தாலிபன்கள் யார்? ஆப்கனில் இவர்கள் மீண்டும் எழுச்சி பெற்றது எப்படி?

தாலிபன்கள் யார்? ஆப்கனில் இவர்கள் மீண்டும் எழுச்சி பெற்றது எப்படி?

6 ஜூலை 2021புதுப்பிக்கப்பட்டது 15 ஆகஸ்ட் 2021

தாலிபன்

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எல்லா இடங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்கள், தலைநகர் காபூலில் அமைதி வழியில் ஆட்சியை அரசாங்கம் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் முன்னோட்டமாக, தலைநகர் காபூலுக்கு வெளியே ஆயதங்களுடன் தமது போராளிகளை காத்திருக்குமாறு தாலிபன் தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

இதனால் கிட்டத்தட்ட எந்த நேரத்திலும் ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொள்ளும் நிலையில் இருப்பது உறுதியாகி விட்டது. ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கான நடைமுறைக்கு அரசு தயாராகி வருவதாக ஆப்கன் உள்துறை அமைச்சர் உள்ளூர் தொலைக்காட்சியில் தோன்றி பேசியிருக்கிறார்.

இந்த அளவுக்கு அரசாங்கத்தை அடிபணிய வைக்கும் நிலைக்கு தள்ளுவதற்கு தாலிபன்களால் எவ்வாறு முடிந்தது?

2001ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரால் ஆஃப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து தாலிபன்கள் அகற்றப்பட்டனர். பின்னர் அந்த நாட்டில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும் விதமாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு தாலிபன்களும் அமெரிக்காவும் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்துக்கு தாலிபன்கள் ஒப்புக் கொண்டனர்.அதன்பேரில், ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் வெளியேறத் தொடங்கின.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தங்களுடைய செல்வாக்கை நிலைநாட்டத் தொடங்கிய தாலிபன்கள், பல இடங்களில் தாக்குதல் நடத்தி முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர். இன்று கடைசி கட்டமாக காபூல் நகரை தாலிபன்கள் சூழ்ந்திருக்கிறார்கள். இந்த நிலைக்கு அவர்கள் வருவதற்கு 20 ஆண்டுகள் ஆகியுள்ளன.

அமெரிக்க முடிவால் எழுச்சி பெற்ற தாலிபன்கள்
தாலிபன்

அமெரிக்கா வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள், கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தி இருக்கும் அமெரிக்க துருப்புகளை முழுமையாக பின்வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தாலிபன்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் பல நகரங்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

2018ஆம் ஆண்டு தாலிபன் குழுக்கள் அமெரிக்காவுடன் தாலிபன்கள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 2020-ல் இரு தரப்பும் தோஹாவில் ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது.

தாலிபன்கள்

அதில் அமெரிக்கா தன் துருப்புகளை ஆஃப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்குவதாகவும், தாலிபன்கள் அமெரிக்க துருப்புகளின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் கூறப்பட்டு இருந்தது.

மேலும், அல்-காய்தா போன்ற மற்ற தீவிரவாத அமைப்புகளை, தாலிபன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எல்லைக்குள் இருந்து செயல்பட அனுமதிக்கக் கூடாது எனவும், ஆஃப்கானிஸ்தானின் தேசிய அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தாலிபன் படைகள், ஆஃப்கானிய பாதுகாப்புப் படைகள் மற்றும் மக்களை தொடர்ந்து இலக்கு வைத்து தாக்கியது. தற்போது அமெரிக்கா தன் துருப்புகளை பின் வாங்கி வருவதால், ஆஃப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆதிக்கம் அதிவேகமாக நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

அதிகாரத்துக்கு வந்த தாலிபன்கள்
தாலிபன்

ஆஃப்கானிஸ்தானில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின்வாங்கிய பிறகு, பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் 1990களில் தான் ‘தாலிபன்’ என்கிற பஷ்தோ சொல் உருவானது.

தொடக்கத்தில் தாலிபன் இயக்கத்தில் பஷ்துன்களே அதிகம் இருந்தனர். இந்த இயக்கம் கடுமையான சன்னி இஸ்லாத்தை போதித்தது. இந்த இயக்கத்துக்கு தொடக்கத்தில் செளதி அரேபியாவில் இருந்து நிதி உதவி கிடைத்தது.

தாலிபன் அதிகாரத்துக்கு வந்த பிறகு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவிக் கிடக்கும் பஷ்துன் நிலப்பரப்புகளில் அமைதியை மீட்டுக் கொண்டு வரவும், தங்களின் கடுமையான ஷரியா விதிகளை அமல்படுத்தவும் உறுதி கூறியது.

ஆஃப்கானிஸ்தானின் தென் மேற்குப் பகுதியில் இருந்த தாலிபன் அமைப்பு, மிக குறுகிய காலத்திலேயே தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டது. 1995 செப்டம்பரில் ஹெராத் என்கிற இரான் எல்லையை ஓட்டியிருக்கும் மாகாணத்தை கைப்பற்றியது.காணொளிக் குறிப்பு,

ஆப்கானிஸ்தானை எத்தனை நாட்களில் தாலிபன்கள் தங்கள் வசமாக்கினர்?

சரியாக அடுத்த ஓராண்டு காலத்தில் ஆஃப்கன் தலைநகரான காபூலைக் கைப்பற்றியது தாலிபன். அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் புர்ஹானுத்தீன் ரப்பானியை தூக்கி எரிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தார்கள். இந்த புர்ஹானுத்தின் தான் ரஷ்யாவுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன் அமைப்பை நிறுவி அவர்களை எதிர்த்து போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேகத்தில் 1998ஆம் ஆண்டில் ஏறத்தாழ 90 சதவீத ஆப்கானிஸ்தானை தாலிபன் அமைப்பு கைப்பற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

தொடக்க காலத்தில் தாலிபன்களின் வருகையை மக்கள் வரவேற்றனர். தாலிபன்கள் வந்த இடங்களில் எல்லாம் ஊழலை ஒழித்தனர். சட்டமில்லாமல் இருந்ததற்கு ஒரு முடிவு கொண்டு வந்தனர். சாலை வசதிகளை ஏற்படுத்தினர். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பாதுகாப்பாகவும் வணிக ரீதியாக செழித்து வளர முடிந்தது. எனவே மக்களும் அவர்களைத் தொடக்கத்தில் ஆதரித்தனர்.

அதே நேரத்தில் தாலிபன்கள் இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்ட தண்டனைகளை அறிமுகப்படுத்தினர் அல்லது ஆதரித்தனர். குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களை பொது வெளியில் கொல்வது, திருடுபவர்களின் கை கால்களை வெட்டுவது போன்ற தண்டனைகளை பின்பற்றப்பட்டன. ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மூடும் புர்காக்களை அணிய வேண்டும்.

தொலைக்காட்சி

டிவி, இசை, சினிமா போன்றவற்றை தாலிபன்கள் தடை செய்தனர். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதை அந்த அமைப்பு தடை செய்தது.

பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டன.

புத்தர் சிலையை சிதைத்த தாலிபன்

2001ஆம் ஆண்டு, மத்திய ஆஃப்கானிஸ்தானில் இருந்த உலகப் புகழ் பெற்ற பாமியன் புத்தர் சிலையை சிதைத்தது தாலிபன். இதற்கு சர்வதேச அளவில் மிகக் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.

பாகிஸ்தான் தான் தாலிபன் என்கிற அமைப்பு உருவாக காரணம், அந்நாடு தான் தாலிபன் அமைப்பை வடிவமைத்தது என பலரும் கூறிய போது, அதை திட்டவட்டமாக மறுத்தது பாகிஸ்தான்.

ஆனால் தாலிபன் அமைப்பில் ஆரம்ப காலகட்டத்தில் இணைந்தவர்கள் பலரும், பாகிஸ்தானில் இருக்கும் மதரஸா பள்ளிகளில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃப்கானிஸ்தான் நாட்டில், தாலிபன்களின் ஆட்சி இருந்த போது அதை அங்கீகரித்த மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அதைத் தவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியா ஆகிய நாடுகள் தங்கள் ஆதாவை வழங்கின. அதே போல தாலிபன் அமைப்புடனான ராஜீய உறவை முறித்துக் கொண்ட கடைசி நாடும் பாகிஸ்தான் தான் என்பது கவனிக்கத்தக்கது.

தாலிபன்

ஒருகட்டத்தில் பாகிஸ்தானையே நிலைகுலையச் செய்து விடுவோம் என மிரட்டியது தாலிபன் அமைப்பு.

2012 அக்டோபரில் பாகிஸ்தானின் மிங்கோரா எனும் நகரத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலா யூசுப்சாய் தாக்கப்பட்டதை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் பாகிஸ்தானிய தாலிபன் தாக்குதலை கண்டித்தது.

அடுத்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் தாலிபன்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில், தாலிபன்களின் ஆதிக்கம் கணிசமாக குறைந்தது.

2013ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹகிமுல்லா மெஹ்சூத் உட்பட மூன்று முக்கிய பாகிஸ்தான் தாலிபன் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

அல்காய்தாவுக்கு அடைக்கலம் கொடுத்த தாலிபன்

ஒசாமா பின் லேடன்

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, உலகின் கவனம் மீண்டும் தாலிபன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆஃப்கானிஸ்தான் மீது திரும்பியது. அல்-காய்தா தீவிரவாத அமைபுக்கும், ஒசாமா பின் லாடனுக்கும் அடைக்கலம் கொடுத்ததாக, தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த 2001 அக்டோபர் 7ஆம் தேதி அமெரிக்க ராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் படை கூட்டணி ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. டிசம்பர் முதல் வாரத்துக்குள் தாலிபன் ஆட்சி நிலைகுலைந்தது. அப்போதைய தாலிபன் அமைப்பின் தலைவர் முல்லா மொஹம்மது ஒமர், ஒசாமா பின் லாடன் உட்பட சில மூத்த உறுப்பினர்கள் எப்படியோ தப்பி ஓடினர்.

தாலிபனின் பல மூத்த தலைவர்கள் பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் தஞ்சம் புகுந்ததாக கூறப்பட்டது. அங்கிருந்து கொண்டு தாலிபன் இயக்கத்தை நடத்தி வந்தனர். ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது.

எத்தனையோ வெளிநாட்டு ராணுவ துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தாலும், தாலிபன் மெல்ல தன் செல்வாக்கைப் பெற்று தன் அதிக்கத்தை ஆஃப்கானிஸ்தான் மண்ணில் விரிவாக்கிக் கொண்டது.

ஹகிமுல்லா மெஹ்சூத்

கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பரில் காபூலில் பல்வேறு தாலிபன் தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறின. இதில் கேம்ப் பேசின் பேஸ் தாக்குதல் குறிப்பிடத்தக்கது. தாலிபன் குழுவினர் நேட்டோ படைகள் மீதே நடத்திய தாக்குதல் இது.

கத்தாரில் தாலிபன்கள் ஒரு அலுவலகத்தை தொடங்குவது தொடர்பாக அறிவித்த போது, 2013-ல் அமைதி தொடர்பாக சில பேச்சு வார்த்தைகள் நடந்தது. ஆனால் மறுபக்கம் வன்முறை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

கடந்த ஆகஸ்ட் 2015-ல் தாலிபன் குழுவின் முக்கிய தலைவரான முல்லா ஒமரின் மரணத்தை மறைத்ததாக ஒப்புக் கொண்டது. அவர் பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக மரணமடைந்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து துணைத் தலைவராக இருந்த முல்லா மன்சூர் தாலிபன் குழுவின் தலைவரானார். இதே காலகட்டத்தில், மிக முக்கிய நகரங்களில் ஒன்றான குண்ட்ஸை வெற்றி கொண்டது தாலிபன்.

இது 2001ல் தாலிபன் சந்தித்த தோல்விக்குப் பிறகு காணும் முக்கிய வெற்றிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு மே மாதம் முல்லா மன்சூர் ஒரு அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது இடத்தை மற்றொரு தாலிபன் தலைவரான மெளலவி ஹிபாத்துல்லா அகுந்த்ஸாதா என்பவர் வந்திருக்கிறார். இப்போதுவரை இவர் தன் தாலிபன் இயக்கத்தின் தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார்.

பின்வாங்கும் அமெரிக்க படைகள்
அமெரிக்கா

பிப்ரவரி 2020 அமெரிக்கா தாலிபன் அமைதிப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, தாலிபன் சிக்கலான தாக்குதல் நடத்துவதை கைவிட்டது. நகரங்கள் மீது, ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதை விடுத்து, தனி மனிதர்களை இலக்கு வைத்து தாக்கத் தொடங்கியது.

பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், அமைதி செயற்பாட்டாளர்கள், அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் என இலக்கு வைத்து தாக்கத் தொடங்கியது. இது தாலிபன்கள் தங்களில் தீவிரவாத கொள்கையில் இருந்து மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.

வெளிநாட்டுப் படைகள் இல்லையெனில், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தாலிபன்கள் கைப்பற்றிவிடலாம் என ஆஃப்கானிஸ்தான் அதிகாரிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் 2021-ல், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க துருப்புகளும் பின்வாங்கப்படும் எனக் கூறினார்.

ஏற்கனவே பல்வேறு நாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கிவிட்டன. எனவே தாலிபன்கள் பல்வேறு நிலப்பகுதிகளை ஆக்கிரமித்தனர்.

நேட்டோவின் மதிப்பீடுகள் படி, தற்போது 85,000 முழு நேர போராளிகள் தாலிபனில் உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலப்பகுதிகளை வரையறுப்பது கடினம்.

இருப்பினும் ஆஃப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு முதல் ஐந்தில் ஒரு பங்கு வரை தாலிபன்கள் நேரடியாக கட்டுப்படுத்தி வருவதாக சமீபத்தைய கணிப்புகள் கூறுகின்றன.

பலரும் எதிர்பார்த்ததை விட அதிவேகமாக தாலிபன்களின் விரிவாக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் மோசமான உள்நாட்டுப் போரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, அமெரிக்க படைகளை வழி நடத்திய ஜெனரல் ஆஸ்டின் மில்லர் என்பவர் கடந்த ஜூன் மாதம் எச்சரித்தார். மேலும் இது ஒட்டு மொத்த உலகத்துக்கே கவலையளிப்பதாக அமையலாம் எனவும் கூறியுள்ளார்.

அதே மாதம் வெளியான அமெரிக்காவின் புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கையில், அமெரிக்க ராணுவம் ஆஃப்கானிஸ்தானை விட்டுச் சென்ற பிறகு, அடுத்த ஆறு மாத காலத்துக்குள், ஆப்கானிஸ்தான் அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அந்த ஊகம், தற்போது உண்மையாகி வருகிறது.

பிற செய்திகள்:

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply