பாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு!

பாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு!

நக்கீரன்

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்பார்கள்.  நீதியரசர் விக்னேஸ்வரன் இந்தத் திருப்பணியைத்தான் முதலமைச்சராக வந்த நாளிலிருந்து செய்து கொண்டிருந்தார். இப்போதும் செய்கிறார்.

2015 இல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க ‘வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்” என்று அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரட்டை அர்த்தத்துடன் கொழும்பில் இருந்து  ஒரு  அறிக்கை விட்டார். இந்த அறிக்கையே  விக்னேஸ்வரனுக்கும்  தமிழரசுக் கட்சிக்கும் இடையில் விரிசல் இருப்பதை வெளியுலகத்துக்கு எடுத்துக் காட்டியது.ஆனால் அந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் தேர்தலில் ததேகூ க்கு ஆதரவாக இரண்டு கைகளாலும் வாக்களித்தார்கள். அவர்கள் விக்னேஸ்வரனது அறிக்கையைப் புறந்தள்ளினார்கள். இதனால் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டார்.  அதிலிருந்து விடுபடுவதற்கு அவருக்கு ஓர் ஊன்றுகோல் தேவைப்பட்டது. அதன் விளைவாகவே தமிழ் மக்கள்  பேரவை என்ற அமைப்பை டிசெம்பர் 19, 2015 அன்று உருவாக்கி அதன் இணைத் தலைவராகவும்  பதவி வகித்தார்.

தமிழ் மக்கள் பேரவை அரசியல் அற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள் அடங்கிய  அமைப்பு என்று விக்னேஸ்வரன் சொல்லிக் கொண்டாலும் அதில் தமிழ்க் காங்கிரஸ், இபிஆர்எல்எவ், ரெலோ, புளட் போன்ற கட்சிகள் இடம்பிடித்துக் கொண்டன. எல்லாக் கட்சிகளையும் கூவி அழைத்த விக்னேஸ்வரன் எதிர்பாரர்த்தது போலவே தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பு அனுப்பவில்லை.

தமிழ்மக்களது ஒற்றுமை பற்றிப் பேசிக் கொண்டே அந்த ஒற்றுமைக்கு உலைவைத்து  ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்குவதே  விக்னேஸ்வரனின் இலக்காக இருந்தது. அதனை அவர் மறுத்தாலும் அதுதான் அவரது இலக்கு என்பது வெள்ளிடமலை ஆகும்.  இந்த அமைப்பு மாற்றுத் தலைமைக்காக ஏங்கித் தவிக்கும் புலம்பெயர் வன்னியின் எச்சங்களது ‘பினாமி’ அமைப்பு என்பது தெரிந்ததே.முழுப் பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைப்பது போன்று “இந்தப் பேரவை அரசியல் கட்சியல்ல. மாற்றுத் தலைமையினை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும் போருக்குப் பிந்திய எமது தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஓர் உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பே ஆகும்” என  விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

மேலும் “‘தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற எல்லைகளுடன் மட்டும் தனது பணியை மட்டுப்படுத்தாமல் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், பொருளாதாரத்தை – வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், பொருளாதாரத்தை – வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல்” என்பனவற்றை முன்னெடுக்கத்தான் மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. நிருவாகம் மக்களுக்கு அருகில் கொண்டுவரப்பட்டது. 

வட மாகாண சபையை முடக்கிவிட்டு வடக்கு மாகாண மக்களின் பொருளாதார வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் தமிழ் மக்கள் பேரவை ஈடுபடும் என்று விக்னேஸ்வரன் கூறினார். அது  குருவி தலையில் பனம்பழத்தை வைத்த கதை போன்றது.  எதிர்பார்த்தது போலவே தமிழ் மக்கள் பேரவை ஒரு கோழிப் பண்ணையைக் கூடத் தொடங்கவில்லை. எல்லாம் பேச்சுப்  பல்லக்கு தம்பி கால்நடை என்ற கதை போன்றது.

எத்தனை காலத்துக்கு என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது?   ஒக்தோபர் 24, 2018 இல் இந்த தமிழ் மக்கள் பேரவை புதிய அவதாரம் எடுத்தது. அதாவது வட மாகாண சபையின் ஆயுட் காலம் முடிவதற்கு முதல்  நாள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை விக்னேஸ்வரன் தொடக்கினார்.  தன்னைத்தானே அதன் செயலாளர் நாயகம் என அறிவித்தார். பதவிகளுக்கான முறையான தேர்தல் பின்னர் நடைபெறும் என்றார். ஆனால்  தொடக்கக் கூட்டத்துக்குப் பின்னர் எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை. தலைவரும் கிடையாது. பொருளாளரும் கிடையாது. பாட்டும் நானே பாவமும் நானே என்பது போல எல்லாமே விக்னேஸ்வரன்தான். 

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு விக்னேஸ்வரன் கையில் வட மாகாண சபை இருந்தது. அந்தச் சபையிடம் நிதி இருந்தது, ஆளணி இருந்தது,  ஒரு மினி அரசயந்திரம் இருந்தது. ஆனால் அவற்றைப் பயன்படுத்தாமல் வட மாகாண சபை நிருவாகத்தைப் போட்டுடைத்தார். அமைச்சர்களைப் பந்தாடினார். ஒரு  மாகாண அமைச்சரை  கடித மூலம் பதவி நீக்கினார்.  தன்னைப் பதவி நீக்க ஆளுநருக்கத்தான் அதிகாரம் உண்டு முதலமைச்சருக்கு அல்ல என அந்த அமைச்சர் உயர் நீதிமன்றம் சென்றார். அவர் சார்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை நடைமுறைப்படுத்த விக்னேஸ்வரன் தவறிழைத்தார். இப்போது உயர் நீதிமன்றத்தில் விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடக்கிறது. ஒரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதல்தடவை.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விக்னேஸ்வரனது காலை சுற்றியுள்ள பாம்பு. அது கடிக்காமல் விடாது.  வினைத்திறனற்ற முதலமைச்சர் எனப் பெயர் எடுதுள்ள விக்னேஸ்வரன்  இன்றுவரை  மாகாண சபைகள் எதற்காக உருவாக்கப்பட்டது என்பது  அவருக்கு விளங்கவில்லை.

1987 ஆம் ஆண்டில் இலங்கை உள்நாட்டுப் போரை முடிவுக்குக்  கொண்டு வருவதற்கான முயற்சியின் போது ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது.  இந்திய – இலங்கை உடன்பாடு  29 யூலை 1987 அன்று கையெழுத்தானது.  பல தசாப்தங்களாக மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிரப்பட  வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்த உடன்பாட்டின் அடிப்படையில் மத்திய அரசாங்கம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும்.  பெப்ரவரி  3, 1988 அன்று ஒன்பது மாகாண சபைகள்  உருவாக்கப்பட்டன.   ஏப்ரல் 28, 1988 அன்று வட மத்திய, வடமேற்கு, சப்பரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் நடந்தன. யூன்  2, 1988 அன்று மத்திய, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கான  தேர்தல்கள் நடத்தப்பட்டன.  வடக்கு கிழக்கு  இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் நொவெம்பர் 19, 1988 இல் நடத்தப்பட்டது.

13ஏ சட்ட திருத்தம் இலங்கையின் வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாகும். இந்த திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபை ஆனது குறிப்பிட்ட மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி  அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும்  இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறைப் படுத்த மறுத்து வருகிறது. சில குறைபாடுகள்  இருந்தும் இந்தத் திருத்தம்  சமஷ்டி அம்சங்கங்கள் கொண்டதாக இருக்கிறது.

கடந்த வாரம்  கிளிநொச்சியில் நடந்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கருத்துப் பரப்புரைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.   அதில் –

 “எனக்கு சிங்கள மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இருந்த தொடர்புகள் காரணமாக நான் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுக்கு ஏற்பதாளம் போட்டிருந்தால் அல்லது அவர்களை நெல்சன் மண்டேலாவுக்கு ஒப்பிட்டுத் துதி பாடி இருந்திருந்தால் எனது மாகாண சபைக்கு பல மடங்கு நிதியை அவர்கள் ஒதுக்கி இருந்திருப்பார்கள். பல செயற்திட்டங்களை இங்கு முன்னெடுக்க அனுமதி வழங்கி இருப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், தமிழ் மக்களின் பல தசாப்த கால உரிமை போராட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் பெரும் துரோகத்தை நான் இழைத்திருப்பேன். அதனால் நான் அத்தகைய தவறைச் செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமல்ல, அப்போதைய பிரதமர் மற்றும் சனாதிபதியுடன் நான் பல தடவைகள் இதன் காரணமாக முரண்படநேர்ந்தது. பல மாத காலம் இரணில் விக்கிரமசிங்க என்னுடன் கதைக்க வில்லை. எனது முகத்தைப் பார்ப்பதை கூட அவர் தவிர்த்து வந்திருந்தார். (https://www.tamilwin.com/politics/01/249958)

இப்படிப் பேசியிருப்பவர் வேறுபாருமில்லை. சாட்சாத் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள். அவருடை பேச்சு மாகாண சபைகளை உருவாக்கியதன் நோக்கம் அவருக்குத் தெரியவில்லை என்பது சொல்லாமலே விளங்கும். மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது ஒவ்வொரு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற்குத்தான். ஏழை, எளிய மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டும்.  அவர்களுக்கான அடிப்படை தேவைகளான குடியிருக்க வீடு, குடிக்கத் தண்ணீர், தரமான கல்வி,  நல்ல மருத்துவ மனைகள்,  நல்ல சாலைகள், வேலை வாய்ப்பு  போன்றவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஆனால் விக்னேஸ்வரன் வட மாகாண சபையை அரசியல் செய்வதற்கான மேடையாக்கினார். அந்த சபையின் அடிப்படை  நோக்கங்களை – இலக்குகளை காற்றில் பறக்க  விட்டார்.

கனடா போன்ற நாட்டில் மூன்று தட்டு அதிகார மையங்கள் இருக்கின்றன. இவை மத்திய, மாகாண மற்றும் உள்ளாட்சி  மன்றங்களாகும். மத்திய அரசுக்குரிய அதிகாரங்களில் மாகாண சட்ட சபைகள் தலையிடுவதில்லை.  வெளிநாட்டுறவு, மத்திய வங்கி, நெடுஞ்சாலைகள், போக்குவரத்துப்  போன்ற அதிகாரங்கள் மத்திய அரசுக்கு உரித்தானவை.

ஆனால் விக்னேஸ்வரன் ஐந்து ஆண்டு காலத்தில் மொத்தம் 444 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். இதில் சில தீர்மானங்கள் தவிர ஏனையவை அந்த சபையின் அதிகாரத்துக்கும் நோக்குக்கும் அப்பாற்பட்டவை ஆகும்.

விக்னேஸ்வரன் “நான் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுக்கு ஏற்பதாளம் போட்டிருந்தால் அல்லது அவர்களை நெல்சன் மண்டேலாவுக்கு ஒப்பிட்டுத் துதி பாடி இருந்திருந்தால் எனது மாகாண சபைக்கு பல மடங்கு நிதியை அவர்கள் ஒதுக்கி இருந்திருப்பார்கள். பல செயற்திட்டங்களை இங்கு முன்னெடுக்க அனுமதி வழங்கி இருப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், தமிழ் மக்களின் பல தசாப்த கால உரிமை போராட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் பெரும் துரோகத்தை இழைத்திருப்பேன்”  என்கிறார். இங்கேதான் விக்னேஸ்வரன் தவறிழைக்கிறார். தமிழ் மக்களுக்கு இரண்டகம் செய்திருக்கிறார்.

பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் தன்மானம் பார்க்கக் கூடாது. நல்லகாலம் கெட்ட காலம் பார்க்கக் கூடாது. பொது மக்களது நலன்களே அவர்களது  இலட்சியமாக இருக்க வேண்டும். இந்த மனப்பான்மை விக்னேஸ்வரனிடம் இல்லை. அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், நட்டப்பட்டவர்கள் ஏழை எளிய வட மாகாண தமிழ்மக்கள்தான்.

விக்னேஸ்வரன் 30 ஆண்டு காலம் நீதித்துறையில் குப்பை கொட்டியவர். அவருக்கு அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பற்றித் துளியும் கவலை கிடையாது. இரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமர். அவர்  40 நா.உறுப்பினர்களோடு பிரதமராக வந்திருக்கலாம். அவரது கட்சி மாமன் – மருமகன் கட்சியாக இருக்கலாம். ஆனால் விக்னேஸ்வரன் அவை பற்றி ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்? இப்படி ஒரு நாட்டின் பிரதமரோடு முதலமச்சர் சண்டை பிடித்தால் பிரதமர் அல்லது அவரது அரசாங்கம்  விக்னேஸ்வரனுக்கு உதவி செய்ய முன்வருமா?  அதனை எதிர்பார்க்கலாமா?

விக்னேஸ்வரன் தனது பதவிக் காலத்தில் தன்னை முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் என்று நினைத்தாரேயொழிய தன்னை வட மாகாண சபையின் முதலமைச்சராகப் பார்க்கவில்லை. ‘நான்  முன்னாள் நீதியரசர்’ என்ற செருக்கு அல்லது ஆணவத்தைத்தான் பார்க்க முடிந்தது.

ஒரு முறை அன்றைய மாகாண நல்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம்  அன்றைய மத்திய நல்வாழ்வு அமைச்சர் இராஜித  சேனரத்தினாவை அவரது அமைச்சில் சந்தித்து வடக்கு மாகாணத்தின் மருத்துவ மனைகளை மேம்படுத்த மேலதிக  நிதி வேண்டும் என்று கேட்டார். உடனே  அமைச்சர் அடுத்தவாரம் இலங்கைக்கு நெதலாந்து நாட்டில் இருந்து ஒது குழு என்னைச் சந்திக்க வருகிறது, அவர்களிடம் நேரில் பேசவும் என்று சொன்னார். அந்தத் நெதலாந்து தூதுக் குழுவை சந்தித்ததன் பலனாகவே  யூரோ 60 மில்லியன் (ரூபா 10,800 மில்லியன்) நிதியை மருத்துவர் சத்தியலிங்கம் பெற்றுக் கொண்டார். இதனைக் கேள்விப்பட்ட விக்னேஸ்வரன் என்ன சொன்னார்? மருத்துவர் சத்தியலிங்கத்தின் முதுகில் தட்டிக் கொடுத்து அவரைப்  பாராட்டினாரா?  “எனக்குத் தெரியாமல் எனது அமைச்சர்கள் மத்திய அரசிடம் கையேந்துகிறார்கள்” என்று முகாரி பாடினார்.

பாம்புக்கு பல்லித்தான் விஷம். விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் விஷம். தானும் செய்ய மாட்டார் மற்றவர்களைச்  செய்யவும் விடமாட்டார்.

இப்போது ஒரு புதுக்கதை, இல்லை ஒரு செல்லக்கதை  சொல்கிறார்.

புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதியைப் பெற்றுச் சில செயற்திட்டங்களை மேற்கொண்டோம். ஆனாலும், அரசாங்கம் எதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. உதாரணமாக, நான் கனடா சென்ற போது அங்குள்ள சில அமைப்புக்கள் எமது மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒருதொகை நிதியை சேகரித்தார்கள். ஆனால், அந்த நிதியை நான் எடுத்துவர மறுத்துவிட்டேன்.

சட்டப்படி அனுப்பப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எனவே அப்பணத்தை இங்கு கொண்டுவருவதில் சிக்கல் இருந்தது. ஏன் என்றால் முதலமைச்சர் நிதியத்தை தாக்காட்டித் தாக்காட்டி கடைசியில் அனுமதிக்காது விட்டிருந்தார்கள் அரசாங்கத்தினர்.

தற்பொழுது நான் உருவாக்கியுள்ள நம்பிக்கை பொறுப்பின் ஊடாக அந்த நிதியைப் பெற நடவடிக்கைகள் எடுத்துள்ளேன். இது பற்றி விபரமாகப் பின்னர் அறிவிப்பேன். வட மாகாண சபைக்கு முதலமைச்சர் நிதியத்தை அமைத்து புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக் கொள்ள பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் அரசாங்கம் அதனை செய்யவிடாத காரணம் நிதியம் அனுமதிக்கப்பட்டால் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று நினைத்துப் போலும்.கூட்டமைப்பின் தலைவர்கள் கூட அவ்வாறு நினைத்தார்களோ என்னவோ அந்த நிதியத்தை உருவாக்கும்படி தாங்கள் முண்டுகொடுத்து வந்த அரசாங்கத்திடம் ஒரு போதும் கேட்கவில்லை.

 2017 இல் கனடாவில் சேர்த்த பணம் எவ்வளவு தெரியுமா?  மொத்த வருவாய் 113,500 டொலர்கள். செலவு  63,350 டொலர்கள்.  மிகு வருவாய் 50,150 டொலர்கள்.  செலவில்  வி14க்னேஸ்வரனது  பயணத்துக்கும் பாதுகாப்புக்கு மட்டும்  11,434 டொலர் செலவானது.  ஏழை பங்காளன் தங்கியிருந் 5 நட்சத்திர   ஹோட்டல் (Hilton) செலவு மட்டும் டொலர் 2,384  டொலர்கள் ஆகும்.

கனடா ததேகூ இன் அழைப்பின் பேரில் சம்பந்தன் ஐயா, சேனாதிராசா போன்றோர் வந்தால் திரு குகதாசனது அடுக்குமாடி குடியிருப்பில்தான் தங்குவார்கள்ள.  சுமந்திரன், ஆனோல்ட் போன்றவர்கள் உறவினர் வீட்டில் தங்குவார்கள்.

இந்த 50,150 டொலரில் (ரூபா 75  இலட்சம்) நிதியில் விக்னேஸ்வரன்  எத்தனை பள்ளிக்கூடங்கள் கட்டப் போகிறார்? எத்தனை வீடுகள் கட்டப் போகிறார்? ஒரு வீடு கட்ட ரூபா பத்து இலட்சத்தின்படி 7.5 வீடுகள்தான் கட்ட முடியும்? இது யானைப் பசிக்கு சோளப்பொரி மாதிரி இருக்கும்.

அதே நேரம் 2015 ஆம் ஆண்டு  யூஎன்டிபி  நிறுவனம் வட மாகாண விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு  150 மில்லியன் அ.டொலர்களை (சுமார் ரூபா 28,500 மில்லியன்) உதவி நிதியாகக்  கொடுக்க  முன்வந்தது. அதனை இரண்டு கையாலும் கும்பிட்டுக் கும்பிட்டு விக்னேஸ்வரன் வாங்கியிருப்பார் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஆனால் அவர் அந்த நந்தவனத்து ஆண்டிமாதிரி கூத்தாடிக் கூத்தாடி அதனைக் கோட்டைவிட்டார்!  (தொடரும்) 

https://www.newsuthanthiran.com/category/articles/

About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply