தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க வருகை தமிழர் தரப்புக்கான அங்கீகாரம்!
நக்கீரன்
சிறீலங்கா அரசுக்கு எதிரான அழுத்தங்கள் அனைத்துலக மட்டத்தில் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் அழைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே எல்லோராலும் கருதப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க அரசின் அழைப்பில் வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் தரப்பு அரசமுறையில் அமெரிக்க இராசாங்க திணைக்களத்துடன் பேசுவது இதுவே முதல் தடவையாகும்.
கடந்த 2011 செப்தெம்பர் 12 ஆம் நாள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராசாங்க செயலாளர் றொபேட் பிளேக் (United States Assistant Secretary of State for South and Central Asia, Robert Blake) சிறிலங்கா சென்றிருந்தார். அப்போது கொழும்பில் அவர் சந்தித்த முதல் அரசியல்வாதி ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் ஆவார். ஒரு மணித்தியாலம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் றொபேட் பிளேக் இரா. சம்பந்தனை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றே ததேகூ தலைவர் இரா.சம்பந்தன், நா.உ. பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, நா.உ. எம்.ஏ. சுமந்திரன், நா.உ. திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார்கள்.
செவ்வாய் நள்ளிரவு அமெரிக்காவை வந்தடைந்த ததேகூ தலைவர்கள் முதல் கட்டமாக அமெரிக்க இராசாங்க அதிகாரிகளுடன் நேற்று (புதன்கிழமை) காலை முதல் முழு நாளும் பேசினார்கள். இன்றைய சந்திப்பில் துணை இராசாங்க செயலாளர் றொபேட் பிளேக் உம் கலந்து கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ததேகூ நா. உறுப்பினர்கள் நியூ யோர்க்கில் உள்ள தமிழ் அமைப்புக்களின் ஆண்டு விழாக்களிலும் பங்கு பற்ற இருக்கிறார்கள். இதனை முடித்துக் கொண்டு வானூர்தி மூலம் திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் நீங்கலாக ஏனையவர்கள் கனடாவுக்கு ஒக்தோபர் 29 நள்ளிரவு வருகிறார்கள்.
அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலை ததேகூ நா. உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சந்திக்கிறார்கள். அன்று மாலை 2.30 மணிக்கு அய்யப்பன் கோயிலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்கள். அதனைத் தொடர்ந்து ததேகூ தலைவர்களை தமிழினத்துக்கே உரித்தான விருந்தோம்பல் அளித்து சிறப்பான முறையில் வரவேற்பதற்கு ததேகூ (கனடா) ஒழுங்கு செய்துள்ளது. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இரவு விருந்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தநாள் (திங்கட்கிழமை) காலை ஒட்டாவாவில் கனடிய வெளியுறவு திணைக்கள அதிகாரிகளையும் மாலை கனடிய நா.உறுப்பினர்களையும் சந்திக்கக் கனடிய வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
நொவெம்பர் 01 ஆம் நாள் திரு. இரா சம்பந்தனும் திரு. எம்.ஏ. சுமந்திரனும் அய்யன்னா பொதுச் செயலாளரைச் சந்திக்க மீண்டும் அமெரிக்கா செல்கிறார்கள். திரு. மாவை சேனாதிராசா மட்டும் நொவெம்பர் 03 ஆம் நாள் வரை கனடாவில் தங்கி இருப்பார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், குறிப்பாக 2010 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனடா வருவது இதுவே முதல் தடவை. இந்த வரவுக்கு கனடிய அரசு இசைவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரிகளோடான சந்திப்பில் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் குறுகிய கால சிக்கல்கள் பற்றியும் நீண்ட கால அரசியல் தீர்வு பற்றியும் ததேகூ தலைவர்கள் விபரமாக எடுத்துரைப்பார்கள்.
இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் கழித்து ததேகூ உடன் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த ஆண்டு சனவரி மாதம் தொடக்கம் பத்து சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, உயர்பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்படுதல், வடகிழக்கில் செயல்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைதல், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவை குறித்து பேசப்பட்டது. ஆனால் பத்துச் சுற்றுப் பேச்சுக்களுக்கு பிறகும் பேசப்பட்ட விடயங்களில் எந்தவிதமான பெரிய முன்னேற்றமும் காணப்படவில்லை. அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கொடுத்த ஆலோசனைகள் எதற்கும் அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. எனவே அரசியல் தீர்வுச் சிக்கல் பற்றி எந்தவிதமான விவாதமும் நடத்த முடியவில்லை.
இதனால் இருசாராருக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் ஓகஸ்ட் 8 ஆம் நாளோடு ஒரு முட்டுக்கட்டை நிலையை எட்டியது. இதனை அடுத்து ஓகஸ்ட் முதல் நாள் பின்வரும் மூன்று விடயங்களையிட்டு 2 வாரங்களில் அரசு தெளிவான பதில் அளிக்க வேண்டும் என ததேகூ கேட்டுக் கொண்டது. பதில் கிடைத்த பின்னரே தொடர்ந்து ததேகூ பேச்சு வார்த்தை மேசைக்கு வரும் எனவும் சொல்லப்பட்டது.
1 ஆட்சிமுறை பற்றிய கட்டுமானம் . (The structure of governance)
2. மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான விடயங்களையும் பணிகளையும் எப்படி பிரித்துக்கொள்வது. (The division of subjects and functions between the centre and the devolved units)
3. வரி மற்றும் நிதி பற்றிய அதிகாரங்கள் (Fiscal and financial powers, within a period of two weeks, to carry forward any future dialogue.)
ஓகஸ்ட் 4 அன்று (வியாழன்) இரவு ததேகூ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தைகளை வெளியுலகுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக காட்ட முனையும் அதே வேளையில், உண்மையில் இவை, ஒரு வெளித்தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாகவே இதைத் தாம் பார்ப்பதாக கூட்டமைப்பு கூறியது.
இந்தப் பின்னணியிலேயே றொபேட் பிளேக்கின் தலையீடு காரணமாக சிறீலங்கா அரசும் ததேகூ உம் மீண்டும் பேசத் தொடங்கின. பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற செய்தியை றொபேட் பிளேக்கே கொழும்பில் வைத்து அறிவித்தார்.
செப்டம்பர் 10 ஆம் நாள் 11 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் இனச்சிக்கலில் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் 12 ஆவது கட்ட பேச்சுவார்த்தை ஒக்தோபர் 03 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அரசு தரப்பு ஒக்தோபர் 8 ஆம் நாள் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டி ஒக்தோபர் 3 ஆம் நாளுக்கு பேச்சுவார்த்தையை தள்ளிப் போட்டது. மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறியதால் ததேகூ பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.
1) வெலி ஓயா முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப் படக்கூடாது.
2) மன்னார் தமிழ் அரச அதிபரை மாற்றிவிட்டு அவருக்குப் பதில் ஒரு சிங்கள அரச அதிபர் நியமிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.
3) வடக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காணிப் பதிவு நிறுத்தப்பட வேண்டும்.
முன்னைய பட்டறிவின் அடிப்படையில் இம்முறையும் சிறீலங்கா அரசு இவற்றையிட்டு சாதகமான பதிலை இறுக்கப் போவதில்லை.
அமெரிக்க இராசாங்க திணைக்களத்தோடான பேச்சுவார்த்தையின் போது இடம்பெயர்ந்த 280,000 ஆயிரம் மக்களது மீள்குடியேற்றம், மறு வாழ்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றல், வட – கிழக்கில் இராணுவ பிரசன்னம், பவுத்தமதப் பண்பாட்டுப் படையெடுப்பு போன்ற விடயங்கள் பேசப்படுகிறது. இராசாங்க செயலாளர் கிலாரி கிளின்டன் அவர்களோடான சந்திப்பு இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் நொவெம்பர் 01 ஆம் நாள் அய்யன்னா அவையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களோடான சந்திப்பு இடம்பெறும்.
வட – கிழக்கில் நிதி, காணி, காவல்துறை போன்ற குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அல்லா விட்டால் எமது இனம் தனது அடையாளங்களையும் தனித்தன்மையையும் இழக்கும் அபாயம் அதிகரிக்கும். சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னருமான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாக கிழக்கு மாகாணம் பறிபோய்விட்டது. அங்கு 40 ஆண்டுகளில் தமிழர்கள் சிறுபான்மை ஆகிவிட்டார்கள். இப்போது அரசின் பார்வை வடக்கில் படிந்துள்ளது. வடக்கில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றம், பண்பாட்டுச் சிதைவுகள், இராணுவ மயப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் மொத்தமாகவே தமிழ் மக்களின் அடையாளங்களை வாழ்வியலை பாரதூரமாக சிதைத்துவிடலாம். எனவே ததேகூ க்கு நிலம், நிதி, காவல்துறை நீதித்துறை அதிகாரங்களைப் போராடிப் பெற வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
போர் நடந்த காலத்தில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கப் போவதாகக் கூறி வந்த மகிந்த இராசபக்சே போர் முடிந்த பின்னர் இலங்கையில் இனச் சிக்கல் இல்லை, பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடு இல்லை, எல்லோரும் இந்த நாட்டின் பிள்ளைகள் என்கிறார். கோட்டாபய போரில் சிங்களவர் வென்றுவிட்டதால் இனி அதிகாரப் பரவலாக்கல் தேவையில்லை என்கிறார். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். போரில் வென்றவர்கள்தான் வரலாற்றை எழுதுகிறார்கள்.
அரசியல் என்பது அதிகாரப் போட்டிதான். அது ஒரு முடிவற்ற போட்டி. நாம் செய்யக் கூடியதெல்லாம் எமது நலன்களும் மேற்குலக நாடுகளது நலன்களும் ஒரு முனையில் இணைய வைக்க வேண்டும். இந்த பன்னாட்டு அரசியலை விளங்கிக் கொள்ளும் கெட்டித்தனம் எமக்குத் தேவை.
புலம்பெயர் தமிழர்கள் ஒரு கற்பனை உலகில் இருந்து கொண்டு எதையும் பேசலாம். பேசுவதில் தவறில்லை. ஆனால் தாயக அரசியல் பற்றிப் பேசும் போது அரசுகளின் பூகோள அரசியல் நலங்கள், வணிக நலன்கள் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு பேச வேண்டும்.
எமது விடுதலைக்கு நாம் கொடுத்த கூடுதலான விலை, ததேகூ க்குப் பின்னால் இருக்கும் எமது தாயக மக்கள் பலம் இந்த இரண்டுமே பன்னாட்டு சமூகத்தை எம்மோடு பேச வைத்துள்ளது. சிறீலங்காவையும் எம்மோடு பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது.
சுயநிர்ணய உரிமையை ததேகூ கைவிடக் கூடாது, போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் வற்புறுத்துகிறார்கள். சுயநிர்ணய உரிமையை யாரும் கைவிட வில்லை. ஆனால் அதற்கான கள நிலையை நாம் உருவாக்க வேண்டும். இது தொடர்பாக சுயநிர்ணயம் பற்றிப் பேராசிரியர் நீல்சன் ஜெனிவாவில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் கூறியதை நாம் எழுத்துக் கூட்டிப் படித்து விளங்கிக் கொள்ள வேண்டும்.
“நானும் உங்களுடைய தனித்தமிழீழத்திற்கான முறையான கோரிக்கையை இங்கே பதிவு செய்கிறேன். மேலும் தமிழ்மக்களால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரிக்கிறேன். ஆனால், தற்சமயம் இலங்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தற்சமயம் இருக்கக்கூடிய பெரிய ஆபத்து, தமிழர்களின் நிலப்பரப்பு குறைக்கப்பட்டு சிறுபான்மையாக மாற்றப்படுவது தான்.
பன்னாட்டுச் சட்டத்தில், சிறுபான்மையினருக்குத் தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. ஆனால் ஒன்றுபட்ட உரிமைகள் கிடையாது.
உங்கள் சொந்த நாட்டின் நிலப்பகுதியில் நீங்கள் மக்களாக இருக்கும் வரையில் உங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இணைந்து வாழ்வதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
சொந்த நாட்டில் போர்க்காலங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களுடைய சொந்த வாழ்விடங்களுக்கு திரும்புவதை தடுப்பதையும் அப்பகுதிகளில் சிங்கள விவசாயிகளை மக்களை கொண்டு காலனியாதிக்கத்தையும் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு மண்டலங்களை ஏற்படுத்தியும் நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை சுற்றுலாவிற்காக எடுத்துக்கொள்வதையும் சிங்கள அரசு 2009 லிருந்து ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளது.
மக்கள் தொகையிலும் அரசியலிலும் நீங்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டு வருகிறீர்கள் என்பதைதான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. மேலும் மோசமாக, அனைத்து மக்களும் வாழ்கின்ற தொடர்ச்சியான ஒரு பிரதேசமாக காட்டுவதற்காக முயற்சிக்கிறது. இந்த தொடர்சியான நிலப்பரப்பாக மாற்றும் நடவடிக்கையை நீங்கள் தடுக்கவில்லை, முறியடிக்கவில்லை எனில் யூதர்களுக்கு ஏற்பட்டதைப் போன்றே உங்களுக்கும் எல்லாம் கிடைப்பது போன்று இருக்கும் ஆனால் உங்களுக்கான சுயநிர்ணய உரிமை இருக்காது. தமிழினம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்து இது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
தற்சமயம் தனிநாட்டிற்கான சுய நிர்ணய உரிமை என்பதை முன்னிறுத்த முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். இது நமது நீண்ட கால இலக்கு. புலம்பெயர் தமிழர்களை விட, இலங்கைத் தீவில் வாழும் தமிழ்மக்கள், தங்களுடைய அரசியல்வாதிகள் செய்யக்கூடிய பிழைகளைத் தடுக்க வேண்டிய சரியான தருணம் இது.
நீங்கள் மேற்குல நாடுகளைப் பற்றிச் சிந்திப்பதைக் குறைத்துக்கொண்டு, இந்தியாவைப் பற்றியும் சற்று சிந்தியுங்கள். ஏனெனில் அவர்கள்தான் இன்றளவும் இலங்கையில் நடப்பதைத் தீர்மானிக்கும் ஆற்றலாக இருக்கிறார்கள்.” சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம், நிலம் இருந்தால்தான் சுயநிர்ணயம் பற்றிப் பேசலாம். இவைதான் பேராசிரியர் பேராசிரியர் நீலசன் எமக்குப் படிப்பித்துக் கூறும் அரசியல் பாலபாடமாகும்.
அய்யன்னா வல்லுநர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை அய்யன்னா மனித உரிமை அவைக்கு பொதுச் செயலாளர் பான் கி மூன் அனுப்பி வைத்திருப்பதை ததேகூ வரவேற்றிருக்கிறது. அது பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய ததேகூ தலைவர் இரா. சம்பந்தன் தாங்கள் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது பேசி வந்ததையே அய்யன்னா வல்லுநர் அறிக்கை சொல்கிறது எனக் கூறியுள்ளார். போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று ததேகூ நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசலாம். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசக் கூடடிய அரசியல் வெளி இப்போது அங்கில்லை. இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் கொடுங்கோலர்கள். போர்க் கதாநாயகன், அய்ந்து நட்சத்திர இராணுவ தளபதி, 42 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஆட்சித் தலைவர் வேட்பாளர் சரத் பொன்சேகா இப்போது வெலிக்கடைச் சிறையில் பாயில் படுத்துறங்குகிறார். சாப்பாடும் அலுமினியத் தட்டில்தான். பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே கேட்டால் ததேகூ நா. உறுப்பியனர்களுக்கும் இந்த மரியாதைதான் கிடைக்கும்.
போர்க்குற்ற விசாரணை என்பது ஒரு தூர இலக்கு. அதனைப் புலம்பெயர் தமிழர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். மகிந்த இராசபக்சேயை சிறைக்கு அனுப்பினால் நல்லதுதான். அதனால் எமது மக்களுக்கு அரசியல் தீர்வு வரப்போவதில்லை. மேலும் மகிந்தா போனால் மானல், கோத்தபாய, பசில் என்று நிறையப் பேர் அவரது இடத்தைப் பிடிக்க வரிசையாக நிற்கிறார்கள்.
வட சுடான் ஆட்சித்தலைவர் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை ஒன்று இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரைப் பிடிக்க முடியவில்லை. அவர் சுதந்திரமாக உலா வருகிறார்.
எனவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். அஞ்ச வேண்டிய இடத்தில் அஞ்சத்தான் வேண்டும். அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
களங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் இலக்கு ஒன்றாக இருக்கட்டும்!
Leave a Reply
You must be logged in to post a comment.