How did Ceylon defeat the LTTE?

புலிகளை இலங்கை தோற்கடித்தது எப்படி?

September 16, 2020

 (ஆங்கில ஊடகம் ஒன்றில் மூத்த செய்தியாளர் பி.கே. பாலச்சந்திரன் அவர்கள் எழுதிய குறிப்பின் தழுவல் இது.)

 — சீவகன் பூலரட்ணம் —

உலகில் தலை சிறந்த போராட்ட இயக்கங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பும் ஒன்று. அதன் இராணுவ நடவடிக்கைகளும் போர் யுக்திகளும் பல இராணுவ ஆய்வாளர்களாலும் இராணுவ தளபதிகளாலும் பாரட்டப்பட்டவை. பெரும்பாலான தமிழர்களும் அந்த அமைப்பின் திறன்குறித்து, பெருமைகொண்டு பேசுவது வழமை. அந்த அமைப்பு இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட, அதன் இராணுவ தந்திரோபாயங்களை இன்றுவரை சிலாகித்துப் பேசுபவரும் உள்ளனர்.  

ஆனால், அந்த அமைப்பு இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் அதனை தோற்கடிக்க அதன் எதிரணி எப்படியான நடவடிக்கைகளை எடுத்தது, அதன் திறன் என்ன, அது எப்படியான மாற்றங்களை உள்வாங்கி தனது போர் வெற்றியை உறுதி செய்தது என்பது குறித்த உரையாடல்கள் தமிழர் வட்டத்தில் ஒப்பீட்டளவில் குறைவாகவே இதுவரை இருந்து வந்துள்ளன. 

தோல்வியைச் சந்தித்த ஒரு “இனம்”, தோற்கடித்தவரைப்  பற்றி பேசுவதில் பலவிதமான தயக்கம் இருப்பதில் நியாயம் இருக்கிறது, ஆனால், அதனை பேச முற்படும்போதுதான் தர்க்க ரீதியான கலந்துரையாடலுக்கு அது வழி செய்யும். இல்லாவிட்டால், வெறுமனே ஒரு தரப்பு புலம்பல்களாக மட்டும் அவர்கள் தரப்பு வாதப்பிரதிவாதங்கள் முடிந்துபோய்விடும். 

அதேவேளை, இலங்கை அரசாங்க இராணுவத்தரப்பில் என்ன நடந்தது, அது இறுதியில் முன்னேற காரணங்கள் என்ன என்பது குறித்த தகவல்கள் தமிழர் தரப்புக்கு கிடைப்பது குறைவு என்ற காரணத்தையும் மறுப்பதற்கில்லை. 

ஆகவே, இந்தக் கட்டுரை தற்போதைக்கு எமக்கு கிடைத்த ஒரு தகவல் மூலத்தில் இருந்து அடுத்த தரப்பின் நடவடிக்கைகளை பார்க்க விளைவதுதான். குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய பாதுகாப்புச் செயலர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, தனது போர் அனுபவங்கள் குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் இருந்து மூத்த செய்தியாளர் பி.கே. பாலச்சந்திரன் அவர்கள் கவனித்துக்கூறிய விடயங்களை இது அடிப்படையாகக் கொண்டதாகும். இது நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. 

கோத்தபாய:

மகாபாரதப்போரில் “களப்பலி கொடுக்கப்பட்ட அரவான்”, அந்தப்போரை முழுமையாக பார்த்துக் கூறிய அபிப்பிராயம் போல, ‘அந்தப் போரில் விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ளும் அளவுக்கு இலங்கையின் முப்படைகளையும் மாற்றி அமைத்தவர் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ அவர்கள்தான்’ என்பது கமால் குணரட்ணவின் கருத்து. அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலர். 

ஆனால், இலங்கை உள்நாட்டு போருக்கான ஏற்பாடுகள் குறித்து இன்னும் பல விடயங்களையும் கமால் குணரட்ண விரிவாகக் கூறியுள்ளார். 

குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் குறித்தும் அந்த அமைப்பின் தலைவர்களின் புதுமையான போர் யுக்திகளையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். விடுதலைப்புலிகளின் கடற்படைத்தளபதி சூசை மற்றும் தளபதி பால்ராஜ் ஆகியோரின் புதுமையான தாக்குதல் யுக்திகளை அவர் வெகுவாக சிலாகித்துள்ளார். இறுதிவரை சூசை அவர்கள் மிகவும் சிறப்பாக களமாடியதாக அவர் கருதுகிறார்.  

மோசமான நிலையில் இருந்து இலங்கை இராணுவம்

கோத்தபாய அவர்களை பாதுகாப்புச் செயலராக பொறுப்பேற்குமாறு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கேட்ட போது இலங்கை இராணுவம் மிகவும் பிந்தங்கிய நிலையில், போதுமான தளபாடங்கள் மற்றும்  ஆயுதங்கள் இல்லாமல், மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்ததாம். ஆனால், அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது புதுமைகளைக் கையாளும், துணிச்சல் மிக்க விடுதலைப்புலிகளை. 

இலங்கை இராணுவமும் கடற்படையும் விமானப்படையும் போதுமான உபகரணங்களும் ஆட்களும் இல்லாமல் இருந்தன. நவீன ஆயுதங்களைக் கொண்ட விடுதலைப்புலிகள் இலங்கையின் முப்படைகளுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். புலிகளின் புதிது, புதிதான தாக்குதற் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய யுக்திகளும் தந்திரோபாயங்களும் இலங்கை படைகளிடம் இருக்கவில்லை. 

அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களும் போர் மற்றும் சமாதானம் குறித்த தமது குழப்பகரமான கொள்கைகளால் நிலைமையை குழப்பிக்கொண்டிருந்தன. போதாக்குறைக்கு வெளிச்சக்திகளும் தத்தமது தரப்பு பார்வைகளுடன் அடிக்கடி மூக்கை நுழைத்துக்கொண்டிருந்தன. அத்துடன், சிறுபான்மை மக்களின் மனித உரிமைகளை மறுப்பதாக சர்வதேச சமூகத்தில் இருந்து வந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள இலங்கை கிட்டத்தட்ட இன்னுமொரு போரையே நடத்திக்கொண்டிருந்ததாம் அப்போது. 

ஆனால், கோத்தபாய அவர்கள் பாதுகாப்பு செயலராக நியமிக்கப்பட்டதன் பின்னர், யுக்திகள், தந்திரோபாயங்கள், ஆட்பலம், தலைமைத்துவம், பயிற்சி மற்றும் ஆயுத தளபாடங்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் திறைசேரி செயலர் டாக்டர் பி. பி. ஜயசுந்தர ஆகியோரின் உதவியுடன் மனோதிடம் இழந்துபோயிருந்த ஆயுதப்படையினருக்கு தேவையான அளவுக்கு சக்தியூட்டப்பட்டது. அதன் பின்னரான தொடர்ச்சியான களவெற்றிகள், படையினரின் மனவலிமையை படிப்படையாக முன்னேற்றியது. ஆட்சேர்ப்புக்கும் உதவியது. 

தற்காப்பு நிலையில் இருந்த இராணுவத்தின் போக்கை, தொடர்ச்சியான, பல்திசை நீடித்த தாக்குதல் என்ற நிலைமைக்கு கோத்தபாயவின் யுக்திகள் மாற்றின. அது மூன்று ஆண்டுகளில் விடுதலைப்புலிகளின் விதியை மாற்றிப் போட்டது. 

இராணுவம்:

பல ஆண்டுகளாகவே இலங்கை இராணுவம் ஆட்பற்றாக்குறையுடந்தான் இருந்து வந்துள்ளது. பெரிய இராணுவத்தை இலங்கையால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது அப்போதைய அரசாங்கங்களின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், ‘ஆட்பலத்திலும், தளபாடங்களிலும் செய்யப்படும் முதலீடே, பயங்கரவாதத்தை ஒடுக்குவதுடன், நீண்ட கால அடிப்படையில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, பாதுகாப்புச் செலவைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும்’ என்று கோத்தபாய நம்பினார். 

இந்த விடயத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவும், திறைசேரி செயலர் ஜயசுந்தரவுமே கோத்தபாயவுக்கு மிகவும் துணையாக இருந்துள்ளனர். வாராவாரம் நடக்கும் பாதுகாப்புக் கவுன்ஸில் கூட்டங்களில் இருந்து தான் கேட்டதை பெறாமல், சாதிக்காமல் கோத்தா என்றும் திரும்பியதில்லை என்கிறார் கமால் குணரட்ண. 

இராணுவ பலம் உடனடியாக 70,000 இல் இருந்து ஒரு லட்சத்து இருபதினாயிரமாக அதிகரிக்கப்பட்டது. இறுதில் அது 3 லட்சம் ஆக்கப்பட்டது. அதுவே புலிகளை தொடர்ச்சியாக தாக்கி, ஒடுக்க உதவியாக இருந்தது. அதேவேளை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட இடங்களை தக்க வைக்கும் பணிகளுக்காக விமானப்படை மற்றும் கடற்படையின் ஆட்பலமும் அதிகரிக்கப்பட்டது. சிறிய ஆனால், விலையுயர்ந்த ஆயுதங்கள் வாங்கப்பட்டன. ஆட்சேர்ப்பும் வெற்றிகரமாக நடக்கத்தொடங்கியது. 

இராணுவத்தலைமை:

யாரை இராணுவத்தளபதியாக நியமிப்பது என்பதும் அந்தவேளையில் கொஞ்சம் சிக்கலாகத்தான் இருந்துள்ளது. மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் லெப்டினண்ட் ஜெனரல் சாந்த கொட்டகொட ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. மஹிந்தவுக்கும், கோத்தபாயவுக்கும் இடையிலேயே யாரை நியமிப்பது என்பது குறித்து கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இலக்கை மையப்படுத்தி செயற்படும், கோத்தபாய இந்த விடயங்களை பொருட்படுத்தாது சரத் பொன்சேகாவை தளபதியாக நியமிக்க, ஜனாதிபதி மஹிந்த தனது நண்பரான கொட்டகொடவை பிரேசில் நாட்டுக்கான தூதுவராக அனுப்பி சமரசம் செய்தார். அதனையடுத்து சரத் பொன்சேகாவுடன் கலந்தாலோசித்த கோத்தபாய, பல நிலைகளில் உள்ள தளபதிகளை திறன் அடிப்படையில் மாற்றம் செய்தார். மூப்பு அடிப்படை கருத்தில் கொள்ளப்படவில்லை. 

இந்தியா:

அடுத்த பிரச்சினை இந்தியா. 1987 ஆம் ஆண்டு வடமராட்சி இராணுவ நடவடிக்கையின் போது இடையில் புகுந்து தடுத்தது போல, இந்தியா மீண்டும் தலையிட்டு,  தாக்குதல்களை தடுத்துவிட்டுவிடக்கூடாது என்பது கோத்தபாயவின் கவலை. இதற்காக அப்போதைய இந்திய உயர் ஸ்தானிகர் அலோக் பிரசாத்தை தொடர்புகொண்ட அவர், உறவுகளை ஒருங்கிணைக்க, இந்திய – இலங்கை அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். 

இந்தக் குழுவின் ஒத்துழைப்பு காரணமாகவே இறுதிவரை தலையீடுகள் இன்றி போரை நடத்தவும் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவும் முடிந்ததாக கமால் குணரட்ண கூறியுள்ளார். 

எதிரிகளின் சூட்டினால் கொல்லப்படாமல் வேகமாக முன்னேறுவதற்காக IFV எனப்படும் இராணுவ போர் வாகனம் வாங்கப்பட்டது. ஒரு மைலுக்கும் அதிகமான தூரத்தில் இருந்தே விடுதலைப்புலிகளின் நிலைகளை தாக்கியழிக்கும் நோக்கில் சீனாவிடம் இருந்து கிறீன் அரோ ஏவுகணைகளும், பாகிஸ்தானிடம் இருந்து பக்தார் ஷிகான் ஏவுகணைகளும் வாங்கப்பட்டன. எதிரி இலக்குகளை இராணுவ சுடுகலன்கள் கண்டறிய சீனாவிடம் இருந்து 5 ராடர்களும் வாங்கப்பட்டன.  

அதற்கு முன்னைய காலகட்டங்களில் அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய இடைத்தரகர்களால் ஆயுத கொள்வனவுகளில் இலங்கை ஏமாந்த கதைகளும் நடந்திருக்கின்றன. உதாரணமாக, ஆரம்பத்தில் ரி56 துப்பாக்கிகளுக்கு பதிலாக அமெரிக்காவின் எம்16 துப்பாக்கிகள் இராணுவத்துக்கு வழங்கப்பட்டன. இத்தனைக்கும் எம்16 விலை அதிகம் என்பதுடன், அவை இலங்கையின் காலநிலைக்கு சரியாக வேலை செய்யவும் தவறிவிட்டன. பின்னர் எம்16 க்கு பதிலாக மலிவான, சிறப்பாக செயற்படும் ரி56 துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.  

30மிமி பீரங்கிகளுடனான ரஷ்ய துருப்புக்காவி வாகனங்களை இராணுவம் கேட்டபோது முன்னதாக நடுத்தர இயந்திர துப்பாக்கிகளுடனான, சீன துருப்புக் காவிகள் வழங்கப்பட்டுள்ளன. கோத்தபாய செயலரானதும் இப்படியான விடயங்கள் தவிர்க்கப்பட்டன. 

விமானப்படை:

விமானப்படையும் ஆட்பலமற்று, ஆயுதபலமற்றே இருந்துள்ளது. நவீன ஆயுதங்களைக் கையாள, அவர்கள் பயிற்றப்பட்டிருக்கவில்லை. சேவையில் இருந்த பல விமானங்கள் பழையவை. தாக்குதல் நேரத்தில் அவற்றின் பறப்புத்திறன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்துள்ளது. இதன் காரணமாக வான்சூட்டாதரவை எதிர்பார்த்திருந்த தரைப்படைகள் பல சந்தர்ப்பங்களில் ஏமாந்திருக்கின்றன. 

விமானப்படை மற்றும் கடற்படைக்கு ஆயுதங்கள் வாங்குவது மிகுந்த செலவு மிக்கது என்பது கோத்தபாயவுக்கு தெரியும். ஆனால், திறைசேரி செயலரின் உதவியுடன் 4 புதிய மிக்-27 தரைத்தாக்குதல் விமானங்களை கோத்தபாய வாங்கினார். பழுதடைந்த 4 மிக்-27 விமானங்களை திருத்துவதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பினார். அனைத்து கிஃபிர் விமானங்களும் பழுதுபார்க்க அனுப்பப்பட்டன.  

தொழில்நுட்ப ஆர்வமுள்ள எயார் மார்ஷல் றொஷான் குணதிலகவின் உதவியுடன், ஆளில்லா விமானங்களை அவர் வாங்கினார். அவை புலிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்க உதவின. தரைத்தாக்குதல் விமானங்களுக்காக லேசரினால் வழிநடத்தப்படும் குண்டுகள் வாங்கப்பட்டன. பயிற்சிகளுக்காக சீன பயிற்சி விமானங்கள் வாங்கப்பட்டன. 

கடற்படை: 

இலங்கை ஒரு தீவாக இருந்த போதிலும் விடுதலைப்புலிகள் பாக்கு நீரிணைக்கு அப்பால் தமிழ்நாட்டில் இருந்து உதவியையும் புகலிடத்தையும் பெற்றுவந்தனர். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் கடற்படையில் பெரும் கவனம் செலுத்தியிருக்கவில்லை.  

அதிவேக “டோரா” தாக்குதல் படகுகள் இஸ்ரேலிடம் இருந்து இலங்கை அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், கடற்புலிகள் தம்மை சக்திமிக்க தாக்குதல் படையாக தரமுயர்த்தியிருந்தனர். அதிவேக  தாக்குதல் கலங்களை அவர்கள் தம்வசம் கொண்டிருந்தனர். கடற்கரும்புலிகளின் தற்கொலைப்படகுகளும் அதில் அடக்கம். கடற்படைத் தலைவர் அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் உடனடியாக என்ன வேண்டும் என்று கேட்கப்பட்டது. தனக்கு அதிகரித்த சூட்டு சக்தியும், எதிரியின் கலங்கள் அடையாளம் காணப்பட்டதும் அவற்றை துல்லியமாக தாக்கும் திறன்கொண்ட, சுடுகலன் தொகுதியும் தேவை என்றார் அவர். தூரத்தில் இருந்தே தாக்கும் வல்லமையை இலங்கைக் கடற்படை பெறுவதற்காக, 25மிமி சுடுகலன்களுக்கு பதிலாக 30மிமி துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் படையினரையும், பொதுமக்களையும் ஏற்றியிறக்கும் சிரமத்தில் இருந்து கடற்படையை விடுவிக்க “ஜெட்லைனர்” பயணிகள் கலங்களை கோத்தபாய பயன்படுத்தினார். 

பொன்சேகா – கரன்னகொட முறுகல்:

இராணுவமும் கடற்படையும் தமது செயற்பாடுகளை மேம்படுத்திக்கொண்டுவந்த அதேவேளை, ஒரு பெரிய பிரச்சினையையும் கோத்தபாய எதிர்கொண்டுள்ளார். அதாவது, இராணுவத்தளபதி பொன்சேகாவுக்கும் கடற்படைத்தளபதி கரன்னகொடவுக்கும் இடையில் ஒரு அசாதாரண சண்டை ஒன்று உருவாகிவிட்டது. ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களான அவர்கள் இருவரும் அங்கு நண்பர்களும்கூட. ஆனால், படைகளின் தளபதிகள் என்ற வகையில் அவர்களால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மண்டைதீவில் இராணுவமும் கடற்படையும் ஒன்றோடு ஒன்று சண்டைக்கு தயாராகிவிட்டனவாம். ஆனால், அதில்  கோத்தபாயவால் மாத்திரந்தான் தலையிடமுடிந்தது என்று நினைவுகூருகிறார் ஜெனரல் கமால் குணரட்ண.  

அனைத்து முயற்சிகளும் தோல்வியடையவே,  இருவரிடையே சமரசம் செய்ய ஆன்மீக வழிகளையும் கோத்தா நாடியுள்ளார். வண. உடுவ தம்மலோக தேரரை, அலரி மாளிகைக்கு அழைத்து அவர் இருவரையும் சமரசம் செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால், அதுவும் பலன் தரவில்லையாம். கோத்தாவும் எதுவும் முடியாமல் அதை அப்படியே விட்டுவிட்டாராம். ஆனால், இவர்கள் இருவரையும் தவிர்த்த அடுத்த மட்டங்களில் இராணுவமும் கடற்படையும் ஒத்துழைக்க ஆரம்பித்துவிட்டனவாம். போர் நடவடிக்கைகளை இவை பாதிக்காமல் சமாளித்தற்காக கோத்தபாயவுக்கு ஒரு விருது கொடுத்திருக்க வேண்டும் என்று பின்னர் அட்மிரல் கரன்னகொட அவர்கள் ஜெனரல் குணரட்ணவுக்கு கூறியிருக்கிறார். 

About editor 3124 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply