இலங்கையின் வரலாற்றில் துட்டகைமுனு மிகமுக்கியமானதொரு மன்னன்
இலங்கையின் 2600 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியை தொடர்ச்சியாக பட்டியற்படுத்திய ஒரே வரலாற்று இலக்கிய மூலாதாரம் மகாவம்சம். இலங்கையின் முதலாவது ஆரிய மன்னனான விஜயன் தொடங்கி மின்னேரியா குளத்தை நிறுவிய மஹாசேனன் வரையான மன்னர்களின் வரலாற்றை கவித்துவத்துடன் முன்வைக்கும் மஹாவம்சம் இலங்கையில் உருவான ஒரு சிறப்பான பாளி இலக்கியமாகவும் கருதப்படுகிறது. பெரும்பாலான காவியங்கள் தங்களுக்கென ஒரு பாட்டுடைத்தலைவனை கொண்டிருப்பது போல மகாவம்ச காவியமும் தனக்கென ஒரு காவியத்தலைவனை கொண்டிருக்கிறது. அவன் துட்டகைமுனு.
உருகுண: தென்னிலங்கை அரண்
ஈழத்தில் புத்தசாசனத்தை நிறுவிய தேவநம்பிய தீசனின் ஆட்சியை தொடர்ந்து அவரது இளைய சகோதரர்களே ஆட்சியை தொடர வேண்டிய மரபு நிலவியது. அந்த வரிசையில் உத்தியன், மகாசிவன் ஆகியோரை தொடர்ந்து மகாநாகனும் இருந்தான். தேவநம்பிய தீசனின் மனைவி தன்னுடைய மகனை விரைவில் ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டி மகாநாகனை கொல்வதற்கு சாதி திட்டமொன்றை தீட்டினாள். தீட்டிய திட்டத்தின் முடிவில் தன்னுடைய சொந்த மகனையே இழந்தாள். தலைநகரில் தன்னுடைய உயிருக்கு நிலவும் ஆபத்தை உணர்ந்த மகாநாகன் தென்னிலங்கையான உருகுணையை அடைந்தான். மகாகம என்ற சிறிய கிராமத்தை தன்னுடைய புதிய தலை நகராக மாற்றி அங்கிருந்தவாறே ஆட்சி புரிய ஆரம்பித்தான். மகாநாகனின் இந்த நடவடிக்கையே உருகுணை ராஜ்யத்தை உண்டாக்கியது. பிற்காலத்தில் ஏற்பட்ட அனைத்து தென்னிந்தியா படையெடுப்புகளின் போதும் இலங்கையின் சிங்கள அரசர்களுக்கான பாதுகாப்பு மிக்க ஒரு அரணாக இந்த உருகுணை பிராந்தியம் திகழ்ந்தது.
மகாநாகனை தொடர்ந்து அவரது மகன் ஜத்தால தீசனும், ஜத்தால தீசனை தொடர்ந்து அவரது மகன் கோத்தாபயனும், அவரை தொடர்ந்து அவரது மகன் காவந்தீசனும் (கி.பி 205-கி.பி 161) முறையே உருகுணையை ஆட்சி புரிந்தனர். காவந்தீசனின் மனைவி விஹார மகாதேவி. கல்யாணி அரசின் இளவரசி. காவந்தீசனுக்கு அரசி மூலமாக இரு புத்திரர்கள். கைமுனு மற்றும் தீசன். காவந்தீசனுக்கு அபிஸ்வர்யா என்ற தமிழ் ஷத்திரிய இளவரசியால் திக்காபயன் என்ற புதல்வனும் இருந்தான். ஏறக்குறைய காவந்தீசன் ருஹுனுவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற காலத்தில் வடக்கில் புதியதொரு ஆட்சியாளர் உருவானார். அவர் தமிழ் மன்னன் எல்லாளன்.
எல்லாளன்: ராசரட்டையின் தமிழரசன்.
தேவநம்பிய தீசனை தொடர்ந்து மரபு வழியாக அவரது சகோதரர்கள் உத்தியன்(கி.பி 267-கி.பி 257) மற்றும் மஹாசிவன்(கி.பி 257-கி.பி 247) ஆகியோர் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்களை தொடர்ந்து அவர்களின் சிறியதந்தை சூரதிஸ்ஸ(கி.பி 247-கி.பி 237) அரசரானார். சூரதிஸ்ஸனின் ஆட்சியிலேயே சேனன் குத்திகன்(கி.பி 237-கி.பி 215) என்ற இரு தமிழ் வியாபாரிகள் அனுராதபுரத்தின் அரியாசனத்தை கைப்பற்றினர். இதுவே இலங்கை வரலாற்றில் பதிவான முதலாவது தமிழ் ஆட்சி. 22 வருடங்கள் நிலவிய இந்த ஆட்சியை தேவநம்பிய தீசனின் கடைசி தம்பியான அசேலன்(கி.பி 215-கி.பி205) முடிவுக்கு கொண்டுவந்து மீண்டும் சிங்கள அரசை நிறுவினார். எனினும் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. அசேலனின் வெற்றி ஒரு தசாப்தத்தை கடக்கும் முன்னரே மீண்டும் ஒரு தமிழராட்சி உண்டானது. இந்த முறை முன்னரை காட்டிலும் வலுவாக இருந்தது.கி.பி. 205 இல் இலங்கைக்கு வடக்கில் இருந்து எல்லாளன் என்ற தமிழ் இளவரசன் ஈழத்தை தாக்கி, வடக்கு பகுதியாக இருந்த ராசரட்டையை கைப்பற்றினார்.
எல்லாளன்(கி.பி 205-கி.பி 161) ஒரு சோழ இளவரசன் என மஹாவம்சம் கூறினாலும், தமிழக வரலாற்று ஆவணங்கள் எதிலுமே அதற்கான ஆதாரங்கள் இல்லை. எவ்வாறாயினும் எல்லாளன் தமிழன் என்பதில் மாற்று கருத்துக்கள் இல்லை. 20 பெரும் தளபதிகளின் கீழே 10 லட்சம் பேரை கொண்ட வலுவான படையமைப்பை எல்லாளன் வைத்திருந்தான் என்பது மகாவம்சத்தின் கூற்று. மேலும் நீதித்தவறாத ஆட்சியை மேற்கொண்டு வந்தமையால் மக்களிடையே எந்தவித எதிர்மறையான விமர்சனங்களும் இருக்கவில்லை. மகாவம்சத்தின் படி பசுவுக்கு நீதி வழங்க சொந்த மகனை தேர்க்காலில் பலியிட்ட மனுநீதி சோழன் இவரே. மொழியளவில் மாத்திரமே எல்லாளனுக்கும் ராசரட்டை மக்களுக்கும் இடையே பிரிவு இருந்தது. பெரும்பாலான மக்கள் எல்லாளனின் வம்சமே ஆட்சியை தொடரும் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் மாற்றத்துக்கான காரணகர்த்தா தென்னகத்தில் ஏற்கனவே உருப்பெற்று இருந்தது.
துஷ்ட காமினி
காவந்தீசனின் மனைவி விஹார மகாதேவிக்கு ராசரட்டையில் இருக்கும் தமிழராட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவு நெடுநாட்களாக இருந்தது. முதல் குழந்தை தன்னுடைய வயிற்றில் கருவான முதற்கொண்டு அந்த எண்ணம் படிப்படியாக வளர்ந்துகொண்டே சென்றது. தாயைப்போல பிள்ளை என்பது போலவே தலைமகனும் தமிழர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் கனவுடனேயே பிறந்தான். இயற்பெயர் காமினி அபயன். காமினி (கெமுனு) பிறந்த நேரத்தில் ஆறு தந்தங்களை கொண்ட யானை ஒன்று தன்னுடைய குட்டியை மகாகம எல்லையில் விட்டுச்சென்றதாக கூறி ஒரு மீனவன் அரசருக்கு செய்தி வழங்கினான். இதனை செவியுற்ற மன்னன் வீரர்களை அனுப்பி யானையை அரண்மனைக்கு கொண்டுவந்தார். யானையை இனங்காட்டிய அந்த மீனவனின் பெயரான கண்டுலன் என்பதே யானைக்கும் சூட்டப்பட்டது.
காலங்கள் மெல்ல உருண்டோடின. கெமுனு பதின்ம வயதை அடையும் தருவாயில் அவனுக்குள்ளே உருவான எண்ணங்களை காவந்தீசன் உணர்ந்தார். ராசரட்டையில் நிலவும் தமிழர் ஆட்சிக்கு எதிராக கைமுனு போர் தொடுத்தால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளை நினைத்து கவலை கொண்டார். எனவே தமிழர்களிடம் என்றும் போர்புரிய கூடாது என கெமுனுவிடம் வாக்கு பெறுவதற்கு பல தடவைகள் முயன்றார். அதற்கு எப்போதும் கெமுனுவிடம் இருந்து வந்தது வலுவான மறுப்பு மட்டுமே. தனக்கு பின்னால் எப்படியும் கெமுனு அரசனாவதோடு எல்லாளனுக்கு எதிராக படையெடுப்பையும் நிகழ்த்துவான் என்பதை உணர்ந்த மன்னர் தன்னுடைய ராஜ்யத்தை தன் மகனுக்காக வலுப்படுத்தும் வேலையில் இறங்கினார்.
ராசரட்டைக்கும், உருகுணைக்கும் இயற்கை எல்லையாக விளங்கிய மகாவலி கங்கையின் தென்திசை கரையில் காவலரண்கள் உருவாக்கப்பட்டன. கெமுனுவின் மாற்றான் தாய் சகோதரனான திக்காபயன் எல்லைப்பாதுகாப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். கெமுனுவின் இளைய சகோதரன் தீசன் தீகவாபி பகுதியில் நடைபெற்ற விவசாய பணிகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். உருகுணை முழுவதிலும் இருந்து நந்தி மித்ர, சூரநிமல, மஹாசோன, கோதயிம்பர, தேர புத்தாபாய, பரண, வேலு சுமண, கஞ்ச தேவ, புஸ்ஸ தேவ மற்றும் லபியவசப ஆகிய 10 கைதேர்ந்த வீரர்களை ஒன்று திரட்டி அவர்களின் கீழ் 11,110 பேர் கொண்ட வலுவான நிரந்தர படையணி உருவாக்கப்பட்டது.
இளமையின் வேகத்தில் தன்னை சுற்றி நடக்கும் போருக்கான ஆயத்தங்களை கவனிக்காது வெறுமனே போரில் வெல்வது பற்றி மாத்திரமே சிந்தித்த வண்ணம் இருந்த கெமுனு தன்னுடைய பொறுமையை மீறி மூன்று முறை காவந்தீசனிடம் போருக்கு அனுமதி கோரினான். அனால் மன்னன் அதனை ஏற்கவில்லை. எரிச்சலின் உச்சிக்கே சென்றுவிட்ட கெமுனு, தன்னுடைய தந்தை தமிழர்களை அஞ்சி வாழும் பேடி என்பதை குறிப்பால் உணர்த்த வேண்டி பெண்கள் அணியும் ஆடைகளையும் நகைகளையும் காவந்தீசனுக்கு பரிசாக வழங்கிவிட்டு மகாகமத்தில் இருந்து மலைநாட்டிற்கு சென்றுவிட்டான். இளவரசனின் இந்த செயலை கண்டு வெறுப்படைந்த மக்கள் கெமுனுவை, துஷ்ட(தீய)கெமுனு என்றும் சாந்தம் மிக்க தீசனை, சத்தா(நல்ல)தீசன் என்றும் அழைக்கத்தொடங்கினர். நாட்டின் இறைமையை பாதுகாத்து, காவியத்தின் தலைவன் என்ற அளவுக்கு உயர்ந்த பின்னர் கூட இன்றளவும் மக்கள் அவரை දුටුගැමුණු (துட்டகைமுனு) என்றே அழைக்கின்றனர்.
வடதிசை திக்விஜயம்
தனக்கு அடுத்து உருகுணையின் ஆட்சி குறித்தும், ராசரட்டையின் மீதான படையெடுப்பு குறித்தோ கெமுனுவுக்கும்,தீசனுக்கும் இடையில் எந்த வீட்டா முணற்பாடுகள் வந்தாலும், சண்டைகள் தோன்றினாலும் அதில் எவர் பக்கமும் ஆதரவு வழங்கக்கூடாது என காவந்தீசன் தன்னுடைய 10 தளபதிகளிடமும், நாட்டில் உள்ள பிக்குமார்களிடமும் சத்தியம் வாங்கிக்கொண்டார். வரப்போகும் மிகப்பெரிய போருக்கு தன்னால் இயன்ற அத்தனை முன்னேற்பாடுகளையும் முடித்துவிட்ட மனநிறைவில் காவந்தீசன் உயிர்த்துறந்தார். செய்தியறிந்து தீகவாபியில் இருந்து மாகாமம் வந்த தீசன் தந்தைக்கான இறுதிக்கடன்களை முடித்துவிட்டு உருகுணையின் ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்டு மீண்டும் தீகவாபிக்கே திரும்பினான். அன்னை விஹார மகாதேவி மற்றும் பட்டதுயானை கண்டுலனையும் உடன் அழைத்து சென்றுவிட்டான். இத்துணை காரியமும் முடிந்த பின்னரே கெமுனுவின் காதுகளுக்கு விடயங்கள் வந்தடைந்தன. மலைநாட்டை விட்டு மீண்டும் மகாகமத்துக்கே வந்த கெமுனு அரசனாக முடிசூட்டி கொண்டதுடன், தம்பியின் செய்கைகளால் கோபமுற்று தீசனுடன் போர்புரிய ஆரம்பித்தான். பிக்குகளின் தலையீடு காரணமாக போர் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.
கெமுனுவின் வாழ்நாள் இலக்கை அடையக்கூடிய அணைத்து வசதிவாய்ப்புகளும் இப்போது அவன் வசம் இருந்தது. தீசனை உருகுணையின் பாதுகாவலனாக நியமித்து விட்டு, உருகுணையின் 10 தளபதிகள், தன்னுடைய சேனை, தாய் விஹார மகாதேவி மற்றும் 500 பிக்குகள் சகிதம் மகாகமத்தில் இருந்து தலைநகர் அனுராதபுறத்தை மீட்க புறப்பட்டான். மஹியங்கனை,அம்பதிக்கா, கேமராம, அந்தரசோமா,டோனா,நாளிசோமா, திக்கபாயகல, சாச்சா தீர்த்த என வழி நெடுகிலும் இருந்த எல்லாளனின் அரண்கள் வீழ்த்தப்ப வண்ணமே இருந்தது. இந்த தாக்குதல்களின் வெற்றிக்கு பின் தாய் விஹார மகாதேவியின் உதவியும்,பிக்குகளின் ஆலோசனையும் பெரிதும் உதவியது. இறுதியாக எல்லாளனின் கடைசி வலுவரணான விஜிதநகர் கோட்டையை அடைந்தது சிங்களப்படை. 3 அகழிகளாலும்,உயர்ந்த மதில்களாலும், 4 வாயில்களிலும் இரும்பாலான கதவுகளாலும் பாதுகாக்கப்பட்ட விஜித நகரை தாக்கி வெல்வது கடினம் என்பதை அறிந்த கெமுனு கோட்டை முற்றுகையிட்டான்.ஒரு சில மாதங்கள் தொடர்ந்த முற்றுகையை தொடர்ந்து ஒரே நேரத்தில் நான்கு கோட்டை கதவுகளும் ஒன்றாக தாக்கப்பட்டது. கெமுனுவின் யானைப்படைக்கு தமிழ் வீரர்கள் பயன்படுத்திய எல்லா உத்திகளும் பயனற்று போகலாயின. எல்லாளன் தன்னுடைய இறுதிக்கோடையை தலைமை தளபதி திக்கஜனுடன் சேர்த்து இழக்க வேண்டியதாயிற்று.
தென்னகத்து படைகள் மெல்லமெல்ல தங்கள் பூர்வீக தலைநகரை நெருங்கியது. அனுராதபுரத்தின் கிழக்கு வாயிலில் இந்நீண்ட படையெடுப்புக்கான இறுதி அத்தியாயம் எழுதப்பட்டது. கெமுனு எல்லாளனை தனிப்போருக்கு அழைத்தான், எல்லாளனும் தன்னுடைய பட்டத்துயானை மகாபர்வதத்தின் மீது ஏறி போர்க்களம் புகுந்தார். வயதில் அதிகம் மூத்திருந்தாலும் கெமுனுவுக்கு நிகராகப்போரிட்டார் எல்லாளன். வீரனுக்கு ஏற்றவகையில் எல்லாளனின் இறுதித்தருணங்கள் போர்க்களத்திலேயே கழிந்து சென்றது. கெமுனுவிடம் இருந்து புறப்பட்ட ஈட்டியொன்று 44 ஆண்டுகளாக தலைநகரை ஆட்சிபுரிந்து வந்த சிறந்த ஆட்சியாளனுக்கு நிரந்தர ஓய்வை வழங்கியது. எல்லாளனின் வீரத்தால் ஈர்க்கப்பட்ட கெமுனு அனுராதபுரத்தின் எல்லையில் தக்கிண விகாரைக்கு அருகில் ஒரு நினைவுத்தூபியை எழுப்பி, அதனை கடந்து செல்பவர் எவராயினும் எல்லாளனுக்கு உரிய மரியாதையை செய்தாக வேண்டும் என்று அரசாணை விடுத்தான். சிலநூறு வருடங்களுக்கு முன்புவரையில் கூட இந்த பழக்கம் வழமையில் இருந்துவந்தது.
ராசரட்டையின் மீட்சி
பண்டுகாபயன் காலத்தில் உருவான இலங்கையின் ராசதானியான அனுராதபுரத்தை மீளப்பெற்ற துட்டகைமுனு அதன் அபிவிருத்தியிலேயே அதிகம் பாடுபட்டார். போரால் தூர்ந்துபோன குளங்களும், கிராமங்களும் மீள மறுசீரமைக்கப்பட்டன. அதிகளவு பௌத்தர்கள் வாழ்ந்து வந்த ராசரட்டையில் புதிதாக மிரிசுவெட்டி தூபியை அமைத்ததும் கெமுனுவே. மேலும் 9 அடுக்குகளை கொண்ட லோகமகாபாய உபதேச மண்டபம் அமைக்கப்பட்டு மாகவிகாரைக்கு தானமாக அளிக்கப்பட்டதும் இம்மன்னனாலேயே. கொத்மலை, திகாமடுல்ல ஆகிய பகுதிகளில் விவசாயதுக்கு என பல முன்னேற்ற திட்டங்களை உருவாக்கியதன் மூலம் நாட்டை பொருளாதார தன்னிறைவு பாதைக்கு இட்டுச்சென்றது இவரே. மகியங்கனையில் இருக்கும் சொரபொர வாவியும் துட்டகைமுனுவின் படைப்பே.
இலங்கையில் இன்று நிமிர்ந்து நிற்கும் ருவான்வெலிசாய தாதுகோபம் கெமுனுவின் சிந்தனையிலேயே உதித்தது. அதன் கட்டுமானம் கெமுனு மன்னனாலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் அதன் நிறைவுற்ற அமைப்பை காணும் சந்தர்ப்பத்தை அவரால் பெற முடியாது போனது. 24 வருடங்கள் (கி.பி161-கி.பி137) அனுராதபுரத்தில் இருந்து ஆட்சிபுரிந்த துட்டகைமுனுவுக்கு பின்னர் அவரது தம்பியான சத்தாதீசன் ஆட்சியை ஏற்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.