பதினொரு உயிர்களைப் பலிகொள்வதற்கு உடந்தையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இந்திரப் பதவி!
நக்கீரன்
பதினொரு உயிர்களைப் பலிகொள்வதற்கு உடந்தையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள் நடுத்தெருவில் விடப்படுள்ளார்கள்.
கொழும்பில் பணத்துக்காக வெள்ளைவானில் கடத்திச் சென்று 11 இளைஞர்களைக் (பெரும்பாலோர் தமிழ் மாணவர்கள்) கொல்லப்படுவதற்கு துணை போனார் எனக் குற்றம் சாட்டப்பட்ட வசந்த கரண்ணாகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது “சாதனையைப்” பாராட்டி பதவி கொடுத்தவர் போர்க்குற்றம் சாட்டப்பட்ட அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் இன்றைய சனாதிபதியும் ஆன கோட்டாபய இராசபக்சா! சனாதிபுதி அலுவலகத்தில் வைத்து இன்று பதவிப்பிரமாணம் செய்யப்பட்டது.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணகொட மீது, இறுதி யுத்தம் நடந்த 2008 – 2009 காலத்தில், கொழும்பில் செல்வந்த குடும்பங்களை சேர்ந்த 11 மாணவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டார்கள். கடத்தியவர்கள் வேறு யாருமில்லை, கடற்படைத் தளபதி கரண்ணாகொடவின் கீழ் பணியில் இருந்த மாலுமிகள். கடத்தப்பட்ட இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றால் கப்பம் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.
இந்த இளைஞர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் திருகோணமலை மற்றும் கொழும்பு கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்கள்.
சில பெற்றோர்கள் கப்பம் கொடுத்தார்கள். ஆனால் கப்பத்தை வாங்கிய பின்னரும் மாணவர்கள் ஈவு, இரக்கமின்றிக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது உடல்கள் கூடக் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக சுசில் கிந்தல்பிட்டிய என்பவர் கடத்திச் செல்லப்பட்ட 11 பேரின் பட்டியல் ஒன்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கையளித்திருந்தார்.
கஸ்தூரியாராச்சி ஜோன், தியாகராஜா ஜெகன், ராஜீவ் நாகநாதன், சூசைப்பிள்ளை அமலன், சூசைப்பிள்ளை ரோஷன், கஸ்தூரியாராச்சி அன்டன், பிரகீத் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹமட் திலான், மொஹமட் சாஜித் மற்றும் அலி அன்வர் ஆகியோர்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், வெள்ளை வான் கலாசாரத்தின் மூலகர்த்தா முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்ச எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணகொட 2019 ஆம் ஆண்டில் சட்டபூர்வமாக 14 ஆவது சந்தேக நபராக வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். கொலைகள் பற்றித் தெரிந்திருந்தும் நீதியைத் தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
கடற்படைத் தளபதி கரண்ணகொட மீது சாட்டப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.
நாட்டின் 37 ஆண்டு உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்துக் கவனத்தை ஈர்த்த வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்தக் கொலைகள் தொடர்பாக அப்போது கடற்படையின் முன்னாள் பேச்சாளர் மற்றும் மூன்று கடற்படை அதிகாரிகள் உட்பட பல கடற்படை மாலுமிகள் கைது செய்யப்பட்டனர்.
2017 இல் சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் இரவீந்திர விஜேகுணரத்ன, பிரதான சந்தேகநபரான லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என அழைக்கப்படும் ‘நேவி சம்பத்’ என்பவரை கைது செய்யாமல் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
2019 இல் கோட்டபாய இராசபக்சா சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிசேனா இரணில் ஆட்சியில் கொலை, வெள்ளைவான் கடத்தல், ஆயுத விற்பனை போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன.
2019 ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்ட கரண்ணகொடவுக்கு எதிராக அரசாங்கம் குற்றச்சாட்டைத் தொடராது என சட்டமா அதிபர் சஞ்சய் இராசரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.
சர்வதேச கண்டனத்தை பெற்ற 11 கொலைகளுடன் தொடர்புடைய முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான கொலைச் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை இலங்கை அதிகாரிகள் கைவிட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
கடந்த சிறிசேனா – இரணில் ஆட்சியில் கொலைக் குற்றம் உட்பட பல குற்றங்கள் சாட்டப்பட்டவர்கள் கோட்டாபய இராசபக்ச ஆட்யியில் விடுவிக்கப்படுகிறார்கள்.
சட்டமா திணைக்களத்தின் சட்டமா அதிபர்பதவிகளை வகிப்பவர்கள் நாட்டின் சனாதிபதிகளின் தாளத்துக்கு ஏற்ப – அவர்களின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப – ஆடுகிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம் ஆகியவை சனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு தூணும் அதன் எல்லைக்குள் செயல்பட வேண்டும். ஒன்றுக்கொன்று சார்பாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் சிறிலங்காவில் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறை துருப்பிடித்துப் போய்விட்டது.
சட்ட திருத்தம் 20 நாட்டின் சனாதிபதி கோட்டாபய அவர்களை ஒரு சர்வாதிகாரியாக்கிவிட்டது. அதனால் சனாதிபதி முழு அரச இயந்திரத்தையும் தனக்கு வசதியாக வளைக்கிறார் என்பது தெரிகிறது.
நொவெம்பர் 2019 இல் கோட்டபாய இராசபக்சா சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் சிறிசேனா இரணில் ஆட்சியில் கொலை, வெள்ளைவான் கடத்தல், ஆயுத விற்பனை போன்ற குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
(1) மிருசுவில் கிராமத்தில் 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் டிசெம்பர் 2000 இல் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த வழக்கில் இராணுவ அதிகாரி சுனில் இரத்னாயக்கவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சனாதிபதி கோடாபய இராஜபக்சா மார்ச் 26, 2020 அன்று நீதிமன்றத்தால் கொலைகாரன் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். நீதிமன்றத்தால் கொலைகாரன் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை, சனாதிபதி மன்னித்து விடுதலை செய்தமை தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு உணர்வலைகளை ஏற்படுத்தியது. நீதித் துறைக்கே பெரிய அவமானம் என மனித உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
(2) 2011ஆம் ஆண்டு அரசியல் எதிரியான பாரத இலக்ஷ்மன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மூவரைக் கொன்ற குற்றத்திற்காக 2016 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சனாதிபதி கோட்டாபயவின் அரசியல் கூட்டாளியும் முன்னாள் நா. உறுப்பினருமான துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அவருக்கு அரசாங்கத்தில் பதவியும் வழங்கப்பட்டது. மனித உரிமைகள் சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் பிபிசி க்கு அளித்த நேர்காணலில் துமிந்த சில்வாவின் மன்னிப்பில் சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் சட்ட நடைமுறைகள் இல்லை என்று கூறினார்.
இலக்ஷ்மனின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தந்தைக்கு நீதி கிடைப்பதற்குக் கடினமாகச் சட்டப் போராட்டம் நடத்தினார். அதில் அவர் வெற்றிபெற முடியவில்லை.
இன்று சிறிலங்கா தனது 73 ஆண்டுகால வரலாற்றில் சந்தித்திராத கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. வெளிநாட்டுக் கடன் பளு, சுற்றுலாத் துறையில் வீழ்ச்சி, அந்நிய நாணயப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, பண வீக்கம், அவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியன நாட்டை வங்குறோத்து நிலைக்குத் தள்ளிவருகிறது.
2014 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வெளிநாட்டுக் கடன் பளு அதிகரித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.9% ஐ எட்டியது. COVID-19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட உலகளாவிய மந்தநிலை நெருக்கடியை அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101% ஆக உயர்ந்து பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 இல் -3.5 விழுக்காடாக வீழ்ச்சி கண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக் கடைசியில் வெளிநாட்டு நாணய இருப்பு அ.டொலர் 7.6 பில்லியனாக இருந்தது. இப்போது அது அ.டெலர் 1.2 பில்லியனாகச் (நொவெம்பர்) சரிந்துள்ளது. ஒரு நாட்டின் அந்நிய நாணய இருப்புக் குறைந்தது 3 மாத இறக்குமதிக்கு ஈடாக இருக்க வேண்டும்.
அந்நிய நாணய இருப்புப் பற்றாக்குறை காரணமாக ரூபாயின் பெறுமதி ஒரு கனடிய டொலருக்கு ரூபா 158 ஆகக் குறைந்துவிட்டது. அதே சமயம் கருப்புச் சந்தையில் அதன் பெறுமதி ரூபா 188 ஆக காணப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவின் மொத்தக் கடன் தொகை அ.டொலர் 35.1 பில்லியன் ஆகும். வெளிநாட்டுக் கடனில் எதிர்வரும் சனவரி மாதம் அ.டொலர் 500 மில்லியனும் யூன் மாதம் அ.டொலர் ஒரு பில்லியனும் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் 2002 இல் அ.டொலர் 4.5 பில்லியன் பெறுமதியான இறையாண்மை பிணைமுறிவுகளை மீட்கவேண்டும்.
அண்மையில் நிதி அமைச்சர் பசில் இந்தியாவிடம் கடன் வாங்க பிச்சா பாத்திரத்தோடு போயிருந்தார். இந்தியா அ.டொலர் ஒரு பில்லியனை கடனாகவும், இந்திய மத்திய வங்கி அ.டொலர் 400 மில்லியன் SWAP வசதி மற்றும் ஒருங்கிணைந்த கடன் வசதியிலிருந்து $300 மில்லியன் ஆகியவை கொடுப்பதற்கு இணங்கியுள்ளது. மேலும் கத்தார் நாட்டு மத்திய வங்கியிடம் $1 பில்லியன் SWAP ஆக பெறவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
சிறிலங்கா எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டிய சனாதிபதி கோட்டாபய இராசபக்ச உரோம் எரியும் போது வீணை வாசித்த நீரோ போல 11 இளைஞர்களின் கொலைக்குத் துணையாக இருந்த வசந்த கரண்ணகொட மீதான வழக்கைத் திருப்பிப் பெற்றது மட்டும் அல்லாமல் அவரை வடமேல் மாகாண ஆளுநராக நியமித்து அழகு பார்க்கிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.