இந்துக் கோயில்களை அகற்றிவிட்டு பவுத்த விகாரைகளைக் கட்டும் பணியில் சனாதிபதி கோட்டபாய!
நக்கீரன்
முப்பது ஆண்டு கால கொடிய போரினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அல்லல்படும் எமது மக்கள் மீது சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் சமயப் போர் ஒன்றையும் அண்மைக் காலமாக கட்டழ்த்து வருகிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களது வாழ்விடங்களையும் வழிபாட்டிடங்களையும் ஆக்கிரமித்து வருகிறது. இந்தப் பணியில் அரசயந்திரம் முழு அளவில் முடுக்குவிக்கப்பட்டு வருகிறது.
சென்ற வாரம் முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தில் சூலம் வைத்து வழிபாடு செய்த இடம் திடீரென்று சிறிலங்கா இராணுவத்தின் உதவியுடன் அகற்றப்பட்டு அந்த இடத்தில் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் வழிபாடு நடத்தப்பட்டு தொல்லியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.

குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயப் பகுதி முழுதும் பவுத்த மதக் கொடிகளாலும் இராணுவத்தின் கொடிகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தன. சிறிலங்கா இராணுவம் ஒரு தேசிய இராணுவம் போல் இல்லாமல் ஒரு இன – மதவாத இராணுவமாக செயற்பட்டுகிறது என்பது தெரிந்ததே.
இந்தச் செய்தி தமிழ்மக்களுக்குப் பொதுவாகவும் சைவத் தமிழ்மக்களுக்கு பேரதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது. இது தமிழர் தாயகப் பிரதேசத்தை திட்டமிட்டு பவுத்தமயமாக்கும் முயற்சி என தமிழ்த் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழரின் தாயகப் பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைப் பகுதியை ஆக்கிரமிப்பதில் பவுத்த பிக்குகள் கடந்த சில ஆண்டுகளாக முனைப்போடு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் அப்பகுதியை ஆக்கிரமித்து பவுத்த விகாரை அமைப்பதற்கு பிக்குகள் தீவிரம் காட்டி வந்தனர். இதனைத் தமிழர்கள் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளால் தடுத்து வந்துள்ளனர்.
வட கிழக்கில், குறிப்பாக கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றத்தின் மூலம் நில ஆக்கிரமிப்பு நடத்தப்பட்ட காரணத்தால் இன்று தமிழர்கள் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளனர். வடக்கிலும் 18 கிராமங்களை கொண்ட வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 11,189 பேர்களைக் கொண்ட 3,336 கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயம் மட்டுமல்ல, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொல்லியல் ஆராய்ச்சி என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு திடீரென பவுத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் முளைத்துள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்கள் நில அபகரிப்புக்கு நாடாளுமன்றச் சட்டங்களைப் பயன்படுத்துகின்றன, அவற்றில் பெரும்பாலானவை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நடைமுறைப் படுத்துவதற்கு முன்னர் இயற்றப்பட்டவை. அதில் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய சட்டம் முக்கியமானதாகும். இந்தச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் தாம் விரும்பிய காணிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்தலாம்.
கிழக்கில், முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி, திரியாய், கும்புறுப்பிட்டி, தென்னமரவாடி போன்ற கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தொல்பொருள் இடங்கள் என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு முள்வேலிகள் போடப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்க இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குச் சொந்தமானதும் இந்துக்களுக்குப் புனிதமான கன்னியா சுடுநீர்க் கிணறுகள் ஒரே நாளில் பவுத்த புராதனச் தொல்பொருள் சின்னங்கள் என மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது நடந்தபோது (ஒக்தோபர் 05, 2010) மகிந்தா இராசபக்ச சனாதிபதியாக இருந்தார். அங்குள்ள சேதமடைந்த பிள்ளையார் கோவிலை புனரமைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரம் ஒரு புதிய புத்த கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அங்கு ஒரு பவுத்த தேரர் நிரந்தரமாக குடியேறியுள்ளார். இந்தப் பிரச்சினை இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது.
வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவான நெடுங்கேணி, ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 கிமீ தொலைவில் உள்ள வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது. சுமார் 3000 ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலையானது பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டு காணப்படுகின்றது. பண்டய காலத்தில் நாகர்கள் இங்கு வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. முந்நூறு மீற்றர் உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ்ப் பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றைக் காணமுடியும். மலையின் உச்சியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய இலிங்கம் அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை தொல்பொருள் திணைக்களம் சொந்தம் கொண்டாடி வருகிறது. தமிழர்களின் வட, கிழக்கு எல்லையோர கிராமங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதேபோன்று இவ்வாலயமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப் பட்டுவிடும் என்ற அச்சம் தமிழ்மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இந்த ஆலயம் தொடர்பான வழக்கு எதிர்வரும் சனவரி 29, 2021 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
திருக்கேதீஸ்வரம், சிவனொளிபாத மலை, இரணைமடு கனகாம்பிகை ஆலய வளாகம் போன்ற இடங்களில் இராணுவத்தின் உதவியுடன் விகாரைகள் கட்டும் முயற்சியில் பொதுபல சேனா, இராவண பலய, சிங்கள இராவய, சிங்கலே போன்ற தீவிர சிங்கள – பவுத்த அமைப்புக்கள் ஆட்சியாளரின் ஆசியுடன் இயங்கி வருகின்றன. ஏற்கனவே வடக்கில் முக்கிய ஊர்களில் நாற்பதுக்கும் மேலான பவுத்த விகாரைகள் இராணுவத்தால் கட்டப்பட்டுள்ளன. புத்தர் சிலைகளும் நாட்டப்பட்டுள்ளன.
சனாதிபதி கோட்டபாய இராசபக்ச ஆட்சிக்கு வந்ததும் கிழக்கில் பவுத்த சின்னங்களை அடையாளப்படுத்தப் பெரும்பான்மை பவுத்த தேரர்களைக் கொண்ட செயலணி கடந்த யூன் மாதம் உருவாக்கப்பட்டது. அதன் கடமைகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன.
(1) கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காணல்.
(2) அத்தகைய அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்து மீட்டெடுப்பதன் மூலம் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான பொருத்தமான திட்டத்தை அடையாளம் கண்டு செயல்படுத்தல்.
(3) தொல்பொருள் இடங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலத்தின் அளவைக் கண்டறிந்து அவற்றை முறையாகவும் சட்டரீதியாகவும் ஒதுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
(4) தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் கலாச்சார மதிப்பைப் பாதுகாத்தல் மற்றும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சிறிலங்காவின் தனித்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் அத்தகைய மரபுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளைச் செய்தல்.
இந்தச் செயலணியில் இடம்பெற்றுள்ள எல்லாவல மேத்தானந்த தேரர், திருகோணமலையில் கோகண்ண விகாரை அமைந்துள்ள இடத்திலேயே திருக்கோணேஸ்வரம் கோயில் அமைக்கப் பட்டுள்ளதாக பிபிசி தமிழ் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பவுத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்துக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் சனாதிபதி செலயணியின் உறுப்பினர் ஒருவர் இலங்கை மக்களிடையே ஆட்சியாளரின் ஆசியுடன் வெறுப்பையும் வேற்றுமையையும் பூசல்களையும் விதைத்து அமைதியைக் குலைத்து வருகிறார். இவர் மட்டுமல்ல இன்னும் பல பவுத்த பிக்குகள் சிங்கள – பவுத்த தீவிரவாதக் கருத்துக்களை பொதுவெளியில் கூறிவருகிறார்கள்.
முன்னர் தமிழர் வாழும் பாரம்பரிய நிலத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் சிங்கள மயப்படுத்தியது போல சனாதிபதி கோட்டபாய இரசபக்ச திட்டமிட்டு இந்து ஆலயங்களை பவுத்த விகாரைகளாக அடையாளப்படுத்தி பவுத்த மயப்படுத்தி வருகிறார்.
தமிழ்மக்கள் பவுத்த மதத்தை மதிப்பவர்கள். புத்தர் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். அவரை திருமாலின் 9 ஆவது அவதாரம் என இந்துமதம் போற்றுகிறது. அவர் போதித்த தசசீலங்கள் இந்துமதத்திலும் காணப்படுகின்றன. புத்தரது வினைக் கோட்பாடு, நிலையாமைக் கோட்பாடு, அறநெறிக் கோட்பாடு இந்து சமயத்திலும் உள்ளன. ஒருவர் செய்யும் நல்வினை – தீவினை காரணமாக மறுபிறப்பு நிகழ்கிறது என்பது பவுத்த கோட்பாடு. புத்தர் வானுலகம், தேவர்கள் பற்றியெல்லாம் நிறையவே கூறியுள்ளார். பவுத்த சமயம் இந்திரன், பிரம்மா, காமவேள், மணிமேகலாதேவி, தாராதேவி, அவலோகிதேஸ்வரர் போன்ற தெய்வங்களை மிக உயரிய நிலையில் வைத்துப் போற்றுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை மகாயான பவுத்த நூலாகும்.
சனபதி கோட்டபாய இராசபக்ச ஆட்சியில் இந்து ஆலயங்களை இடித்துவிட்டு பவுத்த விகாரைகளைக் கட்டும் திருப்பணி நடை பெறுகிறது. இந்த ஏதேச்சதிகாரத்துக்கு எதிராகவும் தமிழ்மக்களது பண்பாடு, பாரம்பரியம், வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் போராட வேண்டும். இல்லையேல் சிங்கள மயப்படுத்தல் போல பவுத்த மயமாக்கலும் நிதர்சனமாகிவிடும்.
Leave a Reply
You must be logged in to post a comment.