தமிழர் வரலாறு ( History of Tamil )
தஞ்சைப் பெரிய கோயில்
பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !
இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,
இது எப்படி சாத்தியமானது ? ? ! !
கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளி வந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக் கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந் தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..
பெரிய கோயில் அளவுகோல்…
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்
1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்
13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரி லிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித் தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப் படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணி களுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ளஉதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டு மானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது!!
——————————————————————————————————————
தமிழர் வரலாறு ( History of Tamil )
அரிக்கமேடு
பெயரைப் படித்தால் மிகச் சாதாரணமாக தோன்றும் .
ஆனால் , எத்தனை தேசம் போனாலும் கிடைக்காத பெருமை , பாரம்பரியம் இம்மண்ணுக்கு உள்ளதென்பதை உரக்கக் கூறும் ஒரு வரலாற்று பொக்கிஷம் .
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில் பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.
( ஆங்கிலத்தில் ARIKAMEDU ) அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது .
புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது
அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச் செழிப்புற்று வளர்ந்திருந் திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு “பிஞ்ஞோ தெ பெகெய்ன்” (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிறித்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் “அத்ரான் சாமியார் வீடு” என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த “கிருத்து சபைக்கு” (MISSIONS ETRANGERES) சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.
1937-ஆம் ஆண்டு “திரு.ழுவோ துய்ப்ரேய்” என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்ச்சுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச் சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும், சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச்செழிப்புற்று வளர்ந்திருந் திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வாளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு “பிஞ்ஞோ தெ பெகெய்ன்” (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிருத்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் “அத்ரான் சாமியர் வீடு” என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த “கிருத்து சபைக்கு” (MISSIONS ETRANGERES)சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.
ரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங் களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.
அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப் பிடுகின்றனர். அயல்நாட்டுப் பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே “பொதுகே’ என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக் குறித்துள்ளனர். பொதுகே என்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர்.
அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம்.
தொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர் நிலத்தைக் கையகப் படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது. இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலாமான, நீளமான கற்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக் கல் என நம்புவோரும் உண்டு.
அரிக்கமேடு பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச் சீற்றமோ, சமய மதப் பூசல்களோ, அயல் நாட்டினரின் படையயடுப்போ இவ்வூரின் பெருமையை அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரி வந்தது.
1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம் பிள்ளை நடக் குழிதோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944 இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்கு தெரியவந்தன.
அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள் :
அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.
பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணி உருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.
பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத் துள்ளன. ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன.பானை ஓடுகளில் “அண்டிய மகர்’, அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.
கூர்முனை சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச்சாடிகள் சான்றுகளாக உள்ளன.
எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன.
உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன.
ரோமப் பேரரசன் அகஸ்டஸ் தலை பொறித்த காசு அரிக்கமேட்டில் கிடைத்துள்ளது. அவன் வாழ்ந்த காலம் கி,மு. இருபத்து மூன்று முதல் கி.பி. பதிநான்கு வரை. அக்காலத்தில் அரிக்கமேடு சிறந்த வாணிபத்தலமாக விளங்கியது. அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், மட்பாண்ட ஓடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவ்விடம் 2000 ஆண்டுகாலப் பழைமையுடையது எனக் கருதுகின்றனர். அரிக்கமேட்டில் கிரேக்க ரோமானியர்கள் வந்து தங்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். துணி நெய்தல், மட்பாண்டம் செய்தல், மணிவகைகள் செய்தல், சங்கு வளையல் செய்தல், உருக்கு மணி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அங்குப் பெரிய நகரமே புதையுண்டு கிடக்கிறது. இவற்றிற்கு அடையாளமாகப் பல சாயத்தொட்டிகள், உறைக் கிணறுகள் அங்கு கிடைத்து வருகின்றன.
அரிக்கமேட்டில் உருக்குமணி (Beads) செய்தல் நடைபெற்றுள்ளது. உருகுந் தன்மையுடைய மணற் பொருட்களைச் சூளையிலிட்டு உருகச்செய்து வண்ணமேற்றி நீண்ட இழைகளாகச் செய்து, அதனுள்ளே காற்றைச் செலுத்தி ஊது குழலாக்கிச் சூடு குறைந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணிகள் செய்து மெருகூட்டி மணிமாலையாகக் கோர்த்துள்ளனர். கருப்பு, நீலம், ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய நிறங்களில் மணிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அகழ்வாராய்ச்சி செய்தபோது மணி செய்த சிட்டங்களும், கச்சாப் பொருட்களும் உருக்குக் கிண்ணங்களும் கிடைத்துள்ளன.
ஒளியூடுருவக் கூடிய கண்ணாடிக் கற்களைக் கொண்டு மணிகள் (Semi precious stones), செய்தனர். நீலக்கல், பச்சைக்கல், சிவப்புக்கல், கோமேதகம் முதலிய கற்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பட்டை தீட்டித் துளையிட்டு, மெருகேற்றி மணியாக்கினர். கடினமான கற்களில் மெல்லிய துளையிட்டுள்ளதைக் காணும்போது அவர்களின் கைவினைத்திறம் தெளிவாகப் புரிகிறது. இதனைக் கண்ணாடி மணிகளென்பர் (Glass Beads). கடலில் கிடைக்குஞ் சங்குகளைக் கொண்டுவந்து அறுந்து பட்டை தீட்டி, மெருகேற்றி மணியாகவும், வளையலாகவும், மோதிரமாகவும் செய்துள்ளனர்.
அரிக்கமேட்டில் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகள், காதணிகள், மூக்கணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. அரியாங்குப்பத்து ஆறு, வெள்ளப் பெருக்கெடுத்தோடி மண்ணை அரித்து விடுகிறது. அப்படி அரிக்கப்பட்ட பகுதியே அரிக்கமேடு என்பர் சிலர். அங்கே அருகன் (புத்தன்) சிலையுள்ளது. ஆதலால் அருகன்மேடு – அருக்கன்மேடு – அரிக்கன் மேடு – அரிக்கமேடு என வழங்கப்பட்டதென்பர் சிலர். இங்குள்ள புத்தர் சிலை பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டதென்றும் அதனால் அது பர்மாக் கோயிலென வழங்கப் பட்டதென்றும், பின்னாளில் பிருமன் கோயில் – பிர்மன் கோயில் என்று மருவியது எனவும் கூறுகின்றனர். இப்பகுதியில் பௌத்தம் பரவிய தென்பதற்கு இச்சிலையே சான்றாக உள்ளது.
அயல்நாட்டார் குறிப்பிடும் புதுச்சேரி:
புதுச்சேரியை பண்டைய அயல்நாடு வரலாற்று ஆசிரியர்கள் பெரிப்ளூஸ் என்னும் நூலில் (The Periplus of the Erytheraean Sea) பொதுகெ (Podouke) என்றும், தாலமி (Ptolemy) எழுதிய நூலில் பொதுகா (Podouka) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதே போல், தமிழகக் கடற்கரையை டிரிமிக்கா எனவும், காவிரிப்பூம் பட்டினத்தைக் காமரா எனவும், மரக்காணத்தை சொபட்னா (சோபட்மா) எனவும் அவர்கள் அழைத்தனர். அதற்கேற்றாற்போல் அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், அங்கு கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவொரு வணிகத் துறைமுக நகரம் இருந்ததைக் காட்டுகின்றன.
சங்க இலக்கியமும் புதுச்சேரியும் :
புதுச்சேரியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் வீரை வெளியனாரும், வீரை வெளியந்தித்தனாரும் பாடிய பாடல்கள் இலக்கிய சான்றுகளாகத் திகழ்கின்றன. தமிழ் இலக்கியங்களில் காலத்தாற் பழைமையானவை சங்க இலக்கியங்கள். அவை கி.மு. 500 ஆண்டுகளை மேல்எல்லையான உடையன. அவற்றில் வீரை வெளியனார், வீரை வெளியந்தித்தனார் என்னும் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீரைவெளி என்னும் ஊர், புதுச்சேரிப் பகுதியிலுள்ள ஒரு சிற்றூராகும். வீரர்வெளி என்பதே வீரை வெளியென மருவியது என்பர். அப்பகுதியில் வாழ்ந்தவர்களாக இவ்விரு புலவர்களையும் கருத இடமுண்டு. வீரைவெளியனார் பாடல் அகநானூற்றில் முன்னூற்று இருபதாம் பாடலாகவும், வீரைவெளியன் தித்தனாரின் பாடல் அந்நூலில் நூற்று எண்பத்தெட்டாம் பாடலாகவும் காணப்படுகின்றன. இவ்விருவரும் ஒருவரே எனக்கருதுவாரும் உண்டு.
அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக் காக்கப்படும் அரிக்கமேட்டுப் பகுதியில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தொடர் ஆய்வு செய்வதால் பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழி வணிகத்தையும் நிலைநாட்ட முடியும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தை தொல்பொருள் குறித்து ஆய்வும் , குறிப்புகளை சேகரிக்கும் திட்டப்பணியிலும் செயல்பட்டு வருகிறேன் ….
கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் அளவிற்கு பூமிக்கு நெடுக புதைந்துள்ள ஒரு மாபெரும் நகரம் . அருகிலுள்ள ஆற்றிலும் மறைந்துள்ளது .
ஆச்சரியக்கத்தக்க புகைப்படங்கள் : http://proudtobeatamil.blogspot.in/…/arikamedu…
[ மேலும் தகவல்களுக்கு : http://www.proudtobeatamil.blogspot.in/ ]
Leave a Reply
You must be logged in to post a comment.