சொற்பொருள்: 1. இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் – இந்திரருக்குரியதென்ற அமிழ்தம் தமக்கு வந்து கைகூடுவதாயினும் 3. முனிவு இலர் – யாரோடும் வெறுப்பிலர். 4. துஞ்சலும் இலர் அது நீங்குதற் பொருட்டுச் சோம்பியிருத்தலும் இலர். 6. அயர்வு இலர் – மனக்கவலையும் இல்லாதவர்.
183. கற்கை நன்றே!
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி.
(கல்வியினால் வரும் உறுதிப் பொருளைக் கூறுகின்றது செய்யுள். வேளாளர் ஒதலின் சிறப்புக் கூறியது. இதுவென்பர் நச்சினார்க்கினியர் (தொல், புறத். சூ. 20)
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே! பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும், சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; . ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும், 5
‘மூத்தோன் வருக என்னாது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும், வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. 10
ஒரு தாய் ஒரு வயிற்றுப் பிறந்தவருள்ளும், அவரவர் சிறப்பின் காரணமாகத் தாயும் தன் பாசத்திலே ஓரளவிற்கு வேறுபடுபவளாவள். ஒரு குடிவந்த பலருள்ளும், மூத்தோனை வருக என்று அழையாது, அறிவுடையோனையே வருக என்று அரசனும் சென்று கேட்பான். வேற்றுமைப்பட்ட நால்வேறு வகையான மக்களுள்ளும், கீழ்நிலையிலுள்ளான் ஒருவன் கல்வி கேள்விகளிலே வல்லான் ஆயின், மேல்நிலையிலுள்ளவனும் அவனுக்கு ஆட்படுவான். இதனால் ஊறுபாடு நேர்ந்தவிடத்து உதவியும், மிக்க பொருளைக் கொடுத்தும், அதனால் நேரும் இழப்பு வருத்தம் முதலிய நிலைகளைக் கண்டு வேறுபடாதும், முயற்சியுடன் அனைவரும் கற்ற அறிவுடையவராகி மேம்படுதலே நன்றாகும். அதனால், சிறப்பும் அறிவும் நூற்பயிற்சியும் பெற்று இவ்வுலகத்து வாழ்விலும் உயரலாம்.
184. யானை புக்க புலம்!
பாடியவர்: பிசிராந்தையார். பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி, திணை: பாடாண். துறை: செவியறிவுறுஉ
Leave a Reply
You must be logged in to post a comment.