வடிவம் மரபு: பத்துப்பாட்டு
மு.இளநங்கை
முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழிலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம்
சங்க இலக்கிய வாசிப்பு பலநிலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் பத்துப்பாட்டு இலக்கியத்தை அகம், புறம் என்ற பொருண்மை அடிப் படையிலும் ஆற்றுப்படை என்ற இலக்கிய வகைமையிலும் கால ஆராய்ச்சி நிலையிலும் இதுவரை ஆராய்ந்துள்ளனர். ஆய்வுநிலையில் வடிவம் சார்ந்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. பத்துப்பாட்டைப் பின்வரும் நிலைகளில் ஆராய்ந்து அது குறித்த விரிவான பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.
– பத்துப்பாட்டு அறிமுகமும் வைப்புமுறையும்
– பத்துப்பாட்டில் அகப்புற நெகிழ்வும் இணைவும்
– எட்டுத்தொகை, பத்துப்பாட்டு அமைப்புமுறை விளக்கங்களும் தொகைநிலைச் செய்யுள் மரபிலிருந்து தொடர்நிலைச் செய்யுள் மரபுமாற்றமும்
– பத்துப்பாட்டுத் தொகுக்கப்பட காரணமாக அமைந்த கூறுகள்
– பாவியல் கோட்பாடு
– தொடையியல் கோட்பாடு
ஏட்டுப் பிரதிகளில் பத்துப்பாட்டு முறைவைப்புப் பின்வருமாறு காணப்படுகிறது. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம். இதனைத் தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது பின்வரும் பழம்பாடல்.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
ஏடுகளில் காணப்படும் அமைப்பு ஒழுங்கை எடுத்தியம்புவதாகவே இப்பாடல் உள்ளது. ஆனால் பத்துப்பாட்டு நூலுள் திரு முருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் ஈறாகப் பத்து நூல்களும் இப்பொழுது காணும் இந்த வைப்புமுறையில் தோன்றியன அல்ல என்பது ஆராய்ச்சியாளர்கள் கண்ட முடிபு.
பத்துப்பாட்டில் இடம்பெறும் இலக்கியங்கள் அகம், புறம், ஆற்றுப்படை என்ற பாகுபாட்டில் அமைந்துள்ளன. பத்துப்பாட்டுள் ஐந்து ஆற்றுப்படைகள். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகியனவாகும். மலைபடுகடாத்தைக் கூத்தராற்றுப்படை என்றும் (தொல்.நூ.இளம்.539,நச்.459) உரையாசிரியர்கள் குறிப்பிடுவர். மதுரைக் காஞ்சி வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமைகளைச் சான்றோர் எடுத்துக்கூறும் காஞ்சித் திணையில் அமைந்த புறப்பொருள் சார்ந்த நூல். முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் அகப்பொருள் பற்றிய பாடல்களாகும்.
குறிஞ்சிப்பாட்டைப் பெருங்குறிஞ்சி என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுவர். நெடுநல்வாடை அகப்பொருள் செய்தி கொண்டுள்ள போதிலும் வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு, முன்னோன் முறைமுறை காட்ட (176-177) எனப் பாண்டியனது அடையாளப் பூவைக் கூறினமையால், இதனைப் புறப்பொருள் சார்புடையது என்பர். வாகைத்திணையுள் அமைந்துள்ள கூதிர்ப்பாசறை என்னும் துறையுள் இதனை நச்சினார்க்கினியர் அடக்குவர்.
நச்சினார்க்கினியர் தொடங்கி வைத்த, நெடுநல்வாடை அகமா? புறமா? என்ற விவாதம் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் ஆய்விலும் முதன்மை பெற்றுள்ளது. அகம் (வ.சுப.மாணிக்கம், 2010:337-339), புறம் (த.வசந்தாள், 1990:354) என்ற இருவேறுபட்ட கருத்துகளுக்கும் ஆய்வாளர்கள் சான்று தந்து விளக்கியுள்ளனர். நெடுநல்வாடையின் நெகிழ்ச்சித் தன்மையே இதற்குக் காரணமாக அமைகிறது.
அகம், புறம் என்ற இரண்டிற்கும் ஒரு இணைவை ஏற்படுத்தவல்ல ஓர் அமைப்பினைப் பத்துப்பாட்டு கொண்டுள்ளது. பட்டினப்பாலையில் அகம் குறித்த செய்திகளைவிட புறத்திற்கான சூழ்நிலைகள் அதிகம் இடம் பெற்றிருக்கப் பட்டினப்பாலையை அக இலக்கியமாக அடையாளப் படுத்துவதும் நெடுநல் வாடையில் அகத்திற்கான முக்கியத்துவம் அதிகம் இடம் பெற்றிருக்கப் புற இலக்கியமாக வரையறை செய்வதுமான கருத்தாடல்கள் முகிழ்ப்பதற்கான சூழல்களை இவ்விலக்கியங்களில் அமைந்துள்ள இந்த இணைவு ஏற்படுத்துகின்றன. இதனைக் கா.சிவத்தம்பி,
பத்துப்பாட்டினுள் இடம்பெறும் முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகிய பாடல்களில் அகத்திணை, புறத்திணை இயைக்கப்பட்டுள்ள முறைமையில், நியமமான திணை, துறை மரபில் இல்லாத ஒரு நெகிழ்ச்சியை அவதானிக்கலாம் (2012:19)
என்று கூறியுள்ளார். அகப்புற இணைவு பத்துப்பாட்டில் இயல்பாக நிகழ்ந்துள்ளமையை இதன் மூலம் அறியமுடிகிறது.
நெடுநல்வாடையைப் புறத்திற்குள் அடக்கும் நச்சினார்க்கினியர் வாதம் வேம்புதலையாத்த நோன் காழெஃகம் என அடையாளப் பூக் கூறினமையின் அகமாகதாயிற்று (1986:445) என வேம்பு அடையாளப் பூ இடம்பெற்றுள்ளதைச் சுட்டிப் புறத்துள் ளடக்குகிறார். இதனை அம்மன்கிளி முருகதாஸ் ‘சங்க கவிதையாக்கம் மரபும் மாற்றமும்’ என்ற நூலில், இவ்வாறு நச்சினார்க் கினியர் கொண்டால் குறுந்தொகையில் கூட 281ஆம் பாடலில் வேம்பு அணிந்த தலைவன் கூறப்படுகின்றான் என்பதை எடுத்துக்காட்டி, அப்பாடலில் வரும் தலைவன் பாண்டியன் எனக் கருதி ஏன் புறத்திற்குள் அடக்கவில்லை என்று கேள்வி எழுப்பி தலைவனின் புறச்செயலையும் தலைவியின் இருத்தலையும் கூறி அமைகின்ற இப்பாடல் அகத்துக்குரியதே. இந்த நெகிழ்ச்சி தமிழ்க் கவிதையியல் ஏற்பட்ட வளர்ச்சி என்று கூறியுள்ளார் (2006:265).
இந்த நெகிழ்வு தன்மை சங்க இலக்கியக் கவிதையின் வளர்ச்சி போக்கினைச் சுட்டுவதாக எடுத்துரைக்கும் கா.சிவத்தம்பியின் கருத்தாடலும் இங்கு இணைத்தெண்ணத்தக்கது.
சங்க இலக்கியங்களினுள்ளே கதைப் பாடல்கள் இல்லாத இன்றைய நிலையில், முல்லைப்பாட்டு, நெடுநல்வாடையில் குறிப்பாக நெடுநல்வாடையில் ஏற்படும் இந் நெகிழ்வு சங்கத் தமிழ்க் கவிதையியலிற் காணப்படும் வளர்ச்சியாகவே கொள்ளப்படல் வேண்டும் (2012:21).
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டும் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் இயன்றிருந்தாலும் அகம், புறம் என்ற பொருள் நிலையில் ஒன்றுப்பட்டிருந்தாலும் அடிப்படையில் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதை இவ்விரு இலக்கியங்களின் தொகுப்பின் வழியாக இரா.தண்டாயுதம்,
எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் அகவற்பாக்கள் தம்மளவில் முழுமையாய் நின்றாலும், எந்தப் பாடலையும் ஒரு தனிநூல் என்று கூறுமளவிற்கு அமைப்பு முறையால் விரிந்து நிற்பதாகக் கூறமுடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியைப் புலப்படுத்தி நிற்கும் தன்னுணர்ச்சிப் பாடல்களாகவே அவை காணப்படுகின்றன. ஆனால் பத்துப்பாட்டில் காணப்படும் பாடல்கள், அவை ஒரு தொகுப்பு நூலுக்குள் அடங்கியிருந்தாலும், ஒவ்வொன்றும் தன்னளவில் ஒரு தனி முழுநூலாகவே காணப்படுகின்றது. ஒரு தனி நூலுக்கு இருக்க வேண்டிய பொருளமைதி, தொடக்கம், வளர்ச்சி, முடிவு, முழுமையுணர்ச்சி முதலியவற்றை ஒவ்வொரு நூலிலும் காணமுடியும். எனவே அளவால் நீண்டு, தம்மளவில் முழுமை பெற்ற பத்துப் பாடல்களே பத்துப்பாட்டு என்ற பெயரில் தொகுக்கப் பெற்றுள்ளன (1978:13).
என்று விளக்கி எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரண்டு தொகுப்புகளும் அமைப்பு முறையில் வேறுபட்டு உள்ளதை எடுத்துரைக்கிறார்.
எட்டுத்தொகையினைத் தன்னுணர்ச்சி மேலோங்கிய தனிப்பாடலாக அடையாளப்படுத்தும் நிலையில் பத்துப்பாட்டை நெடும்பாடல்களின் தொடக்கமாகவும் பிற்காலக் காப்பிய இலக்கியத்திற்கு முன்னோடி வடிவமாகவும் அடையாளப்படுத்தலாம்.
வாய்மொழி மரபின் கதைப்பாடல்களின் செம்மையாக்க மரபான இந்நெடும்பாடல்கள் தமிழ்க் கவிதை வளத்தில் மிகச் செழுமையாக இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம். ஆற்றுப்படைப் பாடல்கள், முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி எனத் தொடங்கும் இந்நெடும்பாடல் மரபு சிலப்பதிகாரத்தின் வழியாக முழுமைபெறுகிறது என்று சொல்ல முடியும். இவ்வகையான பாடல் மரபை நெடும்பாட்டு என்று வகைமைப் (Genre) படுத்தலாம் (2010:354).
என்ற வீ.அரசு அவர்களின் கருத்துப் பின்புலத்தோடு பத்துப்பாட்டை ஆராய்வோருக்கு இவ்வுண்மை எளிதில் விளங்கும்.
இவ்வாறு எட்டுத்தொகை, பத்துப்பாட்டை இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபடுத்திக் காட்டும் கூறுகள் இருந்தாலும் பத்துப்பாட்டு இலக்கியங்களில் நடைப்பெற்றுள்ள அகப்புற இணைவு என்பது எட்டுத்தொகையோடு ஒன்றியே காணப்படுகிறது. இந்த அகப்புற இணைவை அகநானூறு, பதிற்றுப்பத்து பாடல்களின் நீட்சியாகப் பத்துப்பாட்டு இலக்கியங்களில் இனங்காணலாம். பத்துப்பாட்டு இலக்கியங்களில் முழுமையடைந்த இந்தக் கூறு தொகை நிலையிலிருந்து தொடர்நிலை செய்யுளுக்கு மாற்றம் பெற அடிப்படை காரணியாக விளங்குகிறது.
இதனை விளக்கும் வகையில், கா.சிவத்தம்பி, ‘பத்துப்பாட்டு மரபும் மாற்றமும்’ என்ற கட்டுரையில் பத்துப்பாட்டில் அமைந்துள்ள அகப்புற இணைவு – நெகிழ்வு மரபு மாற்றங்கள் எட்டுத்தொகை பாடல்கள் சிலவற்றிலும் காணமுடியும் எனச் சுட்டிக்காட்டுகிறார். மேலும்,
அகநானூற்றுப் பாடல்களில் இடம்பெறும் உவமை என்ற பெயரில் புறச் செய்திகளைத் தாங்கி வருவதனை மறந்துவிடக்கூடாது என்று விளக்கி, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை பகுதிகளை எடுத்துக்காட்டி அகமும் புறமும் இணைக்கின்ற முறையை விளக்குவதோடு இங்குத் தான் தொகைநிலை மரபிலிருந்து தொடர்நிலை மரபு உருப்பெறுகிறது (2009:136-141).
என்று நுட்பமாக ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
பத்துப்பாட்டு, தொகை நூலாகக் காட்சியளித்தாலும், ஒவ்வொரு பாட்டும் அதனதன் அளவில் தனித்தனி நூலாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. பொருள் அளவிலும் ஒரு நூலுக்கும் மற்றொரு நூலுக்கும் அதிகம் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. எட்டுத்தொகை இலக்கியத்தைப் போல அகம், புறம் என்ற திணை அடிப்படையில் இப்பத்து நூல்களும் தொகுக்கப்பட வில்லை என்பது வெளிப்படை. ஏனெனில் இருதிணைகளைச் சார்ந்த பாடல்களும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
பத்துப்பாட்டுத் தொகுப்பை உருவாக்கியோர் சங்கத்துச் சான்றோரே என்பது நச்சினார்க்கினியர் கருத்து. மலைபடுகடாத்தில் தீயினன்ன ஒண்செங்காந்தள் (145) என்று ஒரு தொடர் காணப்படுகிறது. இதன் உரையில் நச்சினார்க்கினியர்,
இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர். அங்ஙனம் நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்றம் என்பதொரு குற்றம் இச்செய்யுட்கு உறாமையான் என்று உணர்க. (1986:621)
என்று குறிப்பிட்டுள்ளார்.
‘பத்துப்பாட்டு’ என்ற சொல்லாட்சி குறித்த கருத்துகளில் வேறுபாடுகள் பல உள்ளன. உரையாசிரியர்களே இதனை முதன்முதலில் பயன்படுத்தினர். இளம்பூரணர் (தொல்.செய். நூ.150) பயன்படுத்தியுள்ளார் என்றும் நன்னூல் மயிலைநாதர் உரையில் (நன்.387) தான் முதன்முதலில் இடம்பெற்றுள்ளது என்றும் இருநிலைப்பட்ட கருத்துகள் உள்ளன. இளம்பூரணர் ஓரிடத்தில் மட்டும் இதனைப் பயன்படுத்த மற்ற இடங்களில் எல்லாம் பத்துப்பாட்டு இலக்கியங்களின் பெயரையோ அல்லது பாட்டு என்றே குறிப்பிட்டுள்ளதால் இதனை இடைசெருகலாக எண்ணவும் இடமுண்டு.
கி.பி.14ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாட்டியல் நூலான பன்னிரு பாட்டியல் பத்துப்பாட்டு நூலின் அமைப்புக் குறித்தும் அது எந்தப் பாவில் இயற்றப்பட வேண்டும் என்பதைக் குறித்தும் இரண்டு நூற்பாக்களில் எடுத்துரைக்கிறது.
நூறடிச் சிறுமை நூற்றப்பத் தளவே
கூறிய அடியின் ஈரைம் பாட்டுத்
தொடுப்பது பத்துப் பாட்டெனப் படுமே (ப.பா. நூ.384)
அதுவே
அகவலின் வருமென அறைகுநர் புலவர் (ப.பா. நூ.385)
இப்பொழுது வழங்கும் பத்துப்பாட்டுத் தொகுப்பின் இயல்பு நோக்கி இயற்றப்பட்டனவாகவே இந்நூற்பாக்கள் அமைந்துள்ளன. பொதுவாகப் பத்துப்பாட்டை ஆசிரியப்பாவால் இயன்றது என்றே குறிப்பிடுவர். இந்நூற்பாவாவும் அவ்வாறே ஆசிரியத்தில் வரும் என்ற குறிப்பினைத் தருகிறது. ஆனால் பத்துப்பாட்டில் இரண்டு வஞ்சிப்பாக்கள் இடம்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இதே தொகுப்பில் தான் ஆற்றுப்படை இலக்கியங்களும் அமைந்துள்ளன. பாட்டியல் நூல்கள் இதனைத் தனி இலக்கியவகையாக அடையாளப் படுத்துகின்றன. ஒரே தொகுப்பில் பாட்டு, ஆற்றுப்படை என்ற இருவேறுபட்ட இலக்கிய வகைமைகள் அமைந்துள்ளதன் மூலம் இந்த வகைப்பாடுகள் தோன்றுவதற்கு முன்னரே பத்துப்பாட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவுபெறுகிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட நூற்பாக்கள் வடிவத்தை முதன்மைப்படுத்தி ஆசிரியப்பாவால் இயற்றப்பட வேண்டும் என்று கூறுவதையும் பத்துப்பாட்டின் அமைப்பையும் கொண்டு ஆராயும் போது பத்துப்பாட்டுப் பாவகையால் தொகுக்கப்பட்டுள்ளது புலனாகிறது.
அகவற்பா மிகவும் பயின்றுவந்த ஒரு காலத்தில், ஆயிரம் அடிப் பேரெல்லைக் கொண்ட பாவடிவில் நூற்றுக்கணக்கான அடிகளில் பலபாடல்கள் வெளிப்பட்டிருப்பது இயல்பே அல்லவா? இத்தகைய பாடல்களில் பத்தினைத் தேர்ந்தெடுத்தே பத்துப்பாட்டு என்று தொகுத்துள்ளனர் (1978:12).
என்ற இரா.தண்டாயுதம் கருத்தும் இத்தொடர்பில் இணைத்தெண்ணத்தக்கது. ஆசிரியத்தினை மட்டுமே கொண்டு தொகுக்கப்பட்ட இப்பத்துப்பாட்டில் இரண்டு வஞ்சிப்பாக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகம், புறம் என்ற பாடுபொருளை மையமாகக் கொண்டவை சங்க இலக்கியம். பத்துப்பாட்டிலும் அகம், புறம் என்ற இருநிலைகளில் பாடல்கள் அமைந்துள்ளன. எட்டுத்தொகை அகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்திருக்க, எட்டு நூல்களில் இரு நூல்கள் மட்டுமே புறத்தைப் பேசுகின்றன. பத்துப்பாட்டில் புறத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குறிப்பாக ஆற்றுப்படை இலக்கியங்கள் முதன்மை இடம்பெற்று விளங்குகின்றன. பட்டினப் பாலை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை ஆகியவற்றில் அகம், புறம் இரண்டையும் காணலாம். முழுமையான அகப்பாடலாகக் குறிஞ்சிப்பாட்டு அமைந்துள்ளது.
எட்டுத்தொகையிலும் ஆற்றுப்படை குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அங்கு ஒரு துறையாக அமைந்திருக்க, பத்துப்பாட்டில் ஆற்றுப்படை என்பது இலக்கிய வகைமையாக உருப்பெற்றுள்ளது. மேலும் எட்டுத்தொகையில் விறலியாற்றுப்படை துறை குறித்த செய்திகள் இடம்பெற்றிருக்க (புறம்.64,103, 105, 133…,பதிற்.40,49,57,60,78,87…) பத்துப்பாட்டில் விறலியாற்றுப்படை என்ற துறை இலக்கிய வகைமையாக உருப்பெறவில்லை. தொல்காப்பியம் இதனை,
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சிஉறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும் (தொல்.பொருள்.88)
என்ற நூற்பாவில் விளக்குகிறது. பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள ஆற்றுப்படை இலக்கியங்களில் எட்டுத்தொகையில் துறையாக இருந்த, தொல்காப்பியம் இலக்கணம் கூறியுள்ள விறலியாற்றுப்படை இடம்பெறாத நிலையும் இலக்கண வரையறை பெறாத திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் இலக்கிய வகையாக தொகுப்பில் இடம்பெற்றிருப்பதும் சிந்திக்கத்தக்கது.
பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை பாடல்களை வாய்மொழி மரபில் வழங்கும் கதைப்பாடல்களோடு ஒப்பிட்டு காணும் வீ.அரசு அவர்களின் கருத்து பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை இலக்கியத்திற்கும் எட்டுத்தொகையில் இடம்பெறும் ஆற்றுப்படை துறையில் அமைந்த பாடல்களுக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டினையும் எடுத்துரைக்கிறது.
பாணர்கள்/விறலியர் தங்கள் வாழ்வில் சந்திக்கும் உணர்வுகளைத் தன்னுணர்ச்சிப் பாங்கில் வெளிப்படுத்தும் தனிப்பாடல்களைத் தங்களது கூற்றுகளாக வெளிப்படுத்தும் அதே வேளை தம் நாடோடி வாழ்க்கைப் பயணங்களையும் கவிதைகளில் பதிவு செய்துள்ளனர். வாய்மொழி மரபில் அமையும் கதைப்பாடல்களுக்கு இணையாக நமது பாட்டும் தெகையும் என்ற தொடரில் உள்ள பாட்டுகள் அமைகின்றன. பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப் படைப் பாடல்களை இவ்வகையில் புரிந்து கொள்ளலாம் (2010:353,354).
சங்க இலக்கியமான பாட்டும் தொகையும் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பரிபாடல் ஆகிய பாவடிவங்களாலானது. சங்க இலக்கியங்களில் பயிலும் பாவடிவங்களின் தனித்தன்மை குறித்து சு.வித்தியானந்தம் அவர்கள்,
சங்க நூல்களின் யாப்பும் தனிப்பட்ட பண்பு வாய்ந்தது. அந்நூல்கள் யாவும் ஆசிரியத்தாலும் வஞ்சியிலும் அமைந்தவை. சங்க மருவிய காலத்து நூல்கள் பெரும்பாலும் வெண்பாவாலும் பல்லவர் காலத்து நூல்கள் பெரும்பாலும் விருத்தத்தாலும், துறையாலும் தாழிசையாலும் ஆனவை. இவ்வேற்றுமைகள் யாவும் சங்க நூல்களைப் பிற்காலத்து நூல்களிலிருந்து பிரித்து வைக்கின்றன (1971:41).
என்று விளங்குவதிலிருந்து சங்க இலக்கியப் பாவடிவங்களின் பழைமையையும் தனித்தன்மையையும் உணரமுடிகிறது.
சங்க இலக்கியத்தில் பயிலும் பாக்களின் சிறப்பினை வையாபுரிப்பிள்ளை அவர்கள், பிறமொழி இலக்கியங்களோடு ஒப்பிட்டு, இவ்வகையான பா வடிவங்கள் பிறமொழிகளில் இல்லை என்றும் இவை தமிழ் மொழிக்கே உரிய தனித்த சிறப்பான பாக்களாகத் திகழ்கின்றன என்றும் கூறுகிறார்.
தெலுங்கு முதலிய பிறமொழிக்குரிய ஆதியிலக்கியங்கள் வடமொழி யிலக்கணங்களைப் பின்பற்றிய செய்யுட்களால் இயன்றுள்ளன. ஆனால் தமிழ் மொழியிலுள்ள ஆதி யிலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களோவெனின், தமிழிற்கே சிறந்துரியவாய் வடமொழியிலக்கண இலக்கியங்களிற் காணப்பெறாதவாயுள்ள இலக்கணமைந்த செய்யுள் வகைகளால் இயன்றுள்ளன. அகவற்பா, கலிப்பா, வெண்பா முதலியன தமிழிற்கே தனித்துரிய செய்யுள் வகைகளாம். இவைகள் தமிழ் மக்களது கருத்து நிகழ்ச்சிக்கும் தொன்றுதொட்டு வந்த வழக்கு நிரம்பிய தொடரமைதிக்கும், தமிழ் மக்களது செவியுணர்விற்கொத்த இசை யினிமைக்கும் பொருந்துமாறு அமைந்தன. தமிழிற்கே தனியுரிமையென முத்திரையிடப் பெற்று வெளிப்போந்து வீறுற்று உலவின (1989:205).
தமிழ்மொழியின் ஆதிஇலக்கியங்களான சங்க இலக்கியம் பொருண்மையில் மட்டுமன்றி வடிவம் சார்ந்தும் தனித்து நிற்பதை இந்த எடுத்துரைப்பு உணர்த்துகிறது.
ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுள் சங்க இலக்கியத்தில் ஆசிரியப்பாவின் ஆட்சியே மிகுதி. பத்துப்பாட்டில் பயிலும் இலக்கியங்களின் பாவியல் பொதுவாக இரண்டு பாக்களைக் கொண்டு விளங்குகின்றன.
– பத்துப்பாட்டில் எட்டு நூல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன.
– மதுரைக்காஞ்சியும், பட்டினப்பாலையும் வஞ்சிப்பாவில் அமைந்துள்ளன.
பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் வஞ்சிப்பாக்களாக அமைந்துள்ளன. ஆனால் பட்டினப்பாலை ஆராய்ச்சியுரையில் மறைமலையடிகள் பட்டினப்பாலை ஆசிரியப்பா என்று நிறுவுகிறார் (1938:77). யாப்பிலாய்வாளர் அ.பிச்சை, ‘ சங்க யாப்பியல்’ நூலில் பட்டினப்பாலையில் வஞ்சியடிகள் அதிகம் வந்திருந்தாலும் வஞ்சித்தளை அதில் அதிகமாகப் பயிலவில்லை என்று காரணம் கூறி அதில் ஆசிரியத்திற்கான ஓசையே முதன்மை பெறுகிறது என்று கூறி பட்டினப்பாலையை வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா என்று நிறுவியுள்ளார் (2011:100).
யாப்பருங்கல விருத்தியுரை ‘வஞ்சி நெடும்பாட்டு’ என்று பட்டினப்பாலையைக் குறிப்பிட்டுச் செல்வதும் அதனைப் பின்பற்றித் தொல்காப்பியச் செய்யுளியல் உரையாசிரியர்களும் காரிகை யுரையாசிரியமும் உடன்பட்டுச் செல்வதும் இத்தொடர்பில் இணைத்து எண்ணத்தக்கது. மேலும் வை.மு.கோபாலகிருஷ்ணன் பத்துப்பாட்டுப் பதிப்பில் பட்டினப்பாலையை வஞ்சிப்பா (1961:2) என்று கூறியுள்ளார். ஆசிரியத்தின் தொடக்கமும் இறுதியும் நாற்சீரால் அமைய வேண்டும் என்பதில் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் விலகி இருசீர்களால் தொடக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரிசை ஆசிரியப்பா – 6 (பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,
முல்லைப்பாட்டு,மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு)
வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியப்பா – 1 (பொருநராற்றுப்படை)
இணைக்குறளாசிரியப்பா – 1 (திருமுருகாற்றுப்படை)
வஞ்சிப்பா – 2 (பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி)
என்று பொதுவாகப் பத்துப்பாட்டு யாப்பியலை அடையாளப்படுத்தலாம்.
ஒரே பா வடிவமான ஆசிரியப்பா, எட்டுத்தொகையில் தனிப்பாடலாகவும் பத்துப்பாட்டில் நெடும்பாடலாகவும் அமைந்துள்ள விதம் குறிப்பிடத்தக்கது. நான்கு வகைச் செய்யுள் வடிவங்களான ஆசிரியம், வெண்பா, வஞ்சி, கலி ஆகியவற்றில் ஆசிரியம் மிகப் பழைமையானது. நமக்குக் கிடைத்திருக்கும் கடைச்சங்க நூல்கள் பெரும்பாலும் ஆசிரிய யாப்பில் அமைந்தவை. அகவல் என்பதும் ஆசிரியப்பாவின் ஓசையாகக் கூறுவர். இந்த அகவல் மரபு பாணர் சமூகத்திலிருந்து புலவர்சமூகத்தினரால் ஆசிரியப்பாவாக அடையாளம் பெற்றுள்ளது. வாய்மொழி மரபில் அகவலாக இருந்த பாவடிவம் அரசுருவாக்க காலத்தில் ஆசிரியமாக உருப்பெறுகிறது.
காப்பியங்கள் ஆசிரியப்பாவில் அமையப் பத்துப்பாட்டின் வடிவ அமைப்பு முறையே காரணம் என்பதைச் சோ.ந.கந்தசாமி,
சங்கம் மருவிய காலத்தில் தொடர்நிலைச் செய்யுளாகிய பெருங்காப்பியம் யாப்பதற்குரிய பாவடிவமாக ஆசிரியம் வளர்ச்சி பெறுவதற்கு வழி காட்டியாக வந்தவை இத்தகைய பாட்டுக்களே எனலாம் (1989:581).
இத்தகைய பாட்டுக்களே என்று இவர் குறிப்பிடுவது பத்துப்பாட்டையாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற ஆசிரியப்பாவில் அமைந்த காப்பியங்களுக்கு வழிகாட்டியாகப் பத்துப்பாட்டு அமைந்துள்ளதை இவ்வாறு விளக்குகிறார். ஆசிரியப்பா பத்துப்பாட்டில் மூன்று தன்மைகளில் விளங்குகிறது.
1. நேரிசை ஆசிரியப்பா
2. வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியப்பா
3. இணைக்குறளாசிரியப்பா
ஈற்றயலடி முச்சீராக ஏனைய அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட பிற்கால இலக்கணிகளால் நேரிசை ஆசிரியப்பா என்று கூறப்படும் அமைப்பில் ஆறு நூல்கள் அமைந்துள்ளன. நேரிசை ஆசிரியப்பா அமைப்பே சங்க இலக்கியமான எட்டுத்தொகையில் பெருமளவு இடம்பெறுகிறது. பத்துப்பாட்டிலும் அதுவே பெருமளவு இடம்பெற்றுள்ளது. இதனைச் சோ.ந.கந்தசாமி,
ஏனைய தொகை நூல்களிலும் நேரிசை ஆசிரியப்பா மிகுதியாக வழங்குதல் போல்பத்துப்பாட்டிலும் அதன் ஆட்சியே மேலோங்கி நின்றது (1989:575).
ஆசிரியப்பாவில் வஞ்சியடிகள் மயங்கி வருவதை வஞ்சியடி மயங்கிய ஆசிரியப்பா என்றும் வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியப்பா என்றும் அறிஞர்கள் கூறுவர். பொருநராற்றுப்படையில் வஞ்சியடிகள் விரவிய நிலையில் நேரிசை ஆசிரியப்பா அமைந்துள்ளது. வஞ்சியடிகள் அனைத்தும் இருசீர்களால் இடம்பெற்றுள்ளமை சுட்டத்தக்கது.
திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு இலக்கியங்களோடு பொருண்மை அடிப்படையில் விலகி நிற்பது போல, வடிவமைப்பிலும் நேரிசை ஆசிரியப்பா விலிருந்து விலகி இணைக்குறளாசிரியப்பாவாக விளங்குகிறது. திருமுரு காற்றுப்படையில் ‘ஒருகை’ என்ற சொல் பல அடிகளில் பயின்றுவந்துள்ளது.
இதனைத் தனிச்சொல்லாகக் கொள்வதற்கு ஏற்ப ‘கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை’ (திரு.114) என்ற அடியில் வெள்ளடி பயின்றுவந்துள்ளது. இங்கு ‘ஒருகை’ என்பதைக் கூனாகக் கொண்ட நிலையில் இலக்கிய முழுவதும் பயிலும் ‘ஒருகை’ என்பது விட்டிசைத்துக் கூன் அமைப்பினைப் பெறுகிறது. இந்நிலையில் திருமுருகாற்றுப்படையில் இருசீர் அடிகளும் முச்சீர் அடிகளும் பயின்று வரும் நிலை காணப்படுகிறது. திருமுருகாற்றுப்படையினை இணைக்குறளாசிரியப்பாவாக எடுத்துக்காட்டும் சோ.ந.கந்தசாமி,
மார்பொடு விளங்கஒருகை
தாரொடு பொலியஒருகை (திரு.112-113)
இவ்வடிகளை இங்ஙனம் இருசீர் பயின்ற வஞ்சியடியாகக் கொள்ளாது முச்சீர் பயின்ற ஆசிரிய அடியாகக் கருதின், இந்நூலினை இணைக் குறளாசிரியத்தினால் இயன்றது என்றே கொள்ளுதல் வேண்டும். இவற்றை வஞ்சியடியாகக் கொள்ளின் வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியம் என்று எண்ணுதல் சாலும் (1989:585).
என்று விளக்குகிறார். மேற்குறிப்பிட்ட இரண்டு அடிகளிலும் ஒருகை என்ற சொல் அமைந்துள்ள நிலையில் அவற்றை முச்சீராகக் கொள்ளாமல் இரண்டு சீர்களாகக் கொண்டு ஒருகை என்பதைக் கூனாக எடுத்துக் கொண்ட நிலையில் ஆசிரியடியாக இவ்வடிகள் அமைகின்றன என்று புதுவிளக்கமும் தரலாம். சோ.ந.கந்தசாமி இவ்வடிகளை இருசீராகக் கொண்டால் வஞ்சியடிகளாக விளங்கி வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியம் என்று கொள்ளவும் இடம் உள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் திருமுரு காற்றுப்படையில் வேறு எங்கும் வஞ்சியடிகள் பயிலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நக்கீரர் இயற்றிய சங்க இலக்கிய ஆசிரியப்பாக்களும் நெடுநல்வாடையும் நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்த நிலையில் திருமுருகாற்றுப்படை மட்டும் இணைக்குறளாசிரியப்பாவில் அமைந்துள்ளது கருதத்தக்கது. திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியமான பத்துப்பாட்டு தொகுப்பிலும் சைவ இலக்கியமான திருமுறை தொகுப்புகளுள் ஒன்றான பதினோராம் திருமுறையிலும் ஒருங்கே இடம்பெற்றிருப்பதற்கு அதன் வடிவமும் முதன்மை காரணமாக விளங்குகிறது. ஏனெனில் பதினோராம் திருமுறையில் நக்கீர தேவநாயனார் இயற்றிய இடம்பெற்றுள்ள ஆசிரியப்பாக்களில் பெரும்பான்மை இணைக்குறளாசிரியப்பாக்கள்.
நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை குறித்து இதுவரை மூன்று நிலைகளில் கருத்துகள் வெளிப்பட்டுள்ளன.
உ.வே.சாமிநாதையர் பத்துப்பாட்டில் பாடினோர் வரலாறு குறிப்பிடுமிடத்தில் அனைத்து இலக்கியங்களையும் ஒரே நக்கீரர் பாடியதாகப் பதிவுசெய்கிறார் (1986: xivii).
எஸ்.வையாபுரிப்பிள்ளை பொருண்மை அடிப்படையில் ஆராய்ந்து எட்டுத் தொகையில் நக்கீரர் இயற்றிய பாடல்களும், நெடுநல்வாடையும் சங்ககால நக்கீரர் இயற்றியன எனவும் பதினோராம் திருமுறையில் உள்ள பாடல்களும் திருமுருகாற்றுப்படையும் நக்கீரதேவ நாயனார் இயற்றின எனவும் விளக்கியுள்ளார் (1989:142-165).
மு.அருணாசலம் திருமுருகாற்றுப்படை மட்டும் சங்ககால நக்கீரர் இயற்றியதாகவும் பதினோராம் திருமுறையில் உள்ள பிற இலக்கியங்கள் நக்கீர தேவநாயனார் இயற்றியதாகவும் எடுத்துரைக்கிறார் (2001:218).
திருமுருகாற்றுப்படை இணைக்குறளாசிரியமாக வடிவநிலையிலும் சங்க கால நக்கீரர் இயற்றிய பாடல்களிலிருந்து விலகி பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நக்கீர தேவநாயனார் இயற்றிய பாடல்களோடு வடிவ நிலையிலும் ஒன்றியும் காணப்படுவதால் வையாபுரிப்பிள்ளையின் கருத்துநிலைப்பாட்டோடு திருமுருகாற்றுப்படையைப் பொருத்திப் பார்க்க அதன் வடிவமும் ஒரு காரணமாக அமைவதை அவதானிக்க முடிகிறது.
ஆசிரியப்பாவின் ஈறு அதன் அகவல் தன்மையினை உறுதிசெய்யும் நிலையில் அமைகிறது. ஆசிரியப்பாவின் ஈறு குறித்துத் தொல்காப்பியர் ஏதும் கூறவில்லை. எனினும் எண்வகை வனப்புக்களுள் ஒன்றான இயைபு குறித்துக் கூறுங்கால்,
ஞாகரை முதலா னகாரை ஈற்றுப்
புள்ளி இறுதி இயைபெனப் படுமே (தொல்.செய்.232)
என்கிறார். இதற்குச் சான்றுகாட்டிய பேராசிரியர், மணிமேகலையும், கொங்குவேளிரின் தொடர்நிலைச் செய்யுளையும் காட்டினார். இவ்விரண்டுமே நிலைமண்டில ஆசிரியப்பா நூல்கள். மேலுமவர் தோலுக்கும் இயைபுக்கும் வேற்றுமை கூறுமிடத்து, தோல் என்னும் வனப்பு உயிர் எழுத்தில் முடிய வேண்டும் என்று கூறுகிறார். எனினும் இன்னின்ன உயிர்கள்தாம் ஈற்றில் வரும் என்று கூறவில்லை. இளம்பூரணர் உரையில் தோல் வனப்பிற்கு பத்துப்பாட்டுள் ஒன்றான மலைபடுகடாம் சான்றாக அமைகிறது. பத்துப்பாட்டில் உள்ள அனைத்து நூல்களும் ஏ என்ற ஈற்றைக் கொண்டுதான் முடிந்துள்ளது.
இது குறித்த காக்கைபாடினியார் நூற்பாக் கிடைக்கவில்லை. அவிநயனார் (83) ஏ,ஓ,ஆய் என்ற மூன்றானும் முடியும் என்றார். மயேச்சுரர்,
எல்லா ஒற்றும் அகவலின் இறுதி
நில்லா அல்ல நிற்பன வரையார்
என்று கூறுகிறார். தொல்காப்பியர் இயைபு வனப்பிற்குக் கூறியதை மயேச்சுரர் ஆசிரியப்பாவின் இறுதியாகக் கட்டமைத்துள்ளார். யாப்பருங்கலம் ஏ,ஓ,ஈ,ஆய்,என்,ஐ எனக் கூறுகிறது (யாப்.69). பின்வந்த நூல்களுள் இலக்கண விளக்கம் (732) யாப்பருங்கலத்தின் நூற்பாவையே பின்பற்றுகிறது. யாப்பிலாய்வாளர்களும் சங்க இலக்கியத்தில் பயிலும் ஆசிரியப்பாவின் ஈறு குறித்து ஆராய்ந்துள்ளனர். அ.சிதம்பரநாதன் செட்டியார்,
எட்டுத்தொகை நூல்களில் ஆறில் ஐந்து நூல்கள் ஆசிரயப்பாவால் இயன்றவை. அவை ஏ என்ற அசையில் முடிபவை. நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து ஆகியவை ஏ ஈறு பெற்றவை. நானூறு செய்யுட்களைக் கொண்ட புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் ஓ என்ற அசையில் முடியும் செய்யுள் ஒன்று மட்டும் உள்ளது. அதே காலகட்டத்தில் தோன்றிய பத்துப்பாட்டு ஏ என்ற ஈறு மட்டுமே பெற்றுள்ளது. ஆசிரியப்பாவில் அமைந்த எட்டுத்தொகை நூலில் ஆறில் ஒன்றான ஐங்குறுநூற்றிலும் 94% ஏ என்ற அசை ஈறாகப் பயின்று வந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் கடைச்சங்க காலத்தில், (தொல்காப்பிய காலத்தில் இல்லாத) ஆசிரியப்பா ஏ என்ற அசை ஈறு பெறவேண்டும் என்பது மரபாக இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம். (2009:73) என்று குறிப்பிட்டுள்ளார்.
பத்துப்பாட்டின் அனைத்துப் பாக்களும் ‘ஏ’ என்ற ஈற்றுச்சீரையும் ஈற்றயலடி முச்சீரையும் பெற்று விளங்குகின்றன. பட்டினப்பாலையும் மதுரைக் காஞ்சியும் நேரிசை ஆசிரியத்தால் முடிந்த வஞ்சிப்பாக்கள். பிற்கால வழக்கான தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் முடிய வேண்டும் என்ற வஞ்சிப்பாவின் இலக்கணம் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் தொல்காப்பிய குறிப்பிடும் ‘வஞ்சி தூக்கே செந்தூக் கியற்றே’ என்ற (தொல்.செய்.நூ.68) நூற்பாவின் வழி ஆசிரிய ஈறு போல வஞ்சிப்பாவின் ஈறு அமையும் என்பது பெறப்படுகிறது. புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு முதலிய இலக்கியங்களில் பயிலும் வஞ்சியமைப்புகளே பிற்கால யாப்பிலக்கண நூல்களுக்குச் சான்றுகளாக அமைந்து தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் முடிய வேண்டும் என்று இலக்கணத்தைப் பெற அடிப்படையாக அமைகிறது.
பத்துப்பாட்டில் ஆசிரியத்திற்கு அடுத்த நிலையில் வஞ்சிப்பா இடம் பெறுகிறது. எட்டுத்தொகையிலும் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய புறநூல்களில் வஞ்சிப்பாக்களும் வஞ்சியடிகளும் இடம்பெறுகின்றன. பத்துப்பாட்டிலும் புறநூல்களான மதுரைக்காஞ்சி வஞ்சிப்பாவில் அமைந்த நூல். பொருநராற்றுப்படையில் வஞ்சியடிகள் விரவி அமைகின்றன. பட்டினப்பாலை மட்டும் வஞ்சிப்பாவில் அமைந்த அகநூலாகும். இருப்பினும் புறச்செய்திளை வஞ்சியடிகளிலும், அகசெய்திகளை ஆசிரிய அடிகளிலும் எடுத்துரைக்கிறது.
சங்க இலக்கியத்தில் உள்ள மிக முக்கியமான பாடல்கள் அகவலாகவும், அகவல் வஞ்சி சார்ந்ததாகவும் வருகின்றன. இதற்கான காரணம் அந்தப் புலவர் மரபில் அகவல் மிக முக்கியமானது. கவி தன்னுடைய கருத்தைச் சொல்லுகின்ற, அதைக் கேட்கின்ற நிலையில் விரும்பிப் பாடினதாக இருந்திருக்கலாம். பெரிய அகவல் நீண்டு கொண்டு போனால், அது கடைசி வரிக்கு முந்தைய வரி, மூன்று சீர்களைக் கொண்டதாக இருக்கும். நாற்சீரடி இருக்காது. முச்சீரடி தான் இருக்கும். முச்சீர் அடி பாடுகிற பொழுது தெரியும் பாடல் முடியப் போகிறதென்று. ஈற்றயலடி முச்சீர் என்றால் என்ன? ஈற்றயலடி என்று சொன்னால் கடைசிக்கு முன்னால் (penultimate). சங்க இலக்கியத் தினுடைய யாப்பு பெரும்பகுதி அகவல் அமைப்பில் அமைந்துள்ளது என்பது கோபாலய்யர் போன்ற அறிஞர்கள் பொதுவிலே பார்க்கின்ற பொழுது காண்பதாகும். மேலும் இது வஞ்சியினோடு சேர்ந்து வருகின்ற தன்மை சிலவற்றிற்குத் தேவை. அரசனைப் பற்றிப் பாடும்பொழுது புறநானூற்றைப் பாடும் பொழுதும் இவை தேவைப்படுகின்றன (2009:102,103).
என்ற கா.சிவத்தம்பியின் கருத்துநிலைப்பாடு சங்க இலக்கிய முழுவதிலும் ஆசிரியம், வஞ்சி பயன்பட்டுள்ள பாங்கினை எடுத்துரைக்கிறது. வாய்மொழி வழக்கில் இருந்த வஞ்சிப்பாட்டு அரசுருவாக்கக் காலத்தில் வஞ்சிப்பா என்ற இலக்கண வரையறையை அடைந்தது என்பதை,
வாய்மொழிப் பாடல்களாகிய வஞ்சிப்பாட்டு அரசு தோன்றிய காலகட்டத்தில் வரிவடிவமும் இலக்கண வரையறையும் பெற்றிருக்க வேண்டும் (2011:60).
அ.பிச்சை குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில் பயிலும் ஆசிரியப்பாவில் வஞ்சியடிகள் வருவதற்கான பயன்பாடு குறித்து மறைமலையடிகள்,
தமிழில் இவை வஞ்சியடிகளையும் அகவலடிகளையும் ஒருசேரக் கூறுமிடத்துச் சிறிது சிறிது ஓசையினை வேறுபடுத்திச் சொல்தற்குப் பயன்படுகிறது (2011:62) என்று குறிப்பிடுகிறார்.
நெடும்பாடல் மரபை ஆசிரியப்பாவில் பாடியுள்ளதோடு வஞ்சிப்பாவிலும் பாடியுள்ளனர் என்பதைப் பத்துப்பாட்டில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் உறுதிப்படுத்துகிறது. இந்த இரண்டு நெறிகளும் ஒரே சூழலில் தோன்றிய நிலையை பத்துப்பாட்டில் உருத்திரங்கண்ணனார் என்ற ஒரே புலவர் ஆசிரியம், வஞ்சி என்ற இரு பாவடிவங்களையும் நெடும்பாடல் மரபில் பயன்படுத்தியுள்ள முறையிலிருந்து கா.சிவத்தம்பி பின்வருமாறு விளக்குகிறார்.
உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் நியம முறைமை கட்கேற்பவும் அதே வேளையிற் பட்டினப்பாலையில் நியமப் பிறழ்வை ஏற்படுத்தும் வகையிலும் பாடும்பொழுது இந்த இரண்டு செல்நெறிகளும் ஒரே காலத்திலேயே காணப்பட்டன என்பது புலனாகிறது (2012:30)
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டையும் வடிவம் சார்ந்து ஒருசேர ஆராயுமிடத்து வஞ்சியடிகள், வஞ்சிப்பாக்கள் அமைந்துள்ள பொருண்மை மிகவும் முக்கியமான ஒன்று. அகப் பாடல்களில் வஞ்சியடிகளோ, வஞ்சிப்பாக்களோ இடம்பெறா நிலையில் புறச் செய்திகளை விளக்குமிடத்தில் தான் வஞ்சியடிகளும், வஞ்சிப்பாக்களும் இடம்பெறுகின்றன என்பதைச் சங்க இலக்கியத்தில் பயிலும் வஞ்சிப்பாக்கள் உறுதி செய்கின்றன.
பட்டினப்பாலை அகநூலாயினும் புறச்செய்திகள் வரும் இடங்களில்தான் வஞ்சியடிகள் பயின்றுவந்துள்ளன என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. எட்டுத் தொகையின் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய புறநூல்களில் ஆசிரியம், வஞ்சி என்ற இருவகை பாக்களும் இடம்பெற்றுள்ளது போலப் பத்துப்பாட்டிலும் இருவகை யாப்பு வடிவங்கள் பயின்றுவந்துள்ளன என்பது கருதத்தக்கது.
பாவியலுக்கு அடுத்த நிலையில் அந்தப் பாவடிவம் ஒலிநயம் பெற்றுச் சிறக்கத் தொடை முக்கிய உறுப்பாக அமைகிறது. சங்கப் புலவர்கள் ஆசிரியப்பாக்களில் எதுகை, மோனை அமைத்துப் பாடிய விதம் குறித்து,
அக்காலத்துப் புலவர்கள் ஆசிரியப்பாக்களைப் பாடியபோது எதுகை மோனைகளைப் பற்றிப் பெரிதும் கருதாமல் ஒலிநயத்தையே பெரிதாகக் கருதி, இயன்ற அளவு எதுகை மோனைகளை அமைத்துப் பாடினார் எனலாம் (1979:70).
என்று மு.வரதராசனார் கூறுவதன் மூலம் புலவர்கள் பாடலின் ஒலிநயம் சிறக்கவே எதுகை, மோனைகளை அமைத்துப் பாடினர் என்பது புலனாகிறது.
பத்துப்பாட்டில் பயின்றுவந்துள்ள தொடை அமைப்பினைப் பொதுநிலையில் ஆராய்ந்த பா.வீரப்பன்,
தொடை வகைகள் சந்தத்தில் சிறிய வேறுபாடுகளைச் செய்யும் வகையில் அமைந்துள்ளன. மோனை, எதுகை, அடி எதுகை மூன்றும் மிகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மோனையிலும் எதுகையிலும் பொழிப்புத் தொடையே மிகுதியும் அமைந்து ஓரடியின் இடையில் ஒலி ஓட்டம் உடைக்கப்படுகிறது. இது அக்கால இசை அமைப்பாக இருக்க வேண்டும். (1989:87)
என்று கூறியுள்ளார். பத்துப்பாட்டு நூல்களில் சிறுபாணாற்றுப்படையில் தொடைநயம் சிறந்து விளங்குகிறது. அடிஎதுகையும் பொழிப்பு மோனையும் செறிவாக சிறுபாணாற்றுப்படையில் அமைந்துள்ளது. பத்துப்பாட்டின் வைப்புமுறையில் சிறுபாணாற்றுப்படை மிகவும் பிந்தியதாக அடையாளப் படுத்தும் வையாபுரிப்பிள்ளையின் (1989:139,140) கருத்திற்கேற்ப சிறுபாணாற்றுப் படையின் வடிவமும் மிகச் செறிவாக அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
பேராசிரியர் தொல்காப்பியம் கூறும் ‘ஆயிரு தொடக்குங் கிளையெழுத் துரிய’ (நூ.406) என்ற நூற்பாவை விளக்குமிடத்து நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி பாடற்பகுதிகளைச் சான்றுகாட்டியுள்ளார். எதுகை, மோனை முதலிய தொடைவகைகளை எதிலும் சாராமல் அமைவதைச் செந்தொடை என்று கூறுவர். அந்தச் செந்தொடைக்கு நெடுநல்வாடையின் அடிகளைச் சான்றுகாட்டுகிறார்.
மடவரன் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து (நெடுநல். 39, 40)
இவர் சான்று காட்டிய இவ்வரிகளிலிருந்து தொல்காப்பியர் செந்தொடை என்று இணைமோனையைக் கூறுகிறாரா என்பது வினாவாக எழுகிறது. இவ்வடிகளில் சீர்நிலைகளில் இணைமோனையும் பொழிப்பு எதுகையும் பயின்றுவந்துள்ளன. செந்தொடை என்று உரையாசிரியர்கள் புரிந்துகொண்டது குறித்து ஆராய்வது தொடை குறித்த ஆராய்ச்சியில் சில முடிவுகளை வெளிகொணரும்.
வந்த எழுத்தே வாராமல் அதற்குரிய இனஎழுத்து மோனைக்குரிய இனவெழுத்துகளாக அ,ஆ,ஐ,ஔ – இ,ஈ,எ,ஏ – உ,ஊ,ஒ,ஓ என்பதும் கொள்ளப்படுகின்றன. உயிர்மெய் எழுத்துகளும் இதே நிலையில் பயின்றுவந்தால் அது அனுமோனை எனப்படும் என்பதை விளக்கி வகரத்திற்கு மகரம் இனமாக வரும் என்று சுட்டி வெகரத்திற்கு மெகரம் இனமாக வந்துள்ள நெடுநல்வாடை அடிகளைச் சான்று காட்டுகிறார்.
வெள்ளி வள்ளி விளங்கிறைப் பணைத்தோண்
மெத்தென் சாயன் முத்துறழ் முறுவல் (நெடுநல். 36, 37)
மேலும் வழிமோனைக்கு மதுரைக்காஞ்சி அடிகளையும் சான்றுதருகிறார்.
ஓங்குதிரை வியன்பரப்பின்
ஒலிமுந்நீர் வரம்பாக (மதுரை.1, 2)
(தொல்.செய்.பேரா.1989:1085, 1086)
பிற்கால யாப்பிலக்கணிகள் வழிமோனை என்பதை அனைத்துச் சீர்களிலும் முதலெழுத்து ஒரே எழுத்து அமைய பெற்ற பாடலைக் குறிப்பர். ஆனால் பேராசிரியர் அனுமோனையினை வழிமோனை என்று குறிப்பிடுகிறார்.
அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை (தொல்.செய்.88)
ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய (தொல்.செய்.89)
ஆகிய நூற்பாக்களின் உரையில் நச்சினார்க்கினியர் கட்டளையடி பெற்ற பொழிப்பு மோனை, சீர்வகையடி பெற்ற பொழிப்பு மோனை என்று தொடைகளுக்கான எடுத்துக்காட்டுக்கள்,
உலக முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுருகு.1)
இது சீர்வகையிணை மோனை
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (திருமுருகு.5)
இது கட்டளைப் பொழிப்பு மோனை
என்று நச்சினார்க்கினியர் தொடை விகற்பங்களைச் சீர்வகை இணைமோனை, கட்டளைப் பொழிப்பு மோனை என்ற இருநிலைகளில் விளக்கம் அளித்துள்ளார். இங்குச் சீர்வகை, கட்டளை என்ற இரண்டும் எதனைக் குறிக்கிறது என்பது முக்கிய வினாவாக எழுகிறது. சீர்வகை எடுத்துக்காட்டில் ஆசிரியடி இடம்பெற்றிருந்தாலும் பிற தளைகள் மயங்கி வந்துள்ளது. கட்டளை என்ற எடுத்துக்காட்டில் ஆசிரியடி முழுமையாக அமைந்து ஆசிரியத்தளையினை மட்டும் பெற்றுள்ள அடியாக விளங்குகிறது.
தொல்காப்பியர் ஆசிரியப்பாவிற்குரிய சீர்களை எடுத்துரைக்கும் (தொல்.செய்.29) நூற்பாவில் பேராசிரியர் கட்டளையடி கொண்ட ஆசிரியப்பாவில் வெண்சீர் வரக்கூடாது என்றும் சீர்வகையடி கொண்ட ஆசிரியப்பாவில் வெண்சீர் பயிலும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியரின் இந்த உரைக்குறிப்பு தொடை குறித்த நச்சினார்க்கினியரின் எடுத்துரைப்பில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து தொடை ஆராய்ச்சியில் புதுமையினைப் புகுத்தியுள்ளது.
அடிநிலையில் மட்டுமே வஞ்சிப்பாவிற்குத் தொடை காணமுடியும். சீர்நிலையில் வஞ்சிப்பாவிற்குத் தொடை காணமுடியாத நிலையில் அதற்கான விளக்கங்கள் இயற்றப்படவில்லை. இன்று விருத்தம், தாழிசை, துறை போன்ற பாவினங்களுக்குத் தொடை காணுவதில் உள்ள சிக்கல் வஞ்சிப்பாவிற்கும் உள்ளது. நாற்சீர் கொண்ட அடியில் மட்டுமே சீர்நிலை தொடைகளைக் காணமுடியும். இருசீர், முச்சீர் பயிலும் வஞ்சிப்பாவிலும், வஞ்சியடியிலும் தொடை காணமுடியாது. பத்துப்பாட்டில் பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும் வஞ்சிப்பாவாக அமைந்த நிலையில் இவ்விலக்கியத்தில் தொடை பயிலாத நிலை உள்ளதா என்ற வினா இயல்பாக எழலாம். ஆனால் வஞ்சிப்பாவான இவ்விரு இலக்கியங்களிலும் ஆசிரியடிகள் இடம்பெற்றுள்ளன.
அவ்வாறு இடம் பெற்றுள்ள நாற்சீரடிகளில் சீர்நிலையில் பயிலும் தொடைகளைக் காணமுடிகிறது. ஒவ்வொரு பாக்களுக்குரிய சிறப்பான தொடையினைக் காணும் முயற்சி யாப்பிலாய்வில் மேற்கொள்ள வேண்டிய ஆராய்ச்சியாக முன்நிற்கிறது. நாற்சீர் கொண்ட ஆசிரியப்பாவில் அடிஎதுகையும் பொழிப்பு மோனையும் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்கும் நிலையில் இவ்விரு தொடைகளை ஆசிரியப்பாவிற்குரியதாகக் கட்டமைக்கலாம்.
பத்துப்பாட்டில் தொகுப்புரைப் பாக்களாக அமைந்திருப்பது சுட்டத்தக்கது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் அப்பாட்டின் சிறப்புத் தொகுப்புரைப்பாவில் விளக்கப்படுகின்றது. தொகுப்புரைப் பாக்கள் எல்லாம் வெண்பாவிலே அமைந்திருக்கின்றன. இருப்பினும் திருமுருகாற்றுப்படையில் ஈற்றில் நிரையில் துவங்கும் பதினேழு எழுத்துக்களைக் கொண்ட கட்டளைக் கலித்துறையிலான பாடல் ஒன்று உள்ளது.
திருமுருகாற்றுப்படையின் இறுதியில் பத்து வெண்பாக்களும், பொரு நராற்றுப்படையின் இறுதியில் மூன்று வெண்பாக்களும் சிறுபாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றின் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் பிற பாட்டுக்களின் இறுதியில் ஒரு வெண்பாவும் அமைந்துள்ளன. சிலப்பதிகார காண்டத்தின் இறுதியிலும் வெண்பாக்கள் இடம்பெறுகிறது. இதுவும் பத்துப்பாட்டின் நீட்சியாகக் காப்பியங்கள் அமைவதை அடையாளப்படுத்துகிறது.
நேரிசை வெண்பாவில் 24 பாடல்களும் இன்னிசை வெண்பாவில் 1 பாடலும் இடம்பெற்றுள்ளன. மலைபடுகடாத்தில் இடம்பெற்றுள்ள இந்த இன்னிசை வெண்பாவினை இகர உகரக் குறுக்கங்களுக்கும் உயிரளபிற்கும் சிறப்பு விதியாக யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியர் (யாப்.நூ.4) எடுத் தாண்டுள்ளார். நேரிசை வெண்பாக்கள் இருவிகற்பத் தொடையைக் கொண்டு அமைந்தவை. வெண்பாவின் ஈற்றுச்சீர் நேர், நிரை, நேர்பு, நிரைபு ஆகிய ஓரசைகளைக் கொண்டு விளங்கும். பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள இந்த வெண்பாக்கள் பெரும்பான்மை நிரையில் முடிகின்றன. அகம், புறம் என்ற இரண்டும் பாட்டின் பாடுபொருளாக அமைகின்றன. எல்லா வெண்பாக்களும் இயற்சீர், வெண்பாவுரிச்சீர் ஆகிய இரண்டின் கலப்பிலே அமைந்தவை. பத்துப்பாட்டின் இறுதியிலுள்ள வெண்பாக்கள் மொத்தம் இருபத்தைந்தாகும். வெண்பாவின் ஈற்றயற்சீர் காய்ச்சீராக அமைய வேண்டும் என்று தொல் காப்பியம் கூறவில்லை. இந்த விதி பிற்கால வழக்கு. ஈற்றயற்சீர் காய்ச்சீராக அமைந்த வெண்பாக்கள் பத்துப்பாட்டில் நான்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தொகைநிலைச் செய்யுள் மரபிலிருந்து தொடர்நிலைச் செய்யுள் மரபிற்கு மரபுமாற்றம் பெறப் பத்துப்பாட்டு இலக்கியம் அடிப்படையாக அமைந்துள்ளது.
பத்துப்பாட்டு என்ற சங்க இலக்கியத் தொகை நூல் வடிவநிலையில் தனித்த சிறப்பினைப் பெற்றுப் பிற்காலக் காப்பியங்களுக்கு ஆதாரமாக அமைகிறது.
ஆசிரியப்பா என்ற பாவகையால் தொகுக்கப் பெற்ற பத்துப்பாட்டில் வஞ்சிப்பாக்கள் இரண்டு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமுருகாற்றுப்படையை இணைக்குறளாசிரியப்பா என்று அடையாளப்படுத்தும் போது பதினோராம் திருமுறையோடு பொருண்மை, வடிவம் என்ற இருநிலைகளிலும் நக்கீர தேவநாயனார் பாடல்களோடு ஒன்றிக் காணப்படுகிறது.
பிற்கால வஞ்சிப்பா இலக்கணத்திற்கு அடிப்படையாகப் புறநானூறு, பதிற்றுப்பத்து அமைவது போலப் பத்துப்பாட்டின் வஞ்சிப்பாக்களான பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் விளங்குகின்றன.
வஞ்சிப்பா புறச்செய்திகளை விளக்குமிடத்து பயில்வதும் ஆசிரியத்தின் ஓசையை மாற்றியமைக்கும் உத்தியாக ஆசிரியத்தின் இடையிடையே வருவதும் என்று சங்க இலக்கியத்தில் வஞ்சிப்பா இடம் குறித்து ஒருவாறு வரையறுக்கலாம்.
பத்துப்பாட்டில் சிறுபாணாற்றுப்படை அடிஎதுகையையும் பொழிப்பு மோனையையும் பெற்று ஆசிரியப்பாவில் தொடையழகு சிறக்கும் இடத்தினை அடையாளப்படுத்தியுள்ளது.
பயன்படுத்திய நூல்கள்:
1. அம்மன்கிளி முருகதாஸ், சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும், குமரன் புத்தக இல்லம், சென்னை, 2006.
2. அரசு, வீ. (கட்டுரையாளர்), தமிழ் இலக்கிய வகைமையும் இலக்கியக் கோட்பாடும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை, சிறப்பு மலர், சூன், 2010.
3. அருணாசலம், மு., தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, தி பார்க்கர், சென்னை, 2005.
4. இராசமாணிக்கனார், மா., பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சென்னைப் பல்கலைக் கழகம், 1970.
5. கந்தசாமி, சோ. ந., தமிழ் இலக்கணச் செல்வம், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2007.
6. கந்தசாமி, சோ. ந., தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பாகம் முதற்பகுதி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 1989.
7. கார்த்திகேசு சிவத்தம்பி, சங்க இலக்கியக் கவிதையும் கருத்தாக்கமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதற்பதிப்பு, 2009.
8. கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழின் கவிதையியல், குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை, முதற்பதிப்பு, 2007.
9. கார்த்திகேசு சிவத்தம்பி, தொல்காப்பியமும் கவிதையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, முதற்பதிப்பு, ஏப்ரல் 2012.
10. சிதம்பரநாதனார், அ., தமிழ் யாப்பியல் உயராய்வு (கி.பி. பத்தாம் நூற்றாண்டு, வரை) தமிழ் யாப்பியல் வரலாறு, இராம. குருநாதன் (ப.ஆ.), விழிகள் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2009.
11. தண்டாயுதம், இரா., சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு), தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, முதற்பதிப்பு, டிசம்பர் 1978.
12. தொல்காப்பியர், தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம், வெள்ளை வாரணன் (ப.ஆ), பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை, முதற்பதிப்பு, 1989.
13. நச்சினார்க்கினியர் (உ.ஆ.), பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், (1961ஆம் ஆண்டு நிழற்படப் பதிப்பு), 1986.
14. பிச்சை, அ., சங்க இலக்கிய யாப்பியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, முதற்பதிப்பு, ஆகஸ்ட் 2011.
15. மறைமலையடிகள், பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, டி.எம்.அச்சுக்கூடம், பல்லாவரம், மூன்றாம் பதிப்பு, 1930.
16. மாணிக்கம், வ.சுப., தமிழ்க்காதல், சாரதா பதிப்பகம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 2010.
17. மீனாட்சிசுந்தரனார், தெ.பொ., பத்துப்பாட்டு ஆய்வு (புறம்), மு.சண்முகம் பிள்ளை (ப.ஆ.), சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 1981.
18. வசந்தாள், த., தமிழிலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, முதற்பதிப்பு, 1991.
19. வரதராசன், மு., காலந்தோறும் தமிழ், பாரிநிலையம், சென்னை, மறுபதிப்பு 2003.
20. வித்தியானந்தன், சு., தமிழர் சால்பு (சங்க காலம்), பாரி புத்தகப் பண்ணை, சென்னை, முதற்பதிப்பு, 1957, இரண்டாம் பதிப்பு, 1971.
21. வீரப்பன், பா., சங்க இலக்கிய நடை, பூவழகி பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 1989.
22. வையாபுரிப்பிள்ளை, எஸ்., இலக்கியச் சிந்தனைகள், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், முதல் தொகுதி, வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 1989.Series Navigation
சமகாலச் சிறுபத்திரிகைகளின் மீதான உரையாடல்எட்டுத்தொகை : வடிவம் குறித்த உரையாடல்
Leave a Reply
You must be logged in to post a comment.