இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது?

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது? 

நக்கீரன்

(1)

இலங்கையின் 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த மதத்துக்கென ஏற்கனவே இருக்கும் இடங்களுக்கு மேலாக ஓர் அடி நிலத்தைக்கூட கிழக்கில் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அண்மையில் சனாதிபதிக்கு நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.  அது தொடர்பாக  ஞானசார தேரர் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

ஞானசார தேரர் மேலும் பேசுகையில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 9 மாகாணங்களும் பெளத்த  சிங்களவர்களுக்கே சொந்தமானவை. அதாவது முழு நாடும் பெளத்த சிங்கள பூமி. இதை நான் பல தடவைகள் எடுத்துரைத்துள்ளேன். வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் என்பதற்காக அந்த மாகாணங்களை தமிழ்பேசும் மக்களின் சொந்தத் தாயகமாக அங்கீகரிக்க முடியாது. வடக்கு, கிழக்கு நிலங்களை அவர்களின் சொந்த நிலங்களாகக் கருத முடியாது.

உண்மையில் இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது? 

இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான  நாடு’ என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள – பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே  சிங்கள பேரினவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, சுதந்திரத்துக்கான தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு அமைப்புக்கள் மட்டும் அல்லாது  பொது பல சேனா,  சிகல ராவய, இராவண பலய போன்ற அமைப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

இந்தப் பேரினவாத சக்திகளின் போர்க்கோலம் அய்ம்பதுகளில் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்றுக் காட்சிகளை  நினைவு படுத்துகிறது.  சிங்களம் மட்டும் என்ற முழக்கம்  அரசியலில் சிங்கள – பவுத்த மக்களதும் பவுத்தமத  தேரர்களதும் மேலாதிக்கத்தை நிறுவியது.  அதன் மூலம் அரசியல் மேலாண்மை சிங்கள – பவுத்தர்களது கைகளில் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு உறுதி செய்யப்பட்டது.

இந்தத் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாகத் திரண்டவர்களில் பெரும்பாலோர் இரமண்ண (Ramanna) மற்றும் அமரபுர (Amarapura)  பவுத்தமத  பீடங்களைச் சேர்ந்த தேரர்கள் ஆவர். இந்த பவுத்த பீடங்கள்  சிங்கள கரையார், சலாகம மற்றும் துவார சமூகத்துக்கு உரியன.  கண்டி தலதா மாளிகை சியாம் பவுத்த பீடங்களான மல்வத்தை மற்றும் அஸ்கிரியா  (1764) இரண்டையும்  சேர்ந்த   சிங்கள ரதல (radala)  மற்றும் கொவிகம (govigama – வெள்ளாளர்) சாதியினருக்கு மட்டுமே உரியதாக இருக்கின்றன.  எனவேதான் சிங்கள கரையார், சலாகம மற்றும் துவார வகுப்புப்பைச் சார்ந்தவர்கள்  அதற்குப் போட்டியாக இரமண்ண (1864)  மற்றும் அமரபுர பவுத்மத பீடங்களை (1800) நிறுவினார்கள். அமரபுர மதபீடம் சாதி அடிப்படையில் மேலும் 21  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு பவுத்த நாடு அது பவுத்த – ஆரிய சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற கூக்குரல் சென்ற நூற்றாண்டிலும் ஒலித்தது. அதை ஒலித்தவர் டொன் டேவிட் ஹேவவிதாரனே (Don David Hewawitharane – September 17th, 1864) என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மபாலர் ஆவர்.    இவரது தந்தை டொன் கறோலிஸ் தளவாடக் கடை ஒன்றை நடத்தினார். சிங்கள வணிகர்களின் பண உதவியால் இயங்கி வந்த பவுத்த மறுமலர்ச்சி இயக்கம் அவர்களின் வணிக முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியது. இவர்களைத் தேசபக்தர்கள் என்றும் நியாயமான வழியில் பணம் திரட்டுவோர் என்றும் புகழ்ந்தது. அன்றைய இலங்கையின் பணக்கார வணிகரின் மகனாக இவர் தேரவாத பவுத்தத்தை தழுவித்  தன்னுடைய பெயரை அநகாரிக தர்மபாலர் என மாற்றிக் கொண்டார். இவருடைய கால கட்டத்திலே இலங்கையில் கிறித்தவ மதப் பரப்புரையாளர்கள் வடக்கிலும் தெற்கிலும்   மதமாற்றத்தைச் செய்து கொண்டிருந்தனர்.

அநகாரிக தர்மபாலர்

அநகாரிக தர்மபாலர்  பவுத்த மேலாண்மை கருத்தியலை வளர்ப்பதற்குச் சிங்கள பவுத்தாய என்ற பெயரில் செய்தி ஏடு ஒன்றினை நடத்தினார். முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணிக்கும்படி தனது செய்தித்தாளிலும் வெளியீடுகளிலும் வேண்டுகோள் விடுத்தார். சிங்கள பவுத்தாய என்ற சொற்றொடரை முதலில்  புனைந்தவர் தர்மபாலரே!

சிங்கள நாவலின் தந்தை எனக் கூறப்படும் பியதாச சிரிசேன தனது சிங்கள ஜாதிய என்ற பத்திரிகையில் மேலைக் கலாசாரத்திற்கு எதிராக எழுதிய அதே வேளையில், சிங்களவர் அல்லாதோரைத்  தாக்கி எழுதினார்.

தர்மபாலர் சிங்களவர் ஆரியர்கள் என்றும் அவர்கள் தனித்துவமான இனம் என்றும் அவர்கள் ஆரிய நாகரிகத்தைச் சார்பு படுத்துகிறார்கள் என்றும் அவர்களது உடலில் அடிமைக் குருதி ஓடவில்லை என்றும் அவர்களை புறச்சமயிகளான தமிழர் ஆகட்டும் மூன்று நூற்றாண்டு காலம் நிலத்தையும், புராதன கோயில்களையும் நூல்நிலையங்களையும் அழித்த அய்ரோப்பிய அழிவுக்காரர் ஆகட்டும் ஒரு போதும் சிங்களவர்களை வெற்றிகொள்ளவில்லை என்று எழுதினார்.

தர்மபாலர் கிறித்துவ மதப்பரப்புரையாளர்களுக்கு மாற்றாக பவுத்தத்தை முன்வைத்ததோடு மட்டுமல்லாது சிங்கள மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியிலும்   ஈடுபட்டார்.  எல்லா மதங்களிலும் பவுத்த  மதமே உயர்ந்தது என்று வாதிட்டார்.  இந்தியா போன்ற இடங்களில் இருந்து வந்து இலங்கையில் வியாபாரம் செய்தவர்களை அநியாயமாகப் பணம் சம்பாதிப்போர் எனக் கடுமையாகச் சாடினார்.

எப்போதும் சிங்களவருக்கு முஸ்லிம்கள் பகைவர்களே!

இந்தியாவில் பவுத்தத்தின் வீழ்ச்சிக்கு முஸ்லீம்களே காரணம் என்றார். முஸ்லீம்கள் ஏமாற்றிச் சம்பாதிக்கிறார்கள், மண்ணின் மைந்தர்களான சிங்களவர்கள் ஏமாற்றப் படுகிறார்கள் என எழுதினார்.  ஆரிய சிங்களவர்களின் புனித பூமியான இலங்கை இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் கிறித்தவர்களாலும் அழித்தொழிக்கப்பட்டது எனவும் அதைக் காப்பது சிங்கள – பவுத்தர்களது கடமை எனவும் பரப்புரை செய்தார். அவரது எண்ணத்தின்படி இலங்கையில் தமிழர், முஸ்லிம் ஆகியோருக்கு இடமில்லை. கிறித்தவ சிங்களவர்களையும் அவர் சிங்களவர் என்று ஏற்றுக் கொள்ள  மறுத்தார்.

தர்மபாலர் தான் நடத்திய சிங்கள பவுத்தாய செய்தி ஏட்டின் வாயிலாக “முஸ்லிம் கடைகளைப் புறக்கணியுங்கள், அப்படி முஸ்லிம் கடைகளைப் புறக்கணிப்பவர்கள் மட்டுமே  நாட்டின் உண்மயான தேச பக்தர்கள்” என்று எழுதினார்.

அவர் மேலும் “பிரித்தானியருக்கு ஜெர்மானியர் எவ்வாறோ, சிங்களவருக்கு முஸ்லிம்களும் அவ்வாறே. முகமதியர், சிங்களவருக்கு சமயத்தாலும் இனத்தாலும் மொழியாலும் அந்நியர்கள். பவுத்த சமயம் இல்லாவிடின் மரணத்தையே சிங்களவர் வேண்டுவர். பிரித்தானிய உத்தியோகத்தர்கள் சிங்களவரைச் சுடலாம்; தூக்கிலிடலாம்; சிறைபிடிக்கலாம். ஆனால், எப்போதும் சிங்களவருக்கு முஸ்லிம்கள் பகைவர்களே. அந்நியரால் இழைக்கப்படும் அவமானங்களை இனியும் பொறுக்க முடியாது என்பதை அமைதிமிக்க சிங்களவர் இறுதியில் உணர்ந்துவிட்டனர். முழுத் தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்குப் பொருளாதார ஆன்மீக அடிப்படையில்  காரணங்கள் இருந்தன” என்று முஸ்லிம்கள்மீது வெறுப்பைக் கொட்டினார்.

1915 சிங்கள – முஸ்லிம் கலவரம்

மே 29,  1915 இல் சிங்களவர் – முஸ்லிம் கலவரம் கண்டியில் வெடித்தது. இதுவே முஸ்லிம்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் ஆகும். ஒரு பவுத்தமத விழா ஊர்வலம் மசூதிக்கு அருகாமையில் போவதை முஸ்லிம்கள் ஆட்சேபித்ததன் விளைவாகவே கலவரம் வெடித்தது.   ஒன்பது நாள்கள் நீடித்த இந்தக் கலவரம் மத்திய, வட மேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் சம்புரகாமுவ போன்ற மாகாணங்களுக்குப் பரவியது.  மாத்தளை, வட்டகம, கடுகண்ணாவ, கம்பொல, இரம்புக்கான, பாணத்துறை மற்றும் அக்குராசா போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் ஒன்றுதிரண்டு முஸ்லிம்களையும் அவர்களது  கடைகளையும் தாக்கினார்கள். சில இடங்களில் முஸ்லிம்கள் சிங்களவர்களைத் திருப்பித் தாக்கினார்கள்.  இத் தாக்குதலில்  25 க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 189 முஸ்லிம்கள் காயப்பட்டார்கள். நான்கு  முஸ்லிம் பெண்கள் பாலியல்  தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 250 கடைகள், வீடுகள் எரியூட்டப்பட்டன. 4,075 கடைகள், வீடுகள்  சூறையாடப்பட்டன.

அநகாரிக தர்மபாலர்  சிங்கள இனத்தின் புகழைப் புதுப்பித்தவர் என்றும் பவுத்த மதத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்தவர் என்றும் சிங்கள – பவுத்தர்களால்  கொண்டாடப்படுகிறார். அநகாரிக தர்மபாலர் சிங்கள மக்களைச் சிலாகித்துச் சொல்லும் போது “சிங்களவர் பழைய வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஆரிய இனத்தின் இனிமையான, மென்மையான, மிருதுவான பிள்ளைகள்…..இற்றை நாளில் உலகில் எமது நாட்டைப் போன்று  ஒளிமிக்க  வரலாறு கொண்டிருந்த நாடு வேறு எதுவும்  இல்லை…. …சிங்களவர்களது நாட்டை சிங்களவர்கள்தான் ஆள வேண்டும் (The sweet, tender, gentle Aryan children of an ancient, historic race. No nation in the world  has had a more brilliant  history than ourselves. The country of the Sinhalese should ruled by the  Sinhalese ……Sri Lanka and Tamil National Struggle – Chapter 4) எனக் கூறினார்.

“சிங்களம்”  ஆரிய மொழி என்ற கோட்பாட்டை முன்வைத்து அதன் மூலம் சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற கருத்தை சிங்கள – பவுத்த பேரினவாதிகள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டத் தலைப்பட்டனர். இந்தச் சுட்டிக் காட்டுதல் மூலம் ஆரிய சிங்கள இனத்தவர்  திராவிட இனத்தவற்கு மேலான உயர்குடிப் பிறப்பாளர்” என வாதிக்கலாயினர். (வளரும்)

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது? 

( 2)

நக்கீரன்

 சிங்கள இனவாதம்

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ. குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள்.  இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.

1920 இல் கொழும்பில் 1,000 மலையாளிகள்  இருந்தார்கள்.  இவர்கள் ஆங்கிலேயரால்  தங்களது தொழிற்சாலைகளில் பராமரிப்புத் தொழில் செய்வதற்குக் கொண்டு வரப்பட்டவர்கள். 1935 இல்  மலையாளிகளது  தொகை 35,000 ஆக உயர்ந்தது. பெரும்பாலும் கள் இறக்கல், துறைமுகம், தொடர்வண்டி திணைக்களம்,  தொழிற்சாலை,  தேநீர் கடைகள், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு இருந்தனர்.  இவர்களுக்கு எதிரான போராட்டத்துக்குத் தொழிற் சங்கவாதியாக இருந்த ஏ.இ. குணசிங்கா தலைமை தாங்கினார்.

மலையாளிகளது தேநீர்க் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என கொழும்பு நகரம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மலையாளிகள் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறினர். சிலர் தமிழ் அல்லது சிங்களப் பெண்களை மணந்து இலங்கையில் தங்கி விட்டனர். S.W.R.D. பண்டாரநாயக்காவின் முதல் அமைச்சரவையில் பவுத்த மத, கலாசார அமைச்சராக பதவி வகுத்தவர் இந்த மலையாளிகளில் ஒருவரான ஜெயவீர குருப்பு ஆவர்!

1939 ஆம் ஆண்டு ஏ.இ. குணசிங்கா 15,000 தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் எனக் கேட்டுச் சட்டசபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதே ஆண்டு அண்மையில் அரச  பணியில் சேர்ந்த தமிழர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை டி.எஸ்.  சேனநாயக்கா கொண்டு வந்தார்.

இலங்கையில் 1860  முதல் தோட்டத் தொழிலாளர் போராட்டம் நடத்திய போதும்  1899 இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத் தொழிற்சங்கக் கட்டமைப்பு தோற்றம் பெற்ற போதிலும் 1920 இல் மட்டுமே இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகள் உருவாகின.

ஒன்று ஊடகவியலாளர் கே. நடேசய்யர் தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனம் (Ceylon Indian Workers Federation) மற்றது  ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கம்.

1925 இல் நடேசய்யர் தனது அமைப்பை குணசிங்காவினுடைய தொழிற் சங்கத்தோடு இணைத்தார். ஆனால் 1928 ஆம் ஆண்டளவில் குணசிங்கா இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கினார். அதனால் நடேசய்யர் அந்த அமைப்பை விட்டு வெளியேறினார்.

கூலி வேலைக்கு அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்

மலையகத் தமிழர் 1,800 முற்பகுதி   தொடங்கி   தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயரால் கோப்பி, தேயிலை, இரப்பர் தோட்டங்களில் கூலி வேலை செய்ய ஒப்பந்தக் கூலிகளாக (indentured labour)  அழைத்து வரப்பட்டவர்கள்.  இவர்கள் வெள்ளைத் துரைமார்களால் கூலிகள் என அழைக்கப்பட்டார்கள்.  தமிழில் இருந்து ஆங்கிலத்தில் நுழைந்த சில சொற்களில் இந்தக் கூலி என்ற சொல்லும் ஒன்று.  மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு அதிக நேரம் தேயிலை, இரப்பர், காப்பித் தோட்டங்களில் வேலை செய்தார்கள்.  லயம் என்று சொல்லுகிற தகரக் கொட்டில்களில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். சமையல், சாப்பாடு. படுக்கை எல்லாம் இந்த லயத்தில்தான். இறந்த பின் இவர்களது உடல்கள் தோட்டங்களில் புதைக்கப்பட்டு தேயிலைச் செடிகளுக்கு உரம் ஆகின.

தமிழ்நாட்டில் இருந்து குடிபெயர்ந்த  இவர்களது வாழ்க்கை மிகவும் சோகமானது. பயணம் செய்ய வேண்டிய நாளில் கையில் இரண்டொரு துணிமணியோடு வீட்டு வாசல்களில் காத்திருப்பார்கள். கங்காணிகள் இவர்களைக் கால் நடையாக இராமேஸ்வரம் வரையும் கூட்டி வருவார்கள். அதற்குப் பிறகு தோணிகளில் மன்னார் கொண்டு வரப்படுவார்கள். மன்னாரை  அடைந்ததும் அங்கிருந்து பல மைல்களுக்கு அப்பாலுள்ள மத்திய, தென்பகுதி இடங்களுக்கு கால் நடையாகக் காடு, மலைகள் ஊடாக   அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நீண்ட, கரடு முரடான பயணத்தில் நாலில் ஒரு பகுதியினர் நோய் காரணமாக  சாவை அணைத்துக் கொண்டார்கள். ஏழ்மையும் வறுமையுமே  இந்த மக்களைத் தாம்  பிறந்த தாய் நாட்டை விட்டு வெளியேறச் செய்தது. ஏழ்மைக்குக் காரணம் கல்வி இன்மையே. சமூக ஏணியின் கடைசிப் படியில் இருந்த இந்த மக்களை சமூகம்  மக்களாகவே கணிக்கவில்லை. இந்து மதம் இவர்களைத் தீண்டாதார் என்று முத்திரை குத்திச் சேரிகளில் ஒதுக்கி வைத்தது. சாமி கும்பிடக்  கூட இந்த மக்களுக்கு உரிமை இருக்கவில்லை. இன்று கூட தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்கள்  உலகத்தில் மிக மோசமாகச் சுரண்டப் படும் தொழிலாளர்களாக  எண்ணப்படுகிறார்கள்.

1827 இல் மட்டும் இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும்.  இது 1877 இல் 1,46,000 ஆக உயர்ந்தது (இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம்). 1946 குடிமக்கள் கணக்கெடுப்பின் போது  மலையகத் தமிழர்களது எண்ணிக்கை 780,589 (11.73 விழுக்காடு) ஆக உயர்ந்திருந்தது. இன்று (2012)  818,656 (5.51 விழுக்காடு) ஆக உள்ளது.

ஏ.இ. குணசிங்கா  தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த போது  இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபைப் பிரதிநிதியாக இருந்த  சேர். பொன்னம்பலம் இராமநாதன் “இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும்? தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம் மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும்? இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா?” எனச்  சட்டசபையில் வருத்தத்தோடு கேட்டார். தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள்  என சேர். பொன்னம்பலம் விளித்தது சொந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டு இலங்கை வந்து சேர்ந்த விஜயனும் அவனது 700 நண்பர்களும் ஆவர்.

இவ்வாறு  மலையகத் தமிழ்மக்கள் நலன் கருதி சிங்களச் சட்ட சபையில்  குரல் கொடுத்தபோது இராமநாதனுக்கு அகவை 78 நிறைந்திருந்தது. (பக்கம்1791 சட்டமன்றப் பதிவேடு மூன்று-1928)

சிங்கள மொழி

சிங்களம் ஓர்  இந்தோ – ஆரிய குடும்பத்தைச் சார்ந்த மொழி என்றாலும் அதில் காணப்படும் சில அம்சங்கள் ஏனைய இந்தோ – ஆரிய குடும்பத்தைச் சார்ந்த குடும்ப மொழிகளில் காணப்படவில்லை. காரணம் சிங்களம் ஒன்று மட்டுமே இந்தியாவுக்கு வெளியே பேசப்படும் இந்தோ – ஆரிய மொழியாகும்.

சிங்களம் மற்றும் தமிழ் இரண்டுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் சிங்களம் திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்று கூறும் புலமையாளர்களும் இருக்கிறார்கள்.  சிங்கள புலமையாளர்களில் ஒருவரான டபுள்யூ. எவ். குணவர்த்தன தாம் எழுதிய சித்தாந்த பரிஸ்சானய என்ற நூலில் பின்வருமாறு  கூறகிறார்.

“சிங்களமொழி இலக்கணத்தில் காணப்படும் முக்கிய அம்சங்கள் ஆரிய மொழி இலக்கணத்துக்கு மாறாக உள்ளன. சிங்கள மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் தமிழ்மொழியோடும் திராவிட மொழிவழக்கோடும் (idioms)  ஒத்துப் போகின்றன. இதில் இருந்து நான் ஒரு முடிவுக்குக் கட்டாயமாக வரவேண்டியிருந்தது.  அதாவது சிங்களத்தின் கட்டுமான அடித்தளம் திராவிடமாகவும் அதன் கட்டுமான மேல்தளம் அதாவது அதன் சொற்றொகுதி ஆரியமாகவும் காணப்படுகிறது என்பதுதான்.” சிங்கள மொழியை இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்துடன் இணைத்து மாக்ஸ்முல்லர் குறிப்பிட்டார். திராவிட மொழிக் குடும்பத்துக்குள் சிங்களம் வராது என கால்டுவெல் சொன்னார். இதனால்  சிங்களம் ஒரு இந்தோ – ஆரிய மொழி என்ற கருதுகோளே மேலோங்கிக் காணப்படுகிறது.

மொழிகளைப் பற்றி ஆய்வு செய்யும் சமூக – மொழியியலாளர்கள் இரண்டு வெவ்வேறு மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் போது அவை பல வழிகளில் ஒன்றன் மீது ஒன்று செல்வாக்குச் செலுத்துகின்றன எனக் கூறுகிறார்கள். இதில் எந்த மொழி வல்லமை மற்றும் பெருமை படைத்ததோ அந்த மொழி அன்பளிப்புச் செய்யும் மொழியாகவும், இரண்டாவது மொழி அன்பளிப்பை வாங்கும் மொழியாகவும் மாறிவிடுகிறது.  சிங்கள – தமிழ் ஊடாடத்தில் தமிழ் கொடுக்கும்  மொழியாகவும் சிங்களம் அதனை வாங்கும் மொழியாகவும் இருக்கின்றன.

சிங்களத்தில் உள்ள தமிழ்ச் சொற்களை சிங்கள பாஷேவய தெமிள வாசன அகராதிய (A Glossary of Tamil Words in Sinhala) என்ற நூலில் தொகுத்துள்ளார்கள்.

தமிழ்மொழி சிங்களமொழியின் மீது செல்வாக்குச் செலுத்தியதற்கு முக்கிய காரணம் தமிழ்மொழி ஆட்சி அதிகாரம் மற்றும் உன்னதமான இடத்தைக் காலத்துக்குக் காலம் வகுத்தமையே. (தொடரும்)

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது? 

(3)

நக்கீரன்

ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடு. தேவநம்பிய தீசன் (கிமு 247 – 207) ஆட்சிக் காலம் தொடக்கம் பவுத்தம் இலங்கைத் தீவில் பொரும்பான்மை மக்களது   மதமாக இருந்து  வருகிறது.

சிங்கள தேசியத்தின் அடையாளம் பவுத்த மதமாகும். சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சமாக பவுத்த மதம் இன்று திகழ்கிறது. சிங்கள அடையாளத்தின் வடிவம், வரலாறு, சமூக உளவியல் என அனைத்துமே ஏதோ ஒருவகையில் இலங்கையின் தேரவாத பவுத்தத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இன்று பவுத்த தேரர்களும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனைசெய்து கூடப் பார்க்க முடியாது. அவ்வளவு தூரம் சிங்கள இன அடையாளமும் பவுத்த மத உணர்வும் கை கோர்த்து நிற்கின்றது எனலாம். 

இன்றைய சிங்கள – பவுத்த இனவாதிகள் சிறிலங்கா  சிங்கள – பவுத்தர்களுக்கு மட்டும் சொந்தமான நாடு என பகிரங்கமாகக் கூறிவருகிறார்கள். அதை எண்பிக்கும் வண்ணம் சனாதிபதி தேர்தலில் முதல்முறையா சிங்கள – பவுத்தர்களது வாக்குகளால் அறுதிப் பெரும்பான்மை பெற்று கோட்டாபய இராசபக்ச வென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நாடு  சிங்கள – பவுத்த மயப்படுத்தல்  வேகம் பிடித்துள்ளது.

மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும்  பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். மேலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே   இன்றைய இன  முரண்பாட்டுக்கு  அடிப்படைக் காரணம் ஆகும்.

ஆங்கிலேயர் வரும்வரை மகாவம்சம் என்பது மறக்கப்பட்டிருந்தது.  1837 இல் யோர்ஜ் ரேணர் (George Turnour) என்ற ஆங்கிலேயரே இலங்கை பொது சேவையில்  (Ceylon Civil Service) இருந்த  காலத்தில் மகாவம்சத்தை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  பின்னர் 1912 இல் வில்ஹெம் கெய்க்கர் (Wilhelm Geiger) என்பவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பை Mabel Hay  அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதனை வில்ஹெம் கெய்க்கர்  திருத்தி அமைத்தார்.

அதன் பின்னர் 1877இல் ஆங்கில ஆளுநர் ஒருவர் மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்புப் செய்தான். அதன் பின்னரே அப்படி ஒரு நூல் ஒன்று இருப்பதே பெரும்பாலான சிங்களவர்க்குத்  தெரியவந்தது.

மகாவம்சம்   முதல் அத்தியாயத்தில் இலங்கைக்கு ததாகதர் (புத்தர்) வருகை  பற்றிய  கதையோடு தொடங்குகிறது. ஆறாம் அத்தியாயம் விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைகைகு படகுகளில் வந்ததையும் (கிமு 483 – 445) அவன் முடிசூட்டிக் கொண்டதையும் விபரிக்கிறது.  கடைசி அத்தியாயம் 38 அனுராதபுரத்தை ஆண்ட மகாசேனன் ஆட்சியோடு (கி.பி. 334 – 362) முடிவுறுகிறது.

இலங்கையில் பவுத்த மதம் பரவியிருந்த காலத்தில் பவுத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த  தேரர்கள்  சமய மரபுகள் குறித்தும் மன்னர்களின் ஆட்சி பற்றியும் அவர்கள் வெட்டிய குளங்கள், கட்டிய விகாரைகள்  குறித்தும் ஏடுகளில் எழுதி வைத்ததோடு அவற்றை வாய்மொழி மூலமாகவும் பேணி வந்தார்கள். இப்படிக் காலம் தோறும் சேகரிக்கப்பட்ட குறிப்புக்கள் “அட்டகதா” என்று அழைக்கப்பட்டன.  ஒரு கட்டத்தில்  இவை ஒருங்கிணைக்கப்பட்டு ‘அட்டகதா-மகாவம்சம்’ என்று அழைக்கப்பட்டது.

அட்டகதா – மகாவம்சத்தைத்  தழுவி  கிபி 4 ஆம்  நூற்றாண்டளவில் தீபவம்சம் என்ற நூல் எழுதப்பட்டது. தீபவம்சத்தை எழுதிய  ஆசிரியர் யார் என்று அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. காலத்திற்குக் காலம் பல பௌத்த பிக்குகளால் எழுதப்பட்ட செய்யுள்களை ஒருங்கிணைத்துத்தான் ‘தீபவம்சம்’ முழுமை பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தீபவம்சம் என்கின்ற நூலை முதல் நூலாகக் கொண்டுதான் மகாநாம என்ற பவுத்த தேரர் 5 ஆம் நூற்றாண்டளவில்    பாளிமொழியில் செய்யுள் வடிவில் மகாவம்சம் என்ற நூலை எழுதினார்.  

இலங்கைத் தீவிற்குப் பவுத்த சமயம் வந்த வரலாறு குறித்தும் இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது.

இதன் இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பவுத்ததேரரால் எழுதப்பட்டது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்ட கைமுனு என்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். (கி.பி. 1137-1186).

இலங்கைத் தீவிற்குப் பவுத்த சமயம் வந்த வரலாறு குறித்தும் இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. பவுத்தத்துக்குரிய தகைமையை  மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்ட கைமுனு போர்புரிந்து எல்லாள மன்னனைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தின் கதை நாயகனாக துட்ட  கைமுனு (கிமு 101 – 77) வருணிக்கப்படுகிறான்.  மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சம்  துட்ட கைமுனுவின் ஆட்சியை பத்துப் பாடல்களில் பாடி முடிக்க மகாவம்சம் அதே கதையை   12 அத்தியாயங்கள் (21-32) பாடி முடிக்கிறது. அதாவது மஹா வம்சத்தின் 3/1 பாகம் துட்டகைமுனுவின் வீர வரலாறு கூறப் படுகிறது. இதில் ஒரு தேசிய விடுதலை வீரனாக துட்டகைமுனு வர்ணிக்கப் படுகிறான்.   

மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் நுலாசிரியர் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில்  “(பவுத்த) பக்தர்களின் அமைதியான  ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தின் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது”  எனக் கூறுவார்.

எனவே மகாவம்சம் ஒரு வரலாற்று நூலல்ல. அது பவுத்த சமயத்தவரது  ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட நூல்.  பெரியபுராணம் 63 சைவ நாயன்மார்களது கதைகளை புகழ்ந்து பாடுவது போல்  மகாவம்சம் பவுத்தசமயத்தை வளர்த்த அரசர்களது புகழைப் பாடுகிறது. இருந்தும் மகாவம்சத்தை முற்று முழுதாக இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் எனக் கூறமுடியாவிட்டாலும் அதனை முற்று முழுதாகப் புறக்கணித்துவிட்டு இலங்கை வரலாற்றை இனம் காணவும் முடியாது. இலங்கை வரலாற்றை ஓரளவு புரிந்து கொள்ள மகாவம்சம் ஒரு கால நூலாக விளங்குகிறது.

மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும் ஆனால் அங்கு ஏற்கனவே வாழந்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.

மகாவம்சத்தின் முதல் அத்தியாயம் இலங்கைத் தீவுக்கு புத்தர் (ததாகதர்) மும்முறை  வந்ததாக மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. புத்தர் முதல்முறை வந்தபோது இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்ச புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.  அதன் பின் தேவர்கள் வந்து கூடினர். அப்போது அந்த சபையில் அவர் தம் சமயக் கொள்கையைப் போதித்தார். பல கோடி மக்கள் பவுத்த மதத்துக்கு மாறினர்.

புத்தர் இரண்டாம் முறை இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவரது வீரர்களையும் பயப்பீதி  கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ‘புத்தம் – தர்மம் – சங்கம்’ என்ற போதனைகளை அருளுகின்றார்.

இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு மூன்றாவது முறை வருகை செய்கின்றார். கல்யாணி (களனி) என்ற நாட்டின் நாக  மன்னன் மகோதரனது வேண்டுதலை ஏற்று அங்கு சென்று அந்த இடங்களை அருள்வாழ்த்தித் திரும்புகின்றார்.

இயக்கர்களை அகற்றியது போல் புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும் நாக என்ற சொல்லை அடையாகக் கொண்டு ஆண்ட மன்னர்கள்   பெயர்களும்  இலங்கையின் வட புலம் நாகதீபம் என அழைக்கப்பட்டதும்  தென்மேற்கு கல்யாணி (இன்றைய களனி) என அழைக்கப்பட்டதும் இலங்கைத் தீவின் பழைய வரலாற்று உண்மைகளை மகாவம்சம் குறிப்பிடுகிறது. 

கோரநாகன், மகாநாகன், குஜநாகன், ஸ்ரீநாகன், குஞ்சநாகன், இளநாகன் எனப் பல  அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை 8 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே.

துட்ட கைமுனு – எல்லாளன் போர் சிங்கள – தமிழ் அரசனுக்கு இடையிலான போரல்ல. அப்படி இப்போது சித்தரிக்கப்படுகிறது. அப்போது சிங்களர் என்ற இனம் உருவாகவில்லை.

பவுத்த நாக வம்ச அரசனுக்கும் இந்து எல்லாள மன்னனுக்கும் இடையில் நடந்த போர். இரண்டு அரசர்களது படைகளிலும் பவுத்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். (வளரும்)

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது? 

நக்கீரன்

(4)

இலங்கைத் தீவின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், தேவர் எனத் தெரிய வருகிறது. இதில் தேவர் என்பவர் யார் என்பது தெரியவில்லை. புத்தர் தனது முதலாவது வருகையின் போது மகியங்கனவில் வாழ்ந்த இயக்கர்களை அங்கிருந்து  மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார். அதன் பின் தேவர்கள் வந்து கூடினர் என்று மட்டும் மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சம்  விசயன் – குவேனிக்கு  பிறந்த இரண்டு பிள்ளைகளின் சந்ததியினரை புலிந்தர்கள் (வேடர்கள்) எனக் குறிக்கிறது. ஆனால் வேடர்கள் நாகர்கள் போல பழங்குடி மக்களாக இருந்திருக்க வேண்டும். விஜயனுக்குப் பின்னரே வேடர்கள் தோன்றினார்கள் எனக் காட்டுவதற்காக மகாவம்ச ஆசிரியர் வரலாற்றைத் திரிபு படுத்தியதாகத் தெரிகிறது.

மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தில்  அநுராதபுரத்தை அரசாட்சி செய்த துட்ட கைமுனு  (கிமு 161 – கிமு 137) மலபாரை (தமிழர்களை) அடிபணிய வைத்தார் என்ற குறிப்பு வருகிறது.

எனவே நாகர், இயக்கர், தேவர்,  புலிந்தர், தமிழர் ஆகியோரே இலங்கைத் தீவின் ஆதிக் குடிகளாகக் கருதப்பட வேண்டும். இதில் நாகர்களே எட்டாம் நூற்றாண்டுவரை இலங்கைத் தீவில் ‘நாக’ அடையாளத்துடன் ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்களும் கிபி 7 – 8 ஆம் நூற்றாண்டில் பவுத்த மதத்தின் செல்வாக்குக் காரணமாக பவுத்த நாகர்கள் சிங்களவர் என்ற புதிய அடையாளத்தை  பெற்றார்கள். அவ்வாறே தமிழர்களில் பவுத்த சமயத்தைத் தழுவியவர்களும் இந்தப் புதிய அடையாளத்தைப் பெற்றார்கள்.

எனவே சிங்கள இனம் ஒரு கலப்பினம் ஆகும். இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர், இயக்கர், இராட்சதர், தேவர் போன்ற இனத்தவரே பிற்காலத்தில் சிங்களவர்களாக உருவெடுத்தனர். பவுத்த தேரர்கள் இவர்களுக்கு தனியாடளத்தைக் கொடுப்பதற்காக சிங்கள மொழியை உருவாக்கினார்கள்.

வேடர் விதிவிலக்கு. அவர்கள் தங்கள் தனித்துவத்தை இன்றும் காப்பாற்றி வருகிறார்கள். குவேனி இயக்கர் குலப் பெண் என்று மகாவம்சம் கூறுகின்றது. இராவணன் இராட்சத குல மன்னன் என எண்ணப்படுகிறான்.

இன்றைய சிங்கள இனத்தவர் ஆதி காலத்தில் இந்துக்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மாறினவர்கள்.  அனுராதபுரத்தை ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் (கிமு 307 கிபி 267) பவுத்த மதத்துக்கு மாறிய முதல் நாகவம்ச அரசனாவான்.  மனுதர்மம் போன்ற நூல்கள் முற்பிறப்பில் செய்த வினைப் பயனே சாதியில் மேலோனாகவும் கீழோனாகவும் பிறப்பதற்குக் காரணமென்ற சித்தாந்தத்தை கொண்டவை. இலங்கையில் பவுத்தமானது அதன் முற்போக்குத் தன்மையை இழந்து இந்துத்துவ சிந்தனைமுறையைப் பின்பற்றுகிறது. றதல, கொவிகம ஆகிய ஆதிக்க சாதிகள் தங்களை உயர் சாதியரெனப் பிரகடனப்படுத்த இந்த சித்தாந்தம் உதவுகிறது.

சிங்கள் சமூகத்தில் பல்வேறு வகை சாதிப் பிரிவுகள் காணப்படுகின்றன. அதில் மிக உயர்ந்த சாதியினராக ‘றதல’ எனும் சாதி இருக்கிறது. இச்சாதியினரே அரச வம்சத்தினருக்கு நெருக்கமாக இருந்துவந்துள்ளனர். கண்டி இராச்சியத்தின்போது சிங்கள சமூகத்தில் செல்வாக்கான நிலையில் இருந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க இந்த  வகுப்பைச்  சேர்ந்தவர்.

இரண்டாம் இடத்தில் ‘கொய்கம’ எனும் சாதிப்பிரிவினர் காணப்படுகிறார்கள். இவர்கள் சிங்கள சமூகத்தில் 50 விழுக்காட்டினர் ஆவர். அரசனுக்கு சேவகம் செய்து வந்தவர்களாகவும் பிற்பாடு அவர்களின் செல்வாக்கின் பயனாக நிலவுடமையாளர்களாக மாறினார்கள்.  சிங்களவர்கள் மத்தியில் ஆதிக்க சாதியான கொவிகம இன்றுவரை இலங்கையின் அரசியல் – பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. விதி விலக்காக சாதி அடுக்கில் மிகவும் பிற்பட்ட இடத்தில் இருந்த இரணசிங்க பிரேமதாச 1988 இல் இலங்கையின் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்து ‘கரவா’ (கரையோரப் பகுதிமக்கள்) ‘பத்கம’ (கொய்கம சாதியினருக்க சேவகம் செய்பவர்கள்) ‘வக்கும்புர’ (சக்கரைத்தொழில்) எனும் சாதிப்பிரிவினர் இடைப்பட்ட சமூகத் தட்டில் இருக்கும் சாதியினராகும்.

சிங்களச் சமூகத்தின் விளிம்பு நிலைச் சமூகமாக இருப்பவர்கள் ‘கின்னர’ (காட்டிலுள்ள மூலப்பொருட்களை பயன்படுத்தி பாய்போன்ற கைப்பணிப் பொருட்களை செய்பவர்கள்) ‘கஹல’ (குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவோர்) ‘றொடியா’ (துப்பரவுப்பணி புரிபவர்கள்.) மற்றும் ‘நவன்தன்ன’ (கொல்லர்) ‘கும்பல்’ (குயவர்) ‘படு’ (சலவைத்தொழில்) ‘துறாவ’ (சீவல்தொழில்) ‘சலாகம’ ( (கறுவாத்தொழில்) ‘பெறவா’ (பறைமேளம் அடிப்பவர்கள்) ஆகியோர் ஆவர்.

இலங்கையில் சிங்கள (பவுத்த மத) சாதியத்தைப் பற்றிக் குறிப்பிடும் மிகவும் பழமைவாய்ந்த மானுடவியல் நூலான ”ஜனவங்சய”வில் 26 சாதிகள் குறிப்பிடப்படுகிறது. மத்தியகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும் சாதிகள் 17ஐ ஜே.டி.லெனரோல் குறிப்பிடுகிறார். பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர எழுதிய ”இலங்கை மக்கள்” எனும் நூலில் 43 சாதிகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறார்.

1. அஹிங்குந்தய (நாடோடிகள்)

2. பட்டஹல – குயவர்

3. பத்கம – பாரம்பரிய விவசாயிகள் (பிரித்தானிய ஆட்சியின் போது இவர்கள் பல்லக்குத் தூக்கிகளாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்)

4. பெராவ – பறையடிப்பவர்

5. கொவிகம – பாரம்பரிய கமக்காரர்கள் மற்றும் பண்ணையாளர்கள்.

6. ஹாலி – நெசவாளர்கள்

7. ஹன்னாலி – தையற்காரர்

8. ஹூனு – சுன்னக்கல் செய்பவர்கள்.

9. கின்னரய – பாய் பின்னுபவர்கள்.

10. நவந்தன்ன – பொற்கொல்லர். (பல கிளைச்சாதிகளைக்கொண்டது)

11. பமுனு – கூலி விவசாயிகள்

12. பன்ன – புல்வெட்டுவோர்

13. அம்பெட்ட (பனிக்கி) – முடி திருத்துவோர்

14. பட்டி – கால்நடை வளர்ப்போர்

15. பொரவக்கார – மரம் தறிப்போர்

16. றதல – நிலப்பிரபுக்கள் (குறிப்பாக கண்டி இராச்சிய காலத்தில்)

17. ராஜக்க, ஹேன – சலவைத்தொழிலாளர்கள்

18. றொடியா -தாழ்த்தப்பட்டோர்

19. வக்கும்புர (ஹக்குறு) – கருப்பட்டி தயாரிப்பாளர்கள்

20. கராவ – பாரம்பரிய மீன்பிடித் தொழில் செய்வோர்

21. துராவ – பாரம்பரிய படைவீரர் – காலனித்துவத்திற்குப் பின் கள் இறக்குவோர்

22. கட்டர – விவசாயிகள்

23. தெமல கட்டர – தமிழ் தாழ்த்தப்பட்டோர்

24. பட்டஹல (கும்பள்) – குயவர்

25. ஹன்னலி – தையற்காரர்

26. ஹின்ன – சலாகம சாதியனருக்கான சலவைத்தொழிலாளர்

27. ஹாலி – நெசவு, ஐரோப்பியர் காலத்தில் கருவா தொழில்

28. கஹல – கொலைத் தண்டனை நிறைவேற்றுவோர், சுத்திகரிப்போர்

29. கின்னர – பாய் பின்னுவோர்

30. ரதா – உயர்சாதியினருக்கு உடைதுவைப்போர்

31. ஹின்ன – மாவு சலிப்போர்

32. சலாகம – கருவா செய்கையில் ஈடுபடுவோர்

சிங்கள சாதியமைப்புக்கும் தமிழ் சாதியமைப்புக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்.

கரவ, துரவ, சலகம போன்ற சிங்கள சாதிகள், தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து   போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்கள். இதற்கான  வரலாற்று சான்றுகள் உள்ளன.  பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தன உட்பட அதிதீவிர சிங்கள – பவுத்தர்கள் தமிழ்ப் பரம்பரையில் வந்தவர்கள். இவர்களே சிங்கள – பவுத்த தேசியத்தை உருவாக்கியவர்களில் முன்னிலை வகித்தார்கள்.

சிங்களவர்களின் மத்தியில் இன்றைக்கும் காணப்படும் ஒவ்வொரு சாதியும் தனக்கென தனியான வரலாற்றைக் கொண்டுள்ளது. சிங்கள சாதிகள் எல்லாமே தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ளன.

கரவா, சலாகம, துறாவ சாதியினர் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்தில் தமிழ்நாடு மற்றும் இன்றைய கேரள (சேரநாடு) நாடுகளில் இருந்து கொண்டு வந்து தென்னிலங்கையில் குடியேற்றப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பான்மை மீனவ சாதியினர். சிறுபான்மை படையினர்.

பண்டாரநாயக்கவின் மூதாதையர் கூட, தமிழ்நாடு மற்றும் கேரளம் இரண்டிலும் இருந்து வந்தவர்களே. நாயக்க என்ற பின்னொட்டுப் பெயர்களைக் கொண்டோர் தமிழ் பின்னணியைக் கொண்டவர்களே.

துறாவ வகுப்பினர் கேரளத்து ஈழவர், தமிழ்நாட்டு நாடார் வகுப்பினரோடு ஒத்தவர்கள். இன்றைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர துறாவ வகுப்பைச் சேர்ந்தவர் ஆவர்.

அஸ்கிரியா – மல்வத்தை பவுத்த பீடங்கள் கொய்கம தவிர்ந்த ஏனைய சாதியினரை சங்கத்தில் சேர்ப்பதில்லை. இதனால் கரவா. சலாகம மற்றும் துவார சாதிகளைச் சேர்ந்தவர்கள் மைனமார் சென்று குருப்பட்டம் சூட்டிக் கொண்டார்கள். இவர்கள் அமரபுர என்ற பவுத்த மத பீடத்தை நிறுவினார்கள். இந்த சாதியினர் சிலர் சாதிப் பாகுபாடு காரணமாக கிறித்தவர்களாக மாறினார்கள்.

கொய்கம சாதிப் பிரிவுக்கு அடுத்ததாக உள்ள கரவா அல்லது மீனவ சாதியினர். இவர்களை தென்னிலங்கை கரையோரப் பகுதிகளில் செறிந்து வாழ்கிறார்கள். மொத்த சிங்கள மக்களது தொகையில் 10 விழுக்காட்டினர் இந்த சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்கள் நீர்கொழும்பு, புத்தளம், வென்னப்புவ, கொழும்பு வடக்கு, மொறட்ருவா, பாணந்துறை போன்ற நகரங்களில் செறிந்து வாழ்கிறார்கள்.

பவுத்த மதம் சாதி பாராட்டுவதில்லை. புத்தர் தனது காலத்தில் சகல சாதியினரையும் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். பிறப்பு என்பது அவனவன் செய்த தீவினை நல்வினை என்ற இருவினைப் பயனாக தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்ற கருத்தாக்கங்களை புத்தர் நிராகரித்தார். “ஒருவன் தன் பிறப்பால் பிராமணனாகவோ விலக்கப்பட்டவனாகவோ மாறுவதில்லை. அவனது நடத்தையே அவனது குணத்தைத் தீர்மானிக்கின்றமது. நடத்தை மட்டுமே முக்கியம்” என்றார். புத்தரின் கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது. (வளரும்)

——————————————————————————————————————–

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது

(5)

நக்கீரன்

பவுத்த மதத்தின் செல்வாக்குக்  காரணமாக சிங்களவர்களிடையே நிலவும் சாதியம் தமிழர்களிடையே நிலவும் சாதியம் போல் இறுக்கமாக இல்லை. தமிழ்ச் சமூகத்தில் இருப்பது போல சிங்கள சமூகத்திடையே சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு இருந்தாலும் தீண்டாமை இல்லை. விதிவிலக்கு வகும்புர, பாடு, பெரவா, றொடியா போன்றோர் இன்றும் தீண்டத்தகாதவர்களாக மிகவும் ஒடுக்குண்ட தாழ்ந்த சிங்களச் சமூகங்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

விமல் வீரவன்ச பெரவா என்ற சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தச் சமூகம் கேரளாவிலிருந்து (மலபாரிலிருந்து) செண்டு மேளம் இசைக்க அழைத்து வரப்பட்டவர்கள் எனக் கூறப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மேற்கொண்ட  கிளர்ச்சியின் போது அந்த இயக்கத்தில் கரவா சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் மேற்சொன்ன  மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே அதிகளவில் பங்கேற்றனர்.

பவுத்த கோயிலுக்குள் எல்லோரும் அனுமதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களிலும் அனைத்து சாதியனரும் அனுமதிக்கப்படுகிறார்கள். இருந்தபோதிலும் திருமணம் என்று வரும்போது சாதி பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் இருப்பது போன்று சிங்கள சமூகத்திலும் காணப்படுகிறது.

றொடியா சாதிப் பெண்கள்அரசியல் கட்சிகளின் தலைமைப் பதவி பெரும்பாலும் கொய்கம சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் சாதியப்பாகுபாடுகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவதையும் வாக்குச்சேகரிப்பு நிகழ்வதையும் காணலாம்.

ஒரு காலத்தில் கண்டிச் சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்கள் என்ற பிரிவினை இருந்தது. இவர்களிடையே திருமணம் இடம்பெறுவதில்லை. ஏன் கண்டிச் சிங்களவர்  கரையோரச் சிங்களவர்களைச்  சிங்களவர் என்றே சொல்வதில்லை. இன்று கண்டிச் சிங்களவர் கரையோரச் சிங்களவர் என்ற பாகுபாடு  பேரளவு இல்லாது போய்விட்டது.

பெரும்பாலும் அரசியல் அதிகாரமும் செல்வமும் சாதிக்கு மாற்றாக இலங்கையின்  சமூக அடுக்கின் முக்கிய காரணியாக மாறியுள்ளன.  

1946 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மத்திய, வட மத்திய, ஊவா மற்றும் சப்பரகாமுவ  மாகாணங்கள், குருநாகல்  மற்றும் புத்தளம் மாவட்டங்கள் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களின் ‘சிங்களப் பிரிவுகள்’ தொடர்ந்து  கண்டிய சிங்களவர்களின் வாழ்விடமாகக் கருதப்பட்டனர்.  மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் சிலாபம் மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கரையோரச் சிங்களவர்கள் எனக்  கருதப்பட்டனர்.

இப்படி சிங்களவர்களைக்  கண்டியச் சிங்களவர் கரையோரச் சிங்களவர் எனப் பிரித்துப் பார்க்கும் முறைமை 1901 – 1971 வரை நீடித்தது. 1981 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இரு சாராரும் இணைக்கப்பட்டனர்.

சாதியமைப்பின் ஊற்றுக்கண் வர்ணாசிரம தர்மமே. வருணாசிரம கோட்பாட்டின்படி பிராமணரே உயர்ந்தவர்கள். அடுத்து ஷத்திரியர்களும், வைசியர்களும் நான்காவதாக சூத்திரர்களும் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த வருண அமைப்பே பின்னர் அவரவர் செய்யும் தொழில் அடிப்படையில் ஆயிரக் கணக்கான சாதிகள் உருவாகக் காரணமாக இருந்தது.  அப்படி உருவாக்கப்பட்ட  பின்னர் அது பிறப்பின் அடிப்படையில் அமைந்துவிட்டது. முன்னைய காலங்களில் வேளாளர் என்போர் பயிர்த் தொழில் செய்தார்கள். இன்று அவர்களில் பெரும்பான்மை வேறு வேறு தொழில் செய்கிறார்கள். இருந்தும் பிறப்பின் அடிப்படையில் வந்த சாதி தொடர்கிறது.

மொத்தம் 443 ஆண்டு கால கொலனித்துவ ஆட்சி, பொருளாதார உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள், எல்லோரும் கல்வி கற்கும் வாய்ப்பு, போக்குவரத்து போன்ற காரணிகளால் சாதிக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சில சாதிகள் வழக்கொழிந்து போயின. சில சாதிகள் புதிதாகப் புகுந்து கொண்டன. தகப்பன் செய்த தொழிலை மகன் செய்ய வேண்டும் என்ற நியதி பேரளவு குறைந்துவிட்டது.

எம்எல்டி மகிந்தபால போன்ற தீவிர – சிங்கள பவுத்த தேசியவாதிகள் தமிழ்மக்களது அரசியலில்  வேளாளரின் ஆதிக்கம் இருப்பதாகப் பேசியும் எழுதியும் வருகிறார்கள். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது. சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. இரண்டுமே குற்றவாளிகள்தான்.

இலங்கைத் தீவில் சிங்களவர் பெரும்பான்மையாக இருப்பதற்குக் காரணம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து கூட்டிவரப்பட்ட தமிழர்கள்  நாளடைவில் சிங்களமயப் படுத்தப்பட்டதே.   சிங்கள சமூகத்தில் காணப்படும் கரவா, சலகம, துவார சாதியினர் இப்படி தமிழ்நாட்டில் இருந்து  கூட்டிவரப்பட்டவர்கள் ஆகும்.

தென்னிலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்கள் நிலையான படையணிகளை வைத்திருப்பதில்லை. அரியணைக்கான போட்டியின் போது சிங்கள மன்னர்கள் பாண்டிநாட்டில் இருந்து படை திரட்டி வருவது வழக்கமாக இருந்தது.

முதலாவது இராசராசன் அவனது மகன் முதலாவது இராசேந்திரன் காலத்தில்  சோழர்கள் இலங்கை மீது படையெடுத்துவந்து சுமார் 77 ஆண்டு காலம் (கிபி 993–1070)  ஆட்சி செய்தார்கள்.  

இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான  அதிகாரப் போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராசராசன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவையைத்  தலைநகரம் ஆக்கினான்.

சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான உருகுண இராச்சியம் 24 ஆண்டுகள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது.

கிபி 1018 இல்  இராசேந்திர சோழன் மேற்கொண்ட  படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று  ஈழத்தின் எஞ்சிய இடங்களைக்  கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டு சென்றான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். 

இந்தப் படையெடுப்பின் போது இலங்கை வந்த சோழர்களின் வேலைக்காரப் படையணிகள் இலங்கையிலே தங்கிவிட்டனர். பாண்டியர் படையெடுப்புகளின் போதும்  பாண்டியப் படைகள் இங்கேயே தங்கிவிட்டனர்.

கிபி 1215 இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24,000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவர்களும் இலங்கையில் தங்கிவிட்டார்கள்.

பல்லவர் காலத்தில் (கிபி 6 ஆம் நூற்றாண்டளவில்)  தமிழ்நாட்டில்  உருவாகிய பக்தி இயக்கத்தின்  தாக்கம் காரணமாக அங்கு வாழ்ந்த தமிழ் பவுத்தர்கள்  இலங்கைக்கு இடம் பெயர்ந்தார்கள்.  இவர்கள் நாளடைவில் சிங்கள பவுத்தர்களாக மாறிவிட்டனர்.

சிங்களத்தில் காணப்படும்  பெரும்பான்மை பெயர்கள்,  உறவுப் பெயர்கள், ஊர்ப்பெயர்கள் தமிழில் உள்ளது போலவே காணப்படுகின்றன. சிங்கள மொழியில் காணப்படும் சொற்களில் 25 விழுக்காடு தமிழ்ச் சொற்களே. எஞ்சியவை, எலு (ஹெல) பாளி, சமற்கிருத மொழிகளைச் சார்ந்தவை.

தமிழ்ச் சொற்கள் எவ்வகை வடிவு மாற்றமும் இன்றி இடம் பெறுதல்,  முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை  போன்று அமைதல், தமிழ்ப் பேச்சு வழக்கு திருந்திய சொல் வடிவாக இடம்பெறுதல், ‘யா’ என்னும் எழுத்தொலி சேர்ந்து சிங்களத்தில் இடம் பெறுதல், சிதைந்து வருதல்,  யகரம்  சகரமாக மாறுவது  போன்று போலியாய் இடம் பெறுதல் எனத் தமிழ் இலக்கணத்துக்கு ஏற்றாப்போல் தமிழ்ச் சொற்கள் பலவாறு மாற்றமடைந்து  சிங்கள மொழியில் இடம்பெற்றுள்ளன.   

இதன் காரணமாகவே தமிழர்கள் சிங்கள மொழியை இலகுவாகப் பேச, எழுதப் பழகிவிடுகிறார்கள். 

சோழர்கள் காலத்தில்தான் தமிழ் ஆட்சி மொழியாக மாற்றப்பட்டது. சோழர் ஆட்சிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள மன்னர்கள் கூடத்  தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் தமிழ்மொழியிலேயே கல்வெட்டுக்களைப் பொறித்துள்ளனர். 

நயினாதீவுக் கல்வெட்டு என்பது, யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு  அப்பால் அமைந்துள்ள நயினாதீவில்   உள்ள அம்மன் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு  ஆகும்.

முதலாம் பராக்கிரமபாகுஎன்னும் சிங்கள அரசனால் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டுத் தமிழ் மொழியிலும் சில பகுதிகள் வடமொழியிலும் உள்ளன. இதன் எழுத்தமைதி கொண்டும் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தை அடிப்படையாக வைத்தும் இக்கல்வெட்டு 12 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டது எனக் கொள்ளப்படுகிறது. பிறநாட்டு வணிகர்களுக்கான வசதிகள், வரிகள் என்பன குறித்து இக்கல்வெட்டு எடுத்துக் கூறுகிறது. (வளரும்)


இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது

பாகம் 6

நக்கீரன்

சப்புமால் குமாரய

கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் சப்புமால் குமாரய என்ற சிங்கள இளவரசரினால் கட்டப்பட்டது என்பதற்காக வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயங்களை உரிமை கோரமாட்டோம் என எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளர். இதற்கு முன்னர் திருக்கோணேஸ்வர ஆலயம் கோகண்ண விகாரையின் மீதே கட்டப்பட்டுள்ளது எனவும் அவர் பேசியிருக்கிறார். இவர் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் சனாதிபதி செயலணியின் உறுப்பினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சனாதிபதி தேர்தலில் கோட்டாபய இராசபக்ச 6,924,255  (52.25 விழுக்காடு) இலட்சம் வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியீட்டி இருந்தார். தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் இன்றி முழுக்க முழுக்க சிங்கள – பவுத்த வாக்காளர்களின் ஆதரவிலேயே தான் வெற்றி பெற்றதாக போட்டாபய பெருமைப் பட்டுக்கொண்டார். அவர் பெருமைப் பட்டதில் பொருள் உண்டு. சனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியை சிறுபான்மை மக்களே தீர்மானிக்கிறார்கள் என்ற நம்பிக்கையை கோட்டாபய தகர்த்துவிட்டார்.

வெற்றி பெற்ற பின்னர் சிங்கள மன்னர்களின் பழைய தலை நகரமான அனுராதபுரத்தில் அவர் பேசும் போது தான் ஒரு சிங்கள – பவுத்த பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்தவன் என்று சொன்னார். மேலும் “ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றைக் கொண்ட சிங்கள கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். நமது பாரம்பரிய  தார்மீக விழுமியங்கள், மரபுகள், சடங்குகள் மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்க ஆதரவு வழங்கப்படும்” என்றார்.

கோட்டாபய  உருகுண பிரதேசத்தை ஆண்ட மன்னன், காகவண்ண தீசனது தந்தை,  துட்ட கைமுனு இன் பாட்டன்.  கடந்த சனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது “ஸ்ரீசங்கபோ மன்னன் கொலை செய்யப்பட்ட பின்னர் கோட்டாபய மன்னரானதை சஜித் அறிந்திருக்க மாட்டார்” என மகிந்த இராசபக்ச பேசியிருந்தார். இராசபக்ச குடும்பம் மன்னர் பரம்பரைக் குடும்பம் என மகிந்த இராசபக்ச  சொல்லhமல் சொல்லியிருந்தார்.  

சனாதிபதி கோட்டாபய இராசபக்சவின் வெற்றிக்குப் பிறகு சிங்கள – பவுத்த தேசியவாதிகள் மத்தியில் பேர் எழுச்சி ஏற்பட்டுள்ளது. கிழக்கில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காணவும் அவற்றைப் பாதுகாக்கவும் ஓய்வு பெற்ற இராணுவ தளபது கமல் குணரத்தின தலைமையில் ஒரு செயலணி நியமிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

எல்லாவெல மேதானந்த பேரர் போலவே “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்”  என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரகடனம் செய்திருப்பதும் மனம் கொள்ளத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோயில்  சப்புமால் குமார என்ற  இளவரசரினால் கட்டப்பட்டது என்பது சரி. ஆனால் அவன் சிங்கள இளவரசன் என்பது பிழை. அவனது இயற்பெயர் செண்பகப்பெருமாள் என்பதே சரி.

15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு வலிமை பெற்று விளங்கியது. பாக்கு நீரிணைப் பகுதியில் கடல் ஆதிக்கமும், மன்னர்ப் பகுதியில் முத்துக்குளிப்பு உரிமையும் பெற்றிருந்த யாழ்ப்பாண அரசுக்குக் குறிப்பிடத்தக்க வருவாய் கிடைத்தது. தெற்கே புத்தளம் வரை யாழ்ப்பாண அரசின் ஆதிக்கம் இருந்தது. இக்காலத்தில், யாழ்ப்பாண அரசு தென்னிலங்கை அரசுகளின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையிலும் இருந்தது. தென்னிந்தியாவில் விசயநகர ஆதிக்கம் ஏற்பட்டபோது, பாக்கு நீரிணையில் அவர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. இதனால், யாழ்ப்பாண அரசின் வருமானம் வீழ்ச்சியுற்றதுடன், விசயநகரப் பேரரசுக்குத்  திறை செலுத்த வேண்டிய நிலைமையும் உருவானது. இந்தப் பொருளாதார வீழ்ச்சி யாழ்ப்பாண அரசின் வலிமையைப் பெருமளவுக்குக் குறைத்துவிட்டது. இதே காலப்பகுதியில் வலிமை குன்றியிருந்த தென்னிலங்கை கோட்டை அரசு, ஆறாலம் பாராக்கிரமபாகுவின் ஆட்சியின் கீழ் வலிமை பெறலாயிற்று.

சப்புமால் குமாரய என அழைக்கப்பட்ட செண்பகப்பெருமாள் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனாவான் என்பது முதலியார், செ. இராசநாயகம் அவர்கள் கருத்தாகும். இவனைப்பற்றி முதலியார் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் :

“கோட்டை அரசனாகிய ஆறாம் பராக்கிரமபாகு சபைக்கு மலையாளத்தேசத்திலிருந்து பணிக்கன் ஒருவன் வந்தான். அவனை அரசன் உபசரித்து, அவன் தேகவலியாலும் வாட்போர்த்திறத்திலும் ஈடுபட்டவனாய்த், தன் குலத்தினளாகிய ஒரு கன்னிகையை அவனுக்கு மணம் முடிப்பித்தான். இப் பணிக்கனுக்குச் செண்பகப்பெருமாள் (சப்புமால் குமாரய), ஜெயவீரன் (அம்புலகலகுமாரய) எனவிரு குமாரர்கள் பிறந்தார்கள். பராக்கிரமபாகு தனக்குப் புத்திரர்கள் இல்லாமையால் இவர்களைத் தனது சொந்தப்  புத்திரர்களாக வைத்து வளர்த்து வந்தான். இஃதிங்ஙனமாக, பராக்கிரமபாகுவின் மகள் உலகுடையதேவி நன்னூர்த் துணையார் * என்பவனை மணந்து ஜெயவீரன் என்னும் மகனையீன்றாள். இந்நிகழ்ச்சி பராக்கிரமபாகுவின் எண்ணங்களை மாற்றிவிட்டது.

தான் இறந்தபின் தத்த புத்திரர்களில் ஒருவன் இராச்சியத்துக்குவரின் தன் பேரப்பிள்ளைக்கு அரச பதவி இல்லாது போய்விடும் என்ற அச்சத்தால் பராக்கிரமபாகு அவ்விரு குமாரர்களையும் அகற்ற வேண்டுமென எண்ணி, வன்னியர்களை யடக்கி, யாழ்ப்பாண அரசனையும் வென்று வருமாறு செண்பகப்பெருமாளை அனுப்பினான்.

இவர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று பராக்கிரமபாகு கருதினான். செண்பகப்பெருமாள் பிரபலம் பெற்ற குதிரை வீரன். உருவத்தால் இராட்சதனைப்போலும் காத்திரமுடையவன்; மகா பலங்கொண்டவன். தகுந்த படையுடன் வந்த இவன் கறுப்புக்குதிரை மீதமர்ந்து, எதிரி படையுட் புகுந்து அநேகரைத் தன் வாளுக்கிரையாக்கி, தமிழ்ச் சேனையைப் புறங்கொடுத்தோடச் செய்தான். போர்க்குடைந்த கனகசூரியன் (கிபி 1440 வரையில் அரசனானான்)  தன் குடும்பத்தாருடன் இந்தியாவுக்கோடித் திருக்கோவலூரிற் கரந்துறைவானாயினான்.

“செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத் தலைநகருட் புகுந்து, மாடமாளிகைகளைத் தரைமட்டமாக்கி, அநேக அதிகாரிகளைச் சிறைப்படுத்தி அவர்களுடன் அனுப்பினான்.

பராக்கிரமபாகுவின் கபட சிந்தையை யறியாத செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணம் போய்ப் பழைய தலைநகர் பாழாய்விட்டமையினால், நல்லூரிலே கிபி 1450 ஆம் ஆண்டளவில் ஒரு புது நகர் எடுப்பித்துச் சிறீசங்கபோதி புவனேகவாகு என்னும் சிங்கள நாமத்தோடு பதினேழு வருடங்களாக (கிபி 1467 வரை) அரச செய்து வந்தான்.

இவன் யாழ்ப்பாணத்தை வென்ற புகழ் சிங்கள நாடெங்கும் பரவிப் பேரானந்தத்தை விளைத்தது. இவ் வெற்றியைப் புகழ்ந்து ‘கோகிலசந்தேஸ’ என்னும் குயில்விடு தூதுப் பிரபந்தம் தேவி நுவரையைச் சேர்ந்த இருகல் கலத்திலக்க பரிவேனாதிபதி எனும் பெளத்த குருவினால் இயற்றப்பட்டது.”

செண்பகப்பெருமாள் ஆண்ட நகர் விசாலித்த தெருக்களும், உப்பரிகை பொருந்திய வீடுகளும், மாளிகைகளும், இராமன் கோயில் முதலிய கோயில்களும் இருந்ததாக கைலாயமாலை என்ற நூல் கூறுகின்றது. இந்த நூலை முத்துராச கவிராயர் என்ற புலவர் பாடியுள்ளார்.

Nallur Temple - Jaffna | vinokanth | Flickr

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவன் புவனேகவாகு என்பது “கைலாயமாலை” யில் வந்துள்ள பின்வரும் தனிச் செய்யுளால் அறியக்கிடக்கின்றது :

“இலகிய சகாத்த மெண்ணூற் றெழுபதா மாண்ட தெல்லை
அலர்பொலி மாலை மார்ப னும்புவனேக வாகு
நலமிகும் யாழ்ப்பா ணத்துநகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே.”

இப் புவனேகவாகு திரிசங்கபோதி என்ற அரியணைப் பெயராலும் அழைக்கப்பட்டான் என்பது ஸ்ரீமான் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய ‘யாழ்ப்பாணச் சரித்திரத்தில், விசுவநாத சாஸ்திரியார் சம்பவக் குறிப்பு எனும் கையெழுத்துக் பிரதியிலிருந்த எடுத்துக் காட்டிய செய்யுளால் நன்கு புலப்படுகின்றது. அச் செய்யுள் வருமாறு :

“இலகிய சகாத்த மெண்ணூற் றெழுபத்து நான்கி
னலர்திரி சங்க போதி யாம்புவ னேக வாகு
நலமுறும் யாழ்ப்பாணத்து நகரி கட்டுவித்து
குலவியகந்தனார்க்குக் கோயிலொன்றமைப்பித்தானே.”

நல்லூர் கட்டியம்

இவன் நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கட்டியத்தில் இன்றும்

சிறீமான் மஹாராஜாதிராஜ
அகண்ட பூமண்டலப்ர
தியதிகந்தர விச்றந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மாவல்லி சமேத சுப்பிரமண்ய
பாதாரவிந்த ஜநாதிரூட சோடச
மகாதான சூர்யகுல வம்சோத்பவ சிறீசங்க
போதி புவனேகவாகு”

என்று போற்றப்படுகிறான்.

மாவிட்டபுரக் கொயிலாதீனப் பிராமணர் சின்னமனத்துளார் என்பவர் இவ்வரசனுக்கு விருந்தளித்ததாகவும் அவ்விருந்தைப் புகழ்ந்து சில பாக்கள் பாடியதாகவும் ‘ யாழ்ப்பாண வைபவமாலை’ குறிப்பிடுகின்றது. அப்பாடல்களுள் ஒன்று பின்வருமாறு :

“ சின்ன மனத்தான் செயும்விருந்திற் சாற்றுருசி
அன்னதனை விண்னோர் அறிந்திருந்தால் – முன்னலைவாய்
வெற்பதனைக் காவியுய்த்து வேலைகடைந் தேயுலைதல்
அற்பமெனத் தள்ளுவரே யாம்.”

இந்தச் செய்யுளை நோக்குமிடத்து செண்பகப் பெருமாள் சிறந்த தமிழ்ப் புலவனாக விளங்கினான்  என்பது தேற்றம்.

யாழ்ப்பாணத்து இராசதானியாகிய நல்லூரைச் செண்பகப் பெருமாள் நன்கு திருத்தி, நல்லைக் கந்தவேள் ஆலயத்தையம் ஆக்குவித்தான். “செண்பகப்பெருமாள் தமிழ்க்குருதி தன் நாளங்களில் ஓடக் கொண்டவனாதலாலும், தமிழுற்பத்தியாளனேயாகிய அளகேஸ்வரன் காலந்தொட்டு ஜெயவர்த்தன கோட்டையிலேயும் வழிபாடு பயின்று வந்தமையாலும், கோகில சந்தேசமுடையார் அவனைப் புத்தமத தாபகனெனப் புகழ்ந்தோதியவிடத்தும் தமிழ்ப் பிரசைகட்கிதமாய்த் தமிழ்த் தெய்வ வழிபாடுகளையே யாழ்ப்பாணத்தில் வளர்த்திருப்பான் என்பதிற் சிறிதும் சந்தேகமின்று” எனச் சுவாமி ஞானப்பிரகாசர் தாம் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவ விமர்சன’ த்திற் (பக்.107) கூறியிருத்தலும் ஈண்டு நினைவுகூர்தற்பாலது.

ஆறாம் புவனேகபாகு

கி.பி.1467 இல் கோட்டையை  ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகு தன் பேரன் ஜெயவீரனுக்கு இலங்கையரசை யீந்து முடிசூட்டிச் சிலநாளில் இறந்தான். இதைக் கேகள்வியுற்ற செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலிருந்த புறப்பட்டுக் கோட்டைக்குச் சென்ற ஆங்கு அரசானக இருந்த சிறுவனைக் கொண்று ஆறாம் புவனேகவாகு எனும் அரியணைப் பெயருடன் கோட்டை யரசனானான்.

யாழ்ப்பாணத்தில் விஜயபாகு என்னும் சிங்களனொருவன் அரசனாகப் புவனேகவாகுவால் நியமிக்கப்பட்டான். இவன் ஆட்சிக்காலத்தில் கனகசூரியன் தன் புத்திரர்களுடனும் சேனைகளுடனும் யாழ்ப்பாணம் மீண்டும் வந்து, விஜயபாகுவுடன் போர் தொடுத்து அவனைக் கொன்று மீண்டும் தானே வட இலங்கை அரசனாகி நல்லூரில் இருந்து அரசாண்டான். (வளரும்)

—————————————————————————————————————

சிங்கள – பவுத்தர்கள்  விஜயனைக் கைவிட்டுத்  தாங்கள் இராவணன் பரம்பரை  எனக் காட்ட முனைகிறார்கள்!

நக்கீரன்

முன்னைய தொடர்ச்சி…….7

மகாவம்ச ஆசிரியரின் கூற்றுப்படி நாகர், இயக்கர், இராடசதர், தேவர், புலிந்தர் (வேடர்) ஆகியோரே இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதைப் பார்த்தோம். இதனால் மகாவம்சத்தில் உள்ள உள்ள இரண்டு வரலாற்றுக் குறிப்புக்கள் சிங்களவர்களுக்கு பலத்த நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

1. சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பது,

2.இலங்கையின் வரலாறு வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது  என்பது. 

சிங்கள பவுத்தர்களின் புனித வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தில் சிங்களவர்களின் தோற்றம் பற்றிய கதையின் அடிப்படையில்  சிங்களவர்களின் பூர்வீகம் சிங்கம் என்கிறது. ஆகவே சிங்களவர் மிருகத்தின் வம்சாவளியினர்  என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனை ஏற்காவிட்டால் மகாவம்சத்தை நிராகரிக்க வேண்டியிருக்கும்.  மகாவம்சத்தை நிராகரிப்பது என்பது அவர்களின் வரலாற்றின் புகழை  இழப்பதாகும்.

எனவே விஜயன் சிங்கத்தின் பேரன் அல்ல என்றும் சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் அல்லர் என்றும் வரலாற்றை திருத்தி எழுத  வேண்டிய நிர்ப்பந்தமும் சிங்கள – பவுத்தர்கள் மத்தியிலும் சிங்கள பவுத்த அரசியல்வாதிகள் மத்தியிலும் இன்று தோற்றம் பெற்றுள்ளது.

இலங்கையின் வரலாறு வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது  என்று வைத்துக் கொண்டால் அவன் இலங்கை மண்ணுக்கு அந்நியன்,  வந்தேறி ஆகிறான்.  தோணியில் வந்ததால் அவன் முதல் “கள்ளத் தோணி”  என்றாகிறது!

1956 ஆண்டு இலங்கை அரசு “விஜயனின் வருகை” எனக் குறிப்பிட்டு  ஒரு 10 சத சிறப்பு முத்திரையை வெளியிட்டது. அது  விஜயனும் அவனது 700 தோழர்களும் கிமு 543 இல் தோணிகளில் வந்து 2,500 ஆண்டுகள் நிறைவாகியதை கொண்டாடு முகமாக வெளியிடப்ப ட்டது. அதில் விஜயனும் அவனது தோழர்களும்  இலங்கைக் கரையை வந்தடைந்த போது அங்கு இயக்கர் குல அரசியான குவேனி  ஒரு மரத்தின் கீழ் இருந்து கொண்டு நூல் நூற்றுக் கொண்டிப்பது போன்ற சித்திரம் வரையப்பட்டிருந்தது.

சிங்கள – பவுத்த தீவிரவாதிகளின் கடுமையான எதிர்ப்பை அடுத்து அந்த முத்திரை அவசர அவசரமாகத்  திரும்பப் பெறப்பட்டது.

எனவே இன்று சிங்களவர்கள் தாம் சிங்கத்தின் வம்சம் அல்ல, விஜயன் இலங்கையில் காலடி எடுத்து வைத்த பின்னரே சிங்கள இனத்தின் வரலாறு தொடங்கவில்லை என வரலாற்றைத் திரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத்  தள்ளப்பட்டுள்ளார்கள்.

இப்போது  தாங்கள் விஜயன் வருகைக்கும் முற்பட்ட பூர்வீக குடிகள் என்பதை எண்பிக்க இலங்கை வேந்தன் இராவணனை தோளில் சுமக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்தப் புதுக்  கோட்பாட்டை விலைப்படுத்த பல அமைப்புக்கள் தென்னிலங்கையில் தோற்றம் பெற்றுள்ளன. அவற்றில்   இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரர் அவர்களது  இராவண பலய ஒன்றாகும். இராவண சேனை, சிங்கள பலய என்ற பெயர்களிலும்  அமைப்புகள்  இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு பவுத்த தேரர்களே தலைமை தாங்குகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை  அரசே சிங்களவர்கள் இராவணனின் சந்ததியினர் என்பதை எண்பிக்க பல  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கை அரசாங்கத்தின் கூற்றுப்படி, இராவணன் உலகின் முதல் விமானி. அவனிடம் புட்பக விமானம் என்ற பெயருடைய பறக்கும் ஊர்தியிருந்தது, அதனை அவரே ஓட்டினார்.

இராவணன் தொடர்பான ஆவணங்கள், நூல்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தி இலங்கை அரசு செய்தித்தாள்களில்  விளம்பரம் ஒன்றை கடந்த யூலை மாதத்தில்  செய்தி ஏடுகளில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தைச் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசு,  இராவணன் மற்றும் நாட்டின் விமான வரலாறு குறித்து ஆழமான ஆராய்ச்சி நடத்த விரும்புவதாகக் கூறுகிறது. இந்தத்  திட்டத்திற்குச் சூட்டப்பட்டுள்ள தலைப்பு: ‘மன்னன் இராவணன் மற்றும் இப்போது இழந்த வான்வழிப் பாதைகளில் பண்டைய ஆதிக்கம்’ (“King Ravana and the ancient domination in the aerial routes that are now lost”) என்பதாகும்.

அந்த அறிக்கை, 5000 ஆண்டுகளுக்கு முன்பு இராவணன் வான்வெளியில் பறந்ததாகவும்  அவன்தான் உலகின் முதல் விமானி என்றும் இலங்கை அரசு பண்டைய காலகட்டத்தில் பறக்கப் பயன்படும் முறைகளைக்  அறிந்திருந்த  தீவு  இன்று அதனைப் புதுப்பிக்க  ஆர்வமாக உள்ளது என்கின்றது. ஆராய்ச்சியின் முதல் கட்டமாக,  இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் பிற வரலாற்று உள்ளடக்கங்களை அரசாங்கம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் சஷி தனதுங்கே (Shashi Danatunge)  விமானத்தைப் பறக்கவிட்ட முதல் விமானி  இராவணன் என்பதை எண்பிக்க அரசாங்கத்திடம்  ‘மறுக்கமுடியாத சான்றுகள்’ இருப்பதாகத் தெரிவித்தார். இராமரின் காலத்தில் இலங்கையின்  மன்னனாக இராவணன் இருந்தார். “மன்னன் இராவணன் ஒரு மேதை. அவர் தான் முதலில் பறந்தார். அவர் ஒரு விமானியாக இருந்தார். இது புராணம் அல்ல; இது  உண்மை. இது குறித்து விரிவான ஆராய்ச்சி நடத்த  வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை நாங்கள் எண்பிப்போம்”என்று அவர் அடித்துச் சொல்கிறார்.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்தத் திட்டத்திற்கு ஏன் தலைமை தாங்குகிறது என்று கேட்டபோது பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அதிகாரி  “நாங்கள் இலங்கையின் முக்கிய விமான ஒழுங்குமுறை ஆணையம். இராவணன் ஒரு விமானத்தைப் பறக்கவிட்டு இந்த வழிகளை உள்ளடக்குவது பற்றிப் பல ஆண்டுகளாக பல கதைகள் இருப்பதால், இந்த விடயத்தை நாங்கள் ஆழமாகப் படிக்க விரும்புகிறோம்” என்றார்.

சிறிலங்கா இராவணனை ஒரு அறிஞர், கனிவான ஆட்சியாளர் என்று பாராட்டுகிறது. அவர் சீதாவைக் கடத்திச் சென்றார் என்ற ‘வரலாற்றை’ அவர்கள் நிராகரிக்கிறார்கள்.  அது இராவணனின் ‘இந்தியப் பதிப்பு’ என்று முத்திரை குத்துகிறார்கள். பல இந்திய தர்மசாத்திரங்கள் இலங்கையை ஆண்ட இராவணனை ‘மகா பிராமணர்’ அல்லது ‘பெரிய பிராமணர்’ என்று குறிப்பிடுகின்றன.

அண்மையில், இலங்கை தனது முதல் விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக விண்வெளியில் ஒரு செயற்கைக் கோளை ஏவியது. இந்தச்  செயற்கைக்கோளுக்கு ‘இராவணன் 1’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கட்டுநாயக்காவில் நடந்த ஒரு மாநாட்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், அறிவியலாளர்கள், விமான வல்லுநர்கள் மற்றும் புவியியலாளர்கள் கூடி ‘மா மன்னர்’ 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தனது புட்பக விமானத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப்  பறந்தது உண்மைதான் என முடிவு செய்தனர்.

வால்மீகி எழுதிய இராமாயண காப்பியம்,  இராவணன் புட்பக விமானம்  என்ற விமானத்தைப் பயன்படுத்தினார், அதை விஸ்வகர்மா கட்டியுள்ளார். பாரதத்திலிருந்து இலங்கைக்குச்   சீதாவைக் கடத்திச் சென்றபோது இராவணன் இந்த விமானத்தைப் (Dandu Monara aircraft)  பயன்படுத்தியிருந்தான் எனக் கூறுகிறது.

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இந்த ‘இராமாயண பாதை’ ஊக்குவிக்கும்.  அதே வேளை – இந்தியா இலங்கையின்  மிகப்பெரிய சுற்றுலா சந்தைகளில் ஒன்றாகும் –  காப்பியத்தில்  அரக்கனாகச் சித்தரிக்கப்படும் மன்னன் இராவணனை  சிங்கள – பவுத்தர்கள் போற்றுகிறார்கள்.  இலங்கையில் உள்ள சமூக – சமய அமைப்புகளும் அரசும்  இராவணனை சிறிலங்காவின்  ‘வீரம் செறிந்த  மாமன்னன்’ என்று போற்றுகின்றன.

2016 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற  சிவில் விமான நிபுணர்களைக் கொண்ட  ஒரு மாநாட்டில்  உரையாற்றிய அப்போதைய போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலா டி சில்வா, “உலகளாவிய விமானப் பயணத்தின் நவீன வரலாறு Wright சகோதரர்களால் தொடக்கி வைக்கப்பட்டாலும்  ​​இலங்கையில் இராவணன் என்ற துணிச்சலான மன்னனே நாட்டிற்குள் மட்டுமல்லாமல், பிராந்தியத்திலும் பறந்து செல்லப் புட்பக விமானம் (Dandu Monara) என்ற பறக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தினார் என புராணக் கதைகள் செப்புகின்றன” என்றார். (http://www.dailynews.lk/2020/07/22/features/223929/govt-keen-establish-ravana-world%E2%80%99s-first-aviator)

———————————————————————————————————

சிங்கள – பவுத்தர்கள்  விஜயனைக் கைவிட்டுத்  தாங்கள் இராவணன் பரம்பரை  எனக் காட்ட முனைகிறார்கள்!

(7)

நக்கீரன்

முன்னைய தொடர்ச்சி…….

மகாவம்ச ஆசிரியரின் கூற்றுப்படி நாகர், இயக்கர், இராடசதர், தேவர், புலிந்தர் (வேடர்) ஆகியோரே இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதைப் பார்த்தோம். இதனால் மகாவம்சத்தில் உள்ள உள்ள இரண்டு வரலாற்றுக் குறிப்புக்கள் சிங்களவர்களுக்கு பலத்த நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

1. சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பது,

2.இலங்கையின் வரலாறு வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது  என்பது. 

சிங்கள பவுத்தர்களின் புனித வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தில் சிங்களவர்களின் தோற்றம் பற்றிய கதையின் அடிப்படையில்  சிங்களவர்களின் பூர்வீகம் சிங்கம் என்கிறது. ஆகவே சிங்களவர் மிருகத்தின் வம்சாவளியினர்  என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனை ஏற்காவிட்டால் மகாவம்சத்தை நிராகரிக்க வேண்டியிருக்கும்.  மகாவம்சத்தை நிராகரிப்பது என்பது அவர்களின் வரலாற்றின் புகழை  இழப்பதாகும்.

எனவே விஜயன் சிங்கத்தின் பேரன் அல்ல என்றும் சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் அல்லர் என்றும் வரலாற்றை திருத்தி எழுத  வேண்டிய நிர்ப்பந்தமும் சிங்கள – பவுத்தர்கள் மத்தியிலும் சிங்கள பவுத்த அரசியல்வாதிகள் மத்தியிலும் இன்று தோற்றம் பெற்றுள்ளது.

இலங்கையின் வரலாறு வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது  என்று வைத்துக் கொண்டால் அவன் இலங்கை மண்ணுக்கு அந்நியன்,  வந்தேறி ஆகிறான்.  தோணியில் வந்ததால் அவர் முதல் “கள்ளத் தோணி”  என்றாகிறது!

1956 ஆண்டு இலங்கை அரசு “விஜயனின் வருகை” எனக் குறிப்பிட்டு  ஒரு 10 சத சிறப்பு முத்திரையை வெளியிட்டது. அது  விஜயனும் அவனது 700 தோழர்களும் கிமு 543 இல் தோணிகளில் வந்து 2,500 ஆண்டுகள் நிறைவாகியதை கொண்டாடு முகமாக வெளியிடப்ப ட்டது. அதில் விஜயனும் அவனது தோழர்களும்  இலங்கைக் கரையை வந்தடைந்த போது அங்கு இயக்கர் குல அரசியான குவேனி  ஒரு மரத்தின் கீழ் இருந்து கொண்டு நூல் நூற்றுக் கொண்டிப்பது போன்ற சித்திரம் வரையப்பட்டிருந்தது.

சிங்கள – பவுத்த தீவிரவாதிகளின் கடுமையான எதிர்ப்பை அடுத்து அந்த முத்திரை அவசர அவசரமாகத்  திரும்பப் பெறப்பட்டது.

எனவே இன்று சிங்களவர்கள் தாம் சிங்கத்தின் வம்சம் அல்ல, விஜயன் இலங்கையில் காலடி எடுத்து வைத்த பின்னரே சிங்கள இனத்தின் வரலாறு தொடங்கவில்லை என வரலாற்றைத் திரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத்  தள்ளப்பட்டுள்ளார்கள்.

இப்போது  தாங்கள் விஜயன் வருகைக்கும் முற்பட்ட பூர்வீக குடிகள் என்பதை எண்பிக்க இலங்கை வேந்தன் இராவணனை தோளில் சுமக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்தப் புதுக்  கோட்பாட்டை விலைப்படுத்த பல அமைப்புக்கள் தென்னிலங்கையில் தோற்றம் பெற்றுள்ளன. அவற்றில்   இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரர் அவர்களது  இராவண பலய ஒன்றாகும். இராவண சேனை, சிங்கள பலய என்ற பெயர்களிலும்  அமைப்புகள்  இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு பவுத்த தேரர்களே தலைமை தாங்குகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை  அரசே சிங்களவர்கள் இராவணனின் சந்ததியினர் என்பதை எண்பிக்க பல  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கை அரசாங்கத்தின் கூற்றுப்படி, இராவணன் உலகின் முதல் விமானி. அவனிடம் புட்பக விமானம் என்ற பெயருடைய பறக்கும் ஊர்தியிருந்தது, அதனை அவரே ஓட்டினார்.

இராவணன் தொடர்பான ஆவணங்கள், நூல்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தி இலங்கை அரசு செய்தித்தாள்களில்  விளம்பரம் ஒன்றை கடந்த யூலை மாதத்தில்  செய்தி ஏடுகளில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தைச் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசு,  இராவணன் மற்றும் நாட்டின் விமான வரலாறு குறித்து ஆழமான ஆராய்ச்சி நடத்த விரும்புவதாகக் கூறுகிறது. இந்தத்  திட்டத்திற்குச் சூட்டப்பட்டுள்ள தலைப்பு: ‘மன்னன் இராவணன் மற்றும் இப்போது இழந்த வான்வழிப் பாதைகளில் பண்டைய ஆதிக்கம்’ (“King Ravana and the ancient domination in the aerial routes that are now lost”) என்பதாகும்.

அந்த அறிக்கை, 5000 ஆண்டுகளுக்கு முன்பு இராவணன் வான்வெளியில் பறந்ததாகவும்  அவன்தான் உலகின் முதல் விமானி என்றும் இலங்கை அரசு பண்டைய காலகட்டத்தில் பறக்கப் பயன்படும் முறைகளைக்  அறிந்திருந்த  தீவு  இன்று அதனைப் புதுப்பிக்க  ஆர்வமாக உள்ளது என்கின்றது. ஆராய்ச்சியின் முதல் கட்டமாக,  இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் பிற வரலாற்று உள்ளடக்கங்களை அரசாங்கம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் சஷி தனதுங்கே (Shashi Danatunge)  விமானத்தைப் பறக்கவிட்ட முதல் விமானி  இராவணன் என்பதை எண்பிக்க அரசாங்கத்திடம்  ‘மறுக்கமுடியாத சான்றுகள்’ இருப்பதாகத் தெரிவித்தார். இராமரின் காலத்தில் இலங்கையின்  மன்னனாக இராவணன் இருந்தார். “மன்னன் இராவணன் ஒரு மேதை. அவர் தான் முதலில் பறந்தார். அவர் ஒரு விமானியாக இருந்தார். இது புராணம் அல்ல; இது  உண்மை. இது குறித்து விரிவான ஆராய்ச்சி நடத்த  வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை நாங்கள் எண்பிப்போம்”என்று அவர் அடித்துச் சொல்கிறார்.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்தத் திட்டத்திற்கு ஏன் தலைமை தாங்குகிறது என்று கேட்டபோது பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அதிகாரி  “நாங்கள் இலங்கையின் முக்கிய விமான ஒழுங்குமுறை ஆணையம். இராவணன் ஒரு விமானத்தைப் பறக்கவிட்டு இந்த வழிகளை உள்ளடக்குவது பற்றிப் பல ஆண்டுகளாக பல கதைகள் இருப்பதால், இந்த விடயத்தை நாங்கள் ஆழமாகப் படிக்க விரும்புகிறோம்” என்றார்.

சிறிலங்கா இராவணனை ஒரு அறிஞர், கனிவான ஆட்சியாளர் என்று பாராட்டுகிறது. அவர் சீதாவைக் கடத்திச் சென்றார் என்ற ‘வரலாற்றை’ அவர்கள் நிராகரிக்கிறார்கள்.  அது இராவணனின் ‘இந்தியப் பதிப்பு’ என்று முத்திரை குத்துகிறார்கள். பல இந்திய தர்மசாத்திரங்கள் இலங்கையை ஆண்ட இராவணனை ‘மகா பிராமணர்’ அல்லது ‘பெரிய பிராமணர்’ என்று குறிப்பிடுகின்றன.

அண்மையில், இலங்கை தனது முதல் விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக விண்வெளியில் ஒரு செயற்கைக் கோளை ஏவியது. இந்தச்  செயற்கைக்கோளுக்கு ‘இராவணன் 1’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கட்டுநாயக்காவில் நடந்த ஒரு மாநாட்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், அறிவியலாளர்கள், விமான வல்லுநர்கள் மற்றும் புவியியலாளர்கள் கூடி ‘மா மன்னர்’ 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தனது புட்பக விமானத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப்  பறந்தது உண்மைதான் என முடிவு செய்தனர்.

வால்மீகி எழுதிய இராமாயண காப்பியம்,  இராவணன் புட்பக விமானம்  என்ற விமானத்தைப் பயன்படுத்தினார், அதை விஸ்வகர்மா கட்டியுள்ளார். பாரதத்திலிருந்து இலங்கைக்குச்   சீதாவைக் கடத்திச் சென்றபோது இராவணன் இந்த விமானத்தைப் (Dandu Monara aircraft)  பயன்படுத்தியிருந்தான் எனக் கூறுகிறது.

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இந்த ‘இராமாயண பாதை’ ஊக்குவிக்கும்.  அதே வேளை – இந்தியா இலங்கையின்  மிகப்பெரிய சுற்றுலா சந்தைகளில் ஒன்றாகும் –  காப்பியத்தில்  அரக்கனாகச் சித்தரிக்கப்படும் மன்னன் இராவணனை  சிங்கள – பவுத்தர்கள் போற்றுகிறார்கள்.  இலங்கையில் உள்ள சமூக – சமய அமைப்புகளும் அரசும்  இராவணனை சிறிலங்காவின்  ‘வீரம் செறிந்த  மாமன்னன்’ என்று போற்றுகின்றன.

2016 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற  சிவில் விமான நிபுணர்களைக் கொண்ட  ஒரு மாநாட்டில்  உரையாற்றிய அப்போதைய போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலா டி சில்வா, “உலகளாவிய விமானப் பயணத்தின் நவீன வரலாறு Wright சகோதரர்களால் தொடக்கி வைக்கப்பட்டாலும்  ​​இலங்கையில் இராவணன் என்ற துணிச்சலான மன்னனே நாட்டிற்குள் மட்டுமல்லாமல், பிராந்தியத்திலும் பறந்து செல்லப் புட்பக விமானம் (Dandu Monara) என்ற பறக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தினார் என புராணக் கதைகள் செப்புகின்றன” என்றார். (http://www.dailynews.lk/2020/07/22/features/223929/govt-keen-establish-ravana-world%E2%80%99s-first-aviator))

இராவணன் பற்றிக் கடந்த பத்து ஆண்டுகளில் முந்நூறுக்கும் அதிகமான நூல்கள் சிங்கள மொழியில் வெளிவந்துள்ளன. மொத்தத்தில் சிங்கள – பவுத்தர்கள்  விஜயனைக் கைவிட்டுத்  தாங்கள் இராவணன் பரம்பரை எனக் காட்ட முனைகிறார்கள்!

————————————————————————————————

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply