இலங்கை ஒரு சிங்கள – பவுத்த நாடு என்ற கோட்பாட்டை நிலைநிறுத்த அரசு மேற்கொள்ளும் அசுரப் பிரயத்தனம்!
நக்கீரன்
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரணைடு பக்கமும் இடி என்பார்கள். தமிழ்மக்கள் வடக்கும் கிழக்கும் சிங்கள மயப்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராகப் மட்டுமல்ல பவுத்த மயப்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது.
கடந்த மே 10 ஆம் நாள் குருந்தாவ அசோக புராதன பவுத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகத் தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரவிரவாக பிரித் ஓதப்பட்டு பவுத்த விகாரை ஒன்றைப் புதிதாக அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் வெளிப்படை தன்மை பேணப்படாது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் பின்னணியில் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமைப் படை அதிகாரி மற்றும் நூற்றுக்கணக்கான பவுத்த தேரர்கள், தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து விகாரை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் தோரணங்கள், அலங்காரங்கள், பவுத்த கொடிகள, பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காவல்துறைக்கோ, மாவட்ட அரசாங்க அதிபருக்கோ அல்லது சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்தப் படாமல் முற்று முழுதாக இராணுவத்தின் ஏற்பாட்டில் விகாரை கட்டப்படுகிறது. கொரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்க இராணுவம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை அதே இராணுவம் அப்பட்டமாக மீறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அகில இலங்கை பவுத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தெற்கிலிருந்து வருகைதந்து கலந்துகொண்டுள்ளார்.
நாட்டில் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ள நெருக்கடியான நிலையில் ஒன்றுகூடுவதற்கோ வழிபாடுகளை ஒன்றுகூடி மேற்கொள்வதற்கோ அரச நிகழ்வுகளை நடாத்துவதற்கோ முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் தலைவராக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா செயற்படுகிறார். இந்த நிலையில் இராணுவத்தினரின் பங்களிப்போடு, பாதுகாப்போடு பாதுகாப்பில் விகாரை கட்டும் பணி தொடங்கியுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் பல ஆலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. பூசைகள், வழிபாடுகள் தடை செய்யப்பட்டன. அரசாங்கம் போட்டுள்ள தடையை மீறி பூசை இடம்பெற்றுள்ளது என்று கூறி யாழ்ப்பாணத்தில் இந்து ஆலய நிருவாகிகளையும் அர்ச்சகர்களையும் காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஒரு நாடு ஒரு சட்டம் என ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் பவுத்த சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் இந்துத் தமிழர்களுக்கு வேறொரு சட்டமும் இருக்கிறது!
குருந்தூர்மலையிலும் இரவோடு இரவாக எந்தவித அனுமதியும் பெறப்படாது குறித்த பவுத்த விகாரை அமைக்கும் பணி தொடங்கப்பபட்டிருப்பது தமிழ்மக்கள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய கவலையும் அச்சமும் நியாயமானது.
கிழக்கை சிங்கள – பவுத்த மயப்படுத்த காலத்துக்குக் காலம் வந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு 40 ஆண்டுகள் எடுத்தன. ஆனால் வடக்கை அவ்வாறு சிங்கள- பவுத்த மயப்படுத்த 10 ஆண்டுகள் போதும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்வு கூறியிருந்தார். அவரது எதிர்வுகூறல் இன்று உண்மையாகி வருகிறது.
குருந்தூர்மலையில் கோவிட் 19 சுகாதார விதிமுறைகளிற்கு மாறாக தேரர்கள், இராணுவத்தினர் கூடி, மத நடவடிக்கைகள் ஈடுபட்டதற்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார். எனினும், காவல்துறை அந்த முறைப்பாட்டை முழுமையாக பதிவு செய்யாமல், பாதியிலேயே நிறுத்திக் கொண்டு விட்டதாக கரைத்துறைப்பற்று தவிசாளர் தெரிவித்தார்.
சைவத் தமிழ்மக்கள் வரலாற்றுக் காலம் தொட்டு வழிபட்டு வரும் கோயில்கள் அதனைச் சுற்றியுள்ள நிலம் பவுத்த தொல்லியல் சார்ந்த இடங்கள் என்றும் அதனை அடையாளப்படுத்தவும் பாதுகாப்பதற்கும் 2020 ஆண்டு ஒன்பது பேர் கொண்ட- பெரும்பாலும் பவுத்த தேரர்கள் – சனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டது தெரிந்ததே. அந்த செயலணிக்கு மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் இயங்கி வருகிறது.
ஏற்கனவே கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் தொன்மைகள் மற்றும் தொன்மைச்சான்றுகளை அழித்து பவுத்தமயமாக்கலை செய்து வருகிறது .குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 246 இடங்களை பவுத்த மதம் சார்ந்த இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் . திருகோணமலை மாவட்டத்தில் 74 இடங்களை பவுத்த மதம் சார்ந்த இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள் . மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 பவுத்த மதத்தோடு தொடர்புடைய இடங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள் . இந்த ஆக்கிரமிப்புகளில் சில,
1. திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னமரவடி என்னும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலய சூழலில் பவுத்த மத அடையாளங்கள் இருப்பதாகத் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டு அந்த முருகன் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. இலங்கைத்துறை முகத்துவாரம் என்கிற திருகோணமலையின் பூர்வீக தமிழ்க் கிராமம் இப்போது தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு லங்காபட்டன (Lanka Patuna) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள குஞ்சிதபாத மலையில் இருந்த பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பவுத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது.
3. பட்டணமும் சூழலும் பிரதேசபை நிருவாகத்தில் இருந்த இராவணன் காலத்து கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கே விகாரை கட்டப்பட்டு அதில் பவுத்த தேரர் ஒருவர் குடியேறியுள்ளார். அங்கு கோயில் கொண்டிருந்த பிள்ளையார் கோவிலின் அத்திவாரம் மட்டும் இன்று உள்ளது.
4. பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரம் கோவில் சூழலில் மேற்கொள்ளப்படும் சகல கட்டுமானங்களையும் தொல்லியல் திணைக்களம் தடை செய்து வருகிறது.
5. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் இதிகாச காலத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலைபோட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
6. மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தாமலை ஆலயத்தைப் புனரமைப்பதற்குப் பவுத்த தேரர்கள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த ஆலய சூழலில் பவுத்த மத அடையாளங்கள் இருப்பதாகத் தொல்லியல் திணைக்களம் வாதிடுகிறது.
7. மட்டக்களப்பு மாவட்டம் பூர்வீகத் தமிழ்ப் பகுதியான வாகனேரியில் பல்வேறுபட்ட பவுத்த மத அடையாளங்கள் இருப்பதாகத் தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.
8. மட்டக்களப்பு மாவட்டம் புளுகுணாவைப் பகுதியில் உள்ள இடங்களுக்கு தொல்லியல் திணைக்களமும் பவுத்த பிக்குகளும் உரிமை கோரி வருகிறார்கள்.
9. மட்டக்களப்பு கோட்டை (Batticaloa Fort) அமைத்துள்ள இடத்தில் உருகுண அரசுக்குச் சொந்தமான பவுத்த மத எச்சங்கள் காணப்படுவதாகத் தொல்லியல் திணைக்களம் சொல்கிறது.
10. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகலப் பகுதியில் பவுத்த மதம் சார்ந்த பல சான்றுகள் கிடைத்து இருப்பதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகிறது.
11. மட்டக்களப்பு மாவட்டத்தின் கச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள சுவாமிமலை அடிவாரத்தை பவுத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் பவுத்த மதத்திற்கு உரிய இடம் என அடையளப் படுத்தியுள்ளார்கள்.
12. மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு – மாதவணைப் பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் பவுத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தொல்லியல் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களை இலக்கு வைத்து ஏழு விகாரைகளை அமைத்துள்ளது.
13. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள வில்லுதோட்டம் தனியார் காணியில் கண்டெடுத்த எச்சங்கள் பவுத்த மதத்திற்கு உரியவை எனத் தொல்லியல் திணைக்களம் உரிமை கொண்டாடுகிறது.
14. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் 86 இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளும் /விகாரைகளும் கட்டப்பட்டு இருக்கின்றன. இதில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 36 இடங்களும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 இடங்களும் ஆலையடி பிரதேச செயலாளர் பிரிவில் 9 இடங்களும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6 இடங்களும் அட்டாளைசேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 4 இடங்களும் கல்முனையில் 2 இடங்களும் அடங்கும்.
15. கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான 12,000 ஏக்கர் காணிகள் தீகவாவி புனித பூமிக்குச் சொந்தமான நிலம் என தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றது. (https://www.pathivu.com/2020/05/Eastern.html)
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் இரண்டாயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தமை வருமாறு,
குருந்தூர் மலையில் உள்ள இப்பொழுது பேசப்படுகின்ற சின்னங்கள் பல்லவர் காலத்துக்கு உரியன என்று சிலர் சொல்கின்றனர். பல்லவர் காலத்துக்கும் இந்தச் சின்னங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை அந்தக் காலத்துக்கு மிக முற்பட்டனவாகும்.
அங்கு செங்கட்டிகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கட்டிடத்தின் இடிபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. பார்ப்பவர்கள் எவருக்கும் இது புலனாகும். அந்தக் கட்டடத்தினுள் சற்று முன்புறமாக ஒரு வெள்ளைக் கல்லில் அமைந்த ஒரு உருவம் தெரிகிறது. அதில் பவுத்த படிமம் போல எதுவும் காணப்படவில்லை. ஆதி காலத்து தொல்பொருள் சின்னங்களில் அனேகமானவை நாகர்களோடு தொடர்புடையவையாகும்.
நாகர்கள் வழிபட்ட சிவலிங்க வடிவங்கள் பனங்காமம் தொடக்கம் ஓமந்தை போன்ற இடங்களிலே பெருமளவிலே காணப்படுகின்றன.
இங்கே காணப்படுவது சிவலிங்க வடிவம் என்று கொள்வது சாலவும் பொருந்தும். இதைத்தான் வேறு ஆய்வாளர்களும் சொல்லியுள்ளார்கள். அது சிறிய கட்டிடத்தில் அமைந்திருப்பது இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. அதில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. நாகர்களுடைய கடவுள் பெயர் அதிலே காணப்படுகின்றது.
அந்த இலிங்கத்திலே மணி நாகன் என்ற பெயர் தெளிவாகத் தெரிகின்றது. அது மட்டுமன்றி வேள் நாகன் என்ற பெயரும் அதிலே காணப்படுகின்றது. வழமையாக கடவுள் சின்னங்களிலும் கடவுள் பெயரை எழுதுவதோடு அதை உபயம் பண்ணியவர்கள் அல்லது நன்கொடை செய்பவர்களுடைய பெயரை எழுதுவது வழமையாகும். நாகர்களுடைய வழமைப்படி வேள் நாகன் என்று தான் அது எழுதப்பட்டிருக்கிறது.
வழிபாட்டுச் சின்னங்கள் எல்லாவற்றிலும் அவர்கள், கடவுள் பெயர்களை தமிழ்ப் பிராமி வடிவங்களிலே பொறித்தார்கள். சிவலிங்கம், புத்தர் படிமம், நந்தி, மயூரம், பூசகம் முதலிய எல்லாவற்றிலும் இந்தக் கடவுள்ப் பெயர் காணப்படும். சின்னத்தின் அடிப்படையிலேதான் அது எந்த வழிபாட்டு மரபுக்கு உரியது என்பது நிர்ணயிக்கப்படும்.
இங்கு காணப்படுவது சிவலிங்கம். அதிலே காணப்படுகின்ற எழுத்துக்களைக் கொண்டு பார்க்குமிடத்து இது கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கொள்ளத் தக்கது. சில சமயங்களில் இலங்கையில் வட்டெழுத்து மரபு பரவியிருக்காததனாலே தமிழ்ப் பிராமி வரி வடிவங்கள் தொடர்ந்தும் சில நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்திருக்கின்றன.
ஆனால் இந்த வடிவத்தைப் பொறுத்தவரையில் இது சர்ச்சைக்குரிய வடிவமன்று. உறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் இது ஒரு பழங்காலத்து இலிங்க உருவம். இலிங்க உருவத்தின் ஆரம்பகால வடிவமைப்பினை பிரதிபலிக்கின்ற வடிவம். நாகர்களின் கடவுள் பெயர் எழுதப்பட்டுள்ள வடிவம், சைவ சமய சின்னமாக அது அமைகின்றது.
ஆனால் சனாதிபதி செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேத்தானந்த தேரர் என்ன சொல்கிறார்?
குருந்தகம என்பதே தற்போது குருந்தூர்மலையாகியுள்ளது. இதனை எம்மால் எண்பிக்க முடியும் என்கிறார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படுகிற தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 99 விழுக்காடு பவுத்த மரபுரிமைகளுடன் தொடர்புடையவை ஆகும்.
குருந்தூர்மலை உட்பட்ட பவுத்த தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் என்பதை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த பெப்ரவரி 06, 2021 இல் நடைபெற்றது. இதன்போதே மேத்தானந்த தேரர் இவ்வாறு கூறினார்.
வடக்கு – கிழக்கில் காணப்படும் ஆயிரக்காணக்கான தொல்பொருள் இடங்கள் தொடர்பில் நான் பல சந்தர்ப்பங்களில் ஆராய்ந்திருக்கிறேன். அவற்றில் 99 விழுக்காடு பவுத்த மரபுரிமைகளுடன் தொடர்புடையவை ஆகும். இவ்வாறிருக்க குருந்தார்மலை விவகாரத்தில் வடக்குக் கிழக்கு
தமிழ் அரசியல்வாதிகள் தவறான நிலைப்பாடுகளை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தியுள்ளனர்.
‘குருந்தகம’ என்ற இடமே இப்போது குருந்தூர்மலை ஆகியுள்ளது. நான் இந்த இடத்துக்கு மூன்று தடவைகள் சென்று சென்றிருக்கிறேன். முதல்முறை நாங்கள் சென்றபோது தமிழ்மக்கள் எந்தவித பேதமுமின்றி எங்களை வரவேற்றனர்.
அவர்களுடன் எந்தச் சிக்கலும் காணப்படவில்லை. அங்கு சென்று ஆராய்ந்த போது அதிகளவான தொல்பொருள் சான்றுகளைக் கொண்டவொரு இடமாக அது இனங்காணப்பட்டது.
1905 ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேயர் ஒருவரால் செய்த ஆராய்வின்போதும் இது பவுத்த மரபுரிமைக்கு உரியது என எண்பிக்கப்பட்டது.
அதற்கமைய இந்த இடத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. அத்தோடு பொலநறுவை இராசதானி காலத்தில் பவுத்த பவுத்த மன்னர்களால் இந்த இடம் புனர் நிருமாணம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. எனவே குருந்தர்மலை என்ற குருந்துகம பவுத்த விகாரை என உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காணப்படுகின்ற மலைகள் பவுத்த விகாரைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். அவற்றில் பல விகாரைகள் இடிக்கப்பட்டுக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும் அவற்றை உடைக்குமாறு நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. வடக்கு – கிழக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் இதனைத் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வீண் சிக்கலை உருவாக்கக் கூடாது. அப்பாவித் தமிழ் மக்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை. இதில் எவ்வித இன மத பேதமும் கிடையாது என்றார்.
நீண்ட காலமாக மகாவலி அபிவிருத்திச் சபை மணலாறு (வெலி ஓயா) போன்ற பாரிய சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகிறது. தொல்லியல் திணைக்களம் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் , கன்னியா, நெடுங்கேணி குருந்தூர்மலை போன்ற சைவ வழிபாட்டுத் தலங்களை அண்டிப் பவுத்த விகாரைகள், புத்தர் சிலைகள் எழுப்ப்பப் பட்டு வருகிறது. இதற்கு ஆதரவாக இராணுவம் உட்பட அரச இயந்திரம் முழுமூச்சுடன் முடுக்கி விடப்பட்டு வருகிறது.
வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்கள், கட்டப்படும் விகாரைகள், நாட்டப்படும் புத்தர் சிலைகள் இலங்கை ஒரு சிங்கள – பவுத்த நாடு என்ற கோட்பாட்டை நிலைநிறுத்த அரசு மேற்கொள்ளும் அசுரப் பிரயத்தனம்!
Leave a Reply
You must be logged in to post a comment.