“ஓரே நாடு ஒரே சட்டம்” தமிழ்க் கட்சித் தலைவர்கள் விடும் அறிக்கைகள் உரிய பயன் தருமா?

“ஓரே நாடு ஒரே சட்டம்”  தமிழ்க் கட்சித் தலைவர்கள் விடும் அறிக்கைகள்  உரிய பயன் தருமா?

நக்கீரன்

அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்பம் என்று சொல்வார்கள். சிறிலங்கா கடந்த இரண்டாடுகளுக்கு மேலாக பலமுனைகளில் பலத்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகிறது. பொருளாதார நெருக்கடி, வெளிநாட்டுக் கடன் நெருக்கடி,  பணவீக்கம்,  கோவிட் 19 தொற்று நோய் பரவல் போன்றவற்றால்  மக்கள் அவதிப்படுகிறார்கள்.

வயலில் நிற்க வேண்டிய விவசாயிகள்  தெருவில் நிற்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்களும் தெருவில் இறங்கிப்  போராடி வருகிறார்கள்.

ஆனால் சனாதிபதியோ அல்லது அவரது அமைச்சர் பட்டாளமோ எதற்கும் செவிசாய்க்காமல் பேசா மடந்தையாக இருக்கிறார்கள்.  நாட்டு மக்கள் என்னை சனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளைப் பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை என சனாதிபதி கோட்டாபய இராசபக்ச காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில்தான் சனாதிபதி இராசபக்ச தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” என்னும் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் முகமாக ஒரு செயலணியை  அமைத்துள்ளார். கசாப்புக்கடைக்காரனை பசுவதை தடை அமைப்புக்கு தலைவராக  நியமித்தது போல அந்தச் செயலணிக்குப் பொதுபல சேனா அமைப்பின்

பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேரை நியமித்துள்ளார்.  கோட்டாபாய

1. கலகொடஅத்தே ஞானசார தேரர் (தலைவர்),

2. பேராசிரியர் தயானந்த பண்டார,

3. பேராசிரியர் ஷாந்தினந்தன விஜேசிங்க,

4. பேராசிரியர் சுமேத சிறிவர்தன,

5. என்.ஜி. சுஜீவ பண்டித்தரத்ன,

6. சட்டத்தரணி இரேஷ் சேனெவிரத்ன,

7. சட்டத்தரணி சஞ்ஜய மாரபே,

8. எரந்த நவரத்ன,

9. பானி வெவல,

10. மௌலவி மொஹமட் (காலி உலமா சபை),

11. மொஹமட் இன்திகாப்,

12. கலீல் ரஹமான் மற்றும்

13. அயிஸ் நிஷார்தீன்.

சனாதிபதி கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொட்டு ஞானசார தேரர் மற்றும் அவரது  பொதுபல சேனாவின் அமைப்போடு நல்லுறவை வைத்துக் கொண்டு வருபவர். அந்த உறவு காரணமாகவே அவர் இந்தச் செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த நியமனம் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களுக்கு செய்யப்பட்ட நேரடியான அவமானமாக பார்க்கப்படுகிறது.

இந்தச் செயலணியில் ஒரு தமிழராவது இடம்பெறவில்லை. இதன் பொருள் அரசின் கணிப்பில் தமிழர்  இலங்கையின் குடிமக்கள் இல்லை என்பதே. அதே சமயம் ஒன்றுக்கு நான்கு முஸ்லிம்கள் செயலணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்தச் செயலணி இலங்கைக்குள் ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற கருத்தாக்கத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து  ஒரு வரைவு சட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.

நாட்டில் ஷாரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியை சிங்கள – பவுத்த பேரினவாத  குழுக்கள் எதிர்த்து வருகின்றனர்.  இது முஸ்லீம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரில் 21, 2019  ஆம் தேதி இலங்கையில் உள்ள 3 கத்தோலிக்க தேவாலயங்கள் 3 சொகுசு ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 270 பேர் – பெரும்பாலும் தமிழர்கள் – கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) என்ற தீவிரவாத இஸ்லாமிய அமைப்பு மேற்கொண்டது.

இதன் பின் மொத்த முஸ்லிம்களும்  இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற பரப்புரை சிங்கள – பவுத்த தீவிரவாத அமைப்புக்களால் முடுக்கிவிடப்பட்டது. தேரர்

இந்தச் செயலணியில் இடம்பெற்றுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் சிங்கள – பவுத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர். இது 2012 ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்டதில் இருந்து இலங்கையில் அதிகரித்து வரும் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுக்கு  எண்ணெய் வார்த்து வருகிறது. ஹிட்லர் யூதர்களை பலிக்கடா ஆக்கியதுபோல் ஞானசார தேரர்    முஸ்லீம்களைப்  பலிக்கடா ஆக்கப் பார்க்கிறார். முஸ்லிம்களை ஒரு கை பார்த்த பின்னர் அடுத்ததாக ஞானசேரரின் இலக்கு தமிழர்களாக இருப்பார்கள்.

அத்தே ஞானசார தேரர் 2019 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 6 ஆண்டு கடூழியச்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். காணாமல் போன பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டா. குடித்துவிட்டு வண்டி ஓட்டும் போது காவல்துறையிடம் பிடிபட்டவர்.  இவருக்கு முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியதன்  காரணமாகவே  ஞானசார தேரர் சிறையிலிருந்து மே 23, 2019 அன்று விடுவிக்கப்பட்டார்.

சிங்கள  பவுதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சனாதிபதி கோட்டாபய இராசபக்சா  நியமித்த ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் குறிக்கோளாகும்.

சிங்கள பெளத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சனாதிபதி கோட்டாபய ராசபக்r நியமித்த ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் குறிக்கோளாகும். தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப் படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே இந்தச் செயலணி என சி.வி. விக்னேஸ்வரன் நா.உ தெரிவித்தார்.

டச்சு அதிகாரி ஒருவர் தமிழ் நாட்டில் மூன்று வருடங்கள் தங்களுடைய பாரம்பரிய சட்டத்தை சேகரித்தார்; இத்தொகுப்பு முக்கியத் தமிழர்கள் குழுவினால் திருத்தப்பட்ட பின்னர் 1707 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்பட்டது. ஓரளவு காலாவதியான போதிலும் தேசவலமையின் பெரும்பகுதி இன்றும் இலங்கையின் சில பகுதிகளில் சட்டமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இந்த சட்டப் பங்களிப்புகளை டச்சு ஆட்சியின் முக்கிய மரபு என்று கருதுகின்றனர்.

ஒரு நாட்டின் மத, கலாசார, பிரதேச அடிப்படைகளில் வாழ்கின்ற தனித்துவமான குழுமங்களின் தனித்துவங்களைப் பேணும் வகையில், அவர்கள் பின்பற்றுகின்ற, அவர்களுக்கே உரித்தான சட்டங்கள், நடைமுறைகள், வழக்காறுகள் முதலானவற்றை   தனியார் சட்டம் எனப்படும்.

பல்லின மக்களைக் கொண்ட  இலங்கை நாட்டில்  நடைமுறையில் உள்ள தனியார் சட்டங்களைப் (Personal Laws)  பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. கண்டியச் சட்டம் – இது கண்டி வாழ் சிங்கள மக்களுக்கு மட்டுமான தனியார் சட்டம்.

2. தேச வழமைச் சட்டம் – இது யாழ்ப்பாணத் தமிழருக்கு மட்டும் உரித்தான சட்டம். மட்டக்களப்புத் தமிழருக்கு இது பொருந்தாது.

3. முஸ்லிம் தனியார் சட்டம் – முஸ்லிம் தனியார் சட்டம் என்பது இஸ்லாத்தின்  சட்ட திட்டங்களையும் கொண்ட ஒரு சட்டத் தொகுப்பு.

முஸ்லிம் தனியார் சட்டத்தை மட்டுமல்ல யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்தையும் திருத்த சிங்கள – பவுத்த பேரின சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. 

வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே தேச வழமைச் சட்டம் யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருந்தது. அப்போது அது எழுத்தில் இருக்கவில்லை. போர்த்துக்கேயரை(கிபி 1619 – 1658) அடுத்து ஒல்லாந்தர் (கிபி 1658 -1796) யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தபோது தேசவழமைச் சட்டம் 1707 ஆம் ஆண்டு எழுத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேச வழமை மன்னாரிலும் முல்லைத்தீவிலும் செல்லுபடியாகிய அதேவேளை, திருகோணமலையையும் மட்டக்களப்பையும் உள்ளடக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கண்டியையும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களையும் வாழ்விடமாகக் கொண்ட சிங்களவர்களுக்கென சிறப்பு கண்டியச் சட்டமும் இருக்கிறது. 

தேச வழமையில் சொத்தும் காணியும் தொடர்பான சட்டமே தென்னிலங்கை பேரினவாத அரசியல் சக்திகளின் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. தேச வழமைச் சட்டத்தின் கீழ் விற்பனைக்குரிய ஒரு சொத்தை பிறத்தியார்  வாங்கும் உரிமையைத் தடுக்கப்பட்டுள்ளது.  ஒரு தமிழர் தென்னிலங்கையில் காணி வாங்கத் தடையில்லை ஆனால் சிங்களவர் வட இலங்கையில் காணி வாங்க தேசவழமைச் சட்டம் பேரளவு  தடையாக இருக்கிறது என்பதே அவர்களது வாதமாகும்.

ஒரே நாடு ஒரே சட்டம்,  காலப் போக்கில் ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாட்டுக்கு இட்டுச் சென்றால் அதையிட்டு வியப்படையத் தேவையில்லை.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் நாற்பதுகளில் இருந்து முடுக்கிவிடப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பல் தலைகீழாக மாறியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் இரண்டாம் இடத்துக்கும் அம்பாறையில் மூன்றாவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

வெலி ஓயா (மணலாறு)  குடியேற்றத்திட்டம் காரணமாக   முல்லைத்தீவு மாவட்டத்தில் தனி  பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.  நூறு விழுக்காடு தமிழர்கள் வாழ்ந்த  கொக்கிளாய் , கொக்குத்தொடுவாய் இன்று சிங்களவர்களது வாழ்விடமாக மாறிவிட்டது. வெலி ஓயா பிரிவில் 3,336 குடும்பங்கள் (11,189 பேர்கள்) வாழ்கிறார்கள்.

தமிழர்களின் மரபுவழி  வாழ்விடங்களில்  இன விகிதாசாரத்தை குறைக்கும் வகையிலும் சிங்கள குடியேற்றங்களை அதிகரிக்கும் வகையிலும் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.  (https://nakkeran.com/index.php/2019/09/12/tamil-eelam-territory-is-getting-swallowed-by-sinhala-colonization/)

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர், வவுனியா வடக்கு, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் எல்லையோரமாக இருந்த சுமார் 1,000  ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, இராணுவத்தின் ஒத்துழைப்புடன் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறு வருவருகின்றன. குடியேற்றத்தை முடுக்கிவிட வவுனியா, மன்னார் மாவட்டங்களின்   மாவட்ட செயலாளராக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மதவாச்சியில் உள்ள 1,330 சிங்களக் குடும்பங்களை வவுனியா வடக்கு பிரிவில் இணைத்து இன விழுக்காட்டை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட  யாழ்ப்பாண பனை அபிவிருத்திச் சபைக்கு முதல்முறையாக ஒரு சிங்களவர்  அதன் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  சபையை முழுமையாக சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்திலேயே இயங்கிய அதன் கணக்காய்வு பிரிவு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது. நிர்வாகப் பிரிவையும் கொழும்புக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

மொத்தத்தில் கிழக்கைப் போல் வடக்கையும் சிங்களப் பெரும்பான்மை பிரதேசமாக மாற்றுவதில் இராசபக்ச அரசு முனைப்போடு செயல்படுகிறது. அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கோடுதான் கோட்டாபய இராசபக்ச இந்த “ஓரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியை உருவாக்கியுள்ளார்.

சிறுபான்மையினரின் மத, கலாச்சார மற்றும் மொழியியல் உரிமைகள் உட்பட அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு  எண்ணற்ற சர்வதேச மரபுகள் மற்றும் தீர்மானங்கள் உள்ளன, அவை பல்வேறு நாடுகள் அல்லது கண்டங்களை மட்டுமல்ல    உலகளாவிய உரிமைகள் ஆகும்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் விடுத்துள்ள அறிக்கையில் “இவ்விதமான தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் நாட்டினுடைய ஒற்றுமை, சமத்துவம், நீதி, கெளரவம் போன்ற கருமங்களில் மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்” என ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

HTML clipboard

இந்தச் செயலணியை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சனாதிபதியின் இந்தத் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச் சாட்டில் சிறைத் தண்டணை அனுபவித்த ஞானசார தேரருக்கு “ஒரே நாடு – ஒரே சட்டம்’ சனாதிபதி செயலணியில் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை வேடிக்கையானது எனவும் சுமந்திரன் எம்.பி. சாடியுள்ளார்.

இந்தச் செயலணியின் செயற்பாடுகளை சனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா ஒரு இறைமையுள்ள சுதந்திரமான நாடு. எமது நாட்டின் உள்விவகாரங்களில் ஐநாம உரிமை பேரவை தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம்  என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பிரீஸ் வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்கிறார்.

அப்படியென்றால் தலைவர் சம்பந்தன் உட்பட மற்றும் தமிழ்க் கட்சித் தலைவர்கள் விடும் அறிக்கைகள் உரிய பயன் தருமா?

——————————————————————————————————————–

சீண்டிப் பார்த்தால் சிதறிப் போவீர்கள்!

கோட்டாவுக்கு சம்பந்தன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ் பேசும் மக்களின் மனதைச் சீண்டிக் கருமங்களை நிறைவேற்ற விரும்புவதன் ஊடாக நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியாது. இங்கு புரிந்துணர்வு ஏற்படாது. சமாதானம் ஏற்படாது. ஒட்டு மொத்தத் தமிழ்பேசும் மக்களின் வெறுப்பின் வெளிப்பாட்டைதான் காலப்போக்கில் ஜனாதிபதி சந்திப்பார்.- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவரும் திருகோண மலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

-ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் “ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நடை முறைப்படுத்த ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 13 உறுப்பினர்களைக் கொண்ட செயலணியை நியமித்துள்ளார்.

-இலங்கை அரசமைப்பின் 33 ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு அளிக்கப் பட்டுள்ள அதிகாரரங்களுக்கு அமைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்தச் செயலணியின் தலைவராக நீதிமன் றத்தை அவமதித்த குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்ற பின்னர் ஜனாதிபதியின் பொதுமன்னிப் பின் கீழ் விடுவிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் நிய மிக்கப்பட்டுள்ளார்.

-சிறைத்தண்டனை அனுபவித்த – தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வரும் ஒருவரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக எந்தவகையில் ஏற்றுக் கொள்ள முடியும்?

13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசேட ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை. இது ஜனாதிபதியின் திட்டமிட்ட செயலா?

ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரம் தனக்குரிய அதிகாரங்களைப் பயன் படுத்தி குழுக்களை – செயலணிகளை நியமிக்கலாம். ஆனால், இவ்விதமான தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் நாட்டினுடைய ஒற்றுமை, சமத்துவம், நீதி, கெளரவம் போன்ற கருமங்களில் மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி இவ்விதமான கருமங்களை நிறைவேற்ற விரும்புவதன் ஊடாக நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியாது. இங்கு புரிந்துணர்வு ஏற்படாது.

சமாதானம் ஏற்படுவது மிகவும் கஷ்டம்; அது ஏஆனபடியால் ஜனாதிபதி இவ்விதமான கருமங்களைச் செய்கின்றபோது அவற்றை நாட்டு மக்கள் – விசேடமாக தமிழ்பேசும் மக்கள் – தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கக் கூடாது. அதை அவர்கள் வெறுப்பார்கள்.

அந்த வெறுப்பின் வெளிப்பாட்டைக் காலப்போக்கில் அவர்கள் வெளிக்கொணர்வார்கள். அதுதான் நிலைமை – என்றார்.

————————————————————————————————————-

“குற்றவாளிகளுக்கு உயர் பதவிகள் வழங்கும் கோட்டாபய ராசபக்ஷ”
கலகொடஅத்தே ஞானசார தேரர்

இலங்கையின் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் தமிழர்கள் இல்லை
 ”இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது”
 இந்த செயலணி குறித்து விக்னேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்படி விடயங்களை – அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை இந்த சனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியுள்ளமை தனக்கு வியப்பைத் ஏற்படுத்தவில்லை, எனக் குறிப்பிட்டுள்ள விக்னேஷ்வரன், “சனாதிபதி கோட்டாபய ராசபக்ஷ பல்வேறு குற்றவாளிகளை இதுவரை தனது அதிகாரங்களைப் பாவித்து சிறைகளில் இருந்து வெளிக்கொண்டு வந்து மன்னிப்பு அளித்துள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.

Sri Lankan president appoints task force led by controversial monk for 'One Country One Law'

இதற்கு உதாரணமாக இரண்டு நீதிமன்றங்களால் கொலைக் குற்றவாளியாக காணப்பட்ட ராணுவ சார்சன்ட் மற்றும் கொலை குற்றவாளியாக காணப்பட்ட துமிந்த சில்வா ஆகிய இரண்டு மரண தண்டனைக் கைதிகளுக்கு சனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமையை தனது அறிக்கையில் விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கரன்ணாகொட என்ற முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுக்கள் கைவாங்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப் பட்டுள்ளமையினையும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“போர்க்காலத்தின் போது பல குற்றங்களைப் புரிந்த ராணுவ அதிகாரிகள், ஓய்வு பெற்ற பின், அவர்களுக்கு அரசாங்க உயர் பதவிகளை சனாதிபதி கொடுத்துள்ளார்”.

“ஆகவே குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை, தற்போது சனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியமை எனக்கு வியப்பைத் தரவில்லை” என்றும் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த சட்டத்தை கொண்டு வரும் திட்டம் “வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு என்று ‘தேச வழமை’ என்ற ஒரு சட்டம், டச்சுக் காலத்தில் இருந்து சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது.”


சிங்களமயமாகின்றது பனை அபிவிருத்தி சபை

இதுவரை காலமும் பெரும்பான்மையாக தமிழர்களே பணிபுரிந்து வந்த நிலையில் அதனை மாற்றியமைத்து சிங்களவர்கள் உள்ளீர்க்கப்படுகின்றனர்.

அத்துடன் வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைவாக பனை அபிவிருத்திச் சபையின் தலைமையகம் யாழ்ப்பாணத்தில் செயற்பட வேண்டிய நிலையில் அதனை இரகசியமாக கொழும்புக்கு மாற்றும் திட்டம் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறப்பாகக் காணப்படும் வளமான பனைக்குரிய அபிவிருத்திச் சபை மெல்ல மெல்ல சிங்களமயமாகிப் போகின்றமை தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று பனை அபிவிருத்திச் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

பனை அபிவிருத்திச் சபை 1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் தலைவர்களாகத் தமிழர்களே நியமிக்கப்பட்டு வந்தனர். ராசபக்ச ஆட்சியின் பின்னர், பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக முதன்முறையாக பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே சபையை முழுமையாக சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. பனை அபிவிருத்திச் சபை உருவாக்கப்படும்போதே அதன் தலைமையகம் யாழ்ப்பாணத்திலேயே அமைய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்திலேயே இயங்கியது. தற்போது அதன் கணக்காய்வு பிரிவு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது. நிர்வாகப் பிரிவையும் கொழும்புக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

முற்று முழுதாகத் தலைமை அலுவலகத்தை கொழும்புக்கு மாற்றும் நடவடிக்கையின் ஆரம்பமே இது என்று சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை, பனைஅபிவிருத்திச் சபையில் இணைக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களில் தமிழர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாத அதேவேளை, சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த முடக்க காலத்தில் நேர்முகத் தேர்வு கொழும்பில் நடத்தப்பட்டுள்ளது. அதில் வடக்கைச் சேர்ந்த ஒரு சிலருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதுடன் சிங்களவர்களே அதிகம் பங்குபற்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பனை அபிவிருத்திச் சபையில் பணியாற்றி ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற காலத்திலிருந்து ஒரு மாதத்துக்குள் பணிக் கொடை வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு இன்னமும் பணிக்கொடை வழங்கப்படவில்லை.

பனை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான கைதடியில் உள்ள கட்டடம் முன்னைய நல்லாட்சி அரசின் காலத்தில் அமைச்சராக இருந்த சுவாமிநாதனால் திறந்து வைக்கப்பட்டது. அதற்குரிய நினைவுக் கல் தற்போது பிடுங்கி அகற்றப்பட்டுள்ளது.

மேலும், பிரதிப் பொது முகாமையாளர் மற்றும் உள்ளக கணக்காய்வாளர் ஆகியோர் உரிய விசாரணைகளின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களது இடத்துக்கு தற்போது பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கணக்காளர் பதவி வெற்றிடத்துக்கு இரண்டு வருடமாக சகலவித தகுதியுடனும் அனுபவத்துடனும் பதில் கடமையில் உள்ள தமிழர் நியமிக்கப்படாது அதே இடத்துக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பனை அபிவிருத்திச் சபையை சிங்களமயமாக்கும் முயற்சி தொடர்பில் ஆளும் கட்சியின் சார்பில் வடக்கில் உள்ள அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ எந்தவித எதிர்ப்பையும் காண்பிக்கவில்லை என்று பனை அபிவிருத்திச் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

————————————————————-

About editor 3160 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply