள் காலை 8.00 மணியளவில் ரஞ்சன் விஜேரத்ன சென்றுகொண்டிருந்த வாகன அணிவகுப்பு எல்.ரி.ரி.ஈ. கண்ணிவெடியில் சிக்கி முற்றாக எரிந்தது. வாகனத்திற்குள் ரஞ்சன் விஜேரத்னவினதும் அவரது மெய்ப் பாதுகாவலர்களினதும் உடல்கள் கருகிய நிலையில் இருந்தன. ரஞ்சன் விஜேரத்னவை பிரேமதாஸதான் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் மூலம் சதி செய்து படுகொலை செய்தார் என்ற வதந்தி அப்போது நாடெங்கிலும் பரவிய போதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்த காலகட்டத்தில் பிரேமதாஸவுக்கும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் நல்லுறவு நீடித்துக் கொண்டிருந்தது. இந்த நல்லுறவைப் பயன்படுத்தி எல்.ரி.ரி.ஈ. பாபு என்ற தங்கள் ஒற்றனுக்கு பிரேமதாஸவின் சுச்சரித்த இல்லத்தில் உள்ளவர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது. அதனால் பாபு பிரேமதாஸவின் நெருங்கிய உதவியாளர்களுக்கும் அவரது மெய்ப்பாதுகாவலர்களுக்கும் நாளாந்தம் இரவு வேளையில் மது போத்தல்களை உடைத்து உபசரிப்புகளை செய்தான். இதனால் பாபு சுச்சரித்த இல்லத்திற்குள்ளும் சுதந்திரமாக நடமாடும் அந்தஸ்தை பெற்றதுடன் ஜனாதிபதிக்கு அருகிலும் சென்று பழகக்கூடிய வாய்ப்பைப் பெற்றான்.

1993 மே மாதம் 1ம் திகதியன்று பிரேமதாஸ தற்கொலை குண்டுதாரியான பாபுவினால் ஆமர் வீதி சந்தியில் வைத்து படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பிரேமதாஸவின் மனதை துன்புறுத்தக்கூடிய ஒரு வேதனைக்குரிய சம்பவம் இடம்பெற்றது.

மத்திய மாகாணசபைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. பிரேமதாஸவினால் பிரதமமந்திரி பதவி மறுக்கப்பட்டதனால் ஆத்திரமடைந்த கட்சியின் இரு சிரேஷ்ட தலைவர்களான காமினி திஸாநாயக்கவும், லலித் அத்துலத் முதலியும் கட்சியில் இருந்து விலகி கழுகு சின்னத்தில் மாற்றுக் கட்சியை ஆரம்பித்தார்கள். மத்தியமாகாண சபைக்கான அந்தத் தேர்தலில் தற்போதைய சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான சரத் அமுனுகம கழுகு சின்னத்தில் போட்டியிட்டு மத்திய மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனால் ஜனாதிபதி பிரேமதாஸவுக்கும் லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க கூட்டணிக்கும் இடையில் நேரடியாகவே பகைமை ஏற்பட்டது. சரியாக பிரேமதாஸ படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கிருலப்பனை மைதானத்திற்கு அருகில் நடத்தப்பட்ட எதிரணி பொதுக்கூட்டத்தில் லலித் அத்துலத் முதலி உரையாற்ற வந்த போது அவர் ஒரு இனந்தெரியாத துப்பாக்கி மனிதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொன்றது எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதி என்று பொலிஸ் விசாரணைகள் உறுதிப்படுத்திய போதும் பலரும் ஜனாதிபதி பிரேமதாஸவே லலித் அத்துலத் முதலியை சுட்டுக் கொன்றார் என்று நாடெங்கிலும் வதந்திகள் பரவின. இதனால் மனவேதனையும் ஆத்திரமும் அடைந்த ஜனாதிபதி பிரேமதாஸ, தனது மரணத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் பொது மேடைகளில் பேசும் போது “எனக்கும் லலித் அத்துலத் முதலியின் கொலைக்கும் சம்பந்தமில்லை. என்னுடைய எதிரிகள் விரும்பினால் என்னை சுட்டுக் கொல்லுங்கள். ஆனால், என்னுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள்” என்று வேதனையுடன் உரை நிகழ்த்தினார். அவரது இறுதிக்கூட்டத்தில் லலித் அத்துலத் முதலியின் கொலை பற்றிய உண்மை இரகசியத்தை நான் மேதினக் கூட்டத்தில் எனது உரையில் வெளியிடுவேன் என்றும் உறுதியளித்தார்.

எனினும் இரண்டு தினங்களுக்கு முன்னர் காலிமுகத் திடலில் நடைபெற இருந்த அரசாங்க கட்சியின் மேதினக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக 1993 மே மாதம் 1ம் திகதியன்று பிரேமதாஸ ஊர்வலமாக சென்று கொண்டிருந்த போது ஒரு சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதியான பாபுவின் உடலில் மறைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததனால் அவர் ஸ்தலத்திலேயே மரணமானார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றவுடன் அங்கிருந்தவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் எங்கிருக்கிறார் என்ற செய்தி தெரியவில்லை.

ஜனாதிபதி பிரேமதாஸவை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாதுகாப்பாக காப்பாற்றி சென்று விட்டார்கள் என்றே நினைத்தார்கள். இறந்தவர்களின் சடலங்கள் வீதியில் இருந்து கொழும்பு மாநகரசபை சிற்றூழியர்களால் லொறிகளில் ஏற்றப்பட்ட போது அங்கிருந்த ஒரு பெண் சிற்றூழியர் அங்கே பாருங்கள் ஜனாதிபதி பிரேமதாஸவின் சடலம் இருக்கிறதென்று அடையாளம் காட்டினார். ஜனாதிபதி அணிந்திருந்த சேர்ட் மற்றும் கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் மூலம் அந்தப் பெண் அவரை அடையாளம் காட்டினார்.

இந்தப் பின்னணியில் தான் எங்கள் நாட்டில் மாகாணசபைகளை அமைக்கும் நடைமுறை 1987ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்தியா முன்மொழிந்த மாகாணசபை வடமாகாணத்தை தவிர மற்ற மாகாணங்களில் கடந்த பல்லாண்டு காலமாக மக்கள் சேவையை செய்து வருகிறது.

2013ம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதியன்றே வட மாகாணசபையை முதல் தடவையாக தெரிவு செய்யும் வாய்ப்பு வடபகுதி மக்களுக்கு கிடைத்தது.

1987ம் ஆண்டின் 42ம் இலக்க மாகாணசபை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் 1978ம் ஆண்டின் இலங்கை குடியரசு அரசியல் சாசனத்திற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் 1988ம் ஆண்டு பெப்ரவரி 3ம் திகதியன்று 9 மாகாணசபைகள் அமைக்கப்பட்டன. மாகாணசபைகளுக்கான முதலாவது தேர்தல் 1988ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி வடமேல், வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் நடத்தப்பட்டது.

இந்த சட்டத்தின்படி புதிதாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட பின்னர் 1988ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி இம்மாகாணத்தின் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய அமைதிகாக்கும் படையினர் தேர்தலை முறைகேடாக நடத்தி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ரிஜிஞிழிபி) மற்றும் ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி(ரினிளிழிபி) ஆகிய இந்திய அரசாங்கத்தின் கைப்பொம்மைகளாக இருந்த இரு கட்சிகளையும் தேர்தலை நடத்தாமலேயே ஏகமனதாக வடமாகாணத்தின் 36 ஆசனங்களை கைப்பற்ற வைத்தது. ஆயினும் கிழக்கு மாகாணத்தில் இருந்த 35 ஆசனங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13 ஆசனங்களையும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ரிஜிஞிழிபி) 12 ஆசனங்களையும் ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ரினிளிழிபி) 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. இதையடுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் முன்னாள் விரிவுரையாளர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ரிஜிஞிழிபி) பிரதிநிதியாக ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரானார். 1990ம் ஆண்டு மார்ச் முதலாம் திகதியன்று இந்திய அமைதிகாக்கும் படையினர் இலங்கையில் இருந்து வெளியேற தயாராக இருந்த காலகட்டத்தில் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் வடக்கு, கிழக்கு மாகாணத்தை சுதந்திர ஈழம் என்று ஒரு தலைப்பட்சமான பிரகடனத்தை விடுத்தார். அதையடுத்து ஆத்திரமடைந்த ஜனாதிபதி பிரேமதாஸ வடமாகாணசபையை கலைத்து அப்பிரதேசத்தை மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார். அதற்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதை அடுத்து 2008 மே மாதத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது வடமாகாணசபையின் தேர்தல் முடிவுகளின் பெரும்பகுதியை நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்.

(எஸ். தில்லைநாதன்)

https://archive.sooddram.com/Articles/otherbooks/Sep2013/Sep222013_Thillainathan.htm

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply