திராவிட எதிர்ப்பாளர்களின் வரலாற்றுத் திரிபுகளுக்கு பதிலடி
பேராசிரியர் ஜெயராமன்
திராவிடம் பேசி, தமிழர் அடையாளத்தை பெரியாரும் திராவிட இயக்கங்களும் மறைத்து விட்டன. இது மன்னிக்க முடியாத இனத் துரோகம்; வரலாற்றுத் துரோகம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் தொடர்ந்து சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளுக்கு சென்னை யில் 19.9.2021 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய பலரும் வரலாற்றுபூர்வ விளக்கங்களையும் மறுப்புகளையும் தந்தனர். நிகழ்வின் இறுதியில் பேசிய பேராசிரியர் ஜெயராமன், விரிவாக ஒரு மணி நேரம் பேசினார்.
தோழர் மணியரசன் நடத்திய ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழில், 2010, 2011இல் ‘ஆரியர்-திராவிடர்-தமிழர்’ குறித்து 21 தொடர் கட்டுரைகளை எழுதியவர் ‘தமிழ்மண் தன்னுரிமை இயக்கப்’ பேராசிரியர் ஜெயராமன். அந்தக் கட்டுரைத் தொடரில் திராவிடம் என்பதே ஆரியம் தான் என்ற கருத்து முன் வைக்கப்பட்டிருந்தது. அந்த கருத்து களை அப்படியே மேடைதோறும் பெ. மணியரசன், சீமான் போன்றோர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் ஜெயராமன், தனது கட்டுரைத் தொடர் குறித்து ஒரு விளக்கத்தை அளித்தார்.
“1856க்கு முன்பு ‘திராவிடர்’ என்ற சொல் அந்த அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது என்பதை மட்டும் அத்தொடரில் விளக்கியிருந்தேன். 1856இல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் எழுதுவதற்கு முன்பு, திராவிடர் என்ற சொல் அந்த அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டது. அந்த நூல் வெளி வந்த பிறகு அந்த ‘சொல்’ என்னவாக மாறியது என்பதையும் நான் எழுதி யிருந்தேன். வடநாட்டிலிந்து தென்னகத்துக்கு வந்த ‘பிராமணர்கள்’, ‘திராவிட பிராமணர்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டார்கள். தென்னாடு வந்த அவர்கள் பிராமண சடங்குகள், ஆச்சாரங்களை மதித்து செயல்படாத காரணத்தால், ‘பிராமணர்’ என்ற உயர் பிறப்பு நிலையிலிருந்து ‘கீழே இறங்கியவர்கள்’ என்ற அர்த்தத்தில் ‘திராவிட பிராமணர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். சமஸ்கிருத இலக்கியங்கள் அப்படித்தான் பெயர் சூட்டின.
அப்படி பிராமண சடங்குகளை மதிக்காமல் தென்னாட்டில் குடியேறி வாழ்ந்தவர்களை ‘விரிஷாலா’ என்று மனு சாஸ்திரம் இழிவாகக் கூறியது. ‘விரிஷாலா’ என்றால் ‘தகுதி இறக்கம் பெற்றவர்கள்’ என்று அர்த்தம். இந்தச் சொல்லுக்கு ‘சூத்திரர்’ என்று பிறகு மொழி பெயர்ப்பு செய்தார்கள். கிரிக்கெட் விளையாட்டுக்காரரான பார்ப்பனர் ராகுல் பெயருக்குப் பின்னால் ‘திராவிட்’ என்ற சொல் ஒட்டியது, இந்தக் காரணத்தினால் தான். ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழில் நான் எழுதிய பத்தாவது தொடரிலேயே இதை விளக்கியிருக் கிறேன். ஆனால் திராவிடம் என்றாலே பார்ப்பனியம் தான் என்று திரித்து, அதற்குச் சான்றாக, ‘ராகுல் திராவிட்’ என்ற உதாரணத்தை மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்கள்.
1947ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கலைக் களஞ்சியத்திலும் தென்னிந்தியாவில் குடியேறி, சடங்குகளை முறையாக செய்யாத ‘பிராமணர்கள்’, திராவிடர் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டதாக எழுதியிருப்பதையும் நான் அந்தக் கட்டுரையில் எடுத்துக் காட்டியிருக்கிறேன். கால்டுவெல் நூல் வந்ததற்குப் பிறகு ‘திராவிடர்’ சொல்லின் அர்த்தம் முழுமையாக மாறியது. இதைப் பற்றி விரிவாக எழுதினால் தான் அந்த வரலாறு முழுமை பெறும் என்பதால் ‘தமிழர் கண்ணோட்ட’த்தில் வெளி வந்த அந்தத் தொடரை நான் நூலாக இதுவரை வெளியிட வில்லை. நான் ஒரு வரலாற்று ஆசிரியன் என்ற முறையில் ‘அரைகுறையாக’ நூல் வருவதை விரும்பாதவன். 21 தொடர்களோடு நான் 10 ஆண்டு களுக்கு முன்பு நிறுத்தி விட்டேன். அது முழுமை பெறாத தொடர்” என்று விளக்கினார் பேராசிரியர் ஜெயராமன்.
‘பார்ப்பனரல்லாதார்’ என்பதைக் குறிக்கும் சொல்லாக பெரியார் ‘திராவிடர்’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தார். இந்த சொல்லைப் பயன்படுத்தா விட்டால் ‘சூத்திரர் கழகம்’ என்று பெயர் வைத்திருப் பேன் என்று பெரியார் விளக்கமளித்துள்ளதை பேராசிரியர் சுட்டிக் காட்டினார்.
‘திராவிடர்’ என்ற சொல்லை பெரியார் தான் முதலில் பயன்படுத்தினாரா? என்ற கேள்வியை எழுப்பிய பேராசிரியர், அதற்கு முன் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்ட வரலாற்றை விளக்கினார்.
- 1881இல் அயோத்திதாசர், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘ஜாதியில்லாத திராவிடர்கள்’ என்று பதிவு செய்யுமாறு ஒடுக்கப்பட்ட மக்களுக் கும் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
- 1912இல் நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் நடேசனார், ‘சென்னை அய்க்கிய சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, பிறகு 1913இல் திராவிடர் சங்கமாக பெயர் மாற்றம் செய்வதற்கு முன்பே அயோத்திதாசர் ‘திராவிடர்’ என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
- கால்டுவெல் ஆய்வுக்குப் பிறகு, ‘திராவிடத் தீபிகை’, ‘திராவிட வர்த்தமானி’ என்ற பத்திரிகைகள் வெளி வந்திருக்கின்றன.
- அயோத்திதாசரும், ரெவரன்ட் ஜான் ரத்தினமும் சேர்ந்து 1885இல் ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கி, ‘திராவிடப் பாண்டியன்’ என்ற பத்திரிகையையும் தொடங்கினார்கள். 1856இல் ‘திராவிட ரஞ்சினி’, ‘திராவிட மஞ்சரி’ என்ற இரண்டு பத்திரிகைகள் வருகின்றன. அப்படி என்ன ‘திராவிடம்’ என்ற சொல் மீது அவ்வளவு ஈர்ப்பு? ஆரியத்துக்கு எதிராக, ‘கூர் தீட்டும் வாள்’ என்று அந்த சொல்லைக் கருதி ஏற்றனர். அந்தச் சொல்லுக்குள் ‘சமூக விடுதலை’ அடங்கியிருப்பதாகக் கருதினர்” என்றார் பேராசிரியர்.
நீதிக்கட்சி மீது வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டுக்கு பேராசிரியர் விளக்கமளித்தார். ஆங்கிலத்தில் தொடங்கிய பத்திரிகைக்கு ‘ஜஸ்டிஸ்’ என்று பெயர் வைத்துவிட்டு, பாழாய்ப்போன தமிழினத்தின்மீது ‘திராவிடன்’ பத்திரிகையைத் திணித்தார்கள் என்கிறார்கள். தலைவர்களாக வளர்ந்த பிறகு வரலாற்றை முழுமையாகப் படிக்க வேண்டும்; வரலாற்றுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்; ‘அரியர்ஸ்’ வைக்கக் கூடாது; ‘திராவிடர்’ இதழுக்கு ஏன் அந்தப் பெயர் சூட்டப்பட்டது? 1.6.1917 அன்று நீதிக்கட்சி திராவிடன் இதழைத் தொடங்குகிறது. இதழ் தொடங்குவதற்கு முன்பு பெயர் சூட்டுவது குறித்து மூன்று நாட்கள் விவாதம் நடக்கிறது. பார்ப்பனரைத் தவிர்த்து, அனைத்து பார்ப்பனரல்லா தாரையும் உள்ளடக்கியதாக அந்தப் பெயர் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்து, ‘திராவிடர்’ என்ற அனைத்து மக்களையும் அடையாளப்படுத்தும் சொல்லாக தேர்வு செய்தனர். உண்மை இவ்வாறு இருக்க தமிழர்களை அடையாளப்படுத்த ‘திராவிடன்’ என்ற சொல்லை தேர்ந்தெடுத்ததாக வரலாற்றைத் திரிக்கிறார்கள் என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசுகையில், நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் சமூக நிலை எப்படி இருந்தது என்பதை விவரித்தார்.
“நீதிக்கட்சி தொடங்கப்பட காலகட்டத்தை தற்போதைய இளைஞர்கள் அறியமாட்டார்கள். நீதிக்கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரான டி.எம்.நாயர். அவர் புகழ்பெற்ற மருத்துவர். டி.எம். நாயரின் புகழ்பெற்ற பேச்சு சென்னையில் ‘ஸ்பர்டேங்’ பேச்சு. அதில், அனைவரையும் பார்த்து கேட்கிறார், ‘இதோ நான் நிற்கிறேன், என் உடலில் என் தந்தையின் இரத்தம் தான் ஓடுகிறது என்று கூற முடியாது. பொலிகாளைகளைப் போல அலைந் தார்கள் நம்பூதிரி பார்ப்பனர்கள்.’ யார் வீட்டில் வேண்டுமானாலும் நம்பூதிரிகள் நுழைவார்கள். பெண்களோடு உடல் உறவு கொள்ளும் உரிமை அவர்களிடம் இருந்தது. வீட்டிற்கு வெளியே நம்பூதிரிகள் செருப்பை கழட்டி விட்டு உள்ளே போனால், செருப்பினிடத்திலேயே கையை கட்டிக் கொண்டு பவ்வியமாக அந்த பெண்ணின் கணவர் நிற்க வேண்டும்.
வ.உ.சிதம்பரனார் இதே சென்னையில் ஓரிடத்தில் பேசும்போது ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார், “முன்பெல்லாம் ‘தி இந்து’ அலுவலகத்திற்கு போனால், ‘வாடா சிதம்பரம்’ என்பாராம் கஸ்தூரி ரங்க அய்யங்கார். நீதிக்கட்சி தொடங்கிய பின் நான் போனேன், ‘வாங்கோ சிதம்பரம் பிள்ளைவால் சவுக்கியமா’ என்றாராம் கஸ்தூரிரங்க அய்யங்கார்” என்று கூறிவிட்டு சொல்கிறார், இந்த மரியாதை எனக்கு நீதிக்கட்சியினால் கிடைத்தது என்கிறார். அப்போதைய சமூக இழிவை துடைத்து எறிவதற்காக விளைந்தது தானே, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், நீதிக்கட்சி, பெரியார் எல்லாம்.
அம்பேத்கர் எழுதுகிறார், “கல்கத்தாவில் உள்ள தெருவில் சிறுவர்கள் காலையில் ஒரு குவளை தண்ணீர் வைத்துக் கொண்டு இருப்பார்களாம். யாராவது ஒரு பார்ப்பனர் இந்த பக்கம் வந்துவிட மாட்டாரா என்று காத்திருப்பார்களாம். ஒரு பார்ப்பனர் வந்த உடனேயே மிகவும் மகிழ்ச்சி யடைந்து, அந்த குவளை தண்ணீரைக் கொண்டு ஓடுவார்களாம் அந்த பார்ப்பனரிடத்தில், அவர் அந்த தண்ணீரில் காலை கழுவிக் கொடுப்பாராம். அந்த தண்ணீரை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு சென்று வீட்டில் உள்ளவர்கள் அந்த தண்ணீரில் கொஞ்சம் பருகிய பின் தான் அனைவரும் சாப்பிடுவார்கள்” என்கிறார். எவ்வளவு கொடுமைகள் இருந்துள்ளன என்று பாருங்கள். நான் கூறியது வங்காளத்தில்.
தமிழ்நாட்டில் புரத வண்ணார் என்று ஒரு சமூகம் இருந்தது. சில ஜாதிக்காரர்களை தொட்டால் தான் தீட்டு. சிலரை பார்த்தாலே தீட்டு. அப்படித்தான் புரத வண்ணாரும். இவர்கள் ஒரு கூடாரத்தில் பகல் முழுவதும் இருந்துவிட்டு, இரவில் தான் வெளியே வருவார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு துணியை துவைப்பவர்கள். நொய், தவிடெல்லாம் தூக்கி வீசுவார்கள். அதைச் சுட்டு சாப்பிட்டு வாழ்ந்த வர்கள் புரத வண்ணார். இன்று புரத வண்ணார்களை கண்டுபிடியுங்கள் பார்ப்போம். எவ்வளவு பெரிய சமூக மாற்றம் வந்துள்ளது. இந்த சமூக மாற்றத்தை திராவிட இயக்கம் சாதித்து கொடுத்துள்ளது. நாம் நன்றி கெட்டத்தனமாக இருக்க கூடாதல்லவா, திராவிடமும் சாதித்து கொடுத்திருக்கிறது” என்று திராவிட இயக்கத்தின் சமூகப் புரட்சியை விளக்கினார்.
(அடுத்த இதழில்)
நாம் தமிழர் கட்சியினர் பேராசிரியர் ஜெயராமனுக்கு கொலை மிரட்டல்
கனிம பேராசிரியர் ஜெயராமன் – திராவிட எதிர்ப்பாளர்களின் புரட்டு வாதங்களுக்கு பதிலடி தருவதை சகிக்க முடியாமல், நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலக் கழகம் மற்றும் எஸ்.டி.பி.அய். அமைப்பைச் சார்ந்த தோழர்கள் காவல்துறையிடம் புகார் மனுவை அளித்தனர்.
மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் ‘தமிழன் காளிதாஸ்’ 8 பேருடன் சேர்ந்து கொண்டு பேரசிரியர் ஜெயராமன் தமிழ்மண் தன்னுரிமை இயக்க செயல்பாட்டாளரான செல்வ அரசன், கடலை வணிகக் கடைக்குப் போய் பேராசிரியர் ஜெயராமனை தீர்த்துக் கட்டி விடுவோம் என்று போய் கூறு என்று மிரட்டியுள்ளனர். பேராசிரியரின் குடும்பத்து உறுப்பினர்களையும் இணையரையும் தனிப்பட்ட முறையில் இழிவாக எழுத முடியாத வார்த்தைகளால் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் தரப்பட்டுள்ளது. காவல்துறை – கொலை மிரட்டல் விடுத்தவர்களோடு பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது தோழர்கள் மீதும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.