அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்: காத்திருப்பு முடிவுக்கு வருமா?
8 ஜூன் 2021
தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் கோவில்களில் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த மாணவர்கள் 12 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்களில் பணிபுரியும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர். தகுதியின் அடிப்படையில் தங்களை கோவில்களில் நியமிக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப் படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, இதற்கென திறக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் தங்கள் நியமனத்திற்காகக் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.
“இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்தபோது ஒவ்வொரு நாளும் நேர்காணலுக்கு 300 பேருக்கு மேல் வந்தனர். இவர்களில் இருந்து ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தோம்” என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன். இந்த 240 பேரில் எல்லா ஜாதியினரும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பயிற்சிகள் நடப்பது எளிதாக இருக்கவில்லை என்கிறார் ரங்கநாதன்.
“எங்களுக்கு நேர்காணல்களைச் செய்யும் குழுவில் அதிகாரிகளுடன் பல அர்ச்சகர்களும் இருந்தனர். ஆனால், பயிற்சி என்று வரும்போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். தங்களது சங்கத்தினர், மற்ற ஜாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது என கூறிவிட்டதால் தங்களால் பயிற்சியளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். பிறகு பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். அவர் பயிற்சியளிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது. பிறகு அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது.
அதேபோல முறைப்படி பூஜை செய்து பயிற்சி செய்வதற்காக அறநிலையத் துறையிடம் கடவுளின் திருவுருவங்களைச் செய்துதரச் சொன்னோம். அவர்கள் செய்து கொண்டுவரும் வழியில், அதனைத் தடைசெய்தார்கள்.பிறகு நாங்களே திருவுருவங்களை செய்துவைத்து பூஜை பயிற்சியைச் செய்தோம். இவ்வளவு தடைகளுக்கு மத்தியில்தான் பயிற்சியை முடித்தோம்” என்கிறார் ரங்கநாதன்.
ஆனால், இதற்குள் இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த சமயத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார் ரங்கநாதன்.
2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்” உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை.
இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
“பயிற்சி பெற்ற 207 பேரில் 2 பேர் சிறிய கோவில்களில் பணிவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஐந்து பேர் இறந்து போய்விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேருக்கு வேறு அரசு வேலைகள் கிடைத்திருக்கின்றன. மீதமுள்ள 196 பேர் தொடர்ந்து இதற்காகப் போராடிவருகிறோம்” என்கிறார் ரங்கநாதன்.
2008ல் தீட்சை பெற்ற பிறகு, அரசு அர்ச்சகர் பணிவாய்ப்பு எதையும் வழங்காத நிலையில், சிறிய தனியார் கோவில்களில் பணியாற்றுவது, வேறு வேலைகளைச் செய்வது என்றே இவர்களது வாழ்க்கை கழிந்திருப்பதாகச் சொல்கிறார் ரங்கநாதன். இவர்களில் பெரும்பாலானவர்கள் 35ஐ எட்டிவிட்டனர்.
இந்த நிலையில், புதிய அரசியில் அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் சேகர் பாபு, திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.
இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், பணி நியமனங்களைச் செய்யும்போது, பாடல் பெற்ற ஸ்தலங்களிலும் ஆகம முறைப்படி இயங்கும் கோவில்களிலும் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்கிறார் ரங்கநாதன்.
“அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்” விவகாரத்தின் பின்னணி
அனைத்து ஜாதியினரும் கோவில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறிவந்த பெரியார், 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இதற்காக கிளர்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்தார். நடக்குமென அறிவித்தார். தமிழகத்தின் முக்கியமான கோவில்களில் இந்தப் போராட்டம் நடக்குமென்றும் திருநீறு பூசித்தான் கோவில்களில் நுழையலாமென்றால் தொண்டர்கள் பூசிக்கொள்ளலாம் என்றும் பெரியார் கூறினார்.
இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் பெரியார் தன் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
எல்லோரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் இந்தச் சட்டம், ஏற்கனவே இருந்த இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டத்தின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தச் சட்டம்தான். இதற்கான மசோதா 2.12.1970ல் தமிழக சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் முக்கிய கூறு, இந்துக் கோவில்களின் எல்லாப் பகுதிகளின் நியமனத்திலும் பாரம்பரிய (வாரிசு அடிப்படையில் நியமனம்) கொள்கையை நீக்குவது (பிரிவு55ல் செய்யப்பட்ட திருத்தம்).
இந்தச் சட்டத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எம். சிக்ரி, ஏ.என். குரோவர், ஏ.என். ரே, டி.ஜி. பாலேகர், எம்.எச். பெக் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து 1972 மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். ஒரு கோவிலில் அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, ஆகமங்களை மீறி அறங்காவலர் நியமனங்களை மேற்கொள்ள மாட்டார் என்று அரசு கூறியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குறிப்பிட்ட இனம், உட்பிரிவு, குழுவிலிருந்தே அர்ச்சகரை நியமிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியது. ஆனாலும் மனுதாரரின் அச்சத்திற்கு இப்போது அவசியமில்லை என்று கூறி சேஷம்மாளின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
சட்டத்தை எதிர்த்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தோன்றினாலும் ஆகமத்திற்கு உட்பட்டே நியமனங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த உத்தரவு வலியுறுத்தியது. இந்த நீதிமன்ற உத்தரவை பெரியார் கடுமையாக விமர்சித்தார். 1973 டிசம்பர் 8-9ல் பெரியார் திடலில் நடந்த தமிழர் சமுதாய இழிவு மாநாட்டில் பேசிய பெரியார், நண்பர் கருணாநிதி கொண்டுவந்த சட்டத்தை நீதிமன்றம் செல்லாது என்று ஆக்கியதால் ஆத்திரம் அதிகமாவிட்டதாகக் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அரசியல் சாஸனப் பிரிவு 25ஐப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்குவதற்கு ஏதுவாக அந்தப் பிரிவை நீக்க வேண்டுமென கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்த ஆரம்பித்தார். பிரதமருக்கு கடிதங்களை எழுதினார். பிரிவு திருத்தப்படவில்லை.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பிறகு 1982ல் நீதியரசர் மகாராஜன் தலைமையில் கோவில் வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவும் அனைத்து ஜாதியினரும் உரிய பயிற்சிக்குப் பிறகு அர்ச்சகராக நியமிக்கப் படலாம் என்று கூறியது. ஆனால், அதற்கு முன்பாக அரசியல் சாஸன சட்டப்பிரிவு 25 -2ல் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கூறியது.
- தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்?
- பழங்கால தமிழர்கள் கோயில் கோபுர கலசங்களில் தானியம் வைத்தது ஏன்?
இதற்குப் பிறகு பல ஆண்டுகள் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2002ல் ஆதித்யன் Vs கேரள அரசு என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதின்றம், “ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் போன்றவை ‘எல்லோரும் சமம்’ என்ற இந்திய அரசியல் சாஸனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்டரீதியாக செல்லாது என்று கூறி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க முடியும் என்று தீர்ப்பளித்தது.
இதற்குப் பிறகு, 2006ஆம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அரசாணையை வெளியிட்டது. இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.காணொளிக் குறிப்பு,
தலித்தை தன் தோளில் தூக்கிய வைணவ கோயில் அர்ச்சகர்
Leave a Reply
You must be logged in to post a comment.