ஆண்டுகள் 20 ஆனாலும் தத்தளிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு – ஒரு எதிர்வினை
நக்கீரன்
உதயன் வார ஏட்டில் மூத்த “ஆண்டுகள் 20 ஆனாலும் தத்தளிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு” என்ற தலைப்பில் சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் – லண்டன் எழுதிய நான்கு பகுதி கொண்ட (29-10-2021 தொடக்கம் 19-11-2021) ஒரு தொடர் கட்டுரை வெளிவந்தது.
இந்தத் தொடரை எழுத்துக் கூட்டிப் படித்துவிட்டுத்தான் எதிர்வினை செய்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கத்தக்கன. குறிப்பாக ஆக்க பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் தொடரை விமரிசனம் என்பதை விட ஒரு வரலாற்றுப் பதிவாகவும் எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் காட்டாக ததேகூ வி. புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு பிழையான கருத்து பலரிடம் இன்றும் உண்டு.
இந்தக் கட்ரையாளர் கூட “இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அக்டோபர் 2001 இல் நான்கு தமிழ்க் கட்சிகள், விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் – ஒரு கிச்சடி கூட்டணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதில் அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியோருடன் ஆயுதக் குழுவாக இருந்து அரசியல் கட்சியாக உருமாறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ பி ஆர் எல் எஃப்) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவை இணைந்தன” என எழுதியிருக்கிறார். வரலாறு அப்படியல்ல.
வி.புலிகளுக்கும் ததேகூ இன் தொடக்கத்துக்கும் தொடர்பே இல்லை. அது மட்டுமல்ல அதன் உருவாக்கம் நான்கு கட்சித் தலைவர்களாலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தொடக்கப்பட்டது.
ததேகூ 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதி (சனிக்கிழமை) தொழிலதிபர் வடிவேற்கரசனின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் ஒப்பந்தம் (https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1547) கைச்சாத்தானது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சம்பந்தன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் குமரகுருபரன், ஈபிஆர்எல்எப் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் சிறிகாந்தா ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். எனினும் புலிகளின் தலைப்பீடம் அது பற்றிவாயே திறக்கவில்லை. இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹொலிடேயின் ஹோட்டலில் வெளியிடப்பட்டது. மேற்படி நான்கு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டுமென்பதே முக்கிய அம்சமாகக் காணப்பட்டது.
இது தொடர்பான ஊடக அறிக்கை 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 22 ஆம் திகதி வெளிவந்தது.
2001 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட ததேகூ ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். தேர்தலில் ததேகூ பெற்ற வாக்குகள் 348,164 (3.89) ஆகும்.
முதல் தடவையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பீடத்தை சந்திப்பதற்காக ததேகூபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2002 ஏப்ரல் 11ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சென்றடைந்தனர். மறுநாள் வெள்ளிக்கிழமையே சந்திப்பு என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
2002 ஏப்ரல் வெள்ளிக்கிழமை மாலை கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப் புலிகளின் சார்பில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டுஅம்மான், மட்டக்களப்பு அம்பாறை இராணுவ பொறுப்பாளர் கருணா, மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலன், திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், வி.ஆனந்தசங்கரி, ஜோசப் பரராசசிங்கம், மாவை சேனாதிராசா, என். இரவிராஜ், அ. சந்திரநேரு, அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், இராஜ குகனேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்து கொண்டார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாம் பிரவேசித்திருப்பது பற்றியும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது, மற்றும் முன்மொழியப்பட்ட இடைக்கால நிர்வாகம் மற்றும் அதன் இறுதி வடிவம் பற்றியும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு விளக்கிக் கூறினார்.
தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுபட்ட வேலைத்திட்டத்தின் கீழ் செயல்படுவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வடக்குக் கிழக்கில் முஸ்லீம்களையும் இணைத்துக்கொண்டு தீர்வு திட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
2004 இல் நடந்த தேர்தலில் வி.புலிகள் தாங்கள் தெரிவு செய்த சிலரை வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வைத்தார்கள். இதிலிருந்து மே 18, 2009 வரை ததேகூ வி.புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. “நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்” என வி.புலிகளால் அறிவுறுத்தப்பட்டது.
பிழை கண்டு பிடிப்பது எனது நோக்கமல்ல. வரலாற்றை காய்தல், உவத்தல் இன்றி பதிவு செய்யப்பட வேண்டும். வரலாற்றைத் திரிப்பது வருங்காலச் சந்ததிகளுக்கு செய்யும் இரண்டகமாகும். சிறு சிறு தவறுகளை விடுத்து கட்டுரையாளரின் மையக் கருத்துக்கள் பற்றி எனது எதிர்வினையை வைக்கலாம் என நினைக்கிறேன். கட்டுரையாளர் பின்வருமாறு எழுதுகிறார்-
“இதில் இரண்டு சனாதிபதி தேர்தல்களில் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. முதலாவது போர் முடிந்த பிறகு நடைபெற்ற சனாதிபதி தேர்தலில், மஹிந்த இராசபக்சவை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே இராணுவத்தின் முன்னாள் தளபதியான சரத்பொன்சேகாவை ஆதரித்தது. போர் முடிந்தவுடன் எழுந்து இன்னும் ஓயாத போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விடயத்தில் முன்னாள் மற்றும் இந்நாள் சனாதிபதிகளான மஹிந்த இராசபக்ச மற்றும் கோத்தாபய இராசபக்ச மீது எந்தளவுக்கு அந்த குற்றச்சாட்டு உள்ளதோ அதே அளவுக்கான குற்றச்சாட்டு இறுதிப் போருக்குத் தலைமையேற்று ‘விடுதலைப் புலிகளை அழித்தே தீருவேன்” என்று சூளுரைத்து அதை நிறைவேற்றிய சரத் பொன்சேகா மீதும் அந்த குற்றச்சாட்டு உண்டு.
அவரைக் கூட்டமைப்பு ஆதரிக்கப் போவதாகப் பேச்சுக்கள் எழுந்த போதே நான் கூட்டமைப்பில் இருந்த பலருடன் தொடர்பு கொண்ட போது யாரும் அந்த நிலைப்பாட்டிற்கான காரணத்தை நியாயப்படுத்தும் வகையில் கூறவில்லை. பொதுவாக அப்போது பேச்சாளராக இருந்து ஊடகங்களிடம் குறிப்பாக பிபிசி தமிழோசையிடம் பேசும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட இப்படி – அப்படி ஒரு பதிலையே கூறினார். ‘எம்மால் மஹிந்த இராசபக்சவை ஆதரிக்க முடியாது – அதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று சம்பந்தர் எனக்களித்த பேட்டியில் கூறினார். ஆனால் மஹிந்தவை ஆதரிக்க முடியாது அதனால் பொன்சேகாவை ஆதரிக்கிறோம் என்கிற நிலைப்பாடு ஏன் என்பதற்கான பதில் வழக்கம் போல ‘நன்றி…….வணக்கம்” என்பதே. அத்தேர்தலில் மஹிந்த இராசபக்ச வென்றார், கூட்டமைப்பு அரசியல் ரீதியாகத் தோல்வியடைந்தது.
சரி, அந்த தேர்தலில் ‘காலத்தின் கட்டாயம்” காரணமாக சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய நிலைப்பாட்டை எடுத்த கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் அதே பிழையை மீண்டும் செய்தது. 2015 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே மஹிந்த எதிர்ப்பு நிலைப்பாடு என்று கூறி அவருடன் முதல்நாள் வரை இருந்த மைத்ரிபால சிறிசேனாவை ஆதரித்தது. அதுவும் போரின் இறுதி நாட்களில் மஹிந்த இராசபக்ச ஜோர்டான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனாவே இராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.
அதாவது குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16, 17 ஆகிய நாட்களில் சிறிசேனாவே இராணுவ அமைச்சிற்கு தலைமை யேற்றிருந்தார். நாட்டில் நல்லாட்சிக்கான ஒரு வாய்ப்பு, நாங்கள் மைத்ரி – ரணில் கூட்டணியை நம்புகிறோம், அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை அளிப்பார்கள், போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் என்றெல்லாம் கூறி அந்த கூட்டணியை ஆதரித்ததை நியாயப்படுத்தினார்கள். இத்தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வென்றார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற கூட்டணியில் இருந்தும் தோல்வியடைந்தது.”
ததேகூ 2010 இல் நடந்த சனாதிபதி தேர்திலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தது ஏன்? 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் மயித்திரிபால சிறிசேனாவை ஆதரித்தது ஏன்? என்ற கேள்விகளுக்கு அவ்வப்போது விலாவாரியாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதரித்ததற்கான காரண காரியத்தை எமது மக்கள் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ததேகூ சரத் பொன்சேகா மற்றும் மயித்திரிபால சிறிசேனா இருவரையும் ததேகூ ஆதரிக்கச் சொல்லாவிட்டாலும் தமிழ்மக்கள் அவர்களுக்கே வாக்களித்திருப்பார்கள். 2015 சனாதிபதி தேர்தலில் அதுதான் நடந்தது.
ஆங்கிலத்தில் இளவரசர் ஒட்ரோ வொன் பிஸ்மார்க் (Prince Otto von Bismarck) சொன்ன ஒரு பொன்மொழி உண்டு. அதுதான் அரசியல் என்பது சாத்தியமான கலை (Politics is the art of the possible) என்பது. ‘சாத்தியமான கலை’ என்பது வரலாற்று ரீதியாக உண்மையான அரசியலுடன் தொடர்புடைய ஒரு சொற்றொடர். இது ‘நாம் விரும்புவதை (பெரும்பாலும் சாத்தியமற்றது) விட, நம்மால் முடிந்ததை (சாத்தியமான) அடைவது’ என்று பொருள்படும். இந்த தந்திரோபத்தையே ததேகூ அரசியலில் கடைப்பிடிக்கிறது.
மேலும் மேலும் தனக்குத் துணை இல்லை; பகைவர்களோ இருவர்; தானோ ஒருவன்; இந்நிலையில்அவர்களுள் ஒருவரைத் தனது இனிய துணையாக ஆக்கிக் கொள்ளல் வேண்டும்.
தனக்கு உதவிசெய்ய துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்.
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்க அவற்றின் ஒன்று. (குறள் 875 அதிகாரம் 88 – பகைத்திறன் அறிதல்)
இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து இதே தந்திரோபயத்தை தனது பொதுவுடமைக் கட்சி உறுப்பினர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.
ததேகூ இன் நிலைப்பாட்டை தமிழ்மக்கள் ஏற்று வாக்களித்தார்கள் என்பதுதான் வரலாறு. தேர்தல் முடிவுகள் அதைத் துலாம்பரமாகச் சொல்லியது. அடுத்த வாரம் அந்தப் புள்ளி விபரங்களைப் பார்ப்போம். (தொடரும்)
Leave a Reply
You must be logged in to post a comment.