மார்கழி நட்சத்திரம் 2020
கலாநிதி. தணிகைச்செல்வன் முருகதாஸ் (சிரேஷ்ட விரிவுரையாளர், பெளதிகவியற்துறை,யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்)
திங்கட்கிழமை 21.12.2020
இந்த மார்கழி மாதம் மாலை நேர வானில் சூரியன் மறைந்த பின்னர் தென்மேற்கு அடிவானில் நாம் இரு பிரகாசமான நட்சத்திரங்களை அவதானிக்க முடியும்.
தொடர்ச்சியாக அவதானித்தால் தினமும் அவை இரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கி வருவதை காணலாம். டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி – அதாவது இன்று – அவை இரண்டும் மிக அண்மையில் வந்து ஒரே பிரகாசமான நட்சத்திரமாக தோன்றும். இந்நிகழ்வானது கடந்த 800 ஆண்டுகளில் நடக்கும் ஓர்அபூர்வமான நிகழ்வாகும். எனினும் அதன் பின்னர் வளர்பிறை நிலவின் பிரகாசம் காரணமாக இவ்வபூர்வ நட்சத்திரத்தை நாம் அவதானிக்க இயலாது போகும்.
இவை இரண்டும் உண்மையில் நட்சத்திரங்களே அல்ல. இரண்டிலும் பிரகாசமானது வியாழன் கோளாகும். பிரகாசம் குறைந்தது சனிக்கிரகமாகும். கோள்களும் நட்சத்திரங்கள் போன்று இரவு வானில் நமது கண்களால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
இரவு வானில் நட்சத்திரங்கள் விட்டு விட்டு ஒளிர்வதைப்போல தோன்றும். அதே வேளை கிரகங்கள் தொடர்ச்சியாக ஒளிரும் தன்மை கொண்டவை. குறிப்பாக புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என்பன நமது வெற்றுக் கண்களால் அவதானிக்கக் கூடிய அளவு பிரகாசமானவை.
சூரிய குடும்பத்தில் உள்ள ஏதேனும் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கோள்கள் (படம் 01 இல் காட்டியுள்ளது போல) அவற்றோடு பூமியை இணைக்கும் நேர்கோட்டில் வரும் நிகழ்வினை நாம் கிரகங்களின் கூட்டமைவு என அழைக்கலாம். இவ்வேளையில் அவ்விரு கோள்களும் பூமியின் இரவு வானில் இருக்குமாயின் அவை இரண்டும் சேர்ந்து வானில் ஒரே பிரகாசமான நட்சத்திரத்தைப்போல தோன்றும். உதாரணமாக செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வினை செவ்வாய் சனி கூட்டமைவு என அழைக்கலாம்.
இதேபோல சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய இரண்டு கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகியவற்றின் கூட்டமைவினை நாம் மாபெரும் கூட்டமைவு ((The Great Conjunction) என அழைக்கிறோம். வியாழன் மற்றும் சனி ஆகியன மிகவும் பெரிய கோள்களாதலால் இந்நிகழ்வானது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. வியாழன் மற்றும் சனி கோள்கள் வெவ்வேறு கதியில் சூரியனை சுற்றி வருவன. அவற்றின்
சுற்றிவரும் வேகங்களுக்கு அமைவாக இவை இரண்டும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு ஒரே நேர்கோட்டில் வரும்.
வியாழன், சனி ஆகியன இரண்டும் வெற்றுக்கண்களால் அவதானிக்கக் கூடிய அளவு பிரகாசமானவை. இவ்விரண்டு கோள்களும் மிகஅண்மையில் இருக்கும் பொழுது மிகவும் பிரகாசமான ஒரே நட்சத்திரமாக தோற்றமளிக்கும்.
இவ்வரிய நிகழ்வே நாம் 2020 டிசெம்பர் 21 ஆம் திகதி இன்று இரவு வானில் காணப்போகும் மார்கழி நட்சத்திரமாகும். படம் 01:
2019 மற்றும் 2020 டிசெம்பர் 21 ம் திகதிகளில் பூமியில் இருந்து பார்க்கும் போதான சனி மற்றும் வியாழன் கோள்களின் அமைப்பு (படம்: NASA JPL)
இவ்விரண்டு கிரகங்களையும் சூரியன் மறைந்த பின் வருகின்ற முதல் 45 நிமிடங்களுக்கு நம் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும். 2020ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான 20 நாள்களும் இவ்விரண்டு கோள்களும் அண்மையில் நெருங்கி வந்து பின்னர் விலகிச் செல்வதையும் நாம் பூமியிலிருந்து வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும் (படம் 02). டிசெம்பர் 21 ஆம் திகதி (இன்று) இவ்விரு கோள்களும் மிக அண்மை யில் வரும். எனினும் அவை சரியான நேர்கோட்டில் வராது. மிகச்சிறிய அளவான (0.1 பாகை) ஒரு விலகலோடு இருக்கும். அத்தோடு ஒரு தொலைக்காட்டி ஊடாக அவதானிக்கும் பொழுது வியாழன் மற்றும் சனி கோள்கள் மற்றும் அவற்றின் துணை கோள்களையும் நாம் ஒரே பார்வை கோணத்தில் அவதானிக் கக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறான எல்லா கூட்டமைவுகளையும் நாம் வெற்றுக்கண்களால் அவதானிக்க முடியாது. கூட்டமைவு கோள்கள் பகல் வானில் இருக்குமாயின் அவற்றை நாம் காண முடியாது. கடைசியாக 2000 ஆண்டு வைகாசி மாதம் நிகழ்ந்த வியாழன் – சனி கூட்டமைவு வெற்றுக் கண்களால் அவதானிக்க
முடியாத ஒரு நிகழ்வாகும்.
கடைசியாக கி.பி. 1623 இல் நிகழ்ந்த மாபெரும் கூட்டமைவே வெற்றுக் கண்களால் அவதானிக்க முடிந்த கடைசி மாபெரும் கூட்டமைவாகும். எனினும் இதன் பிரகாசம் மிகவும் குறைவாகவே இருந்தது. அவ்வாறு நோக்குகையில் 2020 கூட்டமைவானது 1226 மார்ச் மாதம் நிகழ்ந்த கூட்டமைவுக்கு பின்னர் நிகழ்கின்ற முதலாவது வெற்றுக்கண்களால் அவதானிக்க கூடிய பிரகாசமான நிகழ்வாகும். அதாவது இம்முறை நிகழும் இக்கூட்டமைவு கடந்த 794 ஆண்டுகளில் நிகழும் முதலாவதும் பிரகாசமானதுமான நிகழ்வாகும். அந்த வகையிலேயே 2020 கூட்டமைவு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிகழ்வானது விண்வெளியில் நிகழும் பல்லாயிரக்கணக்கான நிகழ்வுகளில் மிகச்சாதாரணமான ஒரு நிகழ்வாகும். இதனோடு தொடர்பு பட்ட வெளிவரும் வதந்திகள் உண்மையானவை அல்ல. குறிப்பாக டிசெம்பர் 21 இற்கு அடுத்துவரும் ஆறு நாள்கள் பூமியில் வெளிச்சமற்ற நாள்களாக அல்லது இருட்டாகவே இருக்கும் எனப்படுவது மிகவும் நகைப்புக்குரிய ஒரு தகவல் ஆகும். ஏனெனில் வியாழன், சனி என்பன பூமியிலிருந்தும் சூரியனிலிருந்தும் மிகவும் தொலைவில் அமைந்திருக்கும் கோள்களாகும்.
படம் 02: டிசெம்பர் 21 2020, தெளிவான மேற்கு வானில் சனி வியாழன் கோள்களின் கூட் டமைவின் தோற்றம் (படம்:NASA/JPL- Caltech) பூமியானது இருளில் ஆழ வேண்டும் எனில் நிகழக்கூடிய ஒரே சந்தர்ப்பம் சூரிய ஒளி பூமியை அடைவதை ஏதேனும் ஒரு விண்பொருள் தடுக்க வேண்டும். அதற்கு அந்த விண்பொருளானது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரவேண்டும். வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் பூமியை மற்றும் சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் இருப்பதால் அவை இரண்டும் பூமியிலிருந்து சூரியனிலிருந்து பூமிக்கு வரும் ஒளியை தடுப்பதற்கு எந்த ஒரு சாத்தியமும் இல்லை. பூமிக்கு மிக அருகில் இருக்கும் சந்திரன் இடையில் வரும்போது கூட அதிகபட்சமாக சில நிமிட நேரமே அதுவும் பூமியின் ஒரு பகுதி மட்டுமே இருளில் மூழ்கும்.
திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள இயேசுபாலன் பிறந்த இடத்துக்கு வழி காட்டிய பெத்தலகேம் நட்சத்திரம் கூட ஒரு வெள்ளி, வியாழன் கூட்டமைவாக (venus Jupiter conjunction) இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிகழ்வானது கி.மு. இரண்டாம்ஆண்டு மார்கழி மாதம் 25 ஆம் திகதி இரவு பாபிலோனில் இருந்து பார்கையில் பெத்தலகேமை நோக்கிய திசையில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஜோதிட ரீதியில் இந்நிகழ்வை நோக்கினால் நாம் அறிந்து கொள்ளக் கூடிய ஒரே விடயம் இவ்வருடம் நிகழ்ந்த வியாழன் மற்றும் சனி கிரகங்களின் பெயர்ச்சி ஆனது ஒரே இலக்கத்தில் இருப்பதை காணலாம். கூட்டிணைவு நிகழும் அதே நேரம், இரண்டு கோள்களும் ராசி வட்டத்தின் மகர ராசியில் இருக்கும். சோதிடம் என்பது கோள்களின் இயக்கத்தை மிகவும் துல்லியமாக கணிக்க வல்லது. சோதிடம் என்பது விஞ்ஞான முறையாக ஏற்றுக்கொள்ளப் படாவிடினும் இவ்வாறான பாரம்பரியமான வானியல் அறிவு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான அவதானிப்பு மற்றும் அறிவு பரிமாற்றம் என்பவற்றால் மட்டுமே சாத்தியமாகி இருக்க முடியும்.
வருகின்ற நாள்களில் மாலை வேளையில் சூரியன் மறைந்த பின்னர் வருகின்ற முதல் 45 நிமிடங்களுக்குள் நாம் இவ்வரிய நிகழ்வினை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். இம்முறை தவற விட்டால் இதே போன்ற ஒரு நிகழ்வை அவதானிப்பதற்கு நாம் இன்னுமொரு 800 ஆண்டு வரையோ அல்லது அதற்கும் மேலாகவோ காத்திருக்க வேண்டி வரலாம்.
எனவே வதந்திகளை நம்பாது இவ்வரிய நிகழ்வினை நமது கண்களால் அல்லது வசதிப்படுபவர்கள் தொலை நோக்கி உதவியுடன் கண்டு மகிழ்வோம்.
படங்கள் உசாத்துணை:
Website of NASA Jet propulsion laboratory,
https://www.nasa.gov/feature/the – great –
conjunction – of – jupiter – and – saturn \Vìïa
Leave a Reply
You must be logged in to post a comment.