இலங்கை கடலில் இறக்கப்படும் கைவிடப்பட்ட பேருந்துகளால் இந்திய கடற்பரப்பில் மாசு ஏற்படுமா?

இலங்கை கடலில் இறக்கப்படும் கைவிடப்பட்ட பேருந்துகளால் இந்திய கடற்பரப்பில் மாசு ஏற்படுமா?

நக்கீரன் 

ந்த மாதம் தமிழக மீனவர்கள் இலங்கை – இந்தியா கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வருவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய வாதப் பிரதிவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 

கடந்த ஒப்தோபர் 18 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்திலிருந்து  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கோட்டப்  பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும்  விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.

இலங்கை கோவளம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களைக் கைது செய்ய முயன்றனர்.

இதன்போது  தமிழக மீன்பிடி விசைப்படகு இலங்கைக்  கடற்படைக்குச் சொந்தமான கண்காணிப்புக் கப்பல் மீது மோதியதில் மீன்பிடி விசைப்படகு நடுக்கடலில்  மூழ்கடிக்கப்பட்டது.

இலங்கை கடற்படை

கடலில் தத்தளித்த இருவரை இலங்கைக்  கடற்படையினர் மீட்டு காங்கேசன்துறைக் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.  ஆனால் மூன்றாவது மீனவருக்கு (இராஜ்கிரன்)  என்ன நடந்தது என்பது தெரியாமல் இருந்தது.  ஒக்தோபர் 19 அன்று  கடலில் மூழ்கிக் காணாமல் போன மீனவர் இராஜ்கிரனது சடலம் மீட்கப்பட்டதாக செய்தி வந்தது.

கப்பல்

இரண்டாவது நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வடக்கு, கிழக்கில் கமக்காரர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் மீனவர்கள்  எதிர்நோக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு கோரி ஒக்தோபர் 17 ஞாயிறு, 18 திங்கட்கிழமை நாட்களில் இரண்டு கவனவீர்ப்புப் போராட்டங்கள்  இடம்பெற்றன.  

இழுவைப் படகு தடைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துமாறு கடற்தொழில் நீரியல்துறை அமைச்சரைக் கோரி  ஒக்தோபர் 17,   ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றது.

“இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் நடத்துவது என்பதும் அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது என்பதும் ஏற்புடையது அல்ல.  எல்லா மீனவர்களும் எங்கே மீன்வளம் இருக்கின்றதோ அந்த மீன் வளத்தை தேடிப் போவது என்பது இயற்கையான ஒன்று” என சுரேஷ் பிரேமச்சந்திரன் உபதேசம் செய்கிறார்.

இந்த வாதத்தின் அடிப்படையில் தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் வடக்கே படையெடுத்து வந்து மேற்கே மன்னார் தொடக்கம் கிழக்கே முல்லைத்தீவு வரை மீன் பிடிக்கலாம், வட மாகாண மீனவர்கள் தங்கள் தொழில், படகுகள்,  வலைகள், வாழ்வாதாரங்களை இழந்து பஞ்சை பராரியாய்  தெருக்களில் பிச்சை எடுத்து வாழ வேண்டும் என்று சொல்ல வருகிறாரா?

இன்று கடற்தொழில் நீரியல்துறை அமைச்சராக ஒரு தமிழரே இருக்கிறார். அவர் நினைத்தால் இழுவைப் படகுத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழக மீனவர்கள்  இலங்கைக் கடல்  எல்லையைத் தாண்டி வந்து  மீன்பிடிக்கும்  இழுவைப் படகுகளை (Trawlers) சிறைப்பிடிக்கலாம்.   அவர்கள் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட இருமடி மற்றும் சுருக்குமடி வலைகளையும்  கைப்பற்றலாம்.  

தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லையை மீறவில்லை என்று வாதாடவில்லை. கடல் எல்லையைத் தாண்டுகிறோம் எனத் தெரிந்தே  செய்கிறார்கள். கேட்டால்  தங்கள் பகுதிக் கடலில்  மீன் வளம் இல்லையென்றும்  இந்தப் பக்கத்தில்தான்   மீன்வளம் அதிகமாக இருப்பதாகவும் இங்கு மீன்பிடிக்க முடியாவிட்டால் தாங்கள் தங்கள் குடும்பத்தோடு பட்டினி கிடந்து சாக வேண்டும் என ஒளிவு மறைவின்றிக் கூறுகிறார்கள்.

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தின் விளைவாகத்தான் தமிழகப் பக்கம் இருக்கும் கடல் வளம் அழிந்தது என்பது வரலாறு

அத்து மீறி நுழையும் மீனவர்களை அவ்வப்போது இலங்கைக் கடற்படை கைது செய்கிறது. அவர்கள் பயன்படுத்திய இழுவைப்படகுகளையும்  கைப்பற்றுகிறது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படுகிறார்கள். கைப்பற்றப்பட்ட படகுகளும் விடுவிக்கப்படுகின்றன என வட – கிழுக்கு மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இலங்கைக் கடற்படையினரால் மார்ச் 25, 2021 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 54 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களது  படகுகளையும்   இலங்கைக்  கடற்படை கைது செய்தது. இலங்கை மீனவர்களையும் இலங்கை கடல் வளங்களையும் பாதுகாப்பதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக மீன்வள அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறுகிறார்.

File:Jaf district Forts tamil.jpg - Wikimedia Commons

இந்த ஆண்டு சனவரி 18, 2021  ஆம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கக்  கடலுக்குள் சென்றனர். அவர்கள்  நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது  தமிழக மீனவர்களையும் மீன்பிடிப் படகையம்  இலங்கைக் கடற்படை சிறைப் பிடித்தது.  

எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களின் இழுவைப் படகுகள் யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை  கடற் தொழிலாளர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் நாசம் செய்கின்றன என   மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசால் 2000 ஆம் ஆண்டு  தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதால் அதில்  பவளப்பாறைகள் மற்றும் குஞ்சு மீன், முட்டைகள் தொடங்கி பெரிய வகை மீன்கள் சிக்கிக்கொள்கின்றன. தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடலில் மீன்பிடிப்பதற்குக் காரணம் தங்கள் பக்க மீன்வளம் அழிந்துவிட்டது என்பதாகும்.   

அப்படிச் சொல்லும் தமிழக மீனவர்கள் இலங்கைப் பக்கம் காணப்படும்  மீன்வளமும் அழிந்துவிடும் என்பதை உணர மறுக்கிறார்கள்.  

அண்மையில் இராமேஸ்வரம் மீனவர்கள் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி ஆகிய மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக வந்த  செய்தியை அடுத்து இந்திய கடற்படையும் இராமநாதபுரம் மீன் வளத்துறை இணை இயக்குநர் மற்றும்   மீன் வளத்துறை ஆய்வாளர் இராஜ்குமார் கொண்ட அதிகாரிகள் குழு இனைந்து தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி  மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை கைது செய்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இலங்கை மீனவர்கள், குறிப்பாக வட இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் இதுதான் சிக்கல். தங்கள் கடலில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட படகுகளையும் வலைகளையும்  பயன்படுத்தி  தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வட இலங்கை மீனவர்கள்  முறையிடுகிறார்கள். அவ்வப்போது ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க போராட்டமும் நடத்துகிறார்கள்.  முப்பது ஆண்டு போர் காரணமாக  தென்னிலங்கையோடு ஒப்பிடும் போது வட இலங்கையின்  கடற்றொழில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தெற்கில் உள்ள வசதிகளில் கால் பங்கு கூட வடக்கில் இல்லை.

பாக்கு நீரிணையில் ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை  - GTN

1956 இல் இந்திய அரசு, தன் கடல் ஆதிக்க எல்லைக் கோட்டை, 3 கடல் மைல்களிலிருந்து (ஒரு கடல் மைல் என்பது, 1.15 மைல் அல்லது 1.863 கிமீ) 6 கடல் மைல்களாக விரிவுபடுத்தியது. இது போன்ற போட்டி அறிவிப்பை இலங்கை அரசும் வெளியிட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான சிக்கல் வலுவடைந்தது.    1973 இல், அன்றைய பிரதமர் இந்திரா இலங்கை சென்றார். பின், இரு நாடு அதிகாரிகளும் கூடிப் பேசினர். 1974 இல்,  இலங்கைப் பிரதமர், சிரிமாவோ பண்டாரநாயகா இந்தியா வந்தார். அண்டை நாடுகளுடன் சமாதான சகவாழ்வு என்ற இந்தியாவின் கொள்கை  இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் சேதுபதிக்குச் சொந்தமான கச்சதீவு கைமாறக் காரணமாக இருந்தது.  1947 ஆம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. 

1974 இல் எழுதப்பட்ட இலங்கை – இந்திய உடன்பாடு காகரணமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் கச்சதீவு வந்துவிட்டது. கச்சதீவு நெடுந்தீவுக்கு  தெற்கே 9 மைல் தொலைவிலும் இராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக்கு நீரணை  என்ற பகுதியில் இருக்கிறது.

1976 ஆம் ஆண்டு  1974 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உடன்படிக்கையின் கீழ் தமிழக மீனவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த சலுகைகள்  பறிக்கப்பட்டன. 

1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து 1983  இல் தமிழ்நாடு கடல்வள மீனவர் சட்டம் கொண்டு வரப்பட்டபோது கச்சதீவு எல்லை மாற்றி அமைக்ககப்பட்டது.  இன்றைய சிக்கலுக்கு  இந்தச் சட்டம் முக்கிய காரணம் ஆகும்.

பாக்கு விரிகுடா இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து தமிழ்நாடு மாநிலத்தை பிரிக்கும் ஒரு குறுகிய நீரணை.  வரலாற்று ரீதியாக இரு நாடுகளுக்கும் வளமான மீன்பிடித்  தளங்களை வழங்கியுள்ளது. 

மே 19, 2009 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் மோதல்கள் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்தன.

இந்தப்  பாக்கு விரிகுடா 137 கிமீ  நீளம் மற்றும் 64 முதல் 137 கிமீ  (தோராயமாக 40 முதல் 85 மைல்கள்) அகலம் கொண்டது.  சர்வதேச கடல் எல்லைக் கோட்டால் (ஐஎம்பிஎல்) பிரிக்கப்பட்டுள்ளது. அதன் எல்லையில் 5 இந்திய மாவட்டங்களும் 3 இலங்கை மாவட்டங்களும் உள்ளன.  2004 ஆம் ஆண்டில், இந்தியப் பக்கத்தில்   தோராயமாக  262,562 மீனவர்களும், இலங்கை பக்கத்தில் 119,000 மீனவர்களும் இருக்கின்றனர்.  

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு மீன்பிடித்தல் பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது. இலங்கையில் இயல்பு நிலை நிலவியபோது அந்த மாகாணம் “நாட்டின் மொத்தப் பிடிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு பங்களித்தது”.  போர் காரணமாக மீன் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்க முகவரின் கூற்றுப்படி, யாழ்ப்பாண மாவட்டம் 1983 இல் 48,776 மெட்ரிக் தொன் மீன்களை உற்பத்தி செய்வதில் இருந்து 2000 இல் 2,211 மெட்ரிக்  தொன்களாக இருந்தது. மன்னார் மாவட்டத்தில், 1983 இல் 11,798 மெட்ரிக் தொன்னிலிருந்து 2002 இல் 3,614 மெட்ரிக்  தொன்களாக உற்பத்தி சென்றது.

இன்று மீன்பிடிக்குப் பெயர் போன மயிலிட்டிக் கிராமத்தில் வாழ்ந்த ஆயிரத்துக்கும் மேலான மீனவக் குடும்பங்கள் மீள் குடியமர்தப்படவில்லை. வலிகாமம் வடக்கில் 3,500 ஏக்கருக்கு மேலான காணிகளை இராணுவம் பிடித்து வைத்திருக்கிறமது.

தமிழக மீனவர்கள் எங்கள் உறவுகள்தான். ஆனால் வாயும் வயிறும் வேறு. தமிழக மீனவர்கள்  ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு இந்திய அரசு வேண்டிய பயிற்சியை, படகுகளை, வலைகளை கொடுத்து உதவவேண்டும். இருபக்க மீனவர்களுக்கு இடையே இன்று காணப்படும் மோதல் போக்கை நிரந்தரமாகத் தணிப்பதற்கு இதுவே ஒரே வழி!

About editor 2990 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply