பண மோசடி, பணச் சலவை, ஊழல் என ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட இராசபக்ச குடும்பம்!

பண மோசடி, பணச் சலவை, ஊழல் என ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட  இராசபக்ச குடும்பம்!

 நக்கீரன்

சட்டி, பானையைப் பார்த்துச் சொல்லியதாம் நீ கருப்பு என்று. பாசாங்குத்தனத்தைப் பற்றி ஒரு கருத்தைத் தெரிவிக்க இந்தச்  சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. தன்னிடம் குறைபாடுகள் இருக்கும் போது மற்றவர்கள் குறையை விமர்சிப்பது தவறு என்பது இதன் பொருள். சட்டி நெருப்பில் காய்வதால் அது கருப்பாகிவிடும்.  அதே நெருப்பில் காயும் பானையும் கருப்பாகிவிடும்.

சனாதிபதி கோட்டாபய இராசபக்ச நொவெம்பர் 2019 இல் பதவிக்கு வந்தது தொடக்கம் விசாரணை ஆணையங்கள் காளான் போல் முழைத்து வருகிறது. ஒரு ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையை விசாரிக்க இன்னொரு ஆணையம் அமைக்கும் அலங்கோலமும் நடந்து வருகிறது.

சனாதிபதி கோட்டாபய நியமித்த பல ஆணையங்களில் கடந்த ஆட்சியில் (சிறிசேனா – விக்கிரமசிங்க) இடம் பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரிக்க  சனவரி 2020 ஆண்டு  நியமிக்கப்பட்ட ஆணையமும் ஒன்றாகும்.   இந்த ஆணையம் 08  சனவரி 2015  முதல் 16 நொவெம்பர்  2019  வரையான காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் கூட்டுத் தாபனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்து, தகவல்களை திரட்டி அறிக்கை சமர்ப்பிக்கும் எனக் கூறப்பட்டது.  இந்த ஆணையம் 09 சனவரி 2020 முதல்  25 நொவெம்பர் 2020 வரை செயல்பட்டது.

இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சனாதிபதி கோட்டாபய இராசபக்சவிடம்  08 டிசெம்பர் 2020  அன்று சனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் உபாலி அயரத்னா நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரசிறி ஜெயதிலகே மற்றும் முன்னாள் காவல் ஆய்வாளர் (ஐஜிபி) சந்திர பெர்னாண்டோ ஆகிய இருவரும் இடம்பெற்றனர்.

உச்சநீதிமன்ற நீதியரசர் உபாலி அபயரத்னா அவரது பதவிக் காலத்தில் நடத்தைக் குறைபாட்டுக்கு பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆணையம் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் 21 பேர் அரசியலமைப்பை மீறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் அவர்களது சிவில் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. அந்த 21 பேரில் மங்கள சமரவீர, படாலி சம்பிகா இரணவக்கா, இரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா, ஆர்.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், அனுரா குமார திசநாயக்க, ஜே.சி.வெலியமுனா, மாலிக் சமரவிக்ரமா மற்றும் கலாநிதி  ஜெயம்பதி விக்ரமரத்ன இடம் பெற்றுள்ளனர். 

சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டால் இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை  157 ஏ (12)  வழங்குகின்ற   ‘குடிமை உரிமைகள்’  பறிக்கப்படும்.  கடவுச்சீட்டு வைத்திருப்பதற்கான உரிமை, எந்தவொரு அசையாச் சொத்தையும் சொந்தமாக வைத்திருத்தல் மற்றும் உரிமம், பதிவு அல்லது பிற ஒப்புதல் தேவைப்படும் எந்தவொரு வாணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடுவதற்கான உரிமை ஆகியன பறிக்கப்படும்.

குடியுரிமை பறிக்கப்படுவது சட்டத்தின் ஆட்சிக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.  மற்றும் நாட்டின் நிருவாகத்தில் இருக்க வேண்டிய கட்டுப்பாடுகளும் இருப்புகளும் (checks and balances) ஒழிக்கப்பட்டுவிடும்.

அதேசமயம் பின்வரும் அரசியல்வாதிகளுக்கு  உதய கம்மன் பிள்ளை, யோஷிதா இராசபக்ச,  நலகா கோதஹேவா, சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது ‘பிள்ளையான்’,  ரோஹித பொகோலகம, உதயங்க வீரதுங்க, வசந்த கரணகொட மற்றும் ஜகத் விஜயவீரா ஆகியோருக்கு இழப்பீடு  வழங்கப்பட வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு விடுவிக்கப்படுகின்றனர். அதே சமயம்  அவர்கள் மீது குற்றம் சாட்டிய அரசியல்வாதிகள்  தண்டிக்கப்படுகின்றனர்!  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சட்டமா அதிபரால் திரும்பிப் பெறப்படுகின்றன. குற்றச்சாட்டுக்களை எண்பிக்க  தேவையான சாட்சியங்கள் இல்லை என்பது சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல்  ஆணையத்தின் அறிக்கை பற்றி   மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா கடந்த 23 ஏப்ரில், 2021 அன்று  நாடாளுமன்றத்தில் ஆற்றிய காரசாரமான உரையில் கடுமையாகக்  கண்டித்திருந்தார். அரசியல் பழிவாங்கல்  ஆணையத்தின் மிகவும் ஐயத்திற்கிடமான நடத்தை,  சனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய வஞ்சகர்களையும் குற்றவாளிகளையும் மற்றவர்கள் பரிகசிக்கும் வண்ணம் விடுவித்த அரசின் நடத்தையை  அம்பலப்படுத்தினார். எந்தவொரு நீதிமன்றமும் நந்தசேனா கோட்டாபய குற்றமற்றவர் உத்தமர் எனப் பிரகடனப்படுத்தவில்லை என்றார்.
In 75 days, the Commission led by disgraced judge Upali Abeyratne had investigated 136 complaints. In 78 such complaints, the “Pissu Poosa Commission” recommended exonerating and acquitting some Rajapaksa family members, military officials and political associates – even those against whom criminal trials are currently underway in the courts of law.

மொத்தம் 75 நாட்களில், அவமானப்படுத்தப்பட்ட நீதிபதி உபாலி அபயரத்தின  தலைமையிலான ஆணையம் 136 முறைப்பாடுகளை விசாரித்தது. இதில்  78 முறைப்பாடுகளில் இந்த பைத்தியக்கரஆணையம்  தற்போது நீதிமன்றங்களில் குற்றவியல் விசாரணைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இராசபக்ச குடும்ப உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது அரசியல்  கூட்டாளிகளையும் விடுவிக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.

அபயரத்தின ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கம் வழக்குகளை நிறுத்த விரும்பும் நபர்களில்  நலகா கொடஹேவா மற்றும் உதய கம்மன்பிள்ளை ஆகியோர் உள்ளனர்.  இந்த இரண்டு  நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொந்த நீதித்துறை நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க கைகளை உயர்த்துவார்களா? அப்படி அவர்கள் கைகளை உயர்த்தினால் அது முன்னுதாரணம்  இல்லாத வரலாற்று நடவடிக்கையாக இருக்கும்!

திசநாயக்க தனது உரையின் போது, அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்  கைக்கூலிகளிடம் இருந்து முறைப்பாடுகளை அளிக்க ஆணையம் எவ்வளவு தூரம் சென்றது என்பதை அம்பலப்படுத்தினார்.

ஒக்தோபர் 25, 2020 அன்று இராசபக்சவின் மைத்துனர் திரு நடேசன் ஆணைக்குழு முன் முறைப்பாடு  ஒன்றைக் கையளித்தார்.  ஒக்தோபர் 23  2020 அன்று யோஷிதா இராசபக்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தார்.  அக்டோபர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டன. முறைப்பாடுகள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன, நாளை விசாரணைகள் தொடங்கி முடிவுகள் எட்டப்படுகின்றன. ஆணைக்குழுவின் நடத்தை முற்று முழுதான –  அப்பட்டமான  பாகுபாடாகும்” என்று திசநாயக்கா குற்றம் சாட்டினார்.

2020 டிசம்பர் 8 ஆம் தேதி ஆணையம் தனது அறிக்கையை கையளித்தது. ஒரு ஆணையம் தனது அறிக்கையை ஒப்படைத்தவுடன், ஆணையத்தின் பணி முடிவுக்கு வந்து விடும். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகும், தலைவர் உபாலி அபயரத்தின தனியாக ஆணைக்குழுவிற்கு வந்தார். மற்ற உறுப்பினர்கள் அவருடன் வரவில்லை. அறிக்கையின் நகல்களை அச்சிட்டு முறைப்பாட்டாளர்களிடம் ஒப்படைத்தார். ஆணைக்குழு தவறவிட்டிருக்கலாம் எனவே விடுபட்டதைச் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் 2021 ஜனவரி 7 ஆம் தேதி  ஆணையம் மற்றொரு அறிக்கையை முன்வைத்தது!

குற்றம் செய்தவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்பதுதான் சட்டமா அதிபரின் கடமை. ஆனால் ஒரு முறை ஆணையம் சட்டமா அதிபரின் அலுவலகத்தைச்  சேர்ந்த சட்டத்தரணி ஜனக பண்டார என்பவரை அழைத்து அவரைக்  குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சி செய்தது.  நல்ல காலமாக சட்டமா அதிபர் ஆணையம் அனுப்பிய அழைப்பை நிராகரித்து விட்டார்.

ஆணையத்தின் பரிந்துரைகளை பிரதமர் தீர்மான உருவத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அதில் 78 வழக்கு விசாரணையை நிறுத்துமாறு கேட்கப்பட்டிருக்கிறது. இதில் 8 வழக்குகள் பற்றிய விசாரணை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. திசநாயக்க  சபையில் அந்த வழக்குகளின் பட்டியலை படித்துக் காட்டினார்.

உதயங்க வீரதுங்க மற்றும்  கோட்டாபய இராசபக்ச (மிக் விமானக் கொள்வனவு]

உதயங்க வீரதுங்கா மீதான வழக்கு கோட்டாபய இராசபக்சவுக்கும் எதிரான வழக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீரதுங்கா மீது இரண்டு வழக்குகள் இருப்பதாக திசநாயக்க கூறினார். ஒன்று, உருசியாவின் இலங்கையின் தூதராக இருந்த காலத்தில் ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்ட வழக்கு.  இரண்டாவது வழக்கு மிக் ஜெட் போர் விமானம்  கொள்முதல் செய்ததில் இடம்பெற்ற ஊழல். அந்த விமானத்தின் விலை அ.டொலர் 7 மில்லியன், ஆனால் சிறிலங்கா அரசு அ.டொலர் 14 மில்லியனைக்  கொடுத்தது!

இதுவரை எந்த நீதிமன்றமும் கோட்டாபய இராசபக்சவை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கவில்லை. அவர் சனாதிபதியாக வந்தவுடன் நீதிமன்றம் சென்று ” நான் இப்போது நாட்டின் சனாதிபதி. எனக்கு சட்ட விலக்களிப்பு (immunity) இருக்கிறது. எனவே வழக்கை முடிக்கவும்”  எனக் கேட்டார். இப்படியான திருடர் கூட்டந்தான் இந்த நாட்டை ஆளுகிறது!

இந்த சட்ட விலக்களிப்பு இன்னுமொரு வழக்கில் இருந்து விடுபட சனாதிபதி கோட்டாபய இராசபக்ச உபயோகித்துள்ளார். அந்த வழக்கு கோட்டாபய இராசபக்சுவின் தந்தையாருக்கு ஒரு நினைவு மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் நிறுவியது பற்றியது. திசநாயக்கா இதனை சுருக்கமாகக் குறிப்பிட்டார். விரிவாகக் குறிப்பிடவில்லை.  அதன் வரலாறு பின்வருமாறு.

மெடமுலான, வீரபிட்டியாவில் இராசபச்ச சகோதரர்களின் தந்தையான டி.ஏ. இராசபச்சவுக்கு நினைவு மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் நிர்மாணிப்பது தொடர்பாக கருவூலத்தில் இருந்து  ரூ 47.9 மில்லியன் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கோட்டபயா மற்றும் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. மொத்தச்  செலவு ரூபா 81.3 மில்லியன் ஆகும். அசல் மதிப்பீடு ரூபா 33.9 மில்லியனாக இருந்தது, ஆனால் மதிப்பீட்டிற்கு மேலாக விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த கோட்டாபயா விரும்பியதால் செலவு மதிப்பீடுகள் அதிகரித்தன.

எடுத்துக்காட்டாக அசல் திட்டத்தின்  படி   நடைபாதைக்கு  சாதாரண கற்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த நடைபாதை கருங்கற்களால் கற்களால் அமைக்கப்பட்டது.  இந்தக் நினைவு மண்டபத்தை எழுப்புவதற்கு அரசாங்க வளங்கள் பயன்படுத்தப்பட்டது. காணியும் மகாவலி அபிவிருத்தி சபையிடம் இருந்து 99 ஆண்டு குத்தகைக்கு எடுக்கப்பட்டது.  இலங்கை  காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தால் கட்டப்பட்டது. கட்டிடத்தை சிறிலங்கா கடற்பரை கட்டி முடித்தது.  இந்த இலங்கை  காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் நகர அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கியது. அபிவிருத்தி சபையின் செயலாளராக சாட்சாத் கோட்டாபய இராசபக்சா இருந்தார்! அவர் சனாதிபதியானதும் அவருக்கு இருக்கும் சட்ட விலக்கைப் பயன்படுத்தி வழக்கை முடித்துக் கொண்டார். ரூபா 47.9 மில்லியன் இராசபக்ச குடும்பத்தைப் பொறுத்தளவில் சில்லறைக் காசு என்பது தெரிந்ததே. (https://www.colombotelegraph.com/index.php/da-rajapaksa-foundation-owes-slrdc-rs-47-million-for-rajapaksa-memorial/)

வோஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தை விலைக்கு வாங்கிய வழக்கில் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஜாலியா விக்ரமசூரியா (மகிந்த இராசபக்சவின் மைத்துனர்)  கைது செய்யப்பட்டார். அவர் உயர்நீதிமன்றத்தில் பிணை  பெற்றார், பின்னர் நாட்டை வி ட்டுத்  தப்பி ஓடிவிட்டார். அவரது முறைப்பாடும் இந்த ஆணையத்தின் முன்  வைக்கப்பட்டது.

“இந்த ஆணைக்குழு முன் விக்ரமசூரியா ஒருமுறை தன்னும் தோன்றவில்லை. ஆனால் ஆணைக்குழு அவரை விடுவித்து, அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு கோரியுள்ளது என திசநாயக்க குற்றம் சாட்டினார்.

யோஷிதா இராசபக்ச எதிரான பணச் சலவை வழக்கு

யோஷிதா இராசபக்ச  மீது பணம் சலவை செய்தல் தொடபாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் இலங்கைக் கடற்படையில் இரண்டாம் லெப்டி. பணியாற்றியபோது Carlton Sports Network நிறுவனத்திற்கு ரூபா.500 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை வாங்கிய குற்றச்சாட்டை எதிர்கொண்டார். வர் நீதிமன்றத்தில் நான் மெடமுலானவில் இருக்கும் எனது வயல் காணிகளை விற்றேன். மகிந்த இராசபக்ச ஒரு தொகை பணம் தந்தார். கடற்படை சம்பளம் தந்தது. டெயிசி ஆச்சி எனக்கு இரத்தினக் கற்கள் தந்தார் என்று கணக்குக் காட்டினார். அது போதும் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

பசில் இராசபக்ச மீதான  பணம் சலவை வழக்குகள் என்ன?

ஒரு வழக்கு மல்வானாவில் உள்ள வீட்டைப் பற்றியது. மல்வானாவில் உள்ள சொத்து மற்றும் வீட்டின் மதிப்பு ரூபா 200 மில்லியனுக்கும் அதிகமாகும்.

“நடந்துகொண்டிருக்கும் வழக்கு அந்தச்  சொத்தை வாங்குவதற்கும் அந்த வீட்டைக் கட்டுவதற்கும் அவர் எவ்வாறு நிதியைப் பெற்றார் என்பது பற்றியது. பசில் இராசபக்ச வீடு தன்னுடையதல்ல என்று கூறுகிறார். ஆனால்  முடிதா ஜெயகோடி, கட்டிட வடிவமைப்பாளர்  வீட்டிற்கான திட்டங்களை வரைவதில் புஷ்பா ஈடுபட்டிருந்தார். அவர் அடிக்கல் நாட்டும் விழாவில் இருந்தார் என்று கூறுகிறார். கதவு மற்றும் சன்னல் பிரேம்கள் போடப்பட்டபோது புஷ்பா இருந்ததாக அவர் கூறுகிறார். ஆனால் வீடு தன்னுடையது அல்ல என்று பசில் கூறுகிறார்! 

தனது 26 நிமிடப் பேச்சில் இராசபக்ச குடும்பத்தை திசநாயக்க அக்குவேறு ஆணிவேறாக பிய்த்து உதறினார். அவரது முழுப் பேச்சை https://www.colombotelegraph.com/index.php/no-court-of-law-has-proclaimed-nandasena-gotabaya-rajapaksas-innocence-anura-flays-rajapaksa-family-for-corruption/ என்ற இணையதள முகவரியில் படித்துக் கொள்ளலாம்.

பண மோசடி, பணச் சலவை, ஊழல் என ஊரைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட  இராசபக்ச குடும்பம் தெருவில் எப்படி வேட்டி கட்டிக் கொண்டு திரிகிறது என்பது வியப்பாக இருக்கிறது!

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply