நீதி கொன்ற நாள்! கொலையாளி ஜெயேந்திரன் விடுதலை பெற்றநாள்!
வசந்தன்
போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறியதால் சந்தேகத்தின் பலன்களை குற்றவாளிகளுக்கு அளித்து குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் உள்ளிட்ட 23 பேரையும் விடுதலை செய்கிறேன்” என புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. முருகன் நவம்பர் 27 அன்று வழங்கிய சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிறழ் சாட்சியங்களும், நீதிபதிகளை விலைக்கு வாங்கும் முயற்சிகளும், போலீசின் ஒத்துழைப்பு என பல்வேறு சட்டவிரோத வழிமுறைகளை சங்கராச்சாரி தரப்பு பின்பற்றி தப்ப முயன்றது அப்பட்டமாகவே தெரிந்த பிறகு அவற்றின் தொடர்ச்சியாக நீதிமன்றம் அவரை நிரபராதி என அறிவித்து விடுதலை செய்துள்ளது.
சின்னக் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணியாற்றி வந்த சங்கரராமன், ஒரு பார்ப்பனர். கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி கோவிலின் வசந்த மண்டபத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். கோவில் கணக்கர் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. வழக்கை திசைதிருப்பும் நோக்கில் ஆறுமுகம், தில்பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண் ஆகிய 5 பேர் தாங்களாகவே நீதிமன்றத்தில் ஆஜராகி சங்கரராமனைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
அன்று மாவட்ட எஸ்.பியாக இருந்த பிரேம்குமார் (தற்போது இறந்து விட்டார்) இந்த விசாரணைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பிறகு, நவம்பர் மாதம் 12-ம் (அன்று தீபாவளியும் கூட) தேதி ஆந்திர மாநிலம் மெகபூப் நகருக்கு சென்று அங்கு ஒரு பெரிய பூசையில் இருந்த சங்கராச்சாரியை கைது செய்தார். 2005 ஆம் ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி சின்ன சங்கராச்சாரியும் கைதானார்.
அப்போது தமிழகத்தில் முந்தைய ஜெயாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அகில இந்திய அளவில் பிஜேபி, விஎச்பி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் ஜெயாவுக்கு எதிராக அறிக்கைகளை விட ஆரம்பித்தன. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட சங்கரமட பக்தர்கள் அதிகார மையங்களுடன் பேசி அவரை விடுவிக்க முயன்றார்கள். ஜெயா கும்பலோ ஏதோ நிதி மற்றும் ஈகோ பிரச்சினைகள் காரணமாக ஜெயேந்தரன் கும்பலை கட்டும் கட்டுவது என்று இருந்தது.
அடுத்தடுத்து ரவுடிகள் அப்பு, கதிரவன், ஆடிட்டர் ரவி சுப்ரமணியம், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 25 பேர் வரை கைது செய்யப்பட்டனர். பலர் ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுத்தனர். உச்சநீதி மன்றம் வரை சென்ற பிறகுதான் ஜனவரி 10 அன்று பெரிய சங்கராச்சாரிக்கு ஜாமீன் கிடைத்தது. பிறகு சின்னவருக்கும் கிடைத்தது. எழுத்தாளர் அனுராதா ரமணன் சங்கராச்சாரியின் பாலியல் மோசடி பற்றியும், 1992ல் மடத்தில் தனக்கு கிடைத்த மோசமான பாலியல் சீண்டல்களைப் பற்றியும் எழுதி அம்பலப்படுத்தினார். சங்கராச்சாரியை தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விடுத்து அவரது சல்லாபக்கதைகளை கிசுகிசுவாக்கி ஊடகங்கள் கல்லா கட்டின.
712 ஆவணங்களுடன் 1873 பக்க குற்றப்பத்திரிக்கையை காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். தாக்கல் செய்வதற்கு முன் வரதராசப் பெருமாள் சன்னதியில் மூலவர் சிலையின் பாதங்களில் வைத்து வணங்கப்பட்ட பிறகுதான் அந்த குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக சீனெல்லாம் போட்டார்கள். அதன்படி பார்த்தால் பெருமாளையே ஜெயேந்திரன் விலைக்கு வாங்கி விட்டார் என்று தெரிகிறது. அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் 2005 அக்டோபரில் உச்சநீதி மன்றத்தை அணுகிய சங்கராச்சாரி தரப்பு தமிழகத்தில் வழக்கு விசாரணை நடந்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும், எனவே புதுச்சேரிக்கு அதனை மாற்று மாறும் கோரி மனுத்தாக்கல் செய்தது. அதனை ஏற்று வழக்கை புதுவை மாவட்ட செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்றினார்கள் நீதிபதிகள். தமிழக அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞரும் நியமிக்கப்பட்டனர். இவையெல்லாம் கூட நீதியை விலைக்கு வாங்க சங்கர மட கும்பலுக்கு ஏதுவாக இருந்தன.
எனினும் முறையான வழக்கு விசாரணை 2009-ல் தான் துவங்கியது. ஏற்கெனவே ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறியிருந்தார். ஆறாவது எதிரியாக இருக்கும் கதிவனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கே.கே நகரில் சிலர் வெட்டிக் கொன்றனர். அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. போலீசு தரப்பில் ரவுடிகளின் உட்பகை என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.
சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா சாட்சிகளை பதிவு செய்த சிடி காப்பி ஒன்று தனக்கு வேண்டும் எனக் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். அதுவரைக்கும் விசாரணையை முடிக்க கூடாது என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார். ஆனால் அப்படி பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் பேச்சு அடங்கிய சிடியை அவருக்கு தரக்கூடாது என கதிரவன் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில்தான் அவரை ரவுடிகள் வெட்டிக் கொன்றனர். எதற்காக கொன்றார்கள் என்பது பற்றி விசாரணையில் இதுவரை எதுவும் தெரிய வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாம் பெரியவா சமாச்சாரம் என்பதால் ஊடகங்கள் முதல் போலிசு வரை வாய் மூடின.
முதலில் காவல்துறையினர் சேர்த்த 371 சாட்சிகளில் 187 பேரிடம் மட்டும்தான் அரசு வழக்கறிஞர் தேவராஜ் குறுக்கு விசாரணை நடத்தினார். இவர்களில் 83 பேர் பிறழ் சாட்சியங்களாக மாறிப் போயினர். பிறழ் சாட்சியங்களில் முக்கியமானவர் பத்மா, செத்துப்போன சங்கரராமனின் மனைவி. கொலையாளிகளை போலீசு காட்டிய புகைப்படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டோம் என்று நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார். இன்னொருவர் அவரது மகள் உமா. அவரால் சாட்சிகளை அடையாளம் காட்ட முடியாமல் போய் விட்டதாம். இதற்கு பின்னால் ஏராளமான பணமும், அதீத மிரட்டல்களும் இருந்திருக்கிறது. அப்போதே சங்கர மட கும்பல் கிட்டத்தட்ட விடுதலை ஆனது மாதிரிதான்.
போலீசாரும் தங்கள் பங்குக்கு இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களை டம்மியாக உருவாக்கியிருந்தனர். கொலையாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கூட அடையாளம் காட்ட அரசு தரப்பு சாட்சிகளால் முடியவில்லை என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த பொருட்களையும், ஆதாரங்களையும் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க காவல்துறையினர் தவறி விட்டனர் என்றும் நீதிபதி விமர்சித்துள்ளார். தலைமை விசாரணை அதிகாரியான எஸ்.பி. சக்திவேல் மீது நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் முதலில் விசாரணை அதிகாரியாக இருந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை ஆணையாளர் பிரேம்குமாருக்கு இந்த வழக்கில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருந்ததாகவும், சங்கராச்சாரிக்கு உச்சநீதி மன்றம் பிணை வழங்கிய போது அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களில் அது வெளிப்படுவதாகவும் நீதிபதி முருகன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். (பிரேம்குமார் 2010 ல் மரணமடைந்து விட்டார்)
உண்மையில் நடந்தது என்ன? ஜெயா கும்பலுக்கும், சங்கர மட கும்பலுக்கும் இருந்த நிதி, ஈகோ பிரச்சினைகள் வெயிட்டாக பஞ்சாயத்து செய்யப்பட்டதா என்பது தேவ ரகசியம்.
குற்றப்பத்திரிக்கையில் சங்கர மடத்தின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் கொலை நடந்த பிறகு எடுக்கப்பட்ட பணக் கட்டுகளில் இருந்த நோட்டுக்களின் வரிசை எண்களும், பின்னர் கொலையாளியிடம் கைப்பற்ற பணக் கட்டுகளில் இருந்த வரிசை எண்களும் ஒன்றாகவே இருந்தது என்பதும் ஒரு ஆதாரமாக குறிப்பிடப்பட்டிருந்தது. மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யரின் செல்பேசியை வழக்கமாக சங்கராச்சாரிதான் பயன்படுத்துவார் என்றும், அந்த எண்ணில் இருந்து கொலையாளிக்கு பேசப்பட்ட அழைப்புகள் பற்றிய ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கிடையிலான சில கடிதங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் நீதிபதிகளிடம் பேரம் பேசும் வேலையையும் காஞ்சி சங்கராச்சாரி தரப்பு செய்தது. இப்போது தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி நான்காவதாக நியமிக்கப்பட்டுள்ளவர். மூன்றாவதாக இருந்தவர் பெயர் நீதிபதி ராமசாமி.
2011-ல் ஆகஸ்டு மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சுந்தரராஜன் புதுவையில் நடைபெறும் சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ஆதாரத்திற்காக ஒரு சிடியையும் இணைத்திருந்தார். அதில் நீதிபதி ராமசாமி, காஞ்சி சங்கராச்சாரி மற்றும் கௌரியம்மாள் என்றொரு பார்ப்பன சீமாட்டி ஆகியோர் உரையாடும் ஆடியோ பதிவு இருந்தது. நீதிபதியின் பணத்தேவை, பெரியவாள் பணம் தர முன்வருவது, அடுத்து ஆக வேண்டியதை பார்க்க சொல்வது என எல்லாம் வெட்ட வெளிச்சமாகவே 8 வாரத்திற்குள் இம்மோசடியை விசாரித்து அறிக்கை தரச் சொன்னார்கள் நீதிபதிகள். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் நீதிபதி ராமசாமி நீக்கப்பட்டு முருகன் நீதிபதியாக வந்து அமர்ந்தார். 2012 பிப்ரவரியிலும் இப்படி நீதிபதிகளிடம் பேரம் பேசும் வேலை வெளியாகவே அப்போதும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தற்காலிகமாக தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்களது குற்றப் பத்திரிகையில் கொலை செய்யும் நோக்கில் சதித்திட்டம் தீட்டிதான் சங்கர ராமன் கொலை நடைபெற்றதாக போலீசார் தெரிவித் திருந்தனர். தற்போது சதித்திட்டம் தீட்டியதை போலீசு தரப்பு நிரூபிக்க தவறி விட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஏற்கெனவே சோமசுந்தர கனபாடிகள் என்ற பெயரில் சங்கர மடத்தில் நடைபெறும் நிதி முறைகேடுகள் மற்றும் பாலியல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவேன் என சங்கராச் சாரிக்கு அடிக்கடி கடிதம் எழுதி வந்தார் என்றும், ஒரு கட்டத்தில் இதனை பொறுக்க முடியாத இந்துக்களின் புனித குருவான சங்கராச்சாரி ரவுடி அப்பு தலைமையில் ஒரு கூலிப்படையை ஏவி கோவில் சன்னிதியில் வைத்தே சங்கரராமனை போட்டுத்தள்ள திட்டமிட்டு செயல்படுத்தினார் என்பது தான் போலீசின் குற்றப் பத்திரிக்கை சொல்வது. ஆனால் ஆதாரங்களை தருவதில் மோசடி செய்து சங்கராச்சாரியை விடுவித் திருக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் சாட்சிகளின் சிடி பதிவுகள் வேண்டும் என முன்னர் கேட்டிருந்த சங்கர ராமனின் மகன் ஆன்ந்த் சர்மா, பிறகு தனக்கும் தன் குடும்பத்தினருக்கு போலீசு பாதுகாப்பு வேண்டும் என்றும், அரசு வழக்குரைஞரை மாற்ற வேண்டும் என்றும் கோரி நீதிமன்றத்தை நாடினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, கடந்த 5-ம் தேதி புதுவை நீதிமன்றத்துக்கு வந்த ஆனந்த சர்மா தனது மனுவை திரும்ப பெறுவதாகவும், விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்குவதில் தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் கூறி விட்டார். கடைசியில் சங்கராச்சாரி சாட்சிக்காரன் காலில் விழுவதை சண்டைக்காரனின் பையன் காலில் விழுவதே மேல் என்பதை புரிந்து கொண்டு, பணத்தாலும், ஆள் படை பலத்தாலும் சங்கர்ராமன் மகனை ‘விலைக்கு’ வாங்கி விட்டார் என்பது அப்போதே அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது.
இன்று நீதிமன்றத்துக்கு வந்த அப்ரூவரான ஆடிட்டர் ரவிசுப்பிரமணியம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வந்திருந்தார். தீர்ப்பு வெளியான பிறகு அரசு வழக்கறிஞர் தேவராஜ் கூறுகையில் ”தமிழக அரசுடன் கலந்தாலோசித்து பின் மேல்முறையீடு செய்வோம். சங்கரராமன் குடும்பத்தினரின் பிறழ்சாட்சியம் காரணமாகத்தான் 23 பேரும் விடுதலையானார்கள்” என்றார்.
சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா கூறுகையில் ”அதிர்ச்சியாக உள்ளது. எனது தந்தை தனாகவே தன்னை கொலை செய்து கொள்ளவில்லை. சிலர் வந்துதான் வெட்டி கொலை செய்துள்ளனர். அப்படியிருக்க, ஒரு சிலருக்காவது தண்டனை கிடைத்திருந்தால் இந்த தீர்ப்பை நம்பியிருக்க முடியும். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி குடும்பத்தினருடன் பேசிய பிறகுதான் முடிவு செய்வோம்” என்று சொல்லியிருக்கிறார்.
போலீசு, நீதித்துறை போன்ற அரசுத் துறைகள் மட்டுமின்றி, சங்கரராமன் குடும்பத்தினரையும் விலைக்கு வாங்கியோ மிரட்டியோ ‘நீதி’யை நிலைநாட்டி உள்ளார் லோககுரு சங்கராச்சாரி. தங்களுக்குள் உள்ள பணபேரம், நிலபேரம், மருத்துவமனை பேரம், அதிகார பேரம் என எல்லாவற்றையும் ஜெயா தரப்பும், சங்கராச்சாரி தரப்பும் இடைப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் ஏறக்குறைய செட்டில் பண்ணி விட்டனர். எனவே அரசு தரப்பில் மேல்முறையீடு செய்தாலும் அது ஒரு பேருக்குதான் இருக்குமே தவிர குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்காது.
நீதி கேட்டு கொலையுண்ட சங்கரராமன் குடும்பம் எதாவது வம்பு செய்யாமல் இருக்க பணத்தால் அடித்திருக்கிறார்கள், முடியாதபோது மிரட்டல். அதற்கு பயந்துதான் ஆனந்த் சர்மா முதலில் போலீசு பாதுகாப்பு கேட்கிறார். மிரட்ட மாட்டோம் என சங்கராச்சாரி தரப்பு உறுதிசெய்த பிறகு புகாரை வாபஸ் வாங்குகிறார். தீர்ப்பு வெளியான பிறகு ”நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்களையாவது தண்டித்திருக்கலாம்” என்று இப்போது கூறுகின்றார். அதாவது அவரே சங்கராச்சாரி விடுவிக்கப்படுவதை எதிர்க்க விரும்பவில்லை. இவர் எப்படி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முன்வருவார்? கடைசியில் நிரபராதியாகி விட்டான் நாடறிந்த ஒரு கொலைகார சங்கராச்சாரி.
”தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பதை முன்னரே நாங்கள் எதிர் பார்த்தோம்” என சங்கராச்சாரி தரப்பு வழக்கறிஞர் திமிராக கூறியுள்ளார். தீர்ப்பை கேட்ட பிறகு காரில் திருச்செந்தூருக்கு கிளம்பியுள்ளார் சங்கராச்சாரி. தன் வைர வேலையும், அறநிலையத் துறையின் உதவி ஆணையர் சுப்பிரமணிய பிள்ளையின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளையும் முப்பது ஆண்டுகள் முடிந்த பிறகும் கண்டறிய முடியாத முருகனை வணங்க, தன் காலடியில் வைத்த குற்றப் பத்திரிக்கையை நிரூபிக்க வக்கில்லாத வரதராச பெருமாளின் சன்னிதியில் இருந்து ஒரு ஏ-1 அக்யூஸ்டு போகிறான். திருச்செந்தூர் முருகனுக்கு தான் இருக்கும் கடற்கரையை மணற்பரப்பையே மொத்தமாக ஸ்வாகா பண்ணும் வைகுண்டராசனை தட்டிக் கேட்க துப்பில்லாத போது பாவம் காஞ்சிபுரம் வந்து அவரால் எப்படி புலன்விசாரணை செய்து சங்கரராமனுக்கு நீதி வழங்க முடியும்.
தீர்ப்பை வரவேற்ற சு.சாமி, ”இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் சங்கராச்சாரியை கைது செய்த ஜெயா அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடருவேன்” என்று கூறியிருக்கிறார். தர்மம் வெற்றி பெற்றிருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். இப்படி பார்ப்பன கும்பலும், ஆர்.எஸ்.எஸ் வானரங்களும் ஜெயேந்திரன் விடுதலை குறித்து கும்மாளம் போடுகின்றன. இறுதியில் இது ‘இந்து’ தேசம்தான் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்ற பார்ப்பனத் திமிர் கரை புரண்டு ஓடுகிறது.
நேற்று சென்னை சேத்துப்பட்டு சங்கர மடக் கிளையில் சங்கராச்சாரியின் விடுதலைக்காக 300 பேர் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்களாம். எந்த தெய்வத்திடம் என்றுதான் தெரியவில்லை. குற்றவாளியை அநீதியாக காப்பாற்றிய அந்த தெய்வத்தின் பெயர் ஜெயலலிதவா என்று தெரியவில்லை.
சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது குதிரைக் கொம்புதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு நீதி மறுக்கப்படுவதுதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சங்கர ராமன் பார்ப்பனராகவே இருந்தாலும், எதிர்த்தது ஒரு ஒரு மடாதிபதியை என்பதால் அவருக்கும் நீதி மறுக்கப்படும் என்பதுதான் ‘இந்து’ தேச நீதித்துறையின் சார்புநிலை. பணமும், அதிகார பலமும், பார்ப்பனிய கட்டுமானங்களும் தான் நீதிபதிகளின் மனச்சாட்சியையும் ஆள்கிறது என்பதும் நிரூபணமாகி உள்ளது.
–
Leave a Reply
You must be logged in to post a comment.