பொங்கல் புத்தாண்டு விழா தமிழர்களின் பண்பாட்டுக் கோலம்!

பொங்கல் புத்தாண்டு விழா தமிழர்களின் பண்பாட்டுக் கோலம்!

நக்கீரன்

பொங்கல் விழா இன்று முன்னையை காலங்களை விடப் பரவலாகத் தமிழ் மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இன்று தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றின் மீதுள்ள பற்றும் தமிழின உணர்வும் தமிழ்மக்களிடம் மேலோங்கிக் காணப்படுவதே.

பொங்கல் விழாவோடு தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் –  திருவள்ளுவர் பிறந்த நாள் – எனச் சேர்த்துக் கொண்டாடப்படுவது மறைமலை அடிகளார் காலத்தில் இருந்து வரும் வழக்கமாகும்.

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள்  மூன்று முக்கிய முடிவுகளை அப்போது எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கிமு 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 அய்க் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு)

1971 இல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்ப்படுத்தப்பட்டு வருகின்றது. 1969 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதால் தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என நடைமுறைப்படுத்திடும் சட்டத்தை தமிழக அரசு கடந்த 1.2.2008 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

இன்று தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்,  பொங்கல் திருநாள், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகத் தமிழ் மக்களால் சிறப்பாகவும், இனிப்பாகவும் சர்க்கரைப் பொங்கலுடன் உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள், இனித் தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சர்க்கரைப் பொங்கல் அடம் செய்வதற்குத் தேவையான பச்சரிசி,  வெல்லம், பாசிப் பருப்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகிய பொருட்களை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் எல்லாக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுத்து வருகிறது.  இதனால் சமூகத்தின் கடைநிலைக் குடும்பங்களும் பொங்கல் பொங்கி பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு வழிசெய்துள்ளது. 

இது தொடர்பாக  கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

‘பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள் இனி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி வண்ண வண்ணக் கோலங்கள் இட்டு, வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட மழலையர், மாணவர், மங்கையர், மகிழ்ச்சியில் தோய்ந்து, புத்தாடை புனைந்து, தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும் ஆடியும் சமத்துவ உணர்வு பரப்பியும் தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் எனும் அவ்வகை நிகழ்ச்சிகள் நினைவை விட்டு அகலா வண்ணம் நீக்கமற நிறைந்திடட்டும்!

தமிழ்ப் புத்தாண்டு நாளைத் தமிழர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் இடங்களில் எல்லாம் விழாவெடுத்துக் கொண்டாட வேண்டும் எனத் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையப் பறைசாற்றும் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளை மாநிலமெங்கும் உள்ள மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள், பட்டிதொட்டிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அவரவர் வசதிக்கேற்ப கொண்டாடி மகிழ வேண்டும்’ என முதல்வர் கருணாநிதி தமது விழைவினைத் தெரிவித்துள்ளார்.

பொங்கல் தமிழர்க்கே உரித்தான தனித்துவமான விழாவாகும்.  தமிழ் மக்கள் சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினாலும் பொங்கல் விழாவே சமயம் சாராத பகுத்தறிவுக்கு ஒத்த பெரு விழாவாக, கழனி திருத்தி, எருவிட்டு, வரம்பு கட்டி, உழுது, விதைவிதைத்து நெல்மணிக் கதிர்களை அறுவடைசெய்ய உதவியாக இருந்த ஞாயிறுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகக்  கொண்டாடப் பட்டு வருகிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அந்த விழாவும் உழவர்களுக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் கொண்டாடப்படும். மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற பொருளும் உண்டு.

நாங்கள் புலம்பெயர்ந்து வேறுபட்ட சூழலில் வாழ்ந்தாலும் எமது பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் பொங்கல் போன்ற இனிய  விழாக்களைக் கொண்டாடுவதன் மூலம் எங்களது மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை நாம் பேணிக் காப்பாற்ற முடியும். இப்படியான விழாக்களை நாம் கொண்டாட மறந்தால், அவற்றை நாம் கைவிட்டால் எங்கள் மொழி, கலை, பண்பாடு காலப் போக்கில் அழிந்து போகும் ஆபத்து  இருக்கிறது. முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மொழி, கலை, பண்பாட்டை இழந்து தமிழர் என்ற அடையாளத்தையே தொலைத்து இருக்கிறார்கள். அது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். ;

இந்தப் பொங்கல் விழாவின் இன்னொரு சிறப்பும் முக்கியத்துவமும் யாதென்றால் இந்த நாளை தமிழின விடியலுக்காக தங்கள் இன்னுயிரை ஈகை செய்த விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) வின் நினைவு நாளாகவும் உலகம் முழுதும் நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு தளபதி கிட்டுவும் அவரது தோழர்களான மேஜர் வேலன், கேணல் குட்டிஸ்ரீ, கடற்புலி கப்டன் றோசான், கடற்புலி கப்டன் அமுதன், கடற்புலி லெப். நல்லவன், கடற்புலி கப்டன் குணசீலன், கடற்புலி கப்டன் நாயகன் ஆகியோர் மறைந்த 18 ஆவது நினைவு ஆண்டாகும்.

இந்த ஆண்டுப் பொங்கல் எமது தாயக  உறவுகளுக்கு எள்ளளவும் இனிப்பான பொங்கல் அல்ல என்பது தெரிந்ததே. தமிழீழத்தில் போர் முடிவுக்கு வந்தாலும்  எமது உறவுகள் சிங்களக் கொடுங்கோல் ஆட்சியில்  சிக்கி உண்ணப் போதிய  உணவின்றி உடுக்கத் துணியின்றி இருக்க இடமின்றி நோய்க்கு மருந்தின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் அல்லல்படுகிறார்கள். இரண்டரை இலக்கம் மக்களை மீள் குடியேற்றம் செய்து விட்டோம் என்று சிங்கள அரசு சொன்னாலும் அவர்களில் பெரும்பாலோர் உற்றார் உறவினர் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும்  தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

 மூதூர் கிழக்கில் 2006 ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்த 2,500 குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மக்கள் வேடர்கள் போல் எந்த அடிப்படை வசதிகளுமின்றி தெருவோரங்களில் வாழ்கிறார்கள். சம்பூரில் வாழ்ந்த மக்களின் வீடுவாசல்கள் இடிக்கப்பட்டு அந்த மக்களுக்குச் சொந்தமான 10,000 ஏக்கர் நிலம் சிங்கள அரசினால் கையகப்படுத்தப்பட்டு உயர்பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் 500 MW ஆற்றல் வாய்ந்த  அனல்மின் உலை கட்ட இந்திய அரச நிறுவனமான தேசிய வெப்ப ஆற்றல் குழுமமும் (National Thermal Power Corporation (NTPC)  ஸ்ரீலங்கா அரசு சார்பாக இலங்கை மின்சார அவையும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. இதற்கான முதலீட்டை இரண்டு நாடுகளும் அய்ம்பதுக்கு அய்ம்பது விழுக்காட்டில் செய்ய இருக்கின்றன.   அமெரிக்க டொலர் 500 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் உலை சம்பூர் மக்களைப் பொறுத்தளவில் மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இருக்கிறது.

இரக்கமற்ற சிங்களத்தின் கொடுங்கோல் ஆட்சியில் வடக்கும் கிழக்கும் சிங்களக் குடியேற்றங்களினால் படு வேகமாக சிங்கள மயப்படுத்தப் பட்டு வருகிறது. வரலாற்றுப் புகழ்பெற்ற திருகோணமலை கன்னியா சுடுதண்ணீர் கிணறுகளை சிங்கள அரசின் தொல்பொருள் திணைக்களத்தின் பெயரில் திருகோணமலை அரச அதிபர் கையகப்படுத்தியுள்ளார்.  யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊர் பேர் தெரியாத சிங்களவர்கள் அரச செலவில் முடிக்குரிய காணிகளில் குடியேற்றப்படுகிறார்கள்.

சிங்கள தேசிய கீதம் ஆயுதமுனையில் தமிழர்களது தொண்டைக்குள் திணிக்கப்படுகிறது. வடக்கில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் என மக்கள் வதைக்கப்படுகிறார்கள். வேலியே பயிரை மேய்வது போல யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளின் புலனாய்வுத் துறையே இத்தகைய கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இவை யாவும்  இலங்கை பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்ற பேரினவாதக் கோட்பாட்டை எதிரொலிக்கிறது. 

பிறக்கப் போகும் இந்தப் புத்தாண்டில் எமது தாயக உறவுகளின் இன்னல்கள், துன்பங்கள் துயரங்கள், அல்லல்கள், அவலங்கள், அனர்த்தங்கள் தொலைந்து அவர்களது வாழ்வில் இன்பம் பொங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களைப் பிடித்த பீடுகள் அனைத்தும் மறைந்தொழியும் என நம்புகிறோம்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கடந்த பல ஆண்டுகளாக (2009, 2010 நீங்கலாக) தமிழர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்க் கலை பண்பாடு ஆகியவற்றின் காப்பைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் இயங்கி வருகிறது. 

இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசுவதில்லை என நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் பேசியது.

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் சிறப்பினை, அதன் இலக்கிய வளத்தை, உலக அறிஞர்கள் போற்றிப்  பெருமை செய்கின்றனர்.  ஆனால் தமிழர்களுக்குத் தமிழ்மொழியின் அருமை பெருமை சீர் சிறப்புத் தெரியாது இருக்கிறது.

அடுத்து உங்கள் உறவு முறைகளைத் தமிழில் கூறுங்கள். டடி, மமி எங்களுக்கு வேண்டாம். அப்பா அம்மா என்று அழகு தமிழில் அழையுங்கள். அங்கிள் ஆன்ரி வேண்டாம். மாமா மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள். திருநாவுக்கரசர் இறைவனை ‘அப்பன்நீ, அம்மைநீ, அய்யனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ’ என்று பாடியிருப்பது மனங்கொள்ளத்தக்கது.

உங்கள் பிள்ளைகளுக்குச் சொற்சுவையும் பொருட்சுவையும் ஓசைநயமும் நிறைந்த தனித் தமிழ்ப் பெயர்களை வையுங்கள். இப்படிச் செய்வது நீங்கள் அன்னைத் தமிழுக்குச் செய்யக்கூடிய குறைந்தளவு தொண்டாகும். தமிழ்க் குழந்தைகளின் பெயர் பெரும்பாலும் வடமொழியாய் இருப்பதற்கு சோதிடம், சாதகம்,  நாள்,  நட்சத்திரம், எண் கணியம் போன்ற மூடநம்பிக்கைகளை நம்புவது காரணமாகும்.

எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை எம்மவர் உணர்ந்திலர். ஆசா, கோசா, யூரேனியா, நிரோஜன், நிரோஜினி, நிஷாந்தன், அபிஷா, டில்ஷன், டில்ஷி, அஸ்வின், அஸ்வினி எனப் பொருள் இல்லாத அல்லது முறைகேடான பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு வைக்காதீர்கள். நிரோஜன் என்றால் ரோசமற்றவன் எனப் பொருள். நிரோஜினி என்றால் ரோசமற்றவள் என்று பொருள். அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள். மேலும்  அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதாகும்.

பெற்றோர்களுக்குத் தமிழ் எது வடமொழி எது என்ற குழப்பம் இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது. பெயர்களில் ஜ,ஸ,ஷ,ஹ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துக்கள் இருந்தால் அவை வடமொழிப் பெயர்களாகவே இருக்கும். மேலும் தமிழில் சொற்களுக்கு முன்வராத ட, ர, ல, ங, ண, ழ, ள, ற, ன எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தமிழ்ச் சொற்களாக இருக்க முடியாது.

தமிழில் அழகான, இனிமையான, பொருள் நிறைந்த பெயர்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கின்றன. அரசி, அருளரசி, அன்பரசி, தமிழரசி, கலையரசி, கலைமகள், திருமகள், நிலமகள், நாமகள், பூமகள், வள்ளி, கோதை, நிலா, அரசன், மாறன், அழகன், முருகன், கண்ணன் எனச் சின்னக் குழந்தைகளுக்கு நல்ல நல்ல வண்ணப் பெயர்கள் இருக்கின்றன.

உங்கள் திருக்கோயில் வழிப்பாட்டைத் தமிழில் செய்யுங்கள். கடவுளர்க்கு மொழிச் சிக்கல் இல்லை. அவர்களுக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாகத் தமிழ்மொழி தெரியும். “அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலாம் எமைச் சொற்தமிழில் பாடுக” எனச் சிவபெருமானே சுந்தரரைக் கேட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியுள்ளார்.

திருமணங்களைத் தமிழில் செய்து கொள்ளுங்கள். தமிழர்களது திருமணங்களில் விளங்காத வடமொழிக் கூச்சல் வேண்டாம். அம்மி வேண்டாம். வடநாட்டு அருந்ததி வேண்டாம். தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தை அணுகினால் நாங்கள் எந்தத் தட்சணையும் வாங்காமல் திருக்குறள் மந்திரம் ஓதித் தமிழ்முறைத் திருமணங்களை எளிய முறையில் நடத்தி வைப்போம்.

எங்கள் மொழியையும் பண்பாட்டையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உண்டு என்பதை மறவாதீர்கள்.

இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் தமிழீழம் தனியொரு நாடாக மலரும் அங்கு வாழும் எம் உறவுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இந்தப் புத்தாண்டில் எங்கள் தாயக மக்கள் உட்பட உலகளாவிய தமிழ்மக்களது வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பொங்கட்டும். இடர் நீங்கி இனிமை பெருகட்டும் என வாழ்த்துகிறோம்.


தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!

மிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!

“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?

பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.

‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’ என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.

அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.

இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் – என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.

தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.(A Social History of the Tamils-Part 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு – அதாவது 24 மணித்தியாலங்களோடு – அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)

(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.

தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA – FONKARA – என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.

தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.

பருப்புத் தவிடு பொங்க – பொங்க, அரிசித் தவிடு பொங்க – பொங்க என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில்‘HONGA-HONGA’ என்றே பாடுகிறார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? – தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .

– என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!

——————————————————————————————————————–

“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”

பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்!

இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகி;ன்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது.

பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.

“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” – என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.

“இல்லை – நான் ஏற்றுக் கொள்கின்றேன்”என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)

தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது.

அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும், புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட, தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன.

இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.

அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் – எதையும் – எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.

தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன.

முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு – மலேசியச் சிறப்பு மலர், தமிழர் – யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன.

சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன. – சபேசன் (மெல்பேர்ண் – அவுஸ்திரேலியா)


About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply