பொருளாதார நிபுணர்கள் 2022 இல் சிறிலங்கா ஒட்டாண்டி நாடாகப் போய்விடும் என எதிர்வு கூறுகிறார்கள்.

பொருளாதார நிபுணர்கள் 2022 இல் சிறிலங்கா ஒட்டாண்டி நாடாகப் போய்விடும் என எதிர்வு கூறுகிறார்கள்.

 நக்கீரன்

துன்ப துயரங்கள் தனித் தனியாக வருவதில்லை. அது வரிசையாக அணிதிரண்டு வரும். இதனை ஒரு தமிழ்ப் பாடல் மிக அழகாக சித்தரிக்கிறது.

ஆஈன, மழைபொழிய, இல்லம் வீழ,
     அகத்தினள் நோய் தனில் வருந்த, அடிமை சாவ,
மாஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட,
     வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,
சாவோலை கொண்டு ஒருவன் எதிரே செல்ல,
     தள்ள ஒணா விருந்து வர, சர்ப்பம் தீண்ட,
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க,
     பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே
. (விவேக சிந்தாமணி – பாடல் 66)

    ஆ ஈன — தன்னால் வளர்க்கப்படும் பசுவானது கன்றை ஈனும் வேளையில் (அதற்கு மருத்துவம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது)
     அகத்தினள் நோய் தனில் வருந்த — தனது மனைவியானவள் பிரசவ வேதனையில் துன்பப் படவும் (என்ன செய்யலாம் என்று வருந்தும் சமயத்தில்)
     அடிமை சாவ — தனது பணியாளாகிய பெண் ஆனவள் இறந்து போகவும்,
     மா ஈரம் போகும் என்று விதை கொண்டு ஓட — ஈரம் காய்ந்து போகும் என்று எண்ணி (அடிமைப் பெண்ணையும் அடக்கம் செய்யாமல், அப்படியே விட்டு விட்டு)                விதையை எடுத்துக் கொண்டு நிலத்தை நோக்கி விரைந்து ஓடவும்,
     கடன்காரர் மறித்துக் கொள்ள — கடன் கொடுத்தவர்க்கள், பெற்ற கடனைக் கொடுத்துவிட்டுப் போ என்று வழியை மறித்துக் கொள்ளவும்,
    (கடன்கார்ருக்கு ஒரு வழியாகப் பதில் சொல்லி விட்டு, வருகின்ற வேளையில்)
     சாவோலை கொண்டு ஒருவன் எதிரே செல்ல —  உறவினர் இறந்து பட்ட செய்தியைத் தாங்கி ஒருவர் எதிரே வரவும், (அதை அறிந்து மேலே செல்கையில்)
     தள்ள ஒணா விருந்து வர — தவிர்க்க முடியாத விருந்தினர் எதிரே வரவும் ( அவரைத் தனது இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மேலே செல்லும்போது)
     சர்ப்பம் தீண்ட — பாம்பு ஒன்று வந்து தனது காலில் கடிக்கவும், (அதனால் விஷம் ஏறி மயங்குகின்ற நேரத்தில், அவனது துன்ப நிலையை உணராத)
     பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்க — புலவர்கள் வந்து கவிகளைப் பாடி, பரிசுப் பொருள்களைக் கேட்கவும்,
    படும் துயரம் பார்க்க ஒண்ணாதே — இப்படிப் பல துன்பங்கள் நேர்ந்த போதும் ஒன்றும் பரிகாரம் தேட இயலாமல் வருந்துகின்ற நேரத்தில், பாம்பு தீண்டியதாலும்               படுகின்ற துன்பத்தைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லையே.

சிறிலங்கா நாடும் இந்தப் பாவிமகன் படுந்துயரம் போலவே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அயல்நாட்டு செலாவணி பற்றாக்குறை, அயல்நாட்டுக் கடன்களை அடைப்பதில் நெருக்கடி, இறக்குமதி, ஏற்றுமதி பற்றாக்குறை, பணவீக்கம், விலையேற்றம், அரிசி, மா, பால், மருந்து, எரிபொருள், மின்சாரம் போன்ற பல தட்டுப்பாடுகளுக்கு நாடு  முகம் கொடுத்து வருகிறது. அயல்நாட்டு நாணயக் கையிருப்பு  மற்றும்  அயல்நாட்டுக் கடன் சுமைதான் முக்கிய நெருக்கடிகளாகக்  கருதப்படுகிறது.

இலங்கையின் நிதி நெருக்கடிக்கு தலையான காரணம் குறைந்த பொருளாதார வளர்ச்சி விழுக்காடாகும்.   தற்போது  வளர்ச்சி  4% ஆக உள்ளது. 2019 இல் வளர்ச்சி 2.26% ஆக இருந்தது. இது 2020 இல் -3.6% ஆகச் சுருங்கிவிட்டது. 2021 இல் வளர்ச்சி 3.65% எட்டியிருந்தது. 2022 இல் வளர்ச்சி எதிர்பார்ப்பு 3.64% ஆகும்.  இதனால்  ஒட்டுமொத்த பொருளாதாரம் மோசமடைந்து வருகின்றது. சுமார் 500,000 மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளார்கள். உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பலர் உணவு உண்பதைக் குறைத்துவிட்டார்கள்.

இந்த இருண்ட பின்னணியில் சுற்றுலாத்துறையில்  வளர்ச்சி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் தொற்றுக் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட துறை  சுற்றலாத் துறையாகும். கடந்த ஆண்டு 150,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்கள். 2021 டிசெம்பர் மாதத்தில் மட்டும் 89,506 கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தார்கள். இது 2020 டிசெம்பர் மாதத்தைவிட 22,675%  அதிகரிப்பாகும். சனவரி மாதத்தில் முதல் 22 நாட்களில் சிறிலங்காவுக்கு சுமார் 59,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக அமைச்சர் இரணதுங்க தெரிவித்தார். அடுத்த ஐந்து நாட்களுக்கு எதிர்பார்க்கக்கூடிய அதிகபட்ச வருகை 10,000 ஆகும், இது சனவரி மாதத்து மொத்த வருகை 69,000 எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 1,682 சுற்றலாப் பயணிகளே வந்திருந்தார்கள்.  இந்த மாதம் (சனவரி)  பெரும்பாலும் உருசியா, இந்தியா, உக்ரைன், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜெர்மனியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு இறுதியில்  இலங்கையின் அயல்நாட்டு நாணய கையிருப்பு அ.டொலர் 3.1 பில்லியன் ஆகும். அதற்கு முந்திய நொவெம்பர்  மாதம் அ.டொலர் 1.0 பில்லியன் ஆக இருந்தது. இந்த அதிகரிப்புக்கு ஒரு காரணம் சீனாவின் மக்கள் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட அ.டொலர் 1.5 பில்லியன் நாணய பரிமாற்றம் (currency swap) ஆகும்.

இதில் இறையாண்மை முறிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்  அ.டொலர் 500 பில்லியன் ஆகும். இந்தத் தொகை சனவரி 18 இல் செலுத்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டில் அ.டொலர் 4.2 பில்லியன் கடன் பெப்ரவரி – ஒக்தோபர் மாதங்களுக்கு இடையில் செலுத்த வேண்டிவரும்.  இலங்கை  கடன் கட்ட வேண்டிய  நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது.  மொத்தக் கடன் கொடுப்பனவில் சீனாவின் பங்கு 14%  இருக்கிறது. இன்று சிறிலங்காவின் அயல்நாட்டுக்  கடன் அ.டொலர்  48.7 பில்லியனை எட்டியுள்ளது, இது முந்தைய காலாண்டில் அ. டொலர் 50.6 பில்லியனாக இருந்தது. யூன் 2019 இல் இதுவரை இல்லாதளவு கடன்  அ.டொலர் 55.6  பில்லியனை எட்டியிருந்தது. டிசெம்பர் 2012 இல் அ.டொலர் 37.1 பில்லியனை எட்டியிருந்தது.

அயல்நாட்டு நாணய நெருக்கடி 2029 ஆம் ஆண்டுவரை நீடிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசெம்பர் 18 அன்று Fitch  நிதி மதிப்பீடு நிறுவனம்  சிறிலங்காவின் இறையாண்மை மதிப்பீட்டை ‘CCC’ இலிருந்து ‘CC’ ஆகக் குறைத்தது.  2022 ஆம் ஆண்டில் கடன் தவணை செலுத்துவதில் சிறிலங்கா தவறும் அபாயம் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இந்த மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. ஆனால் மத்திய வங்கி சுற்றுலாத் துறையில் வரவேற்கத்தக்க வலுவான மீட்சி மற்றும் ஏற்றுமதியில் வலுவான அதிகரிப்பு நாட்டின் அயல்நாட்டு நாணய கையிருப்பை 2022 ஆம் ஆண்டு முழுதும் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க முடியும் என்று அரசாங்கமும் மத்திய வங்கியும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

கடந்த தசாப்தத்தில் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக அ.டொலர் 5 பில்லியன்களுக்கு மேல் கடனாக வழங்கிய சீனா சிறிலங்காவின்  மிகப்பெரிய நிதிக்கொடுப்பாளராக இருந்து வருகிறது. சீனாவின் நிதியுதவியில் அம்பாந்தோட்டையில் துறைமுகம், சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானம், அனைத்துலக விமான நிலையம் போன்றவை 2010க்குப் பின்னர்  கட்டப்பட்டன.

(1) அம்பாந்தோட்டையில் மகம்புர மகிந்த இராசபக்ச துறைமுகம் அ.டொலர் 1.3 பில்லியன் செலவில் சீன நிறுவனத்தால் கட்டப்பட்டது. அதில் இருந்து கடன் வட்டி கட்டவே வருவாய் இல்லாத நிலையில் சிறிலங்கா அரசு அந்தக் கடனுக்கு ஈடாக 2017 ஆம் ஆண்டு 80%  பங்கை  99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எழுதிக் கொடுத்து விட்டது. அது மட்டுமல்ல துறைமுகத்தை அண்டிய 15,000 ஏக்கர் நிலத்தையும் பொருளாதார மையம் ஒன்றை உருவாக்க 99 ஆண்டு குத்தகைக்கு கொடுக்கப்பட்டு விட்டது.

(2) 2013 இல் மத்தள இராசபக்ச பன்னாட்டு விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.  2013 இல் திறக்கப்பட்ட இந்த விமான நிலையத்துக்கு  செலவான   தொகை அ.டொலர் 210 மில்லியன் (ரூபா42,000 மில்லியன்) ஆகும்.  இன்று அந்த விமான நிலையத்தில் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா  அயல்நாட்டு விமானங்கள் தரையிறங்குகிறது.

(3) கொழும்புக்குப் பதில் அம்பாந்தோட்டைக்கு வியாபாரத்தை மடைமாற்ற  52  மில்லியன் அமெரிக்க டொலரில் (ரூபா10,400 மில்லியன்) கட்டிய நவீன 6 ஒழுங்கை நெடுஞ்சாலையும் அதிகம் பயன்படுத்தப் படாது கிடக்கிறது.

(4) 2011 இல் 47 ஏக்கர் காணியில்  32,000 பேர் உட்காரக்கூடிய  சூரியவேவா விளையாட்டு அரங்கு அ.டொலர் 35 மில்லியன் (ரூபா 7,000)  செலவில்  கட்டப்பட்டது. அந்த விளையாட்டு அரங்கில் இதுவரை 15 கிறிக்கட் போட்டிகளே நடைபெற்றுள்ளன.

(5) 2013 இல் நடந்த பொதுநல நாடுகளது உச்சி மாநாட்டின் போது பயன்படுத்தப்படுவதற்கு  பெரிய மாநாட்டு அரங்கம் கட்ட 15.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவழிக்கப்பட்டது. இன்று  அதனை யாரும் பயன்படுத்துவதில்லை.

(6)  300 ஏக்கர் காணியில் ஒரு  தாவரயியல் தோட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த தோட்டத்துக்கு   தொன் கணக்கில் தண்ணீர் தேவைப்படுகிறது. அதே சமயம் ஊர் மக்கள் குடிக்கிறதுக்குத்  தண்ணீர் இல்லாமல் அல்லாடுகிறார்கள்.

கடன் வாங்கிக் கட்டப்பட்ட இதுபோன்ற வெள்ளை யானைகளே நாட்டை  இன்று ஒட்டாண்டி நிலைக்குத் தள்ளியுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் சிறிலங்காவின் நிதி அமைச்சர் பசில் இராசபக்ச  அரசு பொதுத்துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாதாந்தம் ரூபா 5,000  உயர்த்தியும் சமுர்த்தி பயனாளிகளுக்கு ரூபா1,000 உயர்த்தியும் வழங்கப்படும் என்று   அறிவித்துள்ளார். மேலும் போரில் ஊனமடைந்த இராணுவ வீரர்களுக்கு ரூபா.5000 உயர்த்தப்படும். விவசாயிகளின் பெரும்போக விளைச்சல் வீழ்ச்சி கண்டுள்ளதால் அவர்களுக்கு இழப்பீடாக ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 25 – ரூபா 50 வரை  கூடுதலாக வழங்கப்படும். வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கு முகமாக ரூபா 10,000 – ரூபா 20,000 கொடுக்கப்படும்.  மேலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 கிலோ கோதுமை மா கிலோ ரூ.80 க்கு வழங்கப்படும் அதேவேளை மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

இந்தக் கொடுப்பனவுக்கு ரூபா  229 பில்லியன் தேவைப்படும் என்றும் அது வரவு செலவுத் திட்டத்துக்குள்  உள்ளடக்கப்படும் என்றும் வரிகள் உயர்த்தப்பட மாட்டாது என்றும் அமைச்சர் கூறினார். பொது ஊழியர்கள் ரூபா 18,000 சம்பள உயர்வு  கேட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இதற்கெல்லாம் பணம் எங்கே இருக்கிறது?  கோட்டாபய இராசபக்ச அரசு அரசாங்க  அச்சகத்தில் நாணயத் தாள்களை அடிக்கும் தொழிலில் இறங்கியிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 இல் மத்திய வங்கியால் அச்சிடப்பட்ட பணத்தின் அளவு ரூபா 146 பில்லியன் ஆகும்.   அதாவது, நாளொன்றுக்கு 6 பில்லியன் ரூபா என்ற வகையில், 25 நாட்களுக்கு 146 பில்லியன் பணத்தை அச்சிட்டுள்ளது. மொத்தம் ஒரு பில்லியன் (ஆயிரம் கோடி) பெறுமதியான நாணயத்தாள் அச்சிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சி யடைந்ததில்லை என்று கூறப்படுகிறது.  

தற்போதைய அரசாங்கம் 2020  சனவரியில் ஆட்சியமைத்த போது, அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி ரூபா 181.40 ஆக இருந்தது. ஆனால், இன்று  அதன் பெறுமதி ரூபா 201.78  ஆக உயர்ந்துள்ளது. கருப்புச் சந்தையில் ஒரு அ.டொலர் ரூபா 250.00  விற்பனையாகிறது. இதே கால கட்டத்தில் ஒரு கனடிய டொலரின் பெறுமதி ரூபா  138.12 இல் இருந்து  ரூபா 158.89 ஆக அதிகரித்துள்ளது. கருப்புச் சந்தையில் ரூபா 202.00 ஆக உயர்ந்துள்ளது!

நாணயத்தாளை கண்டபடி அச்சடிப்பதால் பணவீக்கம் 14.4% ஆக எகிறிவிட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மா, எண்ணெய், பால்மா, சமயல்எரிபொருள், பயணக் கட்டணம் அதிகரித்துவிட்டன. நடப்பு ஆண்டில் அரிசி விலை கிலோ ரூபா 200 யைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை சீனா 10 இலட்சம் மீட்றிக் தொன் அரிசியை இனாமாகக் கொடுக்க முன்வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

, ’இலங்கை பொருள்கள் விலை அரிசி1kg சாதாரண =170.00 அரிசி1kg நல்லது =250.00 மைதா மா 1kg =150.00 நல்லெண்ணெய் 1lettr =1200.00 சீனி kg=250.00 பெருங்காயம் =10000.00 மஞ்சள் g=8000.00 பூடு 1kg=500 காய்ந்த மிளகாய் =950.00 பொட்டு கடலை =700.00 வேர்க்கடலை பருப்பு =1000 மாதுளை ஒன்று =350.00 ஆப்பிள் (முட்டை அளவு) -60.00 ஆரஞ்சு பழம் ஒன்று =90.00 வடை ஒன்று 60முதல் =70.00 டீ ஒன்று 60 முதல் =75.00 தக்காளி 1kg 400முதல் =600.00 புளி 1kg=1200.00 சின்ன வெங்காயம் 1kg 600முதல் =800.00 பெரிய வெங்காயம்1 300முதல் =400.00 கடலை 1kg=600.00’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

சிறிலங்காவில் மாறி மாறி ஆட்சிக் கட்டில் ஏறியவர்கள்  நாட்டைக் குட்டிச் சுவராக்கிப் போட்டார்கள். எல்லா மட்டத்திலும் ஊழல் மலிந்துவிட்டது. சிறிலங்கா 180 நாடுகளில் 102 ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு 94 ஆவது இடத்தில் இருந்தது. மொத்தம் 2.3 கோடி மக்கள் வாழும் நாட்டில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 27 அமைச்சர்கள், 38 அரசாங்க அமைச்சர்கள் இருக்கிறார்கள். பொது சேவையில் 1.1 மில்லியன்  ஊழியர்கள் இருக்கிறார்கள். இராணுவத்தில் மட்டும் 250,000 வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுபனவு ரூபா 400,000 மில்லியன் ஆகும்.

பொருளாதார நிபுணர்கள் 2022 இல் சிறிலங்கா ஒட்டாண்டி நாடாகப் போய்விடும் என எதிர்வு கூறுகிறார்கள். (கனடா உதயன் 28-01-2022)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply