சீனா – கடலில் விரியும் அதிகார வலை

சீனா – கடலில் விரியும் அதிகார வலை

சீனாவைக் குறித்த தகவல்களை அடுக்குவதில் உலக ஊடகங்கள் கடந்த சில வருடங்களாக விசேஷ கவனம் செலுத்துகின்றன. சீனாவின் அசுர வேக பொருளாதார வளர்ச்சி, மனித உரிமை மீறல்கள், பெருகி வரும் சமூக ஏற்றத்தாழ்வுகள், அதிகார மட்ட ஊழல்கள் குறித்த பல தகவல்களை – குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களில் -அதிகம் காணமுடியும். இந்த தகவல்களை வைத்து நடத்தப்படும் விவாதங்களின் ஒரு அடியோட்டத்தை நாம் எளிதாக ஊகிக்க முடியும். உலக அரங்கில் மேற்கத்திய நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா – கொண்டிருக்கும் இரும்புப் பிடியைத் தளர்த்தும் சாத்தியங்களை சீனாவின் வளர்ச்சி உறுதி செய்கிறது. இந்த வளர்ச்சி அவர்களை அச்சுறுத்துகிறது. குறிப்பாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விட, அதன் புவி-சார் அரசியல் (geo-political) நடவடிக்கைகள் மேற்கத்திய நாடுகளின் பீதியை அதிகரித்துள்ளன. மேற்கத்திய அரசியல் நிபுணர்கள் சீனாவின் இந்த நடவடிக்கைகளின் நோக்கங்கள் குறித்தும், உலக அரசியலில் அதன் தாக்கங்கள் குறித்தும் பேசத் துவங்கியுள்ளனர்.

சீனா கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பத்து சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக அதன் சமூகம் மிகுந்த துடிப்புடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்கிறது. ஒரு நாடு வளர வளரத் தனக்கான புதிய தேவைகளை உருவாக்கிக் கொள்ளும். இந்தத் தேவைகள் தம்மைப் பல வடிவங்களில் விரிவாக்கிக் கொள்ளத் துடிக்கும். கடந்த 30 வருடங்களாக தன்னுடைய எல்லைக்குள் தன் ஆளுமையை பலப்படுத்திக் கொண்ட சீனா, தற்போது உலகளவில் தனக்கான ஆளுமையை நிறுவ எத்தனிக்கிறது. இதன் முதல் கட்டமாக தன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு, தன் பார்வையை மொத்த உலகத்தின் மீதும் திருப்பியிருக்கிறது.

—oooOOOooo—

பொருளாதாரத்தையும், அதோடு சேர்ந்து உயரும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்க வேண்டி சீனா தனக்கான கனிமம் மற்றும் எரிபொருள் வளங்களை சேகரிக்க சீனா உலகின் பல நாடுகளுடன் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டுள்ளது. கொடுங்கோல் ஆட்சி நிலவும் மியன்மர், சூடான் கூட இதில் அடக்கம். இந்த வளங்களை தன்னுடைய நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்ப்பதில் கடல் வழி போக்குவரத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பயங்கரவாத தாக்குதல்களும், கடற் கொள்ளையர்களின் அட்டகாசங்களும் அதிகரித்து வரும் சூழலில் தன்னுடைய சரக்கு கப்பல்களை எந்த வித ஆபத்தும் இல்லாமல் பாதுகாக்க முயலும் சீனா, உலகின் முக்கியமான கடல் வழிகளையும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களையும் கைப்பற்ற முயன்று வருகிறது.

இந்த நடவடிக்கைகளின் இன்னொரு முக்கியமான விளைவாக, உலக நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை சற்றே தளர்த்தி தனக்கான அதிகாரத்தை நிறுவ சீனா முயல்கிறது. அதிவேக விமானங்களும், தகவல் தொடர்பும் நிறைந்த இந்த யுகத்திலும், உலக வர்த்தகத்தில் 90 சதவீதமும், உலகத்தின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் 65 சதவீதமும் கடல் மூலமாகவே நடைபெறுகின்றன. ஆகவே உலகின் முக்கிய துறைமுகங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதின் மூலம் மொத்த உலகத்தின் செயல்பாட்டை கண்காணிப்பதோடு, அந்நாடுகளின் சந்தையை மறைமுகமாக சீனாவால் கட்டுப்படுத்த முடியும்.

இந்நடவடிக்கைகளுக்கான திட்டத்தைப் பல வருடங்களாகவே வைத்திருந்தபோதும் அதை வெளிப்படையாக சீனா ஒப்புக்கொண்டதில்லை. கடந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து சீனா மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள், உலகக் கடற் போக்குவரத்தைக் கைப்பற்றும் அதன் திட்டத்தை கொஞ்ச கொஞ்சமாக வெளிப்படுத்துகின்றன. எல்லைப்புறக் கடல் பகுதிகள் (கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல்) மட்டுமல்லாமல், தன் எல்லையை விட்டு விலகியுள்ள கடல் பகுதிகள் (பசிபிக், இந்திய பெருங்கடல்) மீதான அதிகாரத்தை நிறுவவும் சீனா முயல்கிறது. தனது புவி எல்லைகளைத் தாண்டிய அதிகார எல்லைகள் மூலமாக, எல்லைகளைத் தாண்டிய தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த முயலும் சீனாவின் செயல்பாடுகள், மிகத் துல்லியமாக வடிக்கப்பட்ட, தொலை நோக்குப் பார்வை கொண்ட, புவிசார்-அரசியல் கொள்கைகளை அடிப்படையாக கொண்டவை.

பசிபிக் கடல் மற்றும் முதல் தீவுச் சங்கிலி (first island chain)

உலகின் முக்கிய கடல் வழிகளை இரண்டாக வல்லுநர்கள் வகைப்படுத்துகின்றனர்.

1. முதல் தீவுச் சங்கிலி – கொரிய தீபகற்பம், குரில் தீவுகள், ஜப்பான்(Ryukyu தீவுகள்), தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷிய மற்றும் ஆஸ்த்ரேலியா

2. இரண்டாம் தீவுச் சங்கிலி – குஆம்(Guam) தீவுகள் மற்றும் வடக்கு மரியானா(Northern Mariana) தீவுகள்

இரண்டாம் தீவுச் சங்கிலி அரசியல் ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் அமெரிக்காவிற்கு நெருக்கமானது. ஆனால் முதல் தீவுச் சங்கிலி புவியியல் ரீதியாக சீனாவிற்கு மிகவும் நெருங்கியது. ஆனால் முதல் சங்கிலித்தீவு நாடுகள் அரசியல் ரீதியாக அமெரிக்காவின் நண்பர்கள். ஆகையால் பசிபிக் கடல் மீதான சீனாவின் அதிகார வேட்கையை அடைய முடியாத தடைகளாக இந்த தீவுகள் இதுவரை விளங்கிவருகின்றன. ஆனால், சீனாவின் தற்கால நடவடிக்கைகள், இந்தப் பகுதியை அமெரிக்காவின் பிடியில் இருந்து விடுவித்துத் தனதாக்கிக் கொள்ள முயல்வதாக இருக்கின்றன. தனது ராஜதந்திர மற்றும் பொருளாதார பலத்தின் மூலம் இத்தீவுகளுக்கு சீனா பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. தைவானுடனான அதன் பிணக்கை, கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல்களின் எண்ணைய் வளம் நிரம்பிய கடல் படுகைகள் மீதான அதிகார வேட்கையாக பார்க்க வேண்டும். Diaoyu/Senkaku தீவுகள் விஷயத்தில் ஜப்பானுடனும், ஸ்பார்ட்லி(Spartly) தீவுகள் விஷயத்தில் பிலிப்பைன்ஸுடனும் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

இந்த தீவுகளை கைப்பற்றும் பட்சத்தில் பசிபிக் கடற்பகுதி மீதான சீனாவின் ஆதிக்கக் கனவு நனவாகும். குறிப்பாக, சீனா தைவான் மீதான நேரடியான ராணுவத் தாக்குதலை நடத்தாமல், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தாக்குதல் நடத்துகிறது. ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 270 விமானங்கள் இரு நாடுகளுக்கு இடையே இயக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 7,50,000 தைவான் நாட்டினர் சீனாவில் வசிக்கின்றனர். மூன்றில் இரண்டு சதவீத தனியார் நிறுவனங்கள் சீனாவில் பெறுமளவு முதலீடு செய்துள்ளன. இந்த வகையில் ராணுவத்தின் துணையின்றியே தைவான் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை விரிவாக்குவதில் சீனா வெற்றியடைந்துள்ளது.

தைவான் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை அதிகரிக்கும் அதே சமயம், சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கக் கப்பல்களை இக்கடல் பகுதிகளுக்குள் அனுமதிக்காமல் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது சீனா. 2006-ல் அமெரிக்காவின் Kitty Hawk எனும் கப்பலைத் தாக்கும் வகையில் சீனாவின் கப்பற்படை செயல்பட்டது. நவம்பர் 2007-ல், அதே கப்பலுக்கு விக்டோரியா துறைமுகத்துள் நுழைய அனுமதி மறுத்தது. மார்ச் 2009-ஆம் ஆண்டு மற்றுமொரு அமெரிக்க கப்பாலான Impeccable White சீனாவின் ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டது. வருங்காலத்தில் அமெரிக்காவின் எந்தவித எதிர்ப்பையும் சமாளிக்க, தன்னுடைய கடற்படையின் பலத்தை அதிகரித்தபடி இருக்கிறது சீனா.

தைவான் நாட்டை சீனா அடையும் பட்சத்தில் அமெரிக்கா பெரும் இழப்பை சந்திக்கும். அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால், மற்ற ஆசிய நாடுகள் (இந்தியா உட்பட) அமெரிக்கா மீது கொண்டுள்ள நம்பிக்கை சிதையும். இதன் விளைவாக, உலக அதிகார மையம் மிக வேகமாக சீனாவைச் நோக்கி சாயும் நிலை ஏற்படும். சீனாவின் நோக்கமும் இதுவே.

இந்தியப் பெருங்கடல்

சஹாரா பாலைவனம் முதல் இந்தோனேஷிய தீவுத் தொகுதிகள் (archipelago) வரை தன்னுடைய பரப்பை கொண்டது இந்தியப் பெருங்கடல். மத்திய காலக்கட்டங்களில் (Middle Ages) அரேபியர்களும் பெர்சியர்களும் இந்த கடல் வழியில் மிகுந்த தூரம் பயணம் செய்தனர். பருவக்காற்றின் திசை மாறுதல்களை நன்கு அறிந்திருந்த அவர்கள் நீராவி யுகத்திற்கு முன்பே இந்த பாதையின் பல்வேறு நாடுகளோடு தொடர்பு கொண்டிருந்தனர். இந்நாடுகளுடன் விலை உயர்ந்த கற்கள், நறுமண பொருட்கள், ஆடைகள், போன்ற பொருட்களின் வியாபாரத்தை மேற்கொண்டனர். கடல்-வழி வணிகத்தோடு நில்லாமல், தங்கள் மதத்தையும் இந்தப் பகுதி மக்களிடம் பரப்பினர். மேலோட்டமான பருந்துப் பார்வையிலேயே மொத்த வரலாற்றில் இந்தியப் பெருங்கடல் கொண்டிருந்த முக்கியத்துவத்தை நம்மால் உணர முடியும். கடல் வாணிபத்துக்குப் பெரும்துணையாக விளங்கிய இந்தியப் பெருங்கடல் தற்போது இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

1. உலகின் மொத்த பெட்ரோலிய பொருட்களின் போக்குவரத்தில் 70% இந்தியப் பெருங்கடல் வழியே நடைபெறுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடங்கி பசிபிக் கடல் வரை.

2. சோமாலியா, யேமன், இரான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்தக் கடற்பாதையால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புவி அமைப்பு பயங்கரவாதம் மற்றும் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் இயக்கங்களுக்கு பெரிதும் உதவுகிறது.

1995 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் கச்சா எண்ணைய்க்கான சீனாவின் தேவை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2020-ல் அதன் தேவை ஒரு நாளைக்கு 7.3 மில்லியன் பேரல்களாக உயரும் என்று கணிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட சவுதி ஆரேபியாவின் ஒரு நாள் உற்பத்தியில் பாதி அடுத்த சில வருடங்களில் இந்திய பெருங்கடல் வழியாக சீனாவிற்கு பயணிக்கப் போகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை தன்னுடைய கட்டுப்பாடில் வைக்க சீனா கைக்கொண்டிருக்கும் திட்டம் : “முத்து மாலை” (String of pearls).

இந்தியப் பெருங்கடலை கைப்பற்றும் சீனாவின் திட்டம் 1990-களிலேயே வகுக்கப்பட்டுவிட்டது. 1993-ல், Zhao Nanqi எனும் சீன உயரதிகாரி, “இந்தியப் பெருங்கடல் இந்தியர்களுக்கு மட்டுமே உரியது என்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, இந்திய பெருங்கடலின் இரு பெரும் விரிகுடாக்களை (அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா) கட்டுப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் (Pasni port), இலங்கை, சிட்டகாங்க், மியான்மர் போன்ற நாடுகளில் பெரும் துறைமுகங்களையும், இந்நாடுகளின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் பெரும் முதலீட்டையும் குவித்துள்ளது சீனா. இந்தத் திட்டத்தின் அறுவடை சீனாவிற்கு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம். தனக்குத் தேவையான இயற்கை வளங்களை பத்திரமாக சீனா கொண்டுவருவதற்கும், இந்தியா போன்ற போட்டி நாடுகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அதன் இயக்கத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கவும் சீனாவின் இந்தத் திட்டம் உதவும்.

*****

கடல்வழிகள் மீது சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க, தனது நிலம் மீது அது கொண்டிருக்கும் அதிகாரம் ஒரு முக்கிய காரணி. தன் எல்லைகளை மிக உறுதியாகத் தற்காத்து, அண்டை நாடுகளுடனான நல்லுறவுகளை வளர்த்துக் கொண்ட சீனா, தன்னை முழுதாகத் தொகுத்துக் கொண்டு கடல் மீதான அதிகாரப் பயணத்தை தொடங்கியுள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும், அதன் அதிகார வலையில் சிக்கிக் கொள்ள விரும்பாத இந்தியாவும் தன்னால் இயன்ற அளவு கடற்பகுதி மீதான தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயல்கிறது. இருந்தும், தன் எல்லைகளில் நிலவும் குழப்பங்கள், உள்நாட்டில் நிலவும் குழப்பங்களால் இந்தியா செயலற்ற நிலையில் தவிக்கிறது. இந்தியா தனக்கான பாடத்தை இந்தப் புள்ளியில் இருந்து கற்க தொடங்க வேண்டும்.

—oooOOOooo—

அகண்ட சீனா வளர்ந்து வருகிறது. பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மத்திய ஆசியாவிலும், இந்தியப் பெருங்கடலிலும், தென்-கிழக்கு ஆசியாவிலும், மேற்கு பசிபிக் பகுதிகளிலும் தன்னுடைய அதிகாரத்தைப் பரப்பி வருகிறது. இந்நிலையில், இந்தியா, ஜப்பான் போன்ற ஜனநாயக நாடுகள் தங்கள் நலனுக்காக அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்ற முனையும்.

உலக நாடுகளிடையே ஏற்படும் இந்த இருவேறு அணிகள், வருங்காலத்தில் சீனா-அமெரிக்கா இடையே நடைபெறப்போகும் அதிகாரப் போட்டிக்கு கட்டியம் கூறுவதாக அமையும்.

குறிப்பு

கீழே இருக்கும் இணைப்புகளில் சீனாவின் புவி-மைய அரசியல் நடவடிக்கைகளையும், அதன் வருங்கால திட்டங்களையும், உலக நாடுகளிடையே சீனாவின் செயல்பாடுகள் எழுப்பியிருக்கும் அதிர்வலைகளையும் அறியலாம்.

http://www.foreignaffairs.com/articles/66205/robert-d-kaplan/the-geography-of-chinese-power

http://www.foreignaffairs.com/discussions/interviews/qa-with-robert-kaplan-on-china

http://ramanstrategicanalysis.blogspot.com/2010/04/chinese-navys-power-projection.htmlhttp://www.foreignaffairs.org/20090301faessay88203/robert-d-kaplan/center-stage-for-the-twenty-first-century.html

About editor 3123 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply