தேசியவாதம் – தாயகம்
தேசிய இனமொன்று சுயாட்சி கோருவதாயின் தனக்கென கட்டமைக்கப்பட்ட அரசியல், சமூகம், பொருளாதாரம், தாயகம் என்பவற்றுக்கு உரித்துடையதாக இருக்க வேண்டும். கடந்த இதழ்களில் அரசியல், சமூகம், பொருளாதாரம் பற்றி பார்த்தோம். இறுதியாக இந்த இதழில் தாயகம் பற்றி பார்ப்போம்.
தேசியத்தின் இருப்பில் தாயகம் மிக முக்கியமானது, அடிப்படையானது. இதன் இருப்பே ஓர் இனத்தின் நீட்சியை, தேசிய இனம் என்ற அங்கீகாரத்தைப் பெறவும் வழிவகுக்கும். ஈழத்தின் தேசிய இனமான தமிழினமும் தனக்கென நீண்ட பாரம்பரிய தாயகத்தைக் கொண்டது. யாழ்ப்பாணம் தொடக்கம் தெற்கே அனுராதபுரம் வரையிலும், தென்கிழக்கே கதிர்காமம், தென்மேற்கே நீர்கொழும்பு வரையிலும் தமிழர் தாயகம் பரந்திருந்தது. ஆனால், காலப் போக்கில் இந்த நிலப்பரப்பு பேரினவாத சக்திகளால் மட்டுமல்ல சந்தரப்பவாத சக்தியான முஸ்லிம்களாலும் அபகரிக்கப்பட்டு சுருங்கிற்று.
விடுதலைப் போராட்ட காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுடன் புத்தளம் மாவட்டத்தையும் இணைத்து 9 மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு ‘தமிழீழம்’ கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களுடன் தமிழர் தாயகம் சுருங்கி விட்டது என்பது நம் காலத்தில் நடக்கும் வரலாற்றுப் பிறழ்வும் தவறுமாகும். இது ஒருபுறம் இருக்க 1940 களில் தமிழர் தாயகப் பரப்புக்களில் தொடங்கிய சிங்களக் குடியேற்றம், திட்டமிட்ட இனப் பரம்பல் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பல இடங்களை ஆக்கிரமித்து நிற்கின்றது.
இந்த ஆக்கிரமிப்புப் போக்கால் தமிழர்கள் தங்களின் தாயகத்தின் பெரும்பகுதியான கிழக்கு மாகாணத்தையும் இழந்து விடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் பெரும் பகுதிகளைக் கபளீகரம் செய்துவிட்ட சிங்கள – பௌத்த பேரினவாதம், வடக்கிலும் தனது ஆக்கிரமிப்பைத் தொடக்கியுள்ளது. இவ்வாறு இழக்கப்பட்ட ஒவ்வொரு துண்டு தமிழர் நிலமும் பாதுகாக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவையும் பொறுப்பும் எமக்கு உண்டு. ஆனால், இந்தக் கட்டுரை முக்கிய சில விடயங்களை மட்டுமே மிகச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையின் வரலாற்றுக் காலம் தொட்டே தமிழர்கள் தங்களுக்கெனத் தனியான தாயகத்தைக் கொண்டிருந்தமை நிரூபணம். ஆனால், தமிழர்களின் வரலாற்றை அழிக்கவும், சிதைக்கவும், மாற்றி எழுதவும் சிங்கள – பௌத்த அரசுகள் முயன்று அதில் கணிசமான வெற்றியும் கண்டுள்ளன. இதனாற்தான் நமது தாயகம் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுடன் மட்டும் சுருங்கி, மட்டுப்பட்டுப் போயுள்ளது.
இலங்கைக்கு விஜயன் வருகைக்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு மகாவம்சமே உய்த்தறியும் விதத்திலான ஆதாரங்களைத் தந்துள்ளது. அந்நூல் குறிப்பிடும் இயக்கர்களும், நாகர்களும் தமிழர்களே. இதேபோன்று இந்திய இதிகாசமான இராமாயணம் கூறும் இராவணன் தமிழ் மன்னனே என்றும், புராண – இதிகாசங்கள் அரக்கர்கள் என்ற பெயரால் தமிழர்களையே அழைத்தனர் என்றும் கருத்தாய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. இராமாயணக் கதைகளிலேயே பல சான்றுகள் தமிழர்களுக்கு ஆதாரமாக உள்ளன.
எனினும், இலக்கிய ஆதாரங்களை மட்டும் வைத்து ஒரு இனத்தின் வரலாற்றையும், அதன் இருப்பையும் கூறிவிட முடியாது. ஆனால், தமிழர்கள் தொடர்பில் கிடைக்கும் தொல்லியல் ஆதாரங்கள் வெளிவராமல் தடுக்கப்படுகின்றன. அதேநேரம் தமிழர்கள் தொடர்பான வரலாற்று ஆய்வுகளில் கண்டுபிடித்தவற்றுக்கு பின்னடிப்பும், இருட்டடிப்பும் செய்யப்படுகின்றது. தமிழ் மக்களும் தங்கள் வரலாறு குறித்து அதை ஆவணப்படுத்துவதன் அவசியம் குறித்து அக்கறையற்ற தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இதனால், ஆய்வுக்கான போதிய களங்கள் திறக்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் முடங்கியே போயுள்ளன.
யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் தென்மேற்கே நீர்கொழும்பு வரையிலும் தென்கிழக்கே கதிர்காமம் வரையிலும் பரந்து விரிந்திருந்த தமிழர் சாம்ராஜ்யம் படிப்படியாக வீழ்ச்சியைச் சந்தித்தது. ஐரோப்பியர் இலங்கையைக் கைப்பற்றியபோது முதலில் கோட்டை இராசதானியும், பின்னர் யாழ்ப்பாணத்து இராசதானியும் முழுமையாக போர்த்துக்கேயர்கள் வசம் வீழ்ந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழர்களின் நிர்வாக எல்லைகள் வெகு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அக்காலப்பரப்பிலேயே தமிழ்ப் பிரதேசங்களுக்குள் சிங்கள குடிப்பரம்பல் இருந்தபோதும், அது ஒரு சதவீத அளவைக்கூட எட்டவில்லை என்பதே உண்மை.
மூன்று தேசங்களாகத் தாம் கைப்பற்றிய இலங்கையை ஒரே நாடாக பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் சிங்களத் தலைவர்களின் கைகளில் ஒப்படைத்து விட்டு ஆங்கிலேயர் வெளியேறினர். சுதந்திர சதுக்கத்தில் சிங்கக் கொடியை ஏற்றி சுதந்திரத்தை அறிவித்த டி.எஸ். சேனநாயக்க, முன்னாளில் நந்திக் கொடி பறந்த இடங்களில் எல்லாம் சிங்கக் கொடியே பறக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இலங்கையின் முதல் பிரதமராகப் பதவி வகித்த அவர்தான் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்தார். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரான அவர் தொடக்கி வைத்த இந்தத் திட்டத்தை அவரின் வழிவரும் ஐ.தே.க. தலைமைகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நிறைவேற்றின. இன்றுவரை இந்த விடயம் உயிர்ப்புடன் இருக்கிறது. அது மட்டுமல்ல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை அரசியற் கட்சி பேதமின்றி ஆட்சிக்கு வரும் தீவிர சிங்கள – பௌத்த சக்திகள் நிறைவேற்றியே வருகின்றன.
கந்தளாய் குடியேற்றத் திட்டம்
இலங்கையில் முதன் முதலில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்ற பிரதேசம் திருகோணமலையின் கந்தளாய். 1940களில் இங்கு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திட்டத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் டி.எஸ். சேனநாயக்க ஆலமரம் ஒன்றை நாட்டி வைத்த பின்னர், அங்கு குழுமியிருந்த குடியேற்றவாசிகளான சிங்கள மக்களிடம், “இந்த மரம் வளர்ந்து பெரிதாகக் கிளை பரப்பி நிற்கும்போது இங்கு நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.” என்று கூறி சிங்கள – பௌத்த மேலாண்மையையும், ஆக்கிரமிப்பு மனோபாவத்தையும், இனக்குரோதத்தையும் ஒரு சேரப் பற்றவைத்தார். அன்று அவர் பற்ற வைத்த சிறுபொறியே இன்று இனவாதப் பெருந் தீயாக வளர்ந்து நிற்கின்றது. தனியே தமிழ் பேசும் மாவட்டமாக, தமிழரின் தலைநகராக விளங்கிய திருகோணமலையில் ஒரு தொகுதியைக் கூட வெற்றிகொள்ள முடியாத நிலை உருவானது. தமிழர் தலைநகரில் இன்று பெரும்பான்மையினர் சிங்களவர்களே. பல ஊர்கள் சிங்களப் பெயர்கள் பெற்று சிங்களக் கிராமங்களாகி விட்டன. 4 நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கொண்ட மாவட்டத்தில் ஒரு தமிழர் மட்டுமே வெற்றி பெறமுடியும் நிலையே உள்ளது.
கல்லோயா திட்டம்
தமிழ்ப் பிரதேசமாக, மட்டக்களப்பு மாவட்டமாகப் பரந்து விரிந்திருந்த அம்பாறையில் கல்லோயாத் திட்டத்தைத் தொடக்கி வைத்தவர் டட்லி சேனநாயக்க. இவரது தந்தையான டி.எஸ். சேனநாயக்க பற்ற வைத்த இனவாதத் தீயை வளர்த்தெடுத்தவர் இவரே. இவரின் தந்தை திருகோணமலையில் தொடக்கி வைத்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டத்தை மட்டக்களப்பில் இன்றைய அம்பாறையில் நடைமுறைப்படுத்தினார். டட்லி சேனநாயக்காவின் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை எதிர்த்து அரசியல் செய்யத் துணிந்த ஆர்.டபிள்யூ. பண்டாரநாயக்கா நாடு முழுவதும் இனவாதத் தீயைப் பற்ற வைத்து ஆட்சியைப் பிடித்தார். இவரின் காலத்தில் கல்லோயாக் குடியேற்றத் திட்டம் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்தக் குடியேற்றத் திட்டத்தினாலேயே திட்டமிட்ட முறையில் 1956 ஜூன் கலவரம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர், 1960 களில் அம்பாறை மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தனியே தமிழ் பேசும் மக்களால் நிறைந்திருந்த அம்பாறை மாவட்டத்தில் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய பகுதிகளிலேயே தமிழ் மக்கள் வசிக்கின்றனர். சிங்களவர்கள் ஒருபக்கம் தமிழர்கள் கிராமங்களை ஆக்கிரமித்தது போக கிழக்கில், இன்று பெரும்பான்மையினராக மாற்றம் கண்டுவரும் முஸ்லிம்களும் தமிழர்களின் கிராமங்களை ஆக்கிரமிப்பதில், தமிழர் அடையாளங்களை அழிப்பதில், திரிபுபடுத்துவதில் முதலில் மிகத் தீவிரமாக சிங்களப் பேரினவாதிகளுடன் சேர்ந்து இயங்கி, இன்று தனித்து மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இவர்களால், மிக வேகமாக தமிழர் தாயகப் பரப்பு சுருங்கி வருகின்றது.
தனித் தமிழர் மாவட்டமாகக் காணப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று திட்டமிட்ட முஸ்லிம், சிங்கள குடியேற்றங்கள் வெகுவேகமாகப் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழர்களின் இனவிகிதாசாரம் திட்டமிட்ட முறையில் குறைக்கப்படுகின்றது.
பறிபோன புத்தளம்
நீர்கொழும்பு வரை நீண்டிருந்த தமிழர் தாயகம், இன்று சிலாபத்துடன் சுருங்கி விட்டது. புத்தளம் மாவட்டத்தில் சில கிராமங்களைத் தவிர, ஏனைய பகுதிகள் அனைத்தும் சிங்கள – முஸ்லிம்களுக்கும் சொந்தமாகி விட்டது. போர் காலத்தில் கிழக்கு மாகாணம் போன்று புத்தளம் மாவட்டத்தின் பல கிராமங்களும் அடிக்கடி சிங்கள – முஸ்லிம்களால் தாக்குதலுக்கு உள்ளானது. அச்சம் காரணமாக தமிழர்கள் தங்கள் காணிகளை விற்று விட்டும், கைவிட்டும் தமக்குப் பாதுகாப்பு எனக் கருதிய வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இதனால் இன்று புத்தளம் மாவட்டம் முற்றாகத் தமிழர் தாயகத்தில் இருந்து பறிபோய்விட்டது என்பதே உண்மை. தமிழீழக் கோரிக்கையின் பகுதியான புத்தளம் மாவட்டம் இன்று சுருங்கி,தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மறைந்து விட்டது. திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப்பரம்பலை குறைக்கும் குடியேற்ற நடவடிக்கைகள் காரணமாக இன்று தமிழர் தாயகம் என்ற வட்டத்துக்குள் – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மட்டுமே அடங்கி நிற்கின்றன என்பது வேதனையான, துன்பியல் நிகழ்வாகும்.
புத்தளம் மாவட்டத்தை ஏறத்தாழ முழுமையாகவும் கிழக்கு மாகாணத்தையும் கிட்டத்தட்ட கபளீகரம் செய்துவிட்ட சிங்கள-பௌத்த ஆதிக்கம் வடக்கு மாகாணத்தை ஆக்கிரமிப்பதற்காக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
ஆக்கிரமிப்பு மகாவலி
சேனநாயக்கவின் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்ததும், அவரின் வழியில் கட்சித் தலைமையைத் தொடர்ந்தார் ஜே.ஆர். ஜெயவர்த்தன. இவரின் காலத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் அறிமுகமானது. ‘மகாவலி ஓடும் நீர் எங்கும் சிங்களக் குடியேற்றத் திட்டம்’ என்பதே இவரின் அரசின் திட்டமாக இருந்தது. மகாவலி வடக்கேயும் திசை திருப்பப்பட்டு பாயத் தொடங்கியது. ஆழமாக வெகு ஆழமாக தமிழர் நிலத்தை ஊடுருவிய மகாவலி ஆறு, தான் ஓடிய பிரதேசங்களை சிங்கள மயமாக்கிக் கொண்டே ஓடியது. போர் அதற்கு தடைகளை விதித்தாலும், இன்று மீண்டும் தமிழர் தாயகத்தை விழுங்கும் முனைப்பில் மகாவலி அபிவிருத்திப் பிரதேசங்கள் உள்ளன.
வடக்கு நோக்கித் திருப்பப்பட்ட மகாவலி ஆறு பல குடியேற்றத் திட்டங்களை உருவாக்கியது. வவுனியாவின் பல பிரதேசங்கள் இன்று சிங்களக் குடியேற்றங்களால் விழி பிதுங்கி நிற்கின்றது. தமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் மட்டுமே வசித்த வவுனியா மாவட்டத்தில் குடியேற்றத் திட்டங்களால் பல பிரதேசங்கள் சிங்கள மயமாகி விட்டன. சிங்கள இனப்பரம்பல் மிக வேகமாக அதிகரிக்க, தமிழ் மக்களின் விகிதாசாரம் மிக வேகமாகக் கீழிறங்குகிறது. இது மட்டுமின்றி வவுனியாவில் தமிழர்களின் புராதன பகுதிகளையும் சிங்கள பௌத்தம் ஆக்கிரமிக்கத் துடித்து நிற்கின்றது. வெடுக்குநாறி மலை சிவன் கோவில் விவகாரம் பூதாகரமாகி யுள்ளது. சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பின் முகவராக செயற்படும் தொல்பொருள் திணைக்களத்தின் பிடியில் சிக்கி நிற்கிறது. தமிழரின் புராதனத்தை அழிக்க மறைக்க திரிபுபடுத்த முயற்சிகள் நடக்கின்றன.
இதுபோலவே, தமிழரின் இதயபூமி என வர்ணிக்கப்பட்ட மணலாறு பிரதேசம் வெலிஓயா சிங்களக் குடியேற்றத் திட்டமாக மாறியது அனைவரும் அறிந்ததே. அகன்று விரியத் துடிக்கும் இந்தப் பிரதேசம் முல்லைத்தீவின் கரைத்துறைப் பற்று, செம்மலை பகுதிகளையும் தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரத் துடிக்கிறது. சிங்களவர்களைப் பின்பற்றி தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமிக்கும் முஸ்லிம்களும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தமிழர் நிலங்களைக் கையகப்படுத்தி வருகின்றனர். தமிழ் இந்துக்களின் புனித பூமியாகக் கருதப்படும் வற்றாப்பளையில் குடியேற்றத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது. இதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் தமிழர் நிலங்கள் முஸ்லிம் குடியேற்றங்களால் நிறைகிறது.
கிளிநொச்சியில் பௌத்த விகாரைகள் எழத் தொடங்கி விட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலும் குறிப்பாக வலி. வடக்குப் பிரதேசத்தில் பௌத்த விகாரைகளை இராணுவம் அமைத்து வருகிறது. இது காலப்போக்கில் தமிழர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அத்திபாரமாகும். யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் எனப் புகழப்படும் நாவற்குழிப் பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குடியேற்றத்தை விரிவு படுத்தும் நோக்கில் மிகப்பெரிய விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டு கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் அமைச்சர்களின் வருகையோடு திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலில் ஏற்படுத்தப்பட்ட இந்த சிங்களக் குடியேற்றத் திட்டம் விரைவில் யாழ்ப்பாணம் முழுமையையும் அபகரித்துக் கொள்ளலாம்.
2013 – 2018 வரை ஆட்சியில் இருந்த வடக்கு மாகாண சபையால், வடக்கில் நடக்கும் சிங்களக் குடியேற்றங்களை, திட்டமிட்ட இனப்பரம்பலை தடுக்க முடியவில்லை. காரணம் வெற்றுக் கோதான 13 ஆவது திருத்தச் சட்டமே இதற்கு அடிப்படைக் காரணம். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் ”சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வடக்கு மாகாண சபையால் குரைக்க முடியுமே தவிர, கடிக்க முடியாது”, என்று கூறியமை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
முடிவுரை:
தமிழர்களின் வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. தமிழ்க் கிராமங்கள் எல்லாம் சிங்கள, முஸ்லிம் மயமாகின்றன என்பது மட்டுமல்ல, அடிப்படை வரலாறே மாற்றி எழுதப்படுகின்றது. கற்பனைக் கதைகளை உருவாக்குவதிலும், அதையே வரலாறாக வடிப்பதிலும், அதை உண்மையான வரலாறு என சந்ததி சந்ததியாக கடத்துவதிலும் சிங்களவர்கள் வெகுகெட்டிக்காரர்கள். எப்படித்தான் அது கற்பனைத் தனமாக இருந்தாலும் ஆதாரங்கள் இல்லை என்றாலும் தங்கள் வரலாற்றை போற்றுவதிலும், பாதுகாப்பதிலும், பகுத்தறியாமல் படிப்பதிலும், அதை நம்புவதிலும் சிங்களவர்கள் சமத்தர்கள்.
ஆனால், அதே சமயம் தனது வரலாற்றை அங்கீகரிக்க மறுக்கும் நாட்டில் தனது இருப்பை நிலைநிறுத்த முயற்சிக்காத, தனது வருங்கால இருப்புக் குறித்து அக்கறை செலுத்தாத இனமாக தமிழினம் இருக்கிறது. வரலாற்றைக் கற்க மறுக்கும் எந்த இனமும் இந்த உலகில் நின்று நிலைத்தது இல்லை. ஈழத் தமிழினம் தனது வரலாற்றை அறிந்து, வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடம் படித்துத் தன்னை நிலைநிறுத்த வேண்டிய தேவையே இப்போதுள்ளது. அப்போதே தனது தாயகத்தில் ஈழத் தமிழினத்தால் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
ஐங்கரன்-
பங்குனி – சித்திரை 2020
நிமிர்வு
Leave a Reply
You must be logged in to post a comment.