சுதந்திரத்திற்குப் பிறகு இன, மதவாத அரசியலால் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது!
நக்கீரன்
இலங்கையின் தலைநகரம் கொழும்பில் ஐய்க்கிய மக்கள் சக்தியினால் கடந்த செவ்வாய்க்கிழமை (நொவெம்பர் 16) மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் இராசபக்ச வம்ச அரசியலுக்கு ஒரு காத்திரமான செய்தியைச் சொல்லியுள்ளது. இன்று ஒரு தேர்தல் நடந்தால் ஆளும் பொது சன பெரமுன படுதோல்வி அடையும் என்பதே அந்தச் செய்தியாகும். 2019 நொவெம்ரில் சனாதிபதி தேர்தலில் கோட்டாபய இராசபக்ச 6,924,255 (52.25 விழுக்காடு) வாக்குளால் வெற்றி பெற்றது தெரிந்ததே.
அரசு காவல்துறையை ஏவிவிட்டு கொழும்புக்கு வண்டிகளில் வந்த போராட்டக்காரர்கள் தடுக்கப்பட்டார்கள். இப்படி தடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்த இடைஞ்சலும் இல்லாமல் கொழும்பு நகரத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஆர்பாட்டப் பேரணியில் பங்கு பற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.
காவல்துறை கோவிட்-19 தொற்றைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்தை தடை செய்யுமாறு நீதிமன்றங்களில் முறையீடு செய்தார்கள். பல நீதிமன்ற நீதிபதிகள் தடை விதிக்க மறுத்துவிட்டனர். சில நீதிபதிகள் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்தார்கள்.
கடுமையான தடைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றை மீறி அரசுக்கு எதிராக மக்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டதை சாதாரணமாகப் பார்க்க முடியாது. கமம் செய்பவர்கள், தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்தும் யூரியா பசளையின் பயன்பாட்டை திடீரென தடை செய்துவிட்டதால் அவர்கள் வீதியில் இறங்கிப் போராட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இராசயன பசளையில் இருந்து இயற்கைப் பசளைக்கு மாற அவர்களுக்கு அரசாங்கம் அவகாசம் வழங்கவில்லை.
அசேதனப் பசளையின் பாவனை காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி வருவதோடு நீரினதும், நிலத்தினதும் மாசுக்கு அது வித்திட்டுகிறது என்பது உண்மைதான். அதனை மறுக்க முடியாது. இருந்தாலும் விவசாயிகளால் திடீரென இயற்கைப் பசளைக்கு மாறிவிட முடியாது. அதற்கு அவகாசம் தேவையாகும்.
இயற்கைப் பசளையில் இரசாயனப் பசளையை விட பல நன்மைகள் உண்டு. அது மண்ணின் அமைப்பை மேம்படுத்தி, தண்ணீரை நீண்ட நேரம் வைத்திருக்க அனுமதிக்கிறது. மேலும் மண்ணில் நுண்ணுயிரிகளின் செயற்பாட்டை அதிகரிக்கிறது. எனவே, அவை பயிர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், மண்ணைப் பண்படுத்தவும் உதவுகின்றன. ஆனால் இரசாயன பசளையைவிட இயற்கைப் பசனை அதிகம் ஒறுப்பானது. குறைவான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.
பெரும்போக நெல் விளைச்சல் பாதியாகக் குறையும் எனக் கமக்காரர்கள் சொல்கிறார்கள். வெள்ளம் கழுத்தளவுக்கு வந்த பின்னர் கோட்டாபய அரசாங்கம் அவசர அவசரமாக இந்தியாவிடம் இருந்து 100 தொன் நானோ உரத்தை இறக்குமதி செய்துள்ளது.
செயற்கைப் பசளை தடைசெய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாததான். இராசபக்ச அரசாங்கம் நொவெம்பர் 2019 இல் ஆட்சிக்கு வந்த போது வெளிநாட்டு நாணய கையிருப்பு அ.டொலர் 7.5 பில்லியனாக இருந்தது. இன்று இது 2.7 பில்லியனாகக் குறைந்துவிட்டது. இந்தக் கையிருப்பும் கடன் பட்ட நிதியாகும்!

அந்நிய செலாவணியை மிச்சப்படுத்த செயற்கைப் பசளை மட்டும் தடைசெய்யப்படவில்லை, கடந்த ஏப்ரில் தொடக்கம் மேலும் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மட்பாண்டங்கள், கண்ணாடி, அழகுசாதனப் பொருட்கள், புடவை, தோல், கைப்பேசிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உதிரி பாகங்கள், வளிசீராக்கல் இயந்திரம், சொக்லேட், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மோல்ட், மற்றும் வெண்ணெய் போன்ற 623 பொருட்கள் அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்களாக பட்டியலிடப் பட்டுள்ளது.
இந்த இறக்குமதித் தடைகள் நாட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பொருட்களின் பற்றாக்குறையை உருவாக்கியது. வியாபாரிகள் விலைகளை உயர்த்தி அதிக விலைக்கு விற்று இலாபம் அடைந்தார்கள். உடனே அரசாங்கம் விலைக்கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது. வியாபாரிகள் அந்த விலைக்கு விற்கமுடியாது என்று சொல்லி பொருட்களைப் பதுக்கினார்கள்.
அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் உணவுப் பற்றாக்குறை மோசமடைந்ததால் கறுப்புச் சந்தை வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அரசாங்கம் விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டது.
விலை அதிகரிப்பு தோராயமாக 38% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொருளாதார நிபுணர்கள் பொருட்களின் விலை சராசரி 70% ஏறிவிடும் என்கிறார்கள். அரசாங்கத்தின் முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
நொவெம்பர் 7 முதல் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
குறைந்த ரக அரிசி ஒரு கிலோகிராம் 17 சதவீதம் அதிகரித்து 115 ரூபாயாகவும், அதற்கு அடுத்த ரகமான சம்பா 37 சதவீதம் அதிகரித்து 145 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அரிசி இலங்கையின் பிரதான உணவாகும். ($US1 என்பது சுமார் 200 இலங்கை ரூபாய்.)
12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2,675 ரூபாயாக ($US13) அதிகரித்தது, இது 80 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ பால் பவுடர் 26 சதவீதம் அதிகரித்து 1,195 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 11.5 வீதத்தால் அதிகரித்து தற்போது 97 ரூபாவாக உள்ளதால் ரொட்டி மற்றும் பேக்கரி பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
50 கிலோகிராம் சிமென்ட் பொதி 9.2 சதவீதம் அதிகரித்து 1,098 ரூபாயாக உயர்ந்துள்ளது.
எரிபொருளுக்கான விலை உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, 2022 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டச் செலவினம் 2,505 பில்லியன் ரூபாவாக இருக்கும், இது இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 173 பில்லியன் ரூபா வெட்டு, இது அடுத்த வருட செலவினங்களில் கடுமையான வரவு செலவுத் திட்ட வெட்டுக்களைக் குறிக்கிறது.
இதற்கு இணங்க ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இராணுவ வரவுசெலவுத்திட்டத்தை 373 பில்லியன் ரூபாவாக உயர்த்தியுள்ளது, இது இந்த வருடத்தில் 18 பில்லியன் அதிகரிப்பு, பொலிஸ் செலவினம் 10 பில்லியனால் 106 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்தப் பின்னணியில் கடந்த நொவெம்பர் 12 இல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பசில் இராசபக்ச 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். ஆனால் அது ஒன்றுக்கும் உதவாத வரவு – செலவு திட்டம் ஏமாற்றம் தருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வு, இரசாயன பசளை உட்பட அன்றாடும் தேவைப்படும் பொருட்களின் தட்டுப்பாடு போன்றவற்றால் அவதிப்படும் மக்களுக்கு எந்த நிவாரணமும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பல நாட்கள் போராடிய ஆசிரியர்களது சம்பள முரண்பாட்டைக் களைவதற்கு மட்டும் ரூபா 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
போர் முடிந்து 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் முப்படைக்கும் ஆகிற செலவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டு போகிறது. குறைந்த பாடில்லை. இலங்கை ஒரு சிறிய நாடு. அதன் மக்கள் தொகை 22.5 மில்லியன் மட்டுமே. அண்டை நாடு இந்தியா மட்டுமே. இரண்டு நாடுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க முரண்பாடு இல்லை. எல்லைத்தகராறு இல்லை. பின் எதற்காக படைச் செலவு அதிகரிக்கப்படுகிறது?
இலங்கை இராணுவத்தில் 346,000 படையினர், 90.000 துணைப் படையினர், 8,000 காத்திருக்கும் படையினர், 8,000 ஐநா அமைதி காக்கும் பணியில் உள்ள படையினர். ஆக மொத்தம் 444,000 படையினர் இருக்கிறார்கள். விமானப்படை, கடற்படை வேறு இருக்கின்றன.
வட கிழக்கில் குறைந்தது 85,000 இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் 22 பிரிவுகளில் 16 வடக்கு – கிழக்கில் முகாமிட்டுள்ளது.
அண்மையில் சிறிலங்காவின் 73 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு சிறிலங்கா இராணுவத்தின் 337 அதிகாரிகள் மற்றும் 8266 ஏனைய தர அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டது.
இராணுவத்துக்கு 1983 – 87 பாதுகாப்புச் செலவு அ.டொலர் 421 மில்லியன். 2009 இல் பாதுகாப்பு ஒதுக்கீடு ரூபா 214 பில்லியன். 2019 இல் ரூபா 306 பில்லியன். 2020 இல் ரூபா 312 பில்லியன். 2021 இல் ரூபா 355 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டை விட 2020 இல் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு ரூபா 49 பில்லியன் (16%) அதிகரித்தது.
இலங்கை அடுத்த 5 ஆண்டுகளில் நாடு அ.டொலர் 29 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். வட்டிக் கொடுப்பனவுகள் மட்டும் தற்போது அரசாங்காந்தியின் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உள்ளது. இப்போது கடனை அடைக்க இலங்கை மேலும் கடன் வாங்குகிறது.
இதே சமயம் 2022 ஆம் ஆண்டு நல்வாழ்வுதுறைக்கு ரூபா153.5 பில்லியன், கல்விக்காக ரூபா 127.5 பில்லியன், போக்குவரத்து அமைச்சுக்கு ரூபா31.2 பில்லியன் ஒதுக்கப்பட்டதுடன், இரயில்வேக்காக ரூபா 26.2 பில்லியன் மூலதனம் மற்றும் தொடர் செலவீனமாக ஒதுக்கப்பட்டது. நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு ரூபா 250.2 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2022, தொடர் மற்றும் மூலதனச் செலவுகள் இரண்டையும் சேர்த்து 2021 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 33 பில்லியன் குறைந்துள்ளது.
இந்த நிதியில், விமானப்படைக்கு ரூபா 15 பில்லியன் மூலதனச் செலவுக்குக் கிடைக்கும், அதே நேரத்தில் கடற்படை மற்றும் இராணுவத்திற்கு முறையே ரூபா 9.2 மற்றும் ரூபா 7.4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆயினும்கூட, பொருளாதாரத் தேவைகளை விட அரசியல் நோக்கங்கள் அரசாங்க செலவினங்களை வழிநடத்துவது தெரிகிறது. மேலும், நியாயப்படுத்த முடியாத செலவுகள் அதிகரித்துள்ளன.
இதற்கு மாறாக, கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான செலவு போதுமானதாக இல்லை. 2022 இல் மொத்த செலவு ரூ. 20 பில்லியனால் குறைக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது பசில் இராசபக்ச, 2022 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8.8% வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கலாம் என்று கூறினார்.
நாடு குறைந்தளவு சுற்றுலாப் பயணிகளை எதிர்கொள்ளும் போது, வெளிநாட்டு ஊழியர்களின் பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதி குறைந்து விட்ட நிலையில் இது அதீத எதிர்பார்ப்பாகவே இருக்கும். பன்னாட்டுச் சந்தையில் கச்சா மதகு எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் பீப்பா ஒன்றுக்கு அ.டொலர் 81.50 க்கு உயர்ந்து விட்டது. எனவே பற்றாக்குறையைக் குறைக்க வாய்ப்பே இல்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் முக்கிய சுற்றுலாத் துறையை பள்ளத்தில் தள்ளிவிட்டதால் இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.6% சுருங்கியது.
சுதந்திரத்திற்குப் பிறகு இன, மதவாத அரசியலால் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. பெரும்பான்மையான சிங்கள – பௌத்த வாக்காளர்கள், சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம்களை அடிபணியச் செய்வதிலேயே தங்களுடைய செழிப்பு தங்கியுள்ளது என நம்புகிறார்கள். சிங்கள – பவுத்த பேரினவாதிகளால் சிங்கள – பவுத்த மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார வளர்ச்சிக்கு அரசியல் உறுதித்தன்மை இன்றியமையாதது. அரசியல் உறுதித்தன்மை என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆள்வோர் நாட்டு மக்களை இனவாரியாக, மதவாரியாக, மொழிவாரியாக பிரிக்கக் கூடாது. மாறாக நாட்டு மக்கள் எல்லோரும் சட்டத்தின் முன் சரிநிகர் சமம், எல்லோரும் ஒரு குலம், ஓரினம், ஓர் நிறை, ஓர்விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாடுகள் ஏட்டில் மட்டும் இல்லாது நடைமுறையிலும் இருக்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.