நாடோடி மன்னனின் கதை… எம்ஜிஆர் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை
சாரா |
17 Jan 2020
தமிழக அரசு தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டை பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது. கடுமையான உழைப்பினாலும் மக்கள் செல்வாக்கினாலும் தான் உருவாக்கிய கட்சியை திசைக்கொன்றாக சிதறவிட்டு தனக்கு நுாற்றாண்டைக் கொண்டாடும் அரசின் இந்த கொண்டாட்டத்தை எம்.ஜி.ஆரின் ஆன்மா நிச்சயம் நுாற்றாண்டுக் கொண்டாட்டமாகக் கருதாது; திவசமாகவே கருதும்!
திராவிட இயக்க உணர்வு ஆழமான வேரோடிய மண் என தமிழகம் இன்றளவும் தேசியக்கட்சிகளுக்கு எரிச்சலுட்டிக்கொண்டிருக்கிறது. திராவிடம் என்ற வார்த்தையும் அதன் பொருளும் இன்று தீவிர விவாதத்திற்குட்பட்டுவரும் நிலையில் 70 களுக்குப்பின் அந்த உணர்வின் பாற்பட்ட இரு தலைமுறைகள் தமிழகத்தில் உருவாகக் காரணமான தலைவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அவரது பிறந்தநாள் இன்று. சித்தாந்தங்களின் வழி அல்லாமல் தனி ஒரு மனிதராகத் தனது தனிப்பட்ட சினிமா செல்வாக்கினால் மட்டுமே அதிகாரம் பொருந்திய ஒரு தலைவரையும் அவரது கட்சியையும் எதிர்த்து தனிக்கட்சி துவங்கி 5 ஆண்டுகளில் அதை அதிகாரத்தில் அமரத்திய சாதனையாளர் எம்.ஜி.ஆர்.
அடுத்த 40 ஆண்டுகள் மாநிலக்கட்சியாக, குறிப்பாக திராவிட இயக்கத்தின் நீட்சியாக அதுவே இன்றும் தமிழகத்தின் செல்வாக்குப் பெற்ற கட்சியாக திகழ்வது குறிப்பிடத்தக்க ஒன்று. துரதிர்ஷ்டவசமாக இந்த சாதனை மனிதரின் நாற்றாண்டு கொண்டாட்டம் களைகட்டிவரும் இந்நாளில்தான் அவரால் உருவாக்கப்ப்ட்ட கட்சி மக்கள் செல்வாக்கு இல்லாத சில மனிதர்களிடம் சிக்க சின்னாபின்னமாகிவருகிறது.
மருதுார் கோபால மேனோன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் கேரளத்தை புர்விகமாக கொண்டவர். ஒருசமயம் மாஜிஸ்ரேட்டான அவரது தந்தை மீது வீ்ண்பழி சுமத்தப்பட்டதால் விரக்தியில் அப்பணியிலிருந்து விலகினார். பொருளாதார சிக்கலை சமாளிக்க இலங்கையில் உள்ள கண்டிக்குப் பயணமானார். அங்குதான் எம்.ஜி.ஆர் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் ஒரு மூத்த சகோதரனும் சகோதரியும். எதிர்பார்த்தபடி கண்டியில் தகுதியான வேலை கிடைக்காமல் வறுமைக்கு ஆளான கோபால மேனோன் கொஞசநாளில் உடல்நிலை பாதித்து இறந்தார். மீண்டும் தன் 3 பிள்ளைகளுடன் கேரளா திரும்பினார் அவரது மனைவி சத்தியபாமா. உறவினர்களிடமிருந்து உதவி எதுவும் கிடைக்காததோடு துரோகத்திற்கும் ஆளானதால் தமிழகத்தில் கும்பகோணத்தில் தஞ்சமடைந்தார். எம்.ஜி.ஆருக்கு அப்போது இரண்டரை வயது. இந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி மரணமடைந்தார்.
கும்பகோணத்தில் ஆனையடிப்பள்ளியில் சேர்க்கப்பட்ட சகோதரர்களுக்கு படிப்பில் துளியும் நாட்டமில்லை. பள்ளி நாடகங்களில் மட்டுமே அவர்கள் சோபித்தனர். ஒருசமயம் லவகுசா என்ற நாடகத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்கு பள்ளியில் பெரும் புகழ் கிடைத்த்து. ராம்சந்தருக்கு கைதட்டல் ஓசை மனதை என்னவோ செய்தது. படிப்பை ஒதுக்கிவைத்துவிட்டு நாடக ஆர்வத்தில் திளைத்தார். சகோதரர்களின் நடிப்பார்வத்தைப்பார்த்த நாராயணன் என்ற உறவினர் சகோதரர்கள் இருவரையும் மதுரையில் அப்போது இயங்கிவந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேரத்துவிட்டார்.
வறுமையைக் களைய ஓர் வழி கிடைத்தது. தன் 6 வயதில் சகோதரர் சக்கரபாணியுடன் பாய்ஸ் சேர்ந்து பாலபார்ட் வேடங்களில் நடிக்கத் துவங்கினார் எம்.ஜி.ஆர். அங்கு அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவர் அந்நாளில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான காளி.என் ரத்தினம். எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு குரு என்று இவரையே சொல்லலாம். பாலபார்ட் வேடங்களிலிருந்து புகழடைந்துகொண்டிருந்த ஒரு நேரத்தில் கம்பெனியில் ராஜபார்ட் நடிகர்களான பி.யு.சின்னப்பா எம்.கே ராதா போன்றவர்கள் சினிமா ஆசையில் கம்பெனியில் இருந்து தலைமறைவானார்கள். அழகும் திறமையும் கொண்ட எம்.ஜி.ஆரை அந்த வாய்ப்பு இயல்பாகத் தேடிவந்தது. பல இடங்களில் எம்.ஜி.ஆரின் நாடகங்கள் நடந்தன.
கதர்பக்தி என்ற நாடகத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு முதன்முறையாக அரசியல் ஆர்வம் மனதில் துளிர்விட்டது. தேசப்போராட்டத்தில் நேரிடையாக கலந்துகொள்ள ஆர்வம் உரவானது. காங்கிரஸ் கட்சியில் காலணா உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு கதர்த்துணியும் கையில் காங்கிரஸ் தலைவர்களின் படங்களுடனும் எப்போதும் காட்சியளிக்கத் துவங்கினார். காங்கிரஸில் இருந்தாலும் அவர் காந்தியின் வழியைப் பின்பற்றவில்லை. காங்கிரசில் இருந்துகொண்டே கலகக்குரல் எழுப்பிக்கொண்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மிது அவருக்கு ஈர்ப்பு இருந்த்து. இந்த சமயத்தில் எம்.கே ராதாவின் தகப்பனாரும் கம்பெனியின் வாத்தியாருமான எம்.கந்தசாமி முதலியாரும் சினிமா ஆசையில் கம்பெனியில் இருந்து வெளியேறினார்.
எம்.ஜி.ஆருக்கும் சினிமா ஆசை மனதில் உருவானது. வாத்தியார் கந்தசாமியிடம் சென்று தங்கள் ஆசையை தெரிவித்தனர் சகோதரர்கள். கந்தசாமி முதலியார் அப்போது தான் பணியாற்றிவந்த எஸ்.எஸ் வாசன் கதையான சதி லீலாவதியில் முதன்முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தினைப் பெற்றுத்தந்தார். தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானார் எம்.ஜி.ராம்சந்தர். 1936 ம் ஆண்டு இது வெளியானது. தொடர்ந்து இருசகோதரர்கள். தட்யக்ஞம், மாயா மச்சீந்திரா, சீதா ஜனனம், ஸ்ரீமுருகன் போன்ற படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்தார். அக்காலத்தில் பாடும் திறன்பெற்ற நடிகர்களே கதாநாகயர்களான சினிமாவில் மின்னிக் கொண்டிருந்தனர். இதனால் பாடும் திறமைபெற்றிராத எம்.ஜி.ஆர் சினிமாவில் பெரும்போராட்டங்கள சந்திக்கவேண்டியிருந்தது. தனது கதாநாயக ஆசை நிராசையாகிவிடுமோ என அவர் அஞ்சியபடியே படங்களில் நடித்துவந்தார். 40 களின் பிற்பகுதியில் சினிமாவில் பின்னணி பாடும் முறை அறிமுகமானது.
எம்.ஜி.ஆருக்கு எதிர்காலத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. சுமார் 10 வருட இடைவெளியில் எம்.ஜி.ஆரின் கதாநாயகன் ஆசையை பிரபல யுப்பிட்டர் நிறுவனம் நிறைவேற்றியது. 1947ம் ஆண்டு தான் தயாரித்த ராஜகுமாரி படத்தில் எம்.ஜி.ஆரை முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகம் செய்தது அந்த நிறுவனம். எம்.ஜி.ஆருக்கு சற்றுப் புகழ் தந்தது இந்த படம். படத்தின் கதைவசனம் கருணாநிதி. ஆனால் அவரது பெயர் உதவி வசனகர்த்தா என்றெ பெயர்ப்பட்டியலில் இடமபெற்றது. இந்த சமயத்தில் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜியம் நாடகத்தில் நடிக்கவிருந்த வாய்ப்பு கைநழுவிப்போனது. எம்.ஜி.ஆருக்கு பதிலாக இதில் நடித்த கணேசன் என்ற நாடக நடிகர் சிவாஜி வேடத்தில் திறம்பட நடித்ததால் சிவாஜி கணேசன் என புகழடைந்தார். ஆனாலும் இந்த தொடர்பினால் அண்ணாவின் பணத்தோட்டம் என்ற நாவலைப்படிக்கும்வாய்ப்பு கிடைக்கப்பெற்ற எம்.ஜி.ஆர் தன் தேசிய சிந்தனையை ஆய்வுக்குட்படுத்ததுவங்கினார்.
கதாநாயகனாக நடித்துவிட்டாலும் அதுநிரந்தரமாகவில்லை. அடுத்தும் சில படங்களில் துணை கதாபாத்திரங்கள்தான் தேடிவந்தன. ஆனாலும் தன்னம்பிக்கையை அவர் இழக்கவில்லை. தனக்கான காலம் ஒன்று சினிமாவில் கனிந்துவரும் என தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு இந்த சமயத்தில் திருமணமானது. ஆனால் சில வருடங்களில் மனைவி தங்கமணி மறைந்தார். தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழிலிலும் பெரும் சோதனைகளை சந்தித்தாலும் தொடர்ந்து தன் திறமையை மேம்படுத்திக்கொண்டு வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். இதற்கிடையில் கருணாநிதியின் கதைவசனத்தில் அபிமன்யு மருதநாட்டு இளவரசி என அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. இந்தப் படங்களில் புரட்சிகரமான அடுக்குமொழியிலான கருணாநிதியின் வசனங்கள் பெரிதும் பேசப்பட்டன. மணிப்பிரவாக நடை எனப்படும் பழந்தமிழ் பேசிய தமிழ் சினிமா, அண்ணா, கருணாநிதி இவர்களால் திசைமாறத்துவங்கியது. கருணாதியின் வசனங்களை எம்.ஜி.ஆர் பேசி நடித்தது பரஸ்பரம் இருவரது வளர்ச்சிக்கு உதவியது. 1950 ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான மந்திரிகுமாரி திரைப்படம் எம்.ஜி.ஆரை மக்கள் மத்தியில் பேசவைத்தது. தமிழ்சினிமாவில் தனித்துதெரியத்துவங்கினார் எம்.ஜி.ஆர். கருணாநிதியின் வசனங்கள் எம்.ஜி.ஆரின் உதட்டசைவில் இன்னும் சிறப்பு பெற்றது. பாராட்டுக்கள் குவிந்தன.
மந்திரிகுமாரியில் நாட்டின் தளபதி வீரமோகனாக வரும் கதாநாயகன் எம்.ஜி.ஆர் “வீரர்களெ சிங்கங்கள் உலவும் காட்டில் சிறுநரிகள் திரிவது போலஇன்று நம் நாட்ழைச் சுற்றி அலைகிறது ஒரு சோதாக்கும்பல். எண்ணிக்கையிலே குறைந்த அந்த இதயமற்றக் கூட்டம் வஞ்சகத்தால் வாழ்கிறது. நிரபராதிகளின் சொத்தக்களை சூறையாடி சொந்தமாக்கிக் கொள்கிறது. அனாதைகளின் ரத்தத்தை அளளிக்குடிக்கிறது. நாட்டிலே ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வி கிளம்புகிற அளவுக்கு அவர்களின் அட்டகாசம்!இனி பொறுமையில்லை. அந்தக் கொள்ளைக் கூட்டத்தை விட்டுவைக்கவும் உத்தேசமில்லை. கொதித்துக்கிளம்புங்கள். அவர்கள் சிலர்; நாம் பலர். அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள், நாம் சூரர்கள்! வீரர்களே ஒவ்வொருவரும் பத்துப்பேருடன் கிளம்புங்கள்…அந்த பாவிகளை காடுகளில் தேடுங்கள். மரங்களில் பாரங்கள். குகைகளில் நுழையுங்கள். சந்தேகப்படுபவர்களை கைது செய்யுங்கள். சிக்கினால் காலதாமதம் வேண்டாம்; கைகால்களை வெட்டிஎறியுங்கள். முதுகெலும்பை நொறுக்குங்கள். அந்த மூர்க்கர்களின் முண்டங்களைப் பொடி செய்யுங்கள்…. உம் சிங்கத்தமிழர்களே சீறி எழுங்கள்!” என்ற கருணாநிதியின் வசனங்களை நரம்பு புடைக்கப் பேசி கர்ஜித்தபோது எம்.ஜி.ஆரின் பாத்திரம் இன்னும் மிடுக்காகத் தெரிந்தது. எம்.ஜி.ஆர்- கருணாநிதி இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். ஒருவரையொருவர் திரைப்பட வாய்ப்புகளுக்கு பரிந்துரை செய்தனர். தத்தம் கொள்கைகளைப்பேசி இருவரும் வாதிட்டுக்கொள்வார்கள். வென்றது கருணாநியே. 50 களின் ஆரம்பத்தில் கதருக்கு விடை கொடுத்துவிட்டு கருணாநிதியின் கருத்துக்களை கூர்ந்து கவனிக்கத்துவங்கினார் எம்.ஜி.ஆர்.
மந்திரிகுமாரிக்குப்பின் நாம், மலைக்கள்ளன், மருதநாட்டு இளவரசி, புதுமைப்பித்தன், அரசிளங்குமரி, காஞ்சித்தலைவன் வரை எம்.ஜி.ஆருக்கு புகழ்தந்த வசனங்களை எழுதினார் கருணாநிதி. மருதநாட்டு இளவரசியில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் கதாநாயகி ஜானகியிடம் பேசும் “மிருக ஜாதியில் புலி மானைக்கொல்கிறது. மனிதஜாதியில் மான் புலியைக்கொல்கிறது” என்ற வசனம் பெரும்கைதட்டலையும் அந்நாளில் பாராட்டையும் பெற்ற வசனம். மலைக்கள்ளனில் கருணாநிதியின் வசனம் எம்ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடித்துவந்த பகுத்தறிவையும் பறைசாற்றுவதாக அமைந்தத. ஒரு காட்சியில் நாயகி பானுமதியை மலைக்கள்ளனாக வரும் எம்.ஜி.ஆர் காப்பாற்றுவார். அதற்கு நன்றிகூறும் நாயகி, “நீ யார்” என வினவுவார். அதற்கு மலைக்கள்ளன் “ கற்புக்கரசியை க்காக்க வந்த கடவுள், துஷ்ட, நிக்ரக, சிஷ்ட பரிபாலனம் செய்யவந்த ஆண்டவன் எடுத்த அவதாரம் என்றெல்லாம் எண்ணாதே!… நான்தான் மலைக்கள்ளன்!” எனச் சொல்லி முடிக்கும்போது தியேட்டரில் கைதட்டல் பறக்கும். அண்ணா என்ற தலைவருடன் கருணாநிதி எம்.ஜி.ஆர் இருவருக்கும் நெருக்கம் இருந்ததால் படங்களில் தங்கள் கட்சியின் கொள்கைகளை வசனங்கள் மூலம் புகுத்தி வெற்றிபெற முடிந்தது கருணாநிதி மற்றும் எம்.ஜி. ஆரால்.
காஞ்சித்தலைவனில் காஞ்சியின் புகழைக்கூறும் நாயகனிடம், “காஞ்சிபுரம் குறும்பு” என்பார் நாயகி. “ஆனால் ஒருபோதும் கண்ணியம் குறையாது” என பதிலடி தருவான் நாயகன். படத்தில் அண்ணனை நினைத்து தங்கை கதாபாத்திரம் பேசும் வசனங்கள் முழுக்க அறிஞர் அண்ணாவையே மறைமுகமாக குறிப்பிடும். “அண்ணாவின் போக்கை யாராலும் புரிந்துகொள்ளமுடியாது. வெற்றியொடு திரும்புங்கள் அண்ணா”… “ மற்றொரு காட்சியில் “அந்த 3 ஈட்டிகளும் ஒரே இடத்தில் தொற்றிக்கொண்டிருப்பதுபோல” என எம்.ஜி.ஆர் வசனம் பேச “நாம் மூவரும் ஒரே இதயத்தில் தொற்றிக்கொண்டிருக்கிறோம்” என எஸ்.எஸ்.ஆர் முடிப்பார். எஸ்.எஸ்.ஆர், எம்.ஜி.ஆர், கருணாநிதி போல தீவிர தி.மு.க-க்காரர் என்பது புரிந்தவர்கள் அந்த வசனத்தை ரசித்துக்கைதட்டினர்.
கருணாநிதியின் நட்பினால் தேசியப்பார்வையில் இருந்துவிலகி திராவிடக்கொள்கைகளில் பற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், கே.ஆர் ராமசாமி மூலம் வந்த அண்ணாவின் அறிவுரையை ஏற்று எம்.ஜி.ராம்சந்தர் என்ற பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக்கொண்டார். 1952 ம் ஆண்டு அதிகாரப்புர்வமாக திமுகவில் அவர் இணைந்தார். அண்ணாவின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பினால் தனது திரைப்படங்களில் திமுக சின்னத்தையும் அண்ணாவின் புகழையும் மக்களிடையே கொண்டுசெல்லும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரால் கட்சிக்கும் கட்சியினால் எம்.ஜி.ஆரும் பரஸ்பரம் புகழ் உண்டானது. திமுக பங்கெடுத்த முதற்பொதுத்தேர்லான 1957 ல் முதற்தேர்தலில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பைக் கண்டு ஆச்சர்யம் கொண்ட அண்ணா எம்ஜி.ஆர் மீதுதனிப்பாசம் கொண்டார். புகழின் உச்சியில் ஏறிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு திருஷ்டியாக 1959 ம் ஆண்டு ஒரு விபத்து நிகழ்ந்தது. சீர்காழியில் ஒரு நாடகத்தின்போது சக நடிகர் ஒருவர் டைமிங் தவறி எம்.ஜி.ஆரின் மீது விழுந்தததில் அவரது காலுடைந்தது. ‘முடிந்தது எம்.ஜி.ஆர் சகாப்தம்!’ என்றனர் எதிரிகள். தன்னம்பிக்கையுடன் அடுத்த 6 மாதங்களில் குணமடைந்து படப்பிடிப்புகளில் கலந்துகொண்டார். எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் பெரும்விபத்து இதுதான்!
1962 தேர்தலில் கணிசமான தி.முக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு சென்றனர். எம்.ஜி.ஆரின் பங்களிப்புக்கு பரிசாக எம்.எல்.சி பதவியை அளித்தார் அண்ணா. எம்.ஜி.ஆரின் உழைப்பை மதித்து கட்சியில் அவருக்கு முக்கியத்தவம் அளித்தார் அண்ணா. “எம்.ஜி.ஆர் கட்சிநிதியாக லட்ச ரூபாய் தருவதாக சொல்கிறார். அது வேண்டியதில்லை. அவர் தன் முகத்தை ஒரு முறை மக்களிடம் காட்டினால் கட்சிக்கு லட்சம் ஓட்டுக்கள் விழும்.” “எம்.ஜி.ஆர் என் இதயக்கனி” என போற்றிப்புகழ்ந்தார். 1967 தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு பரங்கிமலைத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. தெர்தலுக்கு சில நாட்களுக்கு முன் ராமாவரம் தோட்டத்தில் வைத்து எம்.ஆர் ராதாவால் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அரசியல், திரையுலகத்தை ஒருசேர உலுக்கிப்போட்டது இந்த சம்பவம். மருத்துவமனையில் கட்டுப்போட்ட நிலையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெறும் புகைப்படம் திமுகவின் வெற்றியை எளிதாக்கியது. கட்சியின் வெற்றிக்காக தன் உயிரைப்பணயம் வைத்த எம்.ஜி.ஆரை கவுரவிக்கும் விதமாக அமைச்சரவைப் பட்டியலை இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூலம் மருத்துவமனைக்கே அனுப்பிவைத்தார் அண்ணா. பரங்கிமலை எம்.எல்.ஏ வானார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு அண்ணா அளித்த முக்கியத்துவம் கட்சியின் சில இரண்டாம் கட்டத்தலைவர்களி மத்தியில் புகைச்சலை தந்தது. ஆனாலும் எம்.ஜி.ஆரின் கட்சி விசுவாசத்தினால் அதை வெளிப்படுத்த அவர்களால் இயலவில்லை. அவ்வப்போது பத்திரிகைகளில் கருணாநிதிக்கும் எம்.ஜி.அருக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக எழுதின. கட்சிப் பத்திரிகைகளில் கூட இந்த மோதல் பட்டும் படாமலும் வெளிப்பட்டன. என்றாலும் இருவரும் அதை மறுத்தனர்.
இதனிடையே 1969 ம் ஆண்டு தொண்டைப்புற்றுநோயால் எதிர்பாராத விதமாக அண்ணா மறைந்தார். கட்சிக்குள் தலைமைப் பதவி தொடர்பாக நாவலர் நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் இடையெ எழுந்த மோதலை தன் சாதுர்யத்தால் தீர்த்துவைத்து கட்சிக்கு தலைவராக கருணாநிதியை கொண்டுவந்தார் எம்.ஜி.ஆர். 1971 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆர் பம்பரமாக சுழன்று கட்சிக்கு வெற்றித்தேடித் தந்தார். இதன்பிறகு கட்சியிலும் பொதுவெளியிலும் எம்.ஜி.ஆருக்கு உருவான பிரபல்யமும் வளர்ச்சியும் கருணாநிதிக்கு இடைஞ்சல் தந்ததாக சொல்லப்பட்டது. வெளிப்படையாக பல பத்திரிகைகள் இதை எழுதின.
வழக்கம்போல் இருவரும் இதை மறுத்து பேட்டியளித்தனர். எம்.ஜி.ஆர் ஒரு படிமேல் போய் “நான் இறக்கும்போது என் உடலில் திமுக கொடிதான் போர்த்தப்படவேண்டும்” என அந்த நேரத்தில் பிரபல பத்திரிகையில் பேட்டியளித்தார். அடுத்த 6 மாதங்களில் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி திருக்கழுக் குன்றத்தில் நடந்த கூட்டமொன்றில் ‘கட்சியின் தலைமை முதல் கவுன்சிலர்கள் வரை ஊழல் புகாரில் சிக்கியிருப்பதாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் எம்.ஜி.ஆர். இது கட்சிக்குள் புயலை ஏற்படுத்தியது. உண்மையில் மக்கள் மனதில் இருந்த அதிருப்தியைத்தான் எம்.ஜி.ஆர் வெளிப்படுத்தினார்.
கட்சியின் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதற்காக அதே அக்டோபரில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் நீக்கம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. திமுக மற்றும் அதன் தலைவர்கள் வெளியில் உலவமுடியாத நிலை ஏற்பட்டது. மக்களின் எழுச்சியினால் 1972 அக்டோபர் 17ந்தேதி அதிமுக என்ற புதிய கட்சியை துவக்கினார் எம்.ஜி.ஆர். கட்சியின் கொள்கையை அண்ணாயிசம் என்றார். கட்சிப்பெயர் கொடி என ஒவ்வொன்றிலும் அண்ணாவை முன்னிருத்தினார். கட்சி எழுச்சிபெறுவதை சகிக்கமுடியாத திமுகவினர், நடிகர் கட்சி, மலையாளி என்றெல்லாம் விமர்சித்தனர். ஆனால் மக்களின் ஆதரவினால் தான் சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயெ பெரும்வெற்றிபெற்ற தமிழக அரசியிலில் தன் வெற்றிப்பயணத்தை துவக்கியது அதிமுக. கட்சி துவங்கி 5 ஆண்டுகளில் (1977 ம் ஆண்டு) ஆட்சியமைத்த சாதனையையும் புரிந்தது அதிமுக. தமிழக அரசியிலில் நடிகர் நாடாள்கிற புதிய அத்தியாயத்தை உருவாக்கிக்காட்டினார் எம்.ஜி.ஆர்.
1980ம் ஆண்டு அதிமுக ஆட்சி மத்திய அரசால் உள்நோக்கத்துடன் கலைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த தேர்தலின்போது தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று தனது ஆட்சி கலைக்கப்பட்டது ஏன் என உருக்கமாகப்பேசினார் அவர். அதிமுக இரண்டாவது முறையாக வெற்றிபெற்றது. சாதாரண நடிகனான தன்னை மக்கள் இத்தனை உயரத்தில் கொண்டுவைத்த நன்றியுணர்வால் எம்.ஜி.ஆரின் அரசு அடித்தட்டு மக்களின் அரசாக இயங்கியது. சத்துணவு திட்டம் அவருக்கான மக்கள் ஆதரவை இன்னும் உறுதிப்படுத்தியது. தன் ஆட்சியில் பெரிய அளவு ஊழல் குற்றச்சாட்டுகளோ நிர்வாக சீர்கேடுகளோ இல்லாதவாறு பார்த்துக் கொண்டார். தனது உறவினர்களின் பரிந்துரையைக்கூட அதிகாரிகள் ஏற்கக்கூடாது என செய்தித்தாளில் விளம்பரமே செய்தார். ஆட்சி அதிகாரத்தின் தனது அனுபவமின்மையை அதிகாரிகள் மூலம் சாமார்த்தியமாக கையாண்டார்.
இதனிடையே 1984 ம் ஆண்டு எம்.ஜி.அருக்கு திடீர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சாதாரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு பக்கவாதம் தாக்கியது. மூளையில் ஏற்பட்ட கட்டி உள்ளிட்ட பல பிரச்னைகளுக்காக அமெரிக்காவில் டவுன்ஸ்டேட்டில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த தேர்தலில் அமெரிக்காவில் இருந்தபடியெ வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் அவர் சிகிச்சைபெறும் வீடியோக்காட்சிகள் தமிழகத்தில் திரையிடப்பட்டன. அந்த தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்றது அதிமுக. ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ வான எம்.ஜி.ஆர், தமிழகம் திரும்பியபின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.“ எம்.ஜி.ஆரைப் போன்ற உடல்பாதிப்பு வேறொருவருக்கு இருந்திருந்தால் நிச்சயம் எங்களால் காப்பாற்றி யிருக்கமுடியாது.
எம்.ஜி.ஆர் மீண்டது பெரும் அதிசயம். அது எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கையால் நிகழ்ந்தது” என ஜப்பான் டாக்டர் கானு தெரிவித்தார். அடுத்த ஆண்டு மிண்டும் அமெரிக்காவுககு உடற்பரிசோதனைக்கு சென்றுவந்தபின் எம்.ஜி.ஆர் முன்போல் செயல்படமுடியவில்லை. பேசுவதிலும் சிரமம் இருந்தது. இதனால் கட்சியில் தான்தொன்றித்தனமாக தலைவர்கள் பேசவும் செயல்படவும் துவங்கினர். அவ்வப்போது அவர்களை மிரட்ட அவர் அஸ்திரங்களை எடுத்தபோதும் ஒரு கட்டத்தில் அவர்கையை மீறி சம்பவங்கள் நடந்தன. கட்சியில் ஜெயலலிதா மற்றும் ஆர்.எம்.வீரப்பன் என இரு அணிகள் விஸ்வரூபமெடுத்து ஆடுவதை அவரால் ஒன்றும செய்யமுடியாமல் போனது.
இதனிடையே 1987 ம் ஆண்டு டிசம்பர் 24ந் தேதி அதிகாலை மாரடைப்பால் எம்.ஜி.ஆர் அமரரானார். மூன்று முறை மரணத்தை வென்றவர் நான்காம் முறை அந்த வெற்றியை காலனுக்கு பரிசளித்துவிட்டு மக்களைக் கண்ணீர்க்கடலில் ஆழ்த்திவிட்டார். சாதாரண நடிகனாக தன் வாழ்க்கையைத் துவக்கி தன் உழைப்பினால் மட்டுமே வெற்றிகளைத்தொட்டு அரசியல் களத்திலும் அதை தக்கவைத்துக்கொண்ட எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு ஒரே காரணம் மக்கள் மீது அவர் கொண்டிருந்த இயல்பான மனிதாபிமானம்.
எம்.ஜி.ஆர் என்ற தனிப்பட்ட ஒரு மனிதரின் உழைப்பினால் உருவான அதிமுக இன்று மக்கள் ஆதரவற்ற தலைவர்களால் அல்லலுக்கு ஆளாகிவருகிறது. உங்களுக்குப்பிறகு கட்சிக்கு வாரிசு யார் என ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது “என் கொள்கையை பின்பற்றுபவர்கள் அனைவரும் என் வாரிசுகள். அண்ணா திமுகவின் அத்தனை தொண்டர்களும் என் வாரிசுகளே” என மேலோட்டமான ஒரு பதிலைத் தந்தார். அவருக்குப்பின் அந்தக் கட்சியை சுமார் 30 ஆண்டுகள் உயிர்ப்புடன் வைத்திருந்த ஜெயலலிதாவிடமும் இதெ கேள்வி ஒரு முறை கேட்கப்பட்டபோது எனக்குப்பின் யார் என்பதை மக்களளே முடிவு செய்வார்கள் என நழுவலாக சொல்லிச் சென்றார். ஜனநாயக ரீதியில் ஒரு கட்சியில் தனக்குப்பின் யார் எனப்தை ஒரு கட்சித்தலைமை தன் காலத்திலேயே தகுதியின் அடிப்படையில் அடையாளங் காட்டிச்செல்ல வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த வரிசை தலைவர்களையாவது வலுவாக உருவாக்கிச்செல்லவேண்டும் அண்ணாவைப்போல!
ஆனால் அதிமுக தலைமையின் சிக்கல் அதன் முக்கியத் தலைவர்கள் இருவருமே திரைக்கலைஞர்கள். திரையுலகில் முதல் இடத்தில் இருந்தவர்கள். அந்த இடத்தை அடைவதற்காக அவர்கள் போராட்டங்களை நடத்தி அங்கு முதலிடத்தில் இருந்த முன்னாள் திரைக்கலைஞர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் கட்சியிலும் அதையே கடைபிடித்தனர். தங்களுக்கு இணையானவர் என தாங்களே ஒருவரை அடையாளங்காட்டுவதை அவர்கள் விரும்பவில்லை. கவனமாக அதை பெரும்பாலும் தவிர்த்தனர். தங்களுக்குப் பின் யார் என தங்கள் காலத்தில் சொல்வது தங்களது இருப்பை கேள்விக் குள்ளாக்குகிற விஷயமாக கருதினார்கள். இந்த அச்சத்தினால் இருவருமே வெளிப்படையாக யாரையும் அடையாளம் காட்ட முயலவில்லை. அவர்கள் சந்தித்த அரசியல் அப்படி ஒரு சிந்தனையை அவர்களுக்குள் ஏற்படுத்தி யிருக்கலாம். அதனையும் மீறி கட்சியில் இயல்பாக உருவானவர்களை அவர்கள் ரசிக்காததோடு அந்த முயற்சிகளையும் தங்கள் முற்றாக துடைத்தெறிந்தனர்.
எம்.ஜி.ஆர் இரண்டாம் கட்டத்தலைவர்கள் என்ற ஒரு வரிசையை ஏற்படுத்தியிருந்தார். ஜெயலலிதா எம்.ஜி.ஆரைவிடவும் எச்சரிக்கை உணர்வோடு அதிமுக என்றால் ஜெயலலிதா ஜெயலிலதா என்றால் அதிமுக எனத் தான் மட்டுமே எல்லாம் என்ற ஒரு கருத்தாக்கத்தை அது ஜனநாயத்திற்கு விரோதமானது என்று தெரிந்தும் தொடர்ந்து கடைபிடித்தார். அதனால் தான் ஓ.பி.எஸ் என்ற ஒரு மனிதர் ஒரே நாளில் முதல்வரானார். எடப்பாடி பழனிசாமி என்பவரை கட்சிக்கு சம்பந்தமில்லாத, கட்சித் தலைமைக்கு விசுவாசமான ஒரு தோழி முதல்வராக தேர்வு செய்யும் அவலம் உருவானது. பின்னாளில் தானே அந்த பொறுப்பை ஏற்க முடிவெடுத்த அவலமும் தமிழகம் கண்டது. இப்படி எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவரது காலத்திலும் ஒற்றைத் தலைமையில் இயங்கிய அதிமுக இன்று இருபெரும் தலைவர்களின் விடுபடலால் ஒற்றைக்குடும்பத்திற்கான ஒரு வணிக நிறுவனமாக்கும் முயற்சியில் சிக்கித்தவிக்கிறது.
தமிழக அரசு தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டை பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது. கடுமையான உழைப்பினாலும் மக்கள் செல்வாக்கினாலும் தான் உருவாக்கிய கட்சியை திசைக்கொன்றாக சிதறவிட்டு தனக்கு நுாற்றாண்டைக்கொண்டாடும் அரசின் இந்த கொண்டாட்டத்தை எம்.ஜி.ஆரின் ஆன்மா நிச்சயம் நுாற்றாண்டுக் கொண்டாட்டமாக கருதாது; திவசமாகவே கருதும்!.. எஸ்.கிருபாகரன்
https://newstm.in/tamilnadu/politics/the-story-of-the-nomadic-king-mgr-birthday-special-article/c77058-w2931-cid345026-su6271.htm.in
Leave a Reply
You must be logged in to post a comment.