பேரரசராக விளங்கிய அசோக மன்னரின் வாழ்க்கை வரலாறு

பேரரசராக விளங்கிய அசோக மன்னரின் வாழ்க்கை வரலாறு

Balajiviswanath N 

06 Jun 2020

‘அசோகா தி கிரேட்’: அசோக அரசன் மூன்றாவது. மௌரிய பேரரசனாகவும், இந்தியா முழுவதும் உள்ள துணை கண்டத்தை ஆண்ட மிகப்பெரும் வல்லமை மிக்க அரசனாகவும் திகழ்ந்தார்.

இவர், உலகம் முழுவதும் பெருமளவில் புத்த மதத்தை பரப்பியவராவார். தனது சாம்ராஜியத்தை பெருமளவில் விரிவுபடுத்தி அச்சுறுத்தும் அரசனாக இருந்தார். ஆனால், தமிழகம், கேரளாவை அவர் கைப்பற்ற முடியவில்லை. வன்முறை அரசனாக இருந்த அவர், அதை முற்றிலும் துறந்து அமைதியான பேரரசனாக மாறினார்.

புத்த மதத்திற்கு பெருமளவில் தனது வாழ்வில் பங்காற்றினார். அவரை கௌரவிக்க இந்திய அரசு அசோக அரசரின் சின்னத்தை தேசிய சின்னமாக வைத்துள்ளது. அசோகரின் ஆட்சி காலம் ஒரு புகழ்பெற்ற காலமாக இந்தியாவில் பார்க்கப்பட்டு வருகிறது. அவரது மரணத்திற்கு பின் இந்தியாவில் புத்த மதம் பெருமளவில் பரவவில்லை, என்றாலும் கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பெருமளவு மக்கள் புத்த மதத்தை தற்போதும் பின்பற்றி வருகின்றனர்.

அத்தகைய அரசரின் வாழ்க்கை வரலாறு…

பிறப்பு மற்றும் இளம் வயது

அசோக மௌரியா, படாலிபுத்ராவில் (தற்போதைய பாட்னா) கி.மு 304ல் இரண்டாம் மௌரிய அரசர் பிந்துசாரா-சுபத்ரங்கி தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு, அசோக வர்த்தனன், தேவனம் பிரியா, பிரியதர்ஷன் என்ற பெயர்களும் உண்டு. இவருக்கு, சுசிமா என்ற சகோதரியும் இருந்தார்.

மௌரிய பேரரசை உருவாக்கி சந்திரகுப்த மௌரிக்கு பல மனைவிகள் மூலம், பல பேரப்பிள்ளைகள் இருந்தனர். அவ்வாறு அசோகருக்கு பல சகோதரர்கள் இருந்தனர்.

ஆனால், அசோகர் சிறுவயதிலேயே போர் பயிற்சியிலும், வேட்டையிலும் சிறந்து விளங்கினார். அது தவிர சிங்கத்துடன் சண்டையிட்டு வெற்றி பெறும் அளவில் பயற்சி பெற்றிருந்தார்.

நடைமுறை மற்றும் துவக்ககால ஆட்சி

ஆரம்பத்தில் படை தளபதியாக இருந்த அசோகர், பயமற்ற மற்றும் இதயமற்ற தலைவராக இருந்தார். மௌரிய பேரரசரின், அவந்தி மாகாணத்தில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு அசோகருக்கு வழக்கப்பட்டது.

திறமையுடனும், வலிமையுடனும் அவந்தி கலவரத்தை கையாண்டதால், கிமு 286-ல் அவந்தி மாகாணத்தின் வைஸ்ராய் பொறுப்பு அசோகருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து டாக்ஸிலாவில் ஏற்பட்ட கிளர்ச்சியை தணிக்க சுசிமாக்கு உதவுமாறு தந்தையால் அசோகர் அனுப்பட்டார். அதையும் திறமையுடன் கையாண்டதால் டாக்ஸிலாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாவது முறையாக டாக்ஸிலாவில் ஏற்பட்ட கிளர்ச்சியையும் அசோகர் திறமையுடன் கையாண்டதாக கூறப்படுகிறது.

தந்தையின் மரணமும், அரசராக முடிசூடியதும்..

கிமு 272ல் அசோகரின் தந்தை பிந்துசாரா மரணமடைந்தார். அதன் பின் ஆட்சி அதிகாரத்திற்கு, சந்திர குப்தாவின் மற்ற மனைவிகள் வழி பிறந்த பேரன்களுடன் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் போரிட்டு விட்டஷோகா என்ற மாகாணம் தவிர மற்ற அனைத்து இடத்திலும் ஆட்சியை பிடித்தார்.

தந்தை இறந்து, நான்கு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு கிமு 269ல் அசோகர் முடிசூடினார். அதன் பின் தந்தையின் அமைச்சரவையில் இருந்த ராதகுப்தர் என்ற அமைச்சர் தனக்கு உதவியதற்காக முக்கிய அமைச்சர் பொறுப்பை அசோகர் வழங்கினார்.

தொடர்ச்சியான போர்கள்

தொடர்ந்து அசோகர் தனது ஆட்சி காலத்தில் எட்டு ஆண்டுகளில் தொடர்ந்து போரில் ஈடுபட்டார். மேற்கில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான், கிழக்கில் பங்களாதேஷ் மற்றும் பர்மி எல்லை உள்ளிட்ட இந்திய துணைக் கண்டம் முழுவதும் தனது பேரரசை விரிவுபடுத்தினார்.

தெற்கே கோதாவரி, கிருஷ்ணா படுகை மற்றும் மைசூர் ஆகியவற்றைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். ஆனால், தெற்கில் உள்ள தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை பிரதேசங்களை அசோகரால் கைப்பற்ற இயலவில்லை

கலிங்கா போரில் இலட்சக்கணக்கான உயிர்பலி

மௌரிய பேரரசர்கள் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டிருந்தாலும், இந்தியாவின் வடகிழக்கு கடற் கரையில் உள்ள கலிங்க ராஜ்யத்தை ஒருபொழுதும் கைபற்ற இயலவில்லை. எனவே அசோகர் கலிங்க ராஜ்யத்தின் மீது போர் தொடுத்தார்.

கலிங்காவில் நடந்த போரில் 100,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றும் 150,000க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டனர். பெருமளவில் உயிர்கள் போனதை கண்ட பேரரசர் ஆசோகரின் மனதை அது பெரிதும் பாதித்தது. அதிலிருந்து இனி ஒருபோதும் போர் புரிய மாட்டேன் என்று அசோகா சபதம் எடுத்தார்.

அவர் சபதம் எடுத்த அந்த நிகழ்வு இன்றுவரை பாடபுத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

புத்த மதத்திற்கு தழுவுதல்

அகிம்சை வழியை பின்பற்ற துவங்கிய அசோகர் புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டார். புத்த மதத்தையே மாநில மதமாகவும் மாற்றினார். தனது, சாம்ராஜியத்தில் அடிப்படை கொள்கை விதிகளை முற்றிலும் மாற்றினார். அதை பாறைகள், கல்வெட்டுகள் மூலம் வெளியிட்டார்.

தொடர்ந்து புத்த மதத்தை பல நாடுகளில் பரப்ப ஆப்கானிஸ்தான், சிரியா, பெர்சியா, கிரீஸ், இத்தாலி, தாய்லாந்து, வியட்நாம், நேபாளம், பூட்டான், மங்கோலியா, சீனா, கம்போடியா, லாவோஸ் மற்றும் பர்மா ஆகிய நாடுகளுக்கு புத்த துறவிகளை அனுப்பி வைத்தார்.

புத்த மதத்தை பெருமளவில் அவர் பரப்பிய போதிலும், தனது சாம்ராஜியத்தினுள் சமணம், கிரேக்க பாலிதீயம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றவும் அனுமதித்தார்.

நினைவுகள்

தொடர்ந்து புத்த நினைவு சின்னங்கள் சேமிப்பதற்காக 84,000 ஸ்தூபங்கள் நிறுவினார். தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவில் புத்த துறவிகள் தியானம் செய்ய பல மண்டபங்களை கட்டினார்.

இன்று வரை அசோகர் அரசனின் நினைவு சின்னங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. அதில், ஒன்று இந்திய தேசிய கொடியில் உள்ள சக்கரம். மற்றும் மூன்று சிங்க முகங்கள். அதேபோல் அசோக தூண்களும் அவரது நினைவாக உள்ளது.

40 முதல் 50 அடி வரை உயரமுள்ள தூண்களை நேபாள், பாகிஸ்தான் மற்று ஆப்கானிஸ்தான் வரை அசோகர் அமைத்தார். ஆனால், அந்த தூண்களில் தற்போது மொத்தம் 10 மட்டுமே மீதமுள்ளது.

அசோக தூணில் உள்ள சிங்கத்தின் முகம் இன்றுவரை இந்தியாவின் தேசிய சின்னமாக உள்ளது.

——————————————————————————————————————–

குடும்பம் மற்றும் குழந்தைகள்

தனது சகோதரர்களின் பகையில் இருந்து தப்பி கலிங்காவில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த வேளையில், அங்குள்ள இளவரசி கவுர்வாக்கியை காதலித்தார். ஆனால், ஒருவரை ஒருவர், தாங்கள் யார் என்று வெளிப்படுத்தவில்லை. பின் இருவரும் இரகசிய திருமணம் செய்து கொண்டனர்

உஜ்ஜைனில் காயத்திற்காக மருத்துவம் பார்க்க சென்ற இடத்தில், விடிஷாவை சேர்ந்த மகாதேவி சக்யா குமாரி (தேவி)யை சந்தித்தார். அவர் மேல் ஈர்ப்பு கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதினருக்கு மகிந்தா என்ற மகனும், சங்கமித்ரா என்ற மகளும் பிறந்தனர்.

கவுர்வாக்கி மற்றும் தேவி தவிர அசோகாவுக்கு பல மனைவிகள் இருந்ததாக நம்பபடுகிறது. பத்மாவதி, திஷ்யரக்ஷா மற்றும் அசந்திமித்ரா என்று கூறப்படுகிறது. இவர்களுக்கும் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் சாரமதி, ஜலுகா, குணாலா, திவாலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், அவரது பிள்ளைகளாக அறியப்படும் மகிந்தா மற்றும் சங்கமித்ரா இலங்கையில் புத்த மதத்தை பரபுவதில் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

இறப்பு

அசோகர் கிமு 232ல் தனது 72வயது வயதில் படாலிபுத்ராவில் மரணமடைந்தார்.

ஆட்சியை பிடிக்க பல உயிர்களை எடுத்த மன்னராகவும், பெரும் நிலப்பகுதியில் தனது ஆட்சி அதிகாரம் கொண்டிருந்த ஆசோகர் இறுதியில் அகிம்சை மன்னராக உயிரிழந்தார்.

https://tamil.samayam.com/viral-corner/omg/life-history-and-biography-of-king-ashoka-in-tamil/articleshow/76229587.cms?story=9

———————————————————————————————————-

பேரரசர்
அசோகர்

Leave a reply

440px-EdictsOfAshoka

அசோகர் மௌரிய வம்சத்தை சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும். கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார்.புத்த மதத்தை ஆசியாவெங்கும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான் புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராக கருதப்படுகிறார்.

சந்திரகுப்த மெளரியர்

மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மௌரியர் ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் இரஜகிரஹகம் மகதத்தின்தலைநகராக இருந்தது. பின்னர், பாடலிபுத்திரம் என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய பீகாரின் தலைநகரம் பாட்னா என அழைக்கப்படுகிறது.மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.

சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசி காலத்தில் சமண மதத்தை தழுவி பெங்களூர் அருகே உள்ள சரவணபெலகுளாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்க்கை வாழ்ந்து உயிர் துறந்தார். இதனாலேயே அங்குள்ள மலைக்குச் சந்திரகிரி என்ற பெயர் வந்தது.

பிந்துசாரர்

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார். பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால், சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள் (பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப் பொருள்படும்).

பிந்து சாரர் இருகடல்களுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை வென்றதாக திபெத்திய வரலாற்று ஆசிரியர் தாரநாதர் கூறுகிறார். தமிழகம் வரைக்கும் படை எடுத்து வந்து வென்றதாக கூறுகிறார்கள். சங்கப்புலவர் மாமூலனார் பாடலில் மௌரியர் படையெடுப்பை பற்றிய குறிப்புகள் இருப்பதால் இப்படையெடுப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கருதலாம். இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.

பிந்து சாரருக்குப் பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு. திஷ்யா என்ற ஒரு சகோதரரை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.

சக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 – 232)
பிறப்பும் இளமைக் காலமும்

அசோகர் பிந்துசாரருக்கும் அவரது மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர், சிலர் அவர் செல்லுகஸ்நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள். அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார் இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் (மகிந்த தேரர்),சங்கமித்தையும். பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினர்.

கலிங்கப் போரும் மதமாற்றமும்
  • கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிஸா, மகத நாடு தற்போதைய பீகார். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை. சந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள், எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார். கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார்.
  • இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்ற கருத்தும் உண்டு. அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர், அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார்.ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.
  • விவேகானந்தரின் கூற்றுப்படி,இளவயதில் அவ்வளவு நல்லவராக இல்லாத அசோகர், தனது சகோதரருடன் சண்டையிட்டார். அதில் தோற்கடிக்கப்பட்ட அசோகர், பழிவாங்குவதற்காக சகோதரனை கொல்ல எண்ணினார். அந்த சகோதரன் ஒரு புத்த பிட்சுவிடம் தஞ்சம் புகுந்ததால், அசோகர் அந்த புத்த பிட்சுவிடம் சென்று தனது தம்பியை ஒப்படைக்கக் கூறினார். அன்பால் பகைமையை நீக்கச் சொன்ன புத்த பிட்சுவிடம், கோபத்தால் தனது தம்பிக்கு பதில் உயிர் துறக்க அவருக்கு சம்மதமா என்று கேட்டதற்கு சிறு சலனமும் இல்லாமல் அந்த புத்த பிட்சு உயிர் விட சம்மதித்து வெளியே வந்தார். அவரது மனவலிமையைக் கண்டு கவரப்பட்டார் அசோகர். இவ்வாறுதான் புத்தரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார் அசோகர்.
ஆட்சி முறை

அசோகர் முதல் முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர்.சாலை ஓரம் மரங்களை வைத்தவர்.மன்னர்களும், அரசு அதிகாரிகளும் மக்களிடம் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தூண்களில் சட்ட திட்டங்களை செதுக்கி வத்துள்ளார்.இதன் முலம் வெளிப்படையாக நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளார்.

தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தார்.

தேவனாம்பியாச பிரியதர்ஷன்

தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது,மாஸ்கி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மட்டும் அசோகர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஜேம்ஸ் பிரின்செப் என்ற கல்வெட்டு ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார்; இல்லை எனில், இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.

கிர்னார் மலை கட்டளை

சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள கிர்னார் மலை புத்தமதத்தினருக்கு மிகவும் புனிதமானது. அசோக மன்னரின் கட்டளைகளில் முதன்முதலாக பொருள் கண்டுபிடிக்கப்பட்டவை பொறிக்கப்பட்டிருக்கின்ற பெரும் பாறை அதன் அடிவாரத்தில் உள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டினால் மறைக்கப்பட்ட பெரிய நினைவுத்தூண்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

பவஹாரி பாபாவுக்கு இந்த மலையின் உச்சியில் தான் செயல்முறை யோகத்தின் ரகசியங்கள் உபதேசிக்கப்பட்டதாக அவரது நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மவுரிய சாம்ராஜ்ய முடிவு

அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார் அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

  • அசோகர் பின்னாளில், இலங்கை அரசன் ஒருவனுக்கு முடியுடன், தேவநாம்பிரியர் என்ற பட்டமும் அளித்ததாகமகாவம்சம் கூறுகிறது. அவ்வரசன் பெயர் தேவநம்பிய தீசன் என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.
  • https://hiddenhistorybysrihari.wordpress.com/2016/06/23/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/
  • —————————————————————————————————-

இந்தியாவையே ஆண்ட அசோகர் ஏன் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார் தெரியுமா?

By Saran Raj

Thursday, May 30, 2019

இந்தியாவின் மிகப்பெரிய ராஜ்ஜியங்களை ஆண்ட அரசர்களில் மிகவும் முக்கியமானவர் மாமன்னர் அசோகர் ஆவார். அவரின் பெயரை தவிர்த்து இந்தியாவின் வரலாற்றை எழுதுவது முடியாத ஒன்று. ஏனெனில் இந்திய வரலாற்றுக்கான அவரின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது ஆகும். அசோகரின் வாழ்க்கையை மாற்றிய முக்கிய தருணம் அவர் புத்த மதத்திற்கு மாறியதுதான். மௌரிய வம்சத்தில் பிறந்த அசோகர் இந்தியாவின் மிகப்பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டார், சிலப்பகுதிகள் தவிர்த்து பல ஆண்டுகள் இவரின் கீழ்தான் இந்தியாவின் பெரும்பகுதி இருந்தது.

இவரின் ஆட்சிக்காலத்தில் மௌரிய சாம்ராஜ்ஜியம் இந்துகுஷ் மலைத்தொடர்களில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் வரை பரவியது. அசோகர் ஏன் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார் என்று இந்த பதிவில் பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வலிமைமிக்க பேரரசர் இந்திய துணைக்கண்டம் முழுவதையும் ஆட்சி புரிந்த அசோகரால் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குள் நுழைய இயலவில்லை. அசோகர் அவரின் வீரம் மற்றும் நிர்வாக திறமையால் பெரும்புகழ் பெற்றார். ஒரு ஒருங்கிணைப்பாளராக மாபெரும் அரசை தன் கீழ் கொண்டுவர தேவையான அனைத்து திறமைகளும் உடையவராக அவர் இருந்தார். கலிங்க ராஜ்ஜியம் அசோகர் தன் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு போர்களில் பங்கு கொண்டார், போரிடுவது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. ஒடிசா மற்றும் வட கரையோர ஆந்திரப் பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவின் கிழக்கு கரையோரத்தில் அமைந்திருந்த ஒரு ராஜ்ஜியமாக கலிங்கம் இருந்தது.

கலிங்க யுத்தம் கலிங்க ராஜ்ஜியம் அதன் ஜனநாயகத்தாலும், இறையாண்மையாலும் மிகச்சிறந்த மாநிலமாக விளங்கியது. எட்டு வருட காத்திருப்பிற்கு பிறகு அசோகர் கலிங்கத்தின் மீது போர் அறிவித்தார். வரலாற்று குறிப்புகளின் படி இந்த கொடூரமான போரில் கிட்டத்தட்ட 1,00,00 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர் மேலும் தன் மண்ணை காக்க முன்வந்த குடிமக்களும் கொல்லப்பட்டார்கள். மொத்தத்தில் இதை போரில் 1,50,000 நபர்கள் கொல்லப்பட்டார்கள். போரின் பாதிப்பு அசோகர் அவர் உருவாக்கிய பாறை கல்வெட்டுகளில் கூறியுள்ளபடி போர் முடிந்த மறுநாள் அசோகர் அந்த நகரத்தின் வீதிகளில் நடந்து சென்றார். அவர் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் சிதைக்கப்பட்ட சடலங்களும், எரிக்கப்பட்ட வீடுகளும், அனாதை ஆக்கப்பட்ட மக்களும்தான். அவர் கண்ட காட்சி கல் இதயத்தையும் கரைக்கும் என்று கல்வெட்டு கூறுகிறது.

போரின் தாக்கம் போருக்கான நியதிகள் அனைத்தும் தகர்க்கப்பட்டிருந்ததது, அவரின் அதிகார வெறி மறைந்து தனது மக்களை பாதுகாக்கும் அமைதியை விரும்பும் ஒருவராக அவரை அந்த போர் மாற்றியது.

இந்த தருணத்தில் அவர் கேள்விப்பட்ட புத்தரின் போதனைகள் அவரின் மனதை ஊக்கப்படுத்தியது. மனம் மாறிய மன்னர் அசோகர் புத்த மதம் பற்றிய தன் ஞானத்தை ஆழமாக்க எண்ணினார். அதனால புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய இடங்களுக்கு 256 நாட்கள் புனித யாத்திரை மேற்கொண்டார். அதனபின்னர் அவர் சக்கரவர்த்தி என்னும் ஆடம்பரத்தை துறந்து தனது மக்களின் தேவைகளை நிறைவேற்றுபவராக மாறினார். நினைவு சின்னங்கள் புத்த மதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட அசோகர் அதற்கு பிறகு மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தினார். மேலும் அவரின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல இடங்களில் புத்தரின் நினைவுஸ் சின்னங்களை கட்ட தொடங்கினார்.

புத்த மதத்தை பரப்புதல் கான்ஸ்டடைன்க்கு கீழ் கிறித்துவம் எப்படி வளர்ச்சி பெற்றதோ அதே போல அசோகரின் ராஜ்ஜியத்திற்கு கீழ் புத்த மதம் பெரும் வளர்ச்சியை அடைந்தது. தனது ராஜ்ஜியம் மட்டுமின்றி பக்கத்து ராஜ்ஜியங்களிலும் புத்த மதத்தை அசோகர் பரப்பினார்.

அசோகரின் குடும்பம் புத்த மதம் மீதான அசோகரின் ஆர்வம் அவரின் மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்ராவையும் ஈர்த்தது. அவர்கள் இருவரும் இலங்கையில் புத்த மதத்தை பரப்பினர். புத்த மதம் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்க காரணம் அசோகர் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சிகள்தான்.

Read more at: https://tamil.boldsky.com/insync/life/2019/why-did-ashoka-convert-to-buddhism/articlecontent-pf186670-025448.html

———————————————————————————————————-

அசோகனுடைய கல்வெட்டுக்களில் தர்மநெறியும் அரசியல் வரலாற்றில் புதிய சிந்தனைகளும்

உலகியல் வரலாற்றிலே தெற்காசிய நாகரிகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப் படுகிறது. தெற்காசிய நாகரிகம் பற்றி ஆராய்கின்ற போது இந்தியத் துணைக் கண்டத்தின் சாதனைகளை முதன்மைப் படுத்துவது வழமை. இந்திய வரலாற்றிலே மௌரியப் பேரரசர் காலமானது மிகவும் சிறப்பானதொரு இடத்தினைப் பெற்றுத் திகழ்கிறது. மௌரியப் பேரரசின் வரலாற்றில் கி.மு 268 ஆம் ஆண்டு ஆட்சிப் பீடத்தில் ஏறிய அசோகச்
சக்கரவர்த்தியின் காலம் வரலாற்றில்; இருந்து பிரிக்க முடியாத அளவிற்கு சாதனைகள் வாய்ந்த காலம் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

         அசோகனது காலத்தில் மௌரியப் பேரரசு தன்னகத்தே பல சிறப்பியல்புகளைக் கொண்டு வல்லமை பெற்ற அரசாக மேலோங்கியிருந்தது. பேரரசு நிலப் பரப்பில் விசாலமடைந்து தொன்மைக் கிழக்கில் இருந்த மிகப் பெரிய அரசுகளில் ஒன்றாயிற்று. அசோகனின் ஆட்சி நாட்டின் பல பாகங்களுக்கும் விஸ்தீரணமடைந்ததுடன் நாடு கடந்த செல்வாக்கினையும் பெற்றிருந்தது. ஆட்சியின் உச்ச நிலையில் இருந்த அசோகச் சக்கரவர்த்தி கலிங்கப் போரினால் தனக்கு ஏற்பட்ட விரக்தியிலிருந்து விடுதலை பெறுவதற்காக தரும நெறியில் நின்று ஒழுகி மக்களுக்கு பல பணிகளை ஆற்றினார். இவ்வாறு அசோகனால் கடைப் பிடிக்கப் பட்ட தரும நெறியானது அரசியல் வரலாற்றில் எவ்வாறான புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்துள்ளது என்பதை அசோகனது கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு ஆராய்வதே இக் கைநூலின் பிரதான நோக்கமாகும்.

          தொல்லியல் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்;சியின் அடிப்படையில் அசோகனது காலத்திற்குரியதாகக் கருதப்படுகின்ற  சாசனங்கள் இந்தியாவின் பல பாகங்களிலும் கிடைக்கப் பெற்றுள்ளன. அச் சாசனங்களில் பொறிக்கப் பட்டுள்ள எழுத்துக்களை ஆராய்வதனூடாக அசோக தர்மம் பற்றியும், அசோகன் கடைப்பிடித்த சமயப் பொறை, நிருவாக முறை, போன்ற விடயங்கள் அக்கால அரசியல் நெறியில் ஊடுருவியிருந்த விதம், அதனால் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் போன்றவற்றையும், அசோகனது கால வரலாற்றுச் சிறப்புக்களையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அசோகனது சாசனங்களில் குறிப்பிடப் படுகின்ற ‘தேவானாம்பிய’ என்ற சொற்பதமானது அசோகனுடைய ஆட்சியில் தரும நெறி கடைப்பிடிக்கப் பட்டதை புலப்படுத்துவதாக அமைகிறது. அதாவது ‘தேவானாம்பிய’என்றால் ‘காட்சிக்கு இனியன்’ ‘கடவுளின் அன்பன்’ போன்ற பொருள்களைச் சுட்டி நிற்கிறது. அசோகன் காலத்து மௌரியப் பேரரசின் உண்மைகளை நிர்ணயிப்பதற்கு அவனுடைய கல்வெட்டுக்கள் முதன்மையான சான்றுகளாக விளங்குகின்னன.

          ‘அசோக தர்மம்’ அரசியல் நெறி பற்றிய புதிய சிந்தனைகளின் வடிவமாக எவ்வாறு அமைந்தது என்பதை நாம் கல்வெட்டுக்களைத் துணைக் கொண்டு ஆராய்கின்ற போது முதலில் தருமம் என்றால் என்ன? என்பதற்கு அசோகனுடைய கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்ற பொருளினை இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். தருமம் என்ற சொல் ‘மனிதனது ஒழுக்க நெறி முறைகளையும், அவனது வாழ்க்கைக்கான வழிகளையுமே’ குறித்து நிற்கிறது. ஆனால் கல்வெட்டுக்களில் ஒரு சில இடங்களில் தருமம் என்பது ‘பௌத்த போதனையின் சமய சித்தாந்தம்’ என்ற பொருளிலும் குறிப்பிடப் படுகிறது.

                 இருந்த போதிலும் பெரும்பாலான கல்வெட்டுக்களில்                               ‘ஒழுக்க நெறிக் கோட்பாடுகளின் தொகுப்பே தருமம்’என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தரும நெறி பற்றி அசோகனது கல்வெட்டுக்களில் இரண்டு அர்த்தத்தில் குறிப்புக்கள் இடம் பெறுகின்றன.

அசோக தருமத்தின் முக்கிய விடயங்கள்.

           அசோகனால் கடைப்பிடிக்கப்பட்ட தரும நெறியே அசோக தருமம் என சிறப்பிக்கப் படுகிறது. இதனை வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அசோகனால் கடைப்பிடிக்கப் பட்ட தருமக் கோட்பாடுகளாக பெரியோர் சொற் கேட்டல், பெரியோரை வணங்குதல், கொடை, கொல்லாமை, சமத்துவம் பேணல், சமாதானத்தைக் கடைப் பிடித்தல், சமயப் பொறை முதலியவை அசோகனது தரும நெறிகளில் முக்கியமானவை என அவனது கல் வெட்டுக்களில் பொறிக்கப் பட்டுள்ளன. இத்தகைய தருமக் கோட்பாடுகள் அசோகனது காலத்தில் மக்களால் பின்பற்றப் பட்டதால் அரசியலில் புதிய சிந்தனை மரபுகள் ஊடுருவிக் கொண்டன.

        அசோகன் தனது கல்வெட்டுக்களில் மக்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தரும நெறிகள் பற்றிக் குறிப்பிட்டதுடன் நின்று விடாது தருமக் கோட்பாடுகளைப் பிறழ்வின்றிக் கடைப்பிடிப்பதனால் மனிதன் பெறும் பயன்கள் பற்றியும் விளக்கியுள்ளார். அந்த வகையில் ‘தருமத்தில் உறுதியும், விசுவாசமும் கொண்டு செயலாற்றுபவனுக்கு அரசனின் தயவும், வாழ்க்கை நலங்களும், சுவர்க்கமும் கிட்டும்’ என தனது கல்வெட்டுக்களில் அசோகன் குறிப்பிடுகின்றமை அவன் தரும நெறிக்கு வழங்கிய முக்கியத்துவத்தினையே படம்பிடித்துக் காட்டுகிறது.

    அசோக தர்மத்தில் அன்பு, கொல்லாமை, கீழ்ப்படிவு போன்றவை

         அசோகன் தனக்கென ஓர் உயர்ந்த இலட்சியத்தை தேர்ந்தெடுத்தார். அவர் ஆதிக்க வெறி கொண்ட ஓர் அரசன் போல் அல்லாமல் அன்பு உள்ளம் கொண்ட ஒரு தந்தை போல் மக்களிடம் நடந்து கொள்ள வேண்டும். என்பதே அந்த உயர்ந்த இலட்சியம். மன்னர் தம்முடைய பிரஜைகளை தம் குழந்தைகள் போல் கருதுகிறார் என்று குடி மக்களிடம் கூறும் படி தம்முடைய அதிகாரிகளிடம் அவர் அடிக்கடி கூறினார். மன்னரின் பிரதிநிதிகள் என்ற என்ற முறையில் மக்களின் நலன்களைக் காக்கும் படி அவர் தம்முடைய அதிகாரிகளை வலியுறுத்தினார். பெண்கள் உட்பட பல்வேறு சமூகப் பிரிவுகளிடையே தர்மத்தைப் போதிப்பதற்கு அசோகன் தர்ம மகாமாத்திரர்களை நியமித்தார். நீதி பரிபாலனத்துக்காக ரஜூகர்கள் என்னும் அதிகாரிகளையும் அவர் நியமித்தார். விலங்குகளிடம் பரிவு காட்ட வேண்டும் எனவும், உறவினர்களிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும்; வலியுறுத்தினார். இவ்வாறு அசோகன் தர்மத்தைக் கட்டிக் காப்பதற்காக அன்பை உயரிய இலட்சியமாகக் கடைப்பிடித்து வாழ்ந்தமையால் நாடளாவிய ரீதியில் தர்மம் விரிசலடைந்தது.

         அசோகச் சக்கர வர்த்தி கொல்லாமையைக் கடைப் பிடித்தமை அவர் தரும நெறியில் கொண்டிருந்த ஈபாட்டினையே வெளிப் படுத்துகிறது. சில வகைப் பறவைகளையும், விலங்குகளையும், கொல்வதை அவர் தடை செய்திருந்தார். தலை நகரில் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டிக் குவிப்பதை முற்றிலுமாகத் தடை செய்திருந்தார். விலங்குகளைக் கொன்று மக்கள் விருந்துபசாரங்களை கூட்டமாக நடத்துவதையும், குடி வெறியாட்டங்களில் ஈடுபடக் கூடிய ஒழுக்கக் கேடான சமூக நிகழ்வுகளுக்கும் அவர் தடையாணை விதித்தார்.

        அசோக தருமம் குறுகிய நோக்குடைய தர்மம் அல்ல. அதனைச் சமயச் சார்புடையது என்று கூற முடியாது. என அசோகனது கல்வெட்டுக்களை ஆராய்ந்த தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மக்கள் முதியவர்களுக்கக் கீழ்ப் படிந்து நடக்க வேண்டும் என்பதையும் அசோகன் வலியுறுத்தினான். மக்கள் தங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப் படிந்து நடக்க வேண்டும். எனவும், பிராமணர்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும் மரியாதை காட்ட வேண்டும். அடிமைகளுக்கும், வேலையாட்களுக்கும் இரக்கம் காட்ட வேண்டும். எனவும் அசோகன் மக்களுக்கு நேரடியாக வலியுறுத்தி வந்ததாக அசோகனது கல்வெட்டுக்கள் வாயிலாக அறிய முடிகிறது.

       அசோக தருமத்தில் சமயப் பொறை

       அசோகன் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும் அனைத்துச் சமயங்களையும் சமமாக மதித்து, அனைவருக்கும் பொதுவான தருமக் கோட்பாடுகளையே தனது கல்வெட்டுக்களினூடாக வெளிப் படுத்தினான். இது அசோகன் கடைப்பிடித்த சமயப் பொறையினை தூலாம்பராக வெளிப்படுத்துகிறது. இத்தகைய அசோகனது தரும நெறிக் கோட்பாடானது ஒரே பேரரசின் கீழ் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து புதிய அரசியல் சிந்தனையைத் தோற்றுவிப்பதற்கு பெரிதும் துணையாக அமைந்தது.
         அசோகன் தனது கல்வெட்டுக்களின் மூலம் அசோக தருமம் பற்றிக் கூறுகின்ற போது ‘இந்தத் தருமக் கோட்பாடுகள் பல்வேறு சமயப் பிரிவுகளதும், போக்குகளதும் சாரம்’ என்று கூறினான். தருமத்தின் கோட்பாடுகளை ஆழ்ந்து கற்கும் படியும், எல்லாப் போதனைகளையும் ஒப்புக் கொண்டு மதிக்கும் படியும், அசோகனுடைய கல்வெட்டுக்கள் மக்களை ஒருங்கே கேட்டுக் கொண்டன. இத்தகைய கருத்துக்கள் சகல மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக விளங்கின. இது அரசியலில் ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கியது.

        அசோகனது கல்வெட்டுக்களில் எடுத்துரைக்கப் பட்ட தருமக்      கோட்பாடுகள் பேரரசின் எல்லா மக்களுக்கும் பொதுவான கோட்பாடுகளாக விளங்க வேண்டும் என்றும், வருணப் பாகுபாடுகள், சமுதாயங்கள், பல்வேறு சமூகக் குழுக்கள், ஆகியவற்றின் தருமங்களுக்கு மேற்பட்டவையாகத் திகழ வேண்டும். என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இக் கோட்பாடுகள் அனைவருக்கும் பொதுவானது எனவும் அசோகன் தனது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ளான். தரும நெறி முறைகள் கடைப்பிடிக்கப் படுவதை கண்காணிக்கும் பொருட்டு அசோகனால் தரும மகாமாத்திரர்கள் என்னும் தனிப்பட்ட அரசாங்க அலுவலர்கள் நியமிக்கப் பட்டார்கள்.

      அசோகன் தனது தருமக் கோட்பாடுகளில் சமயச் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடித்தான். அவன் பௌத்த சங்கத்துக்கு தனிப்பட்ட ஆதரவு வழங்கினாலும் பௌத்த மதத்தை அரசாங்க மதமாக மாற்றி விட வில்லை. இச் செயற்பாடு அவனது முக்கியமான கொள்கைகளில் ஒன்றாக சமயப் பொறை விளங்கியதைச் சுட்டிக் காட்டுகிறது. எல்லாச் சமயப் பிரிவுகளும் ஒன்றிணைக்கப் படுவதை அசோகன் தனது கல்வெட்டுக்களில் வலியுறுத்திக் கூறினான். அத்துடன் சமயங்களின் ஒன்றிணைப்பானது வன்முறைகளால் ஏற்படுத்தப் படுவதல்ல. அது வளர்ச்சியின் பின்னணியில் உருவாக்கப் பட வேண்டும். எனவும் குறிப்பிட்டுள்ளான்.

       அசோகனது கல்வெட்டுச் சான்றுகளின் படி அவன் ஆசீவக சமயத்தாருக்கு குகைகளைத் தானமாக வழங்கினான். என்பது புலனாகிறது. சம காலத்தில் ஆசீவக சமயத்தவர்கள் பௌத்தர்களின் முதன்மைப் போட்டியாளர்களாக விளங்கினார்கள். ஆனாலும் அசோகன் ஆசீவகர், சமணர்கள், பிராமணர்கள் போன்றவர்களுடன் சமய நல்லுறவுகளைப் பேணும் வகையில் தனது பிரதிநிதிகளை அனுப்பியதாக கல்வெட்டுச் சான்றுகள் புலப்படுத்துகின்றன. இவ்வாறு அசோகன் தனது வாழ்நாளில் கடைப்பிடித்த தரும நெறிக் கோட்பாடுகளே பிராமணர்களின் வலிமை வாய்ந்த சமூக வகுப்புடனும், ஆசீவக சமயத்தாருனும், சமணர்களுடனும் மோதல்கள் ஏற்படாது தவிர்த்துக் கொள்வதற்கும், பௌத்த மதத்தினை சிறப்பாக வலுப் படுத்துவதற்கும் உறுதுணையாக அமைந்தன. என்பதில் ஐயமில்லை.

         பௌத்த மதத்தினைப் பின்பற்றிய அசோகன் பௌத்த சங்கத்தின் ஒற்றுமை குலையாமல் இருப்பதற்கு பெரு முயற்சி செய்தான். சங்கத்தின் ஒற்றுமைக்குக் கேடு செய்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும் எதிராகப் போராடுமாறு சாதாரண குடியினரிடம் விசேட ஆணை விடுத்தான். அத்துடன் அவர்கள் சங்கத்திலிருந்து நீக்கப் பட்டார்கள்.

          அசோக தருமத்தில் இல்வாழ்வோனுக்குரிய கடமைகள் பலவற்றை கூறியிருந்ததாக கல்வெட்டுச் சான்றுகளின் வாயிலாக உய்த்துணர முடிகிறது. அந்த வகையில் அசோகன் தனது கல்வெட்டொன்றில் குறிப்பிடுகின்ற போது ‘ஆணைக் குறிப்புக்களில் பெரும் பகுதி துறவிகளுக்காக அல்ல இல்வாழ்வோனுக்காக எழுதப்பட்டது.’ எனக் கூறியுள்ளார். அசோகனது கல்வெட்டுக்களில் பெரும் பாலானவை ‘தரும சாசனங்கள்’ எனச் சிறப்பிக்கப்பட்டன. அவற்றில் அறம் பற்றிய ஆணைக் குறிப்புக்களைப் பொறித்துள்ளான். சாதாரணமாக இல்வாழ்வோனுக்கு நன்கு தெரிந்த அறநெறிக் கோட்பாடுகளையே அசோகன் தனது கல்வெட்டுக்களில் அதிகம் பொறித்தான். இவ் அறநெறிக் கருத்துக்கள் பல்வேறு சமூகப் பிரிவினராலும் ஆதரிக்கப் பட்டு துணைக் கணடத்தில் புதிய அரசியல் நெறி தளைப்பதற்கு மூல காரணமாக அமைந்தது.

          தரும மகாமாத்திரர்கள் வௌ;வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்களிடம் அனுப்பப் பட்டார்கள். அவர்கள் குறுகிய வட்டத்துக்குள் நின்று விடாது துணைக் கண்டத்தின் பல பாகங்களுக்கும் சென்று பௌத்தர்களும், பிராமண சத்திரியரும், சமணர்களும், ஆசீவகர்களும், தருமத்தை எப்படிக் கடைப்பிடிக்கிறார்கள் என்று சரி பார்க்க வேண்டும். என அசோகன் தனது கல்வெட்டுக்களில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான். மக்களின் பல்வேறு குழுக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், பிரிவினைப் போக்கை எதிர்த்துப் போராடி புதிய அரசியல் சிந்தனை மரபினைத் தோற்றுவிக்கவும் அசோக தருமம் உறுதுணையாக அமைந்தது.

   பௌத்தம் போதிக்கும் தருமங்கள் அசோகனது கல்வெட்டுக்களில்.

      அசோகன் பௌத்த தருமக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தமை துணைக் கண்டத்தில் ஒன்றிணைந்த ஆட்சியினை ஏற்படுத்தி அரசியலில் புதிய மாற்றங்களைத் தோற்றுவிக்க உதவியது. பௌத்த மதமானது இந்தியாவின் பல பாகங்களுக்கும் மிக வேகமாகப் பரவியமைக்கு அசோகன் கடைப்பிடித்த பௌத்த தருமக் கோட்பாடுகளே காரணம் எனலாம். பௌத்த மதமானது கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் பண்டைய இந்திய சமூகத்தின் முதன்மையான மதமாக மாறியது. வலிமை மிக்க ஒன்றிணைந்த பேரரசின் முதன்மையான மதமாகத் திகழ்ந்த பௌத்தம் கூட்டுப் பேரரசின் உருவாக்கத்திற்கு ஆதி மூலமாக அமைந்தது. என்பது மறுத்தற்கரிது.

        கலிங்கப் போரின் தாக்கத்தினால் விரக்தியுற்ற அசோகன் புத்த பெருமானின் கொள்கைகளால் கவரப்பட்டு பௌத்த சங்கத்துக்குச் சென்று புத்தரின் போதனைகளில் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டான். இவ்வாறு அசோகன் கடைப்பிடித்த புத்த தருமம் பற்றி கல்வெட்டுக்களிலே குறிப்பிடப் படுகிறது. இவ்வாறு பௌத்த கோட்பாடுகளைத் தெரிந்து கொண்ட அவன் துறவிகள் வாழும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கும், பௌத்த சங்கத்துக்கும் பல உதவிகளைச் செய்தான். என்பதைக் கல்வெட்டுக்கள் வாயிலாக அறிய முடிகிறது. அத்துடன் பௌத்த போதனைகளிலும், அதன் ஒழுக்க நெறி முறைகளிலும் அசோகனின் ஆர்வம் கலிங்கப் போருக்குப் பின்னர் அதிகரித்தது. தரும விஜயம், ஒழுக்க நெறிகளைப் பரப்புதல் போன்ற கொள்கைகள் அசோகனது காலத்தில் முதன்மை பெற்று விளங்கின. இச் செயற்பாடுகள் இவனது காலத்து அரசியலில் புதிய சிந்தனை மரபுகள் ஊடுருவுவதற்கு காரணமானது.
  .
      13 வது பாறைச் சாசனத்தில் அசோக தருமம்.

        கலிங்கப் போரில் நடைபெற்ற பயங்கரப் படுகொலை அசோகனது உள்ளத்தை உருக்கி விட்டது. என்பதில் ஐயமில்லை. இந்தப் போரினால் பிராமணர்களும், பௌத்த பிக்குகளும் பெரும் துன்பங்களுக்கு உள்ளானார்கள். இது அசோகனுக்கு ஆழ்ந்த மன வேதனையையும், கழிவிரக்கத்தையும் ஏற்படுத்தியது. அதனால் அவர் ஆக்கிரமிப்புக் கொள்கையைக் கைவிட்டு அன்பினால், பண்பினால், வெற்றி கொள்ளும் கொள்கையைக் கடைப் பிடிப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இதனை அசோகனது 13 ஆவது பாறைச் சாசனம் தெளிவு படுத்துகிறது. அந்த வகையில்
‘தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட புனித கடமைகளை                        எட்டாண்டுக்காலம் செய்து வந்தவனான தெய்வங்களின்                                       அன்புக்குரியவனான மன்னன் பியதசி கலிங்கத்தை                                                வென்றான். நூற்றம்பதாயிரம் மக்கள் நாடு கடத்தப்                        பட்டனர். ஒரு நூறு ஆயிரம் பேர் கொல்லப் பட்டனர்.                             இந்த எண்ணிக்கையைப் போல் பன்மடங்கினர்                                       அழிந்து பட்டனர். இதன் பின்னர் இப்போது கலிங்கம்                       கைப்பற்றப் பட்டதும் தெய்வங்களின் அன்புக்குரியவன்                                                     தம்மத்தைக் கடைப்பிடித்தான். தம்மத்தில்                                        பற்றுதல் கொண்டான். தம்மத்தைப் போதித்தான்.  தம்மத்தின்வெற்றியேதலையாயவெற்றி                                                                                 என தெய்வங்களின் அன்பிற்குரியவன் கருதுகிறான்.’
                               என அசோகனது 13 ஆவது பாறைச் சாசனத்தில் குறிப்பிடப் படுவதானது, அசோகன் கலிங்கப் போரின் பின்னர் தரும நெறியினை முழுமையாகக் கடைப்பிடித்து வாழ்ந்தான். என்பது வெளிப்படையாகிறது. இதனால் ‘மன்னன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி’ என்பதற்கு இணங்க அசோக தருமம் நாடளாவிய ரீதியில் விரிசலடைந்து அரசியலில் புதிய சிந்தனை மரபுகள் தோன்றி நிலை பெற்றன.

அசோக தருமத்தில் ஒன்றிணைந்த ஆட்சி

         அசோகன் கடைப்பிடித்த தரும நெறியானது சகல மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது. துணைக்கண்டத்தின் அரசியலின் கீழ் அனைவரும் சமன் என்ற புதிய எண்ணக் கருவினை உருவாக்கியது. மௌரியப் பேரரசு மிகப் பரந்த நிலப் பரப்பை உள்ளடக்கி இருந்த போதும் கூட இன அடிப்படையிலும், மொழிகளிலும், பண்பாட்டு மரபிலும், வௌ;வேறு மத நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டிருந்த மக்கள் ஒரே அரசின் கீழ் இணைக்கப் பட்டார்கள். இதற்கு அசோகன் கடைப்பிடித்த தரும நெறியே காரணம் என அசோகனது கல்வெட்டுக்களை ஆராய்ந்த தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அசோகனது கூற்றுக்கள் மூலம் தரும சிந்தனைகள்;.

        அசோகன் கலிங்கப் போரின் பின்னர் இன மரபுக் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கும் எல்லைப்புற இராச்சிய மக்களுக்கும் சித்தாந்த முறையிலமைந்த ஒரு வேண்டு கோளை விடுத்தார். அதாவது ‘தர்மத்தின் பாற்பட்ட கொள்கையைப் பின் பற்றும்படி இன மரபுக் குழுக்களைச் சேர்ந்த மக்களிடம் அவர் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார். அதே சமயம் நிலை நாட்டப்பட்ட சமூக ஒழுங்கு முறை விதிகளையும், நேர்மையையும், தர்மத்தையும் மீறினால் அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.’ என்றும் எச்சரித்தார். தர்மத்தை மீறுபவர்களை கண்காணிக்க ரஜூகர்கள் என்னும் அதிகாரிகளை நியமித்தார். மக்களுக்குப் பரிசு வழங்கி அவர்களை ஊக்குவிப்பதற்கு மட்டுமின்றி, அவர்கள் தர்மத்தை மீறும் போது அவர்களைத் தண்டிப்பதற்கும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப் பட்டது.

         தர்மத்தைக் கடைப்பிடிக்கும் முறைகளில் தமது சாம்ராட்சியத்தை வலுப் படுத்தும் அசோகரின் கொள்கை வெற்றி பெற்றது. அசோகரின் புத்திமதியை ஏற்று அவர்கள் உயிர்க் கொலையைக் கைவிட்டு வேளாண் வாழ்க்கையை மேற்கொண்டாரகள்;. மீனவர்கள் கூட தர்மத்தைக் கடைப் பிடிப்பதில் வெற்றி பெற்றார்கள். என்பதைக் காந்தாரக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. அத்துடன் அசோகன் ‘வாழுங்கள், வாழ விடுங்கள்’; என்று குடி மக்களுக்கு ஆணை பிறப்பித்தார். அசோகனது போதனைகள் குடும்ப அமைப்பையும், சமுதாயப் பிரிவுகளையும் வலுப் படுத்தும் நோக்கம் கொண்டவையாக அமைந்திருந்தன. ‘மக்கள் நன்முறையில் நடந்து கொண்டால் சுவர்க்கத்தை எய்துவார்கள்.’ என்று அவர் கூறினார். எனவே சமூகங்களின் மத்தியில் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, வெறுப்பின்மை ஆகியவற்றை வளர்ப்பதே அசோகரின் போதனைகளின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.

நாடுகடந்த ரீதியில் அசோக தருமம்.

     அசோகன் இந்திய மக்களை மட்டுமின்றி பிற நாட்டவரையும் ஆதரித்தான். என்பது அவனது தரும நெறியின் உயர்ந்த நிலையினையே சுட்டுகிறது. யவனர்களும், கம்போஜர்களும் தனது நாட்டின் மேற்குப் பகுதியில் வாழ்ந்ததாக அசோகன் தனது கல்வெட்டுக்களில் பல முறை குறிப்பிட்டுள்ளான். யவனர் என்பவர்கள் கிரேக்கர்களாகும். கிரேக்க நன்மை கருதி அவன் தனது சாசனங்களை கிரேக்க மொழியிலும் பொறித்தான். என்பது குறிப்பிடத் தக்கது.

       அசோகன் தான் கடைப்பிடித்த அசோக தருமத்தின் காரணத்தால் அவன் நாட்டின் அரசியலில் மன்னனாக மட்டுமின்றி, பல செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் திறமை வாய்ந்த சக்கரவர்த்தியாக விளங்கினான். இதனை அசோகனது கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. அரசன் அரச இயந்திரத்தின் தலைமையில் இருந்தான். சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பெற்றிருந்தான். அசோகனுடைய சாசனங்கள் அவனது ஆணைப்படி பொறிப்பிக்கப் பட்டன. பெரிய அரச அலுவலர்களைக் கூட அவனே நியமித்தான். நீதி நிருவாகத்துக்குத் தலைவனாகவும், தலைமை நீதி பதியாகவும் இருந்தான். என அசோகனது கல்வெட்டுக்களில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு சகல துறைகளிலும் அசோகன் முதன்மையானவனாக விளங்குவதற்கு அவன் கடைப் பிடித்த தரும நெறியே மூல காரணமாக அமைந்திருக்கலாம். என ஊகிக்க முடிகிறது. இக் கருத்துக்கள் அர்த்த சாஸ்திரத்திலும் குறிப்பிடப் படுவதைக் கொண்டு இவை உண்மை என்பதை உய்த்துணர முடிகிறது.

           அசோகன் அந்நிய நாடுகளை ராணுவ ரீதியாக வெற்றி கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை. அதற்குப் பதிலாக அவற்றை சித்தாந்த ரீதியாக வெற்றி கொள்ள முயன்றார். அயல் நாடுகளிலுள்ள மக்களதும், விலங்குகளதும் சேம நலனுக்காக நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். அத்துடன் மேற்கு ஆசியாவிலிருந்த கிரேக்க இராச்சியங்களுக்கும், கிரீஸ் நாட்டிற்கும், சமாதானத் தூதுவர்களை அனுப்பினார். இவற்றை எல்லாம் அசோகரின் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு உறுதிப் படுத்த முடிகிறது. புத்த மதப் பிரசாரத்துக்காக இலங்கைக்கும். மத்திய ஆசியாவுக்கும் சமயப்பரப்பாளர்களை அவர் அனுப்பி வைத்தார். விவேகம் மிக்க மன்னர் என்ற வகையில் அசோகன் தர்ம நெறியினைக் கருவியாகக் கொண்டு பிரசாரங்களை மேற்கொண்டார்.

அசோக தருமம் கூறும் சமத்துவம்.

          அசோகச் சக்கரவர்த்தி நாட்டில் அரசாட்சியை வலப்படுத்தும் நோக்கில் சமத்தவத்தினைக் கடைப் பிடித்தார். நாட்டின் அரசியலில் ஒற்றுமையைக் கட்டி வளர்த்தார். பிராமி எழுத்து வடிவம் கொண்டு கல்வெட்டுக்களைப் பொறித்து சமத்தவத்தினூடாக அசோக தருமத்தை மேலும் விரிசலடையச் செய்தார். அசோகன் பிராமி எழுத்து வடிவத்தை மட்டும் ஆதரிக்க வில்லை. அவர் கிரேக்கம், சமஸ்கிருதம், பிராகிருதம், போன்ற மொழிகளையும், பல்வேறு சமயப் பிரிவுகளையும் ஆதரித்தார். அசோகன் சகிப்புத் தன்மை கொண்ட ஒரு சமயக் கொள்கையைப் பின்பற்றினார். இவர் பௌத்த மதத்தைக் கடைப் பிடித்த போதும் கூட பௌத்த எதிர்ப்பாளர்களுக்கும் கொடைகளை வாரி வழங்கினார். இது அசோகர் கடைப் பிடித்த சமத்துவக் கொள்கையினைக் காட்டுகிறது.

        இவை எல்லாவற்றையும் விட அசோகன் சமாதானம், அனாக்கிரமிப்பு, கலாசார வெற்றி, போன்றவற்றை தனது வாழ் நாளில் கடைப் பிடித்து உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறார். என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய கொள்கைகளைக் கடைப் பிடிப்பதற்கு அவருக்கு முன்மாதிரி ஏதும் இல்லை. கலி;ங்கப் போர் நடை பெறும்வரை மகத மன்னர்கள் பின்பற்றி வந்த ஆக்கிரமிப்பக் கொள்கையைக் கைவிடும் படி அவர் தனக்குப் பிறகு அதிகாரத்துக்கு வரக் கூடிய மரபுரிமை வாரிசுகளிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார்.

     சமாதானக் கொள்கையைக் கடப் பிடித்து ஒழுகும் படி அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார். சமாதானக் கnhள்கை மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவும் அது மிகுந்த நலம் பயக்கும் என்றும் அவர் தனது குடி மக்களுக்கு வலியுறுத்தினார். இவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஆற்றிய அசோகச் சக்கர வர்த்தி கி;.மு 232 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து ஓய்வு பெற்றார்.

   மேற் கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் தொகுத்து நோக்குகின்ற போது அசோகச் சக்கர வர்த்தி தனது வாழ் நாளில்; கொடை, கொல்லாமை, சமத்துவம் பேணல், சமாதானத்தைக் கடைப் பிடித்தல், சமயப் பொறை பெரியோர் சொற் கேட்டல், பெரியோரை வணங்குதல்,  முதலிய தருமக் கோட்பாடுகளை தான் மட்டும் கடைப் பிடித்ததுடன் நின்று விடாது, குடி மக்களுக்கும் அதனைக் கடைப்பிடிக்கும் படி வலியுறுத்திக் கூறினார். எனவே இவ் அசோக தருமத்தினூடாக அவர் இந்திய வரலாற்றின் அரசியலில் புதிய சிந்தனை மரபுகளை உட்புகுத்தி வெற்றியும் பெற்றுக் கொண்டார். என்பதை அசோகனது சாசனங்கள் உறுதி செய்கின்றன. இத்தகைய தருமக் கோட்பாடுகள் இந்திய வரலாற்றில் மட்டுமின்றி நாடு கடந்த ரிதியில் இன்றும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றமையை வரலாற்றின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்பது வெளிப்படையாகிறது.

 உசாத்துணை நூல்கள்.
1. சர்மா. ஆர். எஸ், தமிழில் மாஜினி, பண்டைக் கால இந்தியா, 2001,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 41-பி சிட்கோ இன்டஸ்டிரியஸ் எஸ்டேட், அம்பத்தூர் சென்னை—600009, பக்கம்-(216—218).
2. டாக்டர்.சுப்பிரமணியம். ந. இந்திய வரலாறு, 2004, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டட், பக்கம்-(85—96).
3. சோசாம்பி. டி.டி, பண்டைய இந்தியா, தமிழாக்கம் நாராயணன், ஆர்.எஸ்  1989, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்கம்-(331—347).
4. மைக்கல் ஹெச் ஹார்ட், புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100பேர், 1998, மீரா பப்ளிகேஸன், அண்ணா நகர் சென்னை,      பக்கம்–(358—360).
5. ராம் சரண் சர்மா, மொழி பெயர்ப்பு ரங்கசாமி. ஆர்;, பண்டைக்கால இந்தியா, 2001, பாவை பிரிண்டர்ஸ், பிரைவட் லிமிட்டட்–142                              பக்கம்–(209—218).
6. அன்தோனவா. கொ. அ, போன்சாரத் லேவின். கி. ம, மொழி பெயர்ப்பு   சோமசுந்தரம். பூ, டாக்டர் பாஸ்கரன். இரா, இந்தியாவின் வரலாறு, 1979,   தமிழ்ப் பதிப்பு-1989, முன்னேற்றம் பதிப்பகம், பக்கம்–(107—113).

About editor 3123 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply