ஏப்ரில் 6 இல் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயம் எனலாம்!
நக்கீரன்
தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தல் களை கட்டியுள்ளது. பெரியதும் சின்னதுமான கட்சிகள் தனித்தும் கூட்டணி அமைத்தும் களத்தில் குதித்துள்ளன.
வழக்கம் போல் போட்டி இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இடையேதான். அதாவது திமுக மற்றும் அதிமுக இடையேதான்.
இந்த இரண்டு சூரியன்களைச் சுற்றியே மற்றக் கட்சிகள் வலம் வருகின்றன.
1967 ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுக மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதன் பின்னர் இந்த 54 ஆண்டு காலமாக திராவிடக் கட்சிகளே தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டு வந்துள்ளன. இம்முறையும் இந்த இரண்டு கட்சியில் ஒன்றுதான் ஆட்சி அமைக்கப் போகிறது.
முழு இந்தியாவிலும் 1967 முதல் ஒரு மாநிலத்தைத் தொடர்ந்து ஒரு மாநிலக் கட்சியே ஆளும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே!
1967 இல் பதவிக்கு வந்த திமுக அதன் பின்னர் 1972, 1989, 1996 மற்றும் 2006 இல் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது. 1977, 1988, 1991, 2001, 2011 மற்றும் 2016 இல் அதிமுக வெற்றிபெற்றது. பல திமுக தலைவர்கள் மீது, குறிப்பாக கருணாநிதியின் மகள் மீது 2010 இல் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால் கட்சியின் புகழ் சேதமடைந்தது. 2006 ஆம் ஆண்டு திமுக தேர்தல் மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றது.
அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் இயங்கி வந்த திமுக ஐந்து முறையும் (1967, 1972, 1989, 1996 மற்றும் 2006) புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையில் இயங்கி வந்த அதிமுக ஆறு முறையும் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளன.
இம்முறை கலைஞர் கருணாநிதி மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று திமுக க்கு தளபதி மு.க. ஸ்டாலின், அதிமுக க்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார்கள்.
தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டின் வாக்காளர் தொகை 62,823,749 ஆகும். சட்ட சபைக்கு மொத்தம் 234 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். சோழிங்கநல்லூர் தொகுதிதான் ஆகக் கூடுதலாக 694,845 வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகும். பல தொகுதிகளில் வாக்காளர் தொகை 300,000 – 350,000 ஆகும். இதில் பாதிப் பேர் பெண் வாக்காளர்கள்.
தமிழக சட்ட சபைக்கு இப்போது நடைபெறும் தேர்தல் பதினாறாவது தேர்தல் ஆகும். 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் தேர்தலில் வெற்றிபெற்று வந்த அதிமுக கட்சியின் ஆட்சி எதிர்வரும் மே 24, 2021 இல் முடிவுக்கு வருகிறது.
தேர்தல் ஆணையம் பின்வரும் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துள்ளது.
நிகழ்வு | Date |
---|---|
வேட்பு மனு தாக்கல் | 12 மார்ச் 2021 |
வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் | 19 மார்ச் 2021 |
வேட்பு மனுக்களை சரிபார்க்கும் நாள் | 20 மார்ச் 2021 |
வேட்பு மனுவைத் மீளப்பெறுவதற்கான கடைசி நாள் | 22 மார்ச் 2021 |
தேர்தல் நாள் (ஒரேமுறையில்) | 6 ஏப்பிரில் 2021 |
வாக்குகள் எண்ணப்படும் நாள் | 2 மே 2021 |
தேர்தல் நிறைவடையும் நாள் | 24 மே 2021 |
- இப்போது தமிழ்நாடு பற்றிய சில தரவுகளைப் பார்ப்போம்.
- மாநில தலைநகரம் – சென்னை
மாவட்டங்கள் – 38
நிலப்பரப்பு – 130,058 ச.கிமீ (இலங்கை – 65610 ச.கிமீ)
மக்கள் தொகை 2021 (மதிப்பீடு) – 78.8 மில்லியன் (7.88 கோடி)
மாநில மொழிகள் – தமிழ் & ஆங்கிலம் - சராசரி கல்வியறிவு விழுக்காடு: 80.09 விழுக்காடு
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி – அமெரிக்க $ 207.79 பில்லியன் (2016–17)
முக்கிய நகரங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் & திருநெல்வேலி. (மக்கள் தொகைப் படி)
தமிழ்நாடு, இந்தியாவின் மக்கள் தொகையில் (2020) 5.96 விழுக்காடு. - எல்லைகள் – மேற்குப் பகுதியில் கேரளா, வடக்கே ஆந்திரா மற்றும் வடமேற்கில் கர்நாடகா.
- திமுக மற்றும் அதிமுக அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பின்வருமாற அமைந்துள்ளது.
கட்சிகள் | தொகுதி |
திமுக | 176 |
தேசிய காங்கிரஸ் | 25 |
கம்யூனிஸ்ட் (மாக்சிஸ்ட்) | 6 |
கம்யூனிஸ்ட் (இந்திய) | 6 |
விடுதலைச் சிறுத்தைகள் | 6 |
மதிமுக | 6 |
இந்திய முஸ்லிம் லீக் | 3 |
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி | 1 |
ஏனையோர் | 5 |
மொத்தம் | 234 |
அதிமுக கூட்டணி
கட்சிகள் | தொகுதி |
அதிமுக | 188 |
பாமக | 23 |
பாரதிய ஜனதா | 20 |
தமிழ் மாநில காங்கிரஸ் | 3 |
ஏனையோர் | 0 |
மொத்தம் | 234 |
தமிழ்நாடு பெரியார் மற்றும் அண்ணா பிறந்த மண். பெரியார் பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, சுயமரியாதை இயக்கம் என வாழ்நாள் முழுதும் உழைத்தவர். இருந்தும் தரை மட்டத்தில், சாதி உணர்வுகள் இருக்கவே செய்கின்றன.
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்பது பாடபுத்தகத்தில் பாப்பாக்களுக்கு மட்டுமானதாக ஆகிவிட்டது. குறிப்பாக தேர்தல் அரசியலில் சாதிக்கு தனித்த இடம் உண்டு. வேட்பாளர் தேர்வு மட்டுமின்றி அமைச்சர் பொறுப்பு ஒதுக்குவதுவரை சாதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதனால் அங்குயிங்கு என்னாதபடி எல்லாமட்டத்திலும் தமிழ்நாட்டில் சாதி அரசியலே நடக்கிறது. சில கட்சிகள் சாதிப் பெயரிலையே இயங்குகின்றன. எடுத்துக் காட்டாக பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) வன்னிய குலத்தினரது கட்சியாகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலித் சமூகத்தைச் சார்பு படுத்தும் கட்சியாகும். ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளரை நிறுத்தும் போது அந்தத் தொகுதியில் எந்தச் சாதி பெரும்பான்மையாக இருக்கிறதோ அந்தச் சாதியைச் சேர்ந்த ஒருவரே அநேகமாக கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
குடிக் கணக்கெடுப்பில் வன்னியர் 15.1 %, பறையர் 12 %, கொங்கு வேளாளர் 6%, பள்ளர் 4.8%, செங்குந்தர் கைக்கோள முதலியார் 4.0 % காணப் படுகின்றனர். இந்து நாடார் 3.5 % உள்ளார்கள்.
மேலும் கள்ளர் 2.5%, மறவர் 1.0%, அகம்படியார் 1.2 0% ஆகிய மூன்று சமூகத்தினரும் முக்குலத்தோர் என அழைக்கப்படுகிறார்கள். ஆனால் முக்குலத்தோர் என்னும் பெயருக்கு தமிழக அரசாங்கத்தால் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. முக்குலத்தோர் மற்றும் தேவர் என்ற சொற்கள் ஒத்ததாக பயன்படுத்தப் படுகின்றன. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் ஆர். முத்துலட்சுமியின் கூற்றுப்படி, தேவர் என்பது “தெய்வீக இயல்புடையவர்கள்” என்றும் முக்குலத்தோர் என்றால் “மூன்று குலங்கள் ஒன்றிணைந்தன” என்றும் பொருள் ஆகும்.
எம்ஜிஆர் அதிமுக கட்சியைத் தொடங்கியபோது திமுகவின் சாதி ஒழிப்பு சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபாடில்லாத சமூகங்கள் எம்ஜிஆர் பின் அணி திரண்டன. குறிப்பாக முக்குலத்தோர் (பிரான்மலை கள்ளர், கொண்டைய கொட்ட மறவர்) கொங்கு வேளாள கவுண்டர் போன்றோர்களின் வாக்குகள் எம்ஜிஆருக்கு சாதகமாகின.
பார்ப்பன எதிர்ப்பில் தீவிரம் காட்டும் சமூகங்களான தஞ்சாவூர் கள்ளர், வட தமிழகத்திலுள்ள வன்னியர், முதலியார் போன்ற சமூகங்கள் திமுக ஆதரவில் நிலைத்து நின்றன. காங்கிரசு வாக்கு வங்கியாக இருந்த ஆதிதிராவிடர்களும் கணிசமாக எம்ஜிஆருக்கு ஆதரவளித்தனர். மதுரை வீரன் படத்தில் இருந்தே எம்ஜிஆர் மீது காதல் வயப்பட்டிருந்த அருந்ததியர்கள் அப்படியே எம்ஜிஆர் பக்கம் சாய்ந்தனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி அமைச்சரவையில் முக்குலத்தோருக்கு அவர்களது குடித்தொகைக்கு மேலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. 2016 சட்டசபை தேர்தலில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் எம்எல்ஏக்களாகினர். ஆனால் இவர்களில் 9 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. 19 எம்எல்ஏக்கள் கொண்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 5 பேர் மட்டுமே அமைச்சர்கள் ஆவர்.
மேலும் 31 எம்எல்ஏக்களைக் கொண்ட தலித் சமூகத்தில் 3 பேருக்கும் 28 எம்எல்ஏக்களைக் கொண்ட கவுண்டர் சமூகத்துக்கு 5 பேரும் மட்டுமே அமைச்சர்கள். அத்துடன் ஜெயலலிதாவின் முதல்வர் பதவிக்கு சிக்கல் வந்தபோதெல்லாம் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.
இப்போதுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி அமைச்சரவையில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 9, கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் இடம்பெற்றுள்ளார்கள்.
எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பொன், பொருள், நிலபுலம், கல்வி போன்றவற்றில் முன்னிலையில் இருக்கும் சமூகங்கள் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதுதான் யதார்த்தம்.
தமிழக தேர்தலில் சாதி வகிக்கும் பாத்திரத்தை உணர்த்தவே நமூகக் கண்ணேட்டத்தில் இந்தத் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இம்முறை விஜயகாந்த் அவர்களின் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறித் தனித்துப் போட்டியிடுகிறது. இது அதிமுக க்கு ஒரு பின்னடைவாகக் கணிக்கப்படுகிறது. நடிகர் கருணாஸ் தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படையும் வெளியேறியுள்ளது. வெளியேறியதோடு நிற்காமல் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
போட்டி கடுமையாக இருக்கும் பட்சத்தில் சின்னக் கட்சிகளின் வாக்குகள் வெற்றி தோல்விணை தீர்மானிக்கும் சக்தியாக மாற நிறைய வாய்ப்புண்டு.
பாரதிய ஜனதா கட்சி அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஐந்து தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியோடு 5 தொகுதிகளில் நேரடிப் போட்டி போடுகிறது. மத்திய அரசு இம்முறை எப்படியும் தமிழ்நாட்டு சட்ட சபைத் தேர்தலில் காலூன்றி விட வேண்டும் என நினைக்கிறது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு போன்றவற்றை திணிக்கும் பாஜக, அதிமுகவுக்கு பலமா அல்லது பாரமா என்பதை தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதுதான் தெரிய வரும்.
வழக்கம் போல தேர்தலில் பணம், வேட்டி, சேலை சமையல் பாத்திரங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.
இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்ற விபரம் வந்து கொண்டிருக்கின்றன. இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு அதிமுக எம்எல்ஏ டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து அந்தக் கட்சியில் போட்டியிடுகிறார்.
தமிழ்த் தேசியம் பேசும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதே போல் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதிமன்றம் நடிகர் சரத்குமார் அவர்களது அகில இந்திய சமத்துவக் கட்சியோடு கைகோர்த்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. அமமுக, விஜயகாந்தின் தேதிமுக கழகத்தோடு சேர்ந்து போட்டியிடுகிறது.
இந்தக் கட்சிகளது வாக்கு வங்கி 3 % மேல் உயராது என்பதுதான் யதார்த்தம் ஆகும்.
தேர்தல் முடிவுகள் வெளிவர மே 2 வரை காத்திருக்க வேண்டும். கருத்துக் கணிப்புக்கள் திமுக அணி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறுகின்றன.
2021 தமிழ்நாடு தேர்தல் கருத்துக் கணிப்பு
திகதி | ஊடகம் | முன்னணி | ||||||
---|---|---|---|---|---|---|---|---|
திமுக+ | அதிமுக+ | அமமுக | நீதி மையம் | நாம் தமிழர் | ஏனையோர் | |||
18 January 2021 | ABP News- CVoter | 112-90 | 120-130 | 1 – 3 | 0 – 4 | 1-3 | 0 – 4 | 8-40 |
18 January 2021 | IANS | 75 | 152 | 2 | 5 | 4 | 2 | 98 |
27 February 2021 | ABP News- CVoter | 154-162 | 58-66 | 1 – 5 | 2-6 | 2-5 | 2 – 5 | 88 – 96 |
8 March 2021 | Times Now – CVoter | 168 | 55 | 3 | 5 | 5 | 3 | 103 |
8 March 2021 | Times of India | 158 | 65 | – | – | – | – | 93 |
யார் தமிழ்நாட்டி அடுத்த முதல்வர் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலினுக்கு 38.4 விழுக்காட்டினர் ஸ்டாலினையும் 34 விழுக்காட்டினர் எடப்பாடி பழனிச்சாமியையும் தேர்ந்தெடுத்தனர்.
திமுக கூட்டணிக்கு 43.2 விழுக்காடு வாக்கு விழுக்காடு இருக்கும். இது கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் 3.8 விழுக்காடும் சதவீதம் அதிகமாகும்.
அது போல் அதிமுக கூட்டணிக்கு 32.1 சதவீதம் வாக்குகளே கிடைக்கும். இது கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை காட்டிலும் 11.6 சதவீதம் குறைவாகும். (Read more at: https://tamil.oneindia.com/news/chennai/who-is-the-most-wanted-cm-of-tamilnadu/articlecontent-pf528020-414160.html)
தேர்தல் கருத்துக் கணிப்பு முற்றிலும் சரியென்று எடுக்கக் கூடாது. கடந்த காலங்களில் கருத்துக் கணிப்பு பிழைத்திருக்கிறது. அதே நேரம் அதனைத் தள்ளவும் முடியாது. இந்த ஐந்து கருத்துக் கணிப்பில் ABP News- CVoter மட்டும் அதிமுக அணி 120-130 இடங்களில் வெல்லும் என்று கணித்துள்ளது.
ஆனால் அதிமுக தமிழ்நாட்டை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டுவிட்டது. ஆட்சியாளர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக இம்முறை ஆளுமைபடைத்த ஜெயலலிதா இல்லாத அதிமுக அணி தேர்தலைச் சந்திக்கிறது. இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏப்பிரில் 6 ஆம் திகதி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் எனலாம்!
——————————————————————————————————
Leave a Reply
You must be logged in to post a comment.