“அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை…எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை”

“அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை…எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை”

“அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை…எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை”

மணிராஜ்,  திருநெல்வேலி.

October 17, 2020

சீனப்போரை சித்தரித்து எடுக்கப்பட்ட ரத்தத்திலகம் படம். அதில், “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு…” என்று தொடங்கும் பாடல். பாடலினூடே…

“மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”

இந்த வரிகளைக் கேட்கும் போது எல்லோருக்குமே  மெய் சிலிர்க்கும்.

“என்ன ஒரு கவிஞன், இவ்வளவு கர்வமாகப்பாடுவானா” என்று கூட  சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் அவர் பாடியது நிஜம் என்பதை அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்தபிறகும் நிரூபித்து வருகிறார். அவர் தான் காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன்.

ரத்தத்திலகம் படத்துக்காக அவர் எழுதிய பாடலை டிஎம்எஸ் பாட, அந்த பாடல் காட்சியில் அவரே மேடையில் தோன்றி நடித்தார்.

இன்றும் கூட ஐம்பதை கடந்தவர்கள் மட்டுமின்றி, ரசனையான இளம்காதலர்களும் “யூ டியூப்” சென்று கண்ணதாசன் பாடல்களை தேடித்தேடிக்கேட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி அமெரிக்க மருத்துவமனையில் உடல்நலமின்றி காலமான கவியரசருக்கு அப்போது ஐம்பத்து நாலே வயது தான் ஆகியிருந்தது.  இந்த வயதிலேயே காலன் அவர் உயிரைப்பறித்து விட்டானே என்று தமிழ் மக்கள் வேதனை அடைந்தார்கள். ஆனால் அவரை என்றென்றும் நினைத்திருக்கும் வண்ணம் 5ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையிசைப்பாடல்களைத் தந்து விட்டுச்சென்று விட்டார், அவர்.

அவை மட்டுமா? 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20-க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தை விஞ்சி நிற்கும் படைப்புகளை படைத்துச்சென்று இருக்கிறார்.

தத்துப்பிள்ளை முத்தையா

1927-ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி அவர் பிறந்தது, சிறுகூடல்பட்டி என்னும் சிற்றூர். சிவகங்கை மாவட்டத்தில் இவ்வூர் உள்ளது. தந்தை சாத்தப்பன், தாய் விசாலாட்சி.

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. அவரோடு பிறந்தவர்கள் 6 சகோதரிகள்; 2 சகோதரர்கள். அப்போதைய செட்டிநாட்டு வழக்கப்படி, அதிக பிள்ளைகளைப்பெற்ற தம்பதியர், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு தங்கள் பிள்ளைகளில் ஒன்றை தத்து கொடுத்து விடுவர். அப்படி

சிறுவயதிலேயே  7 ஆயிர ரூபாய்க்கு  “முத்தையா” தத்து கொடுக்கப்பட்டார். அவரை தத்து எடுத்த காரைக்குடி பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதியர், அவருக்கு “நாராயணன்” என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அவருக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லை. ஆனால் வாசிப்பதிலும், எழுதுவதிலும் தீராத ஆர்வம் கொண்டிருந்தார். 

ஆகவே 16 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்று, “சந்திரசேகரன்” என்ற புனைப்பெயருடன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால் சென்னை வாழ்க்கை அவருக்கு ஆரம்பத்தில் நரகமாகவே இருந்தது. பல நாட்கள் பசி-பட்டினியில் காலந்தள்ளி, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச்சேர்ந்தார். அங்கு வேலை செய்து கொண்டே அவர் எழுதிய “நிலவொளியிலே” என்ற கதை, ‘கிரகலட்சுமி’ என்ற பத்திரிகையில் பிரசுரமானது.

இதனால் அவரது எழுத்தார்வம் அதிகரித்து தொடர்ந்து எழுதத் தொடங்கினார். பிறகு புதுக்கோட்டைக்கு வந்து, “திருமகள்” என்ற பத்திரிகையில் ‘பிழை திருத்துநர்’ பணியில் சேர்ந்தார். அந்த வேலைக்கு அதன் ஆசிரியர் நேர்காணல் நடத்தியபோது,  சிறிதும் யோசிக்காமல் முத்தையா தன் பெயரை “கண்ணதாசன்” என்று கூறிவிட்டார். அந்த காலத்தில் எழுத்தாளர்கள்  “தாசன்” என முடியும் பெயர்களை சூட்டிக்கொள்வதை பெரிதும் விரும்பினர். அதைப்பின்பற்றி, முத்தையா என்கிற நாராயணனும் “கண்ணதாசன்” என அவதாரம் எடுத்தார்.

(கண்ணதாசன் என்றால் “கண்களை நேசிப்பவன்” என ஒரு கருத்தும், “கண்ணனுக்கு தாசன்” என மற்றொரு கருத்தும் உண்டு).

அவர் வேலை பார்த்த அதே பத்திரிகைக்கு ஆசிரியராகவும் ஆனார், கண்ணதாசன். அப்போது அவரது வயது 17.

தொடர்ந்து, திரை ஒலி, சண்டமாருதம், தென்றல் உள்ளிட்ட பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், அவரது பெயரிலும் ஒரு பத்திரிகை நடத்தினார். அனைத்திலும், அவருடைய கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளியாகி, அவரது இலக்கிய ஆளுமையை உலகுக்கு பறைசாற்றின. அந்த வேகத்தில் சினிமாவுக்கு எழுதும் முடிவோடு சேலம் பயணமானார். அங்கு மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் சேர்ந்து பணியாற்றியபோது, கலைஞர் கருணாநிதியின் நட்பு கிட்டி திராவிட இயக்கத்தில் இணைந்தார்.

அதோடு, சினிமா வாய்ப்பையும் பெற்றுவிட துடியாகத்துடித்தார். அதன்பலனாக கள்வனின் காதலி படத்தில் அவருக்கு பாட்டெழுத முதல் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் எழுதிய “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” பாடல் தான் அவரது முதல் பாடலாகும். கடினமான காலங்களை கலங்காமல் கடந்து வந்த அவருடைய கனவுகள் அன்று முதல் வேகமாக நிறைவேறத் தொடங்கின.

அப்போதிலிருந்து சுமார் முப்பது ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் கண்ணதாசன் பாடல்கள் இடம் பெறாத படங்களே இல்லை என்ற நிலை உருவானது. தத்துவப்பாடல் என்றாலும், காதல் பாடல் என்றாலும் கண்ணதாசன் எழுதினால் தான் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நிலையில் அவருடைய பாடல்களுக்காக திரையுலகம் காத்துக்கிடந்தது.

வாலியை உருவாக்கிய கண்ணதாசன்

‘சுமைதாங்கி’ படத்துக்காக “மயக்கமா கலக்கமா…” என்று ஆரம்பிக்கும் பாடலை கவியரசர் எழுதியிருந்தார். அதன் இடையில், “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி  நிலைக்கும்” என்ற வரிகள் வரும்.

இந்த வரிகள் தான், வாலி என்ற இன்னொரு கவிஞரை உருவாக்கித்தந்தன. சினிமா வாய்ப்பு சரிவர கிடைக்காமல் சென்னையை காலி செய்து விட்டு வேறு வேலை தேடும் முடிவில் இருந்த ரங்கராஜன் என்னும் வாலி, இந்த பாடலைக்கேட்டு தன் முடிவை மாற்றி, சென்னை யிலேயே தங்கி விடாமல் போராடி, கற்பகம் படப்பாடல்கள் மூலம் காலம் தந்த மற்றொரு கவிஞராக உருவானார்.

தத்துவங்களில் வித்தகர்

கண்ணதாசனின் தத்துவப்பாடல்களை அமரகாவியம் என்றே சொல்லலாம். பாலும் பழமும் படத்தில் இடம் பெறும் “போனால் போகட்டும் போடா” பாடலில் “வாழ்க்கை என்பது வியாபாரம். அதில் ஜனனம் என்பது வரவாகும். அதில் மரணம் என்பது செலவாகும்” என்ற வரிகளில் மனித வாழ்வின் தொடக்கத்தையும், முடிவையும் எளிதாகச்சொல்லி விடுகிறார்.

கண்ணதாசனின் சில பாடல்களில் ஒட்டுமொத்த படத்தின் கதையைக்கூட ஒரு சில வரிகளில் புரிந்து கொள்ளமுடியும். உதாரணம், ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படப்பாடலான “எங்கிருந்தாலும் வாழ்க…”

இதில் கதாநாயகன் டாக்டர்  கல்யாணகுமார் பாடுகிறார்: “வருவாய் (தேவிகா) என நான் தனிமையில் நின்றேன். வந்தது  வந்தாய் துணையுடன் (முத்துராமன்) வந்தாய். துணைவரைக்காக்கும் கடமையும் தந்தாய். தூயவளே நீ வாழ்க…”

இந்த வரிகளில் படத்தின் பெரும்பகுதி கதையையும் அடக்கி எழுதி விட்டார்.

எளிய நடையில் இலக்கிய வரிகள்

காதல் பாடல்களிலும் கண்ணதாசனின் ராஜாங்கத்தை இன்று வரை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

தமிழ் இலக்கியம் என்பது “முட்தோல் மூடியிருக்கும் பலா” போன்றது.  அந்தத்தோலை பக்குவமாக அறுத்து நீக்கி, உள்ளிருக்கும் தேன்சுவை பலாச் சுளையை அப்படியே உண்ணத்தரும் சாமர்த்தியம் கண்ணதாசனுக்கு உண்டு.

இங்கு, குறுந்தொகைப்பாடல் ஒன்றைப் பாருங்கள்.

“யாயும் ஞாயும் யாராகியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்,
யானும் நீயும் எவ்வழி அறிதும்,
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே.”

இதை சாதாரணமாக புரிந்து கொள்ளமுடியாது. இதையே ” வாழ்க்கைப் படகு” படத்தில் பாமரரும் புரியும் வண்ணம் எளிய பாடலாகத் தந்திருக்கிறார், கவியரசர்.

“நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ…
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ அங்கே நான் இங்கே…”

எவ்வளவு எளிமையாகப் புரியவைத்து விட்டார், பாருங்கள்.

அதே பாடலில்,

வள்ளுவரின்

“யான்நோக்கும் காலை
நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்லநகும்”

என்ற குறளை கண்ணதாசன் கையாண்ட விதம் பாருங்கள்.

” உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே…விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே…”

எவ்வளவு எளிய நடையில் இலக்கியம் படைத்திருக்கிறார், கவியரசர்…   பார்த்தீர்களா?

பாசமலருக்காக அவர் படைத்த “மலர்ந்து மலராத பாதி மலர் போல மலரும் விழிவண்ணமே…” பாடலுக்கு இணையான ஒரு பாடலை இன்று வரை தமிழ்சினிமா கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை.  அவருடைய ஐயாயிரம் பாடல்களையும் கேட்டால் இப்படி பலப்பல நுட்பங்கள் வெளிப்படும்.

பாட்டு மன்னனான கண்ணதாசன், எம்ஜிஆரின் ராஜாதேசிங்கு படத்துக்கு கதையும், நாடோடி மன்னனுக்கு வசனமும், மதுரை வீரனுக்கு கதைவசனமும் எழுதி இருக்கிறார். கருப்புப்பணம், வானம்பாடி, சிவகங்கை சீமை முதலிய படங்களை தயாரித்து இருக்கிறார். கருப்புப் பணம் படத்தில் பிரதான வேடத்தில் நடித்தும் இருக்கிறார். சங்கர் இயக்கி, அர்ஜுன் நடிப்பில் 90 களில் வெளியான ஜென்டில்மேன் படக்கதை ஏறக்குறைய கருப்புப்பணத்தை ஒத்தது தான்.

சிவகங்கை சீமை நல்ல திரைக்கதையுடன் வந்த படம் என்றாலும், சிவாஜி கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு போட்டியாக எடுக்கப்பட்டதால் எடுபடாமல் தோல்வியைத்தழுவியது.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இசை அமைப்பாளர்கள் கேவி மகாதேவன், எம்எஸ் விஸ்வநாதன் ஆகிய இருவருடனும் இணக்கமான நண்பராக விளங்கிய கண்ணதாசன், 76-ம் ஆண்டில் அறிமுகமான இளையராஜா இசையிலும் இனிய பாடல்களை எழுதினார்.

ஆனால் மூன்றாம் பிறை படத்துக்காக இளையராஜாவுக்கு கண்ணதாசன் எழுதிக்கொடுத்த “கண்ணே கலைமானே” பாடல் தான் அவரது கடைசி பாடலாகவும் அமைந்து விட்டது. அந்தப் பாடலை எழுதி, இளையராஜாவிடம் கொடுத்து விட்டு அமெரிக்கா சென்ற கவியரசர், தாயகம் திரும்பாமலே காலமாகி விட்டார்.

அரசியல் அவருக்கு ஏழாம் பொருத்தம்

கண்ணதாசனுக்கும் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தமாகவே அமைந்து விட்டது. 1957-ல் திமுக சந்தித்த முதல் தேர்தலில் அவர் திருக்கோஷ்டியூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்று விட்டார்.

பின்பு திமுகவுடன் கருத்து வேறுபாட்டில் விலகி, ஈவெகி சம்பத்துடன் தமிழ் தேசியக் கட்சிக்குச்சென்றார். பிறகு காங்கிரசில் இணைந்தார்.

பெரியார், அண்ணா, கருணாநிதி,  எம்ஜிஆர் ஆகியோருடன் நெருக்கமாக நட்பு பாராட்டியவர், பின்னாட்களில் கருத்து வேறுபாடு கொண்டு கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்.

1977-ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், தன்னை கடுமையாக விமர்சித்தபோதிலும், கண்ணதாசனுக்கு “அரசவைக்கவிஞர்” என்னும் கவுரவத்தை வழங்கினார்.

1981-ல் கண்ணதாசன் மறைந்ததும், காரைக்குடியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று எம்ஜிஆர் அறிவித்தார். ஆனால் உடனடியாக பணிகள் தொடங்கவில்லை.

1989-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, 90-ல் கண்ணதாசன் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கி வைத்தார். அடுத்த ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா,  மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இங்கு கண்ணதாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2400 புத்தகங்களுடன் நூலகமும் இயங்கி வருகிறது.

கண்ணதாசன் எழுதிய “சேரமான் காதலி” படைப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்று இருக்கிறார்.

அர்த்தமுள்ள இந்து மதம் என 10 பாகங்களாக அவர் எழுதிய புத்தகம் இன்றும் புத்தக கண்காட்சிகளில் அதிகமாக விற்பனையாகிறது.

இதுதவிர, வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலம், எனது சுயசரிதம் ஆகிய 4 சுயசரிதை நூல்களும் எழுதியுள்ளார்.

எழுத்தின் வாயிலாக லட்சலட்சமாக சம்பாதித்த போதிலும், “பிர்லாவைப்போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப்போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது” என்று கட்டுரை ஒன்றில் கண்ணதாசன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

15 பிள்ளைகளின் தந்தை

கண்ணதாசனின் முதல் மனைவி பொன்னம்மா.

2-வது மனைவி பார்வதி. இவர்கள் மூலம் தலா 7 பிள்ளைகள் வீதம் மொத்தம் 14 பிள்ளைகள்.

தனது 50-வது வயதில் புலவர் வள்ளியம்மையை 3-வதாக திருமணம் செய்து கொண்டார், கண்ணதாசன்.

இவர்களின் ஒரே மகள் தான் விசாலி கண்ணதாசன். இவர் கே. பாலசந்தரின் வானமே எல்லை படத்தில் நடித்திருந்தார்.

குறுகிய காலமே வாழ்ந்தாலும் புகழின் உச்சந்தொட்ட கண்ணதாசன் சொன்ன வரிகள் இவை: “எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது.”

எப்படி,”கர்ணனுக்குப்பின் கொடை இல்லை” என்பது நிஜமோ அதுபோல், “கண்ணதாசனுக்குப்பின் அவரைப்போன்ற சிறந்த கவிஞன் இல்லவே இல்லை” என்பதும் நிஜமே.

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply