தமிழர்களும் பௌத்த மதமும்

தமிழர்களும் பௌத்த மதமும்

திருமதி.சஜிதரன் சிவரூபி
தொல்லியல் விரிவுரையாளர்
யாழ் பல்கலைக்கழகம்

இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணக்குடாநாட்டில் தொன்மையான தொடர்ச்சியான வரலாற்று பாரம்பரியமிக்க பிரதேசங்களில் ஒன்றாக தென்மராட்சி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் தொட்டு தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசமாக தென்மராட்சி விளங்குவதனை வரலாற்று இலக்கிய, தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. வெற்றிலைக்கேணி, குடத்தனை, வரணி, மந்துவில், இயற்றாலை போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் எச்சங்கள் இப்பிரதேசத்தின் தொன்மைக் குடியிருப்புக்களை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சாவகச்சேரி வாரிவனேஸ்வர் கோயில், சாவகச்சேரி நகர மையப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்து விக்கிரங்கள், கி.பி 12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மட்டுவில் (மட்டிவால்) பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் கல்வத்தை சிவன் கோயில் போன்றன இப்பிரதேசத்தின் இந்துமத தொன்மையினை புலப்படுத்தும் முக்கிய தொல்லியல் எச்சங்களாகும்.

இவ்வாறான வரலாற்று சிறப்பு மிக்க தென்மராட்சிப் பிரதேசத்தில் ஐரோப்பியரது ஆட்சிக் கால நடவடிக்கைகளினால் சைவமும், தமிழும் பெரிதும் நலிவுற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையினை கருத்திற்கொண்டு அக் காலப்பகுதியில் சைவ, தமிழ் மறுமலர்ச்சிக்கு சுதேசிகள் பலர் அரும்பாடுபட்டுள்ளனர். அவர்களின் வரிசையில் சரசாலை ஊரைச் சேர்ந்த வித்துவான் இராமலிங்கம் அவர்களும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியராவர்.

இவர் தமிழிசை, நாடக துறையில் கொண்டிருந்த புலமையினாலும், சமயத்தொண்டுகள் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகவும் சைவத் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளார். வித்துவான் இராமலிங்கம் அவர்கள் செய்த பணிகள் எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தற்போல் அமைவது 1917ஆம் ஆண்டு மட்டுவிலில் அமைக்கப்பட்ட கமலாசனி வித்தியாலயமாகும். இப் பாடசாலையின் உருவாக்கம் கூட ஓர் காலத்தின் தேவையுணர்ந்த செயற்பாடாகும். அக் காலத்தின் தேவையுணர்ந்து துணிந்து திறம்பட செயற்பட்ட இப் பெரியார் போற்றுதலுக்குரியவர்.

இப் பெரியாரின் சிந்தனைகள், அரும்பணிகள் யாவும் தமிழ் வளர்ச்சினையே அடிப்படையாக கொண்டிருந்தது. இவ் வகையில் இக் காலத்தின் தேவையுணர்ந்த வகையில் தமிழர்களின் வரலாற்றினைக் கட்டியெழுப்பும் முகமாக அமைந்த “தமிழர்களும் பௌத்தமதம்” என்ற கட்டுரையை வித்துவான் இராமலிங்கம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதில் பெருமையடைகின்றேன்.

இப் பெரியார் பிறந்த ஊரைச் சேர்ந்தவள் என்ற வகையிலும் அவரது நினைவுப் பேருரையை ஆற்றுவதில் மேலும் மனமகிழ்வடைகின்றேன். இவ் நினைவுப் பேருரையை ஆற்றுவதற்க்கு வாய்ப்பளித்த கமலாசனி வித்தியாலய பாடசாலை சமூகத்தினருக்கும், பழைய மாணவர் சங்கத்தினருக்கும் குறிப்பாக யாழ் பல்கலைக்கழக ஆங்கில மொழி விரிவுரையாளர்
2
கலாநிதி.ச.க.கண்ணதாசன் அவர்களுக்கும் இவ்விடத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழர்களும் பௌத்த மதமும்

அறிமுகம்

கி.மு 3ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து மௌரிய மன்னன் அசோகனது காலத்தில் பாடலிபுரத்தில் கூட்டப்பெற்ற மூன்றாவது பௌத்த மாநாட்டின் பிரகாரம் உத்தியோக பூர்வமாக இலங்கைக்கு பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக் காலப்பகுதியில் இலங்கையில் நிலவிய பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த பொருளாதாரக் கட்டமைப்பும், சமூக பிரிவுகளும் பௌத்த மதம் குறுகிய காலத்தில் பரவுவதற்கும், வளர்வதற்க்கும் சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுத்திருந்தது. இம் மதத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த பெரும்பான்மையான மக்கள் பின்பற்றியிருக்கலாம் என்பதனை இப் பண்பாட்டு மையங்களை அண்மித்துக் காணப்படும் பௌத்த மதத்துடன் தொடர்புடைய பிராமிக் கல்வெட்டுக்கள் மற்றும் ஏனைய தொல்லியல் எச்சங்கள் உறுதிப்படுத்துகின்றன. பாளி இலக்கியங்கள் குறிப்பிடும் தொடக்ககால பௌத்த மையங்கள் கூட இவ் பெருங்கற்கால மையங்களுக்கு கிட்டிய தூரத்திலேயே அமைந்துள்ளது.

இலங்கைக்கு பௌத்தம் வட இந்தியாவிலிருந்து உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது தொடர்ந்து வளர்வதற்கு ஆந்திராவும், தமிழகமுமே முக்கிய காரணமாகும். இந்த வகையில் வடக்கு, கிழக்கு இலங்கையில் கிடைக்கப் பெற்ற பௌத்த மதக் கலைப்படைப்புகள் பெரிதும் ஆந்திர, தமிழக கலைமரபினையே புலப்படுத்தி நிற்கின்றன.

பாளி இலக்கியங்கள் தமிழகத்திலிருந்து வந்த புத்ததத்த (Buddhatta), புத்தகோஸ (Buddha Hosa), தர்மபால (Darmapala) முதலான பௌத்த துறவிகள் இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகளை குறிப்பிடுகின்றன. இதனால் தமிழகத்தைப் போல் சம காலத்தில் இலங்கையிலும் தமிழர்களில் ஒரு பிரிவினர் பௌத்தர்களாகவும், பௌத்த மதத்தினை ஆதாரித்தவர்களாகவும் இருந்திருக்கலாம் என அறிய முடிகின்றது. மேலும் பௌத்த மதம் தென்னாசியா, தென்கிழக்காசியா, கிழக்காசியா முதலான நாடுகளில் பரவுவதற்க்கு வணிகத் தொடர்புகளே முக்கிய காரணமாக இருந்ததனால் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளைப் போல் இலங்கையின் கிழக்கு கரையோரப்பகுதி மற்றும் வட இலங்கையின் கடற்கரைப் பகுதியிலும் பௌத்த மத நிலைபேற்றிற்க்கு இத் தொடர்புகளும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

இலங்கையில் பெருங்கற்கால பண்பாட்டு வழிவந்த மக்களிடையே பரவிய பௌத்தமதம் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகின்றது. இம் மதத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்து,
3
பாளி, பிராகிருத மொழிகள், பௌத்த கலைகள் என்பன ஏற்கனவே இங்கிருந்த பண்பாட்டுடன் கலந்தே பிற்காலத்தில் பௌத்த, சிங்களப் பண்பாடு தோற்றம் பெற காரணமாகியது. இப் பண்பாட்டுப் பரவலை வடஇந்தியாவுடன் இலங்கைக்கு இருந்த பாரம்பரியமான தொடர்ச்சியெனவும், இம் மதத்தைப் பின்பற்றிய சிங்கள மக்களின் மூதாதையினரும் (விஐயன் தலைமையில் வந்த 700 தோழர்கள்) வட இந்தியாவிலிருந்து வந்தவர்களே என பேராசிரியர் பரணவிதானா போன்ற வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டு பௌத்த மதம் சிங்கள மக்களுக்கு மட்டும் உரிய மதம் என நியாயப்படுத்தியுள்ளனர்.

இன்றைய நிலையில் தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாகவும், சிங்களவர்களில் பெருன்பான்மையோர் பௌத்தர்களாக இருப்பதனைக் கொண்டு புராதன காலத்திலும் இந்நிலையே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இதனால் ஒரு இடத்தில் பௌத்த மத எச்சங்கள் கண்டுபிடிக்கப்படும் போது அதனை ஒரு மதத்திற்குரிய பண்பாட்டு எச்சமாக பார்க்காது ஒரு இனத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது.

இவ்வகையிலேயே பௌத்த மதம் தொடர்பான பண்பாட்டு எச்சங்கள் எங்கெல்லாம் கண்டுபிடிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் முன்பொரு காலத்தில் சிங்கள இனம் வாழ்ந்ததன் அடையாளமாகவே பார்க்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு போக்கு மேலும் வளர்வதற்கு பௌத்த சிங்கள தேசிய வாதத்தை கட்டியெழுப்பும் முகமாக எழுந்த பாளி, சிங்கள இலக்கியங்களும், கடந்த கால அரசியல் வரலாற்று நிகழ்வுகளும் அடித்தளம் இட்டுக் கொடுத்திருந்தது. ஆனால் புராதன இலங்கையில் குறிப்பிட்ட ஒரு மதம் குறிப்பிட்ட ஒரு மொழி பேசிய மக்களுக்கு மட்டும் உரிய மதமாக இருந்ததற்கு எந்த வித ஆதாரங்களும் காணப்படவில்லை. இதனால் தமிழர்களும் பௌத்த மதத்தை பின்பற்றியதற்கும், ஆதாரித்தமைக்கும் பல வகையான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆதிகால, இடைக்கால இலங்கை வரலாற்றிலும் தமிழர்களும், தமிழ் மன்னர்களும் பௌத்த மதத்தை பின்பற்றியதற்கும், ஆதரவு வழங்கியமைக்கும் பாளி, தமிழ் இலக்கியங்கள், பிராமிக்கல்வெட்டுக்களில் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதனாலேயே வட இலங்கையில் நிலை பெற்றிருந்த பௌத்தத்தினை இந்திரபாலா போன்ற வரலாற்று ஆசிரியர்கள்; “தமிழ்ப்பௌத்தம்”; என சுட்டுகின்றனர். இதனால் இன்றைய நிலையில் தமிழர்கள் செறிந்து வாழும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கிடைக்கப்பெறும் புராதன பௌத்த மத எச்சங்களினை முன்பொரு காலத்தில் சிங்கள இனம் வாழ்ந்ததற்கான அடையாளமாக பார்ப்பதை விடுத்து தமிழ்ப்பௌத்தம் நிலவியதன் பின்னனியில் பார்ப்பதே பொருத்தமானதாகும்.

தமிழர் என்ற இனக்குழுவின் தொன்மை பற்றி ஆராயுமிடத்து, இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் என்ற சொல் பயன்பாட்டில் இருந்துள்ளதனை வரலாற்று, தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தவகையில் தமிழ் மொழியின் முதல் நூலாகிய சங்க இலக்கியத்திலும்,4
இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் தமிழ் என்ற சொல் இடம் பெறுவதைக் காணமுடிகின்றது.

இச் சொல் பிராகிருதமயப்படுத்தப்பட்ட வகையில் கலிங்க நாட்டுக் காரவேல மன்னனின் ஹாதிகும்பாக் கல்வெட்டில் ‘த்ரமிர’ என்றும் ஆந்திர அமராவதிக் கல்வெட்டில் ‘தமிள’ என்றும் பாளிமொழியிலுள்ள அகித்தி ஜாதகக் கதையில் ‘தமிளரட்டம்’ என்பது தமிழ்நாடு என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளதனை காணமுடிகின்றது. இச் சான்றாதாரங்களை நோக்கும் பொழுது இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் என்ற இனம் வாழ்ந்துள்ளதனை உறுதிப்படுத்த முடியும். இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட 1500 க்கு மேற்பட்ட பிராமிக்கல்வெட்டுகளிலும் தமிழ் என்ற வடிவத்தின் தொன்மையான வடிவத்தினைக் காணமுடிகின்றது. கி.மு 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 4ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியினைக் கொண்ட இப் பிராமிக் கல்வெட்டுக்களில் ‘தமெட’ என பிராகிருத மயப்படுத்தப்பட்ட வகையிலும், தமிழ் பிராமிக்குரிய ‘ழ’ வுடன் ‘தமெழ’ எனவும், இலங்கை வரலாற்று மூலதாரங்களாகிய பாளி, சிங்கள இலக்கியங்களில் ‘தமிள’ ‘தெமள’ என்ற பதங்களும் தமிழரைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது (இந்திரபாலா, 2006, 27).

மேலும் பாளி இலக்கியங்களில் பண்டைய காலத்தில் தமிழகத்தை அடுத்து தமிழர்கள் வாழ்ந்த இடமாகவும், தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்த இடமாகவும் இலங்கையைக் குறிப்பிடுகின்றன. இவ்விலக்கியங்களிலும், இவற்றை அடிப்படை மூலாதாரமாகக் கொண்டு எழுந்த பிற்கால வரலாற்று நூல்களிலும் தமிழர்களை இலங்கைக்குரிய பூர்வீக மக்களாக காட்டுவதற்க்கு பதிலாக தென்னிந்தியாவுடன் குறிப்பாக தமிழகத்துடன் தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகின்றது.

எனினும் கி.மு 3ஆம் நூற்றாண்டிலிருந்து தோன்றிய கல்வெட்டுக்கள், பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், நாணயங்கள் போன்ற தொல்லியல் ஆதாரங்கள் இவ்விலக்கிய கருத்துக்களை முற்றிலும் மறுதலிப்பவையாகவே அமைந்துள்ளன. குறிப்பாக தமிழர்களை இலங்கைக்குரிய பூர்வீக மக்களாக எடுத்து காட்டுவதில் இவ் தொல்லியல் சான்றுகளுக்கு முக்கிய பங்குண்டு.

இலங்கையில் தமிழ், சிங்கள என்ற மொழி அடிப்படையிலான இனங்கள் தோன்றுவதற்;கு முன்னர் உள்ள நிலையில் (வரலாற்று முற்பட்டகால) மக்கள் அனைவரும் ஒர் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதனை வரலாற்றுக்கு முற்பட்டகால ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன (இந்திரபாலா, 2006:86). கி.மு 3ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு பௌத்தமதம் அறிமுகமாவதற்;கு முன்னரே இடைக்கற்காலத்தினை அடுத்து பெருங்கற்காலத்துடன் பொதுவானதொரு பண்பாடு இங்கு காணப்பட்டிருந்தது.

பௌத்த மதத்தின் அறிமுகம் பெருங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து இலங்கையின் பண்பாட்டு வரலாற்றில் ஏற்பட்ட இன்னொரு புதிய பண்பாட்டின் தொடக்க காலமாகப் நோக்கப்படுகின்றது. இம் மதம் கி.மு 3ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து மௌரிய மன்னன் அசோகனது ஆட்சியில் பாடலி புரத்தில் நிகழ்ந்த மூன்றாவது பௌத்த மாநாட்டின் பிரகாரம் உத்தியோக பூர்வமாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாறு பௌத்தம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது இங்கு ஏற்கனவே நிலைபெற்றிருந்த பெருங்கற்கால பண்பாட்டு அம்சங்கள் குறிப்பாக பெருங்கற்கால பொருளாதாரக் கட்டமைப்பும், சமூக பிரிவுகளும் பௌத்த5மதம் குறுகிய காலத்தில் பரவுவதற்கும், வளர்வதற்கும் வழிவகுத்தது. இம் மதத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்களில் பெரும்பான்மையோர் பின்பற்றியிருக்கலாம் என்பதனை அப் பண்பாட்டு மையங்களை அண்மித்துக் காணப்படும் பௌத்த மதத்துடன் தொடர்புடைய பிராமிக் கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன.

பாளி இலக்கியங்கள் குறிப்பிடும் தொடக்ககால பௌத்த ஆலயங்கள் கூடப் பெரும்பாலும் இப் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களை ஒட்டியதாகவே காணப்படுகின்றன.

பௌத்த மதத்திற்;கு முற்பட்ட கால சமயநிலை இலங்கையில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள், நாணயங்கள், மட்பாண்ட சாசனங்கள், கட்டிட, சிற்பக்கலை சான்றுகள் ஆகிய தொல்லியல் எச்சங்களையும் மற்றும் பாளி, சிங்கள, தமிழ் இலக்கியச்சான்றுகளையும் ஆராயுமிடத்து, இங்கு நிலவிய மதம் தொடர்பாக மூன்று முக்கிய பிரிவுகளை காணமுடிகின்றது.

  1. வரலாற்றுக்கு முற்பட்டகால மத நம்பிக்கைகள்
  2. கி.பி 300 – 600 வரையிலான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு இலங்கையில் வாழ்ந்த மக்களிடையே சிறப்பு பெற்ற பௌத்த மதம்.
  3. இந்து சமயம் அதன் வரலாற்றுக்கால ஆரம்ப வளர்ச்சி நிலையிலும் பார்க்க, கி.பி 6ஆம் நூற்றாண்டினை தொடர்ந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறத்தொடங்கியிருந்தமை.
    வரலாற்றுக்கு முற்பட்டகால மத நம்பிக்கைகள் பற்றி ஆராயும் பொழுது, இந்து சமயம் சார்ந்த பண்பாட்டு அம்சங்கள் பெருங்கற்காலம் தொட்டு அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், ஈழத்தின் இந்து சமயத்தின் தொன்மையினை இடைக்கற்காலம் தொட்டு ஆராயும் பண்பும் காணப்படுகின்றது. இந்தியாவைப் போன்று ஈழத்தின் தொன்மையான வழிபாட்டு நெறியாகிய யக்ஷ, நக வழிபாடியற்றிவர்கள் இடைக்கற்கால மக்களாகிய ஒஸ்ரலோயிட் இனமக்களே என்பதனை அண்மைக் காலங்களில் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கற்காலக் கருவிகளும், சவ அடக்கங்களும் உறுதிப்படுத்துகின்றன.
  4. இவர்களின் சந்ததியினரே தற்கால வேடர் என்பதனையும் எடுத்துக்காட்டியுள்ளன. இவர்கள் இந்தியாவிலிருந்து ஈழத்திற்;கு வந்த பின்னரும் இந்தியாவோடு குறிப்பாகத் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் தமிழகத்திலிருந்து ஈழத்தை நோக்கிய கலாசாரப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது (சிற்றம்பலம். சி.க. 1996: 35). இக் கலாசாரப் பரவலில் ஈழத்தின் நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்ட பெருங்கற்கால பண்பாட்டு பரவல் முக்கியம் வாய்ந்ததாகும். இலங்கையின் பல பாகங்களிலும் பரவலாக இனங்காணப்பட்ட பெருங்கற்கால பண்பாட்டு வழிவந்தவர்களே தற்காலச் சிங்கள, தமிழ் மொழிகளைப் பேசுவோராவர்.

  5. பூநகரி பிராந்தியத்தில் பெருங்கற்கால பண்பாட்டம்சங்க ளுடன் சுடுமண் உருவங்களின் உடைந்த பாகங்கள், இலிங்க வடிவில் அமைந்த மண் உருவங்கள் என்பன கிடைத்துள்ளன. இவ்வாறான கலைச்சின்னங்கள் பல அநுராதபுரம், பொம்பரிப்பு, இரணைமடு, மாமடுவ, உருத்திரபுரம், சிகிரியா,
    6
    அம்பாறை போன்ற மாவட்டங்களில் கிடைத்துள்ளன. தமிழ் நாட்டில் ஆதிச்ச நல்லூரிலே கிடைத்த வேலும், சேவற்சின்னமும் முருக வழிபாட்டின் தொன்மையான சான்று எனத் தொல்லியலாளர் கருதுவர். கந்தரோடை, ஆனைக்கோட்டை, காரைநகர் போன்ற இடங்களிலே திரிசூலக்குறியீடுகள் மட்பாண்டங்களிலே பெறப்பட்டன. ஆதிச்ச நல்லூரில் கிடைத்ததைப் போன்ற இரும்பாலான வேல் சின்னங்கள்; பூநகரியிலும் கிடைக்கப்பெற்றன. மண்ணினாற் செய்யப்பட்ட இரண்டு அகல் விளக்குகளும் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இவை இப்பிராந்தியத்தில் நிலவிய தொன்மையான வழிபாட்டுச் சின்னங்களென கருதலாம். (புஸ்பரட்ணம். ப. 1993: 27,28).
    பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய மட்பாண்டத் துண்டங்களிலே சிவ சின்னமாகிய திரிசூலம் காணப்படுவதனாற் சிவனை வழிபடும் வழக்கம் பெருங்கற்கால பண்பாட்டின் செல்வாக்கு இலங்கையில் பரவியதன் காரணமாகவே இருக்கலாம். இலங்கையிற் இந்து சமயம் தொடர்பான வழிபாட்டு நெறிகள் புராதன காலம் தொட்டு சிறப்பு பெற்றதனையும், இலங்கையின் பல பாகங்களிலும், சமுதாயத்தில் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்களின் மத்தியிலும் அவை பரவியிருந்தமையினை ஈழத்து பாளி நூல்களில் அங்குமிங்கும் பரவி காணப்படும் குறிப்புகளும், பிராமிக் கல்வெட்டுக்களும், நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக இலங்கையிற் எல்லாப் பாகங்களிலும் இருந்து கிடைக்கப்பெற்ற 60க்கு மேற்பட்ட பிராமிச் சாசனங்களிற் காணப்படும் சிவனைக் குறிக்கும் “சிவ” என்னும் பெயர் காணப்படுகின்றது. அரசர், இளவரசர், வணிகர், கிராமவாசிகள், கிராமிய மட்டத்திலுள்ள தலைவர், கஹபதி என்னும் குடும்பத் தலைவர் முதலானோர் சிவ என்னும் பெயரைத் தனியாகவும் முன்னொட்டுச் சொல்லாகவும் கொண்டிருந்தனர். மேலும் இந்து சமயச் சின்னங்களான திரிசூலம், இலிங்கம், மழு, இடபம், வேல், மயில், திருமகளின் வடிவமும் கொற்றவையின் கோலமும் லக்சுமி வடிவம் என்பன இலங்கையிற் புராதன நாணயங்களில் அமைக்கப் பட்டுள்ளதால் அவற்றை வெளியிடும் அதிகாரம் உடைய மன்னர்களும், குறுநில மன்னர்களும், பெரு வணிகரும் இந்துக்களாக விளங்கினர் என்பதை அறிய முடிகின்றது (பத்மநாதன்.சி. 2005 : 18).
    இப் பின்னனியிற் தான் காலம் காலமாக எமது மூதாதையினர் மரநிழல்களிலும் தமது போக்குவரத்து பாதைகளை அண்டிய இடங்களிலும் தொன்மையான சமய நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடியியற்றி இருந்தார்கள். கிராமிய தெய்வ வழிபாட்டு முறையில் ஆண், பெண் தெய்வங்கள் காவல் தெய்வமாகவும் எல்லைத் தெய்வமாகவும் வழிபடப்பட்டிருந்தது. இப் பழமையான வழிபாட்டு முறைகள் நீண்ட பாரம்பரியத்தையும், தனித்துவத்தையும் கொண்டவையாகும். பெரும்பாலும் இவற்றின் அடித்தளமாக யக்ஷ, நாக வழிபாட்டம்சங்களே அமைந்திருந்தன.
    இலங்கையில் பௌத்தம் பரவுவதற்கு பல நூற்றாண்டுக்கு முன்னரே இந்து சமய வழிபாட்டு அம்சங்கள் செல்வாக்கு பெற்றிருந்ததனை பாளி இலக்கிய, தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்ற நிலையில் இன்றைய சிங்கள மொழியைப் பேசுவோரின் மூதாதையினரும், அவர்களின் சந்ததியினரும் பௌத்தத்திற்கு மதம் மாறினாலும் கூடத் தொடர்ந்து இந்து சமய வழிபாட்டு நெறிகளையும் பின்பற்றினர் என்பதனை இன்றும் நாட்டார் வழிபாடாகச் சிங்கள மக்கள்7 மத்தியில் காணப்படும் இந்து சமய வழிபாட்டு நெறிகள் எடுத்துக்காட்டுகின்றன. இதனை பௌத்த குருமார்கள் அல்லாதோரால் எழுதப்பட்ட சந்தேஸய இலக்கியங்களும் உறுதிப்படுத்துகின்றன (சிற்றம்பலம். சி.க. 1996: 30).
    எனினும் இலங்கையின் இந்து சமய வழிபாட்டு அம்சங்கள் புராதன காலம் தொட்டு அடையாளப்படுத்தப்பட்டாலும் ஆரம்ப கால கலைப்படைப்புக்கள், வழிபாட்டு இடங்கள் எனும் போது பௌத்த சமயம் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் அழியாத பொருட்களைக் கொண்டு கட்டிடங்கள், சிற்பங்கள் அமைக்கும் மரபு பௌத்தத்திற் காணப்பட்டது போன்று இந்து சமயத்தில் பெருமளவில் காணப்படவில்லை. இந்து சமய வரலாற்றில் வட இந்தியாவில் குப்த வம்சத்தவரது காலமும், தென்னிந்தியாவில் பல்லவரது எழுச்சியுமே அழியாத பொருட்களைக் கொண்டு சிற்பங்கள், வழிபாட்டிடங்கள் அமைக்கும் மரபிற்கு வழிவகுத்தது எனலாம்.
    விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இந்து ஆலயங்கள் ஐந்து சிறப்பு பெற்ற செய்தியினை போல்.இ.பீரிஸ் என்பவரது குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அவற்றுள் ஒன்றாக யாழ்குடாநாட்டின் நகுலேஸ்வரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
    “விஜயன் இலங்கைக்கு வருவதற்;கு அதிக காலத்திற்கு முன்னரே இலங்கையிற் கருத்திற் கொள்ளத்தக்கனவும் முழு இந்தியாவின் வழிபாட்டிற்குரியனவுமாகிய ஐந்து சிவாலயங்கள் இருந்தன. வடக்கில் நகுலேஸ்வரமும், கிழக்கில் கோணேஸ்வரமும், மேற்கில் கேதீஸ்வரமும,; முனிஸ்வரமும், தெற்கில் தொண்டேஸ்வரமும் அவையாகும். இவை வெறும் புகழ்ச்சி அல்ல” (Pநைசளை.p.1917:17-18).
    யாழ்ப்பாணத்து வரலாற்று இலக்கியங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாண வைபவமாலையிலும் இலங்கையின் பழமைவாய்ந்த சிவாலயங்களினை விஜயனின் ஐதீகத்துடன் இணைத்து கூறப்பட்டுள்ளமை அவற்றின் பழமையினையும், பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றது.
    பௌத்த மதமும் தமிழரும் இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாட்டு அம்சங்களில் இந்து மதத்திற்க்கு முன்னோடியாக இருந்த சமய நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் வகையிலேயே சுடுமண் சிலைகள், சிற்பங்கள், குறியீடுகள் காணப்பட்டன. எனினும் நிறுவன ரீதியில் பௌத்தம் அரச ஆதரவுடன் வளர்ந்ததால் பெருங்கற்கால பண்பாட்டு வழிவந்த பெரும்பான்மை மக்கள் அம் மதத்தினை ஏற்றுக்கொண்டனர். அது மேலும் வளர்வதற்க்கு அப்பண்பாட்டு வழிவந்த வணிக வளர்சியும், சமூக உருவாக்கமும் துணைபுரிந்ததெனலாம் (ப.புஸ்பரட்ணம்:2011).
    இந்த வகையில் இன்றைய நிலையில் சிங்கள மொழியினைப் பேசுவோர் பௌத்த மதத்தினைப் பின்பற்றுவோராகவும், தமிழ் மொழி பேசுவோர் இந்து மதத்தினைப் பின்பற்றுவோராகவும் பார்க்கப்படுவதைப் போன்று இந் நிலையே வரலாற்றின் ஆரம்பகாலத்திலிருந்து நிலவியது என்று 8 கருதுவது பொருத்தமற்றதாகும். பௌத்த ஓர் இனத்திற்குரிய மதமாக அல்லது ஒரு பொதுவான பண்பாடாக இது பரவிய இடங்களிளெல்லாம் செல்வாக்கு பெற்றிருந்தது. இதனையே கலாநிதி ரொபின் கான்னிங்காம் கூறும் பொழுது, “இலங்கை வரலாற்றின் மொழிசார் அடித்தளமாக அமைவது இந்து ஆரிய மொழி என்று கூறுவோரும் ஆதித் திராவிட மொழி என்று கூறுவோரும் (தெரணியகல:1992:743, இரகுபதி:1987:202) கருத்திற்கொள்ளத் தவறுவது என்னவெனில் மொழி மாற்றங்கள் மக்கள் மாற்றங்கள் இல்லாது நடைபெறலாம் என்பது” இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது யாதெனில், மொழி மாற்றங்கள் மக்கள் மாற்றங்கள் இல்லாது நடைபெறுமானால் காலத்திற்க்கு காலம் ஏற்பட்ட மத மாற்றங்களும், அவற்றின் செல்வாக்குகளும் கூட மக்கள் மாற்றங்கள் இல்லாது இடம் பெற்றிருக்கலாம் என்பதேயாகும்.
    இவ்வாறு இலங்கைக்கு பௌத்தம் பரவிய வரலாற்றை பின்னோக்கி பார்க்கும் பொழுது பௌத்த மதம் குறிப்பிட்ட இனம், மொழி அல்லது குறிப்பிட்ட இடத்திற்குரிய மதமாக வளரவில்லை. அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இலங்கையின் பல பாகங்களிலும் பரவியதனை தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்களிடையே இம் மதமும் மதம் சார்ந்த பண்பாடுகளும் உள்வாங்கப்பட்டிருந்தது. இதனாலேயே வட இலங்கையில் முக்கிய பெருங்கற்கால மையங்களிலும் இம் மதம் சிறப்பு பெற்றிருந்தது. இதனை கந்தரோடை, வல்லிபுரம், மற்றும் தீவுப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பௌத்த மத எச்சங்கள் எடுத்து காட்டுகின்றன. எனினும் இவ் பௌத்த மத எச்சங்கள் பற்றி கருத்து தெரிவிக்கும் வரலாற்றாசிரியர்களில் ஒரு பிரிவினர் இவ் தொல்லியல் எச்சங்களினை ஒரு மதத்தின் பண்பாட்டுச் சின்னமாக பார்க்காது ஒரு இனத்திற்;கு உரியதாக (சிங்கள) அவ்வினம் வாழ்ந்ததற்கான அடையாளமாகவே எடுத்துக்காட்டுகின்றனர். எனினும் இன்றைய நிலையில் காணப்படுவது போன்று வரலாற்றுக்கால ஆரம்பத்திலும் காணப்பட்டிருக்கும் எனக் கூறுவது பொருத்தமற்றதாகும். இதனால் பௌத்தம் ஓர் இனத்திற்குரிய மதமாக அல்லது ஆரம்ப காலங்களில் தமிழர்களுடைய மூதாதையினரின் ஒரு பிரிவினரும் பௌத்த மதத்தினை பின்பற்றியதற்கான ஆதாரங்களை பரவலாக காணமுடிகின்றது.
    இன்றைய நிலையில் தமிழர்களும் அவர்களுடைய மதமான இந்து மதமும் சிறப்பு பெற்று விளங்கும் வடக்கு, கிழக்கு இலங்கையில் புராதன காலத்தில் பௌத்த மதம் நிலைபெற்ற செய்தியினை மகாவம்ச, சூளவம்ச குறிப்புகளும் உறுதிப்படுத்துகின்றது. கௌதம புத்தர் தனது மதத்தைப் பரப்ப மூன்று தடவைகள் இலங்கைக்கு வந்திருந்தார் என்பதனை மகாவம்ச நூலின் முதற்பகுதி விரிவாக எடுத்துரைக்கின்றது. கி.மு 6ஆம் நூற்றாண்டில் புத்தர் இலங்கை வந்த போது நாகதீபத்தில் (வட இலங்கையில்) இரு நாக மன்னர்களிடையே ஏற்பட்ட சிம்மாசனப் போராட்டத்தை தீர்த்து வைத்ததாக கூறுகின்றது (மகாவம்சம் 8:54). தேவநம்பிய தீஸன் தனது ஆட்சிக்காலத்தில் ஜம்புகோளபட்டினத்தில் கௌதம புத்தரின் காலடி பட்ட இடங்களை கேட்டறிந்து கொண்டு அந்த இடங்களில் திஸமாரகம விகாரை, பஞ்சினரமா விகாரை கட்டியதாக மகாவம்சம் மேலும் கூறுகின்றது. ஜம்புகோளத்தில் இருந்த விகாரை பின்னர் கனிட்ட தீஸன் (கி.பி 167 – 186), வொகரிக தீஸன் (209 – 211),
    9
    முதலாம் விஜயபாகு போன்ற மன்னர்களது ஆட்சியில் புதுப்பித்துக் கட்டப்பட்ட செய்திகளும் காணப்படுகின்றன. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் சங்கமித்தையால் கொண்டு வரப்பட்ட புனித சின்னமான வெள்ளரசக்கிளை யாழ்ப்பாணத்தில் உள்ள ஜம்புகோளப் பட்டினத்தில் வந்திறங்கி அங்கிருந்தே அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது (மகாவம்சம் 11: 23, 28. 19:23-26. 60: 20- 23) சூழவம்சத்தில் வெளகரிகதிஸ்ஸ மன்னன் யாழ்ப்பாணத்தில் உள்ள திஸ்ஸ விகாரையைச் சுற்றி மதில் அமைந்த செய்தியைக் குறிப்பிடுகின்றது (சூளவம்சம் 42:62). 4ஆம் அக்போதி மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் பொத்தசாத்தன், மகாசாத்தன் ஆகிய இருவர் மன்னனின் முக்கிய அமைச்சர்களாக இருந்து பௌத்த மத திருப்பணிகளை செய்துள்ளனர் என சூளவம்சத்தில் குறிப்பிடுகின்றது (சூளவம்சம், 84:7 – 16). 1ஆம் உதயன் (கி.பி 792 – 797) மனைவி ஜனசேனபத எனும் விகாரையைக் கட்டித் தமிழ் பிக்குமாருக்கு வழங்கினாள் என சூழவம்சம் குறிப்பிடுகின்றது (சூழவம்சம் 46-21-24). தமிழ் பௌத்த காப்பியமான மணிமேகலையில், அறவணவடிகள், மணிமேகலை முதலானோர் இலங்கையில் நாகநாடு, மணிபல்லவம், இரத்தினதீவம் முதலான இடங்களுக்குச் சென்று அங்குள்ள பௌத்த பாத பீடிகையைத் தரிசித்ததாகக் கூறுகின்றது. அவற்றுள் நாகநாடு, மணிபல்லவம் ஆகிய இடங்கள் யாழ்ப்பாணத்தையும், இரத்தினதீவம் சிவனொளிபாத மலையையும் குறிப்பதாகும்(திருநாவுக்கரசு, 1978:62).
    இலங்கையில் பௌத்தமதம் அறிமுகமாவதற்கு வட இந்திய தொடர்பே ஒரு காரணமாக இருந்தாலும் அதன் வளர்ச்சிக்கு தமிழக, ஆந்திர தொடர்புகள் முக்கிய காரணமாக இருந்துள்ளது. பேராசிரியர் பரணவிதான இலங்கையின் தொடக்க காலப் பௌத்த கலைப்படைப்புக்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றார். கிறிஸ்துவிற்க்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே தமிழகத்தில் பௌத்த, சமண மதம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கிறிஸ்துவிற்கு பின் மூன்றாம் நூற்றாண்டின் பின்னரே காவிரிப்பூம்பட்டினம், காஞ்சி, மதுரை, உறையூர் போன்ற மையங்களில் இச் சமயங்கள் செல்வாக்கு செலுத்தியிருந்தது. இக்காலப் பகுதியில் தமிழ்நாட்டு அறிஞர்கள் பௌத்த மத வளர்ச்சிக்கும், பாளி இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியிருந்ததுடன், புகழ்பெற்ற தமிழ் பௌத்த காப்பியங்களான மணிமேகலை, குண்டலகேசியும் தோற்றம் பெற்றுக் கொண்டன. பௌத்த கட்டிட சிற்பக் கலைகளும் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்து கொண்டது. இக்காலப்பகுதியில் பௌத்த உலகின் முப்பெரும் அறிஞர்களாக கருதப்படும் புத்தகோசர், புத்ததத்தர், மற்றும் தர்மபாலர் ஆகியோர் தமிழ்நாட்டுப் பௌத்த பள்ளிகளில் கடமையாற்றியதுடன் பல பாளி நூல்களையும், உரை நூல்களையும் எழுதினார்கள். இவர்களில் புத்தகோசர் பற்றி பெரிதும் அறிய முடியவில்லையாயினும் புத்ததத்தர் மற்றும் தர்மபாலர் ஆகிய இருவரும் தமிழ்ப் பௌத்த பிக்குமாராவர்.
    சோழ நாட்டில் பிறந்து, கி.பி 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான தமிழ் பௌத்த பிக்குவான புத்ததத்தர் காவிரிப்பூம்பட்டினம், காஞ்சி, உறையூர், அநுராதபுரம் போன்ற இடங்களில் இருந்த பெரும் பௌத்த பள்ளிகளில் பல பதவிகளை வகித்தவராவர். இவர் அநுராதபுரத்திற்கு சென்று பல நூல்களை பாளி மொழியில் மொழிபெயர்த்தெழுதியும், புதிதாக உரை நூல்களை பாளிமொழியில்
    10
    எழுதியும் புகழ்பெற்றார். புத்தகோசர் அநுராதபுரத்தில் வாழ்ந்த காலத்தில் அங்கிருந்த மக்கள் பௌத்த போதனைகளைத் தமிழில் கேட்டு விளங்கிக் கொள்ளகூடிய நிலையில் இருந்தனர்.
    இவ் தமிழ் தேரவாத பௌத்த பிக்குகள் பெற்ற செல்வாக்கு காரணமாக தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தேரவாத பௌத்த மதம் பெற்ற செல்வாக்கினை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் தேரவாத பிக்குகளைப் போன்று சிறப்பு பெற்ற மகாயானப் பௌத்த பிக்குகளும் தமிழ் நாட்டில் தோற்றம் பெற்றனர். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற மகாயான பௌத்த பிக்குவாக காஞ்சியில் பிறந்த திண்ணாகர் (திக்நாக) குறிப்பிடத்தக்கவராவர். மேலும் மகாசேனன் காலத்தில் இலங்கையில் மகாயான பௌத்தம் நிலைபெற்றுக் கொள்வதற்கு சோழ நாட்டைச் சேர்ந்த சங்கமித்திரரே காரணம் என பாளிநூல்கள் குறிப்பிடுகின்றது. இலங்கையில் மகாசேனன் காலத்தில் இக்காலப் பகுதியில் ஏற்பட்ட வணிக வளர்ச்சியின் காரணமாக இந்திய துறைமுகங்களிலிருந்து வணிகர்களுடன் மதகுருமார்களும் தென்கிழக்காசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பௌத்தத்தினை பரப்பினர. தமிழ்நாட்டிலிருந்து சென்ற பௌத்த குருமார்களும் ஏனைய பௌத்த குருமாரைப் போன்று பாளி, சமஸ்கிருத பெயர்களை கொண்டிருந்தமையால் அவர்கள் பெயர்கள் பல ஆவணங்களில் பேணப்பட்டிருந்தாலும் அவர்களைத் தமிழ்நாட்டார் என அடையாளம் காண முடியாதுள்ளது. குறிப்பாக சீனாவிற்;கு சென்று பௌத்த மதத்தினை பரப்பிய தமிழ்ப் பௌத்த துறவியான போதிதர்மர் (காஞ்சி பௌத்த பள்ளியைச் சேர்ந்தவர்) குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவராவர். இத்தகையதோர் பின்னனியில் தமிழ் பௌத்தர்கள் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சென்று வந்திருந்ததுடன் பாளி இலக்கிய வளர்ச்சிக்கும் பணியாற்றியுள்ளனர்.
    தமிழ்நாட்டு பிக்குகள் இலங்கைக்கு வந்ததது போல இலங்கையிலிருந்தும் பிக்குகள் தமிழ்நாட்டிற்கு சென்றடைந்தமைக்கும் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மகாவம்ச கூற்றின் படி இலங்கையில் மேகவர்ணன் (கோதாபாயன்) தனது ஆட்சிக் காலத்தில் (கி.பி 254 – 266) தேரவாத மதக்கொள்கைக்கு மாறான அபயகிரி விகாரையிலிருந்து 60 மகாஜானப்பிக்குகளைக் கைது செய்து மறுகரைக்கு (தமிழ் நாட்டிற்க்கு) அனுப்பினான் எனக் கூறுகின்றது (மகாவம்சம்: XXஏடு:111-112). வட்டகாமினி காலத்தில் (கி.மு 103) ஏற்பட்ட கடும்பஞ்சம் காரணமாக சங்கத்திற்கான ஆதரவு குறைந்த போது அவர்கள் தமிழ்நாடு சென்று அங்கிருந்த பௌத்த விகாரையில் தங்கியிருந்துவிட்டு பின்னர் திரும்பியதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. அநுராதபுர இராசதானி காலத்தில் கி.மு 2 ஆம் நூற்றாண்டில் 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி செய்த எல்லாளன் (கி.மு 145 – 101) என்ற தமிழ் மன்னனும், கி.மு 3ஆம் நூற்றாண்டில் 22 ஆண்டுகள் (கி.மு 177-155) ஆட்சி செய்த சேனன், குத்திகன் ஆகிய இரு தமிழ் மன்னர்களும் தமது பழைய மத நம்பிக்கையை கைவிடாத போதிலும் பௌத்த மதத்திற்;கு ஆதரவாக ஆட்சி செய்தார்கள் என மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம், XXI:34). கி.மு முதலாம் நூற்றாண்டில் அநுராதபுரத்தை வெற்றி கொண்ட 7 தமிழர்களில் 5 பேர் அநுராதபுரத்தில் ஆட்சி செய்த போது அவர்களில் ஒருவன் பிச்சா பாத்திரத்துடன் தமிழகம் சென்றதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது (Mahavamsa XXXiiiii;55). இதே காலப்பகுதியில் ஆட்சி புரிந்த நீலியன், வடுகன் போன்ற தமிழ் மன்னர்கள் அனுலா என்ற பௌத்த அரசியை பட்டத்து
    11
    அரசியாகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர் (Mahavamsa:19 -26). மேலும் தேவநம்பியதிஸ்ஸன் ஆட்சிக்காலத்தின் போது அமைச்சராக இருந்த அரிட்டன் என்பவன் பௌத்த தூதுக்குழுவிற்;கு தலைமை தாங்கி பாடலிபுரம் சென்று பிற்காலத்தில் பௌத்த பிக்குவாக மாறி பாண்டிநாட்டிற்கு சென்றதாக கூறப்படுகின்றது. எனவே பாண்டிநாட்டில் அரிட்டப்பட்டியில் உள்ள தமிழ்ப்பிராமி எழுத்தில் அமைந்த கல்வெட்டுகளுடன் கூடிய குகைகள் அரிட்டனின் ஞாபகமாக அமைக்கப்பட்டிருக்கலாம் என தமிழக வரலாற்று அறிஞரான மயிலை வேங்கடசாமி கருதுவதும் இங்கு குறிப்பிடத்தகக்கது.
    இவ்வாதாரங்கள் தமிழ்நாட்டில் பௌத்த மதம் பெற்ற வளர்ச்சியினையும், தமிழகத்திற்கும் இலங்கைக்கு மிடையிலான பௌத்த மத தொடர்புகளையும் சுட்டிகாட்டுவதுடன் தமிழகத்தைப்போல் சமகாலத்தில் இலங்கையிலும் தமிழர்களில் கணிசமானவர்கள் பௌத்தர்களாக, பௌத்த மதத்தினை ஆதாரித்தவர்களாக இருந்திருக்கலாம் என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. இக் கருத்தினை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையில் கிடைக்கப்பெற்ற இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. இப் பிராமிச் சாசனங்கள் பெரும்பாலும் பௌத்த மதத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட தானம் பற்றிய செய்திகளையே விபரிக்கின்றன. இந்த வகையில் இக் கல்வெட்டுக்களில் வரும் ஆய், வேள், குடும்மிகன், பரத, பருமக, பருமகன், பருமகள், சுமணன், சுமன், அபயன், மல்லன், பூதன், பரத, மாற, சோட, நாக போன்ற பெயர்களும் தமிழர்களும் பௌத்த மதத்தை பின்பற்றியதற்;கு சான்றாகும். இப் பிராமிச் சாசனங்களில் வரும் பிராகிருத மொழிக்குரிய பல தனிநபர் பெயர்களும், பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப்பெயர்களும் தமிழர்களுக்குரிய பெயர்களாக இருந்துள்ளன என்பதற்கு சமகாலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்களில் வரும் உதிரன், கபதிகன், மகாசாத்தன், சபிஜன் போன்ற பெயர்கள் உறுதிப்படுத்துகின்றன (ஆயாயனநஎயn. 2000.இ Pரளரியசயவயெஅ.2001.2002). பேராசிரியர் கிருஸ்ணராஜா கந்தரோடையில் பல பிராமி எழுத்துப்பொறித்த மட்பாண்ட ஓடுகளை கண்டுபிடித்திருந்தார். இதில் “குணி” என பொறிக்கப்பட்ட மட்பாண்ட சாசனம் முக்கியம் பெற்றதாகும். குணி என்பது தமிழில் பிக்குணி என்ற சொற்றொடரின் முடிவாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும் இலங்கையில் வவுனியாவில் பெரியபுளியங்குளம், அநுராதபுரம், அம்பாறையில் குடுவில், திருகோணமலையில் சேருவில் போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற பிராமிக்கல்வெட்டுகள் தமிழ் வணிகர்களால் பௌத்த துறவிகளுக்கு, பௌத்த சங்கத்திற்கு வழங்கிய குகைகள், கற்படுக்கைகள் என்பன பற்றிக் கூறுகின்றன (Paranavithana 1970).
    பண்டைய அநுராதபுர காலத்தில் தமிழர்கள் பௌத்தர்களாகவும், இந்துக்களாகவும் வாழ்ந்துள்ளனர். இவர்களால் சமய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றிய செய்திகள் சிங்களத்திலும், தமிழிலும் உள்ளன. அநுராதபுர, அறகம கல்வெட்டு செய்திகளின் படி கி.பி 5ஆம் நூற்றாண்டில் பண்டு தலைமையில் அநுராதபுரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த தமிழ்மன்னர்களான பரிந்த, குட்டபரிந்த ஆகியோர் பௌத்த மதத்திற்கு ஆதாரவாக ஆட்சி புரிந்ததை அறிய முடிகின்றது
    12
    (Epigraph Zeylnia IV 111-115). 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த குட்டபரிந்தன் பௌத்த மதத்திற்;கு ஆற்றிய தொண்டின் காரணமாக பரிந்ததேவன், புத்ததாசன் என்ற நாமங்களால் அநுராதபுரக் கல்வெட்டு புகழ்ந்துரைக்கின்றது. பரிந்தனின் அறகமக் கல்வெட்டு பௌத்த மதத்திற்கு ஆற்றிய தொண்டினை முக்கியப்படுத்துகின்றது. இதனைத் தொடர்ந்து எட்டாம், ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் தமிழ்ப்பௌத்தர்களால் கொடுக்கப்பட்ட தானங்கள் தமிழ் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்டதனை காணலாம்.இலங்கையில் கிடைத்த தமிழ்ச் கல்வெட்டுக்களில் மிகப் பழமை வாய்ந்தவையான பங்குளிய விகாரைத் தமிழ்க் கிரந்த கல்வெட்டுக்கள், அபயகிரி விகாரை வளாகத்துள் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு போன்றன பௌத்த மத செய்திகளினையே குறிப்பிடும் அதே வேளை தமிழ் மொழியில் அமைந்திருப்பது பௌத்த மதத்தின் மேல் தமிழர்களுக்கிருந்த செல்வாக்கினையே புலப்படுத்துகின்றது. அபயகிரி விகாரைக் கல்வெட்டு கி.பி 8ஆம் நூற்றாண்டுக்குரியதாய் விளங்குவதோடு அபயகிரி விகாரையுடன் தமிழர்களுக்கிருந்த தொடர்பை பறை சாற்றுகின்றதெனலாம் (பத்மநாதன்,2006:39-40). அநுராதபுரத்தில் தமிழ், கிரந்த மொழிகளில் பொறிக்கப்பட்ட கி.பி ஒன்பதாம் நூற்றாண்டிற்குரியதான நான்கு நாட்டார் கல்வெட்டும் தமிழ்ப் பௌத்தத்திற்குரிய முக்கிய சான்றாகும். இக் கல்வெட்டு நான்கு நாட்டார் என்ற தமிழ் வணிக குழுவினரால் மாக்கோதைப்பள்ளி என்ற பௌத்தப்பள்ளிக்கு வழங்கிய கொடைகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. அத்துடன் தர்மபாலர் என்ற பௌத்ததுறவியை போற்றும் செய்யுளும் இக்கல்வெட்டில் அமைக்கப்பட்டுள்ளது. (தர்மபாலர் என்ற பெயரைப்பெற்ற தமிழ்ப் பௌத்த துறவிகள் பற்றி பாளி இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது).
    இலங்கையில் சேழராட்சி நிலவிய காலகட்டத்தில் இலங்கை பௌத்த சங்கத்திற்கும், தமிழக சோழ நாட்டு பௌத்த சங்கத்திற்;கும் இடையில் நெருங்கிய நட்புறவு பேணப்பட்டது. சோழ நாட்டுப் பௌத்த துறவியான தீபங்கரர் இலங்கையில் சிங்களப் பௌத்த துறவியான ஆனந்த வரைதன என்பவரிடம் கல்வி கற்றார். இவர் சோழங்க தீபங்கர் என இலங்கையில் அழைக்கப்பட்டார். இவரைப் போல சோழ நாட்டைச் சேர்ந்த காசியப்பர், புத்தமித்தரர், ஆனந்தர், அநுரத்தர் முதலான தமிழ்ப் பௌத்த துறவிகள் இலங்கையில் பணிபுரிந்ததற்;கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. மேலும் சிங்கள பௌத்த சங்கத்திற்;கு நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் அவர்கள் சோழநாட்டுப் பௌத்த சங்கத்தினரின் உதவியை நாடினர்;. அந்த வகையில் 2ஆம் பராக்கிரமபாகு காலத்தில் சீர்கெட்டிருந்த பௌத்த சங்கத்தினை சீர்திருத்தி அதனை மீளமைக்கும் நோக்கில் சோழ நாட்டிற்;கு பல கொடைகளை அனுப்பி ஒழுக்கம் நிறைந்த பௌத்த திரிபீடகத்தை கற்றுத் தெளிந்த சோழ நாட்டு தமிழ்ப் பௌத்த துறவிகளை இலங்கைக்கு வரவழைத்ததாக சூளவம்ச செய்தி குறிப்பிடுகின்றது (இந்திரபாலா,2006:296). தமிழ் பௌத்தத்துடன் தொடர்புடைய வகையிலான பல தமிழ் கல்வெட்டுக்கள் திருகோணமலையில் கிடைக்கப் பெற்றிருப்பதானது இலங்கையில் சோழர் ஆட்சிக் காலம் வரையிலாவது தமிழர்களில் ஒரு பிரிவினர் பௌத்தர்களாகவும் பௌத்த மதத்தினை ஆதாரித்தவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதனை அறிய உதவும் முக்கிய சான்றாதாரமாக அமைகின்றது.
    13
    புராதன, இடைக்கால இலங்கை வரலாற்றில் இங்கிருந்த தமிழ் மக்களும் பௌத்த மதத்தினை பின்பற்றியமைக்கான ஆதாரங்கள் காணப்படும் இடங்களை கி.பி 14 – 15 ஆம் நூற்றாண்டளவில் எழுந்ததாகக் கூறப்படும் நம்பொத்த என்ற சிங்கள இலக்கியத்தினூடாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது. அவ்விலக்கியத்தில் “தெமிள பட்டினத்தில் (தமிழ்ப்பட்டினம்) பௌத்த யாத்திரிகர்கள் சென்றுவரக்கூடிய இடங்களாக தெல்லிப்பளை, மல்லாகம், நாகர்கோவில், வீகன்காமம், ஊர்காவற்துறை, நயினாதீவு, காரைதீவு, புங்குடுதீவு முதலான இடங்கள் கூறப்பட்டுள்ளது. இற்றை வரை யாழ் குடாநாட்டில் பௌத்த மத தொல்லியல் எச்சங்கள் காணப்படும் இடங்களாகவும் மேற்கூறிய இடங்கள் காணப்படுகின்றது.
    ஆதிகால இடைக்கால இலங்கை வரலாற்றில் தமிழர்களில் ஒரு பிரிவினரும் பௌத்தர்களாகவும், அம் மதத்தினை ஆதாரித்தவர்களாகவும் இருந்துள்ளதனை திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகள் மற்றும் கந்தரோடை, சுன்னாகம், மகியப்பிட்டி, நவற்கிரி, வல்லிபுரம், நயினாதீவு, நெடுந்தீவு போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற புத்தர், போதிசத்துவர்சிலைகள் மற்றும் ஏனைய பௌத்த மத வழிபாட்டு எச்சங்களும் உறுதிப்படுத்துகின்றன. வட இலங்கையில் அமைந்துள்ள கந்தரோடை தமிழ்ப் பௌத்தம் வரலாற்றினையும் அம்மதம் பரவிக்கொண்ட பின்னனியினையும் விளங்கிக்கொள்ள உதவும் முக்கிய தொல்லியல் மையமாகும்.
    யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு காலப் பகுதிக்குரிய தொல்லியல் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் கந்தரோடைக்கு தனிச்சிறப்புண்டு. இங்கு பௌத்த மதம் பரவுவதற்க்கு முன்னரே கி.மு 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட வகையிலான பெருங்கற்கால பண்பாடு சிறப்பு பெற்றிருந்ததனை பல்வேறு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன. அண்மைக்கால ஆய்வுகளில் இலங்கையில் கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஜரோப்பியர் காலம் வரை பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான மட்பாண்டங்கள் கிடைக்கப்பெற்ற மையமாகவும் கந்தரோடை காணப்படுகின்றது. இவ்வம்சம் கந்தரோடையை வட இலங்கையின் முதன்மை மையமாக காட்டுகின்றது. வடஇலங்கையில் குறிப்பாக குடாநாட்டின் பூர்வீக குடியேற்றம் பற்றி ஆய்வு செய்த பொ.ரகுபதி 40 இடங்களில் பண்டைய குடியிருப்புக்கள் இருந்ததாக குறிப்பிட்டு அதில் தலைமைக் குடியிருப்பாக கந்தரோடையைக் குறிப்பிடுகின்றார் (சுயபரியவால. Pஇ 1987). கந்தரோடையில் பௌத்த சமயச் சின்னங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் அடங்கிய படைகளிற்க்கு மேல்
    14
    உள்ளதோடு, இங்குள்ள பௌத்த சின்னங்கள் தனிப்பண்பு கொண்டவை. அதாவது அனுராதபுரம், மிகிந்தலை, மகாகமை முதலான இடங்களில் கண்டுபிடித்த பௌத்த சின்னங்களைக் காட்டிலும் வேறுபட்டவை. இங்கு அகழ்வாய்விலும், மேலாய்விலும் சில பௌத்த சிற்பங்கள் அமராவதிக் கலைமரபை புலப்படுத்தும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் சிறிய அளவிலான தூபிகள் பல நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை போன்ற அண்ட வடிவமான கட்டுமானங்கள் ஆந்திராவின் அமராவதி, நாகர்ச்சுனகொண்டா போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இச்சின்னங்கள் ஒரு விதமான ஈமச்சின்னங்களேயாகும். இத்தூபிகளில் இறந்த பௌத்த பிக்குமாரின் சாம்பல் முருகைக் கற்களிலமைந்த பேழைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது (சிற்றம்பலம்: 1993:15). இந்த வகையில் கந்தரோடையில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் எச்சங்களினை நோக்கும் பொழுது அவை பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த பௌத்தத்திற்க்கு சிறந்த உதாரணமாக அமைகின்றது. மேலும் இங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் மூதாதையினரின் ஒரு பிரிவினர் பௌத்த மதம் பரவிய காலத்தில் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதனை இவ் தொல்லியல் மையம் உறுதிப்படுத்துகின்றது.
    தமிழ்ப் பௌத்த மையங்களில் வல்லிபுரமும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய சொல்லக் கூடிய தொல்லியல் மையமாகும். இங்கிருந்து பெறப்பட்ட புத்தரது சிற்பமும், பொற்தகட்டு சாசனமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். வல்லிபுரம் விஷ்ணு கோவிலுக்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்ட நிற்கும் நிலையிலான புத்தர் சிலை ஆந்திரகலைமரபிலானது. தற்போது இச்சிலை பாங்கொக் நகரில் உள்ளது. அதாவது வல்லிபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் வைக்கப்பட்ட இச்சிலை பிரித்தானியத் தேசாதிபதி ஹென்றி மக்கலத்தினால் சீயம் நாட்டு அரசனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டிருந்தது (மாலினி டயஸ்,1992:12) மேலும் தற்போது அலரிமாளிகையில் வைக்கப்பட்டுள்ள வல்லிபுர பொற்தகடு பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதனை அவதானிக்கலாம். எனினும் இங்கு கிடைக்கப் பெற்றிருக்கும் புத்தரது உருவச் சிலையானது ஆந்திர கலைமரபிலானது என்பதில் ஒத்த கருத்து நிலையே காணப்படுவதால் இச் சாசனத்திலும் ஆந்திர செல்வாக்கு காணப்பட்டிருக்கும் என்பது மறுக்க முடியதாகும். மேலும் வல்லிபுர சாசனத்தினூடாக பொதுவாக நாகதீபத்தில் அமைக்கப்பட்ட விகாரை பற்றிய செய்தியினை அறிந்து கொள்ள முடிகின்றது. இதனூடாக யாழ்குடாநாட்டில் தமிழ்ப்பௌத்தம் பெற்ற செல்வாக்கினை அறிந்து கொள்ள முடிகின்றது. அத்துடன் இலங்கையில் தமிழர்கள் பௌத்தத்தினை பின்பற்றியமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்றாலும் இன்றுவரை அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள தொல்லியல் தலங்களில் கந்தரோடையை அடுத்து நயினாதீவு முக்கியத்துவம் பெறுகின்றது.
    15
    இலக்கிய, தொல்லியல் சான்றுகளினை ஒன்றுசேர நோக்கும்பொழுது இலங்கையில் சோழாராட்சிக்காலம் வரை தமிழ்பௌத்தம் நிலைபெற்றிருந்ததனை தெளிவாக அறிய முடிகின்றது. இதன் பின்னரான சான்றாதாரங்களினை நோக்கும் பொழுது பௌத்தம் படிப்படியாக தமிழர் வாழ்வியலிருந்து அருகி வருவதனைக் காணமுடிகின்றது. இவ்வாறானதொரு வரலாற்றுச் சூழ்நிலைக்கு வரலாற்று, தொல்லியலார்கள் பின்வரும் காரணங்களை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்கள்.
  6. மொழியடிப்படையில் சிங்கள மொழி பேசிய மக்களை பௌத்த மதத்துடன் தொடர்புபடுத்தியதைப் போல் தமிழ் மொழி பேசிய மக்களை பௌத்தத்துடன் தொடர்புபடுத்த முடியாமை.
    அதாவது பல இன, பல மொழி பேசிய மக்களும் பின்பற்றிய பௌத்த மதத்திற்குரிய பாளி, பிராகிருத மொழிகளுக்குரிய பெருமளவு சொற்களை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் சிங்கள மொழி தோற்றம் பெற்றது. இம்மொழி காலப் போக்கில் பௌத்த மதத்துடன் இரண்டறக் கலந்தது. இதுவரை பௌத்த மதத்தில் பாளி, பிராகிருத மொழிகள் பெற்ற செல்வாக்கை இம்மொழியும் பெற்றது. இந்நிலையில் தமிழை பேச்சு மொழியாகவும், பாளி, பிராகிருத மொழிகளை பௌத்தத்திற்குரிய மொழியாகவும் கொண்டிருந்த தமிழர்களில் ஒரு பிரிவினர் மொழியை விட பௌத்த மதத்தை அதிகம் நேசித்தததனால் அவர்களும் காலப்போக்கில் சிங்கள மொழி பேசும் மக்களாக மாறியிருக்க வேண்டும். (புஸ்பரட்ணம்:2002).
  7. அநுராதபுரம் போன்ற பகுதிகளில் பௌத்த மதம் பௌத்த சங்கத்தினுடைய செல்வாக்கினைப்பெற்று ஒரு சொத்துடை நிறுவனமாக வளர்ந்தது போன்று தமிழ் மக்களை பெரிதும் கொண்ட தற்போதைய பிராந்தியங்களில் பௌத்தம் நிறுவன ரீதியாக வளராமை.
  8. தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் அதன் பின்னனியில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் தாக்கமும், வணிக கணங்களின் எழுச்சியும், இலங்கை மீதான படையெடுப்புகளும் தமிழர் பிராந்தியங்களிலிருந்த பௌத்த மதத்தினை பலவீனமடையச் செய்தது.
    இவ்வாறாக இந்து மதத்திற்;கு முன்னோடியாக அமைந்த வரலாற்றுக்கு முற்பட்டகால மத நம்பிக்கையுடன் இணைந்து தமிழர்களில் ஒருபிரிவினர் இந்துக்களாக மாறினர். இதனால் இந்து சமயம் அதன் வரலாற்றுக்கால ஆரம்ப வளர்ச்சி நிலையிலும் பார்க்க, கி.பி 6ஆம் நூற்றாண்டினை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் செல்வாக்கினாலும் தமிழர் பிராந்தியங்களில் செல்வாக்கு பெற்ற மதமாக விளங்கியது. மேலும் சோழராட்சிக் காலத்தில்; இந்து, பௌத்த என இருமதங்களும் செல்வாக்குப் பெற்றிருந்தாலும் காலப்போக்கில் மேற்கூறப்பட்ட வரலாற்றுக் காரணிகளின் செல்வாக்கினால் பௌத்தர்களாக காணப்பட்ட தமிழர்களில் ஒரு பிரிவினர் மீண்டும்
    16
    இந்து மதத்திற்;கு மாறிக்கொள்ள மற்றைய பிரிவினர் தீவிர பௌத்தர்களாக மாறியதுடன் மொழியாலும் சிங்களவர்களாக மாறியிருக்கலாம்.
    உசாத்துணை நூல்கள்
  9. மணிமேகலை,1956 (பதிப்பு), நடராசன்,பி.,யாழ்ப்பாணம்.
  10. புஸ்பரட்ணம்.ப, 2002,தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டையகால மதமும் கலையும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை.
  11. குணசிங்கம்.முருகர், 2008, இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு, எம் வி வெளியீடு தென் ஆசியாவில் மையம் – சிட்னி.
  12. சிற்றம்பலம். சி.க., 1993,யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.
  13. பத்மநாதன்.சி, 2006, இலங்கை தமிழ்ச் சாசனங்கள் கி.பி 700 – 1300, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
  14. கிருஸ்ணராசா, செ., 2012, இலங்கை பண்பாட்டுப் பரிணாமத்தின் அடிப்படைகள் கி.மு.300 – கி.பி. 1500 ஆண்டுகள் வரை, கொழும்பு.
  15. இந்திரபாலா, க.,2006, “இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு”, குமரன் புத்தக இல்லம், சென்னை.
  16. PரளரியசயனயெஅஇP.இ2014இ வுழரசளைஅ யனெ ஆழரெஅநவெள ழக யுசஉhயநழடழபiஉயட ர்நசவையபந in ழேசவாநசn ளுசi டுயமெயஇ நுஒpசநளள நேறளியிநசள (ஊநலடழn) (Pஎவ) டுவன. 9. ர்நசெல ஊடநநசந. 2000. யுசஉhயநழடழபiஉயட ர்நசவையபந ஆயயெபநஅநவெ in வாந ஆழனநசn றுழசன இ ருளுயு யனெ ஊயயெனய டில சுழரவடநனபநஇ 270 ஆயனளைழn யுஎநஇ நேற லுழசம Nலு 10016.
  17. சுயபரியவாலஇ p.இ 1987இ “நுயசடல ளுநவவடநஅநவெள in துயககயெ”இ ளுரனெயசளயn புசயிhiஉளஇ வு.யேபநசஇ ஆயனசயள – 600017.
  18. ஆயாயஎயஅளயஇ 1950இ(ந.ன)புநபைநசஇறு.இ வுhந ஊநலடழn புழஎநசnஅநவெ ஐகெழசஅயவழைn னுநியசவஅநவெ ஊழடழஅடிழ.
  19. ஏநடரிpடைடயiஇயு.இ2002இ வுhந ர்ளைவழசல ழக டீரனனாளைஅ யுஅழபெ வுயஅடைள in Pசந – ஊழடழnயைட ஐஐயஅ – Pயசவ – ஐ (ந.ன) Pநவநச ளுஉhயடமஇ ருppளயடய.
    17

பௌத்தமும் தமிழும்

மயிலை, சீனி. வேங்கடசாமி

ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மதம் மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது. இப்போதைய தமிழர், ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை முற்றும் மறந்துவிட்டனர்; அது இவர்களுக்குப் பழங்கதையாய், கனவாய் மறைந்துவிட்டது.

எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்த மதம், தமிழ் மொழியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டுமன்றோ? பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், அல்லது உதவிகள் யாவை? பௌத்தர் தமிழ் மொழியில் இயற்றிய நூல்கள் எவை? அவற்றின் வரலாறு என்ன? இவற்றை அறியக் கருதி யாம் செய்த ஆராய்ச்சியின் பயனே இந்நூலாகும். பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினை மட்டும் ஆராய்வதே எமது முதல் நோக்கமாயிருந்தது. பின்னர், இந்த ஆராய்ச்சி, பௌத்தம் தமிழ் நாட்டில் வந்ததும், வளர்ந்ததும், மறைந்ததுமான வரலாறுகளையும் சுருக்கமாக எழுதும்படி செய்துவிட்டது. பௌத்தரால் தமிழருக்குண்டான நன்மையை ஆராய்வதே இந்நூலின் முதல் நோக்கமாகையாலும், இது தமிழ் மொழி வரலாற்றின் ஒரு பகுதியாகையாலும், இந்நூலுக்குப் பௌத்தமும் தமிழும் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

வேறு வேலைகளுக்கிடையே, ஓய்வு நேரத்தில்மட்டும் இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தபடியினாலும், பல இன்னல்களுக்கிடையே இதனை எழுதவேண்டியிருந்த படியினாலும் யாம் கருதிய அளவு இந்நூல் ஆக்கப்படவில்லை. ஆயினும், எமது ஆற்றலுக்கு இயன்ற வரையில் முயன்று, கிடைக்கக்கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பெற்றுள்ளது. தமிழ் நாட்டுப் பௌத்த மத வரலாற்றினைக் கூறுவதும் பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளை ஒருங்காராய்ந்து விளக்குவதுமான நூல், தமிழ் மொழியில், யாம் அறிந்தவரையில், இதுவே முதலாவதாகும். இதுவரையில் மறைந்து கிடந்தனவும் மாய்ந்து போகுந்தருவாயிலிருந்தனவுமான வரலாறுகளும் செய்திகளும் இவ்வாராய்ச்சியால் உயிர்ப்பிக்கப்பட்டு வெளிப் படுத்தப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியைத் தொடங்கிய பின்னர், பாளி என்னும் மாகதி மொழியில் உள்ள பௌத்த நூல்களை நேரே படித்தறிந்தாலன்றித் தமிழ் நாட்டுப் பௌத்த மத வரலாற்றின் ஆராய்ச்சி முற்றுப்பெறாதென்பதை உணர்ந்தோம். ஏனென்றால், பௌத்தரால் போற்றப்படுகின்ற பாளிமொழி நூல்களில் சிலவற்றை இயற்றியவர்களும், பாளிமொழியில் உள்ள நூல்களுக்குச் சிறந்த உரைகளைப் பாளி மொழியில் இயற்றியவர்களும் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த தமிழப் பௌத்தர்களாவர். அன்றியும், தமிழ் நாட்டில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த காலங்களில், பாளிமொழி தமிழ் நாட்டுப் பௌத்தர்களின் தெய்வ பாஷை யாக இருந்தது. இக்காரணங்களினால், தமிழ்நாட்டுப் பௌத்தமத ஆராய்ச்சிக்குப் பாளி மொழியறிவு பெரிதும் வேண்டற்பாலது. பாளிமொழியறியாத குறை எமக்குண்டு. ஆயினும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பாளிமொழி நூல்களினால் இக்குறை ஒருவாறு நீக்கப்பட்டது. சென்னைப் பிரம்பூரில் உள்ள மகாபோதி ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சத்தர்மாசாரிய சோமாநந்த ஸ்தவிரர் அவர்கள், பாளிமொழி நூல்களில் சில பகுதிகளை மொழி பெயர்த்துச் சொன்னார்கள். இந்த உதவிக்காக எமது நன்றி அவருக்குரியதாகும். ஆயினும், நேர்முகமாகப் பாளி மொழியை அறிந்திருக்கவேண்டுவது தமிழ் நாட்டுப் பௌத்தமத ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

ஆராய்ச்சி செய்வோர் உவத்தல் வெறுத்தல் இன்றி, சான்றுகள் காட்டும் ஆராய்ச்சி முடிவுகளை உள்ளது உள்ளவாறு கூறுதல்வேண்டும்; தமது கொள்கைக்கு முரண்பட்டதாக இருப்பினும், உண்மையையே நடு நின்று கூறுதல் வேண்டும், தமது கொள்கைக்கு முரண்பட்டதாகத் தோன்றுவதாலோ, அல்லது உண்மையைக் கூறினால் உலகம் சீறுமென்னும் அச்சத்தாலோ, உண்மை கூறாமல் விடுவோர் தமக்கும் நாட்டுக்கும் தீங்கு செய்தோராவர். இந்தக் கொள்கையை மனத்திற் கொண்டுதான் யாம் எமது ஆராய்ச்சியிற் கண்ட முடிபுகளை இந்நூலுள் கூறியுள்ளோம். வாசகர் இந்நூலுள் தம் கொள்கைக்கு மாறுபட்ட கருத்தைக் கண்டால், அதன்பொருட்டு எம்மீது சீற்றங்கொள்ளாமல், அது எம் ஆராய்ச்சி காட்டிய முடிபு எனக்கொள்வாராக, எந்த மதத்தையாவது குறைகூறவேண்டுமென்பதோ, அல்லது போற்றவேண்டுமென்பதோ எமது கருத்தன்று. உண்மை யுணரவேண்டும் என்பதொன்றே எம் கருத்து. இந்நூல் எழுதப்பட்டதும் அக்கருத்துடையார்க்கே.

இந்நூலுள் ஒரோவிடங்களில் சில செய்திகள் மீண்டும் கூறப்படும். அவற்றைக் கூறியது கூறல் என்னும் குற்றமாகக் கொள்ளாமல், இது ஆராய்ச்சி நூலாதலின், தௌ¤வு பற்றி அநுவாதமாக அவ்வாறு கூறப்பட்டதெனக் கொள்க. இந்நூலினைத் தமிழுலகம் ஏற்றுக்கொண்டு, இதுபோன்ற தமிழ்த்தொண்டினை மேன்மேலும் இயற்றப் பெரிதும் ஊக்குவிக்கும் எனப் பெரிதும் நம்புகின்றோம்.Preview

About editor 3121 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply