ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு
இரட்டைத் தாழ்!
பாண்டிய மன்னனின் மகளைக் குலோத்துங்க சோழனுக்கு பெண்கேட்டு வந்த ஒட்டக்கூத்தருக்கும், பாண்டியமன்னன் மகளின் குருவான புகழேந்திப்புலவருக்கும் தந்தம் நாட்டுப்பற்றால் மோதல் ஏற்பட்டது. இருவரும் புலவர்கள் ஆதலால் கவிதைத் திறத்தால் மோதிக்கொண்டனர். புலவர்கள் இருவரும் தத்தம் அரசுகளைப் புகழ்ந்து பாடியதை பாண்டிய மன்னன் இரசித்துக் கேட்டான்.
எனினும் அந்நாளில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களுக்குள் தன் மகளுக்கு ஏற்ற கணவனாக வரும் தகுதி குலோத்துங்க சோழனுக்கு இருந்ததை பாண்டிய மன்னன் அறிந்திருந்ததாலும், அரசியல் காரணங்களுகக்காகவும் அத்திருமணத்திற்கு உடன்பட்டான். திருமணம் முடித்து குலோத்துங்கனுடன் சென்ற பாண்டிய மன்னின் மகள் தனது குருவான புகழேந்தியாரையும் தன்னுடன் சோழ நாட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
மகாபாரதத்தில் வரும் கிளைக்கதையான நளன் சரிதத்தை நளவெண்பாவாகப் பாடியவர் இந்தப் புகழேந்திப் புலவரே! அதனாலேயே அவர் ‘வெண்பாவுக்கோர் புகழேந்தி’ என்ற பாராட்டைப் பெற்றவர். அவரின் வெண்பாத் தமிழையும் தமிழ் இசையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் அறிய நளவெண்பாவில் ஒரு பாடலைப் பார்ப்போம். தமயந்தியின் சுயம்வர மண்டபம். அவளை மணம் செய்ய விரும்பிய மன்னர்கள் மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தமயந்தி தன் கணவனைத் தேர்ந்தெடுப்பதற்காக கையில் மலர்மாலையை ஏந்தியபடி தோழியுடன் மெல்ல நடந்து வருகிறாள். தோழி ஒவ்வொரு மன்னரையும் காட்டி அவர்களைப் பற்றிச் சொல்கிறாள். அவந்தி நாட்டு அரசனைக் காட்டி
“வண்ணக் குவளைமலர் வௌவி வண்டுஎடுத்த
பண்ணில் செவிவைத்துப் பைங்குவளை – உண்ணாது
அரும்கடா நிற்கும் அவந்திநாடு ஆளும்
இரும்கடா யானை இவன்”‘
எருமைக்கடா ஒன்று அழகிய குவளை மலரை உண்பதற்காகக் கவ்வ, அந்த மலரில் தேன் அருந்திக் கொண்டிருந்த வண்டுகள் எழுந்து பறந்து ரீங்காரம் செய்யும். அவற்றின் ரீங்காரம், பண்ணின் இசையாக எருமைக் கடாவின் செவியில் கேட்க, அந்த இசைமயக்கத்தில் குவளை மலரை உண்ணாது அது நிற்குமாம். அப்படிப்பட்ட அவந்தி நாட்டை ஆளும் இவன் வலிமைமிக்க ஆண்யானையைப் போன்றவன்’ என்று தோழி சொல்கிறாள்.
புகழேந்திப் புலவரின் இப்படியான தமிழோடு பழகித்திரிந்த பாண்டியனின் மகள் அவரைப் பிரிந்து செல்வாளா? எனவே புகழேந்தியாரைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள். அவளுடன் சென்று சிறிது காலம் இருந்த புகழேந்திப் புலவர், பாண்டிய மன்னனைப் காண்பதற்காக பாண்டிய நாட்டிற்கு வந்தார். பின்னர் பாண்டியனிடம் விடைபெற்று சோழ அரண்மனைக்கு செல்லும் வழியில் சில குண்டர்கள் அவரை அடித்துக் கண்ணையும் கைகால்களையும் கட்டி இழுத்துச் சென்றனர். அவர் கண்திறந்து பார்த்த போது தான் பாதாளச் சிறையில் இருப்பதைக் கண்டார். ஒருவாறு தன்னிலையை ஊகித்து அறிந்து கொண்டார்.
பாண்டிநாடு சென்ற தன் குரு மீண்டும் வராததைக் கண்ட குலோத்துங்க சோழனின் மனைவி [பாண்டியனின் மகள்] தனது தந்தைக்கு புகழேந்தியாரை அனுப்பும்படி தூது அனுப்பினாள்.
புகழேந்தியார் பாண்டிய நாட்டில் இருந்து சோழ நாட்டிற்கு வந்துவிட்டார் என்ற செய்தியும் அவளுக்குக் கிடைத்தது. அவருக்கு என்ன நடந்தது என்று கவலைப்பட்ட அவளும் தன் கணவனான குலோத்துங்க சோழனைக் கேட்டாள்.
‘அவர் சேர நாட்டிற்கோ, பல்லவ நாட்டிற்கோ சென்றிருக்கலாம், வாருவார்’ என்றான். தனக்கோ, தந்தைக்கோ சொல்லாமல் அவர் எங்கும் சென்றதில்லையே என்று அவள் தன் ஒற்றர்களை அனுப்பித் தேடத் தொடங்கினாள்.
ஒட்டக்கூத்தர் குலோத்துங்க் சோழனின் குருவாதலால் சோழ நாட்டினர் அவர் சொன்ன சொல்லைக் கேட்டனர்.
தமிழ்க் கவிதையைப் பிழையாகச் சொல்லும் புலவோரைப் பாதாளச்சிறையில் அடைத்து வைத்து, புலவர்களின் தலைமயிரை ஒன்றோடொன்று முடிந்து வெட்டுது அவரின் வழக்கம். ஒட்டக்கூத்தர் பாண்டியன் அரண்மைக்குப் பெண்கேட்டு சென்றபோது அவரின் பாடலைப் புகழேந்தியார் வெட்டிப் பாடினார். அதனால் ஒட்டக்கூத்தருக்குப் புகழேந்தியாரைப் பிடிக்கவில்லை. எனவே தனது குண்டர்களைக் கொண்டு புகழேந்தியாரைப் பிடித்து வந்து பாதாளச்சிறையில் இருக்கும் கவிதை இயற்றத் தெரியாத புலவர்களுடன் அடைத்து வைத்தார்.
கவிதை இயற்றத் தெரியாதவர்களின் தலையை மட்டுமே ஒட்டக்கூத்தர் வெட்டுவார். ஆதலால் பாதாளச்சிறையில் அடைத்து வைத்திருந்தாலும் தனது தலையை அவரால் வெட்டமுடியாது என்பது புகழேந்தியாருக்குத் தெரியும். எனவே சிறையில் அடைபட்டிருந்த புலவர்களுக்கு கவிதை இயற்றச் சொல்லிக் கொடுத்தார். அங்கிருந்தோர் யாவருமே கவிஞர்களாயினர்.
பாதாளச்சிறையில் இருப்போர் கவிஞர் ஆகும் செய்தி ஒற்றர்கள் மூலம் குலோத்துங்க சோழனின் மனைவிக்கு எட்டியது. சிறைக்கைதிகளுக்கு யார் கவிதை இயற்றக் கற்றுக் கொடுக்கிறார் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். எந்தக் குற்றமும் செய்யாத தனது குருவை ஒட்டக்கூத்தர் அடைத்து வைத்திருப்பதும் தெரியாது, குலோத்துங்க சோழன் இருக்கின்றானா? அவன் சோழ நாட்டை அரசாட்சி செய்கின்றானா? ஒட்டக்கூத்தர் அரசாள்கிறாரா? யாரின் ஆட்சியின் கீழ் சோழ நாடு இருக்கிறது? அல்லது புகழேந்தியார் பாதாளச்சிறையில் இருப்பது தெரிந்தும் தெரியாது போல் குலோத்துங்கன் இருக்கிறானா? நினைக்க நினைக்க அவள் நெஞ்சம் வெந்தது.
மாலை நேரமும் வந்தது. புதுமணத் தம்பதியர்கள் அல்லவா அவர்கள். அரச கருமம் நிறைவடைந்ததும் மனைவியை நாடி அந்தப்புரம் வந்தான் குலோத்துங்கன். அந்தப்புர வாயிற்கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. கெஞ்சிக் கேட்டும் அவள் கதவைத் திறக்கவும் இல்லை. ஏதும் சொல்லவும் இல்லை. பாண்டி நாட்டின் மேலும் தமிழின் மேலும் ஆராத காதல் கொண்டவள் என்பதை அவன் அறிவான். எனவே அவளின் ஊடலைத் [கணவனிடம் ஏற்படும் கோபத்தைத்] தணிப்பதற்காக ஓட்டக்கூத்தரைத் தூதனுப்பினான்.
ஒட்டக்கூத்தர் அவளின் அந்தப்புர வாசலில் வந்து நின்று
நானேயினியுன்னை வேண்டுவதில்லை – நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ
வானேறனைய வாள்விரவிகுலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்குநின் கையிதழாகிய தாமரையே”
‘தாமரைமலரின் தேனே! இனியும் நான் உன்னைக் கேட்கத் தேவையில்லை. கதவைத்திறந்து விடு. நீ கதவைத் திறக்காதுவிட்டால், வானளாவிய புகழ்மிக்க ஆண்சிங்கத்தைப் போன்ற வலிமையுள்ள சூரிய குலத்தலைவன் உன் வாசலுக்கு வந்தால் கை இதழாய் இருக்கும் தாமரை தானாகவே கதவைத் திறந்துவிடும்’ என்று பாடினார்.
ஒருவரிடம் நாம் தமிழைப்பற்றிப் பேசும் முன்பு, அவர் யாரிடம் தமிழைக் கற்றார் என்பதை அறிந்து பேசவேண்டும் என்ற பண்பும் ஒட்டக்கூத்தரிடம் அப்போது இருக்கவில்லை. குலோத்துங்க சோழன் போல் அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் பொம்மை என்று அவளையும் நினைத்துவிட்டார். ஒட்டக்கூத்தரின் குரலைக் கேட்டதுமே குழோதுங்கனின் மனைவிக்கு கோபம் கூடியது. அதனால் அவர் பாடிய பாடலின் கருத்துக்கள் யாவுமே அவளுக்குப் பிழையாகவே தோன்றின.
1. ‘நானே!’ என்பதில் அவரது அகங்காரம் தலைவிரித்தாடியது.
2. இனி உன்னை வேண்டுவதில்லை – முன்னர் வந்து கேட்டது போல, இனி உன்னை வேண்டுவதில்லை எனக் கூறியது.
3. நளினமலர்த் தேனே! – தாமரைமலரின் தேனை உண்ண அம்மலரில் எத்தனை எத்தனை தேன் வண்டுகள் மொய்க்கின்றன. அவளின் வாசலில் வந்து நின்று அவளை வண்டுகள் மொய்க்கும் தேன் எனலாமா? அவளை ஒட்டக்கூத்தர் என்ன என்று நினைக்கிறார்? பொதுமகள் என நினைக்கிறாரோ?
4. வானேறு அனைய – வெள்ளை எருது போன்ற [வால் + ஏறு = வானேறு; வால் – வெள்ளை] என்று கூறியது.5. வாள்வீர ரவிகுலாதிபன் வாசல் வந்தால் தானே திறக்கும் – வாள் வீரராயும் சூரியகுலத் தலைவராயும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களில் எவர் வந்தாலும் தானே திறக்குமா கதவு? மீண்டும் இவர் என்ன சொல்கிறார்? பொதுமகள் என்கிறாரா?6. நின் கையிதலாகிய தாமரையே – கை இதழாய் இருக்கும் தாமரை எப்படி கதவைத்திறக்கும்? உவமை கூறும் போது தாமரை இதழ்க் கை என்பார்கள். அதாவது தாமரை இதழ் போன்ற மென்மையும் வடிவமும் உடையை கை என்ற கருத்தில் சொல்வர்.
ஆனால் ஒட்டக்கூத்தரோ அதனை மாற்றிக் கூறியது. அத்துடன் உயர்திணைப் பொருளை அஃறிணைக்கு இட்டுக் கூறுவதில்லை.
பாண்டியன் மகளாய்ப் பிறந்து, சோழ நாட்டின் அரசியாய் இருப்பவளை இவ்வளவு கேவலமாக ஒட்டக்கூத்தர் கவிதை புனைந்ததைக் கேட்டதுமே “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என அவரது காதில் விழும்படி கூறியபடி ஏற்கனவே ஒருமுறை பூட்டியிருந்த கதவின் திறப்பை, கோபத்துடன் மீண்டும் திருகிப் பூட்டினாள் [dubble lock].
ஒட்டக்கூத்தரை தூது அனுப்பிய குலாத்துங்க சோழனும் அவருக்குப் பின்னே வந்து அங்கு நின்றிருந்தான். தன் மனைவி கோபத்துடன் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்று கூறி, இரண்டாம் முறையும் பூடைப் பூட்டியதைக் கேட்டான். தான் வந்த போது ஒருமுறை பூட்டியிருந்த கதவு, ஒட்டக்கூத்தரின் தமிழ்ப் பாடலால் இரண்டாம் முறையும் பூட்டப்பட்டதால் அவளுக்கு தன்மேல் பெரிய கோபம் இல்லை என்பதும், ஒட்டக்கூத்தர் மேலேயே முழுக்கோபமும் இருப்பது புரிந்தது.
அதற்குக் காரணம் என்ன என ஆராய்ந்த போது புகழேந்திப் புலவர் பாதாளச்சிறையில் சிறைவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவரைச் சிறையில் இருந்து விடுதலை செய்து மன்னிப்புக்கேட்டான். தன்மேல் பாண்டியனின் மகள் ஊடல் கொண்டிருப்பதையும் ஒட்டக்கூத்தரின் பாடலுக்கு இரட்டைத்தாழ் போட்டதையும் கூறி அந்தப்புரத்துக்கு அழைத்து வந்தான்.
புகழேந்தியாரும் பசு கன்றைத் தேடி ஓடுவது போல ஓடி அவளின் அந்தப் புரவாசலுக்கு வந்தார். வந்தவர்
“இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையொன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி
மழையொன்றிரண்டுகைப் பாணாபரண நின் வாசல் வந்தால்
பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே”
‘நூல் இழை ஒன்றை இரண்டாகப் பிளந்து [வகிர்ந்து] எடுத்தது போன்ற நுண்மையான இடையையும், அணிந்திருக்கும் [ஏந்திய – பூண்ட] பொன்னால் ஆன குழை [காதணி] சேர்ந்து விளங்கும் [ஒன்றி – பொருந்தி] இரண்டு கண்களையும் உடைய பெண்ணே [அணங்கே]! நீ கொண்ட கோபத்தைத் தணித்துக்கொள். மழையைப் போன்று இரண்டு கையாலும் அள்ளி வழங்கும் பாணாபரணன் [குலோத்துங்க சோழனின் பெயர்] உன் வாசலுக்கு வந்தால் அவன் செய்த பிழைகளில் ஒன்று இரண்டைப் பொறுப்பது குடிப்பிறந்தோர் [பாண்டி குடியிற் பிறந்தோர்] செயலாகும்’ என்று சொன்னார்.
புகழேந்திப் புலவரின் குரலைக் கேட்டதுமே பசுவின் கமறல் கேட்ட கன்றைப் போல் மகிழ்ந்தாள். பாடல் முழுவதையும் கேட்கும் முன்பே மகிழ்ச்சியால் அவளின் மனக்கதவு திறந்தது. பூட்டிய பூட்டு திறக்காது இருக்குமா! என்ன? மழலைப் பருவம் முதல் அவரின் தமிழோடு விளையாடியவள் அல்லவா?இனிதே,தமிழரசி.
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
“விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்”
ஆம்!
ஒவ்வொரு மனிதனுக்கும் « தாய்மொழி » என்பது ஜீவ நாடியை போன்றது.
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பினை இன்றைய தலைமுறையினருக்கு
பிழையின்றி கற்பிக்க நாம் கடுந்தவம் மேற்கொள்ள வேண்டி உள்ளது என்பது
மறுக்க முடியாத உண்மை.
இது குறித்து மொழியின் சிறப்பை உணர்ந்து, சங்க காலங்களில் புலவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள், என்பதை நாம் அறிய முற்படுவோமாக!
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே
பிள்ளைப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் தமிழைப் பிழையாக உரைப்போர் தலையில் குட்டுவானாம்.
வில்லிபுத்தூராழ்வார் எனும் பிரசித்திபெற்ற புலவர் பிற புலவர்களை வாதத்திற்கு
அழைத்து, வாதத்தில் தோற்றால் அவர்களது காதை அறுத்துவிடுவாராம்.
மஹாபாரத காவியத்தை வில்லிபாரதம் எனும் கடின நடையிலமைந்த தமிழ்ப் பாடல்களாக எழுதியவர் வில்லிபுத்தூராழ்வார்.
சோழ நாட்டின் மன்னன் குலோத்துங்க சோழனின் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர் கவி ஒட்டக்கூத்தர்.
இவர் தமிழ்ப்பற்று மிக்கவர், புலமையில் கரைகண்டவர். தானும் தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் அவரைச் சிறையிலடைத்து விடுவார்.
பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களுக்குப் பிழைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார்.அது யாதெனில், ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவர்.
சரியான விடை கூறாதவர்கள் இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார், அதாவது இருவரது தலைகளையும் வெட்டிவிடச் செய்வார். இதனாலேயே தான் ஒரு புலவன் என்று முறையாகத் தமிழ் பயிலாத எவரும் கூறிக்கொள்வதில்லை.
இவர்களெல்லாம் இன்று நம்மிடையே இல்லாததால் தட்டிக் கேட்கும் உரிமையை வேற்று மொழியினருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு வாழ்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம்.
மேலும், தான் ஒரு கவி என்று கூறிக்கொண்டு தமிழில் கவிதை என்று சொல்லி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று வரும் ஜாலி மற்றும் போலி கவிஞர்களுக்கு திருத்தம் சொல்லி சீர்திருத்த இவர்களை போன்ற மொழி பற்றுமிக்க புலவர்கள் முன் வந்து தமிழ் மொழியை சிறப்படைய செய்ய வேண்டும் என்று வேண்டி நிற்போமாக!
« ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் »
இந்த சொற்றொடருக்கு சரியான விளக்கம் யார் யாருக்கு தெரியும்?
பலவிதமான கருத்துக்களை பலரும் சொல்லக் கேட்டிருகிறேன். ஆனால் உண்மையான
கருத்து என்பது என்னை பொறுத்தமட்டில் புரியாத புதிராகவே ! இதுவரை இருந்து வந்தது
அதற்கான விடை!
இன்று இதோ:
இதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உள்ளது.
பாண்டிய நாட்டின் இளவரசியாயிருந்து, பின் குலோத்துங்க சோழனின் மனைவியான சோழ நாட்டின் மஹாராணி,
தன்னுடன் சீதனமாக பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்திருந்த தனது ஆசானும், அருந்தமிழ்ப் புலவருமான புகழேந்தியை ஒட்டக்கூத்தர் எவ்விதக் காரணமுமின்றிச் சிறையிலடைத்த விவரம் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தாள்.
அரசன் இது பற்றி அறியாதிருந்தாலும், அறிந்தும் அமைதியாயிருந்தாலும் இரண்டுமே மன்னிக்க முடியாத மாபெரும் தவறுகள் என்பதால் அவள் குலோத்துங்கன் தன்னைக் காண அந்தப்புரத்திற்கு வருகையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு திறக்க மறுத்துவிட்டாள்.
அக்காலத்தில் அரசி கோபம் கொண்டால் அவளது பிணக்கு நீங்க வேண்டிப் புலவர்களைத் தூது அனுப்புவது மரபு. அதன்படியே குலோத்துங்கன் தன் ஆசானும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான்.
ஒட்டக்கூத்தர் அரசியின் அறை வாயிலில் வந்து நின்று,
“நானேயினியுன்னை வேண்டுவதில்லை – நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ
வானேறனைய வாள்விரவிகுலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்குநின் கையிதழாகிய தாமரையே”
“மென்மையான மலரிலுள்ள தேன்போன்ற இனிமையான பெண்ணே,
கதவைத் திறக்கும்படி நான் உன்னை வேண்டத் தேவையில்லை, கதவைத் திறந்து விடு,
இல்லாவிடில் ஏறுபோன்ற நடையுடைய வாள்வீரனாகிய குலோத்துங்கன் உன் வாசலுக்கு வந்தால் தாமரை இதழ்போன்ற உனது கைகள் தாமாகவே கதவைத் திறந்துவிடும்”
எனும் பொருள்பட ஒட்டக்கூத்தன் பாடலைப் பாட,
பாடலில் இருந்த ஆணவத் தொனியால் மேலும் கோபமுற்ற அரசி கதவின் இன்னொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக்கொண்டாள்.
இதுதான் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனப் பின்னர் பிரசித்தமாகி இன்னும் வழக்கில் இருக்கிறது.
“பூங்கதவே தாழ்ப்பாள் திறவாய்”
« தாள் திறந்தது »
ஒட்டக்கூத்தரின்மேல் அரசிக்கு ஏன் இத்தனை கோபம் என்று எண்ணிப் பார்த்த மன்னவன் புகழேந்தி சிறையிலிருப்பதை நினைவுகூர்ந்தான். தான் பெரிய தவறிழைத்து விட்டோமென்று மனம் வருந்திய மன்னன் உடனடியாகப் புகழேந்திப் புலவரை சிறையிலிருந்து விடுவித்து, அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, அரசியின் பிணக்குத்தீர உதவும்படி வேண்டினான்.
அரசனின் வேண்டுகோளை ஏற்ற புகழேந்தி அரசியின் அந்தப்புரத்துக்கு வந்தார். புகழேந்தி வருவதை அறிந்த அரசி ஓடோடிச்சென்று கதவைத் திறந்து தம் மதிப்பிற்குரிய குருநாதரை வரவேற்று அமரச்செய்தாள்.
அரசியின் மனம் சமாதானமாகும் விதமாக ஆறுதல் கூறிய புகழேந்தி, “நூலிழையொன்றை இரண்டாய் வகிர்ந்ததுபோன்ற மெல்லிய இடையுடையவளும், பொற்குழைகள் இரண்டை ஏந்தியவளும், அழகிய கண்களுடையவளுமாகிய ஆரணங்கே, மழை பொழிவதுபோல் இரண்டு கைகளாலும் பாணங்களைத் தன் எதிரிகள் மேல் எரியும் ஆற்றல்பெற்ற குலோத்துங்கன் உன் அறை வாசலுக்கு வருகையில் அவன் செய்த ஒன்றிரண்டு பிழைகளைப் பொறுத்துக்கொள்வது உயர்குடியில் பிறந்த உனக்கு சிறப்பைத் தரும்” எனும் பொருள்பட,
“இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையொன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி
மழையொன்றிரண்டுகைப் பாணாபரண நின் வாசல் வந்தால்
பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே”
எனும் பாடலைக் கூற, அரசியும் பிணக்குத் தீர்ந்தாள். ஒட்டக்கூத்தருக்காகப் போடப்பட்ட இரட்டைத் தாழ்ப்பாளும் திறந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.