சனவரி 08, 2021
ஊடக அறிக்கை
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதால் தமிழ்மக்களின் தேசிய உணர்வை அடக்கலாம் என அரசாங்கம் நினைத்தால் அது தவறாகும்
தமிழர்களின் கல்வி, பண்பாடு இவற்றின் உறைவிடமாக விளங்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் எழுப்பியிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக ஊர் உறங்கும் வேளையில் இயந்திரங்கள் கொண்டு இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த ஈனச் செயலை அரங்கேற்றியவர்கள் மெத்தப் படித்த தமிழர்கள் என்பதையிட்டு வெட்கப்படுகிறோம்.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவுத் தூபி எழுப்பப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ். பல்கலைக்கழக நிருவாகமே மேற்கொண்டது என அதன் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த நினைவுத் தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்றுவதற்கான தொடர்ச்சியான அழுத்தம் தம்மீது பிரயோகிக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிருவாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் வேறு தரப்புக்கள் உள் நுழைந்து அதனை அகற்றியிருக்கக்கூடும். அவ்வாறு நடைபெறுவது பல்கலைக் கழகத்திற்கு அழகல்ல என்பதாலுமே தாம் இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“வேறு தரப்பினர் உள் நுழைந்து அந்தத் தூபியை அகற்றியிருந்தால் அது பல்கலைக் கழகத்துக்கு அழகல்ல என்பதாலேயே இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்ததாகச்” சொல்லும் விளக்கத்தை மானமுள்ள தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை நிர்மூலமாக்கிய பாவத்தை துணைவேந்தர் தனியனாக ஏன் சுமக்க வேண்டும்? பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவும் இராணுவமும் அந்தப் பாவத்தை சுமக்க விட்டிருக்கலாமே?
முன்னைய உபவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் காலத்திலும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் விக்னேஸ்வரன் அதனைச் செய்ய மறுத்துவிட்டார். இதன் காரணமாக அவர் பதவி நீக்கப்பட்டார். அவரது இடத்திற்கு சிறிசற்குணராசா இன்றைய சனாதிபதி கோத்தாபய இராசபக்சா அவர்களால் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மூலமாக்க வேண்டும் என்ற முன்நிபந்தனை காரணமாக இருக்கலாம்.
மேலும், 2020 ஓகஸ்ட் மாதம் சனாதிபதி கோத்தாபய இராசபக்சா அவர்களால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர் சிறிசற்குணராசா அண்மையில் குறித்த நினைவுத் தூபியை பொலீசாருக்கும் படையினருக்கும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
என்னப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழிக்கு ஒப்ப முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார். நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சொல்கிறார்.
உண்மை என்னவென்றால் வயம்ப, ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் அரசைக் கவிழ்க்க ஆயுதம் ஏந்திப் போராடிய போது கொல்லப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி போராளிகள் நினைவாக தூபிகள் எழுப்பப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசு மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கியது காரணமாக இருக்கலாம்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக் கழகத்தில் படிக்கும் பெரும் எண்ணிக்கை சிங்கள மாணவர்களுக்கு உறுத்தலாக இருந்ததாகவும் அவர்கள் அதனை அகற்றக் கடுமையான முயற்சி எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சிங்கள – பவுத்த பெருந் தேசியவாதிகளின் தாளத்துக்கே இராசபக்ச அரசு ஆடுகிறது. இந்த அரசு சிங்கள – பவுத்தர்களுக்கு மட்டும் சொந்தமான அரசு. அவர்கள் விருப்பத்துக்கு அமையவே ஆட்சி நடக்கும் என நாட்டின் சனாதிபதி இராசபக்ச ஒருமுறைக்குப் பலமுறை பொதுவெளியில் சொல்லியிருக்கிறார்.
கோத்தாபய இராசபக்ச அரசின் கடும்போக்குக்குக் கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்களுக்கு தமிழ்மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது முக்கிய காரணமாகும். அதை வைத்து தமிழ்வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் புறந்தள்ளி விட்டார்கள் எனவும் அந்தக் கட்சிகள் தமிழ்மக்களை பிரதிநித்துவப்படுத்த முடியாது எனவும் அமைச்சர்கள் பரப்புரை செய்து வருகிறார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதால் தமிழ்மக்களின் தேசிய உணர்வை அடக்கலாம் என அரசாங்கம் நினைத்தால் அது தவறாகும். இப்படியான இடிப்புக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களை மறவாது இருக்கவே உதவும். தமிழ் தேசியத்துக்கு நெய் வார்க்கவே உதவும்.
அரசியல் பிழைத்தோரை அறம் அழிக்கும், அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரும் ஆட்சியைத் தேய்க்கும் என்பன தமிழ்மக்களது அசைக்க முடியாத நம்பிக்கை.
தூங்கும் தமிழரை பறை கொண்டெழுப்புவோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்புவோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்!
கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ரொறன்ரோ.
—————————————————————————————————————–
தூபி உடைப்புக்கு யார் பொறுப்பு?
காட்டமாகக் கேட்கின்றார்சம்பந்தன்
“பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தோம் என்று அப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கூறியுள்ளார். ஆனால், நினைவுத்தூபியை அகற்ற முடிவெடுத்தது பல்கலைக்கழக துணை வேந்தர்தான் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். அதேவேளை, நினைவுத்தூபி இடிக்கப் பட்டமைக்கும் தமக்கும் எந்தவிததொடர்பும் கிடையாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அப்படியயனில் இந்த நினைவுத்தூபி யாரின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டது?”
– இவ்வாறு கடும் கொதிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்றுமுன்தினம் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக விடுத்துள்ள கண்டனத்திலேயே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
தமிழர்களின் அடையாளச் சின்னங்களில் நினைவுத் தூபிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தவகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய உணர்வுடன் அன்று தொட்டு இன்று வரை
செயற்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயலே இது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு உயிரிழந்த பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் ஆகியோரின் நினைவாகவே யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டது. இதன் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பல்கலைக் கழக நிர்வாகம், இந்தத் தூபியை இரவோடிரவாக இடித்தழித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே நினைவுத்தூபியை இடித்தோம் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். ஆனால், நினைவுத்தூபியை அகற்ற முடிவெடுத்தது பல்கலைக்கழக துணைவேந்தர்தான் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
அதேவேளை, நினைவுத்தூபி இடிக்கப் பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அப்படியெனில் இந்த நினைவுத்தூபி யாரின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டது?
ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும். உரிய தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும்.
இந்தச் செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தற்போதைய நிலைமையில் தேவையற்ற செயல். ஒரு குழப்பத்தை – ஒரு புதிய பிரச்சினையைத் திட்டமிட்டு உருவாக்குகின்ற செயல்.
———————————————————————————————————–
Leave a Reply
You must be logged in to post a comment.