தந்தை பெரியார்

தந்தை பெரியார்
முன்னுரை

“அறிவைத் தடுப்பாரை,     மானம் கெடுப்பாரை  
வேரோடு பெயர்க்க வந்த   கடப்பாரை” 

என்று கவிஞர் காசிஆனந்தன் அவர்களும்,

“தொண்டு செய்து பழுத்த பழம்,            தூய தாடி மார்பில் விழும்,             மண்டைச் சுரப்பை     உலகு தொழும்            மனக்குகையில்            சிறுத்தை எழும்            அவர்தாம் பெரியார்,             யார்? அவர்தாம் பெரியார்” 
என்று பாரதிதாசன் அவர்களும், ஏற்றிப் போற்றிய தந்தை பெரியார், உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர் வரிசையில் என்றும் இருப்பவர்.
இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார். கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம்! போராட்டம்.அது மட்டும்தான் தெரியும். பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது.
இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது. தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது.

பிறப்பு

தந்தை பெரியார் 1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற இரண்டு சகோதரிகளும்  இருந்தனர். இவருடைய குடும்பம் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டது.

கல்வி

ஈ.வெ.ரா வுக்குக் கல்வி சரியாக அமையவில்லை. துடுக்குத்தனத்தை அடக்கவே பள்ளியில் போடப்பெற்றார். திண்ணைப் பள்ளியில் 3 ஆண்டும் ஆங்கிலப்பள்ளியில் 2 ஆண்டும் படித்தார். 4-ஆம் வகுப்பு தேறி சான்றிதழ் பெற்றார். படிப்பு 11-வயதிலேயே முடிந்தது. தந்தையார் மண்டியில் வேலை. நன்றாகப் பேசுவார். வணிகர்களிடம் நன்றாகப் பழகுவார்

ஆரம்பகால வாழ்க்கை

19-வயதில் 13-வயதுடைய நாகம்மாளை மணந்தார். நாகம்மாள் தம்தாயின் ஒன்றுவிட்ட தம்பியின் பெண். பள்ளியை எட்டிப்பார்க்காதவர். திருமணம் ஆகி சில ஆண்டுகட்குப் பின்னர் கையெழுத்துப்போட மட்டிலும் கற்றுக்கொண்டவர். 35 ஆண்டுகள் கணவனோடு இணைந்து-பிணைந்து-வாழ்ந்து கணவனுடைய எல்லா நிகழ்ச்சிகட்கும் தோள் கொடுத்து உதவினார். படிப்பில்லாவிட்டாலும் சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்தார். திருமணம் ஆகி இரண்டாண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஐந்து மாதங்கள் வாழ்ந்து இறந்தது. பிறகு குழந்தையே பிறக்கவில்லை.
1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

விதவை மறுமணம்

குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாரபட்சங்கள் இளம் வயதிலேயே அவரது கவனத்தைக் கவர்ந்தன. குழந்தைத் திருமணம் செய்து குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்து கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழ நேர்ந்த பல்லாயிரம் பெண்களின் துயரம் அவரை ஆட்கொண்டது. அவ்விதம் குழந்தைப் பிராயத்திலேயே கணவனை இழந்த தமது சகோதரி மகளுக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி அவர் மறுமணம் செய்வித்தார்.

பெரியாரை மாற்றிய காசிப் பயணம்

1904ல் பெரியார் இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசி விசுவநாதரை தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், சுரண்டல்களையும் கண்டு மிகவும் வருத்த முற்றவரானார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார். அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவாரக இருந்த பெரியார் காசி யாத்திரைக்குப் பின் தன்னை ஒரு இறைமறுப்பாளராக மாற்றிக்கொண்டார்.

பகுத்தறிவுப் பகலவன் 

கடவுள் இல்லை என்றால் பழிப்பார் என்று தெரிந்தே  அறியாமை  அகற்ற பகுத்தறிவு பகலவனாய்….. அள்ளிக்கொடுப்பது மட்டுமே  அவனியில் தர்மம் அல்ல  சுயமரியாதை  சுடர்விட  பகுத்தறிவுடன் வாழ்ந்திட  சொல்லிக்கொடுப்பதே அழியாத தர்மம் என்று  எவர் இங்கே அதர்மத்தை அழித்து   அறவழி காட்டினாரோ அவரே பெரியார்… எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்டவர் ஈ.வெ.ராமசாமி.
அறிவுக்கண்களை மூடிக்கொண்டு, மூடநம்பிக்கைக் குழியில் புதைந்து கிடந்த தமிழக மக்கள் வாழ்வில் பகுத்தறிவு ஒளியைப் பாய்ச்சியவர் தந்தை பெரியார். தமிழ் நாட்டின் தமிழர்கள் மானமும் அறிவுமுள்ள புரட்சிகரமான இனமாக எழுச்சி கொள்ள வேண்டுமென்பதற்காக தனது இறுதி மூச்சிருக்கும் வரையும் தளராத உறுதியோடு போராடியவர். தனது போராட்டங்கள் மூலம் தமிழகத்தின் சமூக-அரசியல்-பொருளாதார நிலைகளில் பெரும் சீர்திருத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் வழிவகுத்தவர்.

பெரியார் சில சம்பவங்கள்..

ஒரு முறை ஜி.டி.நாயுடுவை சந்திக்க அவர் வீட்டிற்கு ஈ.வே.ரா., சென்றிருந்த போது, ஈ.வே.ரா.வின் பையில் வைத்திருந்த மணி பர்ஸை வெடுக்கென பறித்த நாயுடு அதிலிருந்த ரூபாய் நோட்டுக்களை தன் ஆய்வுக்கு வேண்டுமென எடுத்துக்கொண்டார். வெறும் சில்லரைகள் நிறைந்திருந்த பர்ஸை ஈ.வே.ரா.விடம் திரும்பக்கொடுத்தார்.

அடுத்த முறை நாயுடுவை சந்திப்பு நிகழ்ந்த போது, பழையபடி பர்ஸை பறித்த நாயுடு ஏமாற்றம் அடைந்தார். உள்ளே சில்லரை காசுகளே இருந்தது. நாயுடுவைசந்திக்கப்போகிறோம் என்று தெரிந்தாலே ரூபாய் நோட்டுக்களை எடுத்து பத்திரப்படுத்தி விடுவார் ஈ.வே.ரா.

பெரியார் சொல்வது…

    ‘நான் சொல்லுவதை நம்பு, இல்லாவிட்டால் பாவம்!’ என்று நான் சொல்லவில்லை. எதிலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் நாடு ன்னேற்றமடையுமேயன்றி, ‘என்னுடைய பாட்டன், முப்பாட்டன் போன வழியில்தான் போகிறேன்’ என்ற மூடக்கொள்கையினால், நாடு நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம். என் புத்திக்கு எட்டியதை எடுத்துக் காட்டினேன். அதில் சரியானது எனத் தோன்றியதை ஒப்புக்கொண்டு அதன்படி நடக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் சொல்லுவதில் பிசகிருந்தால் என் அறியாமைக்குப் பரிதாபப்படும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் வாழ்வு

பெரியார் 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தார்.

காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார். கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார்.

தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காகப் பெரியார் சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் சகோதரி கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தார். இவற்றுக்காக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத் தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் போக்கால் தோல்வியுற்றது. அதனால் 1925 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் எதிரான சாதி அமைப்புதான், பெரியாரின் முதன்மையான இலக்கு.

நாட்டின் விடுதலைக்கான போராட்டம் மக்களின் சமத்துவத்தையும் உறுதிசெய்ய வேண்டும்; அதை காங்கிரஸ் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸுக்குள்ளே போராடினார் பெரியார்.கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் துறைகளில் மிகவும் ஒடுக்கப்பட்டுக் கிடந்த அனைத்துப் பிரிவினருக்கும் சம வாய்ப்பை உறுதிசெய்வதுதான் அவரது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை. காங்கிரஸ் அதை மறுத்தபோது, பெரியார் 1925-ல் வெளியேறினார். 90 ஆண்டுகளுக்குப் பின் 2015 செப்டம்பரில் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி – 50% கட்சிப் பதவிகளை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு உறுதிசெய்வதாகத் தீர்மானித்திருப்பது – வரலாற்றின் திருப்பம் மட்டும் அல்ல; பெரியார் காலத்தே எவ்வளவு முந்தியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் எதிரான சாதி அமைப்புதான், அவரது முதன்மையான இலக்கு. சாதியமைப்புக்குக் கருத்தியலை வழங்கி, அதை சாஸ்திரம், மதம், கடவுள் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபோது, பெரியாரின் சாதி எதிர்ப்பு, சாஸ்திரத்தையும் மதத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. மதம் – கடவுளால் உருவாக்கப்பட்டது என்று பதில் வந்தபோது, கடவுளையும் அதன் மீதான நம்பிக்கைகளுக்கும் எதிராக பெரியார் கிளர்ந்து எழுந்தார். பெரியாரை கடவுள் – மத – சாஸ்திர எதிர்ப்புக்கு இழுத்துச் சென்றது அவரது சாதி எதிர்ப்புக் கொள்கைதான்!

இச்சமுதாயம் மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக பொதுவாழ்க்கைக்கு வந்த பெரியார், தனது முதல் பணியாகக் கொண்டது, உலகில் வேறேங்கிலும் இல்லாத இந்த ஜாதி இழிவை ஒழிப்பதைத்தான். ஜாதி ஒழிப்பில் பெரியாரின் இலக்கும் மிகத் தெளிவானது.
ஆதிதிராவிடர்களின் நலனுக்காக தனிக் கிணறு, தனிப் பள்ளி தொடங்குவதற்கு காங்கிரஸ் செயல்திட்டம் வகுத்தபோது, ‘இது ஜாதி வேறுபாடுகளை நிரந்தரப்படுத்தி விடும். பொதுக்கிணற்றில் ஆதிதிராவிடர்களை தண்ணீர் எடுக்கச் செய்வதே சரியான வழிமுறையாகும்’ என்று காந்திக்குக் கடிதம் எழுதினார்.

இராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவந்தபோது, தமிழகம் முழுவதையும் திரட்டிப் போராடினார்.இராஜாஜியை பதவியை விட்டே துரத்தினார். ஜாதியைக் காப்பாற்றும் இந்திய அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினார். 

  முதுகுளத்தூர் கலவரத்தின்போது, அனைத்து அரசியல் கட்சிகளும் பசும்பொன் முத்துராமலிங்கத் (தேவர்)க்கு ஆதரவாக நின்றபோது,  தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக பெரியார் நின்றார். முத்துராமலிங்கத் (தேவரைக்) கைது செய்ய காமராஜரை வலியுறுத்தினார்.
அவரால் தீண்டாமைக்கு திண்டாட்டம் வந்தது பெண்ணுரிமை  முன்னுரிமை கொண்டது மூடநம்பிக்கை முகத்தை மூடிக்கொண்டது அவர் போட்ட கடவுள் இல்லை கூப்பாட்டில் கடவுள் எப்போதும் போல  கம்முனுதான் இருந்தார் கடவுள் பிரதிநிதிகள்தான்  தம் கட்டி வம்புக்கு வந்தார்  பழிப்போரை புறம் தள்ளி அறவழி காட்டி தன்னம்பிக்கை தந்ததாலே அவரும்  தந்தையானார்  பகுத்தறிவு தந்தையானார்

பெரியார் யாருக்கும், எந்த அடக்குமுறை சட்டத்துக்கும் ஒருபோதும் அஞ்சியதில்லை.  பதவி சுகத்துக்காக தனது கொள்கைகளை ஒருநாளும் கைவிட்டதில்லை. மான, அவமானத்துக்குப் பயந்து தான் சொல்ல வந்ததை மறைத்தவரில்லை. இந்த தமிழ்ச் சமுதாயம் உலகின் மற்ற சமுதாயத்தவர்களுக்கு இணையாக வளர்ச்சி பெற வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த நோக்கமும் அவரிடம் இல்லை. அதனால்தான் பதவி, சுயநலன் சார்ந்த அரசியல் மேலோங்கியிருக்கும் இச்சூழலில் பெரியார் முன்னிலும் அதிகமாகத் தேவைப்படுகிறார்.

இன்றளவும் சுயமரியாதை என்ற வார்த்தைக்கு தமிழகத்தில் ஒரு தனி மகத்துவம் இருக்கிறது என்றால், அது பெரியார் ஏற்படுத்திக் கொடுத்தது என்றே பார்க்கப்படுகிறது.அந்த வகையில், திராவிடம், சுய மரியாதை, மூட நம்பிக்கை மறுப்பு, எழுத்து சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, போன்ற பல மரபுகளே, அவர் தமிழர்களுக்காக விட்டுச் சென்ற செல்வங்களாக மதிக்கப்படுகின்றன.

அன்று தந்தை பெரியார் இட்ட விதைதான் இன்று நாம் அனுபவிக்கும் பல திட்டங்கள் விருட்சமாக வளர துணைபுரிந்தது. மேலும் சுய சிந்தனை உள்ளவர்களாகவும், சுய மரியாதையுடனும் வாழ வழிவகுத்தது என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழினத்தையும் பகுத்தறிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் பெரியாரின் இலக்கு நிறைவேறவில்லை என்றாலும், சமத்துவநெறியையும் சமூகநீதியையும் வலியுறுத்துகின்ற பகுத்தறிவாளர்ளையும் போராளிகளையும் உருவாக்கிய அரும்பணி பெரியார் அவர்களைச் சாரும். புதிய சிந்தனைகளும் போர்க்குணமும் கொண்ட சிறு தொகுதியினராவது இன்று தமிழத்தில் இருப்பதற்கு, அன்று வேரூன்றியவர் பெரியார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
சமூகச் சீர்திருத்தப் பொது அரசியலுக்கு வந்ததாலேயே அவரது சொத்துகளை எல்லாம் இழந்தவர் பெரியார். இன்று சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வருவோரை நினைத்தால் பெரியாரின் தேவை புரியும்.

இறப்பு:
‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.
வெளி இணைப்புகள்.

https://www.youtube.com/watch?v=YpS-pn01VHc

https://viganinnovation.blogspot.com/2019/03/blog-post_70.html

——————————————————————————————————————–

பெரியார் பிறந்த நாள் – சமூக நீதி பேசும் எங்கள் அறிவாயுதம்!

தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்…

Bruno Ennares

கேள்வி கேள்…சிந்தி…

– பெரியார்

உன் சாத்திரத்தை விட
உன் கடவுளை விட
உன் வெங்காயம் வெளக்கமாத்த விட
உன் அறிவு பெரிசு… அத சிந்தி..!
-#பெரியார்


Sasikumar

பெரியார் என்னும் பெருங்கடலே!
மானிட சமூகத்தின் மாபெரும் சொத்தே!
திராவிடர் முன்னேற்றத்தின் சுடர் ஒளியே!
அடங்காத அசுரனே!
சளைக்காத எந்திரனே!
அழகே! அறிவே! அன்பே! உயிரே!
ஈகையே! எழுச்சியே! பேரானந்தமே!
சிங்கமே! போராளியே!
பகுத்தறிவே!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

– சிறுதுளி

#பெரியார் வெறும் பெயரல்ல.
சமூக நீதி பேசும் எங்கள் அறிவாயுதம்.


காளைமாடு

இன்று தன்னை இகழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காகவும் இறுதி வரை போராடினார்..
இன்றும்
இறந்தும் இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் பெரியார்…

Naveen BBC

ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பால் வீழ்ந்து அடிமைபட்டுக் கிடந்த தமிழ்ச்சமூகம் தலைநிமிர்ந்து நிற்கும் தொடக்கமே தந்தை பெரியார்

தமிழன்

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.


கரிகாலன்

சிந்தனையும் சித்தாந்தத்தையும் எப்பொழுதும் யாராலும் அழிக்க முடியாது.


Vivek Muthusamy

கடவுளை மற மனிதனை நினை…

சிவசங்கரன் சு

பெண்களின் அழகையும் ஆடையையும் பற்றிப் பேசியவர்கள் மத்தியில் அவர்களின் மனதையும் உரிமையையும் பற்றிச் சிந்தித்தவன் நீ..

Dr.Safi Nagercoil

முன்னோரையும் ,முன் வழி வந்தோரையும்,
மூடத்தனத்தையும், இக்காலமும் நம்பித் திரியும் சில கூட்டத்திற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே அறிவியல் கற்பிக்க ஊக்குவித்தவர் இந்தக் கிழவன்
இந்தப் பகலவன் மட்டும் இல்லாது போயிருந்தால் தமிழ்ச் சமூகத்தின் நிலை?

Dr.Chengai E.Sathishkumar

தீண்டாமை ஒழிப்பு
சுயமரியாதை
மூடநம்பிக்கை ஒழிப்பு
பெண் கல்வி

ரத்னா

தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்;
அவர் தாம் பெரியார்
– பாவேந்தர் பாரதிதாசன்

Thamizhan Praba

மானம் கெடுப்பாரை
அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை
எங்கள் தந்தை பெரியார்

GENTLEMAN POSTS

யார் சொல்லியிருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும்
உனது புத்திக்கும்,
பொது அறிவுக்கும்,
பொருந்தாத எதையும்
நம்பாதே…

Golden words of ” பெரியார் “

https://www.hindutamil.in/news/blogs/579984-periyar-s-birthday-8.html

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply