சமண – புத்த மதங்களை அழித்தது யார்?
சைவத்தின் மதமாற்ற வன்முறைக்கான வரலாற்றுச் சான்றுகள்
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மதமாற்றங்கள் செய்து வருகின்றன என்று உயர்நீதிமன்ற14 நீதிபதி வைத்தியநாதன் ஒரு தீர்ப்பில் கூற கடும் எதிர்ப்பு வந்தவுடன் அப்பகுதியை திரும்பப் பெற்றுக் கெண்டார். உண்மையில் தமிழ்நாட்டில் சமண – பவுத்த மடங்களை அழித்து சைவமாக்கியதோடு அதற்காக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதும், சைவர்கள்தான் என்பது வரலாறு. அதற்கான வரலாற்றுச் சான்றுகளை முன் வைக்கிறது இக்கட்டுரை.
கி.பி. அய்ந்து, ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும், பவுத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ, வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில் பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண, பவுத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் ‘பக்தி’ இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பவுத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.
‘சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
– மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் 68.
‘வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!’
– தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.
ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பவுத்தர்களைக் குறிக்கும்.
திருநாவுக்கரசர்
தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப் பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் ‘லோகவிபாகம்’ என்னும் நூலை எழுதினார். கி.பி. 458இல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்தபோது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் ‘லோகவிபாகம்’ பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் ‘தருமசேனர்’ என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்தபோது தான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.
– மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன், சென்னை, பக். 37-29
– Mysore Archaeological Report, 1909-10, Page 112
சமண மதம் துடைக்கப்படுதல்
சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.
பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் ‘குணதரஈச்சரம்’ என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
– South Arcot District, Gazetter, Page 369.
பெரிய புராணம் தரும் செய்தி
வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட
இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
– தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத்தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை – திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.
திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!
‘மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஒரு பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.’
– கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற் சுருக்கம், பக்கம் 84.
கழுவிலேறிய சமணர்கள்!
‘பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.’
– சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை 1925, பக் 18
‘அரசர் குலச்சிறையாரை நோக்கி, ‘சமணர்களைக் கழுவிலே ஏற்றுக’ என்று ஆஞ்ஞாபித்தார்….. திடபக்தியுடைய அமைச்சர் குலச் சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டுவித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.’
– ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத்தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, பக். 18
‘அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.’
– க. வெள்ளைவாரணன், பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1972, பக். 144
(கழுவில் ஏற்றப்பட்டனர் என்பதே உண்மை)
சமணர்கள் அனுபவித்த கொடுமை!
‘மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’
– அ. பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, பக். 28
‘கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப் பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.’
‘விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.’
– பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை, 1925, பக். 494.
நாய், நரி தின்ற சமணர் உடல்கள்!
விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன்பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?
‘கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.’
‘மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.’
– பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1937, பக். 1195.
‘கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து போயின.’
– பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய ‘திருஞான சம்பந்தர் காலம்’ என்ற ஆங்கில நூல்.
‘திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப்பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவுபடுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச் சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.’
– மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் 68.
திருமங்கையாழ்வார்
தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பவுத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.
– மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் 277.
கி.பி. எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார். இவர் நாகப்பட்டினத்துப் பவுத்த விகாரத்தில் இருந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து, அதைக் கொண்டு பல கோவில் திருப்பணிகள் செய்தார். பவுத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.
– மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன், சென்னை, பக்கம் 52.
– மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் 277.
‘திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கோவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.’
– நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் 26.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திருமூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப்பட்டது.
– புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் 199.
‘நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.’
‘கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.’
– எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51, 52
செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய் விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
– மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் 74.
திருவாரூர் திருக்குளம்
தமிழ்நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது மான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது ‘தண்டியடிகள்’ என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தோண்டினான்.
‘பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து’
– திருத்தொண்டர் புராணம், தண்டியடிகள், பக். 69
கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென்கரைத் திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கோவிலைக் குறிப்பிடுகிறது. திருக்கோவலூரில் இருந்த ‘மிலாட்’ அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப்பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப்பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
– சமணமும் தமிழும், பக்கம் 139.
நன்னிலம் இரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர் (மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரது பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச் சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
– சமணமும் தமிழும், பக்கம் 140.
அய்யகோ கிறித்தவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று மாரடித்து ஒப்பாரி வைக்கும் பி.ஜே.பி. சங் பரிவார்கள் கூட்டம் சமணர்களைக் கொன்றொழித்த கொடுமைக்கு என்ன பதில்? திருநீறு பூசச் செய்து உயிர்ப் பிச்சை செய்த அச்சுறுத்தலை எந்தப் பட்டியலில் சேர்ப்பது! சமணர்களைக் கழுவேற்றும் காட்சிகள் செய்யாறு கோயிலுக்குச் சென்றால் சிற்பங்களாக இன்றும் பார்க்கலாமே!
மேலே எடுத்துக் காட்டப்பட்டவை எல்லாம் ஆதாரப் பலங்களைக் கொண்டது என்பதை மறக்க வேண்டாம்.
(நன்றி : விடுதலை ஞாயிறு மலர்)
https://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-aug19/38085-2019-09-19-05-10-30
Leave a Reply
You must be logged in to post a comment.