கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள்
மட்டு நகரான்
வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நாமம் இன்று உலகளவில் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் தமிழர்களின் தாயகப்பகுதியை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றது.
இந்த நிலையில், வடகிழக்கு தமிழர்களின் தாயகம் இல்லை என்பதை நிறுவும் தீவிர முயற்சியில் பௌத்த பேரினவாதம் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் ஈடுபட்டு வருகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை தமிழர்களின் தாயகம் என்ற உச்சரிப்பில் இருந்து முற்றாக நீக்கும் நடவடிக்கையினை புதிய அரசாங்கம் மிகவும் திட்டம் போட்டு முன்னெடுத்து வருகின்றது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற காலம் தொடக்கம் வடகிழக்கில் எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்காது, கிழக்கு தொல்பொருள் செயலணியொன்றை உருவாக்கி அதனை வழிநடத்துவதற்கு பௌத்த மதகுருமாரையும் நியமித்திருந்தனர்.
இது தொடர்பில் வடகிழக்கு தமிழ் மக்களினாலும் சர்வதேச சமூகத்தினாலும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பபப்பட்டிருந்தன. ஆனால் அவற்றினை யெல்லாம் புறந்தள்ளி கிழக்கு தொல்பொருள் செயலணியின் செயற்பாட்டினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகவும் திட்டமிட்ட வகையில் நகர்த்தி வருகின்றார்.
கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் இல்லை. கிழக்கு மாகாணம் சிங்கள பௌத்த மக்களுக்குரியது என்ற வகையில் காய்களை நகர்த்தி வருகின்றார். அதற்காக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த, வாழும் இடங்களில் பௌத்த தொல்லியல் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றினை நேரடியாக அரசாங்கம் செய்யும்போது ஏற்படும் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தமிழர்களின் அழுத்தங்களை குறைப்பதற்காக சில பௌத்த பிக்குகளைக் கொண்டு சில முரண்பாடுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் ஒரு கட்டமாகவே மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பகுதியில் பிக்குகள் மேற்கொண்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகள் அமைகின்றன.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியை பொறுத்தவரையில் அவர் மட்டக்களப்பு மாவட்டத்தினை பௌத்தர்களின் பூமியாக மாற்ற வேண்டும் என்பதில் பல காலமாக செயற்பட்டு வருகின்றார். அவரது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், அவரை எதிர்ப்பவர்களுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டும் வருகின்றார்.
குறிப்பாக மங்களராமய விகாராதிபதியை பொறுத்தவரையில் அவர் என்றும் மகிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசியாகவே இருந்து வருகின்றார். கடந்த நல்லாட்சிக் காலத்தில் மகிந்த ராஜபக்சவை விகாரைக்கு அழைத்து வந்து அவருக்காக பெரும் நிகழ்வினையே ஏற்பாடு செய்திருந்தார்.
கிழக்கில் பௌத்த சிங்கள வாதத்தினை வேரூன்றச் செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் மிகவும் தீவிரமாக செயற்பட்டுவரும் நிலையில், சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக அதனை வேறு வடிவில் வேரூன்றச் செய்யும் செயற்பாடுகளை அவர் மேற்கொண்டு வருகின்றார்.
குறிப்பாக கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது போரதீவுப்பற்று, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிங்களவர்களை குடியேற்றுவதில் மிகவும் தீவிரமான செயற்பாடுகளை குறித்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மேற்கொண்டுவந்த நிலையில், அதனை தடுக்க முற்பட்ட அரச அதிகாரிகள் தாக்கப்பட்டதுடன் அவர்கள் கடமையினை செய்யவிடாது தடுக்கப்பட்டனர். குறித்த தேரர் மீது அதிகாரிகளுக்கு இருந்த அச்சம் காரணமாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையினை தட்டிக்கேட்க அரச அதிகாரிகள் அச்சம் கொள்ளும் நிலையேற்பட்டது. குறிப்பாக குறித்த தேரர் அரச அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் இருக்கும்போதும் அவர்கள் குறைந்தது தாக்குதலை தடுக்ககூட நடவடிக்கையெடுக்காமல் வேடிக்கை பார்க்கும் நிலையே இருந்து வருகின்றது.
அவருக்கு அன்றைய அரசிடம் இருந்த செல்வாக்கு, அவருக்கு வழங்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் காரணமாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்து வருகின்றது. அதற்கு காரணம் அவருக்கு அரசாங்கம் பூரண சுதந்திரம் வழங்கியிருக்கின்றது.
இந்த நிலையிலேயே இன்று கிழக்கு தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்தும் சர்வதேச சமூகத்திடம் இருந்தும் பல்வேறு அழுத்தங்களும் எதிர்ப்பு குரல்களும் வந்தவண்ணமுள்ள நிலையில், அவற்றினை திசை திருப்பும் செயற்பாடுகள் கனகச்சிதமாக முன்னெடுக்கப் படுகின்றன.
இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடா வெளியில் நடந்த சம்பவத்தினை நோக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வாகவே பார்க்கப்பட வேண்டும். தேர்தல் காலத்தின் போது வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட வேற்றுச்சேனைக்கு பிக்கு ஒருவர் சென்று தொல்பொருள் இடம் என்று கூறி அங்கு எல்லையிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது அதற்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து அந்த பிக்குவினை அங்கிருந்து செல்ல வைத்தனர். அதனை தொடர்ந்து மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சென்று அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படுவது போன்று பாசாங்கு செய்வதைக் கண்ட மக்கள் அவரையும் துரத்தியடித்தனர்.
இவ்வாறான நிலையில் மக்களின் கவனத்தினை திசைதிருப்பி தொல்பொருள் இடங்கள் என தமிழர்களின் பகுதிகளில் எல்லைகள் இடப்பட்டு தமிழர்களின் புராதன இடங்களை பௌத்தர்களின் பூமியாக காட்டுவதற்கான முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் தாயகப் பூமியில் உள்ள தமிழர்களின் அடையாளங்களை அழித்து தமது அடையாளங்களை நிறுவும் செயற்பாடுகளில் இந்த அரசாங்கம் மிகவும் திட்டமிட்டு செயற்படுகின்றது. இதனை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் எடுத்ததாக இதுவரை தெரியவில்லை.
குறிப்பாக பன்குடாவெளி போன்ற நூறுவீதம் தமிழர்கள் வாழும் பகுதியை இலக்கு வைத்து முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக கிழக்கு தொல்பொருள் செயலணி மூலம் தமிழர்கள் முற்றுமுழுதாக வாழும் பகுதிகளே இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகளை தடங்கல் இன்றி முன்னெடுக்கவே மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் போன்றோரை அரசாங்கம் பயன்படுத்துகின்றது. அவர் சென்று மோதல் நடாத்தி விட்டு அப்பகுதியில் ஒரு பதற்ற நிலைமையினை ஏற்படுத்தி அப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினரை நிலைகொள்ளச் செய்வதன் மூலம் தமது நோக்கத்தினை அடையும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வக்கற்ற நிலையிலேயே அரசாங்கத்திற்கு துதிபாடும் அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.
வடகிழக்கில் தமிழர்களின் ஆதிகால இருப்புக்கான அடையாளங்கள் அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அவற்றினை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் போன்றவர்கள் மூலம் அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி தமிழர்கள் வரலாற்றினையும் அதன் பொக்கிசங்களையும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இன்று உள்ளது.
சுரண்டுவதற்கு மிச்சமில்லை?
கிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கபடும் என கோத்தபாயா ராஜபக்சே அறிவித்து இருக்கிறார்.
ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் தொன்மைகள் மற்றும் தொன்மைச்சான்றுகளை அழித்து பௌத்தமயமாக்கலை செய்து வருகிறது .குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 246 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் . திருகோணமலை மாவட்டத்தில் 74 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள் . மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 பௌத்த மதத்தோடு தொடர்புடைய இடங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள் . இந்த ஆக்கிரமிப்புகளில் சில,
1. திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னன் மரவடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டு கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வழிபட இப்போது தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
2. இலங்கைத்துறை முகத்துவாரம் என்கிற திருகோணமலையின் பூர்விக தமிழ் கிராமம் இப்போது தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு லங்காபட்டன (Lanka Patuna) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள குஞ்சிதபாத மலையில் இருந்த பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது
3. பட்டணமும் சூழலும் பிரதேசபை நிருவாகத்தில் இருந்த இந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. அங்கே விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டில் அந்தப் பிரதேசம் ஒரு பெளத்தமதப் பிரதேசம் எனவும் அறியத் தரப்பட்டுள்ளது.கடந்த வரலாற்று காலத்தில் கோயில் கொண்டிருந்த பிள்ளையார் ஆலய கோவிலின் அத்திபாரம் மட்டும் தான் இன்று உள்ளது .
4. பாடல் பெற்ற சைவ தளமான திருக்கோணேஸ்வரம் கோவில் சூழலில் மேற்கொள்ளப்படும் சகல கட்டுமானங்களையும் தொல்லியல் திணைக்களம் தடை செய்து வருகிறது.
5. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புராண இதிகாசத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலைபோட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
6. மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தாமலை ஆலயத்தை புனரமைக்க புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் சொல்லுகிறது.
7. மட்டக்களப்பு மாவட்டம் பூர்விக தமிழ் பகுதியான வாகனேரியில் பல்வேறுபட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது
8. மட்டக்களப்பு மாவட்டம் புளுகுணாவை பகுதியில் பல இடங்களை தொல்லியல் திணைக்களமும் புத்த பிக்குகளும் உரிமை கோரி வருகிறார்கள்.
9. மட்டக்களப்பு கோட்டை (Batticaloa Fort) அமைத்துள்ள இடத்தில றுகுணு அரசுக்கு சொந்தமான பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது.
10 . மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகல பகுதியில் பௌத்த மதம் சார்ந்த பல சான்றுகள் கிடைத்து இருப்பதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகிறது.
11. மட்டக்களப்பு மாவட்டத்தின் கச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள சுவாமி மலை அடிவாரத்தை புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் பௌத்த மதத்திற்கு உரிய இடம் என அடையளப்படுத்தி இருக்கிறார்கள்.
12. மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் தொல்லியல் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களை இலக்கு வைத்து 7 விகாரைகளை அமைத்து இருக்கிறார்கள்.
13. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள வில்லுதோட்டம் தனியார் காணியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என தொல்லியல் திணைக்களம் உரிமை கொண்டாடுகிறது.
14. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பூர்விக வாழ்விடங்களில் 86 இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளும் /விகாரைகளும் கட்டப்பட்டு இருக்கின்றன . இதில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 36 இடங்களும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 இடங்களும் ஆலையடி பிரதேச செயலாளர் பிரிவில் 9 இடங்களும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6 இடங்களும் அட்டாளைசேனை பிரதேச செயலாளர் பிரிவில் 4 இடங்களும் கல்முனையில் 2 இடங்களும் அடங்கும்.
15. கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான 12,000 ஏக்கர் காணிகள் தீகவாவி புனித பூமிக்கு சொந்தமான நிலம் என தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றதுதொல்லியல் திணைக்களம் மூலம் பௌத்த மத அடையாளங்களை திணிப்பதும் அதன் மூலமாக சிங்கள ஆக்கிரமிப்புகளை உருவாக்குவதும் கடந்த 70 ஆண்டுகாலமாக சிங்கள ஆட்சியர்கள் தமிழ் சிறுபாண்மை சமூகங்களுக்கு எதிராக கையாண்டு வரும் மோசமான தந்திரமாக இருந்து வருகிறது .
அந்த வகையில் கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் பௌத்த மகா சங்கத்தின் வழிகாட்டலில் இராணுவ அதிகாரிகள் தலைமையிலான ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கி பௌத்த மதத்திற்கு சொந்தமான தொல்லியல் இடங்கள் என பூர்விக தமிழ் கிராமங்களில் இருந்து அப்பாவி தமிழ் குடும்பங்களை வெளியேற்றி கிழக்கு மாகாணத்தை பௌத்த மயமாக்கி , சிங்கள குடியேற்றங்களை பாரிய அளவில் செய்ய முயற்சிக்கிறார்கள்
—————————————————————————————————————
பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா: மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறு !
இலங்கையொரு பௌத்த நாடு. இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்கள். இங்கு அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்தருக்கே உரியது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற பௌத்த அடிப்படைவாதம் தலைவிரித்தாடும் நிலையில் கன்னியாவில் பௌத்த விகாரை அமைக்க தடை எனும் உயர் நீதிமன்றின் தீர்ப்பானது நீதி இன்னும் சாகவில்லையென்பதை நிரூபித்துக் காட்டுகிறது.
கடந்த திங்கட்கிழமை (22.07.2019) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கன்னியா வெந்நீரூற்று சர்ச்சை தொடர்பில் பிறப்பித்திருக்கும் இடைக்கால தடையுத்தரவானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது மாத்தி ரமன்றி, உலக இந்துக்களின் ஆன்மீக கௌரவத்தை காப்பாற்றியுள்ள நீதிப் பிரகடனமாகவும் விளங்குகிறது.
திருக்கோணேஸ்வரத்துக்கு மேற்கே அமைந்திருக்கும் கன்னியா வெந்நீரூற்று பிரதேசமானது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். ஒரு புனித பிரதேசமாகவும் நூற்றாண்டுக் காலமாக இருந்து வந்துள்ளது.
இலங்காபுரி வேந்தன் இராவணனுடன் தொடர்புபட்டதும் ஆன்மீக உலகின் அதிசயம் எனப் போற்றப்படும் ஏழு வெந்நீரூற்றுக்களைக் கொண்டதும், தட்ஷண கைலாச புராணம், வீரசிங்காத புராணம், திருகோணாசல புராணம் போன்ற பல்வேறு புராணங்களால் விதந்துரைக்கப்பட்ட பெருமை கொண்டதும், அகத்திய மாமுனியின் மனம்கவர்ந்த புண்ணிய தலங்களைக் கொண்டதுமான இடமாக கன்னியா இருந்து வந்துள்ளது.
இங்கிருந்த பூர்வீகமான பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் பௌத்த தாதுகோபுரமொன்றை அமைக்க, வில்கம் விகாரை பிக்குமார் எடுத்துவரும் பிரயத்தனங்களுக்கு தொல்பொருள் திணைக்களமும் உடந்தையாக இருந்து வரும் நிலையில் அண்மையில் பிள்ளையார் ஆலயம் இருந்த பூர்வீக மேட்டை உடைத்து பௌத்த தாது கோபுரம் அமைக்க எடுத்த முயற்சிக்கு தடை விதிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் கடந்த ஜூன் 7 ஆம் திகதி (07.06.2019) நடைபெற்ற திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
வழக்குத் தாக்கல்
இத்தீர்மானத்தையும் பொருட்படுத்தாமல் வில்கம் விகாரை விகாராதிபதி மீண்டும் தாதுகோபுரத்தை அமைக்கும் முயற்சியை தீவிரப்படுத்திய நிலையிலேயே இராவணசேனை, கன்னியா மரபுரிமை அமைப்பு மற்றும் தென்கயிலை ஆதீனம் 2019.07.16 தேதியன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியது. அத்துடன் திருகோணமலை மடத்தடி, மாரியம்மன் ஆலய தர்மகர்த்தாவும், கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாவும் நம்பிக்கைப் பொறுப்பாளருமான திருமதி.கோகிலரமணி என்பவர் மேற்படி பெளத்தமத ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் ஆலோசனைக்கமைய திருகோணமலை, மேல் நீதிமன்றில் 22.07.2019 வழக்கொன்றை தாக்கல் செய்து ஐந்து தடை ஆணைகளை விதிக்கும்படி கோரியிருந்தார்.
இவர் தனது மனுவில் பிரதிவாதிகளாக, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், திருமலை அரசாங்க அதிபர் ஆகியோரை குறிப்பிட்டு கன்னியா என்ற இடத்தில் வெந்நீரூற்று அமைந்துள்ள இடம், நிலம் அதையொட்டிய பிள்ளையார் கோயில் உள்ளிட்ட காணி மடத்தடி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது. இதை திருமலை மாவட்ட நீதிமன்றம் வழக்கு இலக்கம் TR/10/2000 இல் நம்பிக்கை பொறுப்பு கட்டளைச் சட்டம் 112ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பராதீனப்படுத்தல் கட்டளை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
2011 செப்டெம்பர் 9 ஆம் திகதியளவில் தொல்பொருள் சட்டத்தின் 18 ஆம் பிரிவின் கீழ் மேற்குறிப்பிட்ட நம்பிக்கை பொறுப்பு ஆதனங்களுக்குள் அடங்கும் கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த பகுதி சம்பந்தமாக கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டதாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் விகாரையொன்றை நிர்மாணிப் பதற்கு எதிராளியும் அவர்களது முகவர்களும் ஊழியர்களும் எதிராளியின் கீழ் செயற்படுவோரும் திட்டமிட்டுள்ளனர். இங்குள்ள பிள்ளையார் ஆலயம் 01.11.2001 ஆம் ஆண்டு பதிவு செய்தமைக்கான ஆதாரம் எம்மிடமுண்டு.
மனுதாரர் அண்மையில் சில குழுவினரால் தனது உரிமைகளை செயற்படுத்தவிடாமல் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டார். மேலும் கன்னியா வெந்நீரூற்றுக்கு வரும் பக்தர்களிடம் எதிராளிகள் அனுமதி சீட்டினை விற்பனை செய்து வருகிறார்கள். இதனை சில நேரங்களில் அருகிலுள்ள வில்கம் விகாரையின் பௌத்த பிக்கு முன்னெடுக்கிறார் மனுதாரரின் நம்பிக்கை பொறுப்பிலிருந்து வந்துள்ள பிள்ளையார் ஆலயத்தின் நிர்வாகம் அனைத்தையும் எதிர்மனுதாரர்களும் கீழ் உள்ளவர்களும் கைப்பற்றியுள்ளனர். எனவே மனுதாரரின் நம்பிக்கைப் பொறுப்பிலுள்ள பிள்ளையார் ஆலயம் இருக்கும் குறித்த இடத்தில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதும் நிர்மாணிக்கத் தீர்மானிப்பதும் மனுதாரரின் உரிமைகளைத் தடை செய்து மனுதாரரை கோயில் ஆதீன வளாகத்திற்குள் அனுமதிக்காமல் மறுப்பதும் மாரியம்மன் ஆதீனங்களிற்குள் பக்தர்களை அனுமதிக்காமல் தடை செய்வதும் அனுமதி சீட்டுக்களை விற்பனை செய்வதும் எதிர் மனுதாரரின் அதிகார வரம்பை மீறிய செயல். ஆகவே பின்வரும் தடை ஆணைகளை வழங்கும்படி மனுதாரரான திருமதி.கோகில ரமணி நீதிமன்றை கோரியதற்கு அமைய பின்வரும் தடையாணைகள் கடந்த 22.07.2019 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது.
கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்கு தடைவிதித்து மன்று இடைக்கால கட்டளை பிறப்பிக்கின்றது. குறிக்கப்பட்ட கட்டளை வழக்கு முடியும் வரை அமுலில் இருக்கும். மனுதாரரையோ அல்லது மற்றைய பக்தர்களையோ கன்னியா வெந்நீரூற்றுக்கோ பிள்ளையார் கோயிலுக்கோ செல்வதை தடுக்கக்கூடாது எனவும் அத்துடன் அனுமதி சீட்டு விற்பனைக்கு தடை விதித்தும் இடைக்கால கட்டளை மன்றினால் பிறப்பிக்கப்படுகிறது. மனுதாரர் மாரியம்மன் கோயிலுக்கு உரித்தான காணிகளில் புனர்நிர்மாண வேலைகள் செய்வதை தடுக்கக்கூடாது என இடைக்கால கட்டளை மன்றினால் பிறப்பிக்கப்படுகிறது.மனுதாரரையோ அல்லது அவர்களது முகவர்களையோ கன்னியாவில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு உரித்தான, ஆதனங்களை நிர்வகிப்பதை தடுக்கக்கூடாது என இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
கன்னியாவிலுள்ள பூர்வீகமான பிள்ளையார் கோயிலை புனர்நிர்மாணம் செய்வதற்கு இடைக்கால கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. குறித்த விடயம் இந்த வழக்கின் கருப்பொருளாக இருப்பதாலும் தொல்பொருள் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள படியாலும் இடைக்கால கட்டளையோ தடையோ வழக்கின் இறுதியில் முடிவெடுக்கப்படும் என உயர்நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் மனுதாரரான கோகிலரமணி ஐந்துவகை தடை ஆணைகளை கோரியிருந்தபோதும் மேற்குறிப்பிட்டபடி நாலு விடயங்களுக்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு, 5 ஆவது விவகாரமான கன்னியா பிள்ளையார் ஆலயத்தை மீளவும் புனரமைப்பு செய்வதற்கான அனுமதியை வழக்கின் முடிவில் எடுக்கப்படுமென நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியிருந்தார்.
கன்னியா வெந்நீரூற்றுக்கள் பிரசித்தம் பெற்ற ஊற்றுக்கள் மாத்திரமன்றி வரலாற்றுக்கு முந்திய காலந் தொடக்கம் பிரபலம் பெற்ற புனித நீராக போற்றப்பட்டு வந்திருக்கிறது. தந்தையை இழந்தவர்கள் தாயை இழந்தவர்கள் தமது அந்திசஷ்டி கடமைகளை முடிப்பதற்கும், வருடந்தோறும் நினைவு கொள்ளப்படும் ஆண்டு திவசத்தை முன்னிட்டும் இந்தப் புனித நீரூற்றுக்களில் நீராடி உரிய சடங்குகளை மேற்கொண்டு இங்குள்ள பிள்ளையார் மற்றும் சிவன் ஆலயங்களை தரிசித்து, வணங்கிச் செல்வது பூர்வீகமான வரலாறு, ஆடிஅமாவாசை, சித்திரா பௌர்ணமி, நவராத்திரி, சிவராத்திரி ஆகிய விஷேட தினங்களுக்கும் வருகை தந்து பிதிர்க்கடன்களை செய்து வருவது பல காலமாக இடம்பெற்றுவரும் சம்பிரதாயங்களாகும்.
இந்த ஐதீகம் உண்டாகுவதற்கு கூறப்படும் சம்பவங்களை தட்ஷண கைலாச புராணம் கோணேசர் கல்வெட்டு, வீரசிங்காத புராணம், இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் மூலம் விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியா என்ற பெயருக்குரிய காரணங்களும் அவற்றில் கூறப்பட்டுள்ளது.
வரலாறு கூறும் கதை
இலங்கை வேந்தன் இராவணன் தன் தாயார் கைகேசியின் வேண்டுகோளுக்கு இணங்க லிங்கமொன்றை பெற கோணேஸ்வரம் வந்து கடும் விரதம் இருக்கிறான். இராவணன் சிவனிடம் லிங்கத்தைப் பெற்று பிரதிஷ்டை செய்து விட்டால் அவனை வெல்ல பிரபஞ்சத்தில் யாராலும் முடியாது என்பதை தனது ஞானநிலையால் உணர்ந்துகொண்ட விஷ்ணு பகவான் இராவணன் லிங்கத்தை சிவனிடமிருந்து பெறா வண்ணம் முனிவர் வேடம் தாங்கி சூழ்ச்சி செய்து உன் தாயார் கைகேசி இறந்து விட்டார் என பொய்யுரைக்கின்றார்.
அது கேட்டு புலம்பிய இராவணன் முனிவர் வேடத்திலுள்ள விஷ்ணுபகவானிடம் தனது தாயாரின் ஈமக்கிரியைகளை நடத்தித் தரும்படி இரங்கி நிற்க, அதற்கு உடன்பட்ட விஷ்ணு கோணேஸ்வரத்துக்கு மேற்குப் புறமாகவுள்ள கன்னியா எனும் இடத்திற்கு
ஈமக்கிரியைகளை செய்ய அழைத்து வந்து கிரியைகளை செய்வதற்காக, தனது கரத்திலுள்ள தண்டினால் ஏழு இடத்தில் ஊன்றினார். ஊன்றிய இடங்களில் கடும் சூடு, இளஞ்சூடு என ஏழு வகை பேதமுள்ள கூவல்கள் உண்டாகியதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இறந்தவர்களில் ஈமங்களை செய்யும் வழக்கம் உருவாகி வந்ததாகவும் ஐதீகம்.
கன்னியாவின் திருப்பணிகளை குளக்கோட்டுமன்னன், கஜபாகு மன்னன், அதன்முன்னே குளக்கோட்டனின் தந்தை போன்றோர் செய்துள்ளதாக, மரபு வழிக் கதைகள் மூலம் அறியப்படுவதுடன் இவ்வெந்நீரூற்று புகழை, நவாலியூர் சோமசுந்தரப்புலவர் மற்றும் 1961ஆம் ஆண்டு பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற ஆடியமாவாசை தீர்த்த உற்சவத்தின் போது புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை கன்னியாய் திரு என்ற பொருளில் பாடிய பாடலும் இதன் புகழை பறைசாற்றுவன.
கன்னியாவை கையகப்படுத்தும் சூழ்ச்சி அல்லது பௌத்த மயமாக்கும் முயற்சிகள் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா காலத்திலிருந்தே இடம்பெற்று வந்துள்ளது என்பதை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் குறிப்பிட்டிருந்தது இங்கு ஞாபகத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.
கன்னியா வளாகப் பகுதியில் பிள்ளையார் ஆலயம், சிவன் ஆலயம், முருகன் ஆலயம் என்பவை இருந்தமைக்கான தடயங்கள் இருந்தபோதிலும் சிவன் ஆலயம் 1950ஆம் ஆண்டுகளை அண்மிய பகுதிகளில் சிதைவடைந்து போன நிலையில் பிள்ளையார் ஆலயம், கன்னியா பிள்ளையார் ஆலயமென தொடர்ந்து 1983 ஆம் ஆண்டுவரை வழிபட்டு வரப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்குப் பின் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து சில விஷமிகளால் இவ்வாலயம் துவாம்சம் செய்யப்பட்ட நிலையில் இதை புனரமைப்பதற்கான முயற்சிகள் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென, ஆலய புனரமைப்பு சபையொன்று உருவாக்கப்பட்டது. (ஆதாரம் வீரகேசரி 02.05.1985) இதற்கான ஏற்பாட்டை, முன்னாள் கிராமோதய சபைத் தலைவர் கே.சண்முகராசா செய்திருந்தார்.
ஏலவே இவ்வாலயம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் 07.05.1985 பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தின் பராமரிப்பு நடவடிக்கைகளை உப்பு வெளி பிரதேச சபை 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மேற்கொண்டு வந்ததென்றும் 1957 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராகவிருந்த மக்ஹெய்சர் (Anton Rothwell McHeyzer )உப்பு வெளி பிரதேச சபைக்கு 28.02.1958 தேதியிடப்பட்ட ஆவணத்தின் மூலம் வெந்நீரூற்றுப் பகுதியை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உப்புவெளி பிரதேச சபை 2010 ஆம் ஆண்டு வரை நீருற்றுப் பகுதியை பராமரித்து வந்ததுடன் வருவோரிடம் கட்டணமும் அறவிட்டு வந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தொடர்ந்து வடகிழக்கிலுள்ள தொன்மைமிக்க இடங்கள், ஆலயங்கள் பூர்வீக சின்னங்கள் மற்றும் அடையாளங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையுடன் பௌத்த மயமாக்கும் தீவிர முயற்சிகள் முன்னெடுத்து வரப்படும் கொடுமையின் ஓர் அத்தியாயமாகவே கன்னியா கையகப்படுத்தப்பட்டது.
2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 ஆந்திகதி (05.10.2010) கன்னியா வெந்நீருற்று பகுதிக்குள் நுழைந்த திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி.ரி.ஆர்.டி.சில்வாவும் அவரது குழுவினரும் அங்குள்ள விளம்பரப் பலகைகளை சேதப்படுத்தி பிடுங்கி எறிந்ததுடன் உப்புவெளி பிரதேச சபை ஊழியரின் கையிலிருந்த கட்டண பற்றுச்சீட்டுக்களையும் கைப்பற்றி இது தொல்பொருளுக்குரிய பிரதேசம் இதற்குள் யாரும் உள்நுழைய முடியாது பிரதேச சபைக்கு அதிகாரமில்லையென எச்சரித்து விட்டும் சென்றுள்ளனர்.
இங்கு உப்புவெளி பிரதேச சபையால் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த இராவணனுக்கும் வெந்நீருற்றுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் விபரப் பலகையும் பிடுங்கி எறியப்பட்டு, மறு வாரந்தொடக்கம் தொல்பொருள் திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டதுடன் கட்டணம் அறவிடும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் உப்புவெளி பிர தேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் காந்தரூபன் தலைமையில் பிரதேச சபையில் 6.10.2010 கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் திருமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூல முறைப்பாட்டை செய்திருந்தார். ஆனால் எந்த பயனும் இல்லாத நிலையே காணப்பட்டது. வழக்கொன்றை தொடர முடியாத நிலையும் காணப்பட்டது.
உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளரின் முறைப்பாட்டுக்கு பதில் அனுப்பிய திருமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
உப்புவெளி பிரதேச சபை தவிசாளர் கூறியுள்ள 1958 ஆம் ஆண்டு திருகோணமலை அரசாங்க அதிபர் மக் ஹெய்சர் அவர்களால் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் கன்னியா வெந்நீருற்றுப்பகுதி 1981 ஆம் ஆண்டின் (9.11.1981) தேசிய 47 ஆம் இலக்க காணி நிர்ணய சட்டத்தின் 166/04 இலக்க அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரச உடமை ஆக்கப்பட்டுள்ளது என நில அளவைத்திணைக்கள ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது. குறிப்பிட்ட வரைபடத்துண் டில் H என அடையாளப்படுத்தப்பட்ட காணி தவிர உப்புவெளி பிரதேச சபைக்கு வேறு உரிமை கொண்ட பகுதிகள் இல்லையென அவரால் அறியப்பட்டிருந்தது.
பிள்ளையார் விக்கிரகம்
கன்னியா பிள்ளையார் ஆலயம் 1983 ஆம் ஆண்டுகளில் துவாம்சம் செய்யப்பட்டிருந்தபோதும் அங்கிருந்த பிள்ளையார் விக்கிரகத்தை சில அன்பர்கள் காப்பாற்றி சிறிய கொட்டிலொன்று அமைத்து பாதுகாத்து வந்துள்ள நிலையில் தான் 2002ஆம் ஆண்டு சமாதான காலத்தில் ஆலயத்தை புனரமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கன்னியா பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாவும் திருகோணமலை மடத்தடி மாரியம்மன் கோவில் நம்பிக்கைப் பொறுப்பாளருமாகிய ரத்தினம்மாவின் ஏற்பாட்டுக்கு அமைய கோணேஷர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் சட்டத்தரணி மு.கோ.செல்வராஜா ஆகியோர் ஆலயத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இதைக் கேள்வியுற்ற வில்கம் விகாரை விஹாராதிபதி கடும் எதிர்ப்புக் காட்டினார்.அனுராதபுர கால தொன்மங்களை சிதைத்து பிள்ளையார் ஆலயத்தை அமைக்கப்பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டி அரச படைகளின் உதவியுடன் தடுத்தார்.
மீண்டும் 2004 ஆம் ஆண்டு ஆலயத்தை புனரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியை மீண்டும் முன்னெடுத்து அடிக்கல் நாட்டும் வைபவத்தை ரத்தினம்மா நடத்தியிருந்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் அடிக்கல்லை நாட்டி வைத்தார். இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், அன்பு இல்லப் பொறுப்பாளர் சுந்தரலிங்கம், விடுதலைப்புலிகளின் பிரதிநிதி ஐங்கரன் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்தர்ப்பத்திலும் வில்கம் விகாரை விஹாராதிபதி குறுக்கிட்டு ஆலயம் அமைப்பதற்கான தனது ஆக்ரோஷமான எதிர்ப்பைக் காட்டினார். பிள்ளையார் ஆலயம் இருந்ததாக கூறி புனரமைக்க முயலும் மேடு, பெரிய குளம் வில்கம் விகாரைக்கு பூர்வீகமாக சொந்தமானது. அனுராதபுரத்துடன் தொடர்புபட்ட தொல்பொருள் தடயங்களை அழிக்க முற்படுகின்றார்கள். அவற்றை மூடி மறைக்கவே ஆலயத்தை புனரமைக்க முற்படுகிறார்கள். பௌத்த சின்னங்கள் உள்ள இடத்தில் இந்து ஆலயம் அமைக்கப் படக்கூடாது என வில்கம் விஹாராதிபதி தொல்பொருள் திணைக்களத்தை தூண்டி விட்டதுடன் உப்புவெளி பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டது.
இவ்விவகாரம் பாராளுமன்றத்தில் வண. எல்லாவல மேதானந்த தேரர் அவர்களால் கேள்வியாக எழுப்பப்பட்டு கன்னியா வெந்நீருற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக இந்து ஆலயமொன்று அமைக்கப்பட்டு வருவதாக கூறியதற்கு கலாசார அமைச்சர் விஜிதஹேரத் பதிலளிக்கையில், இது தொடர்பாக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் ஆலய நிர்மாண வேலைகள் இடைநிறுத்தப்படுமென பதிலளித்திருந்தார்.
உப்புவெளி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தொல்பொருள் சட்டத்தின் கீழ் திருமலை நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு இவ்வழக்கானது 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நடத்தப்பட்ட நிலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றுக்கு தொடர்ந்து வராத நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
காணி பெற்ற தேரர்
ஆனால் கன்னியாவை கையகப்படுத்தும் முயற்சியை மிக தீவிரமாக செயற்படுத்தி வந்த பெளத்த குருவானவர் 2009 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளருக்கு விண்ணப்பித்து (26.11.2009) வெந்நீருற்றுக்கு அருகில் 0.4120 ஹெக் டெயர் விஸ்தீரணமுடைய காணியை வில்கம் ரஜமகா விஹாராதிபதி நீண்டகால குத்தகைக்கு பெற்றிருந்ததுடன் 2010ஆம் ஆண்டு குறிப்பிட்ட சம்பவம் நடந்ததற்குப் பின் நீருற்றுக்கு மேலுள்ள சுமார் 50 மீற்றர் தொலைவில் பௌத்த விகாரையொன்றையும் நிர்மாணித்து முடித்திருந்தார். இவ்விகாரை நிர்மாணிப்புக்கு உப்புவெளி பிரதேச சபையின் அனுமதியோ தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியோ பெறப் படவில்லையென உப்புவெளி பிரதேச சபையினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு சில தமிழ் அதிகாரிகளும் அரசாங்க அதிபரும் உடந்தையாக இருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கன்னியா வெந்நீருற்று விவகாரம் பிள்ளை யார் ஆலய சர்ச்சை மற்றும் கன்னியா காணி உரிமம் சார்ந்த பிரச்சினையென ஏகப்பட்ட குழப்ப நிலைகளைக் கொண்டதாக கன்னியா விவகாரம் இன்று சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகியிருக்கிறது.
கன்னியாவின் காணி உரிமம் சார்ந்த விவகாரத்தில் திருகோணமலை மடத்தடி மாரியம்மன் ஆலய தர்மகர்த்தாவாகிய ரத்தினம்மாவின் மகள் கோகிலரமணியிடம் மாரியம்மன் ஆலயத்துக்கு உரித்தாக்கப்பட்ட 1984ஆம் ஆண்டு ஆவணங்களின்படி உறுதியாக்கப்பட்டுள்ளது. 1623–1638ஆம் ஆண்டுவரை பறங்கிய படைத்தளபதியாக இருந்த நபரால் மடத்தடி மாரியம்மனுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்ட ஒரு பிரதேசமே கன்னியா வெந்நீருற்றும் பிள்ளையார் ஆலயமும் என்பது பல ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய பூர்வீகமும் வரலாற்றுப் புகழும் கொண்ட பிரதேசத்தை பௌத்த மயமாக்கி அருகிலுள்ள விகாரையொன்றின் அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவரும் வேட் டையானது திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி உலக இந்துக்களுக்கும் விடுக்கப்படும் சவாலாகவே மாறிவரும் நிலையில்தான் மேற்படி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டமை ஆறுதலைத் தருகின்றது. ஆயிரக் கணக்கான உள்நாட்டுப் பயணிகளும் வெளிநாட்டுப் பயணிகளும் தினந்தோறும் வந்து செல்லும் கன்னியா வெந்நீரூற்று பூர்வீகமானது, புனிதமானது, புகழ்பெற்றது என்ற பெருமையுடன் அது பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே அனைவரது பிரார்த்த னையாகும்.
நன்றி: வீரகேசரி
—————————————————————————————————————–
நில ஆக்கிரமிப்பிற்கு கிழக்கு ஆளுநர் ஆதரவு?
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியிலுள்ள மேய்ச்சல் காணிகளில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதை தடுக்க தமிழ்தேசிய கூட்டமைப்பினரால் கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பினரால் வழக்குத் தாக்கல் செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று திருமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், கிழக்கு மாகாண ஆளுனருக்கும் இடையில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் சாணக்கியன் மற்றும் கோ.கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டதோடு; மாநகர முதல்வர் தி.சரவணபவான் , முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமார், முன்னாள் காணி ஆணையாளர் க.குருநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் அம்பாறை மற்றும் பொலன்நறுவையை சேர்ந்த விவசாயிகள் அனுமதியின்றி சேனைப்பயிர்ச்செய்கையை மேற்கொள்ள செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது செங்கலடி, கிரான், பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட சுமார் ஆயிரம் கால்நடை வளர்ப்பாளர்களின் இரண்டு இலட்சம் கால்நடைகளை மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்லும் செயற்பாடு தடைப்படுவதாக ஆளுனருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
ஆயினும் ஆளுநரால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆளுனர் இனக்குழுக்களை இலக்காகக் கொண்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாணத்தில் அனைத்து குடிமக்களுக்கும் சமமாக சேவை செய்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள மற்றும் தடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு எல்லை பகுதியில் அம்பாறை மற்றும் பொலன்நறுவையை சேர்ந்த சிங்கள விவசாயிகள் அனுமதியின்றி சேனைப்பயிர்ச்செய்கையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.