வடக்கையும் கிழக்கையும் சிங்கள – பவுத்த மயப்படுத்தும் கைங்கரியத்தில் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் ஓயப்போவதில்லை!

வடக்கையும் கிழக்கையும்  சிங்கள – பவுத்த  மயப்படுத்தும் கைங்கரியத்தில் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் ஓயப்போவதில்லை!

நக்கீரன்

மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பது போல பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்ற போராட்டப் பேரணி பெப்ரவரி 03 தொடங்கி  – பெப்ரவரி 07 மட்டும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இருந்தாலும் நீதிமன்றங்கள் விடுத்த தடை உத்தரவுகளை மீறியவர் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. பொலீசார் முன்னர் வாங்கிய தடையுத்தரவுகள் பயனற்றுப் போன மன வெப்பியாரத்தில் இருக்கிறார்கள். 

போராட்டப் பேரணியை பொலிசார் படம் எடுத்துள்ளார்கள். அதில் கலந்து கொண்ட வாகனங்களின் இலக்கங்களையும் பதிவு செய்துள்ளனர். எல்லாவற்றுக்கும்  மேலாக பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பாக இருக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா கடும் கோபத்தில் இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர்  “சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவே தமிழ் அரசியல்வாதிகள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியில் ஈடுபட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகளால் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் “முன்னெடுக்கப்படும் போராட்டத்தால் எதுவும் மாறப்போவதில்லை. நீதிமன்றங்கள் மூலமே நீதியைப் பெற்றுக் கொள்ள  வேண்டுமே தவிர பேரணி நடத்தி தீர்வைப் பெற முடியாது என்பதை தமிழர் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார். 

கடும் சிங்களத் தேசியவாதப் போக்கைக் கொண்ட அமைச்சர் சரத் வீரசேகர முன்னாள் கடற்படை அதிகாரி. கோட்டாபய இராசபக்சவை சனாதிபதி இருக்கையில் இருத்தியதற்கு சிங்கள-பவுத்த அறிவுப் பிழைப்பார்களைக் கொண்ட “வியத்மக” இயக்கம் முக்கிய பங்கு வகித்திருந்தது. அந்த அமைப்பின் முக்கியமான தலைவர்களில் ஒருவர் சரத் வீரசேகர என்பது கவனிக்கத்தக்கது.  

கடந்த சில ஆண்டுகளாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களிலும் தோன்றி சர்ச்சைகளை உருவாக்கி வருபவர்.  மாகாண சபைகளுக்குப் பொறுப்பான அமைச்சராகவும் சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.  மாகாண சபைகளுக்கு காணி அதிகாரமோ பொலீஸ் அதிகாரமோ கொடுக்கப்பட மாட்டாது என ஏற்கனவே அறிவித்துவிட்டார். 

பேரணி தொடங்கிய இடத்திலேயே பொலீசார் தாங்கள் வைத்திருந்த நீதிமன்ற தடையுத்தரவுகளைக் காட்டி அதனை தடுக்க  முயற்சித்தார்கள்.  காவல்துறை கோவிட் தொற்று நோயைக் காரணம் காட்டியே நீதிமன்ற தடையுத்தரவுகளை வாங்கியிருந்தார்கள். இதனால் பொலீஸ் அந்தத் தடையுத்தரவுகளில் குறிக்கப்பட்டிருந்த பேர்வழிகளை மட்டும் தடுக்கலாம். மற்றவர்களை தடுக்க முடியாது.

பேரணி ஏற்பாட்டாளர்கள் யார் யாருக்கு எதிராக பொலீஸ் நீதிமன்றத் தடையுத்தரவை வாங்கியதோ அதில் குறிக்கப்பட்டவர்கள் அந்தப்  பிரதேசத்துப்  பேரணியில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார்கள்.  இதனால் பேரணி தொடர்வதை பொலீசாரால் தடுக்க முடியவில்லை.

தொடக்கத்தில் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் காட்டிய துணிச்சலே பேரணியைத் தடுக்க பொலீசார் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இல்லையேல் அந்தப் பேரணி தொடங்கிய இடத்திலேயே பொலீசாரால் அது முறியடிக்கப்பட்டிருக்கும். பேரணியின் முன்வரிசையில் சென்றவர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாகக் காணப்பட்டார்கள். அவர்கள் தலையில் தலைக்கச்சு அணிந்திருந்தார்கள்.

இந்தப் பேரணியை  வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புக்களே குறுகிய கால இடைவெளியில் ஒழுங்கு செய்திருந்தன. அதற்குத் ததேகூ இன் சார்பில் சுமந்திரன் உடனடியாக  முழு ஆதரவைத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளும் தமது ஆதரவைத் தெரிவித்தன. சிவில் அமைப்புக்கள் பின்வரும் பத்துக் கோரிக்கைகளை  மையப்படுத்தி  இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினார்கள்.

(1) தமிழ்ப் பகுதிகளில்  உள்ள மரபுவழி மற்றும் பூர்வீக காணிகளைக்  கைப்பற்றி அங்குள்ள இந்துக் கோயில்களை இடித்துவிட்டு அவற்றில் பவுத்த  விகாரைகளைக் கட்டி  சிங்களப் பகுதிகளாக மாற்றிவிடுதல்.

(2) போர் முடிந்த பின்னர் தமிழ்ப் பகுதிகளை இராணுவ மயப்படுத்துவது தொடர்கிறது. அதன் நோக்கம் தமிழர்களது வரலாற்று அடையாளத்தை அழித்து அதன் குடித்தொகையை சிங்கள மயமாக்கல் ஆகும்.  இதற்காக அரசின் வெவ்வேறு திணைக்களங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.  மேலும் அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்கின்றன.

(3) கவலை என்னவென்றால் அரசாங்கம்  மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எழுதும்  ஊடகவியலாளர்களை இலக்கு வைக்கிறது. மேலும் மனித உரிமை மீறல்களைப்  பொதுவெளியில் கொண்டுவரும்  சிவில் அமைப்புச்  செயற்பாட்டாளர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

(4) தமிழ்க் கால்நடைப் பண்ணையாளர்கள்  பலதரப்பட்ட சிக்கல்களை  எதிர்நோக்குகிறார்கள். அவர்களது மேய்ச்சல் நிலம் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்களது மாடுகள் கொல்லப்படுகின்றன.

(5) தமிழர்கள் போரில் இறந்தவர்களை நினைகூரும் உரிமையை  அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அதையொட்டிய நினைவு நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.  துயிலும் இல்லங்கள் மற்றும் நினைவாலயங்கள் தகர்க்கப்படுகின்றன.

(6) கோவிட் தொற்று நோயால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்கள்  அவர்களது மத மரபுக்கு மாறாக அடக்கம் செய்வதற்குப் பதில் எரிக்கப்படுகின்றன.

(7) பயங்கரவாதத்துக்கு எதிரான  தடுப்புச் சட்டம் தமிழ் இளைஞர்களை  40 ஆண்டுகளுக்கு மேலாக  நீதிமன்றத்தில் நிறுத்தாமல் விசாரணையின்றி சிறையில் அடைத்து வைத்துள்ளது.  இந்தச் சட்டம் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. Image result for pottuvil to polikandy

(8) தமிழ் அரசியல் கைதிகள் நீதிவிசாரணையின்றி  ஆண்டுக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  அரசாங்கம்  தொடர்ச்சியாகப் பல சிங்களக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி வருகிறது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படவில்லை.

(9) வலிந்து காணாமல் போன தமது உறவினர்களை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டு வருகிறார்கள். ஆனால் அரசு அவர்களர் கோரிக்கைக்குச் செவிசாய்க்க மறுக்கிறது.

(10) மலைநாட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் நாளாந்த சம்பளத்தை ரூபா 1,000   ஆக அதிகரிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். ஆனால் அரசாங்கம் அவர்களது கோரிக்கைக்கு செவிசாய்க்காது வருகிறது.

மேற்காட்டிய சிக்கல்கள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் உறுப்பு நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

இந்த அறிக்கையில் இருபதுக்கும் மேலான சிவில் சமூகங்கள் கையொப்பம் இட்டிருந்தன.  இந்த அறிக்கை கிடைத்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அதிகாரிகள் தெரிவித்தார்கள். மேலும் பேரணியில் பங்குபற்றுபவர்கள் பாதுகாப்பாக இருக்குமாற கேட்டுக் கொண்டார்கள்.

இந்தப் ஆர்ப்பாட்டப்  பேரணிக்கு முதல் முறையாக முஸ்லிம் மக்கள் ஆதரவு  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேரணிக்கு முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாட் பதியுதீன் அறிக்கை மூலம் கேட்டிருந்தார். இருந்தும் முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  விதி விலக்காக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரு முஸ்லிம் உறுப்பினரே பேரணியில் கலந்து கொண்டு ஆதரவ தெரிவித்தார். அதற்கு முன்னர் ஓட்டமாவடியில் முன்னாள் நா.உறுப்பினர் ஹசன் அலி கலந்து கொண்டு உரையாற்றினார்.

Image result for பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை

முஸ்லீம் இளைஞர்கள் பெருமளவில்  உற்சாகத்துடன் மாலைகள்  அணிவித்து தமிழ்த் தலைவர்களை வரவேற்ற காட்சிகள் முற்றிலும் எதிர்பாராதது.

காகம் இருக்கப் பனம்பழம் இருந்த கதையாக இந்தப் பத்து கோரிக்கைகளில் இரண்டு நிறைவேறிவிட்டன. முஸ்லிம்கள் ஜனசாக்களை தங்கள் மதக் கோட்பாட்டின் படி அடக்கம் செய்யலாம் என பிரதமர் மகிந்தா இராசபக்ச நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். மலையகத் தோட்டத் தொழிலாளர்களது சம்பளமும் ரூபா 750 இல் இருந்து ரூபா 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் சம்பள நிருணய சபை ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிந்திக் கிடைத்த செய்திகள் பிரதமர் மகிந்த இராசபக்ச அவர்களின் ஊடகப் பிரிவு ஜனசாக்களை அடக்கம் செய்யலாம் என வந்த செய்திகள் தவறானவை எனத் தெரிவித்துள்ளது.

பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை என்ற பேரணி பற்றிய செய்திகளை தென்னிலங்கை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இருட்டடிப்புச்  செய்து விட்டன. காரணம் தெரிந்ததே. அதே நேரம் நாடாளுமன்றத்தில் இந்தப் பேரணிபற்றிய சூடான  வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

பொத்துவில் – பொலிகண்டி பேரணி முடிந்த கையோடு நா.உறுப்பினர் சுமந்திரனுக்கு அரசாங்கம் வழங்கிய சிறப்பு செயலணிப் படைப் பாதுகாப்பு உடனடியாக விலக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை தானே இட்டதாக சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

தனது உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்பு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினாலேயே தனக்குத்  தெரிவிக்கப்பட்டதாக சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தனக்கு சிறப்புப் பாதுகாப்பு தேவையென எந்த கோரிக்கையையும் வைக்கவில்லையென்றும், உயிருக்கு  ஆபத்து  உள்ளது என்ற அடிப்படையில் தனக்கு அரசாங்கத்தால் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், இப்போது தனது உயிருக்கு ஏதேனும் நடந்தால் அமைச்சர் சரத் வீரசேகரவே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று சுமந்திரன்  கூறினார்.  தனக்கு எதிராக எந்த நீதிமன்றங்களிலும் தனது பெயர் குறிப்பிட்ட தடையுத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை, தான் எந்த நீதமன்ற தடையுத்தரவையும் மீறவில்லையென்றும் தெரிவித்தார்.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கையின் சுதந்திர நாள் கரிநாளாக வடக்கிலும் கிழக்கிலும் அனுட்டிக்கப்பட்டுள்ளது. பேரணியில் கலந்து கொண்டவர்கள், சுமந்திரன், சாணக்கியன் உட்பட. பலர் கருப்புச் சட்டை அணிந்திருந்தார்கள்.

சனாதிபதி கோட்டாபய இராசபக்ச பதவிக்கு வந்த பின்னர் தமிழ்மக்கள் பல நெருக்கடிகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகிறார்கள். சிவில் சமூகம் சுட்டிக்காட்டிய வண்ணம் தமிழ்மக்களுக்குச் சொந்தமான காணிகள் தொல்லியல் அகழ்வாராச்சி என்ற பெயரில் தொல்லியல் திணைக்களம் கைப்பற்ற முனைகிறது. அது போலவே சைவ வழிபாட்டுத் தலங்கள் தொல்லியல்  திணைக்களத்தின் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறிமலை  ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம், திருகோணமலை மாவட்டம் கன்னியா பிள்ளையார் கோயில், செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம், முருகன் ஆலயம், வேற்றுச்சேனை சித்திவிநாயகர் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் தமது பாரம்பரிய, கலாசார, சமய, வழிபாடுகளைச் செய்ய முடியாதவாறு ஆலயங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு அங்கு பவுத்த  விகாரைகள் நிறுவுவதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என இந்துக்கள் முறையிடுகிறார்கள்.

இந்த இந்து ஆலயங்கள் தொல்லியல் திணைக்களம்  மற்றும் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச நியமித்த  தொல்லியல் செயலணி இரண்டின் கிடுக்குத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட ஆலய அறங்காவல் சபையினர் தங்கள் உரிமையை நிலை நாட்ட நீதிமன்றத்தை நாடவேண்டிய கட்டாயத்துக்குத்  தள்ளப்பட்டுள்ளனர். 

கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் கடந்த 18 ஆம் திகதி  குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாகக்  குறிப்பிட்டு அப்பகுதியில் தொல்லியல் ஆய்வுப் பணிகளை தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டனர். அப்போது மஞ்சள் ஆடை அணிந்த  பவுத்த தேரர்கள் புடை சூழ அங்கு வருகை தந்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஒரு புத்தர் சிலையை அங்கு நிறுவி வழிபாடு செய்தார்.

அங்கு தொடர்ந்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளுப்பட்ட வந்த நிலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த உருவத்தை கொண்ட சி

Image result for பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை

தைவுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளதாவது, ” முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைப்பெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS.திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் தொல்லியல் திணைக்களம் அந்தச்  சிதைவுகள் அனுராதபுரிக் காலத்து சிதைவுகள் என அறிவித்துள்ளது.

போகிற போக்கைப் பார்த்தால்  இப்போது இந்துக் கோயில்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் முன்னர் பவுத்த  விகாரைகள் இருந்தன எனச் சொல்வார்கள் போல் தெரிகிறது.  அனுராதபுர  காலத்தில் கட்டப்பட்ட கோகர்ண விகாரை  மீதே இப்போது திருக்கோணேசுரம் கட்டப்பட்டடதாகவும் அதற்கான சான்றுகள் தன்னிடம் இருப்பதாகவும்  மேத்தானந்த தேரர் சொல்கிறார். அதோடு நின்றுவிடாமல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் சப்புமால் குமாரய என்ற சிங்கள் அரசனால் கட்டப்பட்டது என்கிறார். இந்தத் தேரர்  தொல்லியல் மரவுரிமைகள் தொடர்பாக ஆய்வு செய்ய  நியமிக்கப்பட்ட செயலணியில்  ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேசுரம்  விஜயன் (கிமு 483 – 445)  வருகைக்கு முன்னரே இருந்தது  என போல் இ பீரிஸ் என்ற சிங்கள வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதாவது கிமு ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே திருக்கோணேசுவரம்  இருந்திருக்கிறது.  மேலும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தைக் கட்டிய சப்புமால் குமாரய சிங்கள இளவரசன் அல்ல. அவன் சேரநாட்டில் இருந்து இலங்கையில் குடியேறிய சண்பகப் பெருமாள் என்ற சேர இளவரசன். இவன்  கோட்டையை ஆண்ட  ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகன் ஆவான். சண்பகப் பெருமாளின்  தந்தை  குருகுல மாணிக்கத் தலைவன் என்கிற பராக்கிரமபாகுவின் தளபதியாவான். 

தனது பேரனான ஜெயவீரன் என்பவனுக்குக் கோட்டை அரசைக் கொடுத்துவிட்டு ஆறாம் பராக்கிரமபாகு காலமானான். இதனையறிந்த செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டுக் கோட்டைக்குச் சென்று ஜெயவீரனைத் தோற்கடித்து ஆறாவது சிறி சங்கபோதி புவனேகபாகு என்னும் அரியணைப் பெயருடன் கோட்டை இராச்சியத்தின்  அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

இலங்கைத் தீவின் வரலாறு இப்போதல்ல நீண்ட காலமாகவே திரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் ஆன பேரணிக்குக் கிடைத்த மகத்தான மக்கள் ஆதரவு மனதுக்கு ஆறுதல் தருகிறது. இளைஞர்களின் எழுச்சி நம்பிக்கை தருகிறது. ஆனால் சிங்கள – பவுத்த பேரினவாதிகள்  வாழாவிருக்கப் போவதில்லை.

 வடக்கையும் கிழக்கையும் பவுத்த – சிங்கள மயப்படுத்தும் கைங்கரியத்தில் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் ஓயப்போவதில்லை என்பதுதான் இன்றைய யதார்த்தமாகும்.

HTML clipboard
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

உரை இன் படமாக இருக்கக்கூடும்

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply