தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாள்

தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாள்

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கொண்டாடிடும் பண்டிகைகளில் ஒரு பண்டிகையை தன் இனத்தின் பெயராலேயே “தமிழர் திருநாள்” என்று “பொங்கல்”விழாவாக கொண்டாடுகிறார்கள். இந்தச் சிறப்பு வேறு எந்த ஒரு இனத்திற்கும் இல்லாத ஓர் தனிச் சிறப்பு தமிழர்களுக்கே உரித்தான ஒன்று.இந்நாட்டில் எண்ணற்ற பண்டிகைகள் வருடம் முழுவதும் கொண்டாடுகிறோம். அப்படி கொண்டாடிடும் பண்டிகைகளுக்கு எண்ணில் அடங்கா கதைகள் உண்டு.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஒவ்வொன்றும் அவரவர் நம்பிக்கை சார்ந்து சமய சார்பாக, மதசார்பாக, கடவுள் சார்பாக கூறப்படுகிறது.அவை அனைத்தும் உண்மையா? பொய்யா? அறிவுக்குப் பொருந்துவதா? இக்கால கட்டத்துக்கு ஏற்புடையதா? என்று யாரும் யோசிப்பதும் கிடையாது. அதனைப் பற்றி கேள்வி எழுப்புவுதும் இல்லை.ஆனால், மக்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள். காரணம் அது அவர்கள் நம்பிக்கை சார்ந்த செயலை போற்றுவது, மற்றொன்று அதனையொட்டி நடைபெறும் கேளிக்கை, விருந்து, சுயவிளம்பரம் இவை அனைத்தும் அடிப்படையில் மனிதனின் நம்பிக்கையைச் சார்ந்த ஒரு செயலை முன்னெடுத்து செயல்படுகிறது.

அதனால் மனித சமூகத்திற்கு பயன் ஏற்படுகிறதா? என்றால் அதற்கு ஒருங்கிணைந்த பதிலை எல்லோரிடமும் பெற முடியாது. முடிவில் கேள்விக்குறியே மிச்சம்.எது எப்படி இருப்பினும் அந்த பண்டிகைகளுக்கு பின்னணியில் ஒரு கதை உள்ளது. சரி அப்படியென்றால் பொங்கல் விழாவுக்கும் ஒரு கதை இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் எப்படி நாம் ஆண்டுதோறும் விழாவாக கொண்டாடுவோம்?ஆமாம் உண்டு ஆனால் அது கற்பனையான கதையல்ல, அது ஒரு காரணக் காரியம் காலம் காலமாக தமிழர் இனத்தின் பண்பாட்டினை பாதுகாத்து வளர்க்கும் வாழ்வியல் முறை.

உலகின் மூத்தக்குடி தமிழர்கள் என்று சொல்வதற்கு உயிரோட்டமாக நம் நாகரிகத்தினை போற்றி பாடிடும் விழா.எக்காலத்திலும் திராவிடர்-தமிழர் பண்பாட்டை அழியவிடாமல் தற்காத்து நிற்கும் தனித்துவமான பெருநாள். தமிழர் இனத்தின் வாழ்வியலையே நாளும் ஒரு விழாவாக கொண்டாடிடும் நன்மை பயக்கும் திருநாள். நன்றி நவிலும் நன்னாள். இது ஒரே ஒரு நாளில் முடியக் கூடிய விழா அல்ல.. தொடர்ச்சியாக நாலு நாள்கள் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் “பொங்கல்”.இவ்வளவு சிறப்பு வாய்ந்த பொங்கல் விழாவை எப்போது கொண்டாடுகிறோம் என்பதில் தான் தமிழர் திருநாளின் சிறப்பே அடங்கியுள்ளது.

அதாவது நாம் கொண்டாடும் விழாக்கள் பொதுவாக சமயம், மதம் சார்ந்து “நட்சத்திரம்”, “திதி” அடிப்படையில் அமையும் அல்லது கடவுளின் பிறந்தநாள், சமய சான்றோர்களின் பிறந்த நாள்களின் அடிப்படையில் அமையும். “நட்சத்திரம், “திதி”அடிப்படையில் அமையும் விழா நாட்கள் அந்த ஆண்டின் பஞ்சாங்கப்படி நிர்ணயிக்கப்படும், அதனால் அந்த விழா நாள்கள் ஆண்டுதோறும் ஒரே நாளில் வராமல் மாறிமாறி வரும்.ஆனால் பொங்கல் விழா மட்டும் மேற்கூறிய அடிப்படையில் அமையவில்லை. பஞ்சாங்கத்தின் படியும் கொண்டாடும் நாள் நிர்ணயிக்கப்படுவது இல்லை. மாறாக “தை” மாதத்தின் முதல் நாளிலேயே எப்போதும் கொண்டாடப்படுகிறது. ஏன் தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடி வருகிறார்கள்? அதற்கு எதுவும் தனி புராண கதைகள் உள்ளதோ? என்றால் கிடையாது, பிறகு என்ன காரணம்?தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு வாழ்ந்துள்ளார்கள்.

அதாவது சூரியனை மையமாக வைத்துதான் இந்த உலகமே இயங்குகிறது.பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதை வைத்து நேரம், நாள் கணக்கு. நிலவைக் கொண்டு மாத கணக்கு, பூமி சூரியனை சுற்றி வருகின்ற கால அளவை ஒருமுறை ஓர் ஆண்டு என்று கணக்கிட்டுள்ளார்கள். அப்படி கணக்கீடு செய்யப்பட்ட ஆண்டின் தொடக்க நாள் அதாவது பூமி-சூரியனை ஒருமுறை சுற்றி முடித்து மீண்டும் தொடங்கும் நாள். அந்த நாள் தான் தை மாதத்தின் முதல் நாள். அதுதான் தமிழ் வருடத்தின் முதல் நாள் என்று, அதனை வரவேற்று விழாவாக கொண்டாடுகிறார்கள்.இப்படி ஓர் ஆண்டிற்கு அச்சாரமாக இருப்பது சூரியன்.

அந்தச் சூரியன் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை என்பதனால், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரியனுக்கு முன்பு பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்குகிறார்கள்.அதனால் தான் இன்றும் வீட்டின் முற்றத்திலும், வீட்டின் வெளியே தெருக்களிலும், அல்லது சூரியன் நேராக படும்படி திறந்த வெளிகளிலும் பொங்கலிட்டு கொண்டாடுகிறார்கள். இதனால் சூரியப் பொங்கல் என்றும் அழைப்பார்கள்.இப்படி ஆண்டின் தொடக்கமாக “தை”மதம் வருவதனால் பண்டைக் கால இலக்கியங்களில், சங்க இலக்கியங்களில் “தை”மாதத்தை சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏறத்தாழ நாற்பதுக்கும் அதிகமான இடங்கள் தை என்ற சொல்லைப் பெயராகவும் வினையாகவும் (தைஇ எனும் அளபெடை நிலையில்) பயன்படுத்தியுள்ளமை சங்க இலக்கியங்களில் காணலாம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் தமிழறிஞர் முனைவர் பேரா.சுப.திண்ணப்பன் அவர்கள் “தைப் பொங்கலின் தனித் தன்மைகள்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தை முதல் நாளைப் புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடி வந்துள்ளதற்கு ஆதாரங்களை வரலாற்றில் தேடும் முன்பு நடைமுறையில் பொங்கல் விழாவை எப்படி கொண்டாடுகிறோம் என்று பார்த்தாலே நன்றாக புரிந்து கொள்ள முடியும். தை மாதத்தை வரவேற்க அதற்கு முந்தைய மார்கழி மாதத்திலிருந்து தொடங்கி தை பிறக்கும் வரை தெருக்களில் வீட்டின் வாசலில் வண்ணவண்ண கோலமிட்டு புத்தாண்டு பொங்கல் விழா தொடங்கிய உணர்வை ஏற்படுத்தி விடுவார்கள்.

வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி, வெள்ளை அடித்து வர்ணம் தீட்டி இல்லத்தை புதுப்பிப்பார்கள்.வீட்டை சுத்தப்படுத்தி தேவையில்லா பழைய துணிகளை, பொருட்களை தைப் பொங்கலுக்கு முதல் நாள் வீட்டிலிருந்து அப்புறப்படுத்துகிறார்கள்.

தை-1 புத்தாண்டு பொங்கல் அன்று வீட்டை அலங்கரித்து ,புத்தாடை அணிந்து, புதுப் பானை வைத்து, அந்தப் போகத்தில் விளைந்த புதுநெல் புத்தரிசியைக் கொண்டு வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி கூறி படைத்து உறவினர்கள், நண்பர்களுடன் ஒன்றுகூடி பகிர்ந்து விருந்து உண்பார்கள். பொங்கலின் அடுத்த நாள் உலகுக்கே சோறு போடக் கூடிய விவசாயத்திற்கு பயன்பட்ட மாடுகளை அலங்கரித்து அந்த மாடுகளுக்கு நன்றி தெரிவித்து புத்தரிசியில் பொங்கல் பொங்கி அவைகளுக்கு கொடுத்து “மாட்டுபொங்கல்”விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

பொங்கலின் கடைசிநாள் “காணும் பொங்கல்”அன்று ஆண்கள், பெண்கள் எல்லோரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள், ஆடல் பாடல்கள் என்று கூடி- கொண்டாடி வருகிறார்கள். இவையனைத்தும் இன்றும் கிராமங்களில் சூழலுக்கு ஏற்ப நடை முறையில் உள்ளது.பொங்கலுக்கு வாழ்த்து அட்டை அனுப்புதல் என்ற பழக்கமும் பொங்கல் திருநாளுக்கே உரிய ஒருசிறப்பு. ஓர் ஆண்டின் தொடக்கத்தில் எல்லோருக்கும் வாழ்த்துக் கூறி அன்பான உறவுகளை இணைக்கும் தமிழர்களின் உரிய நல்லபழக்கம். இது மற்ற எந்த பண்டிகைகளுக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு. இப்போது வாட்ஸ்அப், முகநூலில் மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறினாலும் அது தொடங்கிய விழாபொங்கல் திருநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் அடிப்படைத் தொழில் விவசாயம் அதனை முதன்மைப் படுத்தி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதால் உழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.இவ்வுலகிற்கே அடிப்படையான சூரியன், மழை. உணவு இவை மூன்றையும் முதன்மையாக கருதி அவைகளை போற்றியும், நமக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தியும், நான்கு நாள் விழாவாக ஓர் ஆண்டின் தொடக்கத்தை கொண்டாடுவது அதில் தமிழர்களின் பண்பாட்டை போற்றுவது என்பது வேறு எந்த பண்டிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு. அதனால்தான் பொங்கல் விழா தமிழர் திருநாள் என்று அழைக்கப் படுகிறது.

இவ்வளவு சிறப்புகள் நிறைந்திருந்தும் நாம் ஏன் சித்திரையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறோம்? என்ற கேள்வி எழும். அதற்குக் காரணம் ஆரியர்களின் வருகைக்கு பின்பு ஏற்பட்ட ஆரிய பண்பாட்டு கலப்பு. அதனால் தமிழர் பண்பாட்டில் மதம், ஜாதி முறைகள் உருவாக்கப்பட்டு விட்டது.

இன்று இந்து மதத்தின் அடிப்படையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் இருக்கிறோம். இப்படி மத அடிப்படையில் கொண்டாடுவதால் தான் சித்திரை தமிழ்ப் புத்தாண்டுக்கு புராண கதைக் கூறப்படுகிறது. அதுவும் தமிழ் மொழிக்கு தொடர்பில்லா ஆரிய சமஸ்கிருத மொழியில் 60 ஆண்டுகளின் பெயர்களால் அழைக்கப்படுகிறது.

மேலும் தொடர் ஆண்டு முறையும் இல்லாமல் இருக்கிறது. அதனால் தான் சித்திரையை தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டாடினாலும் அது ஒரு சம்பிரதாயமாகவே இருந்து வருகிறது. இதனால் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் வேறு எந்த வரலாற்று பயனும் கிடைப்பதில்லை.இப்படி திராவிடர் நாகரிகத்தின் தமிழர்களின் பண்பாடு சீரழிந்து வருவதை கருத்தில் கொண்டு தமிழர் பண்பாட்டை காப்பதற்காக 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுக்கூடி மறைமலையடிகள் தலைமையில் கலந்துரையாடி, ஆழமாக விவாதித்து, ஆய்ந்தறிந்து “தை முதல் நாளே”தமிழ்ப் புத்தாண்டு என்றும் மேலும் அதனை தொடர் ஆண்டு கணக்காக கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.

அதன்படி திருவள்ளுவர் இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அறிவித்தார்கள்.அதன்படி தமிழ் உணர்வாளர்களும், சுயமரியாதை இயக்கத்தினர்களும் தை முதல் நாளை தான் தமிழ்ப் புத்தாண்டாக கடைப்பிடித்து வருகிறார்கள். யாரும் அரசு ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியதா என்று பார்ப்பதில்லை.

இந்நிலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு 1971 முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. இன்றும் நடைமுறையில் இருக்கிறது.ஆனால் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. அதனை 2009 ஆண்டு தி.மு.க ஆட்சியில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசாணை வெளியிட்டு நடைமுறைப் படுத்தினார்கள்.ஆனால் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனால் ஆரிய பண்பாட்டை திணிக்க 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றிவிட்டது

அதனால் இன்றும் அதே இழிநிலை தொடர்கிறது.ஆரியர்கள் ஆயிரம் ஆஏஎண்டுகளுக்கு மேலாக எல்லா நிலைகளிலும் திராவிடர் தமிழ் பண்பாட்டை மாற்றி ஆரிய பண்பாட்டை கலந்து வருகிறார்கள். ஆனால் இன்றும் முழுமையாக கலக்க முடியாமல் இருப்பது தைப் பொங்கல் தமிழர் திருநாள் மட்டும்தான்.அந்த சிறப்புக்குரிய தமிழர் திருநாள் மேலும் வலுப்பெற்றுவிட கூடாது என்று தான் ஆரிய சூழ்ச்சியை தொடர்ந்து செய்து “தை முதல் நாளை” தமிழ்ப்புத்தாண்டு என்று தமிழக அரசும் ஏற்று நடைமுறைப் படுத்துவதை பல வழிகளில் தடுத்து வருகிறார்கள்.

இந்த சூழலில் நாம் விழிப்பாக இல்லையென்றால் பிறகு எப்படி தமிழர் பண்பாட்டு நாகரிகத்தை காக்க முடியும்? சற்று சிந்தித்து பாருங்கள்.தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று 1921இல் தமிழ் அறிஞர்கள் கூடி அறிவிக்கும் போது இந்தியாவுக்கு சுதந்திரமே வரவில்லை. தமிழ்நாடு என்று தனி மாநிலமும் கிடையாது. இப்போது உள்ள தி.மு.க., அ.தி.மு.க. என்ற அரசியலில் கட்சிகளும் கிடையாது. மேலும் அந்த தமிழ் அறிஞர்கள். புலவர்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள்.அப்படி இருக்கையில் சித்திரையில் கொண்டாடும் தமிழ்ப்புத்தாண்டு ஏற்புடையது அல்ல.

தை முதல் நாளே தமிழர்களின் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிக்க வேண்டிய நோக்கம்: தமிழ் மொழி உணர்வு, தமிழர் பண்பாட்டில் ஆரிய பண்பாடு கலக்காமல் தடுப்பது. தமிழர்களின் வரலாற்றை ஒரு தொடர் ஆண்டாக கடைப்பிடிப்பது. இத்தகைய தமிழ் உணர்வுடன் அதனை நாம் கடைப்பிடித்து தமிழர் பண்பாட்டை காத்திட “தை முதல் நாளை” தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடிட வேண்டும்.ஆனால் நாம் அவ்வாறு செய்யாமல் இருப்பது எந்த வகையில் நியாயமாகும்?எல்லா பண்டிகைகளையும் எதிர்க்கும் பெரியார் அவர்கள் தை-1 தமிழ்ப்புத்தாண்டு பொங்கலை மட்டும் ஆதரித்து தமிழர்கள் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்று சொல்லியதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

மத நம்பிக்கையில் நீங்கள் ஆட்பட்டு இருந்தால் சித்திரையை “சித்திரை திருநாள்” என்று கொண்டாடிக் கொள்ளுங்கள். ஆனால், சித்திரையை தமிழ்புத்தாண்டு என்று இந்து மதத்தின் அடிப்படையில் கொண்டாடினால் தமிழர் இனத்தில் உள்ள இஸ்லாமிய, கிருஸ்துவ மதத்தைச் சார்ந்த தமிழர்களுக்கு எது தமிழ்ப்புத்தாண்டு?

தமிழ்ப்புத்தாண்டு என்பது தமிழ் இனத்தின் பெருமையை, வரலாற்றை குறிக்கக் கூடியது. இனம்வேறு, மதம்வேறு, ஓர் இனத்தில் பல மத நம்பிக்கையாளர்கள் வாழ்வார்கள். அதனால், இனத்தையும் மதத்தையும் ஒன்றாக சேர்த்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.தமிழ் மொழி உணர்வுடன், தமிழர் இனஉணர்வு, தமிழர்களின் பண்பாட்டை காத்திடவேண்டும் என்ற உணர்வுடன் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்றுக்கூறி தமிழர் திருநாள் பொங்கல் விழாவை கொண்டாடுங்கள்.அனைவருக்கும் வாழ்த்து சொல்லும் போதும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள் என்று சொல்லுங்கள்.

மாற்றம் என்பது அரசு சட்டம் கொண்டு வந்து மக்கள் கடைப்பிடிப்பார்கள் என்பதை மாற்றி மக்கள் கடைப்பிடிப்பதனால் அரசும் அதனை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம்!அனைவருக்கும் தை-1 தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்! திருவள்ளுவர் ஆண்டு 2048 வாழ்த்துகள்! http://tamilarivi.blogspot.sg/2017/01/blog-post.html

About editor 3145 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply