தம்பி நீ சற்று எண்ணிப்பார்; கோபித்துகொள்ளாமல்

தம்பி நீ சற்று எண்ணிப்பார்; கோபித்துகொள்ளாமல் –

– பேரறிஞர் அண்ணா

எலெக்ட்ரிக் ரெயில்வே, மோட்டார், கப்பல், நீர் மூழ்கி கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முக மூடி, இன்ஜெக்ஷன் ஊசி, இனாகுலேசன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆப்பரேசன் ஆயுதங்கள், தூரதிருஷ்டி கண்ணாடி, கிராம போன், ரேடியோ, டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ

மிஷின், சினிமா படமெடுக்கும் மிஷின், விமானம் ஆளில்லா விமானம், டைப் மிஷின், அச்சு இயந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், விவசாய கருவி, சுரங்கத்திற்குள் போக கருவி, மலை உச்சியேற மிஷின், சந்திர மண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மிஷின், இன்னும் எண்ணற்ற புதிய பயன் தரும் மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த மனிதரின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்களெல்லாம் இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டு கொண்டிருப்பவர்கெளல்லாம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடாதவர்கள்.

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூஜை கொண்டாடியவர்கள் அல்ல.

நவராத்திரிகள் கொண்டாடியவர்கள் அல்ல.

100க்கு 100 சதவிகிதம் படித்துள்ள மேல் நாட்டிலே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை இல்லை.

ஏனப்பா கொஞ்சம் யோசிக்க கூடாதா?

ஓலை குடிசையும், கலப்பையும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும், மாட்டுவண்டியும், மண்குடமும், உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டி கூட நீ செய்ததில்லை.

கற்பூரம் கூட நீ செய்ததில்லை.

கடவுள் படத்திற்கு அலங்காரத்திற்கு போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூஜையை அறியாதவர் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒரு கணமாவது நீ யோசித்தாயா?

எவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள் இது வரை என்ன புதிய அதிசய பொருட்களைக் கண்டுபிடித்தோம் உலகிற்கு தந்தோம் என யோசித்துப் பாரப்பா.

கோபப்படாதே உண்மை இப்படித்தான் முதலில் நெஞ்சை உறுத்தும்!

சிந்தித்துப் பார் உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களைக் கூட ஓலை சுவடிலேதான் எழுதினார்கள்.

அந்தப் பரம்பரையில் வந்த நீ அவர்கள் மறைந்து ஆங்கிலேயர் வருவதற்கு இடையிலே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டு பிடித்திருக்கக் கூடாதா?

மேல் நாட்டார் கண்டுபிடித்து தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அகமகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே.

அவன் கண்டுபிடித்த ரேடியோவில் உன் பழைய பஜனை பாட்டைக் கேட்டு மகிழ்கிறாயே!

எல்லாம் மேல் நாட்டவர்கள் கண்டுபிடித்து கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே. சரியா? யோசித்துப் பார்.

சரஸ்வதி பூஜை விமர்சையாக நடந்தது என்று பத்திரிக்கையில் செய்தி வருகிறது.

அது நாரதர் சர்விஸ் அல்லவே.

அதுஅசோசியேட். தந்தி முறை அவன் தந்தது.

தசரதன் வீட்டிலிருந்து வந்ததில்லை.

ராகவன் ரேடியோ கேட்டதில்லை.

சிவன் சினிமா பார்த்ததில்லை.

தர்மராசன் தந்தி கம்பம் பார்த்ததில்லை.

இவைகெளல்லாம் மிக மிக சாமானியர்களால் சுலபமாகக் கிடைக்கிறது. அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கிம் போது கூட அரிய பொருள்களைக் கொடுத்த அந்த அறிஞர்களை மறந்து விடுகிறோம்.

அவர்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை அறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம்.

ரேடியோவில் ராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவிலே சிபி சக்கர வர்த்தியின் கதையையும் கேட்டும் பார்த்தும் மகிழ்கிறோம்.

இது முறைதானா? பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நமக்குப் பலன் தர வில்லையே!

ஆனால் அந்த பூசையைச் செய்ய தெரியாதவர்கள் நாம் ஆச்சர்யம் படும்படியான அற்புதங்களை அறிவின் துணையைக் கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும் பின்பு வெக்கமாக இருக்கும்.

அதையும் தாண்டினால் வேகம் பிறக்கும் யோசித்துப் பார் அடுத்து ஆண்டிற்குள்ளாவது!

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply