சிங்களம்திராவிட உறவுமுறை இலங்கைத் தீவு முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது

சிங்களம்திராவிட உறவுமுறை இலங்கைத் தீவு முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது

சிங்களம் – திராவிட உறவுமுறை இலங்கைத் தீவு முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது தமிழர் – சிங்களவர் என்றோ, இந்து மதத்தினர் – பௌத்த மதத்தினர் என்றோ பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் பொது வானதாகக் காணப்படுகிறது.

அதனால்தான் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் காலனி ஆட்சியாளராக வந்த காட்ரிங்டன் என்பவர் “சிங்களவர்கள் மொழியால் இந்தோ – ஆரிய மொழியைப் பேசுகின்றனர், மதத்தால் பௌத்தத்தைப் பின்பற்றுகின்றனர், பண்பாட்டாலும் சமூக அமைப்பாலும் தென்னிந்திய முறையைப் பின்பற்றுகின்றனர்” என்று கூறினார்.

இக் கூற்று ஓர் இனவரைவியல் சார்ந்த கூற்றாகும். இன்றைய தென்னாசியச் சமூகங்கள் பற்றிய விரிவான மானிடவியல் ஆய்வுகள் கண்டெடுத்த தீர்க்கமான முடிவுகளை அன்றே காட்ரிங்டன் உணர்த்தியுள்ளார் என்பது நாம் கருத்தூன்றி கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு கருத்தாகும்.இனி சிங்கள மக்களின் உறவுமுறை பற்றிக் காண்போம்.

சிங்கள மக்கள் பன்னெடுங்காலமாகப் பின்பற்றிவரும் உறவுமுறையை நூர் யால்மன் எனும் மானிடவியல் அறிஞர் மிக விரிவாக ஆராய்ந்திருக்கிறார். கூடவே ஸ்டிராட், ரொபின்ஸ், பியாஜீஸ், தம்பையா போன்றோரும் ஆராய்ந்திருக்கின்றனர். இவ்வாய்வுகள் மூலம் சிங்கள மக்களின் திருமண முறைகள், உறவுமுறைச் சொற்கள், மணக்கொடை, குடும்ப அமைப்பு, சொத்துரிமை போன்ற ஏனைய கூறுகளையும் வெகுவாகவே அறிய முடிகிறது.

இங்கு நாம் சிங்கள மக்களின் உறவுமுறைச் சொற்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். சிங்கள உறவுமுறைச் சொற்கள்

1. முத்தா – பாட்டன் (தாத்தாவின் அப்பா)

2. சியா – தாத்தா (அப்பாவின் அப்பா, அம்மாவின் அப்பா)

3. ஆச்சி, ஆத்தா – பாட்டி (அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா)

4. கிரியாத்தா, அத்தப்பா – அப்பாவின் அப்பா

5. கிரியம்மா, அத்தம்மா – அப்பாவின் அம்மா

6. அப்பா, அப்புச்சி, தாத்த, பியா -சொந்தத் தந்தைலொகு தாத்த, லொகு அப்பா, மஹாஅப்பா – பெரியப்பாகுட அப்பா, பால அப்பா – சித்தப்பாபாபொச்சி – சித்தியின் கணவர் (சித்தப்பா)

7. மாமா, மாமாண்டி – தாய்மாமன், அத்தையின்கணவர், மாமனார்

8. நந்தா, நந்தம்மா – தாய்மாமனின் மனைவி,அத்தை, மாமியார்

9. அக்கா – அக்கா (மூத்த சகோதரி)லொகு அக்கா – மூத்த அக்காமத்தியம அக்கா – பெரிய அக்காபுஞ்சி அக்கா – நடு அக்காபின் அக்கா – சின்ன அக்காபொடி அக்கா – இளைய அக்காஹின் அக்கா – குட்டி அக்கா

10. நங்கி – தங்கைலொகு நங்கி – மூத்த தங்கைமத்தியம நங்கி – பெரிய தங்கைபுஞ்சி நங்கி – நடுத் தங்கைபின் நங்கி – சின்னத் தங்கைபொடி நங்கி – இளைய தங்கைஹின் நங்கி – குட்டித் தங்கை

11. மசினா, மச்சாங், ஹுறா – மச்சான்

12. நானா – மைத்துனி

13. பானா – மருமகன்

14. லேலி – மருமகள்

15. சகோதரி – உடன்பிறந்தவள்16. சகோதரா – உடன்பிறந்தவன்

17. பவுலா, கனு – மனைவி

18. மினிஹ, புருசய்யா – கணவன்

19. புதா – மகன்லொகு புதா – மூத்த மகன்பொடி புதா – இளைய மகன்

20. முனுபுரா – பேரன்

21. மினிபிரி – பேத்தி

சிங்கள மக்களின் மேற்கூறிய உறவுமுறைச் சொற்கள் திராவிட உறவுமுறையை அச்சு வார்த்ததுபோல் பிரதிபலிக்கக்கூடியதாய் இருப்பதைக் காண்கிறோம்.

பல சொற்கள் நேரடியாகத் திராவிட உறவுமுறையில் வழங்கும் சொற்களாகவே உள்ளன. சிங்களவர்கள் தாத்தாவைக் குறிப்பிடச் ‘சியா’ எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இது மதுரை வட்டாரத்தில் தேவர் சாதிக் குழுக்களிடம் பாட்டனைக் குறிக்கப் பயன்படும் ‘சிய்யா/சிய்யான்’ எனும் சொல்லின் திரிபு வடிவமாகும்.

சில சொற்கள் மட்டும் இடைக்காலச் சிங்கள மொழியின் சொற்களாக உள்ளன. துவா, புதா உள்ளிட்ட பிற சொற்கள் இடைக்காலச் சிங்கள மொழியின் சொற்களாக உள்ளன என்கிறார் டிரவுட்மன்.

இங்கு மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டியது சிங்கள உறவுமுறையில் நேர் திராவிடச் சொற்கள் மிகுதியாகவும், இடைக்காலச் சிங்களச் சொற்கள் சிலவும் கலந்திருந்தாலும் சிங்கள மக்களுடைய உறவுமுறையின் அடிப்படைக் கட்டமைப்பு முழுக்க முழுக்கத் திராவிட அமைப்பைச் சார்ந்ததாகும்.

திராவிடரின் இருவழி உறவுத் திருமணத்தை (bilateral cross-cousin marriage) அடிப்படையாகக் கொண்டதாகும். வடஇந்தியாவில் இந்தோ – ஆரிய மொழி பேசும் சமூகத்தார் பின்பற்றிவரும் உயர்குல மணமுறை (hypergamy – கன்னிகாதானம்) இவர்களிடம் இல்லை.

இந்தியர்கள் பொதுவாக வடஇந்தியர், தென்னிந்தியர் என்று பிரிந்து காணப்படுவதுபோல் சிங்கள மக்கள் அவர்களுக்குள் கண்டியச் சிங்களவர் (மலைநாட்டுச் சிங்களவர்), கரையோரச் சிங்களவர் என்று பிரதேச ரீதியாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.

இவர்களில் முன்னவர் தங்களைச் சமூகரீதியில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். கண்டியச் சமூகத்தில் திருமணம் இரண்டு வகைப்படும். ஒன்று, ‘பின்னா’ வகைப்பட்டது. இவ்வகைத் திருமணத்தில் கணவன் தன் மனைவி வீட்டிற்குச் சென்று வாழவேண்டும். அதாவது கண்டியச் சமூகத்தாரின் ‘வசகம’ (வாழும் ஊர்) என்பது மருமக்கட்தாய முறைப்படி மனைவி வீடாகும்.

இதற்கு மாறாகத் திருமணத்திற்குப் பின்னர் மனைவி தன் கணவன் வீட்டிற்குச் சென்று வாழும் முறை ‘தீக’ (deega) எனப்படும்.

கண்டியச் சமூகத்தார் உயர்குழாமைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்குள் மருமக்கட்தாய முறையையும் மக்கட்தாய முறையையும் பின்பற்றும் இரண்டு பிரிவினர்கள் உள்ளார்கள். இருப்பினும் இவ்விரு பிரிவினரும் திராவிட உறவுமுறையையே பின்பற்றுகின்றனர்.

சிங்களவர்கள் திராவிட உறவுமுறையைக் கொண்டிருப்பது என்பது அவர்களின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை விளக்கக்கூடிய மிக முக்கியமான சான்றுகளாகும். மொழியால் அவர்கள் தென்னிந்திய மக்களிடமிருந்தும் இலங்கைத் தமிழர்களிடமிருந்தும் வேறுபடுகின்றனர். இதற்கான வரலாற்று மூலங்களையும் ஆராய வேண்டியிருக்கிறது.

கி.பி. 10ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் சிங்களம் ஓர் இலக்கிய மொழியாக உருவானது. அதனுடைய வரிவடிவமானது தென்னிந்திய சாய்வுக்கோடு வகைக்குரியதாக விளங்குகிறது என மொழியியல் அறிஞர் காலின் மசிகா (Cousin Masica) கூறுகிறார்.சிங்கள மொழிக்கும் இந்தியாவில் பேசப்படும் பிற இந்தோ – ஆரிய மொழிகளுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து மொழியியல் அறிஞர்கள் கிரியர்சன், சுனித்குமார் சட்டர்ஜி, கத்ரே, கார்டோனா ஆகியோர் விளக்கியிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருமே ஒரு கருத்தில் உடன்படுகின்றனர். இந்தோ – ஆரிய மொழிக் குடும்பத்தின் தென்பிரிவுக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாக சிங்களம் விளங்குகிறது என்றும், இது இந்தியாவில் மராத்தி மொழியுடன் நெருங்கிக் காணப்படுகிறது என்றும் கருதுகிறார்கள்.

இலங்கையின் மேற்குப் பிரதேசத்தில் வாழ்ந்துவந்த நாகர்கள் இலங்கையில் வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே வாழ்ந்து வந்த ஒரு பூர்வீகக் குடியாகும். இந்தப் பூர்வீக நாக மன்னர்களின் சின்னங்களாகச் சிங்கமும் பனைமரமும் இருந்தன.

பிற்காலத்தில் இந்தப் பூர்வீக மக்கள் பௌத்தத்தைத் தழுவிய பின்னருங்கூட இச்சின்னங்களைக் கைவிடாமல் தமக்குரியனவாகவே பின்பற்றி வந்தார்கள்.

இச்சின்னங்கள் பண்டைய தமிழகத்தில் சேர மன்னர்களுக்கும் உரியவை என்பதை இங்கு நாம் கருத்தூன்றி நோக்க வேண்டும்.

சிங்களவர்களின் சமூகப் பண்பாட்டு முறைகள் திராவிட முறைகளை ஏற்றுக்கொண்டிருப்பதற்கு அவர்களின் பூர்வகால இடப்பெயர்ச்சியும், அந்த இடப்பெயர்ச்சி மிகவும் மெதுவாகத் தென்னிந்தியப் பகுதிகளினூடாக நடந்தேறியதும், அவ்வாறு பலகாலம் தென்னிந்தியா ஊடாக இலங்கையில் குடியமர்ந்த சிங்களவர்கள் தென்னிந்திய முறைகளைத் தழுவிக்கொண்டதும் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளாகும்.

இது பொதுவான மனித குடிநகர்வியல் கருத்தினங்களுடன் ஒத்துப் போகின்றது. ஆதிகாலம் தொடக்கம் மனிதனுடைய தொலைதூர இடப்பெயர்ச்சி என்பது நீர்வழியாகவும் நிலவழியாகவும் நிகழ்ந்துள்ளது என்பதைப் பல ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

சிங்களவர்களும் இவ்விரண்டு வழியாகவும் இலங்கை சென்றடைந்தனர். பொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் ஒரு வரலாற்று நம்பிக்கை தங்களுடைய இனத்தோன்றல் ‘விஜயன்’ என்னும் வங்காள இளவரசனுடைய வழித்தோன்றல் என்பதாகும்.

இதனைச் சிங்கள மக்களின் வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சம் கூறுகிறது. எனினும் மகாவம்சம் தொடர்பான வரலாற்றியல் விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. சில ஆய்வாளர்கள் மகாவம்சத்தினைப் பௌத்த மதத்தின் ஒரு நூலாக நோக்கும்போது இலங்கை வாழ் சிங்கள மக்கள் அதனைச் சிங்கள – பௌத்த வரலாற்று நூலாகவே கருதுகின்றனர்.

சிங்களவர்கள் இந்தோ – ஆரிய மொழியைப் பேசினாலும் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய பகுதிகளோடு பூர்வ இனத் தொடர்பு கொண்டிருந்தாலும் இங்கு நாம் எழுப்பும் கேள்வி என்னவெனில், அவர்களிடம் பண்டு தொட்டுக் காணப்படும் திராவிட உறவுமுறையின் இருப்பு எதனால் என்பதே.

அவர்கள் திராவிட உறவுமுறையை ஏன் தமக்கான முறையாகக் கொண்டிருக்கிறார்கள்? அது அவர்களுக்கு எப்போது, எங்கு கிடைத்தது?

மொழி, இன உறவுகள் வேறுபட்டிருக்க சமூகப் பண்பாட்டு முறைகள் மட்டும் திராவிடம் தழுவியதாக இருப்பதேன்? இவற்றிற்கான அரசியல் வரலாறும் சமூகப் பண்பாட்டு வரலாறும் முழுமையாக, நேர்மையாக, அறிவுத்துறைகளின் ஊடாக விளங்கிக் கொள்ளப்படவேண்டும்.

சமூகப் பண்பாட்டு வரலாற்றைப் பொறுத்தவரை சிங்களவர்கள் தென்னிந்தியா வழியாகக் கடந்து இலங்கையில் குடியமர்ந்தது என்பது ஒரு பகல், ஓரிரவில் நடந்தது அல்ல. ஒரு நீண்ட காலகட்டத்தில் தென்னிந்தியா வழியாக நகர்ந்து சென்றபோது அவர்கள் இப்பகுதிகளில் தங்கி, வாழ்ந்து, இங்குள்ளப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, தமிழ் பௌத்தத்தைத் தழுவி, தமிழ்த் தேசத்தோடு உறவாடி, தென்னிந்தியக் கிராமத் தெய்வங்களை வணங்கி வழிபட்டு, மெல்ல மெல்ல நகர்ந்து இலங்கையைச் சென்றடைந்தார்கள்.

அனைவரும் வங்காளத்திலிருந்து நேரடியாகக் கப்பலில் ஏறி இலங்கை சென்றுவிடவில்லை. அப்படிச் சென்றிருந்தால் இன்று அவர்களிடம் திராவிட உறவுமுறைச் சொல் ஒன்றுகூட இருந்திருக்காது. அவர்கள் இன்றும் பின்பற்றும் உறவுத் திருமணங்களும் திராவிட உறவுமுறைச் சொற்களும் அவர்கள் தென்னிந்தியாவோடு ஏற்படுத்திக் கொண்ட அறுபடாத உறவையே காட்டுகின்றன.

இன்று தென்னிந்தியாவில் வாழும் பிராமணர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் இப்பகுதிக்குரிய உறவுத் திருமணங்களை ஏற்றுக் கொண்டதுபோல, சிங்களவர்களும் திராவிடர்களின் உறவுத் திருமணங்களை ஏற்றுக்கொண்டார்கள்.

உறவுத் திருமணங்கள் தென்னிந்திய மக்களிடம் ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றிவரும் நீர்ப்பாசன வேளாண்மையாகும். இவ்வகை விவசாயத்தில் நிலமும் நீரும் மிகவும் இன்றியமையாதவை. இவையிரண்டும் திருமணத்தால் சிதறிவிடக் கூடாது என்பதற்காகத் திராவிடர்கள் ஏற்படுத்திக்கொண்ட முறையே உறவுத் திருமணங்கள் ஆகும்.

சிங்களவர்கள் தென்னிந்தியச் சமூகத்தாரோடு ஒட்டி வாழ்ந்து இலங்கையில் குடியமர்ந்ததால் உறவுத் திருமணங்களை ஏற்றுக்கொண்டனர்.

இவை மட்டுமன்றி சிங்களவர்கள் கண்ணகியைப் ‘பத்தினித் தெய்யோ’வாகவும், விநாயகரை ‘கணபதித் தெய்யோ’வாகவும், கோயிலைச் சுற்றி நாற்றிசைக் காவல் தெய்வங்களாக ‘நாத தெய்யோ’, ‘விஷ்ணு தெய்யோ’, ‘ஸ்கந்த தெய்யோ’, ‘பத்தினித் தெய்யோ’ ஆகியவற்றையும் வழிபடுகின்றனர்.

கதிர்காம முருகனைக் ‘கதரகமத் தெய்யோ’ என்றும், வள்ளியை ‘வள்ளியம்மா’ என்றும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இவையாவற்றையும் திராவிடத்திலிருந்து தாம் பெற்றதாக அவர்கள் நினைப்பதில்லை. அவர்களுடையதாகவே கருதுகிறார்கள்.

இவ்வகையான கருத்தினங்களை அவர்கள் ‘இனமையவாதம்’ (ethnocentrism) அடிப்படையில் அணுகாமல், பண்பாட்டு ஒப்பியல், பண்பாட்டுப் பரவல், ஓரினமாதல் ஆகிய அணுகுமுறைகள் வழி நோக்கும்போது திராவிடத்திலிருந்து சிங்களம் ஏற்றுக்கொண்ட கூறுகள் பலவாகும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.

சிங்களவர்கள் கேரளத்தின் கதகளி நடன வகைமையைக் கொண்டிருப்பதும், ‘கிரிபத்’ (பால் பொங்கல்) போன்ற உணவு வகைகளையும், இன்ன பிற தென்னிந்தியப் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருப்பதும் திராவிடத்தைத் தழுவிக் கொண்டதற்கான வலுவான சான்றுகளாகும்.

அவ்வாறே வடஇந்தியக் கூறுகளின் தொடர்ச்சியையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல வங்காள, ஒடிசா இனத் தொடர்புகளும், சிங்கள மொழியில் மிகுதியான சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவதும் போன்ற இன்ன பிற கூறுகளின் தொடர்ச்சியும் இவர்களுடைய வடஇந்தியத் தோற்றத்தை உறுதி செய்கின்றன.

ஆதலின் இன்றைய சிங்களம் (இன, மொழி, பண்பாடு மூன்றையும் உள்ளடக்கியது) என்பது ஓர் அனைத்திந்திய தோற்றத்தைக் (pan-Indian origin) கொண்டிருக்கக் கூடியதாக விளங்குகிறது.

ஆகவே சிங்களவர்களின் அடையாளம் என்பது இனத்தால் சிங்களவர், மொழியால் இந்தோ – ஆரிய மொழி பேசுபவர்கள், மதத்தால் பௌத்தர்கள், பண்பாட்டால் தென்னிந்தியர்கள் என்பதைச் சமூக அறிவியல்களின் இன்றைய ஆய்வுப் போக்குகள் மூலம் உறுதிபடக் கூறமுடிகிறது.

சிங்கள ஆட்சியாளர்கள் இதுவரை முன்னெடுத்து வந்துள்ள இனவாதம் தனியாகவும், மரபணுவியல், சமூக அறிவியல்கள் ஆகிய துறைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டுவரும் உண்மைகள் இன்னொரு புறம் தனியாகவும் நிற்கின்றன. இவையிரண்டும் இனிவரும் காலங்களில் ஒரு திசை நோக்கி நகர வேண்டியது அவசியமாகும்.

About editor 3123 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply