தமிழ்த் தேசியக் கட்சிகள் எடுக்கும் முடிவு யாதார்த்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்!

தமிழ்த் தேசியக் கட்சிகள் எடுக்கும் முடிவு யாதார்த்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்!

நக்கீரன்

ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையின் (ஐநாமஉ பேரவை) ஆணையாளருக்கும்  ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக அனுப்பக் கூடிய நகல் கடிதம் ஒன்று யோசனைத் திட்டமாக சுமந்திரனினால் முன்வைக்கப்பட்டது. அதையிட்டு பல கேள்விகளை விக்னேஸ்வரன் எழுப்பியுள்ளார்.

“நீண்ட பல வருடங்களாகக் கால அவகாசங்களை வழங்கும் விதத்தில் தீர்மானங்களை நிறைவேற்றித் தோற்றுப் போன ஒரு விடயத்தைத்தான் மீண்டும் புதிய தீர்மானமாக வழிமொழியும் விவகாரமாக உங்கள் யோசனைத் திட்டத்தில் பிரஸ்தாபித்துள்ளீர்கள். இன்றைய நிலையில் மீண்டும் இத்தகைய ஒரு தீர்மானத்தை எடுத்து கால அவகாசம் வழங்கக் கோருவது இனியும் பயன் தரும் என்று நம்புகின்றீர்களா?” – என்று சுமந்திரனின் யோசனை குறித்து அவரிடமே கேள்வி எழுப்பியிருக்கின்றார் நீதியரசர்சி.வீ.விக்னேஸ்வரன்.

“மீண்டும் ஒரு கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்குவது அதனை வைத்துக் கொண்டு சிறுபான்மையினரான தமிழர்களையும் முஸ்லிம்களையும் மேலும் சிதறடிக்கும் தனது கைவரிசையை இலங்கை அரசு தொடரவே வழி செய்யும் என்றும் அவர் சுமந்திரனுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது ஐ.நாவினால் விசேடமாக உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் ஆயத்துக்கு இலங்கை விடயத்தைக் கொண்டு செல்லுமாறு ஐ.நா பொதுச் சபையையும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்ஸிலையும் கோருமாறு நாம் தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலை ஏன் வேண்டக் கூடாது” என்று ஒரு பதில் யோசனையை சுமந்திரனின் முன் வைத்திருக்கின்றார் நீதியரசர் விக்னேஸ்வரன். “

பிந்திய செய்தியின்படி ஐநாமஉ பேரவை ஆணையாளருக்கும்  பேரவையின்  ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக அனுப்பக் கூடிய நகல் கடிதம் ஒன்றை யோசனைத் திட்டமாக சுமந்திரனினால் முன்வைக்கப்பட்டது. அதனை விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது. ஒருவகையில் இது எதிர்பார்ப்பதே.

நிராகரித்தது மட்டுமல்ல வழமைபோல் பொய்யான, விசமத்தனமான பிரசாரம் செய்கிறார்கள் என சுமந்திரன்  அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.  

“நீண்ட பல வருடங்களாகக் கால அவகாசங்களை வழங்கும் விதத்தில் தீர்மானங்களை நிறைவேற்றித் தோற்றுப் போன ஒரு விடயத்தைத்தான் மீண்டும் புதிய தீர்மானமாக வழிமொழியும் விவகாரமாக உங்கள் யோசனைத் திட்டத்தில் பிரஸ்தாபித்துள்ளீர்கள். இன்றைய நிலையில் மீண்டும் இத்தகைய ஒரு தீர்மானத்தை எடுத்து கால அவகாசம் வழங்கக் கோருவது இனியும் பயன் தரும் என்று நம்புகின்றீர்களா?”  என்று சுமந்திரனின் யோசனை குறித்து அவரிடமே கேள்வி எழுப்பியிருக்கின்றார் நீதியரசர்சி.வீ.விக்னேஸ்வரன்.

“மீண்டும் ஒரு கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்குவது அதனை வைத்துக் கொண்டு சிறுபான்மையினரான தமிழர்களையும் முஸ்லிம்களையும் மேலும் சிதறடிக்கும் தனது கைவரிசையை இலங்கை அரசு தொடரவே வழி செய்யும்” என்றும்  விக்னேஸ்வரன் சுமந்திரனுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது ஐ.நாவினால் விசேடமாக உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் ஆயத்துக்கு இலங்கை விடயத்தைக் கொண்டு செல்லுமாறு ஐ.நா பொதுச் சபையையும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்ஸிலையும் கோருமாறு நாம் தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலை ஏன் வேண்டக் கூடாது”  என ஒரு பதில் யோசனையை சுமந்திரனின் முன் வைத்திருக்கின்றார் நீதியரசர் விக்னேஸ்வரன்.”  (காலைக்கதிர் – 19-12-2020) 

“ஐ. நா பொதுச் சபையையும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்ஸிலையும் கோருமாறு நாம் தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலை ஏன் வேண்டக் கூடாது?”  என்பது பாமரத்தனமான கேள்வி. நடைமுறை சாத்தியமற்ற கேள்வி.

அரசியலைப் பொறுத்தளவில் விக்னேஸ்வரன் ஒரு பால்குடிப் பிள்ளை.  ஆனால் அதை அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். அண்மையில் அவர் Colombo Telegraph என்ற இணையதள ஏட்டுக்கு எழுதிய கட்டுரையில் “இலங்கையில் வாழ்ந்த நாகர்கள் தமிழர்கள். தேவநம்பிய தீசன், துட்ட கைமுனு போன்ற நாக வம்ச அரசர்கள் தமிழர்கள்” என எழுதியிருந்தார்.  அதற்கான வரலாற்றுச் சான்று என்ன என்று கேட்டால் “கலாநிதி  சி. பத்மநாதன், பேராசிரியர் ப. புஷ்பரத்தினம் இருவரும் சொன்னதாகச்” சொல்கிறார். இது வேலிக்கு ஓணான் சாட்சி சொன்ன கதை போன்றது. தமிழர்கள் அல்லாத வரலாற்று ஆசிரியர்கள் வேறு யாராவது இலங்கையில் வாழ்ந்த நாகர்கள் தமிழர்கள், அவர்களது தாய்மொழி தமிழ் என  எழுதியுள்ளார்களா?

வரலாறு என்ன சொல்கிறதென்றால் இலங்கையின் ஆதிக் குடிகளில் நாகவம்சத்தவர் முதன்மையானவர்கள்.  அவர்கள் பேசிய மொழி ‘தீவுபாசை’ என மகாவம்சம் குறிப்பிடுகிறது. உருகுண இராச்சியத்தை ஆண்ட காகவருண தீசன் (கிமு 210 – 205)  மகாவலி கங்கைக்கு வடக்கே வாழ்ந்த தமிழர்கள் வேறு உருகுண இராச்சியத்தில் வாழ்ந்த நாகர்கள் வேறு என்று பிரித்தே பேசுகிறான்.

கிபி எழுதப்பட்ட மணிமேகலை நாகர்கள் பேசிய மொழி வேறு தமிழர்கள் பேசிய மொழி வேறு என்று பிரித்தே பேசுகிறது. சாதுவன் பொருள் தேடுவதற்கு கப்பலில் புறப்படுகிறான். கப்பல் புயலில் சிக்குண்டு மூழ்கிப்  போகிறது. அவன் நாகர் வாழும் மலையில் கடல் அலைகளால் ஒதுக்கப்படுகிறான். அவன்  களைப்பினால் துயிலில் ஆழ்ந்து விடுகிறான். அவனைக்  கண்ட  நாகர்கள் “ஊன் உடை இவ்வுடம்பு உணவு” என்று  கூறி அவனை எழுப்புகின்றார்கள். சாதுவன் நாகர் மொழியை ஐயமுறக் கற்றவன் என்பதால் நாகர் மொழியிலேயே அவர்களுடன் நயமாகப் பேசுகின்றான்.  நாகர்கள் தலைவன் சாதுவனின் பேச்சில் மகிழ்ந்து பொன்னும், பொருளும் கொடுத்து சந்திரதத்தன் என்னும் வணிகனின் கப்பலில் அவனை அனுப்பி வைக்கிறான். (மணிமேகலை 16 ஆவது காதை)

குறைந்த பட்சம் தமிழர்களும் கிமு 3 ஆம் நூற்றாண்டுவரை இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள்.  ஆதிக் குடிகளில் பெரும்பான்மையாக இருந்த நாகர்கள்தான் விஜயனுக்குப் பின்னர்  கிபி 7 ஆம் நூற்றாண்டுவரை இலங்கையை ஆண்டு வந்திருக்கிறார்கள். இலங்கையைத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள் அரசாட்சி செய்ததாக சான்றுகள் இல்லை. நிற்க.

 “ஐ. நா பொதுச் சபையையும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்ஸிலையும் கோருமாறு நாம் தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலை ஏன் வேண்டக் கூடாது?”  என்பது பாமரத்தனமான கேள்வி.

1947 இல் ஜிஜி பொன்னம்பலம் சோல்பரி ஆணைக்குழு  முன் 50:50 கோரிக்கையை முன்வைத்து இரண்டு நாட்கள்  ஒன்பது மணித்தியாலங்கள் தொடர்ந்து வாதாடினார். ஆனால் சோல்பரி ஆணைக்குழு பொன்னம்பலத்தின் கோரிக்கையை நிராகரித்தது. ஒரு சனநாயக  முறைமை அரசியல் அமைப்பில் பெரும்பான்மை மக்களை  வலிந்து  சிறுபான்மையாக மாற்றுவது சனநாயக விழுமியங்களுக்கு மாறானது என ஆணைக்குழு சொல்லியது.

ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானம் இல்லாது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (International Criminal Court (ICC) யாரும் நாட முடியாது. விதி விலக்கு அது தானாக முன்வந்து போர்க்குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றையிட்டு வழக்குத் தொடரலாம்.

மேலும் சிறிலங்கா றோம் சட்டத்தில் ( Rome Statute) கையெழுத்திடவில்லை. அதனால் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை, இனப்படுகொலை போன்ற குற்றங்களை  அந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது.  விதி விலக்காக  பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றினால் விசாரிக்கலாம்.

ஐநா பொச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தாது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த போது 444 தீர்மானங்களை வட மாகாண சபை நிறைவேற்றியது.  அந்தத் தீர்மானங்களுக்கு என்ன நடந்ததோ அதே கெதிதான் ஐநா பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கும் ஏற்படும்.

பாதுகாப்பு சபையில் தமிழர்களுக்கு சாதகமாகவும் சிறிலங்கா அரசாங்கத்துக்க எதிராகவும் கொண்டு வரப்படும் எந்தத் தீர்மானமாக இருந்தாலும் அதனை  சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தோற்கடிக்கும். உருசியா கூட எதிர்த்து வாக்களிக்கலாம்.

அதற்கு முதல் 15 பேர் கொண்ட பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர ஒரு நாடாவது முன்வரவேண்டும்.

ஐநா சபையின் ஒரு உறுப்பு  அமைப்பாகச் செயற்படும் சர்வதேச குற்றவியல்  நீதிமன்றம் (International Court of Justice(ICJ) வழக்குகளை விசாரிக்கலாம். ஆனால் அதன் தீர்ப்பு உறுப்பு நாடுகளைக்  கட்டுப்படுத்த முடியாது.

கடந்த காலத்தில் சிறிலங்காவுக்கு சுமந்திரன் கால அவகாசம் வாங்கிக் கொடுத்துவிட்டார் என ஊடக அறிவிலிகள், போலித் தேசியவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் கரித்துக் கொட்டினார்கள். கால அவகாசம் கொடுப்பது ஐநாமஉ பேரவையின் உறுப்பு நாடுகள். சுமந்திரன் அல்ல. அவர் எந்த நாட்டுப் பிரதிநிதியும் அல்ல. கால அவகாசம் கொடுப்பதும்  கொடுக்காது விடுவதும் உறுப்பு நாடுகளது விருப்பு வெறுப்புக்களைப் பொறுத்தது.  ஆனால் ஒன்று. கால அவகாசம் கொடுத்திராவிட்டால் அந்தத் தீர்மானம் வழக்கழிந்து போயிருக்கும். அதனால் சிறிலங்கா இலாபம் அடைந்திருக்கும்.

இதே போலத்தான் சுமந்திரன்  சர்வதேச விசாரணையைக்  கேட்காமல் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஓம் என்று சொல்லிவிட்டார் என ததேகூ இன் எதிரிகள் குத்தி முறிந்தார்கள். இன்றுவரை  வாயிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைக்கிறார்கள்.

சர்வதேச விசாரணையைத்தான் சுமந்திரன் பரிந்துரைத்தார். ஆனால் சர்வதேச விசாரணைக்குப் பதில் கலப்பு நீதிமன்ற விசாரணையைக் கோருவது என அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் தீர்மானித்தன. அந்த அணுகுமுறை தொடருமா அல்லது மாற்றியமைக்கப் படுமா (சர்வதேச விசாரணை) என்பது மார்ச் 2021 இல்தான் தெரியவரும். இப்போது சுமந்திரன் கலப்பு விசாரணைக்குப் பதில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். 

இறுதியாக ஐநாமஉ பேரவை ஒரு பொலீஸ்காரன் மாதிரியும் சட்டத்தை மீறுகிறவர்களைக்  கைது செய்து,   கூண்டில் ஏற்றி, விசாரணை  நடத்தி  தண்டனை  வழங்கும் நீதிமன்றம் என சிலர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பு தவறானது. தண்டனை வழங்கும் அதிகாரம் அதற்குக் கிடையாது. இறைமை படைத்த நாடுகளின் அவை அது.

இது தெரியாது ஐநாமஉ பேரவை சிறிலங்காவில் போர்க் குற்றம் சாட்டப்பட்ட படை அதிகாரிகளை மின்சார நாற்காலிக்கு அனுப்பப் போகிறது,  அனுப்ப வேண்டும் எனச் சிலர் கனவு காண்கிறார்கள்.

எமது விருப்பு வெறுப்புக்கு அப்பால் எது சாத்தியம் எது சாத்தியம் இல்லை என்பதை தமிழர் தரப்பு  முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கஜேந்திரகுமார் 2015 இல்  அமெரிக்கா கொண்டு வந்த  தீர்மானத்தைப் படுமோசமாக விமர்ச்சித்தவர். தீர்மானத்தில் தமிழ் என்ற வார்த்தையே இல்லை என்று சொல்லி ஜெனிவாத் தெருக்களில் அந்த தீர்மான நகலைப் போட்டு எரித்தவர்.

அதைக்கண்டு அமெரிக்க அதிகாரிகள் வியப்படைந்தார்கள். “அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை  சிங்களவர் எதிர்க்கிறார்கள். அது எங்களுக்கு விளங்குகிறது. ஆனால் தமிழர்களும் எதிர்க்கிறார்கள்.  அது எங்களுக்கு விளங்கவில்லை. அப்படியென்றால் அமெரிக்கா இந்தச் சிக்கலில் ஏன் ஈடுபட வேண்டும்” என்று சுமந்திரனைப் பார்த்துக் கேட்டார்கள்!

இருபத்திரண்டு இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கைத் தமிழர்களது சிக்கல் ஐநாமஉ பேரவையில் இன்று பேசு பொருளாக இருக்கிறது. இப்படி இருப்பதே பெரிய சாதனை. 30-1 தீர்மானம் சிறிலங்காவின் தலைக்கு மேல் தொங்கும் வாள். அதன் காலைச் சுற்றிய பாம்பு. கத்தி கழுத்தில் விழாமல்  இருக்கலாம். பாம்பு கடியாமல் இருக்கலாம். ஆனால் சிறிலங்கா  அந்தத் தீர்மானத்தில் இருந்து விலகிக் கொண்டாலும் அதனை இலேசில்  தட்டிக் கழிக்க முடியாது.

தட்டிக் கழித்தால் அதற்கான விலையை சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் கொடுக்க வேண்டி நேரிடும்!

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply