தலித்துகள் உட்பட பல சாதிகளை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம்: இதன் வரலாறு என்ன?

தலித்துகள் உட்பட பல சாதிகளை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம்: இதன் வரலாறு என்ன?
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

14 ஆகஸ்ட் 2021

பூசை செய்யும் அர்ச்சகர்
படக்குறிப்பு,அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் கனவுக்கு ஒரு வரலாறு உண்டு.

பட்டியலினத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கியிருக்கிறார்.

சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆலயங்களில் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் திட்டத்தின் கீழ், அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று பல்வேறு வழக்குகளால் பணி நியமனம் கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருந்த பலருக்கும் பணி நியனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற 28 பேருக்கு இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதில் 24 பேர் அர்ச்சகர்களாகவும் 4 பேர் மடப்பள்ளியிலும் பணிகளைப் பெற்றனர். இருபத்தி நான்கு பேரில் 5 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுதவிர, ஓதுவார், வாத்தியங்களை இசைப்போர் உள்பட திருக்கோயில் பணிகளுக்குத் தேவைப்படும் பல்வேறு பணியிடங்களுக்கும் நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பணி ஆணைகளை வழங்கிய இந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட பல்வேறு மடாதிபதிகளும் கலந்து கொண்டனர். இதில் பேசிய குன்றக்குடி அடிகளார், ‘கடவுளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மு.க. ஸ்டாலின் செயல்படுவதாக’ கூறினார்.

2000ஆம் ஆண்டில் விதைக்கப்பட்ட விதை நனவாகியிருப்பதாகவும் தமிழ்நாட்டின் ஆன்மிக தலங்கள் இதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் மொத்தமாக 207 பேர் படித்து முடித்தனர். இவர்களில் 2 பேர் ஏற்கனவே பணி வாய்ப்பைப் பெற்றுவிட்டனர். ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேர் வேறு அரசு வேலைகளுக்குச் சென்று விட்டனர். மீதமுள்ள 196 பேர் அர்ச்சகர் பணிக்காக காத்திருந்தனர்.

அபிஷேகம் செய்யும் அர்ச்சகர்

இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள பல்வேறு கோயில்களில் அர்ச்சகர் பணியில் சேர்வதற்கான அறிவிப்புகள் வெளியாயின.

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்றவர்களில் சுமார் 50 பேர் இந்த வேலைகளுக்காக விண்ணப்பித்தனர். அதில் முதல் கட்டமாக 28 பேருக்கு தற்போது பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

“நான் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்து, பல ஆண்டுகளாகியும் வேலை கிடைக்காததால், ஒரு பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் படிப்பில் பட்டயம் பெற்றேன். அதற்குப் பிறகு திருப்பெரும்புதூர், ஓரகடத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்தேன். இந்த நிலையில்தான் மீண்டும் அர்ச்சகராகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த நாராயணன்.

இவர் பயின்ற மந்திரங்கள் மறந்துபோகாமலிருக்க அவ்வப்போது வேறு பூசகர்களுடன் சேர்ந்து சிறிய கோவில்களில் வேலை செய்வது, யாகங்களுக்குச் செல்வது என பணியாற்றியிருக்கிறார். இவரைப் போலவே, இனிமேல் தங்களுக்கு இந்த வேலை கிடைக்காது என மனம் நொந்து போயிருந்த பலரும் அர்ச்சகர் பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அர்ச்சகர்களுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டதும் பல்வேறு அமைப்புகள் இந்த நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தன. நீதிமன்றங்களில் இடைக்காலத் தடையைப் பெறவும் முயற்சித்தன. இருந்தபோதும் இந்தச் சிக்கல்களைத் தாண்டி, 24 பேர் அர்ச்சகர்களாக பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

“அனைத்து சாதியினரும் அர்ச்சகர்” – பின்னணி

அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறிவந்த பெரியார், 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இதற்காக கிளர்ச்சி ஒன்றை அறிவித்தார்.

தந்தை பெரியார்
படக்குறிப்பு,தந்தை பெரியார்

தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் இந்தப் போராட்டம் நடக்குமென்றும் திருநீறு பூசித்தான் கோயில்களில் நுழையலாம் என்றால் தொண்டர்கள் பூசிக்கொள்ளலாம் என்றும் பெரியார் கூறினார்.

இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் பெரியார் தன் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

எல்லோரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் இந்தச் சட்டம், ஏற்கனவே இருந்த இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டத்தின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தச் சட்டம்தான். இதற்கான மசோதா 2.12.1970 அன்று தமிழக சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் முக்கிய கூறு, இந்துக் கோயிவில்களின் எல்லா பகுதிகளின் நியமனத்திலும் பாரம்பரிய (வாரிசு அடிப்படையில் நியமனம்) கொள்கையை நீக்குவது (பிரிவு55ல் செய்யப்பட்ட திருத்தம்).

இந்தச் சட்டத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எம். சிக்ரி, ஏ.என். குரோவர், ஏ.என். ரே, டி.ஜி. பாலேகர், எம்.எச். பெக் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து 1972 மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர்.

ஒரு கோயிலில் அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, ஆகமங்களை மீறி அறங்காவலர் நியமனங்களை மேற்கொள்ள மாட்டார் என்று அரசு கூறியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குறிப்பிட்ட இனம், உட்பிரிவு, குழுவிலிருந்தே அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியது. ஆனாலும் மனுதாரரின் அச்சத்திற்கு இப்போது அவசியமில்லை என்று கூறி சேஷம்மாளின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

சட்டத்தை எதிர்த்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தோன்றினாலும் ஆகமத்திற்கு உட்பட்டே நியமனங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த உத்தரவு வலியுறுத்தியது.

மு கருணாநிதி
படக்குறிப்பு,மு கருணாநிதி

இந்த நீதிமன்ற உத்தரவை பெரியார் கடுமையாக விமர்சித்தார். 1973 டிசம்பர் 8-9ல் பெரியார் திடலில் நடந்த தமிழர் சமுதாய இழிவு மாநாட்டில் பேசிய பெரியார், நண்பர் கருணாநிதி கொண்டுவந்த சட்டத்தை நீதிமன்றம் செல்லாது என்று ஆக்கியதால் ஆத்திரம் அதிகமாவிட்டதாகக் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அரசியல் சாசனப் பிரிவு 25ஐப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்குவதற்கு ஏதுவாக அந்தப் பிரிவை நீக்க வேண்டுமென கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்த ஆரம்பித்தார். பிரதமருக்கு கடிதங்களை எழுதினார். ஆனால் பிரிவு திருத்தப்படவில்லை.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பிறகு 1982ல் நீதியரசர் மகாராஜன் தலைமையில் கோயில் வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவும் அனைத்து சாதியினரும் உரிய பயிற்சிக்குப் பிறகு அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்று கூறியது. ஆனால், அதற்கு முன்பாக அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 -2ல் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கூறியது.

இதற்குப் பிறகு பல ஆண்டுகள் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2002ல் ஆதித்யன் Vs கேரள அரசு என்கிற வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதின்றம், “ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் போன்றவை ‘எல்லோரும் சமம்’ என்ற இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்ட ரீதியாக செல்லாது என்று கூறி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க முடியும் என்று தீர்ப்பளித்தது.

இதற்குப் பிறகு, 2006ஆம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அரசாணையை வெளியிட்டது. இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாட திட்டம், பயிற்சிக் காலம், கோயில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது.

சென்னை பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்
படக்குறிப்பு,சென்னை பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்

இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோயில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்தபோது ஒவ்வொரு நாளும் நேர்காணலுக்கு 300 பேருக்கு மேல் வந்தனர். இவர்களில் இருந்து ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தார்கள். இந்த 240 பேரில் எல்லா சாதியினரும் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன.

“எங்களுக்கு நேர்காணல்களைச் செய்யும் குழுவில் அதிகாரிகளுடன் பல அர்ச்சகர்களும் இருந்தனர். ஆனால், பயிற்சி என்று வரும்போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். தங்களது சங்கத்தினர், மற்ற சாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது என கூறி விட்டதால் தங்களால் பயிற்சியளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.

பிறகு பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா என்ற பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். அவர் பயிற்சியளிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது. பிறகு அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது.

பூஜை செய்யும் பூசாரி
படக்குறிப்பு,பூஜை செய்யும் பூசாரி

அதேபோல முறைப்படி பூஜை செய்து பயிற்சி செய்வதற்காக அறநிலையத் துறையிடம் கடவுளின் திருவுருவங்களைச் செய்து தரச் சொன்னோம். அவர்கள் செய்து கொண்டுவரும் வழியில், அதனைத் தடைசெய்தார்கள்.பிறகு நாங்களே திருவுருவங்களை செய்து வைத்து பூஜை பயிற்சியைச் செய்தோம். இவ்வளவு தடைகளுக்கு மத்தியில்தான் பயிற்சியை முடித்தோம்” என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன்.

ஆனால், இதற்குள் இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் ஆண்டு தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த சமயத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார் ரங்கநாதன்.

2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழக கோயில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்” உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை.

பிரசாதம் கொடுக்கும் அர்ச்சகர்

இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டார்.

2008ஆம் ஆண்டு தீட்சை பெற்ற பிறகு, அரசு அர்ச்சகர் பணிவாய்ப்பு எதையும் வழங்காத நிலையில், சிறிய தனியார் கோயில்களில் பணியாற்றுவது, வேறு வேலைகளைச் செய்வது என்றே இந்த பயிற்சி மாணவர்களின் வாழ்க்கையைக் கழிந்திருப்பதாகச் சொல்கிறார் ரங்கநாதன். இவர்களில் பெரும்பாலானவர்கள் 35 வயதை எட்டிவிட்டனர்.

இந்த நிலையில், தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் சேகர் பாபு, “பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்” என்று சொல்லியிருந்தார்.

அதன்படி தி.மு.க. அரசு பதவியேற்ற நூறாவது நாளான இன்று இவர்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பயிற்சியை முடித்த பலருக்கு வயது 35ஐத் தாண்டியிருப்பதால் இந்த முறை அவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை.

சட்டப்போராட்டங்களின் காரணமாக காலம் கடத்தப்பட்டு விட்டதால் தங்களுக்கு வயது வரம்பில் விலக்குத் தர வேண்டும் என இவர்களில் பலர் கோரியிருக்கின்றனர்.காணொளிக் குறிப்பு,

அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கும் திட்டம்: பணி நியமன ஆணைகள் வழங்கிய மு.க.ஸ்டாலின்.

https://www.bbc.com/tamil/india-58212798

——————————————————————————————————————–

இலங்கநாதன் குகநாதன்

ஆவாகனம்:- ‘ அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற திட்டத்தின் கீழ் ஆகம விதிகளை/ நெறிகளை ஒழுங்காகப் படித்துச் சான்றளிக்கப்பட்ட பார்ப்பனரல்லாதோர் சிலர் கோயில்களில் பூசகராக அமர்த்தப்பட்டமை தெரிந்ததே. இவர்களுக்குப் பயிற்சியளித்தவர்களும் கூடச் சிவாச்சாரியார்கள்தான். இவ்வாறு பிற சாதியினர் நுழைந்தத கோயில்கள் 1% இற்கும் குறைவே. இன்னமும் 99% ஆன பெருங் கோயில்கள் அவா பிடியிலேயே உள்ளது. இந்தச் சிறுமாற்றத்தினைக் கூடப் பொறுக்க முடியாமல்தான் படத்திலுள்ள பார்ப்பனர் பின்வருமாறு கூறியுள்ளார். ” சிவாச்சாரியார்களே! பட்டாச்சாரியார்களே! எல்லோரும் பூசை செய்யத் தொடங்கியபடியால் கடவுளை ஆவாகனம் செய்து கோயிலிருந்து வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுங்கள்”.

இதுதான் அவரது கூற்றின் பிழிவு. அதாவது இனிக் கோயில்களில் கடவுள் இல்லை என்கிறார். எனக்குப் பெரியார் அன்று சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது; அவர் சொன்னது: ………………” நாளையே அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகினால், கடவுள் இல்லை என முதலில் சொல்வது பார்ப்பானாகத்தான் இருப்பான் ” ……………பெரியாரின் ஆவதறியும் திறனைக் கண்டு வியக்கின்றேன். இதனைத்தான் திருமூலரும் கூறினார்…….

” பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் ,

போர் கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம்.

பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே

சீர் கொண்ட நந்தி தெரிந்தே உரைத்தானே ” ……….

( திருமூலரின் திருமந்திரத்திலும் ஆவாகனம் என்ற சொல்லுண்டு, அது எழுந்தருளல்/ நினைவுகூர்தல் என்ற பொருளில் வரும். படம்2).பாரதியார் கூட இதனால்தானோ என்னவோ பின்வருமாறு பாடினார். …

.”பேராசைக்காரன்டா பார்ப்பான்…………..பிள்ளைக்குப் பூநூலாம் என்பான் நம்மைப் பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்..” ….

ஒரு விழுக்காட்டிலும் குறைவான மாற்றத்துக்கே இப்படி என்றால் மாற்றம் அரைப் பங்கினைத் தொடும் போது என்னவெல்லாம் நடக்குமோ!

சரி, இது எல்லாம் போகட்டும். ஆவாகனம் செய்து கடவுளை தங்கடை ஆத்துக்கு ( வீட்டுக்கு) கொண்டு போகும் ஆற்றலைப் பயன்படுத்தி, கடவுளை பற்றாளர்களின் வீடுகளுக்கே அனுப்பிவிட்டால், இப் பெருந் தொற்றுக் காலத்தில் பெரும் பேறு கிட்டுமே! செய்யுங்களேன். வேண்டுமானால் மொத்தமாக ஒரு தொகையினை வாங்கிக் கொண்டு செய்து விடுங்க!

ஒரு போதும் செய்ய மாட்டார்கள். முட்டையிடும் வாத்தினை வெட்டிப் பார்க்க , அவர்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல. நாம்தான் கடைந்தெடுத்த மடையர்கள், இன்னமும் எம்மில் பலர் அவா பூசை செய்தால்தான் ஆச்சு என அடம் பிடிக்கிறோமே!

——————————————————————————————————————–

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply