இணைப்பாட்சிக்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும் கனடா! நக்கீரன்

இணைப்பாட்சிக்கு  நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும் கனடா!
 நக்கீரன்

 இன்று ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 192 நாடுகள்  உறுப்புரிமை  வகிக்கின்றன. நடப்பு ஆண்டில் இரண்டு நாடுகள் ஐ.நா.சயில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஒன்று கிழக்கு திமோர். மற்றது சுவிஸ்லாந்து. சுவிஸ் நாடு கடந்த செப்தெம்பர் மாதம் 10ஆம் நாள் தான் உறுப்புரிமை பெற்றது. இது பலருக்கு வியப்பாக இருக்கலாம்.

 உலக நாடுகளின் அரசியல் யாப்புக்கள் ஒன்றுக்கு ஒன்று வித்தியாச மானவை. எந்த இரண்டு நாடுகளது யாப்பாவாது ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்க்கவே முடியாது. நாட்டுக்கு நாடு வரலாறு, புவியியல் காரணமாக அரசியல் அமைப்புக்கள் வித்தியாசப்படுகின்றன.

 உலக நாடுகளின் அரசியல் யாப்புக்களை அவற்றின் குணாம்சங்கனின் அடிப்படையில் மூன்று  பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம்.
 ஒற்றையாட்சி (Unitary), இணைப்பாட்சி (Federal), கூட்டு இணைப்பாட்சி (Confederal) என்பனவே அந்த முப்பிரிவுகளாகும்.

 ஒற்றையாட்சி என்றால் அதன் தன்மை என்ன என்பது எங்களுக்கு தெரியும். ”ஸ்ரீலங்கா குடியரசு ஒற்றையாட்சி அரசு ஆகும்”  (The Republic of Sri Lanka is a Unitary State )  என இப்போதுள்ள ஸ்ரீலங்கா அரசியல் யாப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 எல்லா அரச யாப்புக்களிலும் அதிகாரப் பரவலாக்கல் கட்டாயம் இடம் பெற்றே ஆக வேண்டும். அது செயல் (functional) அடிப்படையில்  இருக்கலாம். அல்லது பிரதேச அடிப்படையில் (Territorial ) இருக்கலாம். மைய அரசு நாட்டின் அனைத்து விடயங்களையும் கவனிக்க முடியாது. எவ்வளவு தூரம் அதிகாரம் மைய அரசால் மாநில அரசுக்கு பரவலாக்கப் படுத்தப்படுகிறதோ (devolution) அல்லது பாரப்படுத்தப் படுகிறதோ அதைப் பொறுத்தே  ஒரு யாப்பு  ஒற்றையாட்சியா? இணைப்பாட்சியா? அல்லது கூட்டு இணைப்பாட்சியா? என்பதைச் சொல்ல முடியும்.

 நூற்றுக்கும் அதிகமான நாடுகள் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கின்றன. கொள்கையளவில் மைய அரசால் மாநில அரசுக்கு வழங்கப்படும் அதிகாரம் எந்த நேரமும் இரத்துச் செய்யப்படலாம். அல்லது திருத்தப்படலாம். பல ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் அமைப்பு ஒற்றையாட்சியாகும். ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் பரவலாக்கப்படலாம்.  ஆனால் இறைமை பகிரப்பட மாட்டாது.

 இணைப்பாட்சி அரசியல் அமைப்பில் ஒரு மைய அரசும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநில அரசுகளும் இருக்கும். இணைப்பாட்சி அரசியலின்  முக்கிய இலக்கு வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) காண்பது. பெரும்பாலும் அந்த வேற்றுமை மொழி, பண்பாடு, புவியியல் போன்றவற்றை  அடிப்படையாக இருக்கும்.

ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள்  இணைப்பாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டுள்ள நாடுகள்.

 கூட்டு இணைப்பாட்சி அரசியல் அமைப்பில் பொதுவான குறிக் கோள்களுக்காக பல மாநில அரசுகள் ஒன்றுபட்டு ஒரு மைய அரசை உருவாக்குகின்றன. மாநில அரசுகள் தங்கள் இறைமையைத்  தங்களோடு வைத்துக் கொள்கின்றன. அதிகாரங்கள் மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லாமல்   கீழிருந்து மேல் நோக்கிச் செல்கிறது. குறிப்பிட்ட சில அதிகாரங்களை மாநில அரசு(கள்)  தாமாகவே முன்வந்து மைய அரசுக்குக் கையளிக்கின்றன. அதிகாரக் கையளிப்பு நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும்.  கூட்டு இணைப்பாட்சியின் கீழ் ஒரு மாநில அரசு விரும்பினால் பிரிந்து போகலாம். அல்லது உறுப்புரிமையைக் கத்தரித்துக் கொள்ளலாம். முன்னைய சோவியத் ஒன்றியம், முன்னைய யூகோசிலாவிய குடியரசு, இன்றைய ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய அரசியல் அமைப்புக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

 கனடா ஒரு இணைப்பாட்சி அரசியல் முறையைக் கொண்ட நாடு. மூன்று தேசிய  இனங்களின் தாய்நாடு. ஆங்கிலேயர், பிரஞ்சு, பூர்வீக குடிகள் இவையே அந்த மூன்று இனங்களாகும்.

கனடா  இலங்கைத் தீவைவிட (65,610சதுர கி.மீ.)  160 மடங்கு (9,984,670 சதுர கி.மீ.) பெரியது. பத்து மாகாணங்களையும் 3 பிரதேசங்களையும் கொண்டது.  ஆங்கிலம் பிரஞ்சு இரண்டும் அரச மொழிகள்.

 மக்கள் மன்றம் (House of Commons) நாடாளுமன்றம் மேற்சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. நாடாளுமன்றத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் மூலம் 301 உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். மேற்சபையில் 104 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பிரதமரால் நியமிக்கப்படுகிறார்கள். உச்சமன்ற  நீதிபதிகளும் பிரதமராலேயே நியமிக்கப்படுகிறார்கள்.

 ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனி நாடாளுமன்றம், அமைச்சரவை, முதலமைச்சர், கொடி, நீதித்துறை, கல்வித்துறை, காவல்துறை இருக்கின்றன. ஆனால் பாதுகாப்புக்குத்  தனி  இராணுவம் கிடையாது. கனடா யாப்பை அப்படியே ஏற்றுக் கொண்டால் தமிழ் மக்களுக்குத் தனி இராணுவம் வைத்திருக்க வாய்ப்பில்லை.

 கனடாவின் யாப்பு ஒரே ஆவணமாக இல்லை. பல சட்டங்களின் தொகுப்பே  கனேடிய அரசியல் யாப்பாகக் கொள்ளப்படுகிறது.

 கனடாவின் அரசியல் யாப்பு ஆரம்பத்தில் தனித்தனியாக இயங்கிய  4 கொலனி நாடுகளுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களாக இருந்தன. இது இன்று பத்து மாகாணங்கள் மூன்று பிரதேசங்களுக்குரிய யாப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.

 எந்ததெந்தச் சட்டங்கள் கனேடிய யாப்பில் உள்ளடக்கப் பட்டிருக்கிறது என்ற விபரத்தை 1982ஆம் ஆண்டு இயற்றப்பட்ட யாப்பின் அட்டவணை ஒன்றில் பட்டியல் செய்யப்பட்டுள்ளது.

 இந்த 1982 யாப்பே பிரித்தானிய நாடாளுமன்றம் கனடாவிற்காக இயற்றப் பட்ட கடைசி அரசியல் யாப்பாகும். அதன் பின் அரசியல் யாப்புக்கு கொண்டு வரப்பட்ட  திருத்தங்கள் யாவும் கனேடிய டாளுமன்றத்தினாலேயே நிறைவேற்றப்பட்டன.

 சட்டவாக்கத்தைப் பொறுத்தளவில் 1982 அரசியல்  யாப்பு  கனேடிய நாட்டின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். யாப்பின் ஒரு கூறாக உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பட்டயம் (Charter of Rights and Freedoms) சேர்க்கப்பட்டது. இந்தப் பட்டயம் குடிமக்களது அடிப்படைப் பேச்சுச் சுதந்திரம், எண்ணச் சுதந்திரம், சட்டத்தின் முன் எல்லோரும் சமம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்றவற்றை உறுதிப் படுத்துகின்றது. மேலும் கனேடிய பூர்வீக குடிமக்களுக்கும் (சிவப்பிந்தியர்) கனடாவிற்கும் இடையில் காலத்துக்குக் காலம் எழுதப்பட்ட உடன்படிக்கைகளுக்கு இந்த அரசியல் யாப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 இந்தப் புதிய யாப்பில் 1982 ஏப்பிரல் 17 ஆம் நாள் ஒட்டாவாவில் அன்றைய பிரதமர் ருடே     (Prime Minister Trudeau)  மற்றும் பிரித்தானிய அரசியார் இரண்டாவது எலிசபெத் (Queen Elizabeth11) இருவரும் கைச்சாத்திட்டனர். இந்தப் புதிய யாப்பு 1867ல் பிரித்தானிய  நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட யாப்பின் இடத்தைப் பிடித்துக் (replacement) கொண்டது.

 ஆனால்  இந்தப் புதிய யாப்பு பிரஞ்சு மொழி பேசும் கியூபெக் மக்களது ஆதரவைப் பெறத் தவறிவிட்டது. அப்போது கியூபெக் மாகாணத்தில் முதலமைச்சராக இருந்த றேனே லெவஸ்க்  (ஞரநடிநஉ Pசநஅநைச சுநநெ டுநஎநளஙரந ) பிரதமர் பியர்ஸ் றூடேயும் ஏனைய மாகாண முதல்வர்களும் சதிசெய்து தன்னை ஓரங்கட்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்.

 லெவஸ்க் புதிய அரசியல் யாப்பு அதிகாரங்களை மையப்பப்படுத்துகிறது என்று சொன்னார். ஒட்டாவாவிற்கும் (மைய அரசு) மாகாண அரசுகளுக்கும் இடையில் வரிவிதிப்பு குடிவரவு பற்றிய அதிகாரங்கள்  அகலப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார். புதிய   யாப்பில் லெவஸ்க் கையெழுத்திட மறுத்து விட்டார். இந்த இழுபறி இன்றுவரை நீடிக்கிறது.

 இருபது ஆண்டுகள் கழித்தும்  புதிய  அரசியல் யாப்பை கியூபெக் மக்கள்  பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற மனவுளைச்சல்  பேய் பிடித்தமாதிரி நாட்டை ஆட்டிப்படைக்கிறது.

 கியூபெக் அரசியல் வாதிகளில் ஒரு சாரார் (பிரிவினைவாதிகள்) பியர்ஸ் ருடோ (இவர் ஒரு பிரஞ்சு கனேடியர்) தங்களை வஞ்சித்து விட்டார் என்கிறார்கள். இன்னொரு சாரார் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்டு விட்டன என்று குற்றச் சாட்டு பொருளற்றது, தேவையில்லாத பயம் என்று   அடித்துச் சொல்கிறார்கள். சான்றாக சுதந்திரமான குடிவரவு, வருமானவரித் துறைகள் கியூபெக் மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

 கியூபெக் மக்களது ஒரு முக்கிய கோரிக்கை கனேடிய அரசு கியூபெக் மாகாணத்தின் சமூக தனித்தன்மையை (province of Quebec a distinct society )  ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

 கியூபெக் மாகாணத்தில் சுதந்திரம் கோரும் கட்சியான பார்ட்டி கியூபெக்குவா 1994ஆம் ஆண்டு தொடக்கம் பதவியில் இருந்து வருகிறது.

 கியூபெக் மக்களது தலையாய பயம் என்னவென்றால் வட அமெரிக்காவில் வாழும் சுமார் 30 கோடி ஆங்கிலேயர்களுக்கு இடையில் முக்கால் கோடி பிரஞ்சு மொழி பேசும் மக்களது மொழி, பண்பாடு விழுங்கப்பட்டுவிடும்; என்பதுதான். எனவே பிரிவினைக் கோரிக்கைக்கு உளவியல் ரீதியாக இருக்கக்கூடிய காரணம் இந்தப் பயம்தான்.   

 கியூபெக் மாகாணத்தில் பிரஞ்சு மொழிக்கே அரச கருமங்களில்  முதலிடம் கொடுக்கப்படுகிறது. மைய  அரசத் திணைக்களங்களில் மட்டும் ஆங்கிலம் பிரஞ்சு இரண்டு மொழிக்கும் சமவுரிமை கொடுக்கப்படுகிறது.

 கியூபெக் மாகாணத்தில் அங்காடிகளின் பெயர்ப் பலகைகள் பிரஞ்சு மொழியில் பெரிதாகவும் ஆங்கிலத்தில் சின்னதாகவும் எழுதி வைக்க வேண்டும். அங்காடிகளில் விற்பனையாகும் பொருட்களும் இதேமாதிரி இரு மொழிகளிலும் எழுதப்பட வேண்டும். அதற்கான சட்டம் இருக்கிறது. சட்டத்தை அமுல்படுத்த தனிக் காவல்துறை இருக்கிறது. சட்டத்தை மீறுபவர்கள் மீது வழக்குத் தொடரப்படுகிறது.  

 கியூபெக் மாகாணத்தில் வாழும் ஆங்கிலேயர்களுக்கு இந்தச் சட்டம் பெரிய தலையிடியாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கும் கியூபெக் அரசுக்கும் இடையில் முறுகல்  இருந்து வருகிறது. அண்மைக்காலமாக கியூபெக் மாகாணத்தில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறி வேறு மாகாணங்களில் குடியேறி வருகிறார்கள்.

 கியூபெக் மாகாணத்துக்கு வெளியே மைய அரச திணைக்களங்களில் இரண்டு மொழிக்கும் சமவுரிமை உண்டு. மாகாணங்களில் அல்லது பட்டினங்களில்  பிரஞ்சுமொழி  பேசுவோர் கணிசமாக இருந்தால் (குறைந்தது 15விழுக்காடு) பிரஞ்சுமொழியில் கருமமாற்ற வசதிசெய்து கொடுக்கப் படுகிறது.

 மைய அரசோடு ஒருவர் ஆங்கிலத்தில் அல்லது பிரஞ்சுமொழியில்  தொடர்பு கொள்ள முடியும்.   சட்டங்கள், அரச அறிவித்தல்கள், ஆவணங்கள், பாரங்கள், சட்டங்கள் அனைத்தும் இரு மொழியிலும் இருக்கின்றன. ஒரு திணைக் களத்தோடு தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டால் இரண்டு மொழிகளில்  ”எந்த மொழியில் சேவை பெற விரும்புகிறீர்கள்?”  என்று அன்பாகக் கேட்கிறார்கள்!

 கனேடிய அரசியல் யாப்பு  கியூபெக் மாகாணத்தில் வாழும் பிரஞ்சு கனேடியர்களது அபிலாசைகளை நிறைவு செய்யத் தவறிவிட்டது என்ற ஒரு முறைப்பாடு இருக்கிறது. இதனால் கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடு அமைக்கும்  முயற்சி பிரஞ்சு  மக்களைப் பிரதிநித்துவப் படுத்தும் பார்ட்டி கியூபெக்குவா ( Parti Québécois) என்ற கட்சியால் கடந்த காலங்களில் தீவிரப் படுத்தப்பட்டு வந்தது.

 கடைசியாக 1995 ஒக்தோபர் 30ஆம் நாள் நடந்த நேரடி  வாக்கெடுப்பில்  தனிநாட்டுத் தீர்மானம் அரும்பொட்டில் தோற்கடிக்கப்பட்டது.  ஆதரவாக 49.4  விழுக்காடும் எதிர்த்து 50.6 விழுக்காடும் வாக்களித்தன. மொத்த வாக்காளர் களில் 93.52 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள்.

 கனேடிய அரசியலில் காணப்படும் ஒரு நேர்த்தியான நாகரிகம் என்ன வென்றால் எந்த முரண்பாட்டையும் நேரில் சந்தித்துப் பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள். ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும், மைய அரசுக்கும் மாகாண அரசுகளுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அரசியல் பண்பாடு இருக்கிறது.

 எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாகப் பார்க்கும் குறுகிய அரசியல் இங்கு மருந்துக்கும் இல்லை.  எந்தவொரு மைய அல்லது மாகாண நாடாளு மன்றத்திலும் அடிதடி சண்டை, நாற்காலி வீச்சு, என்பன கிடையாது. சபை நடவடிக்கைகளை குழப்புதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடிக்கடி மாகாண முதல்வர்களும் பிரதமரும் கூடிப் பேசுகிறார்கள்.  தோற்ற எதிர்க்கட்சித்  தலைவரை கனடாவின் தூதுவராக அல்லது ஒரு அரச கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமனம் செய்யும்   அதிசயத்தை இங்குதான் பார்க்க முடியும்.

 அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் செய்தித்தாள்கள் உண்டு. ஆனால் கட்சி செய்திகள் கிடையாது. அது போலவே வானொலி தொலைக் காட்சிகள். அரச கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி தொலைக்காட்சி நடுநிலையோடு நடந்து கொள்கின்றன.  அவற்றை ஆளும்கட்சி தனது கட்சி நலங்களுக்குப் பயன்படுத்தலாம் அல்லது வளைக்கலாம் என்பது கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத விடயம்.

 கனடாவில் வெள்ளையர், கருப்பர், சீனர், இந்தியர், தமிழர் (ஒன்ரோறியா மாகாணத்தில் மக்கள் தொகையிpல் தமிழர் 8வது இடத்தில் இருக்கிறார்கள்) என 80க்கும் மேற்பட்ட இனத்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இனப் பாகுபாடு இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப் படுகிறார்கள். ஒரு  வெள்ளையர்  கருப்பரைப் பார்த்து “நீ ஒரு கருப்பன்” என்று சொல்லிவிட்டால் அடுத்த வினாடி அவரை காவல்துறை கைது செய்து கொண்டுபோய் விடும்.

 தொழில் ஒப்புரவு  (Employment equity)  நாடு முழுதும் சட்டப்படி  உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தும் தனியார்தொழில் துறையில் மட்டும் இனப்பாகுபாடு இலைமறை காயாக இருக்கிறது. ஆனால் பாகுபாடு காட்டப்படுவது அம்பலமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டம் பாயும். குற்றம் எண்பிக்கப்பட்டால் கம்பி எண்ண வேண்டியும் வரும்!

 இதைப் படித்துவிட்டு கனேடிய யாப்பை அப்படியே ஸ்ரீலங்காவிற்குக் கொண்டு சென்று  ஒட்ட வைத்து விடுவதுதானே என்ற ஆசை உங்களுக்கு வரலாம்.  ஒட்ட வைக்க முயற்சிக்கலாம்.  ஆனால் இங்கு காணப்படும் அரசியல் பண்பாடு பாரம்பரியம் நாகரிகம்  அங்கு இருக்க வேண்டுமே?

 மரங்கள் கூட எங்கு நட்டாலும் தளைத்து விடுவதில்லை. தென்னிலங்கையில் தானாகச் செழித்து வளரும் ஈரப்பலாக்காய் கன்றைக் கொண்டுபோய்  வடக்கில் நட்டால் தட்பவெப்ப வேறுபாட்டால் அது இலேசில் தளைத்து வளராது. கனேடிய இணைப்பாட்சி அரசியல் யாப்புக்கும் அந்தக் கெதி  ஏற்படலாம்.

———————————————————————————————————————


 கனடாவில் இருந்து பிரிந்து போக முயற்சிக்கும் பிரஞ்சு மக்கள்

 

கியூபெக் மக்கள் பிரிந்து போவதற்கு வழிவகுக்கும்  நேரடித் தேர்தலில் பிரிவினை கேட்கும் கியூபெக்வா கட்சி தோல்வியுற்றாலும் ஆட்சியில் இருந்தபடியே அது  சளைக்காமல் மீண்டும் மீண்டும் அப்படியான தேர்தல்களை வைக்கப்போவதாக பயமுறுத்திக் கொண்டிருந்தது.  இந்தத் தலையிடிக்குப் பிரதமர் யேன் கிரச்சியன் (துநயn ஊhசநவநைn) ஒரு முடிவு கட்ட நினைத்தார். 1998ஆம் ஆண்டு மைய அரசு சார்பில் பிரதமர் கனேடிய  உச்ச நீதிமன்றத்தை அணுகி மூன்று கேள்விகளுக்கு பதில் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். து. பது.யர்ஸ் றூடே போலவே கிரச்சியனும் ஒரு பிரஞ்சு கனேடியர் என்பது குறிப்பிடத்தக்கது.

 உச்ச நீதிமன்றத்தில் கனேடிய அரசு முன்வைத்த கேள்விகள் பின்வருமாறு.
Can Quebec unilaterally secede under Canada’s Constitution?
 Does international law give the province the right to secede?
 If international and domestic law conflict, which takes precedence?

 அ) கனேடிய யாப்பின் கீழ் கியூபெக் தன்னிச்சையாகப் பிரிந்து செல்ல முடியுமா?

 ஆ) அனைத்துலகச் சட்டம் (கியூபெக்) மாகாணத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமையை வழங்குகிறதா?

 இ) அனைத்துலகச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் முரண்பட்டால் இரண்டில் எதற்கு  முன்னுரிமை?

 இந்தக் கேள்விகளுக்கு கனேடிய உச்ச நீதிமன்றம் பின்வருமாறு பதில் அளித்தது.

 ”கியூபெக் மக்கள் ‘மக்கள்’ என்ற சொல்லின் வரைவிலக்கணத்துக்குரிய அநேக குணாம்சங்களை நிச்சயமாகப் பெற்றிருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் அல்லது கொலனித்துவ மக்கள் என்ற அளவு நிலைக்குரிய (threshold) வரைவிலக்கணத்தை நிறைவு செய்யவில்லை. எனவே அவர்கள் தன்னாட்சி உரிமைக்கு  (right of self determinatiod) உரித்துடையவர்கள் அல்ல.

 ஆனால் அவர்கள் ஒரு நேரடி வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவாகத் தெளிவாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஆம்’ என்று தெளிவான முறையில்  பெரும்பான்மை (மக்கள்)  வாக்களித்தால் கனடா கியூபெக் மாகாண அரசோடு பிரிவினைபற்றிப் பேச்சு வார்த்தை ஆரம்பிக்க வேண்டும். அப்போது ஏனைய மாகாண அரசுகள், மைய அரசு மற்றும்  கியூபெக் உட்பட எல்லா மக்களதும் குறிப்பாக சிறுபான்மை மக்களது நலங்கள் கருத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.”

 இரண்டாவது மூன்றாவது கேள்விக்குப் பதில் கொடுக்க வேண்டிய அவசியம்  இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லியது.

 இதில் வேடிக்கை என்னவென்றால்  உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைப்பாட்சியை ஆதரிப்போர் பிரிவினையை ஆதரிப்போர் என இருசாராரும்  தங்கள்; தங்கள் பக்கத்துக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடி மகிழ்ந்ததுதான்.

 கியூபெக் மக்களுக்கு தன்னாட்சி உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியதை வைத்து  இணைப்பாட்சியினர் (federalists  தங்களுக்குத்தான் வெற்றி என்றார்கள். சில நிபந்தனையோடு பிரிந்து போகலாம் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது என்பதால் பிரிவினையாளர்கள் தங்களுக்கு வெற்றி என்றார்கள்.

 மேலும் தெளிவான கேள்வி என்றால் எத்தன்மையது என்றோ தெளிவான பெரும்பான்மை என்றால் என்ன விழுக்காடு என்றோ உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தாது அந்தரத்தில் தொங்க விட்டு விட்டது.

 1995ஆம் ஆண்டு நடந்த நேரடி வாக்கெடுப்பில் 0.6 விழுக்காடு வித்தியாசத்தில்தான் பிரிவினைவாதிகள் தோற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த உச்ச நீதிமன்றத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு புற தன்னாட்சியுரிமை (நஒவநசயெட ளநடக-னநவநசஅiயெவழைn) இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது. தமிழ் மக்களுக்கு என்று ஒரு வரையறை செய்யப்பட்ட நிலம்,  தனித்துவமான வரலாறு, மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியம்  இருக்கிறது. மேலும் அவர்கள் சிங்கள அரசினால் கடந்த நான்கு தசாப்தங்களாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதற்கான வலுவான சான்றுகள் இருக்கின்றன.

 கியூபெக் மக்களுக்குப் புற தன்னாட்சியுரிமை இல்லாத இடத்தும் பெரும்பான்மையினர் விரும்பினால் பிரிந்து போகும் உரிமை இருக்கிறது என உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. எனவே தமிழ் மக்களும் ஒரு நேரடி வாக்கெடுப்பு மூலம் பிரிந்து போகலாம். அல்லது யுத்த களத்தில் வெற்றி பெற்று  தங்களது தன்னாட்சி உரிமையை நிலைநாட்டலாம்.

 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு கியூபெக் பிரிவினைவாதிகள் இன்னொரு நேரடி வாக்கெடுப்பை நடத்த முன்வரவில்லை. அதனை பார்ட்டி கியூபெக்வா கட்சி தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறது.  நிச்சயம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லாமல் இருப்பதே அதற்குக் காரணமாகும். கடந்த 35 ஆண்டுகளாக கனடாவின் பிரதமராகப் பதவி வகித்து வருபர்கள் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நோக்கத்தக்கது.

 கனடா நாட்டின் மொத்த நிலப் பரப்பளவு 9,984,670 சதுர.கி.மீட்டர் (அமெரிக்காவை விடச் சற்றுப் பெரியது)  இதில் கியூபெக் மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 1,542,056 சதுர.கி. மீட்டர். கனடாவின்  மக்கள் தொகை 30,007,094 (2001).  கியூபெக் மாகாண மக்கள் தொகை 7,291,498. இதில் 85 விழுக்காடு பிரஞ்சு கனேடியர்கள்.

 மேலும் கியூபெக் பிரிந்து போகத் தீர்மானித்தால் அந்த முடிவு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று அந்த மாகாணத்தில் வாழும் பூர்வீக குடிமக்கள் (சிவப்பிந்தியர்)  அறிவித்திருக்கிறார்கள்.

 இருந்தும் ஒரு சுதந்திர கியூபெக் அரசுக்கான இறைமைப் போராட்டம் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.

 தமிழ் மக்கள் அனுபவித்த அனர்த்தங்கள், அவலங்கள், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு பாகுபாடு இவற்றில் 10 விழுக்காடு தன்னும் கியூபெக் மக்கள் அனுபவித்திருந்தால் கனேடிய இணைப்பாட்சி அரசியல் அமைப்பு உடைந்து ஒரு சுதந்திர இறைமையுள்ள கியூபெக் அரசு எப்போதோ உருவாகியிருக்கும்!

——————————————————————————————————————————
 

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply