சுமந்திரன் சமஷ்டியை நிராகரிக்கவில்லை
கே.துரைராசசிங்கம்
அரசியலமைப்பில் அதிகாரம் மத்திய மற்றும் மாகாண நிறுவனங்களால் பிரயோகிக்கப்படுவதென்பது சமஷ்டிக் கட்டமைப்பை வலியுறுத்தவில்லையா? இந்த விடயத்தையே சுமந்திரன் அவர்கள் பெயர்ப்பலகை தேவையில்லை. அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அரசியலமைப்பில் இடம்பெற வேண்டுமென்று கூறியிருக்கிறார்.
சுமந்திரன் தனது கருத்தை வெளிப்படையாகக் கூறியதற்குப்பின்பும், அவருடைய விளக்கம் வெளிவந்ததற்குப்பின்பும், அவர் சமஷ்டியை நிராகரித்துள்ளார் என்று சொல்வது வேண்டுமென்றே அவர் மீது வேண்டாத குற்றமொன்றைச் சுமத்துவதாகவே அமையுமென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
அண்மையில் காலியில் சுமந்திரன் அவர்கள் சமஷ்டி தொடர்பில் வெளியிட்ட கருத்துத்தொடர்பில் பல்வேறு தரப்புகளால் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவது தொடர்பில் இன்றைய தினம் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமஷ்டியும், சுமந்திரனும் சம்பந்தமாக அண்மை நாட்களில் பலரும் தங்கள் மனம் போனவாறெல்லாம் கருத்துரைத்துக் கொண்டிருக்கின்றார்கள். குறித்த காலக்கூட்டத்தில் சுமந்திரன் அவர்கள் புதிதாக ஒன்றும் கூறவில்லை. அவர் இது தொடர்பாக மறு நாளே விளக்கமளித்துள்ளார். அவருடைய விளக்கம் வெளிவந்ததற்குப் பின்பும் அவர் சமஷ்டியை நிராகரித்துள்ளார் என்று சொல்வது வேண்டுமென்றே அவர் மீது வேண்டாத குற்றமொன்றைச் சுமத்துவதாகவே அமையும்.
சுமந்திரன் அவர்கள் 2010ம் ஆண்டிலே தான் முன்னணி அரசியலுக்கு வந்தார். அதற்கு முன்பிருந்தே அவர் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் தொடர்பில் அர்த்தமுள்ள பல பங்களிப்புகளைச் செய்திருக்கின்றார்.
2007ம் ஆண்டு வடபகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலம் கொழும்பிலிருந்த தமிழர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று மகிந்த அரசு தீர்மானித்தது. இதன் முதற்கட்டமாக கொழும்பில் தங்குவிடுதிகளில் (லொட்ச்) தங்கியிருந்த தமிழர்களை பேரூந்துகளில் ஏற்றி வவுனியா காட்டுப்பகுதிகளில் இரவோடு இரவாக இறக்கி விட்டார்கள். சுமந்திரன் அவர்கள் அப்போது அரசியலாளரல்ல. சட்டத்தரணியாகவே செயற்பட்டுக் கொண்டிருந்தவர்.
அவர் ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைத்தாக்கல் செய்தார். நீதிமன்றம் அவருடைய கோரிக்கையை ஏற்றது. விடுதிகளில் தங்கியிருந்த மக்களை அவர்களது விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக வவுனியாவில் கொண்டு சென்று விட்டது. தவறென்றும் உடனடியாக அவர்களை இருந்த இடத்திலேயே மீண்டும் அழைத்து வந்து விட வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்தது. இப்போது சுமந்திரனுக்கு எதிராகக்குரல் கொடுக்கும் யாருமே இவ்விடயம் பற்றிச்சிந்திக்கவுமில்லை. செயற்படவுமில்லை.
அவர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக 2010ல் வந்ததைத் தொடர்ந்து பல கனதியான அரசியல் நடவடிக்கைகளைச்செய்து முடித்துள்ளார். பதவியிலே இருக்கின்ற ஒரு அரசுத்தலைவருக்கெதிராக போர்க்குற்றம் தொடர்பிலே நடவடிக்கையெடுக்க முடியாதென்று வெளிநாட்டு இராஜதந்திரிகள் கைவிரித்தனர். சுமந்திரன் அவர்கள் அமெரிக்க இராஜங்க அமைச்சை நாடினார். திரு றொபேர்ட் பிளக் அவர்களிடம் விடயத்தை எடுத்துக்கூறினார்.
அவர்களுடைய அழைப்பின் பேரில் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களும் அமெரிக்கா சென்று அமெரிக்க இராஜாங்க அமைச்சுக்கு இலங்கை நிலவரம் தொடர்பில் விளக்கமளித்தார். இதன் பின்னர் தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை அரசுக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. இக்கால கட்டத்திலே எமது புலம்பெயர் துறைசார் தமிழ் உறவுகளும் இவ்விடயத்தில் கைகொடுத்தனர் என்பதும் உண்மை.
புதிய அரசியல் அமைப்புச்சட்டத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசு விரைவு காட்டவில்லை. தலைவர் சம்பந்தன் ஐயாவோடு சேர்ந்து சுமந்திரன் அவர்களும் எடுத்த நடவடிக்கையே அரசியலமைப்புச்சபை உருவாவதற்கு வழிவகுத்தது. சம்பந்தன் ஐயா அவர்களின் நெறிவுறுத்தலுக்கு இசைவான சுமந்திரன் அவர்களுடைய நடவடிக்கைகளின் காரணமாகத்தான் நடவடிக்கைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கூட வெளிவந்தது.
அவ்வாறு ஒரு அறிக்கை வெளிவராதென்று ஆரூடம் கூறிய நம்மவர்கள் பலர் அது நடந்த போது ஆச்சரியப்பட்டார்கள். அடக்கி வாசித்தார்கள். இப்போது கூட நிபுணர்கள் குழுவின் வரைபை தாமதமின்றி வெளியிட வேண்டுமென்கின்ற விடயத்திலே சம்பந்தன் ஐயாவின் ஆற்றுப்படுத்துகைகளுக்கமைவாக சுமந்திரன் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். விரைவிலே அரசியலமைப்புப்பேரவை இது தொடர்பாக அமர்வை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் இடம்பெறலாம்.
இவ்வகையிலேயான செயற்பாடுகள் தொடர்பில் தற்போது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் அன்பர்கள் எவ்வித ஈடுபாடு காட்டுகின்றார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். முற்றுமுழுதாக இலங்கைத் தமிழ்ப்பேசும் மக்களுக்குச் சிறப்பானதொரு அரசியற் தீர்வை தற்போதையை நிலைமையில் அடையக்கூடிய அதியுச்ச அடைவு என்ற அடிப்படையிலே பெற்றுக்கொள்ளும் முயற்சியில் சம்பந்தன் ஐயாவுக்கு துணையாக செயற்பட்டுக் கொண்டிருப்பவர் சுமந்திரன் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இத்தகைய தீர்வு சமஷ்டிக்கட்டமைப்பிலான ஒரு தீர்வாக இருக்க வேண்டுமென்பதில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் சமஷ்டிக் கட்டமைப்பிலான தீர்வென்ற விடயமே வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. வடமாகாண சபைத்தேர்தலின் பின் இலங்கைத் தமிழரசுக்கட்சி தலைவருக்கும், செயலாளருக்கும் எதிரான உயர்நீதி மன்றத்திலே தொடுக்கப்பட்ட வழக்கிலே இந்த சமஷ்டிக் கட்டமைப்பு என்ற வாசகமே விவாதப்பொருளாக அமைந்தது. உயர்நீதி மன்று சமஷ்டி என்பது பிரிவினையல்ல எனத்தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பினை எடுத்துக் கொண்டு தான் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் மகாநாயக்கர்களிடம் சென்று சமஷ்டிக்கு ஆதரவு கேட்டார். இத்தீர்ப்பைப் பெற்றுக்கொடுத்தவர் சுமந்திரன் அவர்களும் அவரது சிரேஸ்ட சட்டத்தரணி கணகீஸ்வரன் அவர்களுமே.
புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கங்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரான நாங்கள் வடக்கு கிழக்கு மாவட்டம் தோறும் சென்று விளக்கமளித்தோம். அப்போதெல்லாம் இவ்விடயம் பற்றித்தெளிவு படுத்தியிருக்கின்றோம். இடைக்கால அறிக்கையின் உறுப்புரை 02ல் “இலங்கை, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டவாறு தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு ஏற்புடையதான மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள சுதந்திரமும், இறைமையும், தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஏக்கிய இராச்சிய / ஒருமித்த நாடு என்னும் குடியரசாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் அதிகாரம் மத்திய மற்றும் மாகாண நிறுவனங்களால் பிரயோகிக்கப்படுவதென்பது சமஷ்டிக் கட்டமைப்பை வலியுறுத்தவில்லையா? இதை வேண்டுமென்றே திரித்தக்கூறுவதில் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் ஏற்படப்போகின்றது. இந்த விடயத்தையே சுமந்திரன் அவர்கள் பெயர்ப்பலகை தேவையில்லை. அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அரசியலமைப்பில் இடம்பெற வேண்டுமென்று கூறியிருக்கிறார்.
எனவே, அவர் தனது கருத்தை வெளிப்படையாகக் கூறியதற்குப் பின்பும், அவர் தமிழ் மக்கள் தொடர்பில் எடுத்து வருகின்ற மேற்குறித்த நடவடிக்கைகளை அறிந்து கொண்டதன் பின்பும், நியாயமுள்ள எந்த மனிதனும் அவர் சமஷ்டி தேவையில்லை என்று கூறுகிறார். தமிழ் மக்கள் மீது அக்கறையின்றிச் செயற்படுகின்றார். நெஞ்சழுத்தத்துடன் நடந்து கொள்கின்றார் என்றெல்லாம் கூறுவது எந்த வகையிலே நியாயமானதாகும்.
இலங்கையின் அரசியல் வரலாறை மிகவும் நுணுக்கமாக அறிந்தவர்கள் இவ்வாறு கூற முடியுமா? சர்வதேசத்தினுடைய மேற்பார்வை என்பது இலங்கை அரசின் கைகளைக்பிடித்து எமக்கு ஒரு அரசியல் தீர்வை எழுதித்தரும் தன்மையுடையதல்ல. இணக்கப்பாடென்பது நாட்டுக்குள்ளே தான் ஏற்பட வேண்டும். அந்த இணக்கப்பாடு மிக நுணுக்கமாக, நிதானமாக, எதிர்மறையான சக்திகள் வெளிக்கிழம்பாத வகையிலானதாக அமையக் கூடியதாக இருக்க வேண்டும்.
அந்தச் செயற்பாடுகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கிறது. அதிலே குறிப்பிடத்தக்க வகிபாகத்தை சுமந்திரன் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார். சமஷ்டிக் கட்டமைப்பிலான தீர்வைப் பெற்றுக் கொள்வது தான் எமது இலக்கு.
இவ்வகையிலே வெண்ணெய் திரண்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் தாழியுடைக்கும் செயற்பாடுகளில் தயவு செய்து ஈடுபடாதீர்கள். அரசியல் தீர்வில் இது வரை எட்டப்ட்டுள்ள விடயங்களை இன்னும் ஆரோக்கியமானதாகக் கொண்டு சென்று நிறைவேற்றுவதற்கு உங்களிடமுள்ள அறிவு, ஆற்றல், செல்வாக்கு எல்லாவற்றையும் பயன்படுத்த முன்வாருங்கள். உலக அரசியல் நிலைமை, உள்ளுர் அரசியல் நிலைமை, நாம் விட்ட தவறுகள் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், அரசியலமைப்பை நிறைவேற்றுவதிலே தங்கள் பெரும்பான்மை வாக்குகளைப் பயன்படுத்த வேண்டிய பெரும்பான்மைக் கட்சிகளுக்கு இருக்கின்ற உறுகண் (றிஸ்க்) என்பவற்றை மனங்கொள்ளுங்கள்.
வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும், துணை வலியும் தூக்கிச்செயற்படுவோம். நம் எல்லோரதும் இன்னல்களையும் புதிய அரசியலமைப்பொன்றே இலகாக்கும். உத்தோப்பியா என்னும் கற்பனை நகரத்தை இலக்காகக் கொண்டிராது நடப்பியலுக்கேற்ற உத்திகளைக் கையாளுவோம். உறவை வளர்ப்போம். பகைமை தவிர்ப்போம் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.